World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Eyewitness account of Sri Lankan detention camps

இலங்கை தடுப்பு முகாம்கள் பற்றிய நேரடி மதிப்பீடு

By our correspondents
21 May 2009

Use this version to print | Send feedback

இலங்கையில் இராணுவத்தால் பராமரிக்கப்படும் தடுப்பு நிலையங்களில் உள்ள சுமார் 265,000 தமிழ் பொது மக்கள் முகங்கொடுக்கும் நிலைமைகள் பற்றிய ஒரு நேரடி மதிப்பீடே இது. இங்குள்ள பெரும்பாலான அகதிகள், இராணுவத்தின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களுக்கு உள்ளான தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு வலயம் என சொல்லப்படுவதில் இருந்து கடந்த மாதத்தில் இடம் பெயர்ந்தவர்களாவர். நடந்தே வந்த அவர்கள் மெலிந்தும், காயமடைந்தும் அல்லது சுகயீனமுற்றும் இருப்பதோடு தக்க முறையில் பராமரிக்கப்படவில்லை. பல முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள வடக்கு நகரான வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுடன் பேசுவதில் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

வவுனியாவும் அதன் புறநகர் பகுதிகளும் இராணுவக் கோட்டையைப் போன்றது. ஆயுதப் படைகளுக்கான வன்னி கட்டளைத் தலைமையகம் வவுனியா நகர மத்தியில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் பிரமாண்டமான பிரதேசத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. வீதித் தடைகளும் சோதனைச் சாவடிகளும் எல்லா இடத்திலும் உள்ளன. ஆயுதப் படைகள் அடிக்கடி நடந்து ரோந்து செல்வதுடன், சிப்பாய்கள் நிறைந்த ஜீப் வண்டிகளும் றக் வண்டிகளும் அடிக்கடி செல்கின்றன.

வவுனியா செல்வதற்கு ஒருவர் தெற்கில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதவாச்சிக்கு கொழும்பில் இருந்து ரயிலில் அல்லது பஸ்ஸில் செல்ல வேண்டும். இந்த நாட்களில் ரயில் அதற்கு அப்பால் செல்வதில்லை. மதவாச்சியில், வடக்கு பயணிக்க விரும்பும் எவருக்கும் கடுமையான பாதுகாப்பு விதிகள் உள்ளன. மக்கள் பதிவு செய்துகொள்வதற்காக சோதனைச் சாவடிகளில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். பயணத்துக்கான காரணம் மற்றும் வவுனியாவில் ஒரு முகவரி உட்பட தனிப்பட்ட விபரங்கள் வழங்கப்பட வேண்டும்.

மதவாச்சியில் இருந்து செல்லும் வீதியில், அடுத்தடுத்து காவல் அரன்கள் அமைக்கப்பட்டுள்ளன. வவுனியாவுக்கு அருகில், இரட்டைப் பெரிய குளத்தில் ஒரு பெரிய சோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அங்கு மீண்டும் சோதனை செய்யப்பட்டு பதிவு செய்யப்படுவர். இதே நீண்ட விதிகள் திரும்பி வரும்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

தமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பற்றிய ஏதாவது செய்தி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இலங்கை பூராவும் இருந்து வவுனியாவுக்கு பயணிக்க முயற்சிக்கின்றனர். நகரத்தை விட்டு வெளியேறும் எந்தவொரு தமிழருக்கும் ஒரு இரசீது வழங்கப்படுவதோடு திரும்பிச் செல்லும் போது அதை ஒப்படைக்க வேண்டும். நகருக்குள் நுழைய விரும்பும் சிங்கள இனத்தவர்கள் அவர்கள் அங்கு செல்வதற்கான காரணம் பற்றிய கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

வவுனியாவில் இருந்து சுமார் 33 மூன்று கிலோமீட்டர் மேற்காக, மெனிக் ஃபார்ம் என்றழைக்கப்படும் ஒரு பிரதேசத்தின் செட்டிக்குளம் என்ற இடத்தில் தமிழ் பொதுமக்களுக்காக நான்கு பிரதான தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாமிலும் சுமார் 40,000 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மெனிக் ஃபார்முக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட ஒரு சிலரிடம் நாம் பேசிய போது, அங்கு அளவுக்கு மிஞ்சி கூட்டம் நிறைந்திருப்பதாகவும் வசதிகள் மிகவும் பற்றாக்குறையாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

வவுனியாவிலும் கூட, பொது பாடசாலைகள் மற்றும் ஏனைய அரசாங்க கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள 23 சிறிய தடுப்பு நிலையங்களில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் ஆயிரத்திற்கும் மூன்றாயிரத்துக்கும் இடைப்பட்ட அகதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். எங்களால் இரு பாடசாலைகளுக்கு செல்ல முடிந்தது. இரு நிலையங்களிலும் ஆயுதம் ஏந்திய பொலிசாரும் இராணுவத்தினரும் காவலில் இருந்தனர். முகாமைச் சூழ முற்கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது. ஒரு சிலர் உள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஊடகங்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன.

ஒரு பாடசாலையில், எங்களுடன் பேசியவர்களின் முகங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. அவர்கள் மேலே முற்கம்பியால் உயர்த்தப்பட்ட ஒரு சுவருக்கு பின்னால் இருந்து எம்முடன் பேசினர். நாங்கள் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரது இரு பிள்ளைகளும் தம்மை முகாமுக்கு வெளியே கொண்டு செல்லுமாறு கேட்டு அழத்தொடங்கின. உள்ளே ஒவ்வொரு பாடசாலை அறையிலும் 40 பேர் வரை திணிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை மைதானத்தில் சிறிய கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முகாம்களுக்குள் நிலைமை கூட்டம் நிறைந்துள்ளதாகவும் சுகாதாரகேடுடன் உள்ளதாகவும் பலர் எம்மிடம் கூறினர். சில நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் வாரம் இரண்டு முறைதான் குளிக்க முடியும். ஏனையவற்றில், கழுவுவதற்கு கூட தண்ணீர் போதாது. இந்த முகாம்களில் எவற்றிலும் போதுமானளவு மலசல கூடங்கள் இல்லாததோடு நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே கூடத்தையே பயன்படுத்த வேண்டியுள்ளது. வயிற்றுப் போக்கு, வைரஸ் காய்ச்சல் மற்றும் அம்மை உட்பட தொற்று நோய்கள் இங்கு பொதுவானவையாகி வருகின்றன.

பாதுகாப்பு வலயத்தில் மோதலின் போது நூற்றுக்கணக்கான சிறுவர்கள் காயமடைந்ததாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. சிலருக்கு இன்னமும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. ஏறத்தாழ நாங்கள் சந்தித்த ஒவ்வொரு குடும்பமும் குறைந்த பட்சம் ஒரு உறுப்பினரையாவது இழந்துள்ளது. யுத்த வலயத்தில் மாதக்கணக்காக சிக்கியிருந்ததனால் ஏற்பட்ட அதிர்ச்சி, இப்போது முகாம்களில் உள்ள நிலைமையினால் மேலும் அதிகரித்து வருகிறது. யாராலும் வெளியில் செல்ல முடியாது. பார்வையிடச் செல்லும் உறவினர்களால் மட்டுமே சில தேவைகளை அவர்களுக்கு வழங்க முடியும்.

ஒவ்வொரு நாளும் இளைஞர்களையும் யுவதிகளையும் இராணுவம் கைது செய்து அவர்களை தூரத்துக்கு கொண்டு செல்வதாக பலர் எம்மிடம் கூறினர். அவர்கள் எங்கே என்று யாருக்கும் தெரியாது. சில சமயங்களில் முகமூடி ஒற்றர்கள் "புலி சந்தேக நபர்களை" அடையாளம் காட்ட பயன்படுத்தப்படுகின்றனர். அகதிகளுடன் சேர்ந்து சுமார் 3,000 புலி போராளிகள் வெளியேறியுள்ளதாக இராணுவம் கூறிக்கொள்கிறது.

எல்லா வகையிலும் இந்த நிலையங்கள் ஒரு முகப்படுத்தப்பட்ட செறிவான முகாம்களாகும். அரசாங்கம் சிடுமூஞ்சித்தனமாக கூறிக்கொள்வது போல், இந்த ஆயுதப் பொலிசாரும் இராணுவமும் அவற்றை ஆர்வத்துடன் காவல் காப்பது, அகதிகளின் "பாதுகாப்புக்காக" அல்ல, மாறாக, எவரும் வெளியில் செல்வதை தடுப்பதற்கும் எந்தவொரு தகவலும் வெளியில் கசிவதை தடுப்பதற்குமே ஆகும்.

வவுனியா பொது வைத்திய சாலைக்கு செல்ல நாம் முயற்சித்த போதிலும் அது முடியவில்லை. எவரும் நுழையாதவாறு ஆயுதம் தரித்த பாதுகாவலர்கள் நிற்கின்றனர். பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட நோயாளியின் பெயரை கொடுக்க வேண்டும், மற்றும் அவர் கடுமையாக சோதனையிடப்படுவார். ஆஸ்பத்திரியில் கூட்டம் அளவு மீறி இருப்பதாகவும் நோயாளர்கள் கட்டில்களிலும் நிலத்திலும் வாயில்களிலும் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரங்களிலும் இருப்பதாக உள்ளே இருந்தவர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் முகாம்களுக்குள் உள்ள நிலைமையை பற்றி எங்களிடம் கூறினர்.

37 வயதான ஒரு பெண், அவரது இரு பிள்ளைகளுடன் ஒரு பாடசாலையில் இருக்கின்றார். "தாங்கமுடியாத ஷெல் வீச்சு மற்றும் பட்டினி காரணமாக நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயரத் தள்ளப்பட்டோம். எங்களை இங்கு கொண்டுவருவதற்கு முன்னர் வேறு ஒரு பாடசாலையில் வைத்திருந்தனர்.

"[நாங்கள் பாதுகாப்பு வலயத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்] ஒரு விமானம் தலைக்கு மேல் பறந்த அதேவேளை ஒரு பெரும் வெடிப்பு நடந்தது. எனது கனவர் உட்பட பெருந்தொகையானவர்கள் காயமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். எனது கனவர் ஆசிரியர். அவர் உயிரிழந்ததில் இருந்து எனது பிள்ளைகள் அதிகம் பேசுவதில்லை. நாங்கள் ஏன் உயிருடன் விடப்பட்டோம் என எனக்குள்ளேயே கேட்டுக்கொள்வேன். மூன்று மாதங்களுக்கு முன்னர் நாம் எங்கள் வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்தே, சரியான உணவு கிடைக்கவில்லை."

ஏனைய இளம் பெண்களைப் போல் தன்னையும் இராணுவம் இழுத்துச் செல்லும் என்ற பீதியில் இருப்பதாக அவர் விளக்கினார்.

அறுபது வயதான ஒருவர், இராணுவம் தமிழ் பொதுமக்களை "விடுதலை செய்யும்" மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொள்கிறது என அரசாங்கம் கூறிக்கொள்வதை கண்டனம் செய்தார். "உலகில் வேறு யாரும் இந்தத் துன்பத்தை அனுபவிக்கக் கூடாது," என அவர் கூறினார்.

அவரும் அவரது குடும்பமும் ஏனையவர்களுடன் வெளியேறும் போது, அவரது மனைவி விமானத் தாக்குதலொன்றில் கொல்லப்பட்டதாக அவர் விளக்கினார். அவரது சகோதரியும் மேலும் பலரும் வழியில் உயிரிழந்தனர். "எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது இந்த அட்டூழியங்களை அம்பலப்படுத்துவதற்கே நான் வாழ்கிறேன். ஒவ்வொரு தமிழரும் ஒரு புலி உறுப்பினர் மற்றும் எதிரி என்றே பாதுகாப்புப் படை நினைக்கிறது," என அவர் ஆத்திரத்துடன் தெரிவித்தார்.

இன்னொருவர் விளக்கியதாவது: "நாம் இங்கு மிருகங்கள் போல் அடைத்து வைக்கப்பட்டுள்ளதோடு எங்களுக்கு கொடுக்கப்படுவதை சாப்பிடத் தள்ளப்பட்டுள்ளோம். நாங்கள் அனைத்தையும் இழந்து விட்டோம். ஆனால் இன்னமும் எங்களால் வேலை செய்ய முடியும். வெளியில் சென்று எங்களது சொந்த இடத்தில் குடியேற அவர்கள் எங்களை அனுமதிக்க வேண்டும்."

ஒரு தந்தை தனது காயமடைந்த 16 வயது மகனை பராமரிக்கிறார். இராணுவ ஆட்டிலறித் தாக்குதலின் போது அவரது மனைவியும் மேலும் பலரும் கொல்லப்பட்டனர். அவர் தனது மனைவியை ஒரு பாயில் சுற்றி அடக்கம் செய்தார். அவர் தனது காயமடைந்த மகனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது, அந்த இளைஞனின் கை கால்கள் அசையவில்லை. அவரது இரு மகள்மாறும் இராணுவத்தால் பிடித்துக்கொண்டு செல்லப்பட்டதை தெரிவிக்கும் போது அவர் விம்மி விம்மி அழத் தொடங்கினார்.

வளர்ச்சி கண்டுவந்த சர்வதேச கண்டனத்தை எதிர்கொண்ட இலங்கை மனித உரிமைகள் அமைச்சு, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பு முகாம்களை விட்டு வெளியேறி உறவினர்களுடன் தங்கலாம் என அறிவித்தது. எவ்வாறெனினும், நிர்வாக அலுவலர் மூலம் ஒரு உறவினர் விண்ணப்பிக்க வேண்டியிருப்பதோடு பின்னர் வவுனியாவில் உள்ள பாதுகாப்பு படை கமாண்டரால் அது அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அண்மையில் இந்த விதிமுறைகள் முடிவதற்கு முன்னர் சுகயீனமுற்ற 72 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக ஒருவர் விளக்கினார். உயிரிழந்தவரின் மனைவியும் பிள்ளைகளும் முகாமில் இருந்த போதும் அவரது மரணச் சடங்கில் பங்குபற்ற அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

உறவினர்களைப் பார்க்க கொழும்பில் இருந்து சென்ற பெண் எங்களிடம் கூறுகையில், அவரது சகோதரரும் அம்மாவும் இடம்பெயரும் போது பிரிந்து விட்டதாகவும் அவர்கள் இப்போது மெனிக் ஃபார்மில் வெவ்வேறு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அவர் தனது அம்மாவை வெளியில் எடுக்க முயற்சித்த போதும் வெற்றியளிக்கவில்லை. கசிந்து வந்த பல குடும்பங்களின் பல கதைகளை நாம் கேள்விப்பட்டோம்.

பிரதேசத்தில் மோதல்கள் உக்கிரமாகும் முன்னர் மருத்துவ சிகிச்சைக்காக கிளிநொச்சியில் இருந்து வவுனியாவுக்கு ஒருவாறு வந்து சேர்ந்ததாக ஒரு ஓய்வுபெற்ற அரச ஊழியர் தெரிவித்தார். அவரது மகளின் குடும்பம் யுத்தத்தில் அகப்பட்டுக்கொண்டதோடு இப்போது மெனிக் ஃபார்ம் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பார்ப்பதற்கு அவருக்கு ஐந்து நாள் எடுத்துள்ளது.

அவர் யுத்தத்தின் தோற்றத்தைப் பற்றி சிந்தனையுடன் பேசினார். குறிப்பாக, 1964ல் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்து சோசலிசக் கொள்கைகளை காட்டிக்கொடுத்த லங்கா சமசமாஜக் கட்சியைப் பற்றி அவர் குறிப்பிட்டார். 1970களில் நாட்டின் இனவாத அரசியலமைப்பை வரைந்தமைக்கு சமசமாஜக் கட்சி அமைச்சர்கள் நேரடிப் பொறுப்பாளிகளாக இருப்பதோடு யுத்தத்துக்கு வழிவகுத்த ஏனைய தமிழர்-விரோத பாரபட்சங்களுக்கும் அவர்களே பொறுப்பாகும்.

"புலிகளை தோற்கடிப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என அரசாங்கம் நினைக்கின்றது," என அவர் கூறினார். "ஆனால், தற்போதைய அரசியலமைப்பும் அதன் ஆட்சியின் இனவாதப் பண்பும் இருக்கும் வரை, பாரபட்சம் இருந்துகொண்டே இருக்கும்.

"இலங்கை இடதுகள் -லங்கா சமசமாஜக் கட்சி- செய்த மிகப்பெரும் பிழைக்கு நாம் விலை கொடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அது முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டரசாங்கத்தில் நுழைந்துகொண்டது. இப்போது எல்லா இடதுசாரிக் கட்சிகளும் இனவாதத்தை அணைத்துக்கொண்டுள்ளன. நான் 1950களில் நிலவிய தமிழ் மற்றும் சிங்கள ஐக்கியத்தை விரும்புகிறேன்."