World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பாVote for the SEP (Germany) in the European elections ஐரோப்பிய தேர்தலில் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள் Statement of the Socialist Equality Party (Partei für
Soziale Gleichheit) ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (PSG) இந்த ஞாயிறு நடைபெற இருக்கும் ஐரோப்பிய தேர்தல்களில் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைக்கும் ஒரேயொரு கட்சியாகும். தற்போதைய பொருளாதார நெருக்கடி தீவிரமாகையில் தவிர்க்க முடியாமல் அபிவிருத்தியடையும் வர்க்கப் போராட்டங்களில் இத்தகைய முன்னோக்கின் அடித்தளத்தில் உலகம் முழுவதும் கட்சிகளை கட்டமைப்பதன் ஒரு பகுதியாக இம்முன்னோக்கை பரப்புவதும் விவாதிப்பதும் முக்கியமான தயாரிப்பாக இருக்கும். 1930 களுக்கு பின்னர் முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடிக்கு இடையே சமூக நிலைமை தீவிர பதட்டமாக இருக்கையில் இத்தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்புகளும் மற்றும் பல ஐரோப்பிய அரசாங்கங்களும் நெருக்கடியின் உண்மையான தன்மையை மறைக்கின்றன. உண்மைகள் தெளிவாக உள்ளன. ஐரோப்பாவில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4% வீழ்ச்சியடைந்துள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் இயந்திரம் என்று பலமுறையும் விளக்கப்படும் ஜேர்மனியின் பொருளாதாரம் 6.9 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஜேர்மனிய பொருளாதாரம் 20 சதவிகிதம் சுருக்கமடையக்கூடும் என்று ஆய்வாளர்கள் இப்பொழுது கணித்துள்ளனர்--இது 1990ல் ஜேர்மன் மறுஇணைப்பின் காலத்தில் இருந்து 20 ஆண்டுகளாக பெற்ற வளர்ச்சியை இல்லாதொழித்துவிடும். வேலைச்சந்தைகளில் இதன் விளைவுகள் ஏற்கனவே பேரழிவு தந்துள்ளன. ஐரோப்பிய சமூகத்தின் புள்ளி விவரங்கள் அலுவலகத்தின் (Eurostat) வெளியீட்டின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளில் வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை மார்ச் மாதம் 20 மில்லியனையும் கடந்தது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 4 மில்லியன் அதிகம் ஆகும். பல மில்லியன் கணக்கான ஐரோப்பிய குடிமக்கள் வேலையின்மையிலும் வறுமையிலும் தள்ளப்பட்டுள்ளனர்; அதே நேரத்தில் ஒரு சிறுபான்மை பங்குதாரர்கள், பங்குச் சந்தை ஊக வணிகர்கள் மற்றும் மேலாளர்கள் பெரும் செல்வத்தை குவித்துள்ளனர். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரங்கள், பெருகிய வேலையின்மை ஆகியவற்றால் சமூக நல அமைப்புமுறைகள் கண்டம் முழுவதும் உடைந்துவிடும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. ஜேர்மனியில் வேலையின்மை கொடுப்பனவு மற்றும் சுகாதார காப்பீட்டு கொடுப்பனவுகளில் இந்த ஆண்டு மட்டும் 50 பில்லியன் யூரோக்கள் பற்றாக்குறை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேர்மனியில் நடைமுறையில் இருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த நெருக்கடியின் அளவினை குறைத்துக் கூறி, கார் விற்பனையில் நுகர்வோருக்கு உதவிகொடுப்பனவு, குறுகிய நேர வேலைநேரம் பரந்த முறையில் அறிமுகப்படுத்தப்படல் என்பதன் மூலம் நெருக்கடியின் மோசமான விளைவுகளை செப்டம்பரில் வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தல் வரை தவிர்க்க முற்பட்டுள்ளன. முதலாளித்துவத்தின் நெருக்கடி பற்றி உண்மையான விவாதம் எந்த சூழ்நிலையிலும் மேற்கொள்ளப்படுவது இல்லை. அதே நேரத்தில், நெருக்கடியின் முழுச் சுமையையும் மக்கள் முதுகில் ஏற்றுவதற்கு அரசாங்கம் தயாரித்து வருகிறது. ஜேர்மனிய நிதியச் சமூகத்திற்கு டிரில்லியன் யூரோக்களுக்கும் மேல் வங்கி மீட்புப் பொதிகள், "மோசமான வங்கித் திட்டம்" ஆகியவற்றை உறுதியளித்த பின்னர், கடன்பெறுவதை தடுப்பது என்பது ஜேர்மனிய அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்படுகிறது; இது மாநில அரசாங்கங்கள் மற்றும் நகரசபைகள் அவற்றின் சமூகநல திட்டங்களில் பாரிய வெட்டுக்களை அறிமுகப்படுத்த வைக்கும். அரசாங்கத்தின் உண்மையான நோக்கங்கள் பற்றி மக்களை ஏமாற்றும் இலக்கை உடைய விதத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரு அரசியல் சதியில் பங்கு பெறுவதை ஒத்துள்ள விதத்தில் தேர்தல் பிரச்சாரம் உள்ளது. இதன் நோக்கம் இலையுதிர்காலத்தில் வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தல் வரை ஒப்புமையில் சமூக அமைதியை நிலைநிறுத்துவது ஆகும். தேர்தலுக்கு பின்னர் அதிகாரத்திற்கு வரும் அரசாங்கம் அதன் அரசியல் கூட்டு எப்படி இருந்தாலும் பாரிய சமூக, அரசியல் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தும். இத்தகைய அரசியல் ஏமாற்றுத்தனம் கார்த் தயாரிப்பாளர் ஓப்பலில் குறிப்பிடத்தக்க வகையில் காணப்படுகிறது. தொழிற்சங்கங்கள் மற்றும் செய்தி ஊடகத்தின் பெரும்பகுதி ஆகியவற்றின் ஆதரவுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் General Motors அமெரிக்காவில் இருந்து GM Europe பிரிவதை ஓப்பலின் "மீட்பு" என்று களித்து மகிழ்கின்றன. உண்மையில் கடந்த வாரம் எடுக்கப்பட்ட கட்டுப்படுத்தும் முடிவு ஐரோப்பிய GM வேலைகளில் 8,500 வேலைகள் தகர்க்கப்படுதல், அதில் ஜேர்மனியில் 2,600 இழப்புக்கள் இருக்கும் என்பதுதான். மற்ற முடிவுகள் அனைத்தும் உறுதியற்ற அறிவிப்புக்களான "புரிந்துகொள்ளல் குறிப்புக்கள்" என்று கூறப்படுபவையாகும். செப்டம்பர் மாதம்தான் சட்டபூர்வமான ஒப்பந்தங்கள் இறுதி வடிவம் பெறும். தொழிற்சங்கங்கள் தங்கள் சக்தியில் இருப்பதை திரட்டி தொழிற்சாலைகளில் தீவிர எதிர்ப்பைத் தடுக்க அனைத்தையும் செய்தாலும், ஆளும் உயரடுக்கு பாரிய வேலையின்மை மற்றும் சமூக பாதுகாப்பு நலன்கள் தகர்த்தல் வன்முறையான சமூக மோதல்களுக்கு வகை செய்யும் என்பதை நன்கு அறியும். இதற்கு இருவகை விடையிறுப்பை இது தயார் செய்து வருகிறது: முதலில் ஜனநாயக உரிமைகள்மீது அரசாங்க கண்காணிப்பை பரவலாக்கி அரசாங்க அமைப்புகளை ஆயுதமயமாக்கல், மற்றும் இரண்டாவதாக இடது கட்சிகள் (Left Party) போன்ற அமைப்புக்களுக்கு ஊக்கம் கொடுத்தல்; அவை இடதுசாரி வார்த்தை ஜாலங்களை கூறிக் கொண்டு நடைமுறையில் மிக வலதுசாரிக் கொள்கைகளை செயல்படுத்தும். இடது கட்சி தலைவர்கள் ஒஸ்கார் லாபொன்டைன் மற்றும் கிரிகோர் ஹீசி ஆகியோர் நெருக்கடிக்கு எதிராக பெருகும் சமூக எதிர்ப்பை கெடுதல் இல்லாத வழிகளில் திசைதிருப்புவதை தங்கள் பணியாக காண்கின்றனர். அவர்களுடைய நோக்கம் முதலாளித்துவத்தை உறுதிபடுத்துதலே அன்றி அகற்றுவது அல்ல. முதலாளித்துவத்திடம் ஒற்றுமையை இக்கட்சி வெளிப்படுத்துவது அதை அசைக்க முடியாத வலதுமாற்றத்திற்கு தள்ளியுள்ளது. இது அரசாங்கத்தின் பில்லியன் யூரோ "மீட்புப் பொதிகள் வங்கிகளுக்கு கொடுப்பதற்கு முழு ஆதரவு கொடுத்ததில் நிரூபணம் ஆகியுள்ளது. ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி இந்த நெருக்கடியை எதிர்கொள்ளுவதற்கு, முற்றிலும் வேறுபாடான மாற்றீட்டை முன்வைத்துள்ளது. சமூகத்தில் ஒரு சோசலிச மாற்றீட்டை இது முன்வைக்கிறது; அதில் சமூகத்தின் ஒரு சிறுபான்மையினரின் இலாப நலன்களை விட மனிதத் தேவைகள் மேலானதாக முன்வைக்கப்படும். நிபந்தனையற்ற அடிப்படை ஊதியம் 1,500 யூரோக்கள் அனைவருக்கும் வேண்டும் என்றும், பெரிய வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் பொதுச்சொத்துக்களாக்கப்பட்டு பொருளாதாரம் மற்றும் பெருவணிக நிறுவனங்கள் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றது. இத்தகைய நோக்கங்களை நிறுவுவதற்கு சமூக ஜனநாயகக் கட்சி, இடது கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுடன் அரசியல் முறிவு என்பது அவசியமானதாகும். தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சி போராடுவதுடன், ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள், சுயாதீன ஆலைக்குழுக்கள் கட்டமைக்கப்படல் ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுக்கிறது. தொழிற்சங்கங்களின் தேசியவாத பிடியில் இருந்து தொழிலாளர்கள் தங்களை விடுவித்துக் கொண்டு சர்வதேச ஐக்கியம், ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட மாற்றீட்டை அபிவிருத்திசெய்ய வேண்டும். முதலாளிகளுடனும் அரசாங்கத்துடனும் வரவிருக்கும் மோதல்களுக்கான தயாரிப்பில் சோசலிச சமத்துவக் கட்சி கட்டமைக்கப்படுவது முக்கியத்துவத்தை பெறுகிறது. நான்காம் அகிலத்தின் ஜேர்மன் பிரிவு என்னும் முறையில் சோசலிச சமத்துவக் கட்சி பல தசாப்தங்களாக ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி போன்ற சக்திகளுக்கு எதிராக சோசலிச கொள்கைகளுக்கான போராட்டத்தை நடத்தி வருகிறது. சோசலிச சமத்துவக் கட்சிக்கான ஒரு வாக்களிப்பு என்பது ஐக்கியம், மனித நேயம் ஆகிய மதிப்புக்களை அடிப்படையாக கொண்ட ஒரு புதிய சமூகத்திற்கான தீவிர அரசியல் போராட்டத்தினதும் ஐரோப்பாவை சோசலிச அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதின் முதல் அடியாக இருக்கும். |