WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The European election: Trade unions and the necessity
for socialism
ஐரோப்பிய தேர்தல்: தொழிற்சங்கங்களும், சோசலிசத்தின் அவசியமும்
By Ulrich Rippert
26 May 2009
Use this version
to print | Send
feedback
சர்வதேச பொருளாதார நெருக்கடி ஐரோப்பாவில் தொடர்ந்து கடுமையான
விளைவுகளைக் கொண்டுள்ளது. உத்தியோகபூர்வ ஐரோப்பிய வட்டாரங்களின்படி, 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய
உறுப்பினர் நாடுகளில் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை மார்ச்சில் 20 மில்லியனுக்கும் மேலாக உயர்ந்துள்ளது.
கடந்த ஓர் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 4 மில்லியன் உயர்வை குறிக்கிறது. எதிர்வரும் காலத்தில் கூடுதல்
எண்ணிக்கையிலான வேலைநீக்கங்கள் தவிர்க்க முடியாததாகும்.
வேலை மற்றும் சம்பள பாதுகாப்பிற்கு நெருக்கமான சர்வதேச கூட்டுழைப்பு தேவைப்படுகிறது
என்பதை பல தொழிலாளர்கள் அறிவார்கள். கொன்டினென்டல் டயர் நிறுவனத்திலிருந்து 3,000 பிரெஞ்சு
தொழிலாளர்கள் தங்களின் ஜேர்மன் கூட்டாளிகளுடன் போராட்டத்தில் கலந்து கொள்ள சிறப்பு இரயில் மூலம்
சென்ற போது, அவர்கள் ஹனோவர் நகரில் வந்திருங்கிய உடனேயே ஓர் உற்சாகமான வரவேற்பை எதிர்கொண்டார்கள்.
எவ்வாறிருப்பினும், ஒவ்வொரு இடத்திலும் அனைத்து வேலைகளையும், சம்பளங்களையும்
பாதுகாப்பதற்கான ஒரு பலமான சர்வதேச போராட்டத்தை தடுக்க தொழிற்சங்கங்கள் தங்களின் அதிகாரத்திற்குட்பட்ட
அனைத்தையும் செய்கின்றன. மேலும் தொழிற்சங்க தலைவர்கள் நிறுவன நிர்வாகத்துடனும், அவர்கள் இருக்கும் நாடுகளின்
அரசாங்கங்களுடனும் மிக நெருக்கமாக இருந்து பணியாற்றுகின்றன.
அவ்வாறு செய்வதன் மூலம், தொழிலாளர்களை பிரிப்பதிலும், மிரட்டுவதிலும்
சங்கங்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. பொருளாதார நெருக்கடி என்றால் வேலைநீக்கங்களுக்கு மாற்றீடு
கிடையாது என்று சங்க அதிகாரத்துவங்கள் கூறுவதுடன், மேலும் ஓர் ஆலையில் சம்பள வெட்டுக்களை திணிக்கவும்,
மற்றொரு ஆலையில் பணி நிலைமைகளை மோசமாக்கவும் வேலையிழப்பு அச்சுறுத்தலை பயன்படுத்துகின்றன.
வடக்கு பிரான்சிலிருந்து அதே கொன்டினென்டல் டயர் தொழிலாளர்கள், ஜேர்மன்
கொன்டினென்டல் ஆலையில் உள்ள அவர்களின் கூட்டாளிகளுடன் ஒரு கூட்டு நடவடிக்கை எடுக்க முயற்சித்த போது,
தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் தலைவர் போலீஸை அழைத்தார். நீர்பாய்ச்சிகளுடன் வந்த போலீஸ் ஆகன்
நகரில் ஆலைக்கு செல்வதை மறித்ததுடன், போலீஸையும் அங்கு நிறுத்தியது.
