World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா: இலங்கைSri Lankan university students demand better facilities இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் சிறந்த வசதிகளைக் கோருகின்றனர் By Suranga Siriwardena and Kapila Fernando கொழும்பில் இருந்து 160 கிலோமீட்டர் தூரத்தில் பெலிஹுல்லோயவில் உள்ள சப்பரகமுவ பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 2,000 மாணவர்கள் ஜூலை 8 அன்று பல்கலைக்கழக வளாகத்தினுள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். விரிவுரை அறைகள், தங்குமிடங்கள், ஆய்வுக்கூடங்கள், உணவகம் மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகளுக்கான 16 கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். தரமான கல்விக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகள் பற்றாக்குறையை எதிர்த்து ஜூலை 1ம் திகதியில் இருந்தே வகுப்புக்களைப் பகிஷ்கரித்து வரும் சமூக விஞ்ஞான மற்றும் மொழிகள் பீட மாணவர்களுக்கு ஆதரவாகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தால் இலவசக் கல்வி அழிக்கப்படுவதற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்பின் அறிகுறியே இந்த போராட்டமாகும். 1995ல் ஸ்தாபிக்கப்பட்ட சபரகமுவ பல்கலைக்கழகத்தில் சுமார் 3,000 மாணவர்கள் உள்ளனர். பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக வசதிகள் பற்றாக்குறை தொடர்பாக மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்ப்பை வெளிப்படைத்திய பின்னரே 1990களின் நடுப்பகுதியில் சபரகமுவ உட்பட ஆறு பல்கலைக்கழகங்கள் திறந்துவைக்கப்பட்டன. இந்தப் புதிய பல்கலைக்கழகங்கள் ஏனைய தேவைகளுக்காக கட்டப்பட்ட கட்டிடங்களிலேயே அவசர அவசரமாக அமைக்கப்பட்டன. உதாரணமாக, சபரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகம் சமணல வெவ [சமணல ஆறு] மின்சார திட்டத்தில் சேவையாற்றிய தொழிலாளர்களுக்கான தங்குமிடமாகவே முதலில் பயன்படுத்தப்பட்டது. 2007 வரை, விஞ்ஞன சார்பு (Applied Science) மற்றும் விவசாய பீடங்கள், பிரதான பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புத்தளையில், ஒரு முறை வீட்டுத் திட்ட கண்காட்சிக்காகப் பயன்படுத்தப்பட்ட கைவிடப்பட்ட கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டு பல்கலைக்கழக தகுதி பெற்ற 100,000 மாணவர்களில் 20,000 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்தது. ஜூலை 8 அன்று, WSWS மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பின் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சபரகமுவ மாணவர்களை சந்தித்தது. சமூக விஞ்ஞான மற்றும் மொழிகள் பீட மாணவி சமந்தி, பல்கலைக்கழகத்தில் உள்ள நிலைமைகளைப் பற்றி சீற்றத்துடன் விளக்கினார். "எங்களது வகுப்பறைகள் கோழிக் கூடுகள் போல் உள்ளன. நாட்காலிகள் உடைந்துபோயுள்ளன. மாணவர்கள் ஒரு வகுப்பறையில் இருந்து இன்னொன்றுக்கு நாட்காலிகளை தூக்கிச் செல்ல வேண்டும். கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து விரிவுரையாளர்கள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் பேராசிரியர்கள் இங்கு கிடையாது. போக்குவரத்து வசதியின்மை மற்றும் தங்குமிடங்கள், அதே போல் தூரம் போன்ற காரணங்களால் அவர்கள் இங்கு வரத் தயங்குகிறார்கள். "பிரதான தங்குமிடங்கள் 'சமனல' மற்றும் 'சிங்கராஜ' என்ற பெயரில் இரண்டு உள்ளன. சமனல தங்குமிடத்தில் 48 மாணவர்கள் இருந்த போதும் இரண்டு குளியலறைகளே உள்ளன. ஒரு சிறிய அறையில் 8 மாணவர்கள் உள்ளனர் மற்றும் படிக்கும் அறைகள் கிடையாது. "2001ல் அமைச்சரவை புதிய கட்டிடங்களை அமைக்க இணங்கியதோடு 2006ல் அடிக்கல் நாட்டப்பட்ட போதிலும், இன்னமும் வேலை முடியவில்லை. அறைகள் பற்றாக்குறையின் காரணமாக, விஞ்ஞானம் சார்ந்த பீடங்களில் இரவு 9 மணிவரை விரிவுரைகள் நடப்பதோடு எங்களது பீடத்தில் இரவு 7 மணி வரை நடக்கின்றது. எங்களுக்கு மாதம் உபகாரச் சம்பளமாக 2,500 ரூபா [21.75 அமெரிக்க டொலர்] கிடைக்கின்றது. ஆனால், அது எங்களது உணவு செலவுக்குக் கூட போதாது. அரசாங்கம் இலவச கல்வியை வெட்டிச் சரித்துக்கொண்டிருக்கின்றது," என்றார். வடிவியல் (Geometrics) பீடத்தை சேர்ந்த இரண்டாம் ஆண்டு தமிழ் மாணவர் ஒருவர், பெளதீகவியலுக்கு ஆய்வுக் கூடம் இல்லை எனக் கூறினார். விரிவுரை அறைகள் பற்றாக்குறையின் காரணமாக, ஒரு பகுதி மாணவர்களை விரிவுரைக்கு அனுமதிப்பதன் பேரில் இன்னொரு பகுதி மாணவர்கள் கள ஆய்வுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். கணினி பகுதி இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. வடிவியல் துறை மாணவர் மேலும் தெரிவித்ததாவது: "பல்கலைக்கழகத்தால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஒரு வீடுதான் எங்களது தங்குமிடம். இவ்வாறு சுமார் 30 தங்குமிடங்கள் உள்ளன. எங்களில் ஆறுபேர் ஒரு அறையை பங்கிட்டுக்கொண்டுள்ளோம். ஆனால், சில அறைகளில் எட்டு அல்லது ஒன்பது பேர் இருக்கின்றனர். வரட்சிக் காலத்தில், தண்ணீர் பற்றாக்குறை ஒரு பெரும் பிரச்சினையாகும். ஏனைய சுகாதார வசதிகளும் கூட பற்றாக்குறையாக உள்ளது. "பல்கலைக்கழகத்துக்கு அவசர திட்டமொன்று அங்கீகரிக்கப்பட்ட போதிலும் நிதி பற்றாக்குறையின் காரணமாக அது இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை. யுத்தத்துக்கே அரசாங்கம் முன்னுரிமை கொடுத்தது. இதனாலேயே எங்களது பல்கலைக்கழகங்களில் வசதிகள் இவ்வளவு பற்றாக்குறையாக உள்ளன." ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும் பல்கலைக்கழக அதிகாரிகளும் மாணவர்களைத் தாக்குவதன் மூலமும் மற்றும் பொய் வாக்குறுதிகள் கொடுப்பதன் மூலமுமே மாணவர்களின் போராட்டங்களுக்கு பதிலளித்தனர். அக்டோபர் 2007ல், சபரகமுவவின் விஞ்ஞான சார்பு பீட மாணவர்கள் தொடர்ந்தும் புத்தளவில் இருப்பதற்கும் மற்றும் பெலிஹுல்லோயாவுக்கு பயணிப்பதற்கும் மறுத்தனர். ஆனாலும், அந்த பீடத்தை பிரதான பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் மறுத்துவிட்டனர். கொழும்பில் உள்ள பல்கலைக்கழக ஆணைக்குழு அலுவலகத்தின் முன்னால் மூன்று மாதங்கள் மாணவர்கள் சத்தியாக்கிரக போராட்டம் நடத்திய பின்னர், அவர்களை விரட்டுவதற்காக பொலிஸை அனுப்பிய இராஜபக்ஷ அரசாங்கம் மூன்று மாணவர்களை கைது செய்தது. பின்னர் இந்த பீடம் பிரதான வளாகத்துக்கு மாற்றப்பட்ட போதிலும், வசதிகள் பற்றாக்குறை தொடர்கின்றது. சிங்கள அதி தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி.) கட்டுப்படுத்தப்படும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் (ஐ.யூ.எஸ்.எஃப்), மாணவர்களின் போராட்டத்தை மட்டுப்படுத்தவும் அவர்களை தொழிலாள வர்க்கத்தில் இருந்து தனிமைப்படுத்தவும் தம்மால் முடிந்த சகலதையும் செய்கின்றது. சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் தலைவர் அனுஷ்க சுபுன் குமார WSWS க்குத் தெரிவித்ததாவது: "நாங்கள் ஐ.யூ.எஸ்.எஃப் உடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஐ.யூ.எஸ்.எஃப் உடன் சேர்ந்து நாங்கள் 'மாணவர்கள் அரசியல்' செய்கின்றோம்." மாணவர்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதில் தோல்வி கண்ட முன்னைய போராட்டங்களை விளக்குமாறு கேட்ட போது, "நாங்கள் தொழிலாளரின் அரசியலை செய்யவில்லை. நாங்கள் அதை செய்தால் எங்களால் மாணவர்களை வெற்றிகொள்ள முடியாது," என பதிலளித்தார். ஐ.யூ.எஸ்.எஃப் மற்றும் ஜே.வி.பி. தலைவர்கள், பல்கலைக்கழகங்களின் வறிய நிலைமைக்காக பல்கலைக்கழக அதிகாரிகளின் வீனடிப்பு மற்றும் மோசடிகளை சுட்டிக் காட்டுகின்றனர். இதே வாதத்தையே ஜே.வி.பி. யும் அதன் தொழிற்சங்கங்களும் முன் வைக்கின்றன. அதிகாரிகளின் மோசடிகளும் வீணடிப்புக்களாலேயே தொழிலாளர்களின் கோரிக்கைகளை அடைய முடியாமல் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர். இராஜபக்ஷ அரசாங்கம் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான அதன் இனவாத யுத்தத்துக்காக இராணுவச் செலவை பிரமாண்டமாக அதிகரிப்பதன் பேரில் நலன்புரி திட்டங்கள், மானியங்கள், கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கான நிதிகளை வெட்டித் தள்ளுகிறது என்ற உண்மையை இந்தக் கூற்றுக்கள் மூடி மறைக்கின்றன. ஜே.வி.பி. மற்றும் ஐ.யூ.எஸ்.எஃப் இராஜபக்ஷ ஆட்சிக்கு வருவதற்கு உதவியது மட்டுமில்லாமல் யுத்தத்துக்கு ஆதரவாகவும் கூச்சலிட்டன. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இராணுவ வெற்றி பெற்ற போதும், அரசாங்கம் ஆயுதப் படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றது. இந்தத் துருப்புக்கள் வடக்கு மற்றும் கிழக்கில் நிரந்தர ஆக்கிரமிப்புக்காகவும் மாணவர்களதும் தொழிலாளர்களதும் போராட்டங்களை நசுக்குவதற்கும் பயன்படுத்தபடவுள்ளன. அரசாங்கம் இப்போது உலக பொருளாதாரத்தினதும் இராணுவ செலவினதும் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதற்காக "தேசத்தைக் கட்டியெழுப்புதல்" என்ற பெயரில் "பொருளாதார யுத்தம்" ஒன்றை முன்னெடுத்துள்ளது. இலவசக் கல்வியை பாதுகாக்கவும் ஒழுக்கமான வசதிகளைக் கோரவும் மாணவர்கள் தமது போராட்டத்தை தொழிலாள வர்க்கத்துடன் இணைத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, இது ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அல்லாமல், சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதன் பேரில் முதலாளித்துவ அமைப்பை தூக்கி வீசி சமுதாயத்தை மறு ஒழுங்கு செய்வதை அடிப்படையாகக் கொண்ட ஒரு அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தின் பக்கம் திரும்புவதை அர்த்தப்படுத்துகிறது. இந்த முன்நோக்கை உலக சோசலிச வலைத் தளமும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்பும் மட்டுமே அபிவிருத்தி செய்கின்றன. |