World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனாChina's fragile "economic recovery" சீனாவின் வலுவற்ற "பொருளாதார மீட்பு" By John Chan பொருளாதார புத்துயிர்ப்பிற்கு அடையாளம் காண வேண்டும் என்ற பெரும் திகைப்பில், நிதித்துறை கட்டுரையாளர்கள் சீனாவின் இரண்டாம் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி விகிதமான 7.9 சதவிகிதத்தை, முதல் காலாண்டின் 6.1 சதவிகிதத்துடன் ஒப்பிட்டு மகிழ்ந்துள்ளனர். உண்மையில், ஏற்றுமதி உந்துதல் கொண்ட சீனப் பொருளாதாரம் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் என்னும் அதன் முக்கிய சந்தைகள் தொடர்ந்து மந்தநிலை என்னும் சேற்றில் மூழ்கியிருப்பதால் முந்தைய விரிவாக்கத் தரத்திற்கு திரும்பாது. சீன தேசிய புள்ளி விவர அலுவலகம் கடந்த வார புள்ளிவிவரங்களை அறிவித்தபோது, செய்தித் தொடர்பாளர் Xiaochao மீட்பு இன்னமும் "உறுதியற்ற நிலையில்" இருப்பதாகத்தான் எச்சரித்தார். விலைகள் குறைந்து கொண்டிருக்கின்றன என்பதை ஒப்புக் கொண்டு (பணவீக்க அழுத்தத்திற்கு எதிரான நிலையின் அடையாளம்), பல தொழில்துறைகளிலும் தேவைக்கு மீறிய உற்பத்தித்திறன் உள்ளது என்பதையும் ஒப்புக் கொண்ட அவர் "இந்த இயக்கம்... உறுதியற்றது. மீட்பு வடிவமைப்பு சீரற்றதாக உள்ளது; அதனால் இன்னமும் உறுதியற்ற நிலைகுலைக்கும் காரணிகள் தொடர்கின்றன." என அறிவித்தார். இத்தகைய உறுதியற்ற தன்மைகள் இருந்தபோதிலும்கூட, நிதிய நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சி கணிப்பை சீனாவில் உயர்த்திக் காட்டுகின்றன. HSBC கடந்த வாரம் ஒரு மதிப்பீட்டை, 2009 ல் 8.1 சதவிகிதம் என்றும் அடுத்த ஆண்டு 9.5 சதவிகிதம் இருக்கும் என்றும் வெளியிட்டுள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) அதன் சீனா பற்றிய கணிப்பை 2009ல் 1 சதவிகிதம் கூட்டி 7.5 சதவிகிதமாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளது. ஆனால் "சமீபத்திய வளர்ச்சி விரைவு முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் மீட்பு இல்லை என்றால் சிதறிவிடக்கூடிய ஆபத்தைக் கொண்டுள்ளது" என்று IMF எச்சரித்துள்ளது. சீன வணிகம் தொடர்ந்து சுருக்கத்தைத்தான் கண்டுள்ளது. ஏற்றுமதிகள் ஜூன் மாதம் 2008 இதே மாதத்தில் இருந்ததைவிட 21.4 சதவிகிதம் குறைந்திருந்தது. மே மாதக் குறைவு 26.4 சதவிகிதம் என்றும் ஏப்ரலில் 22.6 சதவிகித குறைவு என்றும் இருந்தன. இறக்குமதிகள் ஜூன் மாதம் 13.2 சதவிகிதம் ஆண்டு அடிப்படையில் குறைந்தன. இது மே மாதத்தில் இருந்த 25.2 சதவிகிதம், ஏப்ரலில் இருந்த 23. சதவிகித சரிவோடு பார்க்கும்போது முன்னேற்றம் ஆகும். முக்கிய பங்காளிகளுடன் வணிகம் மிக அதிக அளவில் சரிந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் சீனாவின் வணிகம் 20.0 சதவிகிதம் கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது சுருக்கம் கண்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பானை பொறுத்தவரையில், சுருக்கங்கள் முறையே 16.6, 23.1 சதவிகிதம் என்று உள்ளன. உத்தியோகபூர்வமாக நகர்ப்புற வேலையின்மை 4.3 சதவிகிதம்தான். கடந்த செப்டம்பர்மாதம் இருந்த 4 சதவிகிதத்தில் இருந்து இது சற்று கூடுதலாகும். ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் 20 மில்லியன் கிராமப்புற இடம் பெயரும் தொழிலாளர்களை கணக்கில் சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்கள் கடந்த ஆண்டு தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். BNP Paribas உடைய பொருளாதார வல்லுனர் Isaac Meng, China Economic Review இடம் இம்மாதத் தொடக்கத்தில் உண்மை வேலையின்மை விகிதம் 7 சதவிகிதத்திற்கு அருகில் உள்ளது எனக் கூறியுள்ளார். மூலதன ஊக்கம் பெற்ற உள்கட்டமானத் திட்டங்கள் குறைந்த வேலைகளைத்தான் தோற்றுவிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஏற்றுமதிகள் தீவிரமாகக் குறைகையில், 2010, 2011ல் வேலையின்மை தரங்கள் அதிக அளவில் இருக்கும் என்று எச்சரித்தார். ஏற்றுமதிப் பிரிவு சீனாவில் 10 வேலைகளில் ஒன்றிற்கு அடித்தளமாக உள்ளது. முன்னேற்றம் அடைந்துள்ள இரண்டாம் காலாண்டு புள்ளிவிவரம் அதிக அளவில் அரசாங்க வங்கிகள் கொடுக்கும் கடன்களில் ஏற்றம் மற்றும் அரசாங்க ஆதரவு உடைய உள்கட்டுமான திட்ட வளர்ச்சியைப் பெரிதும் நம்பியுள்ளது. கடந்த நவம்பர் மாதம், உயர்ந்த வேலையின்மை நிலை சமூக அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்று ஆட்சி கவலைப்பட்டது. அதற்காக உலக நிதிய நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில் 4 டிரில்லியின் யுவான் (அமெரிக்க $580 பில்லியன்) ஊக்கப் பொதித் திட்டத்திற்கு அறிவித்தது. இது முக்கியமாக அரசாங்க வங்கிகள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிதியச் செலவுகள் மூலம் நிதியளிக்கப்படும். வங்கி கடன் கொடுத்தல் என்பது இப்பொழுது அசாதாரண தரங்களை அடைந்துள்ளது. இதையொட்டி ஊக செலவுகள் உந்துதல் பெற்றுள்ளன, மற்றொரு நிதியக் கரைப்பு என்ற ஆபத்து எழுகிறது. UBS பொருளாதார வல்லுனர் Wang Tao உடைய கருத்தின்படி, ஜூன் மாதம் 1.53 டிரில்லியன் யுவான் (அமெரிக்க $224 பில்லியன்கள்) புதிய கடன்கள் என்பது 2009 முதல் பாதியில் மொத்தத்தை 7.4 டிரில்லியன் யுவானுக்கு, கிட்டத்தட்ட 2009 ல் மதிப்பிடப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பகுதிக்கு கொண்டுவந்து விட்டது. "இப்பொழுது நாங்கள் 2009ல் புதிய கடன் கொடுத்தல் Rmb 9,000 பில்லியனை [$1.31 டிரில்லயன்] அடையும் என்று நம்புகிறோம். இத்தகைய சொந்த மூலதனமிடல் தன்மை வேகம் சீன வரலாற்றில் முன்னோடியில்லாதது." என்று ஜூலை 16ம் தேதி பைனான்சியில் டைம்ஸிடம் வாங் கூறினார்.ஜூலை 15 அன்று பைனான்சியல் டைம்ஸ் ஏற்றம் பெறும் கடன் கொடுத்தலினால், உள்ளூர் அரசாங்கங்ககள் தங்கள் வாடும் பொருளாதாரத்திற்கு ஏற்றம் கொடுக்க விரையும் நேரத்தில், ஊக்கப் பொதிக்கு மொத்த செலவுகள் 10 டிரில்லியன் யுவான்களை அடையும் ($1.46 டிரில்லியன்) என்று கூறியுள்ளது. Wu Xiaoling, ஒரு முன்னாள் மத்திய வங்கி துணைத் தலைவர், "வேகம் முதலில்" என்ற இந்தக் கொள்கை அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் கடைபிடிக்கப்படுவது, "பாரிய வீணடிப்பு பிரச்சினைகளை உருவாக்கும் திறனை கொண்டுள்ளது" என்று எச்சரித்து இது பாரியளவில் மோசமான கடன்களை உருவாக்கிவிடும் என்றும் கூறியுள்ளார்.