குறிப்பாக, தொழிற்சங்கங்களின் தேசியவாத கொள்கை ஓப்பலில் வெளிப்படையாக
தெரிகின்றது. ஓப்பல் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக சர்வதேச ஜெனரல் மோட்டார்சின் தொழிலாளர்களின்
பிரச்சனையுடன் நெருக்கமான இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். ருஸ்ஸெல்ஹெய்ம், போகும், டெட்ராய்ட்
மற்றும் பிற நகரங்களில் உற்பத்தி செய்யப்பட்ட வாகன பாகங்கள், நெருக்கமாக இணைக்கப்பட்ட சர்வதேச
உற்பத்தி நிகழ்முறையின் தயாரிப்புகளேயாகும்.
ஜெனரல் மோட்டார்ஸின் அச்சுறுத்தப்பட்ட திவால்நிலை அதன் அனைத்து ஆலைகளையும்
பாதித்த போதினும், ஓர் ஒருங்கிணைந்த சர்வதேச போராட்டத்தை தடுக்க தொழிற்சங்கங்கள் தங்களால் முடிந்த
அனைத்தையும் செய்து வருகின்றன. IG Metall
மற்றும் ஜேர்மன் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் ஒரு "ஜேர்மன் தீர்வுக்காக" ஜேர்மன் அதிபரிடம்
முறையிட்டுள்ளன. ஜேர்மன் தொழிலாளர்களின் ஒரு பகுதி மீது பரந்த சம்பள வெட்டுக்களை அளித்திருக்கும்
அவர்கள், ஸ்வீடனின் ட்ரோல்ஹாட்டனில் உள்ள Saab
ஆலையை மூடவும், அத்துடன் பிற ஐரோப்பிய ஆலைகளின் உற்பத்தி திறனைக் குறைக்கவும் கோரியுள்ளார்கள்.
ஒரு சுயாதீனமான ஓப்பல் நிறுவனத்தை உருவாக்க நான்கு ஜேர்மன் ஆலைகளில் உள்ள
ஓப்பல் தொழிலாளர்கள் தங்களின் சம்பளங்களையும், "தொழிலாளர்களின் பங்களிப்பின்" மூலம் மேலதிக
விட்டுக்கொடுப்புகளுமாக 1 பில்லியன் யூரோ கொடுக்க தயாராக வேண்டும் என்பது சமீபத்திய தொழிற்சங்க
கோரிக்கையாக உள்ளது. இது ஓப்பல் தொழிலாளர்களின் வருமானத்தின் மீது விழும் கடுமையான விளைவாக மட்டும்
இருக்காது, இது நிறுவன நிர்வாகத்தின் இலாப நலன்களுக்கு தொழிலாளர்களை கட்டிப்போட செய்யும் என்பதுடன்
வாகனத்துறை தொழிலாளர்களின் பிற பிரிவுகளுக்கு எதிராகவும் அவர்களை இதேமாதிரியானவற்றை செய்யவைக்கும்.
பல ஆலைகளில், தொழிற்சங்கங்களின் வலதுசாரி தேசியவாத கொள்கைகளுக்கு
எதிராக எதிர்ப்புகள் வளர்ந்து வருகின்றன.
மே மாத மத்தியில், 9,000 வேலைநீக்க அச்சுறுத்தலுக்கு எதிராக
லுக்சம்பேர்க்கில் உள்ள ஆர்சிலர்-மிட்டலின் தலைமையகத்திற்கு முன்னால் எஃகுத்துறை தொழிலாளர்கள்
போராட்டத்தில் இறங்கிய போது, தொழிற்சங்கங்களுக்கும், நிறுவன நிர்வாகத்திற்கும் மற்றும் அரசாங்கத்திற்கும்
இடையில் ஒத்துழைக்க அவர்கள் ஒருபோதும் தயாராக இல்லை. பல தொழிலாளர்கள் இரும்புத்தடைகளை உடைத்து
கொண்டு, கண்காணிப்பு குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த நிறுவனத்தின் தலைமையகத்திற்குள் நுழைய முயன்றார்கள்.
வேலைக்குறைப்புகள் மற்றும் கூலி வெட்டுக்களுக்கு எதிரான போராட்டம், தொழிற்சங்கங்கள்
மற்றும் தொழிலாளர்கள் கழகங்களுக்கு எதிரான ஒரு போராட்டமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எவ்வாறிருப்பினும், இந்த போராட்டமானது ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும்
போது மட்டுமே வெற்றி பெறக்கூடும்.
தொழிற்சங்கங்களின் வீழ்ச்சியானது, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும்
தொழிற்சாலை தொழிலாளர்கள் குழுக்கள் மத்தியில் இருக்கும் பரந்த ஊழல் அளவுகளின் விளைவுகளால் மட்டும்
ஏற்பட்டதல்ல. இது சுதந்திர சந்தை முறையைக் கைவிட மறுப்பதுடன், மாறாக முதலாளித்துவ நிர்வாகத்தின் மீது
ஆதிக்கம் செலுத்தவும் மற்றும் உதவவும் விரும்ப முனையும் திட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவாகும்.
இதன் முடிவில், தொழிற்சங்கங்கள் நிறுவன செயலதிகாரிகள் குழுவுடனும்,
அரசாங்கத்துடனும் நெருங்கிய உறவுகளை அதிகரித்து கொண்டுள்ளன. ஜேர்மனியில், சமூக கூட்டுறவு மற்றும்
ஒத்துழைப்பின் இது போன்ற வடிவங்கள், நாட்டின் சட்ட முறையில் பரவலாக வேரூன்றியுள்ளன. பெரிய ஆலைகளில்,
கண்காணிப்பு குழுவின் பாதி இடங்களை தொழிற்சங்கங்களே நிரப்பி உள்ளன. தொழிற்சாலை தொழிலாளர்கள் குழு
பிரதிநிதிகள், நிறுவனத்தால் அளிக்கப்படும் அவர்களின் சம்பளங்களுடன், முழு நேரமும் சங்கத்திற்காகவே
உழைக்கிறார்கள். நிறுவனத்தின் தொழிலாளர்களின் இயக்குனர் பொதுவாக ஒரு முன்னாள் முன்னணி தொழிற்சங்க
நிர்வாகியாகவே இருக்கிறார்.
யுத்தத்திற்கு பிந்தைய காலத்தில் பொருளாதார எழுச்சிக்காலத்தின் போது, இந்த
வடிவிலான சமூக கூட்டுழைப்பினால் வாழ்க்கைத்தரத்திலும் மற்றும் சமூக சமநிலையையிலும் சில குறிப்பிட்ட
முன்னேற்றத்தை பாதுகாக்க முடிந்தது. தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் ஒருங்கிணைந்துள்ள
பூகோளமயமான உற்பத்தியின் பரவல், தொழிற்சங்கவாத முன்னோக்கின் பிற்போக்குத்தனமான உள்ளடக்கத்தை
அதிகரித்தளவில் வெளிப்படுத்தி உள்ளது.
நிதிய முறை மற்றும் உற்பத்தியின் சர்வதேச ஒருங்கிணைப்பானது, சமூக
சமரசத்திற்கான அடித்தளத்தை அகற்றி விட்டிருப்பதுடன், தொழிற்சங்கங்களின் ஒரு மாற்றத்திற்கும் இட்டு
சென்றுள்ளது. சந்தைகள் மற்றும் குறைந்த செலவிலான உற்பத்திக்கான சர்வதேச போராட்டத்தில், அவர்கள்
தங்களைத்தாங்களே முற்றிலுமாக "அவர்களின்" தொழில் வழங்குனர்கள் மற்றும் "அவர்களின்" அரசாங்கத்துடன்
அடையாளம் கண்டுகொள்கின்றார்கள். அவர்களின் சொந்த தேசிய அடித்தளங்களை காப்பாற்றுவதே அவர்களின்
முக்கிய நோக்கமாகும். தொழிலாளர்களால் செய்யப்படும் தியாகங்களை தவிர்க்க முடியாததாத பார்க்கும்
அவர்கள், ஒரு நாட்டில் உள்ள தொழிலாளர்களை மற்றொரு நாட்டிலுள்ள தொழிலாளர்களுக்கு எதிராக
நிறுத்திவைக்கிறார்கள்.
ஜேர்மனியில், தொழிற்சங்கங்கள் சமூக ஜனநாயகக் கட்சி (SPD)
மற்றும் இடது கட்சியுடன் மிக நெருக்கமாக பணியாற்றுகின்றன. அவை சமூகநலத்திட்டங்கள் மற்றும் சமூக
கொடுப்பனவுகளை இல்லாதொழிக்க அவற்றிற்கு உதவுகின்றனர். யுத்தத்திற்கு பிந்தைய ஜேர்மன் வரலாற்றில் மிக
கொடுமையான நலங்களுக்கு எதிரான சட்டங்களின் ஆசிரியரான பீட்டர் ஹார்ட்ஜ்,
VW
கார்த்தொழிற்சாலையின் முன்னாள் தொழிற்சாலைக்குழு இயக்குனரும், ஒரு தொழிற்சங்க அதிகாரியும் மற்றும் சமூக
ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் ஆவார். அவர் ஹெகார்ட் ஷ்ரோடர் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி
அரசாங்கத்திற்கு ஓர் உயர்மட்ட ஆலோசகராகவும் இருந்தார்.
தொழிலாளர்கள் நலன்களின் நிலைப்பாட்டில் இருந்து, தொழிற்சங்கங்களை
தொழிலாளர்களின் அமைப்புகளாக குறிப்பிடுவதற்கான சாத்தியக்கூறு சிறிதும் இல்லை. அதிகாரத்துவ கருவிகளான
அவை, தொழிலாள வர்க்கத்தின் எவ்வித சுயாதீனமான போராட்டத்தையும் ஒடுக்கவும், தொழில் வழங்குனர்களின்
நலன்களில் "வர்க்க இணக்கத்தை" உறுதிப்படுத்தவும் அவற்றின் அமைப்புரீதியான இயந்திரத்தை பயன்படுத்துகின்றன.
அவற்றின் அதிகாரிகள் முற்றிலுமாக நிறுவன கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைந்துள்ளனர். அவர்கள் நிர்வாகிகளுக்கு
இணையாக ஊதியங்கள் பெறுகிறார்கள் என்பது மட்டுமில்லாமல், அனைத்து முக்கிய பொருளாதார மற்றும் சமூக
விஷயங்களில் அவர்கள் நிர்வாகிகளின் கண்ணோட்டத்தையே பகிர்ந்து கொள்கிறார்கள்.
தொழிற்சங்கங்களுக்கான நிதிகளும் பெருமளவில் உறுப்பினர்களின் பங்களிப்பிலிருந்து
சுயாதீனமாக உள்ளது. கடந்த காலத்தில், "ஒவ்வொரு மார்க்கிலிருந்து கிடைக்கும் ஒரு பெனிக்கும் நம்மை
பலப்படுத்துகிறது" என்பது தான் தொழிற்சங்கங்களின் இலக்காக இருந்தது. முதலீடுகள் மற்றும் நிறுவனங்களின்
பங்களிப்பு உட்பட தற்போது அவர்களால் பல ஆதாரங்களை சார்ந்திருக்க முடிகிறது. பல விஷயங்களில், அவை
நேரடியாகவே பொருளாதார அமைப்புகள் மற்றும் நிறுவனங்களால் நிதி அளிக்கப்பட்டுள்ளன. ஜேர்மன் ரயில்
சங்கமான டிரான்ஸ் நெட் சமீபத்திய ஒரு சான்றாக இருந்தது. அது ஜேர்மன் ரயில்வே ஆணையத்தின்
செயலதிகாரிகளிடமிருந்து பல மில்லியன்களை பெற்றது.
தொழிற்சக்திகளில் வெறும் 8 சதவீதத்தினர் மட்டுமே தொழிற்சங்கங்களில்
இணைந்துள்ள பிரான்சில், தொழில்வழங்குனர்களின் கூட்டமைப்பான
UIMMவின்
தலைவரான Denis Gautier-Sauvagnac,
(அவர் பின்னர் இவ்வாறு குறிப்பிட்டார்), "அவரின் சமூக கூட்டாளியுடன் உறவுகளைச் சுமூகமாக வைத்திருக்க
தேவையான எண்ணெய்யை" வைத்திருக்க, 2000 மற்றும் 2007க்கு இடையே ரொக்கமாக 5.6 மில்லியன்
யூரோவை தொழிற்சங்கங்களின் கணக்குகளுக்கு பரிமாறி இருந்தார். அமெரிக்காவில் வாகனத்துறை தொழிலாளர்கள்
சங்கமான UAW,
நிறுவனத்தின் பல பில்லியன் ஓய்வூதிய நிதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது, மேலும் அதன் முன்னணி
உத்தியோகர்களுக்காக பெரியளவிலான சம்பளங்களை எடுக்கிறது.
ஒவ்வொரு இடத்திலும் அனைத்து வேலைகள் மற்றும் ஊதியங்களின் முறையான பாதுகாப்பிற்காக,
தொழில் வழங்குனர்கள், அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களின் கூட்டணிக்கு
எதிரான போராட்டம் தொடங்க வேண்டும். நெருக்கடிக்காக தொழிலாளர்களிடமிருந்து சுரண்டப்படுவதற்கான எவ்வித
முயற்சியையும் கடுமையாக எதிர்க்க வேண்டும். முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு தொழிலாளர்கள் பொறுப்பில்லை.
ஊகவணிக பரிமாற்றத்திலும் அவர்கள் பங்கு வகிக்கவில்லை, அதன் மூலம் மில்லியன்களை அவர்கள் தங்களின் பைகளில்
நிரப்பிக் கொள்ளவும் இல்லை.
இதுபோன்றதொரு போராட்டத்தை நடத்த, தற்போதிருக்கும் தொழிற்சங்கங்களிடமிருந்து
முற்றிலுமாக சுயாதீனமாக செயல்படக் கூடிய, தொழிலாளர்கள் குழுக்களின் முந்தைய பாரம்பரியத்தை கையில் எடுக்கும்
தொழிற்சாலை குழுக்களை உருவாக்குவது அவசியமாகும். இதுபோன்ற குழுக்கள் பிற ஆலைகளிலும், பிற நாடுகளிலும்
உள்ள தொழிலாளர்களுடன் தொடர்புகளை உருவாக்க வேண்டும்.
தற்போதைய உறவுகளின் கட்டமைப்பிற்குள் வேலைகளையும், ஊதியங்களையும்
பாதுகாப்பது சாத்தியமில்லை என்று தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிக்கும்பட்சத்தில், தற்போதைய சமூக உறவுகள்
மாற்றப்பட வேண்டும் என்பதையே அது குறிக்கிறது.
முக்கிய நிறுவனங்களும், வங்கிகளும் பொதுவுடைமாக்கப்பட வேண்டும். முடிவுகள்
பெரும்பான்மை தொழிலாளர்களின் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் நலன்களுக்காக எடுக்கப்படும் வகையில்
ஜனநாயக கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் மட்டுமே நவீன உற்பத்தி ஆலைகளைக்
காப்பாற்றுவதும், ஒட்டுமொத்தமாக சமுதாயத்தின் நலனுக்காக உற்பத்தியை நிர்வகிப்பதும் சாத்தியமாகும்.
ஒரு புதிய பரந்துபட்ட மக்கள் அமைப்புகளை உருவாக்க தொழிற்சங்கங்களின் ஊழல்
இயந்திரங்களுக்கு எதிரான ஒரு போராட்டம் நிச்சயமாக தேவைப்படுகிறது. இதற்கு ஒரு சர்வதேச சோசலிச
வேலைத்திட்டமும், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்திற்கு
போராடும் கட்சிகளை உருவாக்குவதும் மற்றும் ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகளின் உருவாக்கமும்
தேவைப்படுகிறது. இந்த வேலைத்திட்டம் தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவினாலும், தற்போதைய
ஐரோப்பிய தேர்தல்களில் நிற்கும் அதன் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியாலும்
முன்வைக்கப்படுகிறது. |