இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை ஜூன் 16 அன்று கலைத்துவிட்டார்.
இந்த நடவடிக்கை, சட்டம் மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான அரசாங்கத்தின் அலட்சியத்தையும் மற்றும்
பாதுகாப்பு படைகளும் அவர்களுடன் சேர்ந்து செயற்படும் துணைப்படை குழுக்களும் இழைத்த துஷ்பிரயோகங்கள்
பற்றிய எந்தவொரு விசாரணயை அது எதிர்ப்பதையும் மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்தியுள்ளது.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதலை அரசாங்கம்
புதுப்பித்ததோடு இணைந்தவாறு நடந்த தொடர்ச்சியான கொலைகள் சம்பந்தமான சர்வதேச விமர்சனத்தில்
இருந்து மீள்வதன் பேரில், 2006 நவம்பரில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி நிஸ்ஸங்க உடலகமவின் தலைமையில்
எட்டுப்பேர் அடங்கிய இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. குறிப்பாக, 2006 ஆகஸ்ட் 4 அன்று, கிழக்கில் மூதூர்
பிரதேசத்தில் பிரான்சைத் தளமாகக் கொண்ட பட்டினிக்கு எதிரான அமைப்பு என்ற நிறுவனத்தின் தொண்டு ஊழியர்கள்
17 பேர் மரணதண்டனை முறையில் கொல்லப்பட்டது தொடர்பாக பரந்த எதிர்ப்பு இருந்தது.
சில மூடிமறைப்பு சோடனைகளை செய்வதற்காக, அரசாங்கம் இந்த சம்பவத்தையும்
மேலும் ஏனைய 15 சம்பவங்களையும் விசாரணைக்காக பட்டியலிட்டதோடு சட்டத்தில் கோரப்பட்டுள்ளவாறு இராஜபக்ஷ,
ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நீடித்தார். ஆனால், உத்தியோகபூர்வ தடைகள்
மற்றும் சாட்சிகளை அச்சுறுத்துதல் மற்றும் படுகொலை செய்தல் போன்ற நடவடிக்கைகளோடு இரண்டரை வருட
காலமாக தொடர்ந்த இழுத்தடிப்பின் பின்னர், ஆணைக்குழு எட்டு வழக்குகளை மட்டுமே விசாரணை செய்துள்ளதோடு
அறிக்கைகள் எதனையும் வெளியிடாத போதிலும் கூட இம்முறை அதன் பதவிக் காலம் நீடிக்கப்படவில்லை.
"கடந்த காலத்தில் பதவிக்காலம் நீடிக்கப்பட்ட போதிலும், இம்முறை
நீடிக்கப்படவில்லை. மாறாக அணைக்குழு கலைக்கப்பட்டுவிட்டது," என உடலகம அசோசியேடட் பிரஸ்சுக்குத்
தெரிவித்தார். "காரணம் என்னவென்று எனக்கு புரியவில்லை" என மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ரஜீவ
விஜேசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பாதுகாப்பு படைகளுடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுக்கள் மற்றும்
கொலைப்படைகளால் அரங்கேற்றப்படும் கடத்தல்கள், கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கும் சம்பவங்களும்,
2005ல் ஆட்சிக்கு வந்த பின்னர் இராஜபக்ஷ நாட்டை மீண்டும் யுத்தத்துக்குள் தள்ளிய நாளில் இருந்து வழக்கமான
சம்பவங்களாகின. இவை தொடர்பாக எந்தவொரு விசாரணையையும் அனுமதிப்பதை அரசாங்கம் தொடர்ச்சியாக
மறுத்து வந்ததோடு இந்த ஆணைக்குழுவை கலைக்கும் முடிவும் பிணைந்துள்ளது.
இதே போல், ஆயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்களின் சாவுக்கு வழிவகுத்த
புலிகளுடனான கடைசி மோதல்களில் இராணுவத்தின் கொடூரமான தாக்குதல்கள் தொடர்பாக, ஒரு சுயாதீன
அல்லது சர்வதேச கண்காணிப்பிலான விசாரணைக்கு விடுத்த அழைப்பையும் அரசாங்கம் நிராகரித்து விட்டது. யுத்த
வலயத்தில் இருந்து இடம்பெயர்ந்த கிட்டத்தட்ட 300,000 பொது மக்களை அரசாங்கமும் இராணுவமும் வடக்கில்
வவுனியாவில் தடுப்பு முகாங்களுக்குள் அடைத்து வைத்துள்ளன.
மே 27 அன்று, "சகல மனித உரிமைகளுக்கும் முன்னுரிமை வழங்கவும் பாதுகாக்கவும்
தொடர்ந்தும் அர்ப்பணிப்பதற்கு" அரசாங்கத்தின் தகுதியை ஆதரித்து ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நடந்த
வாக்கெடுப்பினால் அரசாங்கம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. யுத்தக் குற்றம் தொடர்பான ஒரு சர்வதேச
விசாரணையைக் கோரி அமெரிக்காவின் ஆதரவுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்வைத்த பிரேரணை, சீனா
மற்றும் ரஷ்யாவின் ஆதரவுடன் தோற்கடிக்கப்பட்டது.
இந்த வாக்கெடுப்புக்கும் இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பிற்கும்
தொடர்பில்லை. மாறாக, மிகவும் வெளிப்படையாக புலிகளின் தோல்வியை அடுத்து, மூலோபாய
முக்கியத்துவத்துடன் அமைந்துள்ள இலங்கையிலும் மற்றும் தெற்காசியாவிலும் செல்வாக்கை திணிப்பற்கான பெரும்
வல்லரசுகளுக்கு இடையிலான பகைமை உக்கிரமடைவதையே அந்த வாக்கெடுப்பு குறித்தது. 2006ல் இருந்து
இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்ததில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தினதும் அமெரிக்காவினதும் பாசாங்குத்தனம்
அம்பலத்துக்கு வந்துள்ளது.
இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் விசாரிக்கப்படவிருந்த சில உயர்மட்ட
வழக்குகளை சுருக்கமாக ஆராயும் போது, அரசாங்கம் அந்த விசாரணைகளுக்கு முடிவுகட்டியது ஏன் என்பது
தெரியவரும்.
*2005 டிசம்பரில் கிழக்கு நகரான மட்டக்களப்பில், புலிகள்-சார்பு தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை. இராணுவத்துடன்
சேர்ந்து செயற்படும் துணைப் இராணுவக் குழுவொன்றே இதற்குப் பொறுப்பு என ஒரு நேரடி சாட்சி
தெரிவித்தார். இந்த படுகொலை, இனவாத படுகொலைகளுக்கு எண்ணெய் வார்த்து, புலிகளை பதில் நடவடிக்கை
எடுக்க நெருக்கி, அதன் மூலம் யுத்தத்துக்கு அடித்தளம் அமைப்பதை இலக்காகக் கொண்ட ஆத்திரமூட்டலாகும்.
*கிழக்கு நகரான திருகோணமலையில், கடற்படை கட்டிடத்துக்கு அருகில் 2006
ஜனவரி 2ம் திகதி ஐந்து மாணவர்கள் குருதியை உறையவைக்கும் வகையில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள்
மிகவும் நெருக்கமாக இருந்து சுடப்பட்டிருந்ததோடு கண்கண்ட சாட்சிகள் பாதுகாப்பு படைகள் மீது
குற்றஞ்சாட்டின. இந்த மாணவர்களின் உறவினர்களில் பலர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதோடு அவர்கள் வீடியோ
இணைப்பின் ஊடாக விசாரணையில் பங்கெடுத்துக்கொண்டனர். அடுத்ததாக ஆணைக்குழு வீடியோவைப் பயன்படுத்துவை
அரசாங்கம் நிறுத்திவிட்டது. ஆணைக்குழுவின் தலைவர் உடலகம, இந்தக் கொலையில் பாதுகாப்பு படையினரை
சம்பந்தப்படுத்தினார். "சீருடையில் இருந்த ஒருவர்தான் இதை செய்திருப்பார் என நாங்கள் நினைக்கிறோம்,"
என அவர் கடந்த வாரம் அசோசியேடட் பிரஸ்சுக்குத் தெரிவித்தார்.
* வெளிப்படையான யுத்த நடவடிக்கைகள் தொடங்கி குறுகிய காலத்துக்குள்ளேயே
பட்டினிக்கு எதிரான தொண்டு நிறுவனத்தின் 17 ஊழியர்கள் 2006 ஆகஸ்ட்டில் கொல்லப்பட்டனர். 15 சடலங்கள்
தலையில் சுடப்பட்டு வரிசையாகக் கிடந்தன. தப்பிக்க முயன்ற இருவர் முதுகில் சுடப்பட்டிருந்தனர். புலிகளுக்கும்
கொழும்புக்கும் இடையிலான 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை மேற்பார்வை செய்த சர்வதேச இலங்கை
கண்காணிப்புக் குழு, இந்தக் கொலைகளுக்கு இராணுவமே பொறுப்பு எனத் தெரிவித்தது. கண்காணிப்புக் குழ,
இந்தப் படுகொலைகள் "இலங்கையின் பாதுகாப்புப் படைகளை யுத்த நிறுத்தத்தை மோசமாக மீறுவதாகும்" என
உத்தியோகபூர்வமாக அறிவித்ததோடு "உலக ரீதியில் மனிதாபிமான தொண்டு ஊழியர்களுக்கு எதிராக அண்மையில்
நடந்த மிகவும் கொடூரமான குற்றங்களில் ஒன்று" எனவும் விவரித்தது.
ஆணைக்குழுவால் விசாரித்து முடிக்க முடியாமல் போன வழக்குகளில், வெளியுறவு
அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை, கெபத்திகொல்லாவையில் சிவிலியன்கள் மீதான குண்டுத் தாக்குதல்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை மற்றும் சமாதான செயலகத்தின்
உப பணிப்பாளர் கே.பி. லோகநாதன் மற்றும் கொழும்புக்கு தென் கிழக்காக உள்ள அவிஸ்ஸவலையில் தலையில்லா
சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை ஆகியவையும் அடங்கும். கதிர்காமர் கொலை குறிப்பாக முக்கியத்துவம்
வாய்ந்ததாகும். அரசாங்கம் புலிகள் மீது குற்றஞ்சாட்டுகின்ற அதே வேளை, இந்தக் கொலையை சிங்கள அதி
தீவிரவாதிகள் அல்லது இராணுவமே கூட செய்திருக்கக் கூடும். இந்தப் படுகொலை, கொழும்பு ஸ்தாபனத்தில்
2002 யுத்த நிறுத்தத்தை கசப்புடன் எதிர்த்ததோடு யுத்தத்தை புதுப்பிக்குமாறு நெருக்கியவர்களின் கைகளை
உடனடியாக பலப்படுத்தியது.
இந்தக் குற்றங்கள் தொடர்பாக ஒரு சுயாதீன விசாரணையை அனுமதிக்க மறுப்பதாக
அரசாங்கத்தை சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம் செய்ததை அடுத்து, ஆணைக்குழுவின் விசாரணைகளை
மேற்பார்வை செய்ய முன்னாள் இந்திய உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில், மாண்பு மிக்கவர்களின்
சர்வதேச சுயாதீன குழு என்ற ஒன்றை 2007ல் ஜனாதிபதி நியமித்தார். ஆயினும், 2008 ஏப்பிரலில், தனது
வேலைகளை நிறுத்திக்கொண்ட மாண்பு மிக்கவர்களின் குழு, சாட்சிகளை பாதுகாக்கத் தவறியதோடு
வெளிப்படையில்லாமல் செயற்படுவதன் மூலம் முறையான விசாரணைகளை உறுதிப்படுத்தும் "அரசியல் விருப்பத்தை
வெளிப்படுத்தவில்லை" என அரசாங்கத்தை குற்றஞ்சாட்டியது. சில வழக்குகளில் சாட்சிகள் கொல்லப்பட்டு
விட்டனர், நாட்டை விட்டு ஓடிவிட்டனர் அல்லது சாட்சியளிப்பதை தடுப்பதற்காக அச்சுறுத்தல்களுக்கு
உள்ளாக்கப்பட்டனர்.
வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்கள், ஆணைக்குழுவை மூடியதை கண்டனம்
செய்ததுடன் ஆணைக்குழுவின் முடிவான அறிக்கை "உடனடியாக பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்" என சர்வதேச
மன்னிப்புச் சபை கோரியது. கொழும்பு அரசாங்கத்திடம் இருந்து, "சட்ட முறையின் ஊடாக அல்லது இந்த
ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாகவேனும்" இவற்றில் [17 வழக்குகளில்] ஒன்றுக்கேனும் எந்தவொரு நியாயமும்
கிடைக்கவில்லை என மன்னிப்புச் சபை தெரிவித்தது.
ஜனநாயக உரிமைகள் மீதான மட்டுமீறிய வன்முறைகள் ஒவ்வொரு முனையில் இருந்தும்
தொடர்கின்றன. கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமெரிக்காவை தளமாகக் கொண்ட பத்திரிகையாளர்களை
பாதுகாக்கும் குழு, மே கடைசி வரையான 12 மாத காலத்தில் 11 இலங்கை பத்திரிகையாளர்கள் நாட்டை
விட்டு வெளியேறியுள்ளனர் என சுட்டிக் காட்டியது. உலகம் பூராவும் மொத்தம் 39 பத்திரிகையாளர்கள் அவர்களது
நாட்டை விட்டு வெளியேறத் தள்ளப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள்
வெளியேறியுள்ளனர் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
யுத்தத்தை அல்லது அரசாங்கத்தை பற்றிய எந்தவொரு விமர்சனத்தையும் மெளனமாக்குவதற்கு
திட்டமிடப்பட்ட ஒரு தொடர்ச்சியான கொலைகள் மற்றும் வன்முறைத் தாக்குதல்களின் மத்தியிலேயே இவ்வாறு இலங்கையில்
இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேறியுள்ளனர். சிரச/எம்.டி.வி. தனியார் தொலைக்காட்சி நிலையம் தாக்கிக்
கொள்ளையிடப்பட்ட பின்னர், 2009 ஜனவரியில் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசன்த விக்கிரமதுங்க
கொல்லப்பட்டது பற்றி பொலிஸ் உத்தியோகபூர்வமாக எதையும் கண்டுபிடிக்கவில்லை.
அரசாங்கத் தலைவர்கள் ஒரு துண்டு ஆதாரத்தைக் கூட காட்டாமல் கடத்தல்,
காணாமல் ஆக்குதல் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் அரசாங்கத்தின் மதிப்பை நாசமாக்கும்
நோக்கில் அரசியல் எதிரிகள் செய்யும் வேலை என பிரகடனம் செய்தனர்.
இதே போல், இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் "மனிதாபிமான நடவடிக்கை"
என கூறிக்கொண்ட யுத்தத்தின் போது, ஒரு பொதுமகன் கூட இராணுவத்தால் கொல்லப்படவில்லை என புலிகளின்
தோல்வியின் பின்னர் ஆற்றிய எல்லா உரைகளிலும் அவர் அறிவித்தார். வெள்ளியன்று புலிகளின் முன்னாள் கோட்டையான
முல்லைத் தீவுக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, இலங்கை இராணுவம் "உலகின்
மிகவும் ஒழுக்கமான இராணுவங்களில் ஒன்று" என கூறிக்கொண்டார்.
ஆணைக்குழுவை கலைப்பதானது யுத்தத்தின் பின்னர் இராணுவத்தின் கைகளை மேலும்
பலப்படுத்துவதை குறிக்கின்றது. தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகள் மீது
மேலும் மோசமாக சவாரி செய்ய அரசாங்கம் தயங்காது என்பதை அறிவிக்கும் இன்னுமொரு செய்தியே இது.
மாறாக, அது இராணுவத்தையும் அதனுடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுக்களையும் தன்டணையில் இருந்து
விலக்களிப்புடன் சட்டத்துக்கும் மேலாக இயங்க அனுமதிக்கும்.