World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Victory speech signals new assault on working people

இலங்கை: வெற்றி உரை உழைக்கும் மக்கள் மீதான புதிய தாக்குதல்களை சமிக்ஞை செய்கிறது

By Wije Dias
20 May 2009

Use this version to print | Send feedback

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இராணுவத்தின் வெற்றியை புகழ்ந்து நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார். "பயங்கரவாத" புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை இராணுவம் "விடுதலை" செய்து கொண்டதாக அவர் செருக்குடன் கூறிய அதே வேளை, அவர் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களுக்கு உயிரிழப்பு, அழிவு மற்றும் துன்பத்தைத் தவிர வேறெதையும் ஏற்படுத்தவில்லை.

பொதுமக்கள் மீது அக்கறை காட்டுவதாகவும் "சரணடைந்த எதிரிகளைக் கூட மதிப்பதாகவும்" இராஜபக்ஷ பேசிய போதிலும், திங்கட் கிழமை எஞ்சியிருந்த சிறு தொகை புலி போராளிகளுக்கு எதிரான இராணுவத்தின் இறுதித் தாக்குதலானது குருதியை உறைய வைக்கும் படுகொலையாக இருந்தது. புலிகளின் உயர் மட்ட தலைமைத்துவம் துப்பாக்கிகளை நிறுத்தத் தயாராக இருப்பதாக அறிவித்த போதிலும், அரசாங்கம் அவர்களை அழித்தொழிக்க உறுதிகொண்டது.

புலிகள் ஞாயிற்றுக் கிழமை சிவிலியன்களை பாதுகாப்பதற்காக மோதல்களை நிறுத்த விரும்புவதாக நோர்வே ஊடாக அனுப்பிய செய்தி சாதாரணமாக ஒதுக்கித் தள்ளப்பட்டது. "அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவானது. நோர்வே தொடர்ந்தும் அனுசரணையாளராக இல்லை. தமது ஆயுதங்களை கீழே வைக்கும் புலிகளின் விருப்பம் மிகவும் தாமதமாகிவிட்டது," என வெளியுறவு அமைச்சின் செயலாளர் பாலித கோஹன ஊடகங்களுக்குத் தெரிவித்தார். திங்கழன்று காலை, புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் உட்பட முன்னூறுக்கும் மேற்பட்டவர்களை இராணுவம் கொன்றது.

நாட்டின் அனைத்து இராணுவத் தளபதிகளும் பாராளுமன்றத்திற்கு சமூகமளித்திருந்ததோடு, இராஜபக்ஷவின் உரையின் பெரும் பகுதி, ஆயுதப் படைகளை பாராட்டவும் அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களை மூடி மறைக்கவும் மற்றும் அவரது யுத்தத்தை "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என நியாயப்படுத்தவுமே ஒதுக்கப்பட்டிருந்தது. இராணுவத்தின் வெற்றியைப் பற்றி பெருமை பாராட்டிக்கொண்ட அவர், அதனது பேராண்மை "பயங்கரவாதத்தை ஒழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் முழு உலகத்துக்கும்" உதாரணமாகும் என பிரகடனம் செய்தார்.

புலிகளை "ஒரு பிரமாண்டமான சர்வதேச இயக்கமாக" ஊதிப் பெரிதாக்கி காட்டிய இராஜபக்ஷ: "புலி பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்ட மூர்க்கத்தனமான இராணுவ மூலோபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய யுத்த யுக்திகள் உலகில் இருக்கவில்லை. நிலக் கண்ணிகள், கிளேமோர் குண்டுகள், சிறிய தற்கொலைப் படகுகள், ராடார்களில் இருந்து தப்பக்கூடிய இலகு ரக விமானங்கள் மற்றும் கொலைகார தற்கொலை அங்கிகளின் ஒட்டுமொத்தத்தையும் எதிர்கொள்ளக்கூடிய இராணுவ விஞ்ஞானத்தை உலகம் கண்டதில்லை," என கூறிக்கொண்டார்.

யதார்த்தத்தில், 26 ஆண்டுகால யுத்தமானது சிங்கள முதலாளித்துவத் தட்டின் அதிகாரத்தையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான யுத்தமே அன்றி, "பயங்கரவாதத்தை" ஒழிப்பதற்கான யுத்தம் அல்ல. புலிகளின் பிரிவினைவாத வேலைத் திட்டம், சிங்கள பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் தமிழ் எதிரிகள் மீதான இரக்கமற்ற அடக்குமுறையும் இனவாதப் பிளவுகளை ஆழமடையச் செய்ததோடு கொழும்பு ஸ்தாபனத்தில் உள்ள அதி பிற்போக்கினரின் கைகளில் பயன்பட்டது. ஆனால் யுத்தத்துக்கான பொறுப்பு, தொழிலாளர்களை பிரிக்கவும் தமது ஆட்சியை தூக்கி நிறுத்தவும் தமிழர் விரோத பேரினவாதத்தை பயன்படுத்தி வந்த ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கங்களையே சாரும்.

நாட்டின் சிறுபான்மையினரை பீதிக்குள்ளாக்கவும் மற்றும் புலி போராளிகளை நசுக்கித் தள்ளவும் எண்ணிக்கை அடிப்படையிலும் இராணுவத் தளபாட அடிப்படையிலும் இராணுவத்தின் அதீத மேலாதிக்கத்தை குருதிய உறைய வைக்கும் விதத்தில் பயன்படுத்தியே ஒரு சாதாராண கொரில்லா படையின் மீது இந்த வெற்றி பெறப்பட்டுள்ளது. சிப்பாய்கள் "நாயகர்களாக" புகழ்ந்த இராஜபக்ஷ, அவர்களது தாய்மார்கள், தந்தைமார்கள் மற்றும் மனைவிமார்களதும் அர்ப்பணிப்பை பாராட்டிய போதிலும், புலிகளின் அரண்களுக்குள் நடந்த மோதல்களில் ஆயிரக்கணக்கில் அர்ப்பணிக்கப்பட்ட, பொருளாதாரத்துக்காக இராணுவத்தில் சேர்ந்தவர்கள் பற்றி அரசாங்கத்துக்கும் இராணுவத் தளபதிகளுக்கும் மனச்சஞ்சலம் கிடையாது.

இராஜபக்ஷவின் உரை பேரினவாத உணர்வைத் தூண்டுவதை மையமாகக் கொண்டிருப்பது தெளிவு. அவர் பெளத்தத்தின் கடந்த 2,500 ஆண்டுகால புராணத்தை சுட்டிக்காட்டியதோடு 182 சிங்கள அரசர்களின் ஆட்சியையும் புகழ்ந்து பேசினார். அவர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் கூட, நாட்டை ஐக்கியப்படுத்திய நவீன கால வெற்றி வீரராக அவரை தேசிய தொலைக் காட்சிகள் வருணித்தன. இந்த வருணிப்பு ஒரு முக்கியமான உண்மையை உள்ளடக்கிக்கொண்டுள்ளது: இராணுவ-அரசியல் குழுவின் ஆதரவைக் கொண்ட இராஜபக்ஷ, மேலும் மேலும் சட்ட மற்றும் பாராளுமன்ற ஆட்சியை அவமதிப்புடன் நடத்தும் ஒரு சர்வாதிகாரியாக இயங்குகின்றார்.

வெகுஜன வெற்றிக்கொண்டாட்டம் என்ற மாயையை உருவாக்கவே ஒவ்வொரு முயற்சியும் எடுக்கப்பட்டது. ஜனாதிபதியின் உரையை பார்ப்பதற்கு மாணவர்களுக்கு வசதி செய்து கொடுக்குமாறு தீவு பூராவும் உள்ள சகல பாடசாலைகளுக்கும் கல்வித் திணைக்களம் அறிவுறுத்தியது. ஒரு படி மேலே சென்ற சில அதிபர்கள், கையில் தேசியக் கொடிகளுடன் பாடசாலை மைதானத்தில் மாணவர்களை அணிவகுக்குமாறு ஊக்கமூட்டினர். தமது வேலைத் தளங்களில் உரையை அவதானிக்க தொழிலாளர்களை அனுமதிக்குமாறு பொது நிர்வாகத் திணைக்களம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. இன்று முழு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், சிங்கள அதி தீவிரவாதிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு மேலாக, உழைக்கும் மக்களின் பெரும்பான்மையானவர்கள் 70,000 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்டு ஒரு முழு பரம்பரைக்கும் கேடு விளைவித்த யுத்தம் பற்றி குதூகலிக்கவில்லை. யுத்தத்தின் முடிவு தமது வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டுவரும் என பலர் சலிப்பைக் குறைந்துக் கொண்டு எதிர்பார்ப்புக்கொண்டுள்ளனர். ஆனால் அரசாங்கத்தின் மீது சிறிதே நம்பிக்கை வைத்துள்ளனர். இராணுவ வெற்றியானது அடக்குமுறைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் உக்கிரமாக்க மட்டுமே வழிவகுக்கும் என்ற நியாயப்பூர்வமான பீதி தமிழர்கள் மத்தியில் உள்ளது.

"விடுவிக்கப்பட்ட" தமிழ் மக்களுக்கு உதவுவதோடு "வடக்கு வசந்தத்தை" உருவாக்கும் இராஜபக்ஷவின் வாக்குறுதிகள் முற்றிலும் மோசடியானதாகும். வடக்கில் வன்னிப் பிராந்தியத்தில் மிகப் பெரும் பகுதியில் ஜனத்தொகை அகற்றப்பட்டுள்ளதோடு அவை பயனற்ற நிலங்களாக மாறியுள்ளன. கிட்டத்தட்ட 300,000 தமிழர்கள் யுத்தக் கைதிகளாக நடத்தப்படுவதோடு அவர்கள் இழிநிலையிலான, கூட்டம் நிறைந்த தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். யுத்தத்தின் ஆரம்பத்தில் இருந்து பிரதானமாக இராணுவத்தின் கண்மூடித்தனமான குண்டு வீச்சின் காரணமாக ஒரு மதிப்பீட்டின்படி 8,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு பெருந்தொகையானவர்கள் காயமடைந்துள்ளனர்.

யுத்தத்துக்கு ஒரு "அரசியல் தீர்வை" வழங்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச அழுத்தம் கொடுத்து வருகின்றது. இந்தத் தீர்வு தமிழ் சிறுபான்மையினருக்கு சில வரையறுக்கப்பட்ட சலுகைகளை வழங்கும். இலங்கை தோல்விகண்டவர்களையும் பராமரிக்கும் "ஒப்பற்ற செயற்பாடுகளைக் கொண்ட ஒரு நாடு" எனக் கூறிய அவர், "எமது சொந்த தமிழ் மக்களின் நலனை பராமரிக்குமாறு கேட்டுக்கொண்ட பலவித நாடுகள் மற்றும் நிறுவனங்களின் பல பிரேரணைகளை" நிராகரித்தார்.

இராணுவத் தீர்வு இறுதித் தீர்வல்ல என ஏற்றுக்கொண்ட இராஜபக்ஷ, "ஒரு அரசியல் தீர்வு என தட்டில் வைத்து கொடுக்கப்படும் ஒரு ஆவணமும் இறுதித் தீர்வாக இருக்காது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியும்" என குறிப்பாக சேர்த்துக்கொண்டார். எந்தவொரு உத்தியோபூர்வ ஆவணத்தையும் நிராகரிப்பதன் மூலம், பெளத்தத்தை அரச மதமாகக் கொண்டுள்ள, அல்லது நிர்வாக முறையினுள் அமைக்கப்பட்டுள்ள பலவித தமிழர்-விரோத முறைகளைக் கொண்டுள்ள நாட்டின் அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் இருக்காது என்பதை ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

இராஜபக்ஷ அரசியல் ஸ்தாபனத்தினதும் அரச இயந்திரத்தினதும், குறிப்பாக இராணுவத்தினதும் சிங்கள அதிதீவிரவாத தட்டுக்களுக்கு முற்றிலும் கடமைப்பட்டுள்ளார். சிறுபான்மையினரின் துன்பங்களை அணுகுவதன் பேரில் அரசியல் சீர்திருத்தத்தை பிரேரிக்கும் ஊகத்துடன் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் மாநாடு ஒன்றை ஜனாதிபதி ஸ்தாபித்தார். அது 144 அமர்வுகளைக் கடந்தும் எந்தவொரு உடன்பாட்டையும் காணவில்லை. இதற்கு பிரதான காரணம், இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதன் பேரினவாத பங்காளிகளான ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணியும் தமிழர்களுக்கு எந்தவொரு ஜனநாயக சலுகையையும் வழங்குவதை கடுமையாக எதிர்த்ததே.

யுத்தத்தின் முடிவு "தேசத்தைக் கட்டியெழுப்பும்" ஒரு புதிய யுகத்தை தொடக்கி வைக்கும் என்ற அவரது பிரகடனம் இராஜபக்ஷவின் உரையில் மிகவும் முன்னறிவிக்கும் பகுதியாகும். "நேரம் இப்போது எங்களுக்கு முன்னால் புதிய சவால்களை முன்வைக்கின்றது," என அவர் கூறினார். "அது தாயகத்தைக் கட்டியெழுப்பும் சவாலாகும். இப்போதிருந்து சகலரும், ஒவ்வொருவரும் அந்த சவால்களையும் எதிர்கொள்ளும் தேவையை மனதில் கொண்டு மாற்றம் பெற வேண்டும். நான் முன்னைய சவால்களை ஏற்றுக்கொண்டதை போன்று, நான் இந்த புதிய சவால்களையும் ஏற்றுக்கொள்கிறேன்."

பூகோள பொருளாதார பின்னடைவின் தாக்கத்தால் மேலும் குவிக்கப்பட்ட, யுத்தத்துக்கான செலவு, இலங்கையில் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கி விட்டுள்ளது என்பதையிட்டு அரசாங்கமும் பெரும் வர்த்தகர்களும் மிகவும் விழிப்புடன் உள்ளனர். "தேசத்தைக் கட்டியெழுப்புவது" என்பதன் சாதாரண அர்த்தம், மோசமான புதிய பொருளாதார சுமைகள் உழைக்கும் மக்கள் மீது திணிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். ஏற்கனவே அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.9 பில்லின் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெரும் முயற்சியின் பாகமாக சம்பள உயர்வையும் அரசாங்கத் துறைக்கு ஆள் சேர்ப்பதையும் நிறுத்தியுள்ளதோடு மானியங்களையும் வெட்டியுள்ளது.

தொழிலாளர்கள் யுத்தத்துக்காக அர்ப்பணிக்க வேண்டும் எனக் கோரிய இராஜபக்ஷ, உழைக்கும் மக்கள் புதிய "தேசத்தைக் கட்டியெழுப்பும்" சவாலை "எதிர்கொள்ள வேண்டும்" என இப்போது வலியுறுத்துகிறார். அதே இராணுவ வழிமுறைகள் இந்த புதிய சவாலுக்கும் பயன்படுத்தப்படும். தேசியக் கொடியின் பின்னால் அணிதிரண்டு, யுத்தத்துக்காக தமது மகன்மாரை அர்ப்பணித்து "தமது வயிற்றுக்காக அல்ல தமது நாட்டுக்காக" என நினைத்தவர்களுக்கே இந்த வெற்றி சொந்தமாகும் என அவர் பிரகடனம் செய்தார்.

எமது "சொற்களில் இருந்து 'சிறுபான்மையினர்' என்ற சொல்லை இப்போது யுத்தம் அகற்றியுள்ளது" என அறிவித்த இராஜபக்ஷ பிரகடனம் செய்ததாவது: "இந்த நாட்டில் இரு சாராரே உள்ளனர். ஒன்று இந்த நாட்டின் மீது பற்று வைத்திருக்கும் மக்கள். மற்றது, தாம் பிறந்த மண் மீது பற்றில்லாத சிறு குழுக்களை சார்ந்தவர்கள். நாட்டின் மீது பற்றில்லாதவர்கள் இப்போது ஒரு சிறிய குழுவாகும்."

இந்த வார்த்தைகளுக்கு ஒரே ஒரு அர்த்தமே உள்ளது. தமது வயிற்றை நிரப்ப சாப்பாடு போதாது என்பது மற்றி முறைப்பாடு செய்யும் எவரும், அல்லது "தேசத்தைக் கட்டியெழுப்புதல்" என்ற பெயரில் மேலும் அர்ப்பணிப்புக்களை செய்யுமாறு விடுக்கப்படும் கோரிக்கையை எதிர்க்கும் எவரும் துரோகிகளாக நடத்தப்படுவர். இராஜபக்ஷ கூறும் "இரு சாரார்" என்பதில் ஒன்று, அவர் பிரதிநிதித்துவம் செய்யும், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பற்றி கவலையே படாத செல்வந்தத் தட்டும், மற்றையது, அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த போராடிக்கொண்டிருக்கும் பரந்த பெரும்பான்மையினாரான வெகுஜனங்களே என்ற உண்மையை அவரது குறிப்புக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

புலிகளுக்கும் மற்றும் தமிழ் சிறுபான்மையினருக்கும் எதிரான தாக்குதலை அது முன்னெடுத்த விதத்தை விட கொடூரம் குறையாமல் அதன் "பொருளாதார யுத்தத்தையும்" இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுக்கும் என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கின்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக, இராஜபக்ஷவை அல்லது அவர் யுத்தத்தை முன்னெடுக்கும் முறையை விமர்சித்தவர்கள் அச்சுறுத்தல்களுக்கும் எதேச்சதிகாரமான கைதுகளுக்கும் உள்ளாக்கப்பட்டதோடு அரசாங்க-சார்பு கொலைப் படைகளால் "காணாமல் ஆக்கப்பட்டனர்". தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் "இடதுசாரி" கட்சிகளின் உடந்தையுடன், இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை "புலி பயங்கரவாதிகளுக்கு" உதவி செய்பவர்கள் என கண்டனம் செய்தனர்.

தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளும் வர்த்தக தட்டுக்களின் நலன்களின் பேரிலான இந்த புதிய "பொருளாதார யுத்தத்தை" நிராகரித்து, தமது சொந்த அத்தியாவசிய உரிமைகள், தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக போராட ஒரு அரசியல் எதிர்த்தாக்குதலை ஒழுங்கு செய்ய வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்ளையடிக்கும் கோரிக்கைகளுக்கு எதிராக இலங்கையிலும் பிராந்தியம் பூராவும் உள்ள உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதற்காக, சோசலிச அனைத்துலகவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே இதை இட்டு நிரப்ப முடியும். இந்த முன்னோக்குக்காக போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும்.