World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

The German offensive in Afghanistan

ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய தாக்குதல்

Ulrich Rippert
27 July 2009

Back to screen version

கடந்த சில நாட்களில் ஜேர்மனிய இராணுவம் ஆப்கானிஸ்தானில் அதன் தலையீட்டை வியத்தகு அளவில் தீவிரப்படுத்தியுள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தானத்தில் நடைபெற்ற முக்கிய தாக்குதல் ஒன்றின்போது, இது Marder ஆயுதமேந்திய நபர்கள் வண்டிகள் மற்றும் Morser மோட்டர் பீரங்கிகள் ஆகியவை அடங்கிய மிக கனமான ஆயுதங்களை பயன்படுத்தியது.

ஹிட்லர் துருப்புக்கள் ஐரோப்பாவின் பெரும் பகுதிகளை உருக்குலைத்ததற்கு பின்னர் முதல் தடைவையாக ஜேர்மனிய இராணுவம் மீண்டும் "கிளர்ச்சி செய்யும் பிரிவுகளுக்கு" எதிராக முக்கிய இராணுவ நடவடிக்கைகளை நடத்திக் கொண்டு வருகிறது. செய்தி ஊடகத் தகவல்கள்படி, 21 cm Morser 18 என்பது ஹிட்லரின் இராணுவம் (Wehrmacht) இரண்டாம் உலகப் போரில் அனைத்து போர் முன்னணிகளிலும் பயன்படுத்திய முக்கிய ஆயுதங்களில் ஒன்றாகும். இப்பொழுது அதே ஆயுதம் அதன் தற்கால வடிவமைப்பில் மீண்டும் எதிரிகளை அழிப்பதற்கு மழையெனப் பொழியப்படுகிறது.

இவ்விதத்தில் சமீபத்திய இராணுவநடவடிக்கை ஜேர்மனிய பாராளுமன்றம் எடுத்த முடிவினால் வந்தது அல்ல. மாறாக, இராணுவத்தின் உயர்கட்டுப்பாட்டு தலைமையாலேயே எடுக்கப்பட்டது ஆகும். முன்னோடியில்லாத திமிர்த்தனம் மற்றும் தன்னை உறுதிப்படுத்துக் கொள்ளும் தன்மை இவற்றைக் கொண்டு பிரிகேடியர் ஜெனரல் வொல்ப்காங் ஷ்னைடெர்கான் இராணுவ நடவடிக்கையை, "இத்தகைய விரிவாக்கத்தை மேற்கொள்ளும் நேரம் வந்துவிட்டது" என்றார்.

இந்த ஆயுதங்கள் போர்ப்பகுதிக்கு முன்னரே அனுப்பபட்டிருந்தது. களத்தில் இருந்த இராணுவத் தலைமை இந்த ஆயுதம் பயன்படுத்தப்பட வேண்டுமா, எப்பொழுது என்று தீர்மானிக்கும் பொறுப்பை கொண்டிருந்தது. அந்த முடிவை அவர்கள் எடுத்தனர் என்று ஷ்னைடெர்கான் கூறினார்.

ஜேர்மனியின் பாதுகாப்பு மந்திரி பிரன்ஸ் ஜோஸப் யங் (CDU) சமீபத்திய ஆயுதப்பயன்பாட்டின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் முற்பட்டுள்ளார். தலிபனுக்கு எதிராக போராடும் ஆப்கானிய பாதுகாப்புப் படைகள் நடத்திய ஒரு செயல்தான் அது என்றும், இதில் 800 ஆப்கானிய படையினர் மற்றும் 100 ஆப்கானிய போலீசாரும் "300 ஜேர்மன் படையினரும் தாக்குதலுக்கு உதவும் வகையில் இருந்த தன்மையைக் கொண்டிருந்தது" என்றார்.

எனவேதான் ஜேர்மனிய இராணுவத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தற்போதைய அதிகாரத்திற்கான விரிவாக்கம் தேவைப்படவில்லை என்றும் பாராளுமன்றத்தில் எந்த விவாதத்திற்கும் தேவையில்லை என்றும் கூறினார். தற்போதைய ஆயுதப் பயன்பாடு 'ஜேர்மனிய பாராளுமன்றம் முன்னதாக பணித்திருக்கும் உத்தரவிற்கு முற்றிலும் இயைந்துள்ளது' என்று அவர் கூறினார்.

இன்னும் 1,000 படையினரை குண்டுஸுக்கு அனுப்பி, ஜேர்மனிய படைகளின் எண்ணிக்கையை 4,500 ஆக உயர்த்துவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று யங் சேர்த்துக் கொண்டார். பாதுகாப்பு நிலைமை கடந்த சில வாரங்களில் மிக மோசமாகிவிட்டது என்றும், ஆனால் புதிய பாராளுமன்ற ஆணைக்கு இப்பொழுது தேவை இல்லை என்றும் யங் வலியுறுத்தினார்.

தற்கால ஜேர்மனிய இராணுவம் (அதன் முன்னோடி Wehrmacht போல் இல்லாமல்) பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற கடமைப்பட்டிருக்கிறது என்னும் கூற்றின் பயனற்ற தன்மையை யங்கின் கருத்துக்கள் தெளிவாக்குகின்றன. ஜேர்மனிய இராணுவக் கொள்கை ஜேர்மனிய இராணுவ உயர்மட்டத்தால் என்று இல்லாமல் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளால் முடிவு எடுக்கப்படும், அதுதான் ஜேர்மனிய வரலாற்றின் முக்கிய படிப்பினைகளில் ஒன்று என்று பலமுறை அரசியல்வாதிகள் கூறிவந்துள்ளது ஏமாற்றுத்தனத்தில் ஒரு வகை என்றுதான் நிரூபணம் ஆகியுள்ளது.

ஜேர்மன் இராணுவம் 70 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய குற்றங்களை அடுத்து, இராணுவ தலைமை பல தசாப்தங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு உட்கார வேண்டியதாயிற்று. ஆனால் அந்தக்கால கட்டம் இப்பொழுது முடிந்து விட்டது. இராணுவத் தலைமை மீண்டும் அதன் மரபார்ந்த திமிர்த்தனத்துடன் எழுச்சி பெற்று வருகிறது.

ஜேர்மன் இராணுவம் வருங்காலத்தில் எப்படி பயன்படுத்தப்படும் என்ற முக்கிய முடிவுகளை உயர்கட்டுப்பாடு எடுக்கும் என்பதை தளபதி ஷ்னைடெர்கான் முற்றிலும் தெளிவாக்கியுள்ளார். மேலும் ஜேர்மனிய பாராளுமன்றம் இராணுவ நடவடிக்கைகளுக்கு எப்பொழுதும் தடையற்ற தன்மையை கொடுப்பதையும் தீர்மானிக்கும் என்றார். மந்திரி யங் இராணுவத் தலைமைக்கும் அரசாங்கத்திற்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு இருக்கும் என்று வலியுறுத்தியதுடன், அதே நேரத்தில் ஜேர்மனியின் இராணுவத்திற்கு ஜேர்மனிய மக்களிடையே போதுமான ஆதரவு இல்லை என்றும் எச்சரித்தார். மறைமுகமாக இராணுவம் நடத்தும் தலையீடுகளை நியாயப்படுத்த பாராளுமன்றம் தன் முயற்சிகளைத் தீவிரமாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆப்கானிஸ்தான் போருக்கு எதிராக சில நேரங்களில் பேசியுள்ள இடது கட்சியின் நிலைப்பாடு பற்றிய ஒரு பார்வையுடன், பாதுகாப்பு மந்திரி ஜேர்மனிய இராணுவம் ஆப்கானிஸ்தானில் குறுக்கீடு செய்துள்ளதை "தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு ஆயுதமாக" பயன்படுத்துவது முற்றிலும் பொறுப்பற்றதனம்" என்றார். தீவிரவாத இஸ்லாமிய தலிபான் வேண்டுமென்றே ஜேர்மனிய இராணுவத்தை தாக்குவதற்கு இலக்கு கொண்டுள்ளது என்றும், இப்போர் ஜேர்மனிக்குள் மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை என்பதை அது அறிந்துள்ளது என்பதுதான் அதற்ககாரணம் என்றார்.

போருக்கு எதிர்ப்பாளர்கள் தலிபானுக்கு உடந்தையென்ற உட்குறிப்பை யங் கொடுக்க முற்பட்டு, ஜேர்மன் படையினரின் இழப்பில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்றார்.

மக்களின் பெரும்பாலானவர்கள் போரை எதிர்ப்பவர்கள் என்பதை அரசாங்கம் நன்கு அறியும். ஆயினும்கூட அரசாங்கம் கனமான ஆயுதங்களைப் பயன்படுத்தவும், ஜேர்மனிய விமானப் படையின் நடவடிக்கைகளை விரிவாக்கவும் திட்டமிட்டுள்ளது. ஆப்கானிய இழப்புக்களில் அதிகமாவதையும், ஜேர்மனிய படையினர் கூடுதலாக இறத்தல் மற்றும் ஜேர்மனிக்குள்ளேயே தீவிரவாத பதிலடியின் பெருகிய அபாயம் தவிர்க்க முடியாமல் விளையும் என்பதையும் அது ஏற்றுள்ளது. ஒரு இராணுவ ஆட்சிக்குழுவைப் போல் செயல்பட்டு, இது பயன்படுத்தும் வாதங்கள் போரை எதிர்க்கும் வெகுஜனங்கள்தான் ஏராளமான பலியானவர்களுக்கு காரணம் என்று கருத்து தெரிவிக்கிறது.

போருக்கு கடுமையான ஆதரவைத் தெரிவிப்பவர்கள் சமூக ஜனநாயகக் கட்சியில் (SPD) உள்ளனர். முதலாம் உலகப் போரின் இறுதியில் Freikorps என்னும் கூலிப்படைகளை நிர்மாணித்து, புரட்சிகரத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானவர்களை சுட்டுத் தள்ளுவதற்கு பொறுப்பாக இருந்த சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் குஸ்டாவ் நொஸ்க இன் மரபில் இன்றைய சமூக ஜனநாயக கட்சியினரும் போர் எதிர்ப்பாளர்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.

"ஜேர்மானியர்கள் இப்போருக்கு ஆதரவு தருவதற்கு விரும்பவில்லை என்பது பற்றி நான் கோபத்துடன் உள்ளேன்" என்று முன்னாள் சமூக ஜனநாயக கட்சியின் பாதுகாப்பு மந்திரி பீட்டர் ஸ்ருக் Die Zeit உடைய சமீபத்திய பதிப்பில் கருத்துத் தெரிவித்துள்ளார். "இப்பொழுது செயல்படவேண்டியது மேர்க்கெல் அம்மையார்தான். ஜேர்மனிய அதிபர் என்னும் முறையில் அவர் இந்த உணர்வு கடக்கப்பட முயல வேண்டும்."

அரசாங்கம் இன்னும் சர்வாதிகார முறையில் மக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்னும் கோரிக்கை அடக்குமுறை, சர்வாதிகார கட்டமைப்புக்கள் தேவை என்ற முறையீட்டிற்கு ஒப்பாகும். இது போர் பிரச்சினையுடன் முடியவில்லை. பொருளாதார நெருக்கடியின் வியத்தகு விளைவுகளான பெருகும் வேலையின்மை மற்றும் பெருகும் வறுமை போன்றைக் கருத்தில்கொண்டு -ஆளும் வட்டங்களில் சமூக அமைதி பற்றி பெருகிய அச்சம் உள்ளது. இதை எதிர்கொள்ளும் விதத்தில் ஸ்ருக்கும் மற்ற அரசியல்வாதிகளும் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பதற்கு தேவை என்று அழைப்பு விடுக்கின்றனர்.

ஜேர்மனியில் போருக்கு எதிராக பெருகிய எதிர்ப்பு உள்ளது. சமீபத்திய கருத்துக் கணிப்புக்களில் ஒன்று மக்கள் எதிர்ப்பு 85 சதவிகிதம் உள்ளது என்று தெரிவிக்கிறது. போர் பிரச்சினை மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு இடையே இருக்கும் நெருக்கமான தொடர்பு எந்த நடைமுறைக் கட்சியும், தொழிற்சங்கமும் போருக்கு எதிராக எதிர்ப்புக்களை காட்ட தயாராக இல்லை என்ற பொருளைத் தருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஈராக் போருக்கு எதிராக நடத்தப்பட்ட எதிர்ப்பு அணிவகுப்புக்கள் மெளனப்படுத்தப்பட்டன. இடது கட்சியோ தான் அரசாங்க அதிகாரத்தில் பங்கு பெறும் பேர்லினில் அது தொடரும் சமூக நலன்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து பரந்த மக்கள் இயக்கம் திரும்பலாம் என்ற பயத்தில் எதிர்ப்புக்கள் எதற்கும் அழைப்பு விடாமல் இருக்கிறது.

இடது கட்சி ஆப்கானிஸ்தானத்தில் இருந்து ஜேர்மனிய துருப்புக்கள் திரும்பப் பெற வேண்டும் என்று பல முறை கூறியிருந்தாலும், அதன் முக்கிய நிலைநோக்கு சமூக ஜனநாயக கட்சியுடன் அரசியல் ஒத்துழைப்பு என்றுதான் உள்ளது. சமூக ஜனநாயக கட்சியோ போருக்கு ஆதரவு தரும் முக்கியமான அமைப்புக்களில் ஒன்றாகும்.

போரின் உண்மை நோக்கங்களை மறைக்கும் விதத்தில், யங் ஜேர்மனியத் துருப்புக்களை ஆயுதமேந்திய விதத்தில் ஈடுபடுத்துவது ஒரு போரில் தலையீடு செய்வதாக கருதப்படக்கூடாது என்று தொடர்ந்து கூறுகிறார். ஆனால் தற்போதைய தாக்குதல் "ஆக்கிரோஷமான மனிதாபிமான செயல்" தான் படை செயல்படுவதற்கு காரணம் என்னும் அரசாங்கப் பிரச்சாரத்தை கேலிக்கூத்தாக ஆக்குகிறது. மனிதாபிமான உதவி என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள சாலைகள் இப்பொழுது டாங்குகள் மற்றும் கவச வண்டிகளால் தகர்க்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் போர் விரிவாக்கத்தின் விளைவாக அழிக்கப்பட்ட நிலையில் உள்ளன.

ஒவ்வொரு நாளும் கடக்கப்படுகையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவற்றிற்கு அடுத்து மூன்றாம் அதிக இராணுவ சிப்பாய்களை கொண்டுள்ள ஜேர்மனி அமெரிக்கா மற்றும் நேட்டோ நடத்தும் காலனித்துவ வகை ஆதிக்கப்போருக்கு நேரடி ஆதரவைக் கொடுக்கிறது. அவ்வாறு செய்கையில், ஜேர்மனிய ஆளும் உயரடுக்கு அதன் நலன்களை தொடர்ந்தும் தனது வல்லரசு அரசியலின் நீண்டகால மரபுகளில் இருந்தும் படிப்பினைகளை எடுத்துக் கொள்ளுகிறது.

ஜேர்மனி-ஆப்கானிஸ்தான் உறவுகளைப் பற்றிய புத்தகத்தில் மார்பேர்க் பல்கலைக் கழகத்தில் ஒரு பேராசிரியராக இருக்கும் மார்ட்டின் பாராகி எழுதினார்: "வில்ஹெல்மெனிய ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுக் கொள்கைப் போக்கை கவனமாக பின்பற்றி முதல்தடவையாக ஆப்கான் மக்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று சுதந்திரம் அடைய வேண்டும் என்ற முயற்சியை பயன்படுத்தி, முதல் உலகப் போரில் ஜேர்மனியின் சொந்த இராணுவ நோக்கங்களை செயல்படுத்த முற்பட்டது."

ஹிட்லருடைய ஆட்சி எந்த அளவிற்கு காபூலின் ஆளும் குழுவுடன் நல்ல, நீடித்த உறவுகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய அவரின் விரிவான கருத்துக்கள் ஜேர்மனியின் பூகோள-அரசியல் நோக்கங்களில் ஆப்கானிஸ்தானின் மகத்தான முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved