:
இலங்கை
Sri Lankan government coerces detained doctors to recant
war casualty figures
இலங்கை அரசாங்கம் தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர்கள் யுத்த சேதம் பற்றி முன்னர்
வழங்கிய தரவுகளை மாற்றிக் கூறுமாறு அவர்களை நெருக்குகிறது
By Nanda Wickremasinghe
16 July 2009
Use this
version to print | Send
feedback
இலங்கை அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று வைத்தியர்களை ஜூலை 8
அன்று பத்திரிகையாளர் மாநாடு ஒன்றுக்கு அழைத்து வந்தனர். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான
யுத்தத்தின் கடைசி மாதங்களில் தொடுக்கப்பட்ட தாக்குதல்களின் போது, இராணுவ ஷெல் வீச்சுக்கள் மற்றும்
பொது மக்கள் கொல்லப்பட்டதற்கான கண்கண்ட சாட்சியாக இந்த வைத்தியர்கள் முன்னர் கூறியவற்றை மாற்றிக்
கூற வைப்பதற்கே அவர்கள் அங்கு கொண்டுவரப்பட்டனர். இந்த சகல நிகழ்வுகளும் இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள்
பற்றி குவிந்துவரும் ஆதாரங்களை கீழறுப்பதற்காக அரசாங்கத்தால் மேற்பார்வை செய்யப்பட்ட விவகாரமாகும்.
இந்த ஊடகவியலாளர் மாநாடு, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில்
பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்பட்டது. சுகாதார சேவையின் வன்னி பிராந்திய பணிப்பாளர் டி. வரதராஜா,
மருத்துவ மேலதிகாரி வி. சன்முகராஜா மற்றும் டி. சத்தியமூர்த்தி ஆகியோரும் மேடையில் இருந்த அரசாங்க
மருத்துவ அதிகாரிகளில் அடங்குவர். மேலும் இரு வைத்தியர்களில் சிவபாலன் புலிகளின் மருத்துவ பிரிவில் சேவையாற்றியவர்,
மற்றும் இளஞ்செழியன் பல்லவன் ஒரு அரசாங்க வைத்தியராவார்.
இந்த ஐந்து பேரும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றி இரு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
ஊடக நிகழ்வின் பின்னர், அவர்கள் மீண்டும் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றம் என்ன என்பதையிட்டு கருத்துக்கூற ஒரு பொலிஸ் பேச்சாளர் மறுத்துவிட்டார்.
பெப்பிரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில், இந்த மூன்று வைத்தியர்களும்,
தீவின் வட-கிழக்கு கரையோரத்தில் அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட சிறிய "பாதுகாப்பு வலயத்தில்"
சிக்கிக்கொண்டிருந்தவர்கள் மற்றும் இடைத்தங்கல் ஆஸ்பத்திரிகளில் இருந்த நோயாளர்கள் உட்பட பொது மக்கள்
மீதான இராணுவத்தின் தாக்குல்கள் பற்றி நேரடி மதிப்பீட்டை வழங்கியிருந்தனர்.
உதாரணமாக, பெப்பிரவரி 2 அன்று, புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் பெண்கள்
பகுதியையும் மற்றும் குழந்தைகள் பிரிவையும் இராணுவத்தின் ஷெல்கள் தாக்கியதில் ஒன்பது நோயாளர்கள்
கொல்லப்பட்டதாக டாக்டர் வரதராஜா தெரிவித்தார். ஒரே நாளில் நடந்த மூன்று குண்டுத் தாக்குதல்கள் பற்றி
வரதராஜா அறிவித்தார். அங்கிருந்த செஞ்சிலுவைச் சங்க மற்றும் ஐ.நா. அதிகாரிகளும் இந்தத் தாக்குதல்களை
உறுதிப்படுத்தினர்.
மே 9 மற்றும் 10ம் திகதிகளில் கடுமையான ஷெல் தாக்குதல்களின் பின்னர் 106
சிறுவர்கள் உட்பட 430 சிவிலியன்கள் அடக்கம் செய்யப்படுவதற்காக கொண்டுவரப்பட்டனர் அல்லது
ஆஸ்பத்திரியிலேயே உயிரிழந்தனர் என மே 11 அன்று அசோசியேட்டட் பிரஸ்சுக்கு டாக்டர் சன்முகராஜா
தெரிவித்தார். 1,300 க்கும் அதிகமான காயமடைந்த பொது மக்கள் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக
கொண்டுவரப்பட்டனர் என அவர் மதிப்பிட்டிருந்தார்.
மே 13 அன்று மூன்றாவது தடவையாக ஆஸ்பத்திரி மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட
பின்னர், கடுமையான இராணுவ ஷெல் வீச்சில் ஆயிரக்கணக்கான சிவிலியன்களுடன் சேர்ந்து இந்த வைத்தியர்களும்
யுத்த வலயத்தை விட்டு இடம்பெயர்ந்தனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை பிரித்தெடுப்பதற்காக அமைக்கப்பட்ட
சோதனை நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அப்போதிருந்து அவர்கள், முதலில் இராணுவக் காவலிலும் பின்னர் சித்திரவதைகள் ஊடாக
கைதிகளிடம் ஒப்புதல் வாக்குமூலங்களை கறப்பதில் இழிபுகழ் வரலாற்றைக் கொண்ட புலனாய்வு பிரிவிலும் தடுத்து
வைக்கப்பட்டனர். இந்த வைத்தியர்கள் அவர்களுடைய உறவினர்கள் அல்லது சட்டத்தரணிகளை சந்திக்க முடியாதவாறு
தனிக்காவலில் வைக்கப்பட்டனர்.
இராணுவத் தாக்குதல்களின் கடைசி வாரத்தில், உயிர்-உடல் சேதங்கள் தொடர்பாக
சர்வதேச ஊடகங்களுக்கு இந்த வைத்தியர்கள் கொடுத்த அறிக்கைகளே யுத்த வலயத்தில் என்ன நடக்கின்றது என்பது
பற்றி வெளி உலகுக்கு கிடைத்த தகவல்களுக்கான பிரதான ஆதாரமாக இருந்தது. அரசாங்கம் சுயாதீன
ஊடகங்களை தடைசெய்திருந்ததோடு உதவி முகவரமைப்புக்களை அந்தப் பிரதேசங்களில் இருந்து வெளியேறுமாறு
கட்டளையிட்டிருந்தது. ஐ.நா. மனித உரிமைகள் ஊழியர்களும் செஞ்சிலுவைச் சங்கமும் ஆரம்பத்தில் ஆஸ்பத்திரிகளுக்கு
செல்லக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியைக் கொண்டிருந்த போதிலும் பின்னர் அவையும் அதிலிருந்து வெளியேற
நெருக்கப்பட்டன.
யுத்தத்தின் போது ஆஸ்பத்திரிகள் மீதான அதிகரித்த தாக்குதல்கள் பற்றி நேரடி
விபரங்களை இந்த வைத்தியர்கள் வழங்கிய போதிலும், இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும் போது,
இராணுவம் ஆஸ்பத்திரிகள் மீது எந்தவொரு ஷெல் தாக்குதலையும் நடத்தவில்லை என அவர்கள் மறுத்தனர்.
சன்முகராஜா தெரிவித்ததாவது: "நான் கொடுத்த தகவல்கள் பொய்யானவை...
எண்ணிக்கைகள் புலிகளின் அழுத்தத்தின் காரணமாக மிகைப்படுத்தப்பட்டுள்ளன." உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ
விநியோகப் பற்றாக்குறை பற்றி தான் கொடுத்த தகவல்கள் பொய்யானவை என்றும் விநியோகங்களை புலிகள்
எடுத்துக்கொண்டதாகவும் கூட அவர் கூறிக்கொண்டார். வெளி உலகுக்கு தகவல்கள் வழங்குமாறு புலிகள்
பலாத்காரப்படுத்தியதாகவும் "சில சமயங்களில் அவர்களே [உயிர்-உடல் சேத தரவுகளை] எண்ணிக்கை
பட்டியலோடு " வந்ததாகவும் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
வரதராஜா சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கிய சேத விபரங்களை தீவிரமாக
குறைத்துக் காட்டினார். ஜனவரி மற்றும் மே நடுப்பகுதிக்கிடையில் 650 முதல் 750 வரையான சிவிலியன்களே
கொல்லப்பட்டதோடு ஜனவரி முதல் ஏப்பிரல் 15 வரை 600 முதல் 650 வரையான சிவிலியன்கள் மட்டுமே
காயமடைந்ததாக அவர் தெரிவித்தார். இந்த புதிய தரவுகளை நிருபர்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில்,
"உங்களுக்கு இதை நம்புவது கடினமாக இருக்கலாம், ஆனால் அது உண்மை," என அவர் வலியுறுத்தினார்.
தமது முன்னைய அறிக்கைகளை மறுத்துக் கூறுமாறு அரசாங்க அதிகாரிகளிடம் இருந்து
எந்தவொரு அழுத்தமும் வரவில்லை என இந்த வைத்தியர்கள் மறுத்த போதிலும், அவர்களது ஊடகவியலாளர்
மாநாட்டில் கூறியவறில் மிகப்பெரும் ஓட்டைகளும் முரண்பாடுகளும் உள்ளன.
உதாரணமாக, பெப்பிரவரி 2 அன்று புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி மீது நடத்தப்பட்ட
தாக்குதலை ஐ.நா. மற்றும் செஞ்சிலுவைச் சங்கமும் உறுதிப்படுத்திய போதிலும், அது நடக்கவில்லை என
வரதராஜா மறுக்கின்றார். பெப்பிரவரி 4 அன்று 16 மணித்தியாலங்களுக்கும் மேலாக அந்த பிரதேசத்தின் மீது
இராணுவம் ஆட்டிலறி குண்டுமழை பொழிந்த நிலையில் 15 ஐ.நா. ஊழியர்களும் 81 குடும்ப உறுப்பினர்களும்
அங்கிருந்து வெளியேறினர் என இலங்கைக்கான ஐ.நா. பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 650 க்கும் அதிகம் இல்லை என்ற டாக்டர்களின்
கூற்றை ஒப்பிடும் போது, இந்த வைத்தியர்கள் சேவையாற்றிய இடைத்தங்கல் முகாங்களில் இருந்து மருத்துவ
சிகிச்சைக்காக திருகோணமலைக்கு 13,769 நோயாளர்களை செஞ்சிலுவைச் சங்கம் அப்புறப்படுத்தியுள்ளது.
ஐ.நா. தனது மதிப்பீடுகளை மாற்றுவதற்கு எந்த அடிப்படையும் கிடையாது என
வைஸ் வைத்தியர்களின் ஊடக மாநாட்டின் பின்னர் தெரிவித்தார். "பொது மக்கள் பிரதேசத்தின் மீதான ஷெல்
தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை பெருந்தொகையில் குறைத்து
அவர்கள் கடந்த புதன் கிழமை வழங்கிய புதிய ஆதாரங்கள், சில வன்முறைகளை நேரடியாகப் பார்த்த ஐக்கிய
நாடுகள் அமைப்பின் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் சுயாதீன தொண்டு ஊழியர்கள் வழங்கிய அறிக்கைகளுக்கு
முரணாக இருக்கின்றது," என அவர் தெரிவித்தார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு பேச்சாளர் சரசி விஜேரட்ன உலக
சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்ததாவது: "பொது மக்கள் உடல்-உயிர் சேதங்கள் பற்றி அது வழங்கிய
தரவுகள் மற்றும் எண்ணிக்கைகளில் செஞ்சிலுவைச் சங்கம் உறுதியாக இருக்கின்றது. அதை மாற்றுவதற்கு காரணங்கள்
நிச்சயமாகக் கிடையாது. குறிப்பாக எங்களுக்கு இருக்கின்ற நம்பகமான ஆதராங்களின் அடிப்படையிலேயே நாம்
எமது மதிப்பீடுகளை செய்துள்ளோம்."
"அரசாங்கத்தின் அறிக்கையொன்றை சீர்தூக்கிப் பார்ப்பது செஞ்சிலுவைச் சங்கத்தின்
குறியிலக்காக இல்லா விட்டாலும், எங்களது சொந்த மெய்யான மதிப்பீடுகளின் உண்மைத் தன்மையை தரங்குறைக்க
எங்களுக்கு காரணங்கள் இல்லை. அந்தப் பிரதேசங்களில் பெரும் ஆபத்துக்களை எதிர்கொண்டவாறே பணிகளைத்
தொடர்ந்த எமது சொந்த உறுப்பினர்களின் கண்காணிப்பின் அடிப்படையில் செய்யப்பட்டதே எமது மதிப்பீடுகள்,"
என விஜேரட்ன வலியுறுத்தினார்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய-பசுபிக் பணிப்பாளர் சாம் ஸரிஃபி, இந்த
வைத்தியர்களின் பின்வாங்கல்கள் "எதிர்பார்க்கப்பட்டவை மற்றும் ஊகிக்கப்பட்டவை" என தெரிவித்து, பல
விமர்சனபூர்வமான ஆய்வாளர்களின் முடிவுகளை வெளிப்படுத்தினார். "வைத்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த
காலத்தில், அவர்கள் இந்த முறையில் நிச்சயமாக பயன்படுத்தப்படுவார்கள் என்ற பீதி இருந்தது," என அவர்
விளக்கினார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் புணையப்பெற்ற தன்மையை சுட்டிக் காட்டி,
அசோசியேடட் பிரஸ் தெரிவித்ததாவது: "மத்தியஸ்தம் வகித்தவர் தன்னை ஒரு சுயாதீன பத்திரிகையாளர் என
அறிமுகம் செய்துகொண்டதோடு ஓரத்தில் வெள்ளை சேர்ட்டும் டையும் அணிந்திருந்த இருவர் அவருக்கு
வழிகாட்டியதாகத் தோன்றியது. வைத்தியர்களில் ஒருவர், தற்போது தான் சிறைவைக்கப்பட்டிருப்பதாக
ஏற்றுக்கொண்ட போது, அவரை திட்டிய ஒரு அரச ஊடக பத்திரிகையாளர், அவருக்கு நன்கு
உணவளிக்கப்பட்டுள்ளது, முறையாக சவரம் செய்துள்ளார், டை அணிந்துள்ளார் மற்றும் முறையாக தலைமயிர்
வெட்டியுள்ளார், எனவே அவர் ஒரு கைதியாக இருக்க முடியாது எனத் தெரிவித்தார்."
மிகவும் தெளிவான பல கேள்விகள் உள்ளன. வைத்தியர்களின் முன்னைய கருத்துக்கள்
பலாத்காரத்தின் பேரில் கூறப்பட்டவையானால், அவர்கள் ஏன் தடுத்து வைக்கப்பட வேண்டும்? செய்தியாளர்கள்,
சட்டத்தரணிகள் மற்றும் உறவினர்களும் அவர்களோடு பேசுவதை ஏன் தடுக்க வேண்டும்? இன்னமும் இந்த
வைத்தியர்கள் தனியாக தொடர்பின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் -இன்னும் ஒரு ஆண்டுக்கு அல்லது அதற்கும் மேலும்
தடுத்து வைக்கப்படக் கூடும்- என்ற உண்மை, அரசாங்கம் பெரிய விவகாரம் ஒன்றை ஒழிக்க முயற்சிப்பதை
அம்பலப்படுத்துகிறது.
தனது உள்ளூர் சேவையாளர்கள், செஞ்சிலுவைச் சங்கம், வைத்தியர்கள் மற்றும்
ஏனைய ஆதாரங்களைக் கொண்டு சேகரிக்கப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வெளியிடப்படாத
ஐ.நா. அறிக்கை ஒன்று, ஜனவரிக்கும் மே மாதம் முதல் வாரத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 7,000
பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது. ஐ.நா. வில் இருந்து கசிந்த செய்மதி படங்கள், பொது
மக்கள் நெருக்கமாக வாழ்ந்த பிரதேசங்கள் மீது ஷெல் வீசப்பட்டுள்ளதை காட்டுகின்றன.
இந்தச் சூழ்நிலையில், உள்நாட்டில் அதிருப்தி மற்றும் சர்வதேச கண்டனங்கள்
தொடர்பான பீதியில், வைத்தியர்களின் முன்னைய அறிக்கைகள் பற்றி அரசாங்கம் அவநம்பிக்கையான நுன்னுணர்வுடன்
உள்ளது. தாக்குதல்களில் ஒரு சிவிலியன் கூட கொல்லப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ பகிரங்க உரைகளில்
மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்றார். இராணுவம் தமிழர்களை புலிகளிடம் இருந்து மீட்க "மனிதாபிமான நடவடிக்கையில்"
ஈடுபடுவதாக அவர் பொய்யாகக் கூறிக்கொண்டார்.
இந்த வைத்தியர்களை விடுதலை செய்யுமாறு ஐ.நா. மற்றும் ஏனைய சர்வதேச
மனிதாபிமான அமைப்புக்கள் விடுத்த அழைப்பை அரசாங்கமும் இராணுவமும் நிராகரித்துள்ளன. அவர்கள் புலிகளுடன்
கொண்டிருந்த தொடர்புகள் பற்றி விசாரிக்கப்பட்டு வருவதாக அவை தெரிவித்துள்ளன. வைத்தியர்கள் மீது குற்றம்
சுமத்தப்படுமானால் அது எப்போது என்பதை பொலிசார் சொல்ல மறுக்கின்றனர். வைத்தியர்கள் செய்த குற்றம்
என்ன எனக் கூற பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர மறுத்ததோடு அந்தரங்க விசாரணைகள் தொடரும் எனவும்
தெரிவித்தாக அசோசியேடட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் ஒத்திசைந்துபோகும் அரச மற்றும் தனியார் ஊடகங்கள், இந்த வைத்தியர்களின்
அறிக்கைகளில் உள்ள வெளிப்படையான முரண்பாடுகளைப் பற்றி எதுவும் சொல்லவில்லை, அல்லது ஊடகவியலாளர்
மாநாடு நடத்தப்பட்டது பற்றி மற்றும் அந்த ஐவரும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவது பற்றி எந்தக் கருத்தும்
கூறவில்லை. யுத்தத்தின் போது ஊடக நிறுவனங்களும் பத்திரிகையாளர்களும் இடைவிடாது அச்சுறுத்தலுக்குள்ளானதோடு
பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு அல்லது கடத்தப்பட்டதுடன் யுத்தம் முன்னெடுக்கப்படும் விதம் பற்றி மெல்லியதாக
விமர்சித்தவர்கள் கூட சரீரரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளாகினர்.
இந்த வைத்தியர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகள்,
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள முகாங்களில் கிட்டத்தட்ட 300,000 தமிழர் யுத்த அகதிகள் காலவரையறை
இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு சம்பந்தப்பட்டுள்ளது. இந்த முகாங்களுக்கு செல்ல செஞ்சிலுவைச்
சங்கத்துக்கும் ஐ.நா. உதவி முகவரமைப்புக்களுக்கும் மேலும் மேலும் நுழைவு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த வழிமுறைகள், அரசாங்கம் தனது குற்றவியல் சாதனைகளை மூடி மறைப்பதற்கு இன்னும் எவ்வளவு தூரம்
செல்லவுள்ளது என்பது மிகவும் அடிப்படையான சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்க அது எடுக்கும்
முயற்சிகளுக்கான ஒரு எச்சரிக்கையாகும். |