WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Tensions mount within Iran's ruling establishment
ஈரானின் ஆளும் வர்க்கத்தினுள் அழுத்தங்கள் அதிகரிக்கின்றன
By Bill Van Auken
21 July 2009
Use this version
to print | Send
feedback
ஈரானின் பில்லியனர் முன்னாள் ஜனாதிபதி அலி அக்பர் ஹஷேமி ரப்சஞ்ஜானி, கடந்த
வாரம் வெள்ளியன்று தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் பிரார்த்தனை கூட்டத்தில் வழங்கிய உரை இஸ்லாமியக் குடியரசின்
ஆளும்வர்க்கத்தினுள் கடந்த மாத மோதலுக்குட்பட்ட தேர்தலுக்கு பின்னர் உட்பிளவுகள் பெரிதாகி உள்ளதை அடையாளம்
காட்டுகிறது.
எதிர்த்தரப்பின் வேட்பாளரான மீர் ஹொசைன் மெளல்வியின் முக்கிய ஆதரவாளர்களில்
ஒருவரான ரப்சஞ்ஜானி தன்னுடைய மத உரையை பயன்படுத்தி தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஈரானியர்களை விடுதலை செய்யுமாறு அழைப்புவிடுத்தார். ஜூன் 12 வாக்கு
எண்ணிக்கைகளில் ஏற்பட்டுள்ள "நெருக்கடி" மற்றும் "சந்தேகம்" என்பவற்றை தீர்க்க குறிப்பிடப்படாத நடவடிக்கைகள்
வேண்டும் என்றும், அத்தகைய சந்தேகங்கள் "நம் அறிவார்ந்த மற்றும் விஷயங்கள் அறிந்த மக்களின் கூடிய
பிரிவினருக்கும்" ஏற்பட்டது என்றும் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி அரசாங்கம் நடத்தும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் தேர்தல்,
அதற்கு பின் நடந்தவை பற்றி கூறியது பற்றித் தீவிர குறைகூறினார். பெயரைக் கூறாவிட்டாலும், ரப்சஞ்ஜானியின்
பேச்சு உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனிய்க்கு ஒரு சவால் என்ற பரந்த அளவில் காணப்படுகிறது; அயதுல்லா
அலி காமெனிய்னி இதே அரங்கில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு தேர்தல்கள் முறையானவை என்றும் தெருக்களில்
நடக்கும் எதிர்ப்புக்கள் வெளிநாட்டினர் தூண்டுதல் பேரில் நடப்பவை என்றும், ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்பட
வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
எதிர்த்தரப்பின் வலதுசாரி அரசியல் செயற்பட்டியல் கடந்த வெள்ளியன்று மக்கள்
எழுப்பிய கோஷங்களில் வெளிப்பாட்டை கண்டது. மரபார்ந்த கோஷமான 1979 புரட்சியில் இருந்து கூறப்படும்
"அமெரிக்காவிற்கு மரணம்" - என்பது ஒலிபெருக்கிகள் மூலம் வந்தவுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் "ரஷ்யாவிற்கு
மரணம்", "சீனாவிற்கு மரணம்" என்று விடையிறுத்தனர்.
இத்தகைய கோஷங்களில் வெளிப்படுத்தப்படுவது சீன, ரஷ்ய ஆட்சிகளில் இருக்கும்
அடக்குமுறைக் கொள்கைகளுக்கு விரோதப் போக்கு அல்ல; மாறாக ஈரானியக் கொள்கை அமெரிக்க
ஏகாதிபத்தியத்திற்கு நெருக்கமாக இருந்து மேலை முதலாளித்துவத்துடன் நெருக்கமான பிணைப்புக்களை கொள்ளும்
வகையில் அடிப்படை மாற்றம் பெற வேண்டும் என்ற கோரிக்கை ஆகும். இந்த அரசியல் சார்பு வாஷிங்டன்
தொடரும் நோக்கங்களுடன் இணைந்துள்ளது. அமெரிக்காவோ ஈரானுக்குள் இரகசிய உளவுத்துறை நடவடிக்கைகள்
மூலம் செயல்பட்டுவருகிறது.
தன்னுடைய கருத்துக்களை மூடிமறைக்கும் வகையில் ரப்சஞ்ஜானி உயர்மட்டத்தில்
சமரசம் மற்றும் ஒற்றுமை வேண்டும் என்ற அழைப்பை விடுக்கும் வகையில் "இவை கசப்பான சூழ்நிலை, கடினமான
நேரங்கள். எந்தப் பிரிவில் இருந்தும் எவரும் இப்படி இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. நாம் அனைவரும்
இழப்புக்களைத்தான் கொண்டுள்ளோம்." என அறிவித்தார். ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட்டின் மறு தேர்தலை
அவர் ஏற்கப்பட்ட முடிவாக எடுத்துக் கொண்டுவிட்டது போல் தோன்றிய விதத்தில் "எப்படியும், இது
முடிந்துவிட்டது, அந்தக் கட்டத்தை கடந்து விட்டோம், மற்றொரு புதிய கட்டத்திற்கு வந்துள்ளோம்." என
அறிவித்தார்.
ஆனால் ரப்சஞ்ஜானி பழுத்த அனுபவம் பெற்ற தந்திரசாலி ஆவார்; ஈரானிய
அரசியல் வட்டங்கள் அவரை "சுறா'' என்று அழைக்கும். இவரை 2005 ஜனாதிபதித் தேர்தல்களில் தோற்கடித்த
அஹ்மதிநெஜாட்டிற்கு கடுமையான எதிர்ப்பாளரான இவர் சக்திகளின் சமநிலை ஈரானிய முதலாளித்துவ
அரசாங்கத்திற்குள்ளும் நாட்டின் ஆளும் வட்டங்களுக்குள்ளும் முழுமையாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை
உணர்ந்துள்ளார். இந்த உரை ஒரு அரசியல் ஆய்வின் தன்மையைக் கொண்டிருந்து, உள்நாட்டு, வெளிநாட்டுக்
கொள்கையில் ஒரு மூலோபாய மாறுதலை கொண்டுவருவதற்காக அரசாங்கத்திற்குள் இருக்கும் சக்திகளை
ஒன்றுதிரட்டும் நோக்கத்தை கொண்டிருந்தது.
ரப்சஞ்ஜானியின் பேச்சை அடுத்து மற்றொரு முன்னாள் ஜனாதிபதி, மெளசவியுடனும்
"சீர்திருத்த வாதிகளுடனும்" அடையாளம் காணப்படும் முகம்மது கடாமி அஹ்மதிநெஜாட்டின் அரசாங்கத்தின்
நெறித்தன்மை பற்ற வாக்கெடுப்பு வேண்டும் என்று குரல் கொடுத்தார். ரப்சஞ்சஜானியின் உரையை பாராட்டிய
அவர் மெளசவியின் கோரிக்கையான "பொதுமக்கள் நம்பிக்கை சமூகத்தில் மீட்கப்பட வேண்டும்" என்பதை
மேற்கோளிட்டார்.
இந்தக் குற்றச் சாட்டுக்களுக்கு உயர் தலைவர் காமேனீ திங்களன்று ஈரானின்
"உயரடுக்கிற்கு" ஒரு பகிரங்க அழைப்பைக் கொடுக்கும் வகையில் விடையிறுத்தார்.
"உயரடுக்கு மிகவும் கவனமாக இருக்கவேண்டும்; ஏனெனில் அவர்கள் பெரிய
சோதனையை எதிர்கொண்டுள்ளனர். சோதனையில் தோற்றுவிட்டால் அவர்களுக்கு சரிவு ஏற்பட்டுவிடும்."
ரப்சஞ்சஜானியை நோக்கி விடப்பட்டது என நினைக்கக்கூடிய கருத்தை காமேனீ
சேர்த்துக் கொண்டார்: "பாதுகாப்பின்மை மற்றும் ஒழுங்கீனத்தின்பால் சமுதாயத்தை தள்ளக்கூடிய எவரும் ஈரானிய
நாட்டுப் பார்வையில், அவர் யாராக இருந்தாலும், வெறுக்கப்படத் தக்கவர்."
இரு திறத்தாரின் அறிக்கைகள், "உயரடுக்கின்" ஒற்றுமைக்கு" அவர்கள் விடுக்கும்
அழைப்புக்கள் ஆகியவை ஈரானிய ஆளும்வர்க்கத்தில் அனைத்து பிரிவுகளிலும் பகிர்ந்துகொள்ளப்படும் அச்சத்தை
பிரதிபலிக்கின்றன; இதன் உட்பூசல்கள் ஈரானிய தொழிலாளர்களிடையேயும் ஒடுக்கப்பட்ட மக்களிடையேயும் தங்கள்
நலன்களுக்காக போராட்டத்தில் தலையிடக்கூடிய சூழலை ஏற்படுத்திவிடக்கூடும் என்ற உணர்வே அது.
அஹ்மெதிநெஜாட் இன்னும் அரசியல் ஆளும்வர்க்கத்திற்குள் இருக்கும்
"சீர்திருத்தவாதிகள்" என்னும் பிரிவுகளை சமரசத்திற்கு உட்படுத்த முயல்கின்றார். அதற்காக முக்கிய மந்திரிசபை
மாற்றத்தை கொண்டுவரவும் முயல்கிறார்; மேலும் நாட்டின் உயரடுக்கு மற்றும் அறிவுஜீவிகளுக்கு ஒரு முறையீடும்
ஜனாதிபதியின் வலைத்தளத்தில் போடப்பட்டுள்ளது. அதில் "வெவ்வேறு நிர்வாக மட்டங்களில் ஒத்துழைக்கத்
தயாராக இருப்பவர்கள் பணிசெய்ய வரவேற்கப்படுவர்." என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கையை செயல்படுத்தும் முயற்சிகளில் முதலாவதாக இருப்பது பூசலை
இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. அஹ்மதிநெஜாட் பண்பாட்டு மரபியம், கைவினைப்பொருட்கள், சுற்றுலாப் பிரிவு
ஆகியவற்றிற்கு தலைவராக இருந்த தன்னுடைய மகனின் மாமானரான எஷ்பன்டியர் ரகீம் மஸாயி இனை தன்னுடைய
புதிய முதல் துணை ஜனாதிபதியாக நியமித்துள்ளார். இந்த நியமனம் அஹ்மதிநாஜேட்டின் சொந்த
ஆதரவாளர்களிடையே கூட பெரும் கோபத்தை தூண்டியுள்ளது. அவர்கள் கடந்த ஆண்டு மஸாயி கொடுத்த
அறிக்கையான "ஈரான், இஸ்ரேலிய மக்களுடன் கூட நட்புதான்" என்பதை மறந்துவிடவில்லை.
ஈரானின் ஆங்கில மொழி செய்தி ஊடக தொலைக்காட்சி திங்களன்று மஸாயி
சீற்றமான எதிர்ப்புக்களை அடுத்து இராஜிநாமா செய்துவிட்டார் என்று தகவல் கொடுத்திருக்கையில், அவருடைய
சொந்த வலைத்தளம் அந்த தகவலை "ஒரு பொய்...அரசாங்கத்தின் விரோதிகளால் பரப்பப்பட்டது." என்று
அழைத்துள்ளது.
"சீர்திருத்தவாத" இயக்கம் என அழைக்கப்படுவது ரப்சஞ்ஜானியின் மீது
கொண்டிருக்கும் நம்பிக்கை அதன் உண்மை செயல்பட்டியல் பற்றி உறுதியாகக் கூறும் அடையாளம் ஆகும். மெளசவியின்
மிக முக்கிய அரசியல் ஆதரவாளராக செயல்பட்டு, அவருடைய பிரச்சாரத்திற்கு கணிசமான வசதிகளை கொடுத்த
ரப்சஞ்ஜானியின் பங்கு ஜனாதிபதித் தேர்தல்களில் மையப் பிரச்சினையாயிற்று. ஈரானிய அரசியலில் பரந்த அளவில்
ஏற்கப்பட்டுள்ள மிக ஊழல் வாய்ந்த நபர் என்பவருடன் தன்னுடைய விரோதிக்கு பிணைப்புக்கள் இருந்ததை அஹ்மதிநாஜேட்
திறமையுடன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.
2005ல் ஜேர்மன் செய்திதாள்
taz ரப்சஞ்சனி
மற்றும் அவர் குடும்பத்தை பற்றி அப்பட்டமான தொகுப்பைக் கொடுத்தது:
" கடவுளின் மனிதர் எனப்படுபவர்,
முன்பு ஒரு எளிய வாழ்வை நம்பிக்கையாளர்களுக்கு இறைவன் மீட்பார் என்ற கருத்தை கொடுத்து நடத்தி வந்தவர்,
இப்பொழுது ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலான சொந்தைக் கொண்டிருக்கிறார். இவர் ஈரானின்
மிகப் பெரிய பிஸ்தானியன் கடலை ஏற்றுமதியாளர் ஆவார். அவருடைய குடும்பத்துடன் அவர் பல சுற்றுலா
மையங்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொந்தமாக வைத்துள்ளார்.
அவருடைய மூத்த மகன் மோசென் தெஹ்ரான் நிலத்தடி
இரயில்பாதை அமைக்கிறார். அவருடைய இரண்டாவது மகன் மெஹ்தி இயற்கை எரிவாயு, எண்ணெய் வணிகத்தில்
உள்ளார்; அவருடைய கடைசி மகன் பெரும் விவசாய நிலங்களை வைத்துள்ளார்; அவருடைய இரு மகள்கள்
Faezeh, Fatima
இருவரும் ஈரானிலும் வெளிநாடுகளிலும் சொத்து, நிலங்கள் வணிகத்தில் தீவிரமாக உள்ளனர். இவருடைய அண்ணன்,
தம்பியின் மகன்கள், மகள்கள் உள்நாட்டு கார்த் தொழிலில் கணிசமான பங்கைக் கொண்டுள்ளனர், அதைத்தவிர
பிஸ்தானியன்,
குங்குமப்பூ ஏற்றுமதியில் பெரும்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர்.
வாகனங்கள் இறக்குமதி, காகித இறக்குமதி, இயந்திரங்கள் இறக்குமதி ஆகியவற்றிலும் செல்வாக்கு உண்டு. ஈரானின்
கறுப்புச் சந்தையின் பெரும் பகுதி ரப்சஞ்ஜானி குடும்பக்குழுவின் கட்டுப்பாட்டிற்குள்தான் உள்ளது."
ரப்சஞ்ஜானி மற்றும் மெளசவியின் முக்கிய ஆதரவாளர்கள் ஈரானிய மக்களின்
ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் பற்றிய கவலையினால் உந்துதல் பெறவில்லை. மாறாக அவர்கள் இன்னும்
விரைவான முறையில் தடையற்ற சந்தைக் கொள்கைகள் வரவேண்டும், வெளிநாட்டு மூலதனத்திற்கு நாடு
திறந்துவிடப்படவேண்டும், வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகள் வேண்டும் என்பவர்களாவர். இவை அனைத்தும்
தங்கள் சொந்த சொத்தை விரிவாக்கம் செய்வதற்கு வசதியளிக்கும் என கருதுகின்றனர். ஈரானிய தொழிலாளர்
தொகுப்பின் பரந்த பிரிவை எதிர்கொண்டுள்ள நிலைமை பற்றி அவர்கள் பொருட்படுத்தாத தன்மை அஹ்மதிநெஜான்
கொண்டு வந்த குறைந்தபட்ச சமூக நல திட்டங்களுக்கு அவர்கள் காட்டும் மறைக்கப்படாத இழிவுணர்வில்
வெளிப்படுகிறது; அவற்றை அவர்கள் வளங்களை வீணடித்தல் என்றே நினைக்கின்றனர்.
வாஷிங்டன் இத்தகைய எதிர்ப்பிற்கு ஆதரவு கொடுப்பது இப்பகுதியில் அமெரிக்க
மூலோபாய நலன்களுக்கு கூடுதலான ஆதரவு தரும் ஈரானிய ஆட்சி மாற்றத்தை தன் ஆதாயத்திற்காக பெறுவதாக
உள்ளது. இப்பகுதியில் அமெரிக்கா இன்னும் இரு போர்களை நடத்திவருவதுடன், அதே நேரத்தில் ஈரானை
அமெரிக்கத் தளத்தை கொண்ட நாடுகடந்த நிறுவனங்களின் நிதிய நலன்களுக்கு திறந்துவிட முனைகின்றது.
வர்க்க அடிப்படையில், ரப்சஞ்சஜானியை சூழ்ந்துள்ள சக்திகள் ஈரானிய சமூகத்தில்
மிகப் பின்தங்கிய தட்டுக்களைத்தான் பிரதிபலிக்கின்றன. இந்த சக்திகள் வலுப் பெறுவது, ஈரானிய தொழிலாள
வர்க்கத்திற்கும், ஒடுக்கப்படுபவர்களுக்கும் தீவிர ஆபத்தை முன்வைக்கின்றன.
அமெரிக்கச் செய்தி ஊடகம், ரப்சஞ்சஜானியின் உரையை "வாழ்க்கையில் ஒருமுறை
வரவேற்கூடிய உரை" என்று பாராட்டிய நியூயோர்க் டைமஸின் தலைமையில், ஈரானிய ஆளும்
வட்டங்களில் இருக்கும் வெளிப்படையான மாற்றத்தை மறைக்க முடியாத களிப்புடன் வரவேற்றுள்ளது. எதிர்த்தரப்பை
"ஜனநாயக" இயக்கம் என்று வர்ணித்துள்ள அனுபவம் வாய்ந்த அமெரிக்க நலன்களை காக்கும் செய்தித்துறையினர்,
ரப்சஞ்ஜானி தொடரும் திட்டத்தின் மூலோபாய விளைவுகள் பற்றி நன்கு அறிந்தவர்கள் ஆவர்.
இதைத்தவிர ரப்சஞ்ஜானியின் உரைக்கு
Nation ஏட்டின்
விடையிறுப்பு வந்துள்ளது; இது அமெரிக்காவின் முன்னாள் குட்டி முதலாளித்துவ இடது வட்டங்களின் முக்கிய குரல்
ஆகும்.
ஈரான் பற்றி தன்னுடைய சமீபத்திய கட்டுரையில் ஏட்டின் அளிப்பு ஆசிரியர்,
வெளியுறவு கொள்கை மற்றும் தேசியப் பாதுகாப்பில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்
(பார்க்கவும்:
"தெஹ்ரானில் நேஷன் உடைய நபர்: யார் இந்த ரொபேர்ட்
ட்ரேபுஸ்?),
ரோபர்ட் ட்ரேபுஸ், தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் எனக்
கூறும் அமெரிக்க போக்கிற்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்று கூறும் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் போல்
வலதுசாரி குறைகூறுபவர்களுக்கு எதிராக ஒபாமா நிர்வாகத்தின் ஈரான் கொள்கை பற்றி ஆதரவு கொடுக்கும்
விதத்தில் எழுதுகிறார். இந்த விவாதம் மூலோபாயம் என்று இல்லாமல் "ஆட்சி மாற்றத்தில்" உறுதியாக இருக்கும்
இரு திறத்தாருக்கும் தந்திரோபாயம் பற்றியதாகும்.
"இந்த வாரம் வெளிவிவகார செயலாளர் கிளின்டனால் மீண்டும் வலியுறுத்தப்பட்ட
ஒபாமாவின் கொள்கை அஹ்மதிநெஜாட்டிற்கு சட்டபூர்வதன்மையை கொடுக்க "விரைவது" அல்ல என்று ட்ரேபுஸ்
எழுதுகிறார். "இராஜதந்திர முறையில் தனிமைப்படுத்துதல், இன்னும் பொருளாதாரத் தடைகள், இராணுவ
அழுத்தம், போர் என்பற்றிற்குப் பதிலாக ஒபாமா ஈரானை நாடுகளின் கூட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்று
விழைகிறார். இந்த மூலோபாயத்தை ஒட்டித்தான் ஈரானில் அது எதிர்ப்பிரிவினருக்கு ஆதரவு கொடுத்தது. இவ்
எதிர்ப்பிரிவினர் மெளசவியை ஈரானின் தனிமைப்பட்டிருத்தலை அகற்றுவதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்தியது மற்றும்
பரஸ்பர நலன்களுக்காக அமெரிக்காவுடன் மரியாதையுடன் நடந்து கொள்ள ஏற்பாடு செய்ய பயன்படுத்த
பார்க்கின்றனர்."
இதைவிடத் தெளிவாக ஏதும் இருக்க முடியாது.
Nation ஒபாமாவிற்கு
ஆதரவு கொடுப்பதற்கு காரணம் அவர் ஈரானில் ஆட்சி மாற்றம், வாஷிங்னுடன் பரஸ்பர நலன்களின் அடிப்படையில்",
"கெளரவமாக நடந்து கொள்ளுவதை" உறுதிப்படுத்தும் ஒரு தலைமையை கொண்டுவருதல் என்னும் கூடுதல் புத்திசாலித்தன
கொள்கையை தொடர்வதாக அது நினைக்கிறது.
எவர்களுடைய பரஸ்பர நலன்கள் என்று வாசகர்கள் கேட்கலாம்? தெளிவாக இவை
ஒன்றும் ஈரான் அல்லது அமெரிக்காவில் இருக்கும் தொழிலாள வர்க்கத்தினுடையது அல்ல; மாறாக ரப்சஞ்ஜானி
போன்றவர்களின் இலாப நலன்கள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களாகும்.
இந்த அமெரிக்க நலன்கள் வாஷிங்டன் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில்
வாஷிங்டன் இராணுவக் குறுக்கீடுகளை தொடர ஈரானின் நெருக்கமான ஒத்துழைப்பு வேண்டும் என்பதையும் உள்ளடக்கியுள்ளன.
ஈரானிய நிகழ்வுகள் மத்தியதர வர்க்க அடுக்குகளுக்கு முக்கியமான கருவியாக பயன்பட்டுள்ளன. இந்த அடுக்குகள்தான்
"இடது" என்று காட்டிக் கொண்டு புஷ் நிர்வாகத்தின் கீழ் இருந்த அமெரிக்க கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன,
இப்பொழுது ஒபாமாவின் கீழ் ஏகாதிபத்தியப் போரை தழுவி நிற்கின்றன.
ஈரானில் இருக்கும் அரசாங்க நெருக்கடி ஈரானிய தொழிலாள வர்க்கத்திற்கு தீவிர
ஆபத்துக்களை முன்வைக்கின்றது. வாஷிங்டனால் முடுக்கிவிடப்படும் ஏகாதிபத்தியம் மற்றும் வெளிநாட்டு மூலதனத்தை
நோக்கிய திருப்பம் என்பது தவிர்க்கமுடியாமல் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரஙக்கள் மற்றும் அடிப்படை
உரிமைகள் மீது தீவிரத் தாக்குதல் என்ற பொருளைத் தரும்.
ஈரானிய தொழிலாளர்கள் தங்கள் வர்க்க நலன்களை பாதுகாக்கவோ, அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் திட்டங்களை தகர்க்கவோ ரப்சஞ்ஜானியின் "சீர்திருத்தப்பிரிவு" என்று அழைக்கப்படுபவற்றுடனோ
அல்லது சொந்தமாக தங்களையே "கொள்கை வாதிகள்" எனக் கூறிக்கொள்ளும் காமேனி, அஹ்மதிநாஜேட்டின்
பிரிவின் பின்னேயோ நிற்க முடியாது. அரசியலில் தன்னுடைய வலிமையைத் திரட்டிக்கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களை
ஒன்றுபடுத்துவதின் மூலம்தான் ஈரானிய தொழிலாள வர்க்கம் உண்மையான ஜனாநாயக, சமூக உரிமைகளை சாதிக்க
இயலும். இதற்கு உலகந்தழுவிய சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர் அரசாங்கம்
அமைப்பதற்கான போராட்டமும் மற்றும் ஈரான் சோசலிசத்திற்கு மாறவதும் அவசியமாகவுள்ளது. |