World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan journalist brutally beaten

இலங்கை பத்திரிகையாளர் கொடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்

By Vilani Peiris
6 June 2009

Use this version to print | Send feedback

இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொத்தல ஜயந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். கொழும்பு புறநகர் பிரதேசமான எம்புல்தெனியவில் உள்ள அவரது வீட்டுக்கு திங்கட் கிழமை மாலை அவர் நடந்து சென்றுகொண்டிருந்த போதே கடத்தப்பட்டுள்ளார். ஜயந்த அரசுக்குச் சொந்தமான லேக் ஹவுஸ் பத்திரிகை குழுவைச் சார்ந்த பத்திரிகையாளர் ஆவார்.

பொத்தல ஜயந்த கொடூரமாகத் தாக்கப்பட்ட பின் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் சம்பளத்தில் இயங்கியதாக சொல்லப்படும் பத்திரிகையாளர்கள் மீது விசாரணைகளை முன்னெடுப்பதாக கேடுவிளைவுக்கும் அச்சுறுத்தலை விடுத்த பின்னரே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கடந்த மாதம் இராணுவம் புலிகளை தோற்கடித்த பின்னர், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், இனவாத வெற்றி ஆரவார சூழ்நிலையை கிளறிவிட்ட அதே வேளை, அரசாங்கத்தையும் இராணுவத்தையும் விமர்சிக்கும் எவருக்கும் எதிராக அதன் அடக்குமுறைகளை உக்கிரமாக்கியுள்ளது.

ஜயந்த மீதான தாக்குதலைச் சூழவுள்ள சூழ்நிலை, பாதுகாப்பு படைகள் சம்பந்தப்பட்ட அல்லது நேரடியாக ஆதரவளித்த அரசாங்க-சார்பு குண்டர்கள் சம்பந்தப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டுகின்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக, பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் திட்டமிடப்பட்டு வேட்டையாடப்பட்டதோடு பல சமயங்களில் அரசாங்கத்துடன் மற்றும் இராணுவத்துடன் தொடர்புடைய குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பத்திரிகையாளர் திங்கட் கிழமை வேலைத் தளத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது சுமார் மாலை 5.15 மணியளவில் எம்புல்தெனிய சந்தியில் வைத்து வானுக்குள் இழுத்துத் தள்ளப்பட்டுள்ளார். அவர் உதவி கேட்டு கத்திய போது பலர் வானைச் சூழ்ந்துகொண்ட போதிலும், தாக்குதல்காரர்கள் துரிதமாக வாகனத்தை எடுத்துச் சென்றனர். அவர் கடுமையாகத் தாக்கப்பட்ட பின்னர், சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் கோதடுவ என்ற இடத்தில் வீதியோரத்தில் வீசப்பட்டுக் கிடந்தார். சில உள்ளூர் இளைஞர்கள் அவரை கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

செவ்வாய் கிழமை உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் ஆஸ்பத்திரியில் இருக்கும் ஜயந்தவை சந்தித்தனர். காயங்களால் ஏற்பட்டுள்ள வலியினால் தன்னால் சரியாக பேச முடியவில்லை எனத் தெரிவித்தார். ஒரு கால் முறிந்துள்ளதோடு மற்றைய கால் வீங்கிப் போயுள்ளது. அவரது உடல் முழுவதிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு அவரது தலையிலும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. காயங்களால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படாவிட்டாலும், அவரது காலை சரி செய்வதற்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியசாலை ஆணையாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

ஜயந்தவின் மனைவி கல்யானி

இருவருமே அவரது பாதுகாப்பு பற்றி அக்கறை காட்டியதாக ஜயந்தவின் மனைவி டி.என். கல்யானி எமது வலைத் தளத்துக்குத் தெரிவித்தார். கொழும்பில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கஹதுடுவ என்ற கிராமத்தில் அப்போது அவர்கள் இருந்த வீட்டுக்கு, கடந்த ஆண்டு ஜனவரி 7 அன்று ஒரு வெள்ளை வானிலும் ஒரு பொலிஸ் ஜீப்பிலும் வந்தவர்கள், சாதாரண உடையில் இருந்ததோடு பொலிசில் இருந்து வருவதாகத் தெரிவித்திருந்த போதிலும், உள்ளூர்வாசிகள் ஒன்று கூடிய உடன் அங்கிருந்து பின்வாங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு மே 28ம் திகதி, இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷ, ஜயந்தவுக்கும் மற்றும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சனத் பாசூரியவுக்கும் அழைப்பாணை ஒன்று அணுப்பியிருந்தார். இராணுவத்தை விமர்சிக்க வேண்டாம் என எச்சரித்த அவர், "உயர் மதிப்புடைய" இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் எவருக்கும் பாதிப்புகள் வரலாம் எனவும் சமிக்ஞை செய்துள்ளார்.

ஊடகங்கள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்த்து பத்திரிகையாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, ஜயந்தவுக்கு தொலை பேசி மூலம் அச்சுறுத்தல் வந்தது. சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்ட பின்னர், மீண்டும் ஜயந்தவுக்கு ஒரு தொகை தொலை பேசி அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. சுமார் ஒரு டசின் பத்திரிகையாளர்களுடன் நாட்டை விட்டு வெளியேறிய அவர், அண்மையிலேயே திரும்பி வந்தார்.

"திங்கள் கிழமை மாலை, அவர் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவதாக மாலை 4.15 மணியளவில் எனக்கு தொலை பேசியில் கூறினார். பாதுகாப்பு காரணங்களால் அவர் எங்கு இருக்கின்றார், எந்த வழியில் அவர் பயணிக்கின்றார் என்பதை தெரிவிக்கவில்லை. அவர் தாமதமடைந்ததையிட்டு நான் பீதியடைந்தேன். அவரது தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்தது," என கல்யானி விளக்கினார்.

லங்கா ஈ நியூசின் செய்தி ஆசிரியர் பெனர் ரூபசிங்க கல்யானியுடன் தொடர்பை ஏற்படுத்தி, ஜயந்தவைப் பற்றி அக்கறையுடன் இருக்குமாறு எச்சரித்து அவர் தாக்கப்படலாம் என்பதை குறிப்பாய்த் தெரிவித்தார். தனது கனவர் கடத்தப்பட்டிருப்பதை கேள்விப்பட்ட உடன், அவர் மிரிகானையில் உள்ள உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

தாக்குதலை விவரித்த அவர் தெரிவித்ததாவது: "தலைக்குப்புற அவரை வேனுக்குள் தள்ளிய கும்பல், தடி அல்லது பலகையினால் ஆன ஆயுதமொன்றினால் அவரது காலை உடைப்பதற்காக தாக்கியுள்ளது. அவர் அடிக்கடி நினைவின்றி விழுகின்றார். அவர்கள் அவரது தாடியையும் தலை முடியையும் கண்டவாறு வெட்டியுள்ளனர். 'இனிமேல் நீ மெளனமாக நாய் போல் வாழ வேண்டும்' என அவரை அந்தக் குழு அச்சுறுத்தியது மட்டுமே அவரால் நினைவுபடுத்திக்கொள்ள முடிகிறது.

பத்திரிகையாளர்கள் புலிகளுக்கு ஆதரவளிப்பதோடு அவர்களிடம் பணம் பெற்றதாக கண்டனம் செய்த அதே வேளை, தனது கனவரதும் இன்னுமொரு ஊடகவியலாளரதும் நிழற்படங்களை ஒளிபரப்பியதாக ஒரு அரச தொலைக்காட்சி சேவை மீது கல்யானி குற்றஞ்சாட்டினார். அந்த நிறுவனம் இந்தத் தாக்குதலை ஊக்குவித்திருப்பதாக அவர் நம்புகிறார்.

பிரான்சைத் தளமாகக் கொண்ட ஊடக உரிமை குழுவான எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம், ஜூன் 2 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருப்பதாவது: "அரசியல் குண்டர்கள், தமிழ் புலிகள் மீதான இராணுவ வெற்றியை தமது சொந்த நாகரீகத்தில் கொண்டாடுகின்றன. இந்த விவகாரத்தில், ஒரு ஊடக சுதந்திர போராளியை கடத்தி சித்திரவதை செய்வதன் மூலம் கொண்டாடியுள்ளன. ஊடக மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிரான தொடர்ச்சியான யுத்தத்தை நிறுத்த அரசாங்கம் வலிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தனது சக பத்திரிகையாளர்களை பாதுகாப்பதில் உத்வேகத்துடன் செயற்பட்ட பொத்தல ஜயந்தவுக்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறோம்."

பத்திரிகையாளர்களை காப்பதற்கான குழு, ஜயந்த மீதான தாக்குதல் இன்றைய போக்கின் ஒரு பகுதி என தெரிவித்துள்ளது. "இத்தகைய தாக்குதல்கள் மெய்சிலிர்க்கும் வகையில் நினைவூட்டுவதாகும். தமிழ் பிரிவினைவாதிகளுடனான அரசாங்கத்தின் மோதல்கள் முடிவடைந்த பின்னரும் கூட இலங்கையில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுகின்றனர்," என அது தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலைப் பற்றி விசாரிக்க இரு குழுக்களை நியமித்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த விசாரணைகளில் இருந்து எதுவும் வெளி வரப்போவதில்லை. 2006ல் நாட்டின் உள்நாட்டு யுத்தத்தை இராஜபக்ஷவின் அரசாங்கம் மீண்டும் தொடங்கியதில் இருந்து, பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டுள்ளதோடு கொல்லப்பட்டுமுள்ளனர். மற்றும் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. முன்னரும் அரசாங்கமும் பொலிசும் விசாரணைகள் நடத்துவதாக வாக்குறுதியளித்த போதிலும், யாரும் கைது செய்யப்படவும் இல்லை எவர் மீதும் குற்றஞ்சாட்டவும் இல்லை.

ஜனவரி 8 அன்று, சுறுசுறுப்பான புறநகர் வீதியொன்றில் வேலைக்காக வாகனத்தைச் செலுத்திய போது சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க பட்டப்பகலில் கொல்லப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆயுதபாணிக் கும்பலொன்று எம்.டி.வி./சிரச ஒலிபரப்புக் கட்டிடத்தை தாக்கி நாசம் செய்தது. இந்த விசாரணைகளில் இன்னமும் தடயங்கள் கிடைக்கவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது. இந்த இரு சந்தர்ப்பங்களின் போதும், நகரம் முழுவதும் பாதுகாப்புப் படைகள் வீதித் தடைகளை பேணிவந்த போதிலும் அடிக்கடி ரோந்து சென்ற போதிலும் தாக்குதல்காரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இத்தகைய கும்பல்கள் அதிகாரிகளின் ஆதரவை அனுபவிக்கின்றன என்பதே சாத்தியமான ஒரே முடிவு.

யுத்தம், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் யுத்தம் முன்னெடுக்கப்பட்ட விதம் பற்றிய விமர்சனத்தைக் கூட மொத்தமாக அமைதிப்படுத்துவதே இத்தகைய தாக்குதலின் இலக்காகும். டசின் கணக்கான பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். கொழும்பைத் தளமாகக் கொண்ட முன்னணி பத்திரிகையான சண்டே டைம்ஸ்சின் பக்க எழுத்தாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் உட்பட பத்திரிகையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திஸ்ஸநாயம் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஒரு வெளிப்படையான திசை திருப்பும் முயற்சியில், பொலிசார் செய்தி ஆசிரியர் பெனட் ரூபசிங்கவையும் மற்றும் லங்கா ஈ நியூஸ் பிரிதம ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவையும் ஜயந்த மீதான தாக்குதல் சம்பந்தமாக தடுத்து வைத்துள்ளனர். ஜயந்த கடத்தப்பட்டுள்ளது பற்றி பொலிஸ் மா அதிபருக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் மற்றும் ஊடக அமைச்சருக்கும் அறிவித்ததே அவர்கள் செய்த ஒரே தவறு.

இந்த சம்பவம் அவர்களுக்கு எப்படி தெரியும் என பொலிசார் அவர்களை விசாரித்துள்ளனர். ஆனால், தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதற்கான பொலிஸ் வேண்டுகோளை நிராகரித்த உள்ளூர் நீதவான் அவர்களை பிணையில் விடுமாறு கட்டளையிட்டுள்ளார். "எனது உயிரைக் காக்க செயற்பட்டவர்களை கைது செய்வது ஒரு குற்றமாகும்" என ஜயந்த பொலிசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

செவ்வாய் கிழமை, ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பத்திரிகையாளர் மீதான தாக்குதலை கண்டனம் செய்தார். ஆனால், அவர்கள் மத்தியில் உள்ள பத்திரிகையாளர்கள் புலிகளுடன் அவர்களுக்கு உள்ள உறவு சம்பந்தமாக விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என அதே மூச்சில் அவர் கூறினார். புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த இராணுவ அலுவலர்கள், வர்த்தகர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் விசாரணைகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என சொல்லப்படுபவர்களின் பெயர்களை வெளியிடுமாறு ஒரு பத்திரிகையாளர் அவரை சவல் செய்த போது, ஊடக அமைச்சர் மறுத்துவிட்டார்.

மே 26, அரசுக்கு சொந்தமான ஐ.டி.என். தொலைக் காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியில், இராணுவத் தளபதி பொன்சேகா, இராணுவத்தை விமர்சித்த பத்திரிகையாளர்களை புலி ஆதரவாளர்கள் என வகைப்படுத்தினார். ஊடக சுதந்திரத்துக்காக அடிக்கடி ஆர்ப்பாட்டம் செய்யும் பத்திரிகையாளர்கள் "தொடர்ச்சியாக புலிகளிடம் சம்பளம் பெற்றவர்கள்" என பொன்சேகா பிரகடனம் செய்தார். "இராணுவத்தின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் தடை ஏற்படுத்தியதாக" அவர்களைக் குற்றஞ்சாட்டிய அவர், "தேசத்துரோகத்துக்காக அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.

ஜயந்த மீதான தாக்குதல் நடந்து மறுநாள், கொழும்பைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்துக்கு "துரோகிகளுக்கான கடிதம்" என்ற அச்சுறுத்தல் கடிதம் ஒன்று கிடைத்தது. "பயங்கரவாதம் இப்போது முடிந்துவிட்டாலும், அவர்களில் [புலிகள்] தங்கியிருந்த உங்களைப் போன்றவர்களின் நடத்தையை நாம் கண்காணித்து வருகிறோம்," என அக்கடிதம் தெரிவித்தது.

இந்த நிலையம் ஒரு வாரத்துக்கு தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்றும் சிப்பாய்களுக்கான நலன்புரி திட்டமான நமக்காக நாம் என்ற திட்டத்துக்கு ஒரு மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் என்றும் அந்தக் கடிதம் கோரியிருந்தது. "இறைமைக்கு கெடுதல், ஒற்றையாட்சி பண்பு மற்றும் தேசத்தின் கெளரவத்துக்கு தீங்கு இழைக்கக் கூடிய" நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அது கோரியிருந்தது.

பத்திரிகையாளர்கள் மீதான புதிய தாக்குதல்களும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீதான அச்சுறுத்தல்களும், உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதலின் புதிய கட்டத்தை குறிக்கின்றது. ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், அரசாங்கம் வாழ்க்கைத் தரம் மீது நீண்ட தாக்குதல்களைத் தொடுக்க தயாராகி வரும் நிலையில், வடக்கில் கிட்டத்தட்ட 300,000 தமிழர்களை தடுத்து வைத்துள்ள அரசாங்கம், அதே இரக்கமின்மையை முழுத் தொழிலாள வர்க்கத்துக்கும் எதிராக பயன்படுத்தும் என்ற எச்சரிக்கையே இது.