World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US states' budget crises threaten social disaster

அமெரிக்க மாநிலங்களின் வரவுசெலவுத்திட்ட நெருக்கடிகள் சமூகப் பேரழிவு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன

By Joe Kishore
3 July 2009

Back to screen version

1975ல் நியூ யோர்க் நகரம் ஒரு நிதிய நெருக்கடியை எதிர்கொண்டபோது, அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த கெரால்ட் போர்ட், நகரம் கோரிய உதவியை மறுத்தார். அது நியூயோர்க் டெய்லி நியூஸ் என்னும் புகழ்பெற்ற ஏட்டை "நகரத்திற்கு போர்ட்: மடிந்து ஒழிக" என்ற தலையங்கத்தை வெளியிடத் தூண்டியது. நகர மக்கள் கூட்டாட்சி அரசாங்கம் உதவிக்கு வர மறுத்தது பற்றிய சீற்றத்தை இத்தலைப்பு உணர ஓரளவிற்கு வகை செய்தது; உதவி மறுக்கப்பட்டதால் செலவினங்களில் பல பெரிதும் குறைக்கப்பட்டன.

இன்று ஒபாமா நிர்வாகம் அதேபோன்ற கொள்கையை அமெரிக்கா முழுவதிற்கும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. மந்தநிலையை ஒட்டி பாரிய தாக்குதல்களை முக்கியமான சமூகத் திட்டங்கள் மீது கொண்டுவந்துள்ள நிலையில் மாநிலங்களின் வரவுசெலவுத்திட்ட நெருக்கடியை ஒட்டி வெறுமே ஒன்றும் செய்யாமல் நிற்கிறது. அதேபோன்ற தலைப்பு இன்னும் பொருத்தமாக இருக்கும்; ஆனால் ஒரு வேறுபாடு உள்ளது; பல மாநில அரசாங்கங்களும் முழு அமெரிக்க மக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதலில் தீவிர ஒத்துழைப்பை கொடுக்கின்றன என்பதே அது.

ஒபாமா பலமுறையும் மாநிலங்கள் தங்கள் "நிதிச் சிறப்பு நிலையை" செலவினங்களை குறைத்து "கட்டமைப்பு பிரச்சினைகளை" தீர்ப்பதின் மூலம் மீட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இக்கொள்கையின் தாக்கங்கள் இப்பொழுது உணரப்படுகின்றன.

செவ்வாய் கிழமைதான் பெரும்பாலான மாநிலங்களில் நிதி ஆண்டிற்கு கடைசி நாள் ஆகும். அவை அனைத்துமே தங்கள் வரவுசெலவுத் திட்டத்தை சமன் செய்ய வேண்டும். பொருளாதார நெருக்கடியை ஒட்டி குறைந்த வரி வசூல்கள் வந்த நிலை, சமூக நலத்திட்டங்களில் பெருகிய கோரிக்கைகள் என்று வந்ததில் பல மாநிலங்களும் கல்வி, சுகாதாரக் காப்பு இன்னும் பல சமூக நலப் பணிச் செலவுகளை பெரிதும் குறைத்துவிட்டன. அமெரிக்காவில் இருக்கும் குறிப்பிட்ட அரசியல் முறையினால், இத்திட்டங்களுக்கான ஆதாரங்கள் பெரும்பாலும் மாநிலங்கள் அல்லது அவை கூட்டாட்சி அரசாங்கத்துடன் இணைந்த நிலையில் அளிக்கப்படுகின்றன.

இந்த நெருக்கடி நாடெங்கிலும் படர்ந்துள்ளது. ஏழு மாநிலங்கள் இன்னும் வரவுசெலவுத் திட்டத்தை இயற்றவில்லை. கலிபோர்னியா (வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறை - $24 பில்லியன்), இல்லிநோய் ($9.2 பில்லியன்), பென்சில்வானியா ($4.8 பில்லியன்), வட கரோலினா ($4.6 பில்லியன்), கனக்டிகட் ($4.1 பில்லியன்), ஒஹையோ ($3.3 பில்லியன்) மற்றும் மிசிசிப்பி ($480 மில்லியன்) என்ற விதத்தில் பற்றாக்குறைகள் உள்ளன.

இந்த வரவுசெலவுத் திட்ட நெருக்கடி மேற்கு கடற்கரை, கிழக்கு கடற்கரை (வடக்கு, தெற்கு) மற்றும் மத்திய மேற்கு என--வேலையின்மை மற்றும் வீடுகள் ஏலத்திற்கு வருவது உயர்ந்து இருக்கும் இடங்களில்--மிகக் கடுமையாக உள்ளது. ஆனால் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. கொலோரோடோ, கன்ஸாஸ், கென்டக்கி மற்றும் டெனெசி ஆகியவை அனைத்தும் கிட்டத்தட்ட $ 1 பில்லியன், அல்லது அதைவிட சற்று அதிகமான வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. அனைத்து மாநிலங்களின் கூட்டு வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட $121 பில்லியன் என்று வந்துள்ளது.

இன்னும் வரவுசெலவுத் திட்டம் இயற்றப்படாத மாநிலங்களில், சில உடன்பாடுகள் விரைவில் அடையப்படாவிட்டால் அரசாங்கப் பணிகளையே இழுத்து மூடிவிடுவதாக அச்சுறுத்தியுள்ளன. இல்லிநோய் ஆளுனர் பாட் க்வின் (ஒரு ஜனநாயகக் கட்சிக்காரர்), சமூகநலத் திட்டங்கள் மீது முக்கிய வெட்டுக்களை அடக்கியிருந்த ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள சட்டமன்றம் இயற்றிய வரவுசெலவுத் திட்டத்தை தடுப்பதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்திவிட்டார். சற்று குறைந்த வெட்டுக்கள் மற்றும் மாநிலத்தின் அதிக வருமானத்திற்கு குறைந்த வரி என்ற நிலையை மாற்றி அதிகமாக்க வேண்டும் என்று க்வின் விரும்புகிறார். மனநோய்ப்பட்டவர்கள் மற்றும் இயலாதவர்களுக்கு கொடுக்கும் பணிகளை அளிக்கும் நிறுவனங்கள் ஏற்கனவே வரவுசெலவுத் திட்ட நெருக்கடியை எதிர்கொள்ளும் விதத்தில் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்து விட்டன.

அமெரிக்காவிலேயே மிகப் பெரிய பொருளாதாரத்தை கலிபோர்னியா கொண்டுள்ளது. கலிபோர்னியா ஒரு தனி நாடாக இருந்தால் அதன் பொருளாதாரம் உலகின் எட்டாம் மிகப் பெரிய பொருளாதாரமாக இருக்கும். இந்த வாரம் மாநில அரசாங்கம் ஒப்பந்தக்காரர்கள், விற்பனையாளர்கள், வரித் தள்ளுபடி பெறும் குடிமக்கள் மற்றும் மூப்பானவர்கள், உடல் நலம் குறைந்தவர்கள், கல்லூரி மாணவர்கள் என்று அரசாங்க உதவி பெறுபவர்கள் அனைவருக்கும் "IOU" என்று ரொக்கத்திற்குப் பதிலாக கடன்பத்திரம் எழுதிக் கொடுக்கும்.

$24 பில்லியன் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள ஆளுனர் ஆர்னால்ட் ஷ்வார்ஸ்நெக்கர் மாநிலத்தில் இருக்கும் சமூகப் பாதுகாப்பு வலை கிட்டத்தட்ட அழிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். மாநில சட்டமன்றத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஜனநாயகக் கட்சியினர் குறைந்த வெட்டுக்களயும் ஒரே சீர் வரியை அதிகப்படுத்துதலும் வேண்டும் என்று கூறுகின்றனர் புதனன்று ஆளுனர் அனைத்து மாநில ஊழியர்களும் ஒவ்வொரு மாதமும் ஊதியமில்லாத ஒருநாள் கூடுதல் விடுப்பை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்--இது 5 சதவிகித ஊதியக் குறைவை ஏற்படுத்திவிடும்.

மாநிலங்களின் உள்ள நெருக்கடி கல்வி, இது குறிப்பிடத்தக்க வகையில் வியத்தகு பாதிப்பை கொண்டுள்ளது; பொதுக் கல்விக்கு பரந்த ஆதரவு மாநிலங்களிடம் இருந்தும் உள்ளூர் சொத்து வரிகளிடம் இருந்தும்தான் வருகிறது. நாடு முழுவதும் இருக்கும் மாநிலங்கள் ஏற்கனவே கோடைப் பள்ளி திட்டங்களைக் குறைத்துவிட்டன அல்லது அகற்றிவிட்டன. இத்திட்டங்கள் பணி நேரத்தில் தங்கள் குழந்தைகளை வேறு எங்கும் அனுப்ப முடியாத பெற்றோர்களுக்கும் அத்தகைய மாணவர்களுக்கும் மிகவும் முக்கியமானவை ஆகும். பிற மாநிலங்களுடன் புளோரிடா மற்றும் கலிபோர்னியாவில் கோடைப்பள்ளித் திட்டங்கள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டன.

அமெரிக்காவில் பொதுக் கல்வியின் வருங்காலம் கேள்விக்குரியதாகி விட்டது. அமெரிக்க உற்பத்தித் தொழில் நெருக்கடியில் மையமாக இருக்கும் டெட்ரோயிட்டில் நகர அதிகாரிகள் பொதுப் பள்ளி முறைக்கு திவால் அறிவிப்பு பதிவிற்காகத் தயார் செய்து வருகின்றனர். பொதுப் பள்ளி முறைகளையே முற்றிலும் அகற்றிவிடுவதற்கு சிந்தித்து வருகின்றனர்.

ஒபாமா நிர்வாகத்தின் தீவிர ஊக்கத்தோடு, மாநில, உள்ளூர் அரசாங்கங்கள் நாடு முழுவதும் பொதுக் கல்வி முறைக்குப் பதிலாக பலவித தனியார்மய அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி முறையைக் கொண்டுவர செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை கூட்டாட்சி அரசாங்கங்களின் மீதான நிதிய உயரடுக்கு செலுத்தும் கழுத்துப்பிடியின் ஒரு வெளிப்பாடுதான். மாநில வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறைகளில் உள்ள நிதித் தொகை வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பணத்துடன் ஒப்பிடும்போது மிக, மிக குறைவு ஆகும். $700 பில்லியன் பிரச்சனைக்குள்ளான சொத்துக்களுக்கு உதவியளிக்கும் திட்டத்திற்கு (Troubled Asset Relief Program- TARP) கடந்த ஆண்டு வங்கிகளை பிணை எடுப்பிற்காக கொடுக்கப்படுவதற்கு இயற்றப்பட்ட சட்டம் அனைத்து மாநிலங்களின் மொத்த பற்றாக்குறையை கடப்பதற்கு தேவையான பணத்தை போல் ஆறு மடங்கு ஆகும்.

மொத்தத்தில் நிர்வாகம் வங்கிகளுக்கு டிரில்லியன் கணக்கன டாலர்களை ரொக்கமாகவும், கடன் உத்தரவாதமாகவும், கிட்டத்தட்ட வட்டியில்லாத கடன்களாகவும் கொடுத்துள்ளது. ஆனால் மாநிலங்கள் ஒரு சமூக பேரழிவை அகற்றுவதற்கு தேவையான ஆதாரங்களை பெற வேண்டும் என்பதற்கான கருத்துக்கள் வெளிவரவில்லை. அதேபோல் வங்கிகள் மற்றும் பெரும் பத்திரம் வைத்திருப்பவர்களும் பொது உதவித் தொகையை பெற்றவுடன் மாநிலங்களுக்கு இருக்கும் அல்லது வருங்காலக் கடன்களில் நல்லவிதத்தில் உதவவேண்டும் என்ற கருத்தும் வெளிவரவில்லை.

அரசாங்கம் முழுச் சமூகத்தையும் நிதிய உயரடுக்கை பிணையெடுப்பிற்கு சூறையாடிவிட்டது; அதே நேரத்தில் மாநிலங்களுக்கு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளுவதற்கு எந்த வளங்களையும் விட்டு வைக்கவில்லை.

இவ்விதத்தில் கூட்டாட்சி அரசாங்கத்தின் பங்கு, மற்றும் மாநிலங்களுடன் அதன் உறவு என்று மாறிவிட்டது. 1930களின் புதிய உடன்பாடு (New Deal) காலத்தில், கூட்டாட்சி அரசாங்கம் குறிப்பிடத்தக்க வகையில் வலுப்படுத்தப்பட்டது. அதற்கு கூட்டாட்சி சமூக நலத்திட்டங்களின் விரிவாக்கம் பெருமளவிற்குக் காரணமாக இருந்தது.

இப்பொழுது கூட்டாட்சி அரசாங்கம் எதிரிடை பங்கை கொண்டு, மாநில அளவில் சமூக நலத் திட்டங்களை நாடு முழுவதும் அடிப்படை சமூக நலத் திட்டங்களுக்கு ஒரு முனனோடி என்ற விதத்தல் ஊக்குவிக்கிறது--இதில் சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி ஆகியவை அடங்கும்.

இத்தாக்குதல்களை எதிர்க்க முழுத் தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த இயக்கம் தேவைப்படுகிறது. எந்தவித மாநில அல்லது பிராந்திய விடையிறுப்பும் நெருக்கடியை தீர்க்க முடியாது. மாறாக மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தேசிய, மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடியின் வெளிப்பாடுதான்.

இன்றைய வெகுஜன சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பல டிரில்லியன் டாலர் செலவில் பொதுப் பணிகள் திட்டம் தேவையாகும். அது உள்கட்டுமானம் மறுகட்டமைப்பதற்கு, பள்ளிகள், மற்றும் சமூகங்கள் மறுகட்டமைப்பதற்கு பயன்படுத்தப்பட வேண்டும்; அதே நேரத்தில் மில்லியன் கணக்கான வேலை இல்லாதவர்களுக்கு நல்ல ஊதியம் கொடுக்கும் வேலைகளையும் அளிக்கும்.

இத்தகைய திட்டத்திற்கு முக்கிய தடை நிதிய தன்னலக்குழுவின் இலாப நலன்களுக்கு பொருளாதார, அரசியல் வாழ்வின் ஒவ்வொரு கூறுபாடும் அடிபணிய வைக்கப்பட்டுள்ளதுதான். முக்கிய பெருநிறுவனங்கள் வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்களை தேசியமயமாக்கப்படுதல், அதாவது உண்மையான ஜனநாயகக் கட்டுபாடு சமூகத்தின் கூட்டு வளங்கள் மீது நிறுவப்படுதல் என்பதுதான் மாநிலங்களை சூழ்ந்துள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கான அடிப்படை முன்னிபந்தனை ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved