World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா: இலங்கைDoctor condemns conditions in Sri Lankan detention camps இலங்கையில் உள்ள தடுப்பு முகாம்களின் நிலமைகளை வைத்தியர் கண்டனம் செய்கிறார் By our correspondent இலங்கை அரசாங்கம், வடக்கு-கிழக்கு யுத்த வலயங்களில் இருந்து தப்பி வந்த சுமார் 300,000 தமிழ் பொதுமக்களை வடக்கு நகரமான வவுனியாவைச் சூழவுள்ள முகாம்களில் அடைத்து வைத்துள்ளது. அரசாங்கத்தால் அவைகளுக்கு "நலன்புரி நிலையங்கள்" என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், உண்மையிலேயே, அவை தடுப்பு முகாம்களாகும். இங்கு மக்கள் போதுமான உணவு மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகள் இல்லாமல் கூட்டம் நிறைந்த நெருக்கமான சூழலில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர். தடுப்புக் காவலில் உள்ளோர், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை நிர்மூலமாக்க இலங்கை இராணுவம் முன்னெடுத்த தாக்குதல்களின் போது உக்கிரமான ஷெல் மற்றும் குண்டுத் தாக்குதல்களின் விளைவுகளை சந்தித்தனர். சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளதாவது: "வாரக்கணக்காக கடுமையான மோதல்களுக்கிடையில் சிக்கியிருந்த மக்கள், முகாம்களுக்கு வந்தடைந்துள்ளார்கள். அவர்கள் ஒருவேளை மோசமாக காயமடைந்து, போசாக்கின்றி, பலவீனமடைந்து மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பர். இடம் பெயர்ந்துள்ள பொது மக்கள், அரசாங்கப் பாதுகாப்புப் படைகள் மற்றும் அவற்றுடன் இணைந்து செயற்படும் இராணுவத் துணைப்படைகளால் காணாமல் ஆக்கப்படுதல்; சட்டத்துக்குப் புறம்பாக தண்டனை நிறைவேற்றல்; சித்திரவதை மற்றும் வேறு கேடுவிளைவிக்கும் அணுகுமுறைகள் மற்றும் துணைப்படைகளுக்கு பலாத்காரமாக ஆட்சேர்த்தல் உட்பட பரந்தளவிலான மற்றும் அலட்சியம் செய்ய முடியாத மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு நிலையங்களின் நிலமைகள் பற்றி அறிக்கைகள் வெளியிடக்கூடிய, ஊடகங்கள், உதவி நிறுவன ஊழியர்கள் மற்றும் வேறு எவரும் உள் நுழைவதற்கு அரசாங்கம் கடுமையாகத் தடை விதித்துள்ளது. ஒரு முகாமில் மக்களின் நிலமைகள் சம்பந்தமாக வைத்தியர் ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்துக்கு வழங்கிய ஒரு மதிப்பீட்டை நாங்கள் இங்கு பிரசுரிக்கின்றோம். முகாமுக்கு வைத்திய சிகிச்சையளிப்பதற்காக சென்ற வைத்தியர் குழுவுடன் இவரும் சென்றிருந்தார். நாங்கள் பாதுகாப்புக் காரணங்களால் அவரது பெயரை வெளியிடவில்லை. *** கொழும்பில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில், வவுனியாவுக்கு அருகில் உள்ள செட்டிகுளத்தில் அமைந்துள்ள ஒரு "வைத்தியசாலைக்கு" எங்கள் குழுவொன்று சென்றது. உண்மையில், பாடசாலை ஒன்றே வைத்தியசாலையாக மாற்றப்பட்டிருந்தது. அங்கு நிரந்தரமான வைத்தியர் இல்லை. மாறாக வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் வெளியில் இருந்து வந்து, பாடசாலை மைதானமொன்றில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்குள் இருந்து நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கிறார்கள். இங்கு பாடசாலைத் தளபாடங்கள் மற்றும் மடிக்கும் கட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த தற்காலிக ஆஸ்பத்திரியில் சுமார் 150 நோயாளர்கள் இருந்தார்கள். இலட்சக்கணக்கான மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள, சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிரதான மெனிக் பாம் முகாமின் ஒரு உப முகாம் என்றே இது அழைக்கப்படுகிறது. நாங்கள் செட்டிக்குளம் நோக்கிப் போகும் போது, மெனிக் பாமுக்கு அருகில் உள்ள இராணுவச் சோதனைச் சாவடியில் பூரணமான பாதுகாப்புப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோம். எங்களை கமராக்கள், கமரா செல்லிடத் தொலைபேசி அல்லது ஏதாவது பதிவு செய்யும் கருவிகள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. மெனிக் பாம் முகாம் முள்ளுக் கம்பி மற்றும் சுருள் கம்பி என்பவற்றால் அமைக்கப்பட்ட மூன்று வேலிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கடல் போன்ற வெள்ளைக் கூடாரங்களை எங்களால் கம்பி வேலி ஊடாக பார்க்க முடிந்தது. ஆண்கள், பெண்கள், மற்றும் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கடுமையான வெய்யிலின் மத்தியிலும் நடமாடிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. முகாம் அமைக்கும் நோக்கத்துக்காக மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பெரிய ஆயுதம் தாங்கிய சிப்பாய்கள் முகாமுக்கு உள்ளேயும் முகாமைச் சுற்றியும் ரோந்து போய்க் கொண்டிருந்தார்கள். அடையாளம் காணப்படாத புலி போராளிகளை சரணடையுமாறு தூண்டும் பல பகிரங்க அழைப்புக்களை நாம் கேட்டோம். நான் நாசிகளது வதை முகாம்கள் பற்றி வாசித்திருக்கிறேன். இவைகள் அதே வகையானவை என்று நான் நினைத்தேன். முகாம்களுக்குள் நிலமைகள் பயங்கரமானவையாக இருந்தன. ஒருவரின் முகம் மற்றும் கைகள் கழுவுவதற்கு தண்ணீர் கிடைத்தால் அதுவே ஒரு பெரும் பேறாக இருந்தது. இந்தப் பிரதேசத்தில் இருக்கும் தண்ணீர் நல்லதல்ல. மக்களுக்கு பெளசர்களில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கப்படுகிறது. அங்கு பொலித்தீனால் மறைக்கப்பட்ட மலசல கூடங்கள் இருந்த போதிலும் அவற்றுக்கு கதவுகளே கிடையாது. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் மலசல கூடத்தைப் பாவிப்பதில்லை. மாறாக அவர்கள் திறந்த வெளியிலேயே மலசலம் கழிக்கின்றார்கள். ஆனால் கழித்த பின்னர் கழுவுவதற்கு அங்கு தண்ணீர் இல்லை. உணவு மற்றும் வேறு பொருட்கள் வழங்கப்படுவது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மக்கள் மனிதர்களாக நடத்தப்படவில்லை. அவர்கள் பன்றிகள் போல் வாழத் தள்ளப்பட்டுள்ளனர். நாங்கள் மருத்துவ சிகிச்சைக்காகப் போன போது, ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக கூடி நின்று தமக்கு உணவும் தண்ணீரும் தருமாறு கேட்டனர். இது அவர்களின் நிலைமைகளில் பெரும்பகுதியை வெளிக் கொணர்கின்றது. நூற்றுக்கணக்கானவர்கள் அவர்களுடைய நோய்களைப் பற்றிக் கூறுவதற்காக வந்திருந்தார்கள். ஒரு வரிசையை உருவாக்குமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டுக்கொண்டோம். ஒரு சில நிமிடங்களில் பல நூறு மீட்டர்களுக்கு வரிசை நீண்டது. எவ்வாறாயினும், எங்களால் சுமார் 500 நோயாளர்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்க முடிந்தது. சிப்பாய்கள் அவர்களைக் காவல் காத்தார்கள். அகதிகள் தமது தாய் மொழியான தமிழில் மட்டுமே பேசக் கூடியவர்களாக இருந்தனர். அதனால் இராணுவத்தினர் ஓரு மொழி பெயர்ப்பாளரை எமக்கு வழங்கினர். காவலாளி மற்றும் மொழி பெயர்ப்பாளர் பற்றி எச்சரிக்கையாக இருந்ததால், இவர்கள் பேசத் தயக்கம் காட்டுவதாகத் தோன்றியது. மொத்தத்தில் ஒவ்வொரு சிறுவரும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருந்ததோடு கூடுதலானவர்களுக்கு அவர்களுடைய வாயைச்சுற்றி புண்கள் இருந்தன. அவர்களுடைய பற்களின் தரங்ளைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. பலர் நுரையீரல் மற்றும் தொண்டைத் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஏனையவர்களுக்கு அம்மை மற்றும் வயிற்றோட்டம் உள்ளது. போசாக்கற்ற சிறுவர்களுக்கு இந்த நோய்கள் மிகவும் ஆபத்தானவையாக இருக்கும். பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் "ஆஸ்பத்திரியில்" சன நெருக்கடி கூடுதலாக இருந்தமையால் எம்மால் ஒரு சிலரை மட்டுமே அனுமதிக்க முடிந்தது. இந்த மக்கள் வன்னியில் வாழ்ந்து வந்தவர்கள். யுத்தத்தின் காரணமாகவும் அதே போல் கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின்னர் பாடசாலை வசதி பற்றாக்குறையாலும் இந்த சிறுவர்களில் பெரும்பாலானவர்கள் பல ஆண்டுகளாக பாடசாலை செல்லவில்லை. அந்தப் பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றுவதற்கு முன்னதாக அது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதிக காலம் தனது பிள்ளைகளுக்கு சோறும் உப்புத் தன்னீருமே கொடுக்க நேர்ந்ததாக ஒரு தாய் தெரிவித்தார். யுத்தம் உக்கிரமடைந்த நிலையில், ஒரு கிலோ அரிசிக்கு 1,000 ரூபாவும் (8.70 அமெரிக்க டொலர்) ஒரு கிலோ பருப்புக்கு 500 ரூபாவும் கொடுக்க வேண்டியிருந்தது. இரு பனடோல் வில்லைகளுக்கு 100 ரூபா செலவாகியது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்களின் முகத்தில் எந்தவொரு வெளிப்பாட்டையும் காண முடியவில்லை. அவர்கள் மன உலைச்சலுக்குள்ளாகி இருந்தனர். அவர்களால் விவேகமாக பதிலளிக்க முடியாமல் இருந்ததோடு அவர்களுக்கு மனவளர்ச்சி சிகிச்சை வழங்க வேண்டும். தாய்மாருக்கு பால் மா வழங்கப்படாததால் அவர்கள் குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகளை ஊட்ட வேண்டியுள்ளது. பெண்களுக்கான சுகாதார ஆடைகள் அங்கு இல்லவே இல்லை. மொத்தத்தில் எல்லாருமே பழைய, கந்தல் ஆடைகளையே உடுத்தியிருந்தனர். இலட்சக்கணக்கான அகதிகள் இந்த முகாம்களில் தங்கியிருந்த போதும் ஒரு நிரந்தர வைத்தியர் கூட அங்கு இல்லை என்பது அதிர்ச்சியளிக்கின்றது. முகாம்களில் உள்ள ஒவ்வொரு நிலமையும் பரிதாபகரமானது என எங்களது குழுவில் இருந்த ஒவ்வொரு வைத்தியரும் நினைத்தோம். இந்த மக்களின் கடல் அளவுத் தேவைகளை அரசாங்கத்தால் இட்டு நிரப்ப முடியும் அல்லது இட்டு நிரப்பும் என நாங்கள் நம்பவில்லை. அபிவிருத்தியடைந்த நாடு கூட இதைத் தனியாக செய்ய முடியாது. அரசாங்கம் செய்தி ஊடகங்களையும் உதவி முகவரமைப்புக்களையும் தடை செய்துள்ள நிலையில் முகாம்களில் உள்ள உண்மையான நிலமை தென் இலங்கையில் உள்ள மக்களுக்குத் தெரியாது. இலங்கை ஊடகங்கள் உண்மையான நிலமையை காட்டுவதில்லை. மக்களுக்கு உண்மை தெரிந்தால் அவர்கள் அகதிகளுக்கு உதவுவார்கள். மக்கள் [2004 டிசம்பரில்] சுனாமியின் போது அவ்வாறு செய்தார்கள். அவர்கள் முகாம்களில் உள்ள நிலமைகளை தெரிந்துகொண்டால் அதை கண்டனம் செய்வதோடு ஆத்திரத்தையும் வெளிப்படுத்துவார்கள். |