World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US outrage over "rigged" elections does not extend to Kyrgyzstan

தேர்தல்களில் "தில்லுமுல்லு" பற்றிய அமெரிக்க சீற்றம் கிர்கிஸ்தானுக்கு பொருத்தமானதல்ல

Bill Van Auken
25 July 2009

Back to screen version

மோசமான முறையில் தேர்தலில் தில்லுமுல்லு செய்தது, எதிர்ப்பை அடக்கியது மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸ் வன்முறை மற்றும் வெடிமருந்துகளை பயன்படுத்தியது ஆகியவை ஒபாமா நிர்வாகம் மற்றும் அமெரிக்க செய்தி ஊடகத்தில் மெளனம் மற்றும் கவனத்திற்கெடுத்துக்கொள்ளாமையை சந்தித்துள்ளது.

இந்த நிகழ்வுகள் வியாழனன்று ஈரானில் அல்லாது நாற்புறமும் நிலப்பகுதி சூழ்ந்த மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் நடைபெற்றன.

வாடிக்கையாக பயன்படுத்தப்படும் இராஜதந்திர சொல்லாட்சியில், ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கும் கூட்டுழைப்பிற்குமான அமைப்பின் (OSCE) தேர்தல் கண்காணிப்பாளர்கள் கிர்கிஸ்தான் வாக்களிப்பு "முக்கிய தரங்களைவிட மிகக் குறைந்தளவில் இருந்தது" என்று அறிவித்து இது "ஏமாற்றத்தை கொடுக்கிறது" என்றும் கூறியுள்ளது.

ஆனால் OSCE அறிக்கையை கவனமாக படித்தால், இப்பொழுது இருக்கும் ஜனாதிபதி குர்மன்பெக் பாகியேவ் பதவியில் கிட்டத்தட்ட 90 சதவிகித பெரும்பான்மையுடன் நீடிக்க உண்மையில் எத்தகைய குற்றம்சார்ந்த வழிவகைகள் பயன்படுத்தப்பட்டன என்பது தெளிவாகும்.

OSCE, "வாக்குப் பெட்டிகளில் திணித்தல்", தேர்தலன்று "பல வாக்குகளை போடல்" என்பவற்றை கூறியிருப்பதுடன் உடல்ரீதியான பலாத்காரமும், கண்ணீர்ப்புகை உட்பட, எதிர்க்கட்சி பார்வையாளர்கள் ஒரு வாக்குச் சாவடியில் நுழைவதை தடுக்க பயன்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளது. "இத்தகைய வழிவகை வாக்குகள் எண்ணப்படும்போது இன்னும் கீழ்த்தரத்தை அடைந்தது" என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் கிர்கிஸ்தான் தலைநகரத்தில் தெருக்களுக்கு வந்து வாக்குகள் மோசடி பற்றி ஆர்ப்பாட்டம் செய்தபோது, போலீசார் அவர்களை எறிகுண்டு மற்றும் கண்ணீர்ப்புகை குண்டு ஆகியவற்றால் தாக்கியும், அவர்கள் தலைக்கு மேல் துப்பாக்கி தோட்டாக்களை சுட்டதன் மூலம் அதை எதிர்கொண்டனர்.

தேர்தலுக்கு முன்னதாக OCSE "ஆளும் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு தெளிவற்றுப் போயிற்று." உண்மையில் இதன் பொருள் பாகியேவின் Ak-Zhol கட்சி அலுவலகங்கள் அரசாங்க கட்டிடங்களுக்குள் அமைக்கப்பட்டு இருந்தன என்பதாகும். அரசாங்க ஊழியர்களும் மாணவர்களும் கட்சி அணிவகுப்பில் பங்கேற்குமாறு வலியுறுத்தப்பட்டனர்; இல்லாவிடில் வேலை போகும், பள்ளியில் இருந்து நீக்கப் பெறுவர் என்ற அச்சுறுத்தல் இருந்ததென'' கூறியது.

எதிர்க்கட்சியின் பிரச்சார நிகழ்வுகள் போலீஸாரால் தடைக்குட்பட்டன. அவற்றின் தலைவர்களும் ஆதரவாளர்களும் அச்சுறுத்தும் ஆட்சியின் கீழ் இருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான எமில்பெக் கப்ராகேயெவ், ஒரு குழு தன்னை கடத்தியதாக அறிவித்தார். அவர்களுள் ஒருவர் போலீஸ் சீருடை அணிந்திருந்துடன், தலைநகரக் கோடிக்கு அவர் இழுத்துச் செல்லப்பட்டு மிருகத்தனமாக அடிக்கப்பட்டார். மூன்று வாரங்களுக்கு பின்னர் முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளருக்கு, பிரச்சாரம் செய்வதை அவர் நிறுத்தவில்லை என்றால், சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதம மந்திரி அல்மாஸ்பெக் அட்டம்பாயேவ் அவருக்கு முன்னதாக கிடைத்தது போல் அடி உதையும் இன்னும் மோசமான பாதிப்பும் வரும் என்று எச்சரிக்கப்பட்டார்.

செய்தி ஊடகத்தில் கிட்டத்தட்ட எதிர்க்கட்சிகளுக்கு இருட்டடிப்புத்தான் இருந்தது. மூன்று தேசிய தொலைக்காட்சி நிலையங்களும் ஜூன் இறுதியில், அனைத்து செய்திகள் கொடுப்பதையும், வாக்குப்பதிவு நேரம் நெருங்குகையில் நிறுத்தி வைத்துவிட்டன. கடந்த ஆண்டில் அரசாங்கம் எதிர்த்தரப்பு செய்தித்தாட்களை முறையாக அடக்கும் முயற்சியில் இருந்தது. ஜனாதிபதி சொந்தக்காரர்கள் மீது அவதூறு எழுதுவதாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, பெரும் அபராத தொகைகள் தண்டனையாக விதிக்கப் பெற்றன மற்றும் இயந்திரங்கள் பறிமுதலுக்கு உள்ளாயின.

இம்மாத தொடக்கத்தின் அரசாங்கத்தை பற்றி குறைகூறி கட்டுரைகளை வெளியிட்ட செய்தியாளரான அல்மாஸ் ராஷியேவ், உயிர்நீங்கும் அளவிற்கு எட்டு போலீசாரால் அடிக்கப்பட்டார். இது இந்த ஆண்டு செய்தியாளர்கள்மீது நடைபெற்ற ஆறாம் தாக்குதலாகும். அக்டோபர் 2007 இருந்து, இரண்டாம் உயிர்ப்பலியுமாகும். அப்பொழுது சுயாதீன செய்தியாளர் அலிஷேர் ஷாயிபோவ் மரணதண்டனை போல் துப்பாக்கியால் சுடப்படடார். அந்தக் கொலைக்கு எவரும் கைது செய்யப்படவில்லை.

இத்தேர்தல் மோசடி ஒன்றும் வியப்பை கொடுக்கவில்லை. கடந்த ஆண்டு உள்ளாராட்சி தேர்தல்களுக்கு முன்னதாக மத்திய தேர்தல் குழுவின் தலைவர் ஜனாதிபதியின் மகன் தனது உயிரைப் பறிப்பதாக அச்சுறுத்துவதால் அவ்வம்மையார் நாட்டை விட்டு ஓடிவிட்டார்.

மனித உரிமைகள் குழுக்கள் கிர்கிஸ்தானில் காவலில் வைத்திருப்பவர்களை சித்திரவதை செய்வது வாடிக்கை என்று கூறுகின்றன. மிக இழிவான செயல்ளில் ஒன்று கடந்த ஆண்டு நூகட் நகரத்தில் எதிர்ப்பு தெரிவித்த 32 பேர் கைது செய்யப்பட்டது ஆகும். விசாரணைக்காக காத்திருக்கும்போது, போலீசார் அவர்களை பாதத்தில் உதைத்து துன்புறுத்தினர். மிக சூடான, குளிர்ந்த நீரை அவர்கள் மீது மாறி மாறி ஊற்றி, அவர்கள் தலைக்கு மேல் பிளாஸ்டிக் பைகளைக் கவிழ்த்து மூச்சுத் திணறி இறக்கும் நிலையின் விளிம்பிற்கு கொண்டு சென்றனர். பெண் கைதிகளில் ஒருவர் சித்திரவதை படுத்துபவர்களிடம் தான் ஒரு கர்ப்பிணி என்று கூறியபோது, அவர்கள் அவரை நையப் புடைத்து குறைப்பிரசவம் வருமாறு செய்துவிட்டனர்.

கடந்த மாதம் ஜனாதிபதி பாரக் ஒபாமா ஜனாதிபதி பாகியேவிற்கு ஒரு கடிதம் அனுப்பி அவருடைய ஆட்சியை அதன் "ஆப்கானிஸ்தான் நிலைமை உறுதிப்பட உதவுவதற்கான முயற்சிகள் மற்றும் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றிற்கு" புகழ்ந்திருந்தார்.

இதுதான் வாஷிங்டனுடைய நிலைப்பாடாக இருக்கிறது. ஒபாமாவும் ஹில்லாரி கிளின்டனும் கிர்கிஸ்தானில் இருக்கும் நிலைமை பற்றி "பெரும் திகைப்பை" கொண்டிருப்பதாக ஏன் அறிவிக்கவில்லை அல்லது ஈரானில் செய்ததை போல் ஆர்ப்பாட்டக்காரர்களின் "தைரியத்திற்கு" மதிப்பளிக்கவில்லை?

ஒபாமாவின் கடிதமே வாஷிங்டன் மற்றும் கிர்கிஸ்தானுக்கும் இடையே பேச்சுவார்த்தை வழிவகைகளின் ஒரு பகுதியாகும். இவை ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க துருப்புக்களுக்கு செல்லும் பொருட்களை அனுப்ப பயன்படுத்தப்படும் மனஸ் விமானத்தளம் பற்றி நடக்கின்றன. கடந்த பெப்ருவரி மாதம் பாபிகேவ் ஆட்சி விமானத்தளத்தை அமெரிக்காவிற்கு மூட இருப்பதாக அறிவித்தது. பின்னர் இந்த மாதம் பேச்சு வார்த்தைகள் மூலம் வந்துள்ள உடன்பாடு ஒன்று காணப்பட்டது. இதன்படி அமெரிக்க இராணுவம் கொடுக்கும் வாடகை கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்த்தப்பட்டவுடன், தளத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தினத்தன்று, நியூ யோர்க் டைம்ஸ் "கிர்கிஸ்தானில் அமெரிக்காவின் கவனத்திற்கு காரணம் தவறுகள் அல்ல மூலோபாயப் பிரச்சினைகள்தான் ஆகும்" என்ற இழிந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக "அலையென வன்முறைகள்" பற்றி குறிப்பிட்டாலும், டைம்ஸ் ஒபாமா நிர்வாகம் "மனித உரிமைகளுக்கு மேலாக இருக்கும் நடைமுறை அக்கறைகளை வலியுறுத்தியுள்ளது பற்றி" ஒப்புதலுடன் குறிப்பிட்டுள்ளது.

பாகியேவ் ஆட்சி ஒன்றும் உண்மையில் அவ்வளவு மோசம் இல்லை என்று வலியுறுத்தியதுடன், பல மத்திய ஆசிய அண்டை நாடுகளைவிட அது "இன்னும் வெளிப்படையான அரசியல் முறையாக" உள்ளது என்றும் பீற்றிக் கொண்டது. "இது ஒரு போலீஸ் அரசாங்கம் அல்ல" என்று வாசகர்களுக்கு உறுதியளித்த பத்திரிகை, "பொதுவாக அரசாங்கத்திற்கு சவாலை வெளிப்படையாக விடுபவர்கள் மட்டுமே பாதுகாப்பு பிரிவுகளால் வேட்டையாடப்படுகின்றனர்" என்றும் எழுதியது.

இது ஒரு ஏற்கத்தக்க ஆட்சியின் நடைமுறை நடவடிக்கை என்றால் (பெனிடோ முசோலினி கூட ஒப்புதல் பெற்றிருப்பார்) பின் ஈரான் பற்றி செய்தித்தாள் என்ன பிரச்சனையைக் கொண்டுள்ளது? அங்கு இது இடைவிடாமல் தேர்தல் தினத்தில் இருந்து வாக்குகள் எண்ணிக்கை நடத்தப்பட்டது "ஆட்சி சதிக்கு" ஒப்பானது என்று விளக்கி எழுதியதுடன் அதற்கு பின் நடந்த நிகழ்வுகளை "Operation Jackboot" என்றும் ஏன் விவரித்தது?

"துலிப் புரட்சி" என்று அழைக்கப்பட்டால்தான் பாகியேவ் பதவிக்கு வந்தார் என்பது கட்டாயமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். அது ஜோர்ஜியாவில் ரோசா மலர் வண்ணப் புரட்சி, உக்ரைனில் ஆரஞ்சு வண்ணப் புரட்சிக்கு பின் இது வந்தது. இது 2005ல் அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த எதிர்க்கட்சியின் தில்லுமுல்லு தேர்தல்கள் குற்றச்சாட்டுக்களால் வந்ததாகும். ஆர்ப்பாட்டங்களும் கலகமும் ஜனாதிபதி அஸ்கர் அகயேவை அகற்றுவதில் வெற்றி பெற்றன. தேர்தல் மோசடி, ஊழல் என்ற கண்டனங்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்தனர். இதைத்தவிர தொடர்ந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆணைப்படி வந்த மறுகட்டமைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட ஆழ்ந்த வறுமையும் ஒரு காரணமாயிற்று.

எதிர்க்கட்சியே பின்னர் ஒப்புக் கொண்டபடி, அதன் எழுச்சிக்கான நிதியளிப்பும் ஒழுங்கமைப்பும் அதிக அளவில் வாஷிங்டனிடம் இருந்து வந்தது. பல அரசாங்க சார்பற்ற அமைப்புக்களின் மூலம் இந்நிதிகள் வந்தன (CIA நிறுவிய அமைப்புக்கள்). அமெரிக்க அகயேவை வெளியேற்ற விரும்பியதற்கு காரணம் அவர் மாஸ்கோவுடன் நட்பு கொள்ள முற்பட்டு மத்திய ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவ முற்பட்ட வாஷிங்டனின் மூலோபாய நோக்கத்திற்கு குறுக்காக நின்றது என்பதாகும். ஆனால் நிகழ்வுகள் நடந்தவிதத்தில் பாகியேவும் பூகோள-அரசியல் உண்மைகளை ஒட்டி, மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே சமப்படுத்திக் கொள்ளும் நிலையில் இருந்தார். இதனால் இன்னும் அதிகமான ஊழல், அடக்குமுறை, தேர்தல் மோசடிகள் ஆகியவை வந்துள்ளன.

ஈரானில் "வண்ணப் புரட்சி" (இந்த முறை பச்சை) அமெரிக்க ஆதரவு பெற்ற எதிர்க்கட்சியினால் மீண்டும் தலைமை வகித்து எழுப்பப்பட்டது. தேர்தல் வகையில் தில்லுமுல்லுகள் நடைபெற்றதாக கூறப்பட்டன. இவை இன்னும் வெற்றி அடையவில்லை. ஏனெனில் ஆளும் மதகுருமார் ஆட்சி அதிகாரச் சமநிலையை இன்னும் சமப்படுத்திக்கொண்டு இருக்கின்றது.

சுருங்கக்கூறின், பிரச்சனைக்குரிய அரசு அமெரிக்கப் போர் நோக்கங்கள் மற்றும் மூலோபாய நலன்களுக்கு உதவும் பாகியேவ் ஆட்சி போல் இருந்தால், பின்னர் தில்லுமுல்லு தேர்தல் செயற்பாடுகள், அடக்குமுறை, சித்திரவதை ஆகியவை அப்படியே சரி எனவும், "நடைமுறை ரீதியானவை" என வாஷிங்டன் தலைவர்கள் மற்றும் அவர்களுடைய டைம்ஸ் போன்ற விசுவாசமான பிரசாரகர்களால் ஏற்கப்படுகின்றன.

ஆனால் ஈரானைப் போல் ஆட்சியை தூக்கிவீச வாஷிங்டன் விரும்பும்போது, அல்லது குறைந்தபட்சம் உயர்மட்டத்தையாவது, அதே நலன்களை அதிகப்படுத்துவதற்காக, வாக்கு மோசடிகள், அடக்குமுறை மற்றும் "ஜனநாயகம்" பாதுகாக்கப்படவேண்டும் ஆகியவை உண்மையான கணைகளாக தொடுக்கப்படுகின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved