World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan power workers demand higher wages

இலங்கை மின்சார சபை தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோருகின்றனர்

By W. A. Sunil
23 July 2009

Use this version to print | Send feedback

அரசுக்குச் சொந்தமான இலங்கை மின்சார சபையை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஜூலை 17ம் திகதி சம்பள உயர்வும் முன்னைய நிலைமைகளை மீண்டும் ஸ்தாபிக்குமாறும் கோரி நாடு தழுவிய ரீதியில் பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்தனர். மின்சார சபையின் 14,000 பலமான தொழிலாளர் படையில் பெரும்பகுதியினர் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் பங்குபற்றியமை, வாழ்க்கை தரம் மீதான இலங்கை அரசாங்கத்தின் தாக்குதல்கள் சம்பந்தமாக எதிர்ப்பு வளர்ச்சி கண்டுவருவதன் அறிகுறியாகும்.

Photo:
கொழும்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை ஊழியர்கள்

பொலிஸ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மத்திய கொழும்பின் கோட்டை ரயில் நிலையத்திற்கு வெளியில் சுமார் 1,000 மின்சார சபை தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரசபை தலைமை அலுவலகத்துக்கு வெளியில் மறியல் போராட்டம் நடத்துவதை தடுப்பதற்காக கொமான்டோக்கள் உட்பட ஆயுதம் தரித்த பொலிசாரையும் இலங்கை அதிகாரிகள் நிறுத்தியிருந்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) சார்ந்த இலங்கை மின்சார ஊழியர்கள் சங்கத்தின் (இ.மி.ஊ.ச.) தலைமையிலான பல மின்சாரசபை தொழிற்சங்கங்களின் கூட்டணியான ஐக்கிய தொழிற்சங்க முன்னணி (ஐ.தொ.மு.) இந்த தேசிய அளவிலான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இன்னுமொரு மின்சார சபை தொழிற்சங்க கூட்டணியான தொழிற்சங்க கூட்டமைப்பு, சம்பளத்தை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அடிபணிந்து இந்த போராட்டத்தில் பங்குபற்றவில்லை. அரசாங்கத்துக்கு சார்பான இலங்கை சுதந்திர மின்சார ஊழியர் சங்கம் மற்றும் நவசமசமாஜ கட்சி தலைமையிலான பட்டியலிடும் அலுவலர்கள் சங்கம், கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் சங்கம் மற்றும் பொறியியலாளர்கள் சங்கமும் இந்த கூட்டமைப்பில் அடங்குகின்றன.

40 வீத சம்பள உயர்வு மற்றும் மேலதிக வேலை நேரம், முன்னைய ஓய்வு வயது மற்றும் ஊழியர்களின் வருமானத்தில் தங்கியிருப்பவர்களுக்கு மருத்துவ நன்மைகள் போன்றவற்றை மீண்டும் அமுல்படுத்துமாறும் மின்சார ஊழியர்கள் கோருகின்றனர். கடைசியாக 2006ம் ஆண்டே மின்சார சபை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டதோடு, அடுத்த உத்தியோகபூர்வ அதிகரிப்பு 2009 ஜனவரியில் அமுல்படுத்த வேண்டியிருந்த போதிலும், இன்னமும் அது நடைமுறைக்கு வரவில்லை. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 30 வீத பணவீக்கத்தால் இலங்கை பாதிக்கப்பட்டது. இது ஆசியாவிலேயே உயர்ந்த மட்டமாகும்.

செலவுகளை வெட்டும் முயற்சியில், மின்சார சபை நிர்வாகம் மேலதிக வேலை நேரத்தை குறைத்ததோடு ஓய்வு பெறும் வயதை 60 முதல் 57வரை மூன்று ஆண்டுகள் குறைத்தது. ஊழியர்களுக்கான மருத்துவ சிகிச்சை நட்டஈடு ரூபா 800,000 முதல் 900,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்ட போதிலும், மின்சார சபை ஊழியர்களில் தங்கியிருப்பவர்களுக்கான மருத்துவ உதவியை இரத்துச் செய்தது.

மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைகள் தீர்க்கமான அரசியல் பிரச்சினைகளை எழுப்பும் அதே வேளை, ஐக்கிய தொழிற் சங்க முன்னணி, பிரச்சாரத்தை மந்தமான சுகயீன விடுமுறை மட்டத்துக்கு வரையறுத்ததுடன் தமது கோரிக்கைகளை பெறுவதற்கு அரசாங்கத்தை நெருக்க முடியும் என்ற மாயையையும் காட்டியது.

கடந்த மூன்று ஆண்டுகளாக, சகல தொழிலாளர்களதும் கோரிக்கையை நசுக்க, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை பயன்படுத்திய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், யுத்த முயற்சிகளுக்கு அர்ப்பணிக்குமாறு வலியுறுத்தியது.

மே மாதம் அதன் இராணுவ வெற்றியின் பின்னர், அரசாங்கம் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது தொடர்ந்தும் சுமத்தியதோடு சகல எதிர்ப்புக்களையும் நசுக்கியது. மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிலைமைகள் மீதான தாக்குதல்கள், சகல அரசாங்கத் துறை ஊழியர்கள் மீதான பரந்த தாக்குதலின் பாகமாகும்.

மார்ச் முற்பகுதியில், சகல அரசாங்கத் துறை ஊழியர்களுக்கும் 2009ம் ஆண்டுக்கான சம்பள உயர்வை இராஜபக்ஷ நிறுத்தினார். இதற்கு உயர்ந்த பாதுகாப்புச் செலவையும் இலங்கை பொருளாதாரத்தில் பூகோள நிதி நெருக்கடியின் பாதிப்பையும் மேற்கோள் காட்டினார். இரண்டு மாதங்களின் பின்னர், பொருளாதார நெருக்கடியில் இருந்து தலையெடுப்பதன் பேரில் அரசாங்கம் "பொருளாதார யுத்தம்" ஒன்றை முன்னெடுக்கவுள்ளது என அவர் பிரகடனம் செய்ததோடு "தேசத்தை கட்டியெழுப்ப" அர்ப்பணிக்குமாறும் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மத்திய மலையகப் பிரதேசமான மொனராகலையில் கடந்த வாரம் நடந்த ஊவா மாகாண சபைக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இத்தகைய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இலங்கை சிப்பாய்கள் "தாய்நாட்டை பாதுகாத்ததைப் போல்" உழைக்கும் மக்களும் உழைக்க வேண்டும் என இராஜபக்ஷ அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார். படையினர் "பகல் உணவு இடைவேளையை கோரவில்லை" மற்றும் "தூங்காமல்" செயற்பட தயாராக இருந்தனர் என இராஜபக்ஷ பிரகடனம் செய்தார்.

எனவே மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைகள் அவர்களை அரசாங்கத்துடன் நேரடி மோதலுக்கு கொண்டு வருகின்றது. மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்காது என கடந்த வெள்ளிக்கிழமை பிரச்சாரத்துக்கு சற்று முன்னதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.எம்.சி. பெர்ணான்டோ தெளிவுபடுத்தினார். ஜனாதிபதி இராஜபக்ஷவின் "அங்கீகாரம் இன்றி" தனது ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக மின்சார சபை நிர்வாகம் எந்தவொரு முடிவும் எடுக்க முடியாது என்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.

மின்சார சபை தனியார்மயமாக்கம்

இனவாத யுத்தத்தின் உச்சக் கட்டத்தில், மார்ச் 3ம் திகதி, இராஜபக்ஷ அரசாங்கம் மின்சார சபை மசோதாவை நிறைவேற்றியது. இந்த சட்டம் அரசுக்குச் சொந்தமான மின்சார உற்பத்தி துறையை தனியார் துறை பொறுப்பேற்க வழிதிறந்து விடுகிறது. தனியார்மயமாக்கம் மற்றும் அரசாங்கத் துறை சம்பள அதிகரிப்பு நிறுத்தம் தொடர்பாக இரு தொழிற்சங்கங்களதும் பிரதிபலிப்புகள், போராட்டத்தை காற்றில் பறக்கச் செய்வதை இலக்காகக் கொண்டு தொழிலாளர்களை பிளவுபடுத்துவதும் மற்றும் போராட்டத்தை பாதிப்பு ஏற்படாதளவுக்கு மட்டுப்படுத்துவதுமாக இருந்தன.

விதிகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என அரசாங்கம் பொய்யாகக் கூறியதை அடுத்து, திட்டமிட்ட போராட்டங்களுக்கு முடிவு கட்டுவதன் மூலம், இரு மின்சார சபை தொழிற்சங்க முன்னணிகளும் மின்சார சபை மசோதாவுக்கு எதிரான போராட்டத்தை தடுத்தன.

மார்ச் மாதம் இந்த மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, ஜே.வி.பி. தலைமையிலான தொழிற்சங்க முன்னணி, ஒரு நாள் போராட்டத்தை நடத்தி மேலதிக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. தொழிலாளர்களின் கோரிக்கைகளை விட யுத்தத்துக்கே முன்னுரிமை என அறிவித்த சிங்கள பேரினவாத ஜே.வி.பி., யுத்தத்தை முழுமையாக ஆதரித்தது. ஜே.வி.பி. தொழிற்சங்கத் தலைவர்களான ரஞ்சன் ஜெயலால் மற்றும் கே.டி. லால்காந்தவும் மசோதாவை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்ட போதிலும், அதற்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் அவர்கள் எதிர்த்தனர்.

கடந்த வாரம் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் நடந்த மறியலின் போது, ஜே.வி.பி. தொழிற்சங்க தலைவர் ரஞ்சன் ஜெயலால், அரசாங்கம் தொழிலாளர்களின் சம்பள மற்றும் தொழில் நிலைமை கோரிக்கைகளை வழங்கத் தவறினால், "நாங்கள் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம்" என தொழிற்சங்க உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார். ஆனால், இந்த வாரம் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை கூட்டிய தொழிற்சங்க முன்னணி, "கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை" என சொல்லப்பட்டது ஆகஸ்ட் 28 நடக்கவுள்ள இதே போன்ற இன்னுமொரு மறியல் போராட்டம்தான் என அறிவித்தது.

இராஜபக்ஷ அரசாங்கத்தையும், அதன் யுத்தத்தையும் மற்றும் அதன் வரவு செலவுத் திட்டத்தையும் ஜே.வி.பி. ஆதரிப்பதை சாதாரணமாக மூடி மறைக்க திட்டமிடப்பட்டதே இந்த தோரணையாகும். கடந்த வாரம் "தேசத்தை கட்டியெழுப்புவதற்கான" தனது சொந்த திட்டத்தை ஜே.வி.பி. இராஜபக்ஷவிடம் கையளித்தது. அது ஏற்றுக்கொள்ளப்படுமானால் ஜே.வி.பி. அரசாங்கத்துக்குள் நுழைந்துகொள்ளும் என்பதையும் அது சுட்டிக் காட்டியது.

மற்றைய மின்சார சபை தொழிற்சங்க கூட்டணியான, தொழிற்சங்க கூட்டமைப்பும் இதற்குச் சமாந்தரமாக அழிவு உண்டாக்கக் கூடியதாகும். அதன் தலைவர் ஆனந்த நிமலரட்னவை WSWS தொடர்பு கொண்ட போது, "சம்பள உயர்வு கோரிக்கை நியாயமானது, ஆனால் நிதி பிரச்சினை காரணமாக சம்பள உயர்வு வழங்க முடியாதுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்துக்கு நெருக்குவாரம் கொடுக்காமல் இருக்க நாம் முடிவு செய்துள்ளோம்," என தெரிவித்தார்.

நிமலரட்னவுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டுள்ள நவசமசமாஜக் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் பிரியந்த விக்ரமசிங்கவையும் WSWS தொடர்பு கொண்டது. சம்பள உயர்வு நிறுத்தத்தை தனது தொழிற்சங்கம் ஆதரிப்பதை மூடி மறைக்கும் முயற்சியில் விக்ரமசிங்க தெரிவித்ததாவது: "அவர்கள் எங்களுக்கு அழைப்பு விடுக்காததால் நாங்கள் அண்மையில் நடந்த போராட்டத்தில் பங்குபற்றவில்லை. நாங்கள் ஏப்பிரல் மாதம் அழைப்பு விடுத்த வேலை நிறுத்தத்தில் அவர்கள் எங்களுடன் இணைந்துகொள்ளவில்லை. நாங்கள் பிரச்சாரம் ஒன்றை ஒழுங்கு செய்வது பற்றி கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் எப்போது நடத்துவது என்று இன்னமும் முடிவு செய்யவில்லை."

கடந்த மார்ச் மாதம் விக்ரமசிங்கவும் நவசமசமாஜக் கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவும் அரசாங்கத்தின் மின்சார சபை மசோதாவை ஆதரித்தனர். முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முன்வைத்த மசோதாவுடன் ஒப்பிடும் போது இது "முன்னேற்றமானது" என அவர்கள் கூறிக்கொண்டனர். எவ்வாறெனினும், இரு மசோதாக்களுக்கும் இடையில் சிறிய வேறுபாடே உண்டு. இராஜபக்ஷ அரசாங்கம் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை அக்டோபரில் 200 தனியார் கம்பனிகளுக்கு விற்கத் திட்டமிட்டுள்ளது.

இப்போது தாக்குதலுக்கு உள்ளாகி வரும் அரசாங்க மற்றும் தனியார் துறையை சேர்ந்த இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஏனைய சகல பகுதியினருடனும் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுப்பதற்கான போராட்டத்தில் மட்டுமே மின்சார சபை தொழிலாளர்களால் முன் நகர முடியும். இது தற்போதைய தொழிற்சங்க வரம்பில் இருந்து அரசியல் ரீதியில் வெளியேறுவதையும் சோசலிச முன்நோக்கு ஒன்றுக்காக சுயாதீனமான அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதையும் அவசியமாக்கியுள்ளது.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் "பொருளாதார யுத்தமும்" மற்றும் பூகோள நிதி நெருக்கடியும், இலங்கையில் இலட்சக்கணக்கான தனியார் துறை தொழில்கள் அழிக்கப்படுவதை விளைவாக்கியுள்ளது. இப்போது பேச்சுவார்த்தையில் இருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுக்கான நிபந்தனைகள், அரசாங்க துறையில் பிரமாண்டமான மறுசீரமைப்பு மற்றும் அரசாங்க வருமானத்தை அதிகரிக்க வாழ்க்கைத் தரத்தின் மீது ஆழமடைந்து வரும் தாக்குதலை இன்றியமையாததாக்கும்.

தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றுக்காக போராடுவதன் மூலம் மட்டுமே இத்தகைய தாக்குதல்களை உழைக்கும் மக்கள் எதிர்கொள்ள முடியும். சோசலிச சமத்துவக் கட்சியின் முன்நோக்கு இதுவே.