World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்France: Workers facing mass layoffs threaten to blow up plants பிரான்ஸ்: ஏராளமான பணிநீக்கங்களை எதிர்நோக்கும் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை தகர்த்துவிடுதவதாக அச்சுறுத்தல் By Alex Lantier ஆலைகள் மூடப்படக்கூடும் என்ற அச்சம் இருக்கும் பல தொழிற்சாலைகளில் பிரெஞ்சு தொழிலாளர்கள் தங்கள் ஆலைகளை சக்தி வாய்ந்த வெடிபொருட்களை பயன்படுத்தி தகர்த்துவிட இருப்பதாக அச்சுறுத்தியுள்ளனர். Chatellerault என்னும் Toursக்கு தெற்கே இருக்கும் 36,000 பேர் கொண்ட தொழில்நகரத்தில் இருக்கும் New Fabris கார் உதிரிப்பாக விநியோக ஆலையில், தொழிலாளர்கள் மின்சார வயர்களைச் சுற்றி எரிவாயு கலங்களை (gas canisters) வைத்துள்ளனர். New Fabris' உடைய இரு முக்கிய வாடிக்கை கார்த்தயாரிப்பு நிறுவனங்களான Renault மற்றும் PSA Peugeot-Citroen இலிருந்து 30,000 யூரோக்கள் வேலைநீக்க ஊதிய தொகையை கோரியுள்ளனர். ஜூலை 31ம் தேதிக்குள் பணம் கொடுக்கப்படவில்லை என்றால் எரிவாயுகலன்கள் வெடிக்க வைக்கப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.PSA, Renault இரண்டும் New Fabris மூடப்படுவதை தூண்டும் வகையில், "அவை கொடுத்த வந்துள்ள உற்பத்தி அளிப்பாணைகளை (Orders) மிருகத்தனமாக, முன் எச்சரிக்கை ஏதும் இல்லாமல் குறைத்துவிட்டன" என்று ஆலை நிர்வாகி Pierre Reau கூறினார். New Fabris உற்பத்தியில் 90 சதவிகிதமான அதனது வணிகத்திற்கு உற்பத்தி அளிப்பாணைகளை கொடுத்த பிறகு அவை தங்கள் அளிப்பாணைகளை (Orders) திடீரென இந்த வசந்த காலத்தில் 80, 30 என்று முறையே குறைத்துவிட்டன.Lyon ல் உள்ள வணிக நீதிமன்றம் New Fabris ஐ ஜூன் 16 முதல் மூடிவைத்துள்ளது. ஆலையில் இருக்கும் 366 தொழிலாளர்களும் வேலைகளை இழக்க உள்ளனர்.இந்த முடிவு கார்த் தயாரிப்பாளர்களின் திமிர்த்தனத்தின் உருவகமாக உள்ளது. Renault, Peugeot இரண்டும் ஜனவரி மாதம் அரசாங்கத்தின் பிணை எடுப்பு பொதியில் இருந்து 6 பில்லியன் யூரோக்களை பெற்றுக் கொண்டனர்; அதற்கு ஈடாக வேலைகளை காப்பாற்றுவதாகவும் தொழில் நடவடிக்கைகளை தொடர்வதாகவும் உறுதி கொடுத்தனர். Chautellerault வரும் ஆண்டு 2,400 வேலைகளை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CGT (General Confederationof Labour பொது தொழிலாளர் கூட்டமைப்பு) யின் உள்ளூர் பிரிவு ஜூலை 7ம் தேதி 150 New Fabris தொழிலாளர்கள் மேற்கு பாரிஸ் புறநகரத்தில் இருக்கும் Poissy பகுதியில் Peugeot தலைமையகத்திற்கு வெளியே பஸ்ஸில் வந்து எதிர்ப்பு தெரிவிக்க முயன்றனர்; அவர்கள் Porte-de-Poisse ஆலையில் இருக்கும் Peugeot தொழிலாளர்களுடன் பேசவும் முயன்றனர். ஆனால் கலகப் பிரிவு போலீசின் (CRS) பெரும் பிரிவு ஆலையையும் Poissy ன் பெரும்பாலான பிரிவுகளையும் தடுத்து வைத்திருந்தது மட்டும் இல்லாமல் New Fabris, Peugeot தொழிலாளர்களுக்கு இடையே விவாதம் நடக்க முடியாமல் தடையும் செய்து விட்டனர்.ஆலையை மின்சார வயர் மூலம் எரிவாயுவினால் வெடிக்கச் செய்யும் முடிவு பற்றி கேட்கப்பட்டதற்கு ஒரு New Fabris தொழிலாளி விளக்கினார். "இயந்திரங்கள் மற்றும் உற்பத்திசெய்து முடிக்கப்பட்ட பொருட்களுமே எங்கள் ஒரே பேரத்திற்கான பொருட்களாகும்." தொழிலாளர்கள் ஆலையில் இருக்கும் பொருட்களின் மதிப்பு 3 முதல் 4 மில்லியன் யூரோக்கள் வரை இருக்கலாம் என்று கூறுகின்றனர். வட்டார செய்தித்தாள் La Nouvelle Republique ஜூலை 18ம் தேதி, New Fabris தொழிலாளர்களும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் Billancourt இலுள்ள ரெனோல்ட்டின் தலைமையகத்திற்கு வந்தனர் என்று தகவல் கொடுத்தது. ஆனால் ரெனோல்ட் பதவிநீக்கத் தொகையாக 3,300 யூரோக்களை மட்டுமே கொடுக்க முன்வந்தது. தொழிற்துறை மந்திரி Christian Estrosi, New Fabris தொழிலாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார். பாரிஸுக்கு அருகில் இருக்கும் தொடர்புகள் நிறுவனமான Nortel, Chateaufort ஆலையில் உள்ள தொழிலாளர்கள் ஜூலை 14 அன்று எரிவாயு கலங்கள் மூலம் ஆலையை தகர்த்துவிடுவதாக அச்சுறுத்தினர். இந்த ஆலை மே 28 அன்று நிறுத்தி வைக்கப்பட்டு, அதற்கான பொறுப்பு Ernst & Young என்னும் நிதியசேவைகள் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது. அதன் ஊழியர்கள் Chateaufort தொழிலாளர்களை சந்திக்க மறுத்தனர். எரிவாயுக்கலம் மின்வயரில் சுற்றப்பட்டு ஆலையை தகர்த்தல் என்பது தொழிற்சங்க பிரதிநிதிகளால் அன்றி தொழிலாளர்களால் செய்யப்பட்டுள்ளது என்று Le Monde பத்திரிகை கூறியுள்ளது. ஆலையின் CFTC தொழிற்சங்க பிரதிநிதியான கிறிஸ்டியான பெரன்பார்க் ஐ Le Monde பேட்டி கண்டது. அவர் கூறியது: "நாங்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்ல. நாங்கள் நெருக்கடியில் இருந்து வெளியேற முயல்கிறோம்." பெரன்பாக் ஆலைமூடலை தூண்டும் விதத்தில் நிறுவனத்தின் மையக் கணக்குகளில் இருந்து கனடாவில் இருக்கும் கணக்குகளுக்கு 14 மில்லியன் யூரோக்களை நோர்ட்டெல் மாற்றியது என்றார். ஜூலை 15ம் தேதி, தான் Ernst & Young பிரதிநிதிகளை நோர்ட்டெல் தொழிலாளர்களுடன் பேசுவதாக Estrosi அறிவித்தவுடன் தொழிலாளர்கள் எரிவாயு கலத்தை அகற்றிவிட்டனர். Nortels, Chateaufort செயற்பாடுகளை "வலுவிழக்கச் செய்ய" தான் விரும்பவில்லை என்றும் "நெருக்கடியைக் கடக்கும் வரை தேவையான அனைத்துப்பொருட்களும் இங்கு உள்ளன என்று தான் நினைப்பதாகவும்" அவர் கூறினார். Bordeaux க்கு அருகே Faullet ல் வாகனங்கள் உதிரிப்பாக உற்பத்தி நிறுவனமான JLG ஒரு ஒற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் வேலைநிறுத்தத்தை சமீபத்தில் வெளியேற்றப்பட்ட சக தொழிலாளர்கள் 53 பேருக்காக நடத்தினர். அவர்களும் ஆலையில் இருக்கும் பொருட்களை தொழிலாளர்களுக்கு வேலைநீக்க ஊதியம் வழங்கப்படவில்லை என்றால் எரிவாயுக் கலங்கள்மூலம் வெடித்து தகர்த்துவிடுவதாக அச்சுறுத்தியுள்ளனர். ஜூல் 15 அன்று JLG நிர்வாகம் 16,000 யூரோக்கள் பணிநீக்க தொகை கொடுப்பதாக ஒப்புக் கொண்டது; ஆனால் வேலைநிறுத்ததில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அதை நிராகரித்து 30,000 யூரோக்கள் கேட்கின்றனர்.JLG நிர்வாகம் 30,000 யூரோக்கள் பணிநீக்க ஊதியத் தொகையை கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளதாக நேற்று தகவல்கள் வந்துள்ளன.இத்தகைய நிகழ்வுகள் வெடிக்கும் தன்மையுடைய அரசியில் நிலைமை அபிவிருத்தியடைந்து வருவதற்கு சான்றாக உள்ளன. ஏனெனில் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி பிணை எடுப்புக்களை பெற்ற நிறுவனங்கள், தங்கள் பைகளை தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் நிரப்பிக் கொண்டுள்ளன. தொடர்ச்சியாக ஆலைகளுக்கு வெடிவைக்கும் அச்சுறுத்தல், இந்த வசந்த காலத்தில் "முதலாளிகளை பிடித்துவைத்த" அலைக்கு பின்னர் வந்துள்ளது; பணிநீக்க அச்சுறுத்தல்கள் இருந்த இடங்களில் நிர்வாகிகளை பிணைக்கைதிகளாக தொழிலாளர்கள் வைத்துவிடுவதாக அச்சுறுத்தினர். Ifop கருத்துகணிப்பிடும் அமைப்பு தொழிலாளர்கள் தமது முதலாளிகளை தடுத்துவைப்பதை 63% இனர் விளங்கிக்கொள்வதாகவும், 30% இனர் அதனை நேரடியாக ஆதரிப்பதாகவும் அறிந்துள்ளது. அரசாங்கம் மிகவும் செல்வாக்கை இழந்த நிலையில் உள்ளது. சமீபத்திய Ifop கருத்துக் கணிப்பிற்கு பதிலளித்தவர்களில் 59% இனர் பழைமைவாத ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் கொள்கைகளை நிராகரித்ததாக கூறுகின்றன. தொழில்துறை மந்திரி Estrosi ஆலைகளை வெடித்துத் தகர்ப்பதாக தொழிலாளர்கள் விடுக்கும் அச்சுறுத்தலை "கெளரவமற்ற நடத்தை", இழிவுடன் நோக்க வேண்டியது என்று குறை கூறியுள்ளார். உண்மையில் கெளரவமற்ற செயல்கள் அரசாங்கத்துடையதுதான். அதுதான் கணக்கிலடங்கா பில்லியன்களை முக்கிய வங்கிகள், பெருநிறுவனங்களின் கருவூலங்களில் திணித்து நாடு நெடுகிலும் ஆலைகளை மூடவும் அனுமதித்துள்ளது. தொழிலாளர்கள் தங்கள் வேலைகள் மற்றும் ஆலைகளைக் காக்க போராடாமல், மாறாக அவர்கள் ஙேலைநீக்க தொகைக்கு பேரம் பேசும் கையாலாகாதநிலையில் இருந்து ஆலைகளை தகர்ப்பதாக அச்சுறுத்துகின்றனர் என்றால், அதற்கு காரணம் அரசியல் அளவில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதுதான். வலது அல்லது "இடது" எப்படி இருந்தாலும் உத்தியோகபூர்வ கட்சிகள் எதுவும் முழுத் தொழிலாள வர்க்கமும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளுவதற்கு அரசியல்ரீதியான ஒரு சுயாதீன வேலைத்திட்டத்தை கொள்ள வேண்டும் என்ற முன்னோக்கை முன்வைக்கவில்லை. அதாவது அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தொழில்துறை மற்றும் வேலைகள் மறுகட்டமைக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்று பாரிய அரசாங்க பிணை எடுப்புக்களால் வங்கிகளுக்கு கொடுக்கப்படுகின்ற சமூக வளங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை முன்வைக்கவில்லை. பிரெஞ்சு முதலாளித்துவ "இடது", முக்கியமாக சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த 30 ஆண்டுகளில் தொழில்துறை தகர்ப்பில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. அரசாங்கத்திற்கு உள்ளே அல்லது வெளியே இருந்தபோதிலும் அவை அதைத்தான் செய்துள்ளன. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அவர்கள் விடையிறுப்பு சார்க்கோசி திட்டமிட்ட வங்கிப் பிணை எடுப்பில் சிறு திருத்தங்களை கூறுவது மட்டுமே ஆகும். ஒரு ஒருநாள் தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்கள் இந்த வசந்த காலத்தில் நடைபெற்றதற்கு முன்பு வெளியிட்ட கூட்டு அறிக்கை ஒன்றில் இருந்த அவர்களுடைய திட்டங்கள் "தீவிர இடது" கட்சிகளால் இணைந்து கையெழுத்திற்கு உட்பட்டன. அவற்றுள் Nouveau Parti Anti-capitaliste என்னும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) யும் அடங்கியிருந்தது. முதலாளித்துவத்தின் இடது திட்டங்களில் பங்கு பெறும் தொழிற்சங்கங்களும் வேண்டுமென்ற இலக்கு வைத்துள்ள ஆலைகளில் இருக்கும் தொழிலாளர்களை தனிமைப்படுத்தி விட்டன. பிரெஞ்சு கார்த்தயாரிப்பு தொழில்துறையில் இருக்கும் நெருக்கடி சிறந்த உதாரணம் ஆகும். தொழிற்சங்கங்கள் சமீபத்திய ஆண்டுகளில் அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து, சமூக எதிர்ப்புக்களுக்கான எதிர்ப்பை சிதைத்துவிடும் வடிவமைப்பை கொடுத்த விதத்தில் அரசாங்க ஊழியர்களின் பயனற்ற ஒருநாள் வேலைநிறுத்தங்களைத்தான் அமைத்துள்ளன. ஆனால் நெருக்கடியையும், கார்த்தொழிலின் வீழ்ச்சியையும் நிறுத்துவதற்கு பரந்த வேலைநிறுத்த நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, பொருளாதார நெருக்கடி ஏற்படுதவதற்கு முன்பே, கார்த்தயாரிப்பு பிரான்சில் விரைவாகச் சரிந்து கொண்டிருந்தது. இந்த ஆண்டின் உற்பத்தி எண்ணிக்கை கடந்த ஆண்டின் ஏற்கனவே குறைந்து விட்ட 2.57 மில்லியன் கார்களில் இருந்து 40 சதவிகிதம் குறைந்துவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தாங்களே தங்களை "சோசலிஸ்ட்டுக்கள்" என்று அறிவித்துக் கொண்டிருக்கும் பிரான்சின் அரசியல் நடைமுறையில் அமைப்புக்கள் பெருகி இருந்தாலும், பிரான்சில் தொழிலாள வர்க்கக் கட்சி என்று ஏதும் இல்லை. குறிப்பாக "தீவிர இடது" கட்சிகள் தொழிற்சங்கங்களுக்கு தங்கள் ஆதரவை தொடர்ந்து கொடுத்துவருவதுடன் சார்க்கோசியின் கொள்கைகளுக்கு எதிராக அரசியல் போராட்டத்திற்கு அழைப்பு விடவும் மறுத்து விட்டன. அதற்கு சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் உடைத்துக் கொள்ள வேண்டும். தற்போது கம்யூனிஸ்ட் கட்சியுடன் 2010 பிராந்திய தேர்தல்களில் ஒருவேளை தேர்தல் உடன்பாடுகளுக்காக பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) அதன் வர்க்க சார்பை ஜூன் 17 வெளியிட்ட அறிக்கையில் சற்றே காட்டியுள்ளது. "பணிநீக்கங்கள்: அவசர ஒருங்கிணைப்பு" என்ற தலைப்பில் அந்த அறிக்கை உள்ளது. தீவிர செயல்பாடு வேண்டும் என்பது போல் குழப்பத்துடன் இருக்கும் தலையங்கத்தின் கீழ் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், அது NPA தொழிலாள வர்க்கப் போராட்டங்களுக்கு அரசியல் தலைமை அளிக்கும் முன்முயற்சிகளில் ஏன் ஈடுபடவில்லை என்பதை முக்கியமாக விளக்கியுள்ளது. பல பணியிடங்கள் போராட்டங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டபின் NPA எழுதுகிறது: "இன்று முன்வைக்கவேண்டிய ஒரு திடமான முன்னோக்குகள் பற்றி விவாதிக்கும் நேரம் தொழிலாளர்களுக்கு வந்து விட்டது. ஆனால் அத்தகைய கூட்டம் வெறும் ஆணைகள் பிறப்பிப்பதின் மூலம் ஏற்பட்டு விடாது." வேலைநிறுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை பற்றி குறிப்பிட்டு அது கூறுவது: "NPA இன்று பிரான்சில் பணிநீக்கத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட 15 அல்லது அதற்கு அதிகமான நிறுவனங்களின் பிரதிநிதிகளைத் திரட்டி' NPA அழைப்பு' என்று ஒரு குடையின் கீழ் கொண்டுவரமுடியும். ஆனால் இது இவ்விதத்தில் நிகழ்வதில்லை." பிரான்சிலும் ஐரோப்பாவிலும் ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு வழிநடத்த அரசியல் கட்சி ஒன்றை தோற்றுவிப்பது மிக அவசரமான பணியாகும். சோசலிச சமத்துவக் கட்சியுடன் தொடர்பு கொள்ள இங்கு அழுத்தவும். |