World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government in desperate bid to win local elections

இலங்கை அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற மூர்க்கத்துடன் முயற்சிக்கின்றது

By M. Vasanthan
20 July 2009

Back to screen version

இலங்கை அரசாங்க அமைச்சர்கள், அடுத்த மாதம் நடக்கவுள்ள உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கான வாய்ப்புக்களை பெருப்பிக்கும் முயற்சியில் அண்மைய வாரங்களில் யாழ்ப்பாண நகருக்கு பயணித்தனர். யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் ஆகஸ்ட் 8 தேர்தல் நடக்கவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியை அடுத்து, தீவின் வடகிழக்கு பிராந்தியத்தில் தற்போது தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஒரு ஜனநாயகப் போர்வையை வழங்கும் முயற்சியில் இந்தத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். உள்நாட்டு யுத்தத்தின் கொடூரமான முடிவு மற்றும் தற்போது 300,000 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பான பரந்த வெறுப்புக்கு மத்தியில், அரசாங்கம் வெற்று வாக்குறுதிகள் மற்றும் வெளிப்படையான அச்சுறுத்தல்களின் கலவையின் ஊடாக தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கின்றது.

யாழ்ப்பாண குடாநாட்டையும் உள்ளடக்கிய வட மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணம், இராணுவத்தின் கோட்டையாகும். அது கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக ஏறத்தாழ இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருந்துள்ளது. இலங்கை இராணுவம், புலிகள் மற்றும் ஒரு கட்டத்தில் கொழும்புக்கும் புது டில்லிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட 1987 இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் அனுப்பி வைக்கப்பட்ட "அமைதிப் படையும்" இங்கு இருந்துள்ளன.

தற்போது இராணுவத்தின் 51வது படையணி, ஒரு பிரதான ஹோட்டலையும் அயலில் உள்ள 50 வீடுகளையும் பலாத்காரமாக கைப்பற்றிக்கொண்டு, யாழ்ப்பாண நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இதைச் சூழ உள்ள முழுப் பிரதேசமும் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர சபை பிரதேசத்துக்குள், குருநகரில் அமைக்கப்பட்டுள்ள இன்னுமொரு பிரதான இராணுவ முகாமும், நூற்றுக்கணக்கான மீனவர்களின் வீடுகளை சுற்றிவளைத்துக்கொண்டுள்ளது. இந்த இரு பிதேசங்களிலும் ஒவ்வொரு சந்தியிலும் படையினர் நிலைகொண்டிருப்பதோடு அடிக்கடி நடந்தும் வாகனங்களிலும் ரோந்து செல்கின்றனர்.

சமூக சேவைகள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார். அரசாங்கத்தின் மீதான வெறுப்பு எந்தளவுக்கு உள்ளதென்றால், கொழும்பு ஆளும் கூட்டணியின் பங்காளியாக இருந்தாலும் ஈ.பி.டி.பி. யும் சுதந்திர முன்னணியின் பட்டியலில் போட்டியிட தயக்கத்துடனேயே உடன்பட்டது. யாழ்ப்பாணத்தில் இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு (ஸ்ரீ.ல.சு.க.) குறிப்பிடத்தக்களவு அரசியல் ஆதரவு இல்லாததால் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் 29 பேரில் 20 பேர் ஈ.பி.டி.பி பெற்றுள்ளது.

சுதந்திர முன்னணியின் பிரச்சாரத்துக்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் கவச வாகனங்கள் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட இராணுவ வாகனங்கள் பாதுகாப்பளிக்கின்றன. இந்த வாகனங்களுக்கு வழிவிட பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு செய்வதானது உள்ளூர் பொதுமக்கள் மத்தியில் மேலும் சீற்றத்தை அதிகரிக்கச் செய்கின்றது.

ஜூலை 10, வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த மீனவர்களின் கூட்டம் சுதந்திர முன்னணி மீதான எதிர்ப்பை கொஞ்சம் வெளிக்காட்டியுள்ளது. யுத்தம் முடிவடைந்துள்ளதால் மீனவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என சபையில் இருந்தவர்களுக்கு புரியவைக்க தேவானந்தாவுடன் சேர்ந்து மீன்பிடி அமைச்சர் பீலீக்ஸ் பெரேராவும் முயற்சித்தார்.

"எங்களது 230 வீடுகளை இராணுவம் எடுத்துக்கொண்டுள்ளதோடு பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடப்படுத்தப்பட்டுள்ளன. அவை எங்களுக்கு திருப்பிக் கிடைக்க உங்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா?" என ஒரு குருநகரைச் சேர்ந்த ஒரு மீனவர் உடனடியாகக் கேட்டார். யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் ஏ9 வீதியை திறக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என இன்னொருவர் கேட்டார்.

தெளிவாகக் குழும்பிப் போன பெரேரா, இந்தக் கேள்விகளை தவிர்த்துக்கொள்ளும் முயற்சியில், "இவை பாதுகாப்பு விவகாரத்தோடு சம்பந்தப்பட்டுள்ளமையால் இவை தொடர்பாக எதுவும் செய்ய முடியாது. வேறு கேள்விகளைக் கேளுங்கள்," என்றார். ஆயினும், பல மீனவர்கள் எதிர்க்குற்றம் சாட்டினர்: "எங்களது சகல பிரச்சினைகளும் ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டதே. இத்தகைய கேள்விகளை எங்களால் கேட்க முடியாவிட்டால், எந்தக் கேள்விகளை நாங்கள் கேட்பது? என அவர்கள் கேட்டனர்.

பந்துல குணவர்தன, திஸ்ஸ கரலியத்த, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகிய ஏனைய மூன்று அமைச்சர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் யாழ்ப்பாண சம்மேளனத்துடன் நடத்திய கூட்டத்தில், விலை அதிகரிப்பு தொடர்பான சீற்றத்தை தணிக்க முயற்சித்தனர். வர்த்தக அமைச்சர் குணவர்தன யாழ்ப்பாணத்தில் விலைவாசி தொடர்பாக தனது "ஆச்சரியத்தை" வெளிப்படுத்திய போதிலும், அதில் புதிர் எதுவும் கிடையாது. பற்றாக்குறையான வீதிப் போக்குவரத்து வசதிகள் உட்பட கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள், அடிப்படை பொருட்களின் விளைகளைக் கூட உயர்த்தி விட்டுள்ளன.

பரந்த அதிருப்தியை எதிர்கொள்ளும் அரசாங்கம், புலிகளை எதிர்த்து யுத்தத்தை ஆதரித்த தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட எதிர்க் கட்சிகள் மீது அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் முன்னெடுக்க முயற்சிக்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி, தேர்தலில் இருந்து விலகியிருக்குமாறு கூட்டணியின் சில முன்னணி வேட்பாளர்களுக்கு தொலைபேசி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக எமது வலைத் தளத்துக்குத் தெரிவித்தார்.

யாழ்ப்பாண நகரில் கூட்டணி ஒட்டிய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன அல்லது கறுப்பு பெயின்டால் மறைக்கப்பட்டுள்ளன. ஆயினும், தேவானந்த புன்னகைக்கும் படத்துடனான ஈ.பி.டி.பி. போஸ்டர்களில் எவரும் எங்கும் கைவைக்கவில்லை. வீதிகளில் இறுக்கமான பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு இருக்கும் நிலையில், பாதுகாப்பு படைகள் அராசங்கத்தின் பக்கம் அணிதிரண்டிருப்பதையே இது தெளிவாக்குகிறது. ஈ.பி.டி.பி. துணை இராணுவக் குழுவொன்றை வைத்துள்ளது. அது யுத்தத்தின் போது யாழ்ப்பாணத்திலும் தீவு பூராவும் இராணுவத்துடன் நெருக்கமாக செயற்பட்டது.

எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி), ஜூன் 15 அன்று கொழும்பில் யாழ்ப்பாண தேர்தல் பிரச்சாரத்தை தொடக்கி வைத்தது. யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்ததாவது: "ஏனைய கட்சிகளை விட யூ.என்.பி. தான் தமிழர்களுக்கு நெருக்கமான கட்சி, அடுத்து வரும் உள்ளூராட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்டால் வடக்குக்கு வழமை நிலைமையையும் சமாதானத்தையும் கொண்டு வர முடியும்."

எவ்வாறெனினும், 1983ல் யுத்தத்தை தொடக்கி வைத்து அதை ஒரு தசாப்தத்துக்கும் மேலாக கொடூரமாக முன்னெடுத்தமைக்கு யூ.என்.பி. யே பொறுப்பாகும். இந்தக் கட்சி புலிகளுடன் 2001ல் யுத்த நிறுத்தமொன்றை கைச்சாத்திட்ட அதே வேளை, 2006ன் பின்னர் இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்துக்குப் பின்னால் தனது ஆதரவைத் திருப்பியதோடு இந்த ஆண்டு புலிகள் மீதான இராணுவ வெற்றியையும் பாராட்டியது.

யூ.என்.பி. முன்னணி வேட்பாளர் ஏ.ஏ. சத்யேந்திரன், யாழ்ப்பாண பஸ் நிலையம், சந்தையை மீள் அபிவிருத்தி செய்வதாகவும் யாழ்ப்பாண நூலகத்தின் வேலையை பூர்த்தி செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். இவை அனைத்தும் யுத்தத்தால் அழிக்கப்பட்டவை ஆகும். 1981ல் மீண்டும் சேர்க்க முடியாதளவு நூல்கள் மற்றும் கையெழுத்து சுவடிகளுடன் சேர்த்து யாழ்ப்பாண நூலகத்தை யூ.என்.பி. குண்டர்கள் எரித்தனர்.

அடுத்த மாத தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகள் மீதும் யாழ்ப்பாணத்தில் பரந்த வெகுஜன எதிர்ப்பு காணப்படுகிறது.

தனது சொந்தக் கசப்பான அனுபவங்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப் பீட மாணவர் ஒருவர் WSWSக்குத் தெரிவித்தார். அவரது பெற்றோர்கள் பூநகரியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் யுத்தத்தின் போது பல தடவைகள் இடம்பெயர்ந்து இப்போது மெனிக்பார்ம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நன்கு பிள்ளைகளின் தாயான அவரது சகோதரி மார்ச் 5 அன்று இராணுவ ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டார். "அண்மையில் எனது சகோதரரிடம் இருந்து ஒரு கடிதம் கிடைத்த பின்னர் இப்போதுதான் எனது குடும்பம் எங்குள்ளது என்பதை தெரிந்துகொண்டேன்... முன்னர் எனக்கு புலிகள் தொடர்பான ஒரு மாயை இருந்தது. ஆனால், தமிழ் மக்களுக்கு ஒரு புதிய முன்நோக்கும் கட்சியும் தேவை என நான் நினைக்கின்றேன்."

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் விளக்கியதாவது: "நாங்கள் யாழ்ப்பாண மாநகரசபை பிரதேசத்தில் வாழ்கிறோம். அடிப்படை வசதிகள் அனைத்தும் இங்கு அழிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதமே தேர்தல் வருகிறது, ஆனால் கடந்த நவம்பரிலேயே தண்ணீர் வரி விதிக்கப்பட்டுள்ளது. எங்களது வீடுகளுக்கு குழாய் நீர் கிடையாது. நாங்கள் ஒரு பொது குழாயையே பயன்படுத்த வேண்டும். அதற்காக நாங்கள் மாதம் 30 ரூபா செலுத்த வேண்டும்.

"மழை பெய்தால், வீடுகளுக்குள் அசுத்த நீர் நுழையும். யுத்தத்தின் காரணமாக முன்னைய மட்டுப்படுத்தப்பட்ட கழிவகற்றும் பகுதி கூட அழிக்கப்பட்டுள்ளது அல்லது அலட்சியம் செய்யப்பட்டுள்ளது. யுத்தத்துக்கு முன்னர் இருந்த யாழ்ப்பாண ஜனத்தொகையில் பாதி பேர் வெளிநாடு சென்றுவிட்டனர் அல்லது வேறு பிரதேசங்களுக்கு போய்விட்டனர். பழுதடைந்த வீதிகள் மற்றும் கட்டிடங்கள் திருத்தப்படவில்லை."

ஒரு நடுத்தர வயது பெண் தெரிவித்ததாவது: "அமைச்சர்கள் வருகிறார்கள் போகிறார்கள், பல வாக்குறுதிகளையும் வழங்குகிறார்கள். ஈ.பி.டி.பி. யின் இழிபுகழ்பெற்ற சாதனைகள் எமக்குத் தெரியும். நிலைமை மக்களுக்கு சிறந்ததாக அமையும் என நான் நினைக்கவில்லை. எங்களுக்கு இந்த எல்லா கட்சிகளைப் பற்றியும் தெரியும். தேர்தலின் பின்னர் அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக மேலும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்குத் தயாராகின்றது."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved