World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குTwenty years since the Tiananmen Square massacre தியனன்மென் சதுக்க படுகொலைகளின் பின்னர் இருபது ஆண்டுகள் By John Chan இன்று ஸ்ராலினிச சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) பெய்ஜிங்கில் இராணுவ அடக்குமுறையை மேற்கொண்டதின் 20வது ஆண்டு நிறைவுதினத்தை குறிக்கிறது. தியனன்மென் சதுக்கப் படுகொலை மாணவ எதிர்ப்பாளர்களை இலக்கு கொண்டது என்று சர்வதேச செய்தி ஊடகம் தொடர்ந்து சித்தரிக்கையில், அதிகம் ஆயுதமேந்திய துருப்புக்கள் உண்மையில் நாடெங்கிலும் எழுச்சி பெற்று வந்த நகர்ப்புற தொழிலாளர்கள் இயக்கத்தைத்தான் இலக்கு வைத்தன. உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை இராணுவ சிப்பாய்கள் உட்பட 241, என்று கூறப்படுவது நம்பகத்தன்மை உடையது அல்ல. ஆரம்பத்தில் சாதாரண குடிமக்கள் இறந்தார்கள் என்பதையே ஆட்சி முதலில் மறுத்தது. சீன செஞ்சிலுவைச் சங்கம் 2,600 பேர் இறந்ததாக அறிவித்தது; ஆனால் அரசாங்கம் கொடுத்த அழுத்தத்தின் பேரில் இந்த எண்ணிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டது. சுதந்திர பகுப்பாய்வாளர்கள் கிட்டத்தட்ட 7,000 பேர் இறந்திருக்கக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளனர்; ஆனால் உண்மையான எண்ணிக்கை ஒருபொழுதும் அறியப்பட மாட்டாது. ஏப்ரல் மாதம் ஜனநாயக சீர்திருத்தங்களுக்காக மாணவர்கள் நடத்திய எதிர்ப்பில் எரியூட்டப்பட்ட மக்கள் இயக்கம், தொழிலாள வர்க்கம் அதன் சமூக கோரிக்கைகளை எழுப்பியதால் விரைவில் உத்தியோகபூர்வ கட்டுப்பாட்டில் இருந்து நீங்கியது. குறைந்தது 400 நகரங்களில் 100 மில்லியன் மக்கள் எதிர்ப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று ஏதேனும் ஒரு விதத்தில் பங்கு பெற்றனர். தொழில்துறை தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற வறியவர்களுடன் குறைந்த அந்தஸ்து உடைய அதிகாரிகள், எழுதுவினைஞர்கள், ஆசிரியர்கள், ஏன் போலீஸும் கூட சமூக சமத்துவமின்மை மற்றும் 1978ல் முதலாளித்துவ சந்தை முறையை Deng Xiaoping தழுவியதில் இருந்து விளைந்த அதிகாரத்துவத்தின் இலாபநோக்கு ஆகியவற்றிற்கு தாங்கள் காட்டிய எதிர்ப்பை ஒட்டி இதில் தொடர்பு கொண்டிருந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக பல மேற்கத்தைய அரசியல் வாதிகளும் செய்தி ஊடகப் பண்டிதர்களும் ஸ்ராலினிசத்துடன் சோசலிசத்தை தவறாக அடையாளம் கண்டு, "கம்யூனிச" ஆட்சி "ஜனநாயகத்தை" அடக்குவது பற்றி கண்டிக்கும் பாசாங்குத்தனமான அறிக்கைகளை தொடர்ந்து வெளியிடுகின்றனர். 1949ல் நிறுவப்பட்ட மாவோயிச ஆட்சி ஒரு பொழுதும் சோசலிச அல்லது கம்யூனிச ஆட்சியாக இருந்ததில்லை. அதன் தொழிலாளர் விரோதப் போக்கு மீண்டும் 1989ம் ஆண்டு CCP உடைய விவசாயிகள் தளத்தைக் கொண்ட இராணுவம் தொழிலாளர்கள் இயக்கத்தைக் குருதியில் மூழ்கடித்ததில் தன் தன்மையை வெளிப்படுத்தியது. இப்படுகொலை, சீனத் தொழிலாள வர்க்கம் உலக முதலாளித்துவ உற்பத்திமுறை வழிவகைக்கு மிக அதிகம் சுரண்டப்படும் குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பு என்ற விதத்தில் இணைக்கப்படுவதற்கு உதவியது. பெய்ஜிங் ஒரு " எதிர்ப்புரட்சிகர எழுச்சியை" அடக்கியதாகக் கூறியதும் தவறான கருத்தே ஆகும். குறைந்த ஆயுதங்களை கொண்டிருந்த, தங்கள் உடல்களை மட்டும் பயன்படுத்தி AK-47 இயந்திரத் துப்பாக்கிகள், டாங்குகள், ஹெலிகாப்டரில் இருந்து வீசப்படும் குண்டுகள் ஆகிவற்றைக் கொண்டிருந்த 40,000 துருப்புக்களை எதிர்த்த பெய்ஜிங் தொழிலாளர்களை சுட்டது, மேற்கத்தைய சக்திகளுக்கு ஸ்ராலினிச போலீஸ்-இராணுவக் கருவி தங்கள் முதலீடுகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எந்த சவாலையும் முறியடித்துவிடும் என்பதை உத்தரவாதமாகக் காட்டியது. உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் படுகொலைக்கு விடையிறுக்கும் விதத்தில் வெள்ளமென முதலீட்டைக் கொண்டுவந்து சீனாவை ஒரு குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பைக் கொண்ட "உலகின் தொழிற்பட்டறையாக" மாற்றின. இப்பொழுது சீனாவின் பொருளாதாரம் 1989ல் இருந்ததை விட 6 மடங்கு அதிகமாகும்; நாடோ ஜேர்மனிக்கு அடுத்தாற்போல் உலகின் இரண்டாம் மிகப் பெரிய ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்தது. 2005 ல் பெய்ஜிங் உலகின் CEO க்கள் உடைய Global Fortune Forum க்கு விருந்தளிக்கையில், Fortune ஏடு எழுதியது: "இந்த முதலாளித்துவ-கம்யூனிச காதல் விருந்திற்கான மிக வெளிப்படையான விளக்கம் ஒரு கட்சி ஆட்சிமுறை சீனாவின் கொள்கைகளுக்கு தொடர்ச்சியை கொடுத்து, ஒரு பல கட்சி ஆட்சி முறை ஜனநாயகத்தில் பெறுவதைவிட குறைவான மடத்தனத்தையும் கொடுக்கிறது.... சீன அரசாங்கம்-- இன்னும் அதிக வெளிநாட்டு முதலீடு கொண்டுவரப்படுவதற்கு அர்ர்பணித்துள்ளதாய் கூறி, --பெரும்பாலான மேற்கத்தைய CEO க்கள் தங்கள் தாய்நாடுகளில் எதிர்கொள்வதை விட அதிக வணிகப் போக்கை எதிர்கொள்ளும் வகையில் உதவிகரமாக இருந்தது. மொத்தத்தில், பெருநிறுவனங்களும் ஒரு கட்சி அமைப்புக்கள் போன்றவைதாம்.""முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர்களுக்கு செல்வாக்கு அதிகம் இல்லாத நிலையில், ஒரு கட்சி" பெருநிறுவன கட்டமைப்புக்கள் தனியாரால் கட்டுப்படுத்தப்படுவதுபோல், CCP யும் உலக முதலீட்டாளர்களுக்காக கூட்டாக இணைந்து நடத்தும் கடூழிய உயைப்புக் கூடத்தை நடத்தி வருகிறது; தொழிலாளர்களை கடுமையான போலீஸ்-அரச நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்துகிறது. ஜனநாயக உரிமைகள் மீதான எந்த சலுகையும் 400 மில்லியன் சீனத் தொழிலாளர்களை சராசரி மணி நேர ஊதியமான அமெரிக்க 20 சென்ட்டுகள் கூலி மட்டத்தை எதிர்க்க அனுமதிக்கும், இது உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் செயற்பாடுகளுடன் பொருந்தி இருக்காது. மேலும் பெய்ஜிங்கின் மூலதன அளிப்பு, தொழிலாளர்களை மிருகத்தனமாக சுரண்டுவதை தளமாகக் கொண்டுள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முக்கிய "உயிர் கொடுக்கும் தன்மையாகி" உள்ளது. கடந்த ஆண்டு சீனா $400 பில்லியனை அமெரிக்காவிற்கு கடனாகக் கொடுத்தது--நாள் ஒன்றுக்கு $1 பில்லியனை விட அதிகம்; இது அதன் ஏற்றுமதி இலாபங்களை மறுபடியும் பெரும் கடனில் உள்ள அமெரிக்க நிதிய முறைக்கு உட்செலுத்திய விதத்தில் நடந்தது. "எந்த ஏழை நாடும் இதற்கு முன்பு இத்தனை பணத்தை ஒப்புமையில் பணக்கார நாட்டிற்கு கடன் கொடுத்ததில்லை. அமெரிக்காவும் இதற்கு முன்பு இத்தனை கடன் வாங்குவதற்கு ஒற்றை நாட்டை நம்பியிருந்ததில்லை." உயர்மட்ட அமெரிக்க அரசியல் வாதிகளும் அதிகாரிகளும், பெய்ஜிங்கிற்கு சமீபத்தில் தொடர்ந்து வருகை புரிந்தது சீனாவின்மீது அமெரிக்கா கொண்டிருக்கும் நம்பகத்தன்மைக்கு சான்று ஆகும். அமெரிக்க மன்றத் தலைவரான நான்ஸி பெலோசி, ஒரு ஜனநாயகக் கட்சியாளர், 1991ல் பெய்ஜிங்கில் "சீனாவில் ஜனநாயகத்திற்காக இறந்தவர்களுக்காக" என்று ஒரு பதாகையைத் திறந்து வைத்தவர், கடந்த வாரம் சீனாவிற்கு வருகை புரிந்தபோது பெயரளவிற்கு மட்டுமே மனித உரிமைகள் பற்றிப் பேசினார். அமெரிக்க அரசாங்கத்தின் மிகப் பெரிய வெளிநாட்டு கடன் கொடுத்தவரை பெலோசி விரோதித்துக் கொள்ள விரும்பவில்லை. பெப்ருவரி மாதம் அமெரிக்கப் பத்திரங்களை தொடர்ந்து வாங்குவதற்கு பெய்ஜிங்கை வலியுறுத்த வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் சொற்களில்: "எமது பொருளாதாரங்கள் பின்னிப் பிணைந்துள்ளன. மீண்டும் அதன் மிகப் பெரிய சந்தைக்கு ஏற்றுமதியை செய்வதற்கு... அமெரிக்கா ஊக்கப் பொதி பற்றி சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை சீனா அறியும். நாம் இன்னும் கடன் வாங்க வேண்டியுள்ளது. உண்மையில் நாம் ஒன்றாக எழுவோம் அல்லது விழுவோம்." அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மீது காட்டுமிராண்டித்தன சிக்கன நடவடிக்கைகள் சுமத்துவதின் மூலம், கடந்த வாரம் அமெரிக்க நிதியமைச்சர் டிம் கீத்னர் பெய்ஜிங்கிற்கு பயணித்து சீன அதிகாரிகளிடம் அவர்களுடைய $1.5 டிரில்லியன் அமெரிக்க சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று உத்தரவாதம் கொடுத்தார். அமெரிக்க நுகர்வோர் செலவுகளை உலக மந்த நிலை பெரும் அழிவிற்கு உட்படுத்தியது போல், அது சீனாவின் ஏற்றுமதிகளை சிதைத்து சீனாவின் உற்பத்தித் திறனின் பெரும் பகுதிகளையும் தகர்த்துள்ளது. 20 மில்லியன் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், 3 மில்லியன் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு புதிய வேலை இந்த ஆண்டு இல்லை என்ற நிலையில், CCP ஒரு சமூக கால-வெடிகுண்டு மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறது. Hong Kong தளமாகக் கொண்ட Trend ஏட்டின் மார்ச் மாதப் பதிப்பின்படி, சீனாவில் தொழிலாளர்களுடனான பூசல்கள் ஏழு மடங்கு அதிகமாகி 546,470 வழக்குகள் செப்டம்பர் உலக நிதிய கரைப்பில் இருந்து பதிவாகி உள்ளன. 2009ன் முதல் இரு மாதங்களில் 502 வணிக உரிமையாளர்களும் மூத்த நிர்வாகிகளும், ஊதியம் கொடுக்காததற்கும் பொறுத்துக் கொள்ள முடியாத சுரண்டலை அடுத்தும் எழுந்த வன்முறை அலையில் கொலையுண்டனர்.எழுச்சி பெறும் சமூக பதட்டங்களுக்கு இடையே தியனன்மென் சதுக்கத்தின் ஆவி உரு சீன ஆட்சியை அலைக்கழிக்கிறது. ஆண்டு நிறைவிற்கு முன்னதாக பெய்ஜிங் அசாதாரணப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எதிர்ப்புக்களை தடுப்பதற்காக மேற்கொண்டுள்ளது--எதிர்ப்பாளர்களை காவலில் வைத்தல், வெளிநாட்டு செய்தி வலைத் தளத்தை தடை செய்தல், ஜூன் 4ம் தேதி ஒரு பல்கலைக்கழக தேர்வு வைத்து மாணவர்கள் மீது கட்டுப்பாடு கொள்ளுதல் போன்றவை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 1989ல் வெடிப்பை தோற்றுவித்த சமூக முரண்பாடுகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. மாறாக அவை மகத்தான அளவு வளர்ந்து விட்டன. 1989 எழுச்சியின் போது நகர்ப்புற தொழிலாளர்கள் மட்டுமே தொடர்பு கொண்டிருந்தனர். இன்று பல மில்லியன் கிராமப்புற ஏழைகளும் தொழிலாள வர்க்கத்தில் சேர்ந்துள்ளனர்; இதன் மிகச் சுரண்டப்பட்ட அடுக்குகளில் உள்ளனர். 1980 களில் பெரும்பாலான தொழிலாளர்கள் அரசாங்க உடைமை நிறுவனங்களில் வேலைபார்த்து வந்தனர். கடந்த 20 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் தனியார் மயம் ஆக்கப்பட்டது பல மில்லியன் வேலைகளை தகர்த்துவிட்டதுடன் அத்துடன் இருந்த முந்தைய சமூக பாதுகாப்பு வலைகளையும், பொது வீட்டு வசதி, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி போன்றவற்றை தகர்த்துவிட்டது. சிறப்பு பயிற்சி பெற்ற தொழிலாளர்கள்கூட இடைவிடா நிதியப் பாதுகாப்பற்ற தன்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூக அளவுகோலின் மறுபுறத்தில் CCP முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சியாக வெளிப்பட்டுள்ளது. 2002ல் இது தனி தொழில்முயல்வோர்களுக்கு கதவுகளைத் திறந்துவிட்டது. 2002க்கு முன்பு சீனாவில் அமெரிக்க டாலர் பில்லியனர்கள் எவரும் கிடையாது. ஆனால் 2008 ஐ ஒட்டி அமெரிக்காவிற்கு அடுத்தாற்போல் 101 பில்லியனர்களை இது கொண்டுள்ளது; 2007ல் இருந்ததை விட 5 தான் குறைவு; உலக நிதிய நெருக்கடி இருந்தும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று சீனாவின் மிகச் செல்வம் படைத்த 1,000 தனிபர்களில் (சராசரி செல்வம் அமெரிக்க $439 மில்லியன்) 100 பேரைவிடக் குறைவானவர்கள்தான் CCP ஆட்சி உறுப்பினர்கள் அல்லது அவர்களுடன் தொடர்பு உடையவர்கள் அல்லர். இதுவரை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் போலீஸ்-அரச கருவி சீனாவில் ஆழ்ந்த பிளவுற்ற சமூகத்தை ஒன்றாக நிறுத்த முடிந்துள்ளது; குறிப்பாக புரட்சிகர எண்ணங்கள் நாட்டில் நுழைவதை தடுப்பதில். ஆனால் லியோன் ட்ரொட்ஸ்கி கூறியுள்ளார்: வரலாற்றின் விதிகள் எந்த அதிகாரத்துவ கருவியையும் விட மிகவும் சக்தி வாய்ந்தவை. சீனத் தொழிலாள வர்க்கம் உலக உற்பத்திக்குள் கடந்த 20 ஆண்டுகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன; அதன் கரங்களில் சக்திவாய்ந்த புரட்சிகர கருவிகளான இணையதளம் மற்றும் மின்னணுத் தொடர்பையும் கொடுத்துள்ளது. இது சீனத் தொழிலாளர்களுக்கு, ஒரு பொது, சர்வதேச, சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஒரு சர்வதேச புரட்சிகர இயக்கத்தை கட்டமைப்பதில் தங்கள் போராட்டங்களை, உலகெங்கிலும் இருக்கும் தங்கள் வர்க்க சகோதர, சகோதரிகளுடன் நனவுபூர்வமாக ஐக்கியப்படுத்துவதற்கு புறநிலை அடிப்படையைக் கொடுக்கும். |