World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The US and the Honduran coup

அமெரிக்காவும் ஹொன்டூரஸ் ஆட்சி மாற்றமும்

By Alex Lantier
1 July 2009

Back to screen version

ஹொன்டூரஸில் ஜனாதிபதி மானுவல் ஜீலயாவை அகற்றிய ஜூன் 28ம் தேதி இராணுவ ஆட்சி பற்றிய வாஷிங்டனின் குறைகூறல்கள் நேர்மையையோ வரலாற்று உண்மையையோ கொண்டிருக்கவில்லை. ஒரு பழைமைவாதியாக இருந்து ஜனரஞ்சக அரசியல்வாதியாக மாறி வெனிஜூலாவின் ஜனாதிபதி ஹ்யூகோ ஷாவேஸுடன் நட்பு கொண்டிருக்கும் ஜீலயாவை அகற்றியது பற்றி அமெரிக்கா கவலைப்படுவது அதன் வெளியுறவுக் கொள்கையின் தன்மையை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி பாரக் ஒபாமா, ஜீலயா அகற்றப்பட்டதை "ஒரு கொடூரமான முன்னோடி" என்று கண்டித்திருப்பது, வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அதை ஒரு சதி என அழைக்க மறுத்திருப்பதின் மூலம் நம்பிக்கையை இழக்கிறது. அமெரிக்க சட்டங்களின்படி அப்படி அழைத்தால் அது அரசாங்கத்தை ஹொண்டூராஸுக்கும் அதன் இராணுவப்படைகளுக்கும் அளிக்கும் பல மில்லியன் டாலர்கள் உதவியை நிறுத்தும் கட்டாயத்திற்கு உட்படுத்தும். ஜீலயா மீண்டும் பதவியில் இருத்தப்பட வேண்டும் என்று அழைப்புவிடுவதற்கும், "நாங்கள் வலியுறுத்தும் எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை, ஏனெனில் நம் இறுதி இலக்குகளுக்காக மற்றவர்களுடன் இணைந்து செயலாற்றுகிறோம்" என்று ஹிலாரி கூறிவிட்டார்.

அவருடைய ஜனரஞ்சகக் கொள்கை ஹொன்டூரஸ் முதலாளித்துவத்தினரின் பழைமைவாத பிரிவுகளுக்கும் இலத்தீன் அமெரிக்கா, காரிபியத் தீவுகளில் அமெரிக்க மூலோபாய நலன்கள் இரண்டிற்கும் அச்சுறுத்தலாக காணப்பட்டதால் ஜீலயா அகற்றப்பட்டார்.

அக்டோபர் 2008ல் ஜீலயா அமெரிக்காவிற்கான பொலிவாரிய கூட்டு (ALBA - Bolivarain Alliance for the Americas) எனப்படும் ஷாவேஸால் அமைக்கப்பட்டுள்ள பிராந்திய கூட்டில் சேர்ந்தார். இதில் வெனிஜூலா, பொலிவியா, ஈக்வடோர், கியூபா, நிகரகுவா, ஹொன்டூரஸ், செயின்ட் வின்சென்ட், கிரனடைன்ஸ், ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆகியவை உள்ளன. உறுப்பு நாடுகள் பெரும்பாலும் வெனிஜூலாவின் எண்ணெய் வருவாயில் இருந்து வரும் பணத்தில் இருந்து உதவித் தொகைகளை பெறுகின்றன. அமெரிக்காவினால் உறுப்பு நாடுகள் ஏதேனும் தாக்கப்பட்டால் மற்றவை பொதுப் பாதுகாப்பிற்கு வரவேண்டும் என்ற ஒரு விதிக்கு ஜிலயா ஒப்புதல் கொடுக்க மறுத்துவிட்டார்.

இரண்டாம் பதவிக்காலத்திற்கு போட்டியிட அனுமதிக்கும் அரசியலமைப்பு வாக்கெடுப்பை நடத்த முற்பட்ட ஜீலயாவின் முயற்சிகள் ஹொன்டூரஸ் இராணுவம், சட்டமன்றம் மற்றும் நீதிமன்றங்களுடன் மோதல்களை அதிகமாக்கத் தூண்டி இறுதியில் அவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டது.

அமெரிக்க இராஜதந்திரிகள் ஹொன்டூரஸில் இருந்த ஜீலயா எதிர்ப்பாளர்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்தனர். பெயரிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் மேற்குப்புற பகுதிகள் விவகாரத்தின் துணை வெளிவிவகார செயலாளரான தோமஸ் ஏ.ஷானன் ஜூனியரும் ஹொன்ட்ரூஸிற்கு அமெரிக்கத் தூதரான Hugo Llorens இருவரும் ஆட்சி மாற்றத்திற்கு சில நாட்களுக்கு முன்பு "இராணுவ அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன்" பேசினர் என்று நியூயோர்க் டைம்ஸிடம் உறுதிப்படுத்தினார். அவர் விளக்கியது: "ஜனாதிபதியை எப்படி பதவியில் இருந்து அகற்றுவது என்ற பேச்சு இருந்தது; அவரை எப்படி கைது செய்வது, எந்த அதிகாரத்தின்கீழ் இதைச் செய்வது, என."

ஒபாமா நிர்வாகத்தின் ஹொன்ட்ரூஸ் தகர்ப்பில் செயல்படும் நபர்கள் இது அமெரிக்காவின் புதிய வெளிநாட்டுக் கொள்கை இயற்றுதலோடு சேர்ந்தது என்று கூறுகின்றனர். 2003-05 ல் ஜனாதிபதி புஷ்ஷிற்கு ஷானன் சிறப்பு ஆலோசகராக இருந்தார். தேசியப் பாதுகாப்புக் குழுவில் மேலைப் பகுதி விவகாரங்களுக்கு அவர் மூத்த இயக்குனராகவும் இருந்தார். 2001 முதல் 2002 வரை அவர் வெளிவிவகாரத்துறையில் ஆண்டிய விவகாரங்களுக்கு, அதாவது வெனிஜூலா, கொலம்பியா, பொலிவியா, பெரு மற்றும் ஈக்வடர் போன்றவற்றிற்கான இயக்குனராக இருந்தார்.

2002-2003 ல் லோரன்ஸ் தேசியப் பாதுகாப்புக் குழுவின் ஆண்டிய விவகாரங்களின் இயக்குனராக, கிட்டத்தட்ட ஷாவேஸ் அரசாங்கத்தை அகற்றிய இராணுவ ஆட்சிமாற்றம் வெனிஜூலாவில் நிகழ்ந்ததற்கு புஷ் நிர்வாகம் ஆதரவு கொடுத்தபோது இருந்தார்.

ஆனால் டைம்ஸிடம் பேசிய அதிகாரி நிர்வாகம் ஹொன்டூர இராணுவம் ஒரு வெளிப்படையாக இராணுவவகை ஆட்சி மாற்றத்தைக் நடத்திவிடும் என எதிர்பார்க்கவில்லை என்றார். ஒபாமா நிர்வாகம் ஒரு நடைமுறை மாற்றத்தை, அரசியலமைப்பினால் பூசி மெழுகப்படும் விதத்தில்தான் கொண்டுவர விரும்பியது. இவ்விதத்தில் ஹொன்ட்ரூஸ் ஆட்சிமாற்றம் பற்றி வாஷிங்டனின் குறை அரசியலில் இராணுவம் குறுக்கிட்டுவிட்டது என்பது அல்ல. மாறாக ஹொன்ட்ரூஸ் இராணுவத்தின் வெளிப்படையான தலையீடு அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முதலாளித்துவ செய்தி ஊடகம் கொடுத்து வரும் ஜனநாயக மூடுதிரையை வெடிக்கவைத்துவிட்டது.

வியாழக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் தலையங்கமாக எழுதியது: "இராணுவத்தின் குறுக்கீடு திரு.ஜீலயாவைக் காப்பாற்றும் எதிர்பாரா விளைவைக் கூட கொண்டிருக்கலாம். ஞாயிறன்று காங்கிரஸ் அவரை பெரிய வாக்குவித்தியாசத்தில் பதவியை விட்டு அகற்றியது: சட்டத்தின் ஆட்சி தொடரட்டும் என்று தளபதிகள் பேசாமல் இருந்திருந்தால், ஜனாதிபதி முறையாக பதவி இறக்கம் பெற்றிருப்பார் அல்லது தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்." இது ஒபாமாவை "இன்னும் தெளிவாக ஜீலயா அகற்றப்பட்டதற்கு காரணங்கள், செய்த தவறுகளை கூறுமாறு அழைப்புவிடுத்துள்ளது."

ஹொன்டூரஸ் ஆட்சிமாற்றத் தலைவர்களுடன் அமெரிக்கா உடந்தையாக இருந்தது வாஷிங்டனில் ஒரு பொருத்தமற்ற நேரத்தில் வந்துள்ளது. ஈரானிய ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதிநெஜாட்டை அகற்றும் அல்லது வலுவிழக்கச் செய்யும் பிரச்சாரத்தை அது செய்து கொண்டிருக்கிறது; இதற்காக ஜனநாயகம் பற்றிப் பேசி தனக்கு திரை போட்டுக் கொண்டு, ஈரானில் ஜூன் 12 தேர்தல்களை அஹ்மதிநெஜாட் திருடினார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

ஹொன்ட்ரூஸ் ஆட்சி மாற்றத்தில் இதன் பங்கிற்கு வரும் அரசியல் சேதத்தைக் குறைக்கவும், ஈரானிய தேர்தல்களில் இதன் பாசாங்குத்தனம் அம்பலாமாவதின் தன்மையைக் குறைக்கவும் அமெரிக்கச் செய்தி ஊடகத்தை நிர்வாகம் நம்பியிருக்கிறது. ஈரான் பற்றி செய்தி ஊடகம் கூறும் தகவல்களுக்கு முற்றிலும் மாறாக பரபரப்பான தகவல்கள், நயமற்ற ஒளிப்பதிவுகாட்சிகள், Tegucigapa வில் இருந்து Twitter தகவல்கள் ஆகியவை வந்துள்ளன.

ஹொன்ட்ரூஸில் அமெரிக்காவின் பங்கு மத்திய அமெரிக்காவில் வாஷிங்டனின் வன்முறை மற்றும் அடக்குமுறை உறவுகள், பகுதியில் உள்ள மிகப் பிற்போக்குத்தன சக்திகளுடன் நீண்டகால உறவுகள் என்ற வரலாற்றுப் பின்னணியில் மதிப்பிடப்பட வேண்டும். அரசியல், பொருளாதார அழுத்தங்கள் அதிகரிக்கையில், பெரிய நில உடமை மற்றும் பெருநிறுவன நலன்களும் மற்றும் அமெரிக்காவின் மரபார்ந்த "கொல்லைப் புறத்தில்" அமெரிக்கப் பயிற்சி பெற்ற அதிகாரிகள் பிரிவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஷாவேஸ், ஜீலயா போன்ற இடது தேசிய வாதிகளின் ஜனரஞ்சக அழைப்புகளின் விளைவுகள் பற்றி அஞ்சுகின்றனர்.

ALBA இல் ஹொன்டூரஸ் இணைதல் பற்றிய விவாதத்தில், ஜீலயாவிற்கு எதிர்ப்பான ஹொன்டூரூஸ் பிரதிநிதி Marta Lorena Alvardo ஷாவேஸைத் தாக்கிப் பேசி எச்சரித்தார்: "ஒரு விந்தனையான கொள்கை உடையவரை நாம் நம்முடைய மக்களுக்குள்ளும் ஹொன்ட்ரூஸ் வரலாற்றை நாம் நோக்கும் விதத்தினுள்ளும் குறுக்கிடவும் அனுமதிக்கிறோம்."

இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தை மட்டும் பார்த்தால், அமெரிக்க, ஹொன்டூர ஆளும் உயரடுக்குகள் மத்திய அமெரிக்க மக்களுக்கு எதிரான பெரும் குற்றங்களில் இணைந்து செயல்பட்டன. 1954ம் ஆண்டு அமெரிக்க ஊக்கத்துடன் நடைபெற்ற குவாதமாலாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஜாகோலோ ஆர்பென்ஸ் கஸ்மனுக்கு எதிரான ஆட்சிமாற்றத்தில் ஹொன்ட்ரூஸ் குவாடமாலாவின் தெற்கு எல்லையில் ஒரு CIA "எதிர்ப்புப் படைகளுக்கு" பயிற்சியளிக்கும் முகாமிற்கு தளமாக இருந்தது. குவாடமாலாவில் அமெரிக்கத் தலையீடு என்பது இறுதியில் அமெரிக்க ஆதரவு பெற்ற கம்யூனிஸ்ட் எதிர்ப்பு மரணப்படையின் பிரிவுகள் நடத்திய தொடர்ச்சியான உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தன. இவை 30 ஆண்டுகள் நீடித்து 200,000 உயிர்களைக் குடித்தன என்று அமெரிக்கப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

1963ல் ஹொன்ட்ரூஸ் ஜனாதிபதி ரமோன் வில்லேடா தளபதி ஒஸ்வால்டோ லோப்பஸ் ஆரெல்லானோ தலைமையில் இயங்கிய இராணுவ அதிகாரிகளால் அகற்றப்பட்டார். அமெரிக்க ஜனாதிபதியான ஜோன் எப். கென்னடி அப்பொழுது Betancourt கோட்பாட்டிற்கு இணங்கிச் செயல்பட மறுத்தார். Betancourt கோட்பாடு அமெரிக்கா அரசியலமைப்பிற்கு புறம்பான அரசாங்கங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கக்கூடாது என்று கூறியிருந்தது. லோப்பஸ் ஆரெல்லானோ 1971ல் தேர்தல்கள் நடத்தி அதில் தோற்றார். மற்றொரு சதிமூலம் 1972ல் பதவிக்கு மீண்டும் வந்தார்.

1979ல் சோமோசா குடும்பம் அண்டை நிகரகுவாவில் அகற்றப்பட்டதற்கு அமெரிக்கா கம்யூனிச எதிர்ப்பு கொன்ட்ரா எழுச்சியை உருவமைத்தது. இது அமெரிக்கச் சட்டங்கள் கொன்ட்ராஸிற்கு உதவக்கூடாது என்பதை மீறிய செயல் ஆகும். ஹொன்டூரஸை தளமாகக் கொண்டு கொன்ட்ராஸ்க்கள் நிகரகுவாவின் சான்டினிஸ்டாக்களுடன் ஒரு போரில் ஈடுபட்டனர். இது 1987 வரை நீடித்தது, 60,000 இறப்புக்களைத் தவிர 250,000 மக்கள் குடிபெயரும் நிலையும் ஏற்பட்டது.

அமெரிக்க ஆதரவு பெற்ற எதிர்-புரட்சி என்னும் பங்கின் மையமான ஹொன்டூரஸின் வரலாற்றுத் தன்மையின் பின்னணியில் காண்கையில், ஜீலயா அகற்றப்பட்டுள்ளது அமெரிக்காவில் இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தீவிர எச்சரிக்கையாகும். ஜீலயா, வெனிஜூலாவுடன் கொண்டிருக்கும் தொடர்புகளின் அரசியல் விளைவுகளினால் உந்தப்பெற்ற விதத்தில் ஹொன்டூரஸில் நடைபெற்ற ஒரு அமெரிக்கா ஆதரவு பெற்ற சதியானது இன்னும் பரந்த அளவில் வெனிஜூலாவிற்கும் அத்துடன் கண்டத்தில் இணைந்திருக்கும் மற்ற ஆட்சிகளுக்கும் எதிரான பரந்த பிராந்திய அமெரிகக பிரச்சாரத்தின் அடையாளமாகக் கருதப்படலாம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved