World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The European election

What lies behind the tensions with the US?

ஐரோப்பியத் தேர்தல்

அமெரிக்காவுடனான அழுத்தங்களுக்குப் பின்னணியில் என்ன உள்ளது?

By Peter Schwarz
6 June 2009

Back to screen version

இந்த வார இறுதியில் நடக்கும் ஐரோப்பியத் தேர்தல் கடுமையான உள்நாட்டு, சர்வதேச அழுத்தங்களுக்கு இடையே நடைபெறுகிறது. ஜேர்மனி பிரான்ஸுடன் கொண்டுள்ள மோதல்கள் ஒருபுறமும், மற்றும் அமெரிக்காவுடனான மோதல்கள் மறுபுறமும் ஐரோப்பிய ஒன்றியத்தை தகர்க்கக்கூடிய விதத்தில் தேசிய மோதல்கள் ஐரோப்பாவிற்குள் தீவிரமடையும் கட்டத்தில் உள்ளன.

சர்வதேச நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எப்படி தீர்வு காண்பது என்பது பற்றிய வேறுபாடுகள் பேர்லின் மற்றும் வாஷிங்டனுக்கு இடையே அதிகரித்துக் கொண்டிருக்கிறன. ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெல் செவ்வாயன்று அமெரிக்க அரசாங்கத்தை அசாதாரணமான தீவிரத்துடன் தாக்கினார். பேர்லினில் பொருளாதாரப் பிரதிநிதிகள் நிறைந்த அரங்கில் பேசிய அவர், பொருளாதார நெருக்கடியை ஒட்டி அமெரிக்க மத்திய வங்கிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பற்றி "பெரும் அவநம்பிக்கை" கொண்டிருப்பதாக அறிவித்தார். Bank of England பற்றியும் அவர் குறைகூறினார். அமெரிக்க, பிரிட்டிஷ் நிதியச் செய்தி ஊடகங்கள் இதை இகழ்வுடன் எதிர்கொண்டன. "மேர்க்கெல் மத்திய வங்கிகளை சாடுகிறார்" என்ற லண்டன் பைனான்சியல் டைம்ஸ் தலைப்பு கொடுத்தது; மேர்க்கெல் பகிரங்கமாக குறைகூறியுள்ளது "அசாதாரணமானது" என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டுள்ளது.

இம்மோதலின் பின்னணில் என்ன உள்ளது?

எதிர்மாறான விளைவுகள் இருந்த போதிலும்கூட, ஜேர்மனியின் முக்கிய அரசியல் வட்டங்கள் சர்வதேச நிதிய நெருக்கடியை வோல் ஸ்ட்ரீட் மற்றும் சிட்டி ஆப் லண்டனின் மேலாதிக்கத்தை உதறித்தள்ளும் வாய்ப்பாக கண்டன. சிறந்த முயற்சிகள் எடுக்கப்பட்டும்கூட, லண்டனுடனும் நியூயோர்க்குடனும் பிராங்பேர்ட்டின் நிதிய மையத்தால் தீவிரமாகப் போட்டியிட முடியவில்லை. ஜேர்மனிய பொருளாதாரத்தின் வலிமை அதன் ஏற்றுமதித் தொழிற்துறைகளில் உள்ளது. ஆனால் இந்தத்துறைதான் நிதியச் சந்தைகளின் நெருக்கடியால் துல்லியமான பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. பல ஜேர்மனிய இயங்கிவரும் சர்வதேச தனியார் முதலீட்டு நிதியங்களின் நடவடிக்கைகள் பற்றி ஏற்கனவே ஜேர்மனியில் எதிர்ப்புக்கள் இருந்தன. லெஹ்மன் பிரதர்ஸின் சரிவு பல ஜேர்மனிய வங்கிகளை படுகுழியில் தள்ளி உலகப் பொருளாதாரத்தையும் மந்தநிலையில் ஆழ்த்தியபோது, ஜேர்மனியின் முடிவு தெளிவாக இருந்தது--அதாவது இந்த நெருக்கடி "அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது" என்பதே அது.

ஆனால் வாஷிங்டன் நெருக்கடியை எதிர்கொள்ள இன்னும் நிதானமான பங்கைக் வகிக்கும் என்ற நம்பிக்கைகளும், அதுவும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஒபாமாவின்கீழ் ஐரோப்பியர்களை சமமாக நடத்தி ஒத்துழைப்பார் என்ற நம்பிக்கைகளும் சிதைந்துவிட்டன. உலகின் ஏனைய பகுதிகளின் இழப்பில்தான் அமெரிக்க முதலாளித்துவம் நெருக்கடிக்கான தன் பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சிகளை இரு மடங்காக ஆக்கியுள்ளது.

நம்பமுடியாத அளவிற்கு ஒபாமா நிர்வாகம் வோல் ஸ்ட்ரீட்டிற்கு ஊக்கம் கொடுப்பதற்கு நிதியை கொடுத்துள்ளதுடன் நிதியச் சந்தைகளை மறு சீரமைக்கும் நம்பிக்கைகளை தகர்த்துவிட்டது. அதே நேரத்தில் கட்டுப்பாட்டிற்குள் அடங்காத பணவீக்கத்திற்கு உரமிட்டுள்ளது. இது ஜேர்மனியின் ஏற்றுமதி தொழில்களுக்கு பேரழிவு விளைவுகளைத் தரும். இந்த அச்சத்தைத்தான் பேர்லினில் நடத்திய தன் உரையில் மேர்க்கெல் வெளிப்படுத்தினார்.

சர்வதேச நிதியச் சந்தைகளில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்வதற்கு முன், அவற்றின் மரபார்ந்த அதிகார நிலையை மீட்கும் நோக்கத்துடன் வாஷிங்டனும் லண்டனும் அவற்றின் நிதிய நிறுவனங்களில் டிரில்லியன் கணக்கான டாலர்களை உட்செலுத்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். நிதியச் சந்தைகள் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளுவது என்பது அவற்றைக் கட்டுப்படுத்துவதை கடினமாக்கும் என்ற ஆபத்தை அவர் "தெளிவாகக் கண்டுள்ளார்". மேர்க்கெல் தொடர்ந்து கூறியது: "நெருக்கடியில் இருந்து ஓரளவு வலிமை பெற்று மீள்பவர்கள் கூட வருங்காலத் தடைகளை எதிர்க்கத்தான் முயற்சிப்பர்." வங்கிகள் ஏற்கனவே புதிய ஊக அரங்கங்களை கொண்டு விட்டன என்ற கவலையை தெரிவித்த அவர், "இது அரசாங்க கடன்களை முன்னும் பின்னும் புரட்டுவது போல் ஆகும் என்றார்"; ஏனெனில் அவற்றை மீட்பதற்கு அரசாங்கம் பெரும் செலவுகளை செய்துள்ளது.

"நிதிய நெருக்கடி அமெரிக்கச் சொத்துச் சந்தைகளின் ஒழுங்கீனங்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டது என்ற உணர்வு பல தலைநகரங்களில் உள்ளது; ஆனால் அதன் உண்மையான ஆரம்பம் முற்றிலும் மாறுட்டது: பல ஆண்டுகள் சற்றே தாராளமான நிதியக் கொள்கை செயல்படுத்தப்பட்டதுதான், அதுவும் குறிப்பாக அமெரிக்காவில்." என்று Süddeutsche Zeitung பத்திரிகை கூறியுள்ளது.

இதே போன்ற நிலையில் உள்ள ஜேர்மனிய, பிரெஞ்சு அரசாங்கங்கள் அமெரிக்க அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் தங்கள் ஏகாதிபத்திய நலன்களை அதிகரித்தளவில் ஆக்கிரோஷமான முறையில் அதிகமாக்கிக் கொண்டுள்ளன. பேர்லின் உரைக்கு இரு நாட்கள் முன்பு "வலுவான ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பத்து கருத்தாய்வுகள்" என்ற தலைப்பில் பிரெஞ்சு ஜனாதிபதியுடன் சேர்ந்து கட்டுரை ஒன்றை எழுதினார். "ஐரோப்பா உலகில் முக்கிய பங்கை ஆற்ற வேண்டும்" என்ற கோரிக்கையில் கட்டுரை உச்சகட்டத்தை அடைந்தது.

கருத்தாய்வுகளின் அமெரிக்க-எதிர்ப்பு பார்வை சர்வதேச நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடியின் காரணங்கள் பற்றிய பகுப்பாய்வுடன் தொடங்குகிறது. "விதிகள் ஏதும் இல்லாமல் (தடையற்ற சந்தையின்) தாராளமயம் தோற்றுவிட்டது. நாம் இப்பொழுது அகப்பட்டுக் கொண்டுள்ள கடுமையான நெருக்கடிக்கு இத் தோல்வி வழிவகுத்தது." என்று கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது. "தொழில்வழங்குனர், ஊழியர் இருவருக்கும் ஆதரவு தரும் பொறுப்பான சந்தைப் பொருளாதார மாதிரிதான் நமக்குத் தேவை; ஊக வணிகத்திற்கு ஆதரவு கொடுப்பது அல்ல; இச்சந்தை வெகு விரைவில் இலாபத்தை ஈட்டுவதற்கு என்று இல்லாமல் நீண்டகால முதலீடுகளை தளமாகக் கொண்டிருக்க வேண்டும்."

இவர்கள் மிக உயர்மட்ட வணிக வட்டங்களில் நெருக்கமான உறவுகளைக் கொண்ட இரு அரசியல்வாதிகள் ஆவர்; சோசலிசத்தின்மீது பரிவுணர்வு காட்டுபவர்கள் என்ற குற்றம் இவர்கள்மீது சாட்டப்பட முடியாது. சந்தை, ஊகமுறை, இலாபம் ஆகியவற்றின் மீது இவர்களுடைய தாக்குதல் அமெரிக்க முதலாளித்துவத்தின் மீதான தாக்குதல் என்றுதான் விளங்கிக்கொள்ளப்பட வேண்டும்.

"நிதியத் துறையில் ஓர் உண்மையான ஐரோப்பிய ஒழுங்குமுறை", "இருதரப்பு நலத்தின் அடிப்படையில் நியாயமான உலக வணிகம்" என்பவை தேவை என்று மேர்க்கெலும் சார்க்கோசியும் அழைப்பு விடுத்துள்ளனர். உலக வணிகப் பேச்சுவார்த்தைகளில் டோகா சுற்று தோல்வியுற்றால், "ஒரு இடைக்கால ஐரோப்பிய தீர்வை ஏற்றல்" என்பதை தாங்களே செய்ய இருப்பதாகவும் அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு கூடுதலாக சர்வதேசப் பங்கு நிபந்தனையற்று இருக்க வேண்டும் என்பது கூறப்படுகிறது: "வலுவான ஐரோப்பிய தொழிற்துறை, நிறுவனங்கள் உருவாகுவதை ஐரோப்பா ஆதரிக்க வேண்டும். உலகம் முழுவதும் முதல் தரத்தில் ஐரோப்பிய நிறுவனங்களின் வளர்ச்சி ஏற்படுவதற்கு அது வழி செய்ய வேண்டும்; ஐரோப்பிய பொருளாதாரத்தின் போட்டித் திறனை வலுப்படுத்தும் வகையில் நம் கொள்கைகள் இம்முயற்சிக்கு ஆதரவு தர வேண்டும்."

அமெரிக்காவுடனான மோதல் ஐரோப்பிய ஒன்றியத்தையும் மாற்றிக் கொண்டு வருகிறது. அமெரிக்க அழுத்தத்தில் மையத்தில் இருந்து விலகும் சக்திகள் ஐரோப்பிய கண்டத்தில் பெருகி, ஐரோப்பிய ஒன்றியத்தையே முறிக்கும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது. தீவிர தேசிய மற்றும் நாட்டு வெறி சக்திகள் ஐரோப்பிய தேர்தலில் வலுப்பெற்று வெளிப்படும் என்பதற்கு ஏராளமான அடையாளங்கள் காணப்படுகின்றன.

வியாழனன்று மக்கள் ஹாலந்தில் வாக்களித்தபோது, வலதுசாரி ஜனரஞ்சகவாத Geert Wilders ஆல் வழிநடத்தப்படும் முஸ்லிம்-எதிர்ப்பு "Freedom Party" இரண்டாம் இடத்தை பெற்றது. 16 சதவிகித வாக்குகளை பெற்று இது பிரதம மந்திரி Jan Peter Balkende பெற்ற 20 சதகிகிதத்தில் இருந்து அதிகம் பின்தங்கியிருக்கவில்லை. சமூக ஜனநாயக தொழிற் கட்சி மூன்றாவதாக வந்து, 13 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்றது.

பெரிய பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு ஐக்கிய இராச்சிய சுதந்திர கட்சி (United Kingdom Independence Party) ஆட்சி புரியும் தொழிற்கட்சியை விட அதிக ஆதரவைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; தொழிற்கட்சி ஒரு தேர்தல் தோல்வியை எதிர்கொள்ளுகிறது. அடுத்த பிரிட்டஷ் அரசாங்கத்தை அமைக்க வாய்ப்புள்ள பழைமைவாத டோரிக் கட்சி தற்பொழுது தீவிர தேசியவாதக் குழுக்களான Kaczynski சகோதரர்கள் தலைமையில் இயங்கும் சட்டத்திற்கும் நீதிக்குமான போலந்து கட்சி (Polish Law and Justice Party-PiS) போன்றவற்றுடன் ஐரோப்பிய பாராளுமற்றத்தில் புதிய பாராளுமன்ற குழுவை ஏற்படுத்துவதற்காக தற்பொழுது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. எதிர்வரவிருக்கும் ஆட்சிக்காலத்தில் டோரி ஐரோப்பிய மக்கள் கட்சி (European Peoples Party) என்பதை விட்டு நீங்கிவிடத் திட்டமிட்டுள்ளது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒப்புதல் கொடுத்த அனைத்து முக்கிய பழைமைவாத கட்சிகளும் அடங்கியுள்ளன. பெரிய பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியம் பற்றி அவநம்பிக்கை கொண்டிருக்கும் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டையே சந்தேகத்திற்கு உட்படுத்தி விடும்; ஏனெனில் நான்கு பெரிய உறுப்பு நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.

இந்த வலதுசாரி சக்திகள் பெரும் மக்கள் ஆதரவைக் கொண்டிருக்கவில்லை. மிகக் குறைந்த வாக்காளர்கள் வாக்குகளைப் பதிவு செய்வதில், 30 சதவிகிதம்தான் என்பதில் இருந்து இவை ஆதாயம் அடைகின்றன. இதைத்தவிர தொழிலாளர் பிரிவுகள் மீது பல ஆண்டுகளாக தாக்குதல் நடத்த முன் நின்ற சமூக ஜனநாயகக் கட்சிகளின் வீழ்ச்சியும் ஒரு காரணம் ஆகும். ஆயினும் கூட தீவிர வலது சக்திகள் உண்மையான ஆபத்தைப் பிரதிபலிக்கின்றன. ஐரோப்பாவை போட்டியிடும் தேசிய அரசுகள் மற்றும் பகுதிகளாக சிதைப்பது பேரழிவு தரக்கூடிய சமூக, அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும். இது ஐரோப்பாவை 20ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாட்டிய அனைத்து தேசியவாத இழிவுகளையும் மீண்டும் தூண்டிவிடும். அதுதான் சமீபத்தில் பால்கன்களில் வெளிப்பட்டதாகும்.

உழைக்கும் வர்க்கம் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கக் கூடாது, உறுதியாக பாதுகாக்ககூடாது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய முதலாளித்துவ நலன்களின் கருவியாகும். வெளியுலகில் தன் செல்வாக்கை ஆக்கிரோஷமாக பெருக்குகையில் இது ஐரோப்பாவிற்குள் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துகிறது. மிக அதிகம் வாக்காளர்கள் வாக்குகளைப் பதிவு செய்யாதது மக்களின் சீற்றத்தையும் கோபத்தையும் பிரதிபலிப்பதுடன் ஐரோப்பிய ஒன்றியம், அதன் நிறுவன அமைப்புக்களுக்கு எதிரான தன்மையையும் காட்டுகிறது. ஆனால் வலதுசாரி சக்திகள் இந்த கோபத்தை பயன்படுத்தி அதை தேசியவாத திசைகளில் திருப்ப முற்படுகின்றன.

தொழிலாள வர்க்கம் இத்தகைய நிகழ்வுகளைப் பற்றி பொருட்படுத்தாமலோ அல்லது அமைதியாகவோ இருக்க முடியாது. ஐரோப்பாவை ஒரு சோசலிச அடிப்படையில் ஒன்றுபடுத்தும் முயற்சியை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல் என்பது சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான ஒரு போராட்டத்துடனும் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளின் உருவாக்கத்துடனும் கட்டாயமாக ஒன்றிணைந்ததாகும். இந்த முன்னோக்கைத்தான் நான்காம் அகிலத்தின் ஜேர்மனிய பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (PSG) முன்வைத்துள்ளது. இந்த ஞாயிறன்று சோசலிச சமத்துவக் கட்சிக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் ஐரோப்பா முழுவதும் ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தை வளர்ப்பதற்கான முதற்படியாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved