World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா: இலங்கைSri Lankan SEP holds successful public meeting in Jaffna இலங்கை சோ.ச.க. யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமான பொதுக் கூட்டத்தை நடத்தியுள்ளது By our correspondents சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) "உலக பொருளாதார நெருக்கடியும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பும்" என்ற தலைப்பில் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஒரு வெற்றிகரமான கூட்டத்தை நடத்தியுள்ளது. வட இலங்கையின் தலைநகரான யாழ்ப்பாணம் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட நகராகும். நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பப் பெண்கள் உட்பட சுமார் 60 பேர் கலந்துகொண்டனர். ஆகஸ்ட் 8 அன்று யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்தல் நடக்கவுள்ள நிலைமையிலேயே இந்தக் கூட்டம் இடம்பெற்றது. அரசாங்கம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியை அடுத்து, தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் அதன் இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஒரு ஜனநாயக போர்வையை வழங்குவதன் பேரிலேயே யாழ்ப்பாண மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கடும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளின் காரணமாக, சோ.ச.க. அங்கத்தவர்களுக்கு கூட்டத்துக்கான தமது பிரச்சாரத்தை மட்டுப்படுத்திக்கொள்ள நேரிட்டது. ஆயினும் வேலைத் தளங்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ்ப்பாணத்தின் பிரதான பஸ் நிலையம் மற்றும் மீனவர்கள் மத்தியிலும் அவர்கள் சுமார் 2,000 துண்டுப் பிரசுரங்களையும் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரைகளையும் விநியோகித்திருந்தனர். அரியாலை, திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, மானிப்பாய், சங்கானை, வட்டுக்கோட்டை மற்றும் சுன்னாகம் போன்ற பிரதேசங்களை சூழவும் யாழ்ப்பாணத்திலும் சுமார் 300 போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. சுமார் 300,000 தமிழ் பொது மக்கள் தடுப்பு முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள வவுனியாவில் இருந்து உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர் ஒருவர், தொலை பேசி மூலம் கூட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பிரதான ஏ9 நெடுஞ்சாலையை இராணுவம் திறக்காமையினால் அவரால் கூட்டத்துக்கு வருகை தர முடியாமல் போனது. சோ.ச.க. மத்திய குழு உறுப்பினர் டி. அகிலன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். யுத்தத்தின் காரணமாக மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் சோ.ச.க. முதல்தடவையாக யாழ்ப்பாணத்தில் இந்தக் கூட்டத்தை நடத்துகிறது என அவர் விளக்கினார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியே சோசலிச சமத்துவக் கட்சியாகும். அதன் முன்னோடி இயக்கமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.), லங்கா சமசமாஜக் கட்சி ட்ரொட்ஸ்கிசக் கொள்கைகளை கைவிட்டு 1964ல் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்துக்குள் நுழைந்து கொண்டதற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தில் 1968ல் ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கையில் மிகவும் தெளிவாக வெளிப்பட்டுள்ள பூகோள முதலாளித்துவத்தின் ஆழமான
நெருக்கடி நிலைமையின் கீழேயே இந்தக் கூட்டம் நடைபெறுகின்றது என அகிலன் விளக்கினார். யுத்தத்தின் முடிவு
சமதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவராது. மாறாக, உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக
உரிமைகள் மீதான தாக்குதல்களையே உக்கிரமாக்கும். "முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் நெருக்கடியின் மத்தியில்
தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்யும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே,"
என அவர் தெரிவித்தார். பிரதான உரையாற்றிய சோ.ச.க. மத்திய குழு உறுப்பினர் மயில்வாகனம் தேவராஜா, உரையின் ஆரம்பத்தில் தெரிவித்ததாவது: "கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் தமிழர்-விரோத பாகுபாடுகளும் அடக்குமுறைகளும் தொடர்கின்றன. சுமார் 300,000 தமிழ் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தடுப்பு முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தொழிலாள வர்க்கத்தின் மீது பொருளாதார யுத்தம் ஒன்றை பிரகடனம் செய்துள்ளார். கட்டவிழ்ந்துள்ள உலக நெருக்கடியை புரிந்துகொள்ளாமல் இலங்கையில் அல்லது வேறு எந்த நாட்டிலும் நடப்பது என்ன என்பதை புரிந்துகொள்ள முடியாது." இரண்டு உலக யுத்தங்களையும் மாபெரும் பொருளாதார நெருக்கடியையும் விளைவாக்கிய முதலாளித்துவத்தின் பிரதான பொறிவை பேச்சாளர் சுட்டிக்காட்டினார். "இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர், ஒரு தொடர்ச்சியான ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளின் ஊடாக உலக பொருளாதாரத்தை ஸ்திரமாக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் பொறுப்பெடுத்தது. யுத்தத்தால் அழிக்கப்பட்ட ஏனைய ஏகாதிபத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது பரந்த பொருளாதார சக்தியாக விளங்கியதால் அவ்வாறு செய்வது சாத்தியமானது." அமெரிக்க பொருளாதார மேலாதிக்கம் நலிவுறத் தொடங்கிய நிலையில் 1970களில் யுத்தத்துக்குப் பிந்திய பொருளாதர ஒழுங்குகள் பொறிந்துவிழத் தொடங்கின என தேவராஜா விளக்கினார். "தனது சரிவில் இருந்து தலையெடுக்கும் ஒரு வழிமுறையாக உலகில் அதன் பூகோள மேலாதிக்கத்தை பேணுவதற்காக அதனிடம் மிச்சமுள்ள இராணுவப் பலத்தை பயன்படுத்த அமெரிக்கா முயற்சிக்கின்றது. எண்ணெய் வளம் நிறைந்த ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான ஆக்கிரமிப்புகள் இந்த முயற்சிகளின் பாகமே ஆகும்." குறிப்பாக வளங்கள் நிறைந்த மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் மூலோபாய குறிக்கோள்களை அபிவிருத்தி செய்வதை இலக்காகக் கொண்டே ஒபாமா நிர்வாகம் ஆப்கானிஸ்தான் மீதும் பாகிஸ்தான் மீதும் குவிமையப்படுத்தியுள்ளது என அவர் கூறினார். இலங்கை உட்பட தெற்காசியா, பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான பகைமையின் பிரதான அரங்கமாகியுள்ளது. "கடந்த 30 ஆண்டுகளாக, ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட இனவாத யுத்தத்தின் காரணமாக தமிழ் வெகுஜனங்கள் பெரும் துன்பங்களை அனுபவித்துள்ளனர். இந்த தமிழர்-விரோத யுத்தமானது தொழிலாள வர்க்கத்தை இனவாத வழியில் பிளவுபடுத்த பயன்படுத்தப்பட்டது. இராஜபக்ஷ அரசாங்கம் நாட்டை மீண்டும் யுத்தத்துக்குள் தள்ளிய போது, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உட்பட சகல பெரும் வல்லரசுகளும் தமது சொந்த நலன்களை அபிவிருத்தி செய்வதன் பேரில் கொழும்புக்கு ஆதரவளித்தன." என அவர் தெரிவித்தார். "புலிகளின் இராணுவத் தோல்வியானது அதன் தனியான தமிழ் முதலாளித்துவ அரசை ஸ்தாபிக்கும் முன்நோக்கின் வங்குரோத்துடன் சம்பந்தப்பட்டதாகும். தனது இலக்கை அடைவதற்காக புலிகள் அமைப்பு எப்போதும் ஏதாவதொரு பெரும் வல்லரசின் ஆதரவை எதிர்பார்த்தது. அவர்கள் கொழும்பு அரசாங்கத்தின் இனவாத பாகுபாடுகளுக்கு எதிராக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின், இந்திய மற்றும் சர்வதேச தொழிலாளர்களின் ஐக்கியத்துக்கு அழைப்புவிடுத்தது கிடையாது. தொழிலாள வர்க்கம் தொடர்பான இந்த வெறுப்பு, புலிகள் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றனர் என்ற உண்மையை கோடிட்டுக் காட்டுகிறது." யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா தேர்தல்களில் போட்டியிடும் எந்தவொரு கட்சியும் உழைக்கும் மக்களின் நலன்களை பாதுகாக்கவில்லை என தேவராஜா தெரிவித்தார். அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் வேலைத் திட்டத்தில் இருந்து மேற்கோள் காட்டினார். அது "வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்துக்குள் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சுயாட்சியை ஸ்தாபிக்கக்கூடிய அரசியல் தீர்வுக்கான திட்டமொன்றுக்கு" அழைப்பு விடுக்கின்றது. "இந்த 'அரசியல் தீர்வுக்கும்' தமிழ் மக்களின் அவசியத் தேவைகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மாறாக, அது தமிழ் முதலாளித்துவத்தின் சொத்துக்களை தக்கவைத்துக்கொள்ள கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டுக்கு வருவதையே இலக்காகக் கொண்டுள்ளது," என அவர் கூறினார். முன்னர் புலிகளின் ஊதுகுழலாள இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, இராஜபக்ஷ அரசாங்கத்துடன் இணங்கிப் போவதற்கு எதிர்பார்க்கின்றது. "அரசியல் தீர்வொன்றை" எட்டுவதற்காக இந்தியாவின் உதவி உட்பட சர்வதேச உதவிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் அழைப்பு விடுப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தக் கட்சி பலவித உலக மற்றும் பிராந்திய சக்திகளை முழுமையாக நம்பியிருக்கின்றது என அவர் தெரிவித்தார். அரசாங்க அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) தலைவருமான டக்லஸ் தேவானந்தாவை தேவராஜா மேற்கோள் காட்டினார். மோதல்களுக்கு பதிலாக அரசாங்கத்துடன் சினேகப்பூர்வமாக ஒத்துழைப்பதன் ஊடாக தமிழ் மக்களின் உரிமைகளை கட்சி வென்றெடுக்கும் என தேவானந்தா தெரிவித்திருந்தார். "இது அரசியல் துணுக்குகளை எதிர்பார்க்கும் இன்னுமொரு தமிழ் முதலாளித்துவக் கட்சி. அது தமிழ் மக்களுக்கு எதிரான இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்ததோடு இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுவையும் இயக்குகிறது. தமிழ் முதலாளித்துவத்தின் ஏனைய கட்சிகளில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் அடங்கும். கடந்த சில நாட்களாக இத்தகைய கட்சிகளை மக்கள் எதிர்ப்பதையே நாம் கேள்விப்பட்டோம். வெகுஜனங்களின் செலவில் கொழும்புடன் கொடுக்கல் வாங்கல் செய்ய எதிர்பார்க்கும் தமிழ் முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பகுதியும், அவை வஞ்சகமானவை மற்றும் இலாயக்கற்றவை என்பதை வெளிக்காட்டியுள்ளன," என தேவராஜா தெரிவித்தார். இலங்கையில் தமிழ் மக்களின் முழு அனுபவங்களும் சோ.ச.க. யின் அரசியல் முன்நோக்கை ஒப்புவித்துள்ளன என தேவராஜா தெரிவித்தார். யுத்தத்தின் தொடக்கத்தில் இருந்தே தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்குமாறு இடைவிடாது கோரியது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் சோசலிச சமத்துவக் கட்சியும் மட்டுமே ஆகும். முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக, தெற்காசியாவிலும் அனைத்துலகிலும் சோசலிச குடியரசு ஒன்றியங்களை ஸ்தாபிப்பதன் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசுக்காக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட அரசியல் போராட்டத்தின் ஊடாக மட்டுமே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை யதார்த்தமாக்க முடியும். சோ.ச.க. மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்நோக்கை உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக வாசிக்குமாறும் சோ.ச.க. யில் இணைந்து அதைக் கட்டியெழுப்புமாறும் அவர் அழைப்பு விடுத்தார். சோ.ச.க. அங்கத்தவர்களுடன் விடயங்களை கலந்துரையாட பின்னால் காந்திருந்த பலரும் சொற்பொழிவுகள் பற்றி உத்வேகத்துடன் பிரதிபலித்தனர். கட்சியின் நிதிக்காக 3,000 ரூபாவுக்கும் அதிகமான தொகை சேர்ந்தது. தொழில்நுட்ப அலுவலரான கனகரட்னம் விளக்கியதாவது: "பல இடங்களில் சோசலிசம் பற்றி இத்தகைய கூட்டங்களை நாம் ஒழுங்கு செய்ய வேண்டும். இந்தத் தேர்தல் மக்களுக்கு எதையும் கொண்டுவரப் போவதில்லை. மக்கள் அன்றாடம் அகதி முகாங்களில் உயிரிழப்பர். அவர்கள் அந்த முகாங்களில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும்." யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் பேசும் போது, "இவ்வாறு மேலும் பல கூட்டங்களை நடத்த நாம் ஆதரவளிப்போம். இந்த வலைத் தளம் ஒரு சிறந்த ஊடகம். ஆனாலும் யாழ்ப்பாணத்தில் 90 வீதமானவர்களுக்கு இணைய இணைப்பு கிடையாது. இவை பற்றி மக்களுடன் கலந்துரையாடுவதோடு உங்களது வேலைத்திட்டத்தை துண்டுப் பிரசுரங்கள் மற்றும் ஏனைய வெளியீடுகள் ஊடாக பிரசுரிக்க வேண்டும்," என்றார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்ததாவது: "இந்த உள்ளூராட்சி சபை தேர்தல் தேவையில்லை. 300,000 மக்கள் தடுப்பு முகாங்களில் உள்ளனர். இந்த நிலைமையில் இந்தத் தேர்தலால் யாருக்கு நன்மை?" "இந்தத் தேர்தலை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. பெரும்பாலான மக்கள் தடுப்பு முகாங்களில் உள்ளனர். [அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட] 24 மணித்தியால மீன்பிடி வார்த்தைகளில் மட்டும் நின்றுவிட்டது. அது நடைமுறையில் அமுல்படுத்தப்படவில்லை," என ஒரு மீனவர் மேலும் தெரிவித்தார். லங்கா சமசமாஜக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான ஏ.ஜி. முத்தையா பேசும் போது, "நான் அனைத்துலக சோசலிசத்தை நம்புகிறேன். சிறிமா பண்டாரநாயக்கவின் கூட்டணி அரசாங்கத்தில் சமசமாஜக் கட்சி இணைய முடிவு செய்த 1964ம் ஆண்டில், யாழ்ப்பாணத்தில் ஒரு கட்சிக் கூட்டம் நடந்தது. நானும் அதில் பங்குபற்றினேன். அந்தக் காட்டிக்கொடுப்பின் காரணமாக இன்று நாம் துன்பம் அனுபவிக்கின்றோம். அரசியலில் நான் ஆர்வம் இழந்திருந்த போதும், இந்தக் கூட்டத்தின் பின்னர் உங்களுடன் தொடர்பை பேண விரும்புகிறேன்," எனத் தெரிவித்தார். |