அதே நேரத்தில் ஊக்கப் பொதிக்கான செலவினம், ஏற்றம் பெறும் வேலையின்மையை துடைக்கவும் முடியவில்லை. நேரடி கடன் கொடுத்தலில் 5 சதவிகிதத்திற்கும் குறைவான தொகையாகத்தான் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு சென்றுள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவைதான் சீனாவில் வேலைகளை அதிகம் கொடுக்கும் அமைப்புக்கள் ஆகும். பெரிய நிறுவனங்கள் எளிதில் கிடைக்கும் கடன்களை கொண்டு ஆக்கபூர்வ உற்பத்தி முதலீட்டிற்கு செலவழிப்பது இல்லை. மாறாக அதை கடனாக கொடுக்கின்றன, அல்லது வங்கி சேமிப்புக்களில் போட்டு வைக்கின்றன. இதனால் பங்கு சந்தைகள் மற்றும் சொத்துக்கள் சந்தைகளில் ஊக வணிகம் பெருகிவிட்டது; ஷாங்காய் பங்குச் சந்தை இந்த ஆண்டு தீவிரமாக உயர்ந்துள்ளது. ஆனால் இது ஒரு சுகாதாரமான பொருளாதாரத்தை பிரதிபலிக்கவில்லை. பைனான்சியல் டைம்ஸில் Lex Column ஜூலை 16 அன்று எழுதியது: "வேலைகள் என்று மாற்றப்படும் வளர்ச்சி, சமூக உறுதியற்ற தன்மை என்ற ஆபத்தை தகர்த்து விடும் வடிவமைப்பை கொண்டது. ஆனால் இங்கும் பல ஆபத்துக்கள் உண்டு, பங்குச் சந்தை குமிழிகள் 75 சதவிகிதம் வரை உள்ளன என்பது ஒன்று, சொத்து சந்தை இரண்டாவது ஆகும். சொத்துக்களில் முதலீடு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஜூன் வரை 18 சதவிகிதம் உயர்ந்தது. இது மே மாதத்தில் இருந்ததைவிட 6 சதவிகிதம் அதிகமாகும். கேட்டால் பணம் கிடைக்கிறது என்ற நிலையில், உற்பத்தி தகமையை அதிகரிப்பதா அல்லது பங்குச்சந்தையில் நுழைவதா என்பதற்கிடையில் தொழிற்துறை நிலையற்று நிற்கிறது."வெளிநாட்டு ஊக முதலீடும் சீனாவிற்கு ஈர்க்கப்படுகிறது. இது நாட்டின் ஏற்றம் பெரும் நாணய இருப்புக்களுக்கு உதவுகிறது. அதுவோ $2.132 டிரில்லியனை ஜூன் இறுதிக்குள் எட்டிவிட்டது. இருப்புக்கள் $177.9 பில்லியன் என்று இரண்டாம் காலாண்டில் உயர்ந்தன. இதில் மே மாதம் மிக அதிக மாத பட்சமாக $80.6 பில்லியன் இருந்தது. இது முதல் காலாண்டில் $7.7 பில்லியன்தான் என்பதுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் இலாபங்களை தம் நாட்டிற்கு எடுத்துச் செல்வதுடன், சர்வதேச வங்கிகள் கடன்கள் திரும்பக் கேட்கப்படுவதால் கடன் நெருக்கடியை எதிர்கொள்ளுகின்றன. வெளிநாட்டு நாணய இருப்புக்களில் இரண்டாம் காலாண்டில் ஏற்றம் என்பது வணிக உபரிகள் அல்லது வெளிநாட்டு நேரடி முதலீடு என்பதால் விளக்கப்பட முடியாது. அவை 2008 உடன் ஒப்பிடும்போது 17.9 சதவிகிதமாக சரிந்துவிட்டன. இது வெளிநாட்டு ஊக முதலீடு மிக அதிகமாக வந்திருப்பதின் விளைவு ஆகும். BNP Paribas பகுப்பாய்வளரான Chen Xingdong இரண்டாம் காலாண்டில் சீனாவிற்குள் முதல் காலாண்டில் திரும்பப் பெறப்பட்ட $65 பில்லியனுடன் ஒப்பிடும்போது $70 பில்லியன் ஊக மூலதனம் வந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளார்.அமெரிக்க டாலர் தளத்தை கொண்ட சொத்துக்களில் பெரும்பாலும் வைக்கப்பட்டுள்ள விரிவடைந்துள்ள வெளிநாட்டு நாணய இருப்புக்கள் பெய்ஜிங் எதிர்கொள்ளும் சங்கடங்களை அதிகமாக்குகின்றன. "நாடுகளுக்கு மேலான இருப்பு நாணயம்" ( super-national reserve currency) புதிதாகத் தேவை என்று குரல் கொடுத்தாலும், சீனா டாலரை கைவிட முடியாது; அப்படிச் செய்தால் சர்வதேச நிதிய முறை பெரும் சீர்குலைவிற்கு உட்படும். அதே நேரத்தில் அதன் நாணய இருப்புக்களில் 65 முதல் 70 சதவிகிதம் அமெரிக்க டாலரில் இருக்கையில் பெய்ஜிங் டாலர் வலுவிழந்தால் பெருகிய இழப்புக்களை எதிர்கொள்ளும்.சீனா தொடர்ந்து டாலர் இருப்புக்களை வாங்குகிறது. குறிப்பாக அமெரிக்க கருவூலப் பத்திரங்களை வாங்குகிறது. இதற்குக் காரணம் யுவானை டாலருக்கு 6.8 என்று உறுதியான நிலையில் வைத்து அதன் பிரச்சனைக்குள்ளான ஏற்றுமதி தொழில்களுக்கு உதவுவது ஆகும். யுவானின் மதிப்பு கடந்த ஆண்டு அதிகம் மாறவில்லை. ஜூலை 2005ல் டாலருக்கான யுவான் மாற்றினை 21 சதவிகிதமாக உத்தியோகபூர்வமாக உயர்த்தியதில் இருந்து இந்த நிலைதான் உள்ளது. கடந்த வாரம் அமெரிக்க நிதி அமைச்சரகத்தின் கருத்துப்படி, சீனா அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் தன் இருப்பை $38 பில்லியன் உயர்த்தி, மே மாதத்தில் $801.5 பில்லியன் இருப்பை கொண்டிருந்தது. ஜப்பான், ரஷ்யா, கனடா போன்ற நாடுகளே தங்கள் இருப்பை குறைத்துக் கொண்டிருக்கின்றன. சீனா இப்பொழுது அமெரிக்காவின் மத்திய கடனில் மொத்த வெளிநாட்டு வங்கிகள் கொண்டிருப்பதில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமாகக் கொண்டுள்ளது. இதன் பணம் கிட்டத்தட்ட ஜப்பான் மற்றும் ரஷ்யா இரண்டின் கூட்டு இருப்புக்களுக்கு சமம் ஆகும். சீனா தொடர்ந்து பத்திரங்களை வாங்குவது ஒபாமா நிர்வாகத்திற்கு மிக முக்கியமானது ஆகும். அது செப்டம்பர் 30ல் முடியும் ஆண்டில் $3.25 டிரில்லியன் பணத்தை கடனாக வாங்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது (இது 2008 எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட நான்கு மடங்காகும்). அப்பணம் மகத்தான ஊக்கப் பொதி, பிணை எடுப்பு ஆகியவற்றிற்கு நிதியளிக்க பயன்படுத்தப்படும். சீனாவின் அரசாங்கத் தகவல் மையத்திலுள்ள தலைமை பொருளாதார வல்லுனரான Zhu Baoliang ஜூலை 16ம் தேதி Bloomberg செய்தி நிறுவனத்திடம் கூறினார்: "குறுகிய காலத்தில் சீனா அமெரிகக கருவூலப் பத்திரங்களைத் தொடர்ந்து வாங்குவதைத் தவிர வேறு ஏதும் செய்ய முடியாது, அமெரிக்க பொருளாதாரம் விரைவில் மீளும் என்ற நம்பிக்கையுடன் அது செயல்படும். அதையொட்டி அதன் மூலதனம் அதிக இழப்பு இல்லாமல் தப்பும் என்று நம்புகிறது."ஆனால் சீனாவின் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய சந்தைகள் மீள்வதற்கான வாய்ப்பு இருண்டுதான் உள்ளது. அமெரிக்காவில் ஜூன் மாதத்தில் வேலையின்மை 9.6 சதவிகிதம் என்று உயர்ந்த நிலையில், யூரோப்பகுதியில் 9.5 என்று உயர்ந்துள்ள நிலையில், நுகர்வோர் செலவழித்தல் என்பது இந்நாடுகளில் குறைந்துவிட்டது. அமெரிக்க நிர்வாகம் வோல் ஸ்ட்ரீட்டை பிணை எடுக்க அது கொடுத்துள்ள கடன்களுக்கு வட்டிகள் கொடுப்பதற்காக அடிப்படை சமூக சேவைகளில் இன்னும் கூடுதலான அழிப்புகளை செய்யும்போது, நுகர்வு இன்னும் சரியும். |