World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Hyundai Motors victimizes workers

இந்தியா: ஹுண்டாய் மோட்டார்ஸ் தொழிலாளர்களை பழிவாங்குகிறது

By M. Kailasam
2 June 2009

Back to screen version

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய கார்த் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட்., தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அதன் ஆலையில் ஒரு தொழிற் சங்கத்தை அமைப்பதற்கான தொழிலாளர்களின் முயற்சியைக் கடுமையாக எதிர்க்கிறது

கடந்த மாதம் 18 நாட்கள் வேலைநிறுத்தத்தை முடிக்க தான் ஒப்புக் கொண்ட பேரத்தை ஹுண்டாய் நிராகரித்து, நிர்வாகத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்கள் தொடர்ந்து சவால் விடுத்தால், ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் அதன் ஆலைகளில் ஒன்றுக்கு உற்பத்தியை மாற்றப் போவதாகவும் அச்சுறுத்தியுள்ளது.

முன்னதாக ஹுண்டாய் 65 தொழிலாளர்களை பணியில் இருந்து அகற்றி, 34 பேரை தற்காலிக வேலைநீக்கம் செய்து, இதில் Hyundai Motors India Employees Union (HMIEU) தொடர்பு கொண்டதற்காக இரண்டு தொழிற்சங்க அலுவலர்கள் உள்பட ஏனைய பிறரும் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டு விட்டனர். 2007 ல் தொடக்கப்பட்ட HMIEU, ஸ்ராலினிச இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அல்லது CPM உடன் பிணைந்துள்ள (CITU) இந்திய தொழிற்சங்க மையத்துடன் இணைந்தது ஆகும்.

தமிழ்நாட்டின் தலைநகரும் பெருநகரமும் ஆன சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலை தற்பொழுது நாள் ஒன்றுக்கு 900 முதல் 1,000 கார்களை தயாரிக்கிறது; இதில் ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் i20 மாதிரியும் அடங்கும்.

ஹுண்டாய் ஆலை கிட்டத்தட்ட 6,000 தொழிலாளர்களை கொண்டுள்ளது; ஆனால் 1,700க்கும் குறைவானவர்கள்தான் "நிரந்தர ஊழியர்கள்" அந்தஸ்த்தை கொண்டுள்ளனர். எஞ்சியிருப்பவர்களில் 2,500 பேர் தற்காலிக தொழிலாளர்கள், 1,000 பேர் பயிற்சித் தொழிலாளர்கள் ஆவர். இதைத்தவிர 350 தொழில்நுட்ப பயிற்சியாளர்களும் சிறிதளவு ஒப்பந்த தொழிலாளர்களும் உள்ளனர்.

தொழிற்சங்க ஆதரவாளர்கள் பழிவாங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், அவர்களுடைய பிரதிநிதிதான் HMIEU என்று நிர்வாகத்தின் அங்கீகாரம் பெறும் வகையிலும் ஹுண்டாய் நிரந்தரத் தொழிலாளர்கள் ஏப்ரல் 20 தொடங்கி வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். நிர்வாகம் இதை வேலைநிறுத்தம் சட்ட விரோதம் என்று அறிவித்த வகையில் எதிர்கொண்டது.

CITU தலைமை இதன்பின் தொழிலாளர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்த்தின் (DMK) தமிழ்நாடு மாநில அரசாங்கத்தை பூசலில் குறுக்கிட்டு ஹுண்டாய் நிர்வாகத்தை தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கச் செய்யுமாறு நிர்பந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துமாறு தொழிலாளர்களை வழிநடத்தியது.

அரசாங்கக் குறுக்கீட்டிற்கான கோரிக்கையை ஊக்கப்படுத்தும் விதமாக மே 4ம் தேதி தொழிற்சங்கம் ஹுண்டாய் தொழிலாளர்களின் ஒரு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு முன்பு ஏற்பாடு செய்தது.

DMK அரசாங்கம் ஏற்கனவே அதன் விரோதப்போக்கை ஹுண்டாய் தொழிலாளர்கள் மீது காட்டிய விதத்தில் போலீஸை 800 வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை கைது செய்யுமாறு இயக்கியது; இது தொழிலாளர்களை மிரட்டி வேலைக்குத் திரும்ப வைப்பதற்கான முயற்சியாகும். ஆனால் அதன் அப்பட்டமான தொழிலாளர் விரோத நிலைப்பாடு மே 13ல் நடைபெறவிருந்த தேசியத் தேர்தல்களில் அதன் வாய்ப்பை சேதப்படுத்தக்கூடும் என்பதால் DMK, தொழிலாளர் ஆணையரை நிர்வாகத்திற்கும் தொழிற்சங்த்திற்கும் இடையே மத்தியஸ்தம் செய்யுமாறு உத்தரவிட்டது.

மே 7ம் தேதி CITU இன் மாநிலச் செயலாளர் A. செளந்தர்ராஜன் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெளிப்பட்டு, ஆங்கே கூடியிருந்த தொழிலாளர்களிடம் "ஒரு பாதிவழி உடன்பாடு" கார்த்தயாரிப்பாளருடன் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். இந்த உடன்பாட்டின்படி ஹுண்டாய் நிர்வாகத்திற்கும் தொழிலாளர் தொகுப்பிற்கும் ஏற்கக்கூடிய வகையில் ஒரு தொழிற்சங்கம் நிறுவப்படும் என்றும் பழிவாங்கப்பட்ட HMIEU தொழிலாளர்கள் பதவியில் இருத்தப்படுவர் என்றும் இது பற்றிய விவாதங்கள் வரவிருக்கும் நாட்களில் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

உண்மையில் நிறுவனம் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டது. CITU ஒப்புக் கொண்டது போல் அதுவும் தொழிலாளர் ஆணையர் வெளியிட்ட "இணக்க ஆலோசனையின்படி" கீழ்ப்படிவதாக வெறுமே கூறியது. இதில் நிறுவனம் முறையாக கோரிக்கைப் பட்டியலில் இருக்கும் தொழிலாளர்களின் ஒவ்வொரு கோரிக்கைக்கும் விடையிறுக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

"இருதிறத்தாருக்கும் இணக்கம்" என்பதை நிர்வாகம் எப்படி விளக்கம் காணும் என்பது பற்றிய கவலைகளை செளந்தர்ராஜன் உதறித்தள்ளிய வகையில், வேலைநிறுத்தத்தின் முடிவு ஒரு சர்வதேச நிறுவனத்தின் ஆலையில் தொழிற்சங்கத்தை நிறுவது இயலாதது என்ற பொது நம்பிக்கை தவறு என்று நிரூபித்துவிட்டதாக கூறினார். "ஹுண்டாய் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் ஒரு தொழிற்சங்கத்தை நாங்கள் நிறுவப்போகிறோம்" என்று அவர் உறுதி மொழி அளித்தார். வேலைநிறுத்தம் செய்தவர்களுக்கு எதிராகப் பதிலடி ஏதும் இருக்காது என்று நிர்வாகம் கொடுதத்ததாக கூறப்பட்ட உறுதிமொழி பற்றியும் செளந்தர்ராஜன் அதிகம் பேசினார்.

"மற்ற பிரிவுகளில் இருக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள், இங்கு கூடியிருப்பவர்களுக்கு பொதுவாக நிர்வாகம் ஒரு சில முக்கிய தொழிலாளர்களை பழிவாங்காமல் தொழிலாளர்களை மீண்டும் பணியில் இருத்ததாது என்பதை நன்கு அறிவர். இங்கு அப்படி ஏதும் நிகழவில்லை." என்றார் செளந்தர்ராஜன்.

இந்த அடிப்படையில் CITU உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் இரண்டையும் முடித்துக் கொண்டது.

ஆனால் நிர்வாகம் மே 7 உடன்பாட்டை அப்படியே மதிக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை ஹுண்டாய் தொழிலாளர்கள் அறிந்து கொள்ள அதிக காலம் தேவைப்படவில்லை. மே 11ம் தேதி தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பிய இரு நாட்களில் ஹுண்டாய் மோட்டார்ஸின் நிர்வாக இயக்குனரான K.S.Kim திமிர்த்தனத்துடன் தொழிலாளர்களிடம் "வெளியாட்கள் எவரும்" (HMIEU வை குறிப்பிடுகிறது) ஹுண்டாய்த் தொழிலாளர்களை பிரதிபலிக்க ஆலைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார். இருக்கும் "தொழிலாளர்கள் குழு" --நிர்வாகத்தால் பொறுக்கி எடுக்கப்பட்டுள்ள ஏழு பேர் அடங்கிய குழு, தொழிற்சங்கத்தை அமைக்கும் முயற்சியை தகர்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டது-- வலுப்படுத்தப்படும் என்று கிம் கூறினார்.

பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களில் ஒரு சிலர்தான் --பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் எவரும் இலர்-- வேலைக்கு மீண்டும் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயினும்கூட CITU தொடர்ந்து தொழிலாளர்கள் தங்கள் ஆற்றலை லேபர் ஆணையர் மற்றும் இந்தியாவின் பெருவணிக காங்கிரஸ் கட்சி தலைமையில இருக்கும் UPA அரசாங்கத்தின் ஐக்கிய முன்னணிக் கூட்டணி அரசாங்கத்தின் பங்காளியான DMK அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஹுண்டாயின் தூண்டிவிடும் தன்மை பல முறை வந்தும்கூட, சென்னை பகுதியிலும் தமிழ்நாட்டிலும் ஹுண்டாய் தொழிலாளர்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் மற்ற பிரிவுகளைத் திரட்டிப் போராடுவது ஒரு புறம் இருக்க, CITU மீண்டும் வேலைநிறுத்தத்தை தொடக்கவில்லை.

CPM இன் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் ஏப்ரல் 30ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் தேர்தல் கூட்டம் ஒன்றில் பேசுவதற்கு செல்லும் வழியில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஹுண்டாய்த் தொழிலாளர்களிடம் உரையாற்றினார். "21ம் நூற்றாண்டில்" நிறுவனங்கள் தொழிற்சங்கம் அமைக்கும் "அடிப்படை ஜனநாயக உரிமையை" தொழிலாளர்களுக்கு மறுப்பது ஒரு வெட்ககரமான நிகழ்வு என்று குறிப்பிட்டார்.

"தமிழ் நாட்டு அரசாங்கத்திற்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும்." என்று காரத் தொடர்ந்தார். "இது ஒரு அகில இந்திய இயக்கமாக வெளிப்படும். தென் கொரியாவிலும் ஹுண்டாய் தொழிலாளர்கள் போராட்டப் பாதையில் உள்ளனர். நாம் உலகளவில் ஒன்றுபட வேண்டும்."

இது ஒரு வெற்றுத்தன பேச்சு ஆகும். ஸ்ராலினிஸ்ட்டுகளிடம் நாடு கடந்த நிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தும் திட்டம் ஒரு புறம் இருக்க, தொழிலாள வர்க்கத்திற்காக "அனைத்து இந்திய" தாக்குதலை வளர்க்கும் திட்டம் எதுவும் கூடக் கிடையாது

CPM என்பது இந்திய அரசியல் நடைமுறையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். CPM தலைமையிலான இடது முன்னணி அரசாங்கம் மேற்கு வங்கத்தில் முதலீட்டாளர்கள் சார்பு சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ளது; அதில் சிறப்பு பொருளாதாரப் பகுதிகளுக்காக விவசாயிகளின் நில அபகரிப்பு மற்றும் தொழில்நுட்பத் தகவல் பிரிவு மற்றும் அது தொடர்புடைய பிரிவுகளில் வேலைநிறுத்தத் தடை ஆகியவை அடங்கும். (See "Stalinist Left Front suffers debacle in its West Bengal bastion")

சமீபத்தில் முடிந்த இந்தியத் தேர்தல்களில் CPM மற்றும் அதன் முக்கிய இடது முன்னணிக் கூட்டுக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வலதுசாரி AIADMK உடன் தேர்தல் உடன்பாட்டைக் கொண்டிருந்தன. இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சியுடன் அடிக்கடி கூட்டு வைத்துக் கொள்ளும் AIADMK வேலைநிறுத்ததை முறியடிப்பவர்கள், வலைபோல் அனைவரையும் கைது செய்யும் உத்தி, மற்றும் ஏராளமான பேரை பணிநீக்கம் செய்யும் விதத்தில் அது தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தியபோது அரசாங்க பணியாளர்கள் செய்த வேலைநிறுத்தத்தை உடைத்தது.

ஸ்ராலினிஸ்ட்டுகளின் AIADMK மற்றும் அதே போன்ற வலதுசாரி "வட்டாரக்கட்சிகளுடன்" 2009 லோக்சபாத் தேர்தல்களில் கொள்கையற்ற முறையில் கொண்ட கூட்டு சங்கடத்தில் முடிந்துவிட்டது. இரு ஸ்ராலினிசக் கட்சிகளும் AIADMK ஒரு "மக்கள் சார்புடைய கட்சி" என்ற தோற்றத்தின் வளர்ச்சி கொடுத்த முயற்சிகள் இருந்தபோதிலும், வாக்காளர்கள் இதற்கு அதிக ஆதரவு கொடுக்கவில்லை; CPM கூட அதன் இரு தமிழ்நாட்டுத் தொகுதிகளில் ஒன்றை இழந்துவிட்டது.

ஸ்ராலினிஸ்ட்டுக்களின் வலதுசாரிக் கொள்கைகள் குழப்பத்தை அதிகரித்துள்ளன, ஏன் மனச் சோர்வைக் கூட அதிகரித்துவிட்டன என்று சில ஹுண்டாய் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு ஹுண்டாய்த் தொழிலாளியான கணேஷ் WSWS இடம், "DMK இத்தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டது. CPM மற்ற கட்சிகளால் பெரும் தோல்வி அடைந்துவிட்டது. இந்நிலைமையில் நிர்வாகம் எதையும் கேட்காது. இங்கு தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் பெறுவது மிகக் கடினம் ஆகும்" என்றார்.

மற்றொரு தொழிலாளி ஹுண்டாயின் தொழிற்சங்கத்தை முறிக்கும், போர்க்குணமிக்க தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்க்கும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்: "நிர்வாகம் எங்களை ஏமாற்றும்போது எல்லாம், தொழிலாளர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். இன்னும் கடுமையாக தொழிற்சங்கத்தை நிறுவப் பாடுபடுவர்" என்று ருக்மாங்கதன் கூறினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved