World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குWhat's good for GM ஜெனரல் மோட்டார்ஸுக்கு க்கு எது சிறந்தது... By Jerry White அமெரிக்க பொருளாதார, அரசியல் வாழ்வில் ஜெனரல் மோட்டார்ஸ் திவால் ஆனது ஒரு முக்கிய திருப்பு முனை ஆகும். ஒரு காலத்தில் மிகப் பெரிய, மிக அதிக இலாபம் சம்பாதித்த நிறுவனமாக உலகில் விளங்கிய, இந்த மாபெரும் தொழில் நிறுவனம் 20ம் நூற்றாண்டின் பெரும் பகுதி அமெரிக்க முதலாளித்துவத்தை குறித்துக்காட்டுவதாக இருந்தது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் அதன் மகத்தான தோற்றம் 1953ம் ஆண்டு GM இன் தலைமை நிர்வாகி சார்ல்ஸ் வில்சனின் புகழ் பெற்ற கருத்து வெளிவருவதற்குத் தூண்டியது: "நாட்டிற்கு எது நல்லதோ அது ஜெனரல் மோட்டார்ஸுக்கும் நல்லது; அதே போல் ஜெனரல் மோட்டார்ஸுக்கு எது நல்லதோ, அது நாட்டிற்கும் நல்லது." வில்சனின் அறிக்கை எப்படி தமக்கு பயன்பட்டிருந்தாலும் GM அரை மில்லியன் அமெரிக்க தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருந்த காலத்தில் உண்மையெனத் தோன்றியது; அவர்களுடைய வாழ்க்கைத் தரங்கள் உயர்ந்து கொண்டிருந்தன, கார்த் தயாரிப்பு அமெரிக்காவின் பெருநிறுவன இலாபங்கள அனைத்திலும் 60 சதவிகிதத்தைக் கொண்டு பரந்த உள்கட்டுமானத் தொழிலின் மையமாகவும் இருந்தது. GM ன் சரிவு அமெரிக்க முதலாளித்துவத்தின் சரிவு மற்றும் நெருக்கடியின் அடையாளம் ஆகும்; அதேபோல் அமெரிக்கா மற்றும் உலகப் பொருளாதாரத்தில் பங்காற்றவிருந்த நிதிய ஊகத்தின் மேலாதிக்க பாத்திரத்தையும் அடையாளம் காட்டுகிறது. GM-ன் கட்டாயப்படுத்தப்பட்ட திவால்தன்மை அமெரிக்காவை ஆளும் நிதியப் பிரபுத்துவத்தின் நலன்களுக்கு அனைத்து சமூக நலன்களும் கீழ்ப்படுத்தப்பட்டிருப்பதன் நிரூபணம் ஆகும்.GM, Dow Jones Industrial Average பட்டியலில் உள்ள 30 உயர்மட்ட பங்குகளில் இருந்து அகற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டபோதும் கூட, திவால்தன்மைப் பதிவு நியூ யோர்க் பங்குச் சந்தையில் 221 புள்ளிகள் ஏற்றத்தைத் தூண்டியது. இது 1925ல் இருந்து அங்கு ஒரு இடத்தைப் பெற்றிருந்தது. இந்த ஏற்றம் நிதிய உயரடுக்கு பல்லாயிரக்கணக்கான வேலைகளை தகர்த்தது மற்றும் கார்த் தொழிலாளர்களிடம் இருந்து ஊதிய, பிற நலன்கள் இழப்பு பற்றிய ஒரு களிப்பு ஆகும்; இத்தொழிலாளர்கள் நீண்ட காலம் போராடிப் பெற்ற வாழ்க்கைத் தரங்கள், இலாபங்களை அதிகம் பெறுவதற்கு ஏற்கமுடியாத தடை என்று நிதியமேற்தட்டால் கருதப்பட்டன."GM திவால்தன்மை வழியே செல்வது கார்த் தயாரிப்புத் தொழிலில் ஒரு சாதகமான நிகழ்வு ஆகும். அது ஒரு உறுதியான போட்டியாளராக வெளிப்படும்" என்று நியூ யோர்க்கில் இருக்கும் Westwood Capital LLC யின் நிர்வாக இயக்குனர் Len Blum, Bloombeg News இடம் கூறினார். ஜெனரல் மோட்டார்ஸைத் திரும்பவும் தடுத்து நிறுத்தி வைத்திருக்கும் ஒரே விஷயம் தொழிலாளர் ஒப்பந்தங்களும் கடனாளிகள் மற்றும் உரிமைக்குழுமத்தில் வாக்களிக்கும் உரிமை உடையோர்களுடனான உறவுகளும் ஆகும்.பெரும் முதலீட்டாளர்கள் கோரிய "தூய்மைப்படுத்துதல்" பேரழிவு தரக்கூடிய சமூகப் பாதிப்பைக் கொடுக்கும். GM, மிச்சிகன், ஒகையோ, இந்தியானா இன்னும் பல மாநிலங்களில் 14 ஆலைகளை மூடும்; அம்மாநிலங்கள் ஏற்கனவே உயர்ந்த வேலையின்மை, சமூக அவதி ஆகியவற்றின் பாதிப்பில் உள்ளன. 23,000 மணிநேர தொழிலாளர்களும் 8,000 முழு ஊதியம் பெறும் ஊழியர்கள், மற்றும் 2,100 விற்பனை பிரதிநிதிகள் அலுவலங்கள் ஆகியவை மூடப்படும்; மொத்தம் 100,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். திவால் பதிவு செய்யப்பட்டபின் கூறிய கருத்துக்களில் ஒபாமா மீண்டும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு அவருடைய அரசாங்கம்--GM ன் பெரும்பாலான உரிமை பொது நிதியில் இருந்து சுமார் $50 பில்லியனுக்கான பரிவர்த்தனையில் இருப்பதாக அது ஊகிக்கிறது --தனியார் சொத்து உரிமை அல்லது நிதிய உயரடுக்கின் தனிச் சலுகைகளை பாதிக்கும் விதத்தில் ஏதும் செய்யாது என்று உறுதியளித்தார். "நாங்கள் என்ன செய்யவில்லை என்றால்--அதைச் செய்வதிலும் எனக்கு என்ன விருப்பம் இல்லை என்றால்--GM ஐ நடத்துவதாகும்" என்று அவர் கூறினார். இந்த நிறுவனம் "ஒரு தனியார் இயக்குனர்குழு, நிர்வாகக் குழு ஆகியவற்றால் நடத்தப்படும்" என்று அவர் வலியுறுத்தினார்; நிறுவனத்தின் அளவையும் செலவினங்களையும் குறைப்பதில் அவர்கள் வல்லுனர்கள் என்பதைத் தெளிவாக்கினார். "அவர்கள்தான்--அரசாங்கமல்ல--செய்ய வேண்டியதைச் செய்து, இந்த நிறுவனத்தை மேம்படுத்தும் முடிவுகளை எடுப்பர். கூட்டாட்சி அரசாங்கம் பங்குதாரர் என்ற முறையில் அதன் உரிமைகளை செலுத்துவதிலிருந்து கட்டுப்படுத்திக்கொள்ளும்... சுருங்கக் கூறின் எங்கள் நோக்கம் GM மீண்டும் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதாகும்; எனவே நாங்கள் தலையிடா அணுகுமுறையைக் கொள்வோம், பின்னர் விரைவில் வெளியேறுவோம்" என்று அவர் தொடர்ந்து கூறினார். பல ஆண்டுகளாக அமெரிக்க ஆளும் வர்க்கம் சோசலிசத்துடன் தொடர்பு பெற்றுள்ளதற்காக "தேசியமயமாக்கல்" என்ற சொல்லையே பயன்படுத்தாமல் முதலாளித்துவ தடையற்ற சந்தையின் பெருமையைப் பாடி வந்துள்ளது. இப்பொழுது கூட்டாட்சி அரசாங்கம் அடிப்படையில் GM ன் பொறுப்பை எடுத்துக் கொண்டுள்ளது. இது சோசலிசத்துடன் அல்லது உண்மையான தேசியமயத்துடன் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. அரசாங்கம் ஒன்றும் பொதுநலன்களை நிலைநிறுத்தவோ, தொழிலாளர்களின் வேலைகள், கெளரவமான வாழ்க்கைத் தரங்களை உறுதிபடுத்தவோ குறுக்கிடவில்லை. மாறாக, இந்த முதலாளித்துவ அரசாங்கத்தின் குறுக்கீடு அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு சிறந்த இலாபம் கிடைக்கும் நிலைமையை ஏற்படுத்துவது ஆகும். தான் தெருக்களில் வீசும் தொழிலாளர்களுக்காக பரிவுணர்வை ஒபாமா பாசாங்க்குத்தனமாகக் காட்டியுள்ளார். "நீங்கள் உங்கள் பங்கிற்கு கூடுதலான கடின நிலையைக் கண்டுள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். கடின காலங்கள் முடிந்துவிட்டன என்று நான் போலியாக நடிக்கத் தயாராக இல்லை. இன்னும் கடின காலங்கள் வரவிருக்கின்றன. இன்னும் கூடுதலான வேலை இழப்புக்கள் இருக்கும். கூடுதலான ஆலைகள் மூடப்படும். விற்பனை நிலையங்கள் மூடப்படும்; அதேபோல் உதிரிபாகத் தயாரிப்புக்களும் மூடப்படும்." இப்பொழுது வேலைகளை இழந்துள்ள தொழிலாளர்கள் ஒரு பெரிய, நாட்டுப்பற்றுக் காரணத்திற்காக அவ்வாறு இழந்துள்ளனர் என்று அவர் இழிந்த முறையில் கூறினார். "நீங்கள் செய்வது அடுத்த தலைமுறைக்காக ஒரு பெரும் தியாகம் ஆகும் --இத்தியாகத்தை நீங்களே விரும்பவில்லை என்றாலும் செய்ய முற்பட்டுள்ளீர்கள், இதற்குக் காரணம் உங்கள் குழந்தைகளும் நம் அனைவர் குழந்தைகளும் இன்னும் பொருட்களை உற்பத்தி செய்யும், கார்களைத் தயாரிக்கும், சிறந்த வருங்காலத்திற்கு பாடுபடும் அமெரிக்காவில் வளரவேண்டும் என்பதற்காக." இது ஒரு இழிவான பொய் ஆகும். GM இன் திவால்தன்மை தொழில்துறையை அகற்றுவது என்ற வழிவகையை விரைவுபடுத்தும்; இது ஆளும் உயரடுக்கினால் கடந்த மூன்று தசாப்தங்களாக செய்யப்பட்டுவருகிறது; அதற்குக் காரணம் அது பெருகிய முறையில் நிதிய ஊக வழிமுறைகளை கையாண்டு அதன் பரந்த செல்வங்களைக் குவிக்க விரும்புகிறது. ஒபாமா நிர்வாகத்தில் அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் மிக இரக்கமற்ற பிரதிநிதியைக் கண்டறிந்துள்ளது; அதற்கு ஒரு ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி தொழிலாள வர்க்கத்தின் மீது அவருக்கு முன்பிருந்த குடியரசுக் கட்சி ஜனாதிபதியைவிட ஒரு படி மேலே சென்று தாக்குதல் நடத்துகிறார். நிதிய உயரடுக்கின் மோசமான சூதாட்டக் கடன்களை மூடுவதற்கு பொது நிதிகளில் இருந்து டிரில்லியன்களை கொடுத்த நிலையில், இது தொழிலாளர்களிடம் இருந்து "தியாகங்களை" கோருகிறது. GM, கிறைஸ்லர் அமைப்புக்களின் தொழிலாளர்களுடைய வேலை அழிப்புக்கள் மற்றும் வாழ்க்கைத் தர அழிப்புக்கள் இப்பொழுது முன்னோடியாக பயன்படுத்தப்பட்டு தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவு மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தப்படும். ஆரம்பத்தில் இருந்தே, வெள்ளை மாளிகை ஐக்கிய கார்த் தொழிற்சங்கத்தை (UAW) தொழிலாளர்கள் எதிர்ப்பைத் தடுக்க நம்பியிருந்தது. UAW--ஏழு தசாப்தங்களுக்கு முன்பு GM தொழிலாளர்கள் சுரண்டப்படுவதற்கு எதிர்த்து வந்த கடுமையான உள்ளிருப்புப் போராட்டக் காலத்தில் தோன்றியது-- 1930களுக்குப் பின் காணப்படாத நிலைக்கு மீண்டும் கார்த் தொழிலாளர்களை தள்ளுவதில் உடந்தையாக உள்ளது. இப்படி பெருநிறுவன-அரசாங்க கண்காணிப்பாளராக செயல்படுவதற்கு ஈடாக, இந்த அமைப்பின் முதலாளிகள் பல பில்லியன் டாலர்களை பங்குகளாகவும் "புதிய GM" ல் 17.5 சதவிகித பங்குகளையும் பெறுகின்றனர். UAW ஒரு வணிக அமைப்பாக மாறியது--இதன் பொருள்சார் நலன்கள் அது பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் "உறுப்பினர்களின்" நலன்களுக்கு விரோதமானது--பல தசாப்தகால சோசலிச எதிர்ப்பு மற்றும் இலாப முறை ஆதரவு ஆகியவற்றின் விளைவு ஆகும்.GM ஐ அரசாங்கம் எடுத்துக் கொண்டது மற்றும் வோல் ஸ்ட்ரீட் வங்கிகளைப் பிணை எடுத்தது ஆகியவை தடையற்ற சந்தை முறை என அழைக்கப்பட்டதின் தோல்வி என்பதின் உட்குறிப்பான ஒப்புதல் ஆகும்; அதே போல் தனியார் இலபத்திற்காக பொருளாதார வாழ்வு தாழ்த்தப்பட்டுள்ளதையும் காட்டுகிறது.அரசாங்கத்தின் திட்டமான நெருக்கடியை பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டும் புதிய நிலைமைகளை ஏற்படுத்துதல், மற்றும் இச்சுரண்டலை பயன்படுத்தி புதிய பணக்காரர்களை ஏற்படுத்துதல் என்பதை எதிர்த்து சோசலிச சமத்துவக் கட்சி கார்த் தொழில் உண்மையான தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் ஒரு பொதுநல நிறுவனமாக மாற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறது. அமெரிக்க கார்த்தயாரிப்புத் தொழிலின் பரந்த உற்பத்தி சக்திகள் --பல தலைமுறைத் தொழிலாளர்களால் கட்டமைக்கப்பட்டது-- பாதுகாக்கப்பட வேண்டும், உலகப் பொருளாதாரத்துடன் ஜனநாயக்கட்டுப்பாட்டின்கீழ் மற்றும் அனைத்து உற்பத்தியாளர்களின் சர்வதேச ஒத்துழைப்பின்கீழ் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அவ்விதத்தில்தான் உலகெங்கிலும் இருக்கும் கார்த் தொழிலாளர்களின் வேலைகளும் வாழ்க்கைத் தரங்களும் பாதுகாக்கப்பட முடியும். நிதிய சர்வாதிகாரத்தின் முதுகெலும்பை முறிப்பதற்கு வங்கிகள் தேசியமயம் ஆக்கப்பட்டு பொது உடைமையின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்; நிதியப் பிரபுத்துவம் தவறான வழியில் பெற்றுள்ள நலன்கள் பறிமுதல் செய்யப்பட்டு சமூகம் முழுவதிற்குமான தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட வேண்டும் இத்தகைய திட்டம் பெருவணிகத்தின் இரு கட்சிகளுக்கும் ஏற்க முடியாதது, அதே போல் UAW க்கும் ஏற்க முடியாதது. இலாபத்திற்கு என்று இல்லாமல் மனிதத் தேவைகளின் அடிப்படையில் பொருளாதார வாழ்வை மறுஒழுங்கமைத்தலுக்கு, அரசியல் அதிகாரத்திற்கும் ஒரு தொழிலாளர்கள் அரசாங்கத்தை அமைப்பதற்குமான போராட்டத்தில் முழுத் தொழிலாள வர்ககத்தையும் ஐக்கியப்படுத்தும் ஒரு போராட்டம் தேவைப்படுகிறது. |