:
இலங்கை
Sri Lankan Tamil detainees still held in terrible
conditions
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் இன்னமும் பயங்கரமான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்
By Sarath Kumara
20 June 2009
Use this version
to print | Send
feedback
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்டப்பூர்வமாக சவால் செய்தும் ஐ.நா. மற்றும்
சர்வதேச தொண்டு முகவரமைப்புக்களும் அக்கறை காட்டியும் இலங்கை அரசாங்கம் சுமார் 300,000 தமிழ்
பொது மக்களை பிரமாண்டமான தடுப்பு முகாங்களில் காலவரையறையின்றி தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளது. தடுத்து
வைக்கப்பட்டுள்ளவர்களது அடிப்படை சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி, இப்போது
அவர்கள் அதிகரித்துவரும் தொற்று நோய் ஆபத்தையும் எதிர்கொள்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை இராணுவம் களையெடுத்து முடியும்
வரையும் முற்கம்பி வேலிகளுக்குப் பின்னால் பரந்த பெரும்பான்மையினர் இருக்க வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்துகின்ற
நிலையில், விரல் விட்டு எண்ணக்கூடிய முதியவர்களும் இளம் சிறுவர்கள் மட்டுமே முகாங்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
மனிதாபிமான விவகார இணைப்புக்கான (ஓ.சி.எச்.ஏ.) ஐ.நா. அலுவலகம் ஜூன் 11 வெளியிட்டுள்ள நிலைமை
அறிக்கையின்படி, 280,812 பேர் இப்போது முகாங்களில் வைக்கப்பட்டுள்ள போதிலும், வெறும் 2,234 பேர்
மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பருவ மழைக் காலத்தின் தொடக்கத்திலேயே, அதிக கூட்டம் நிறைந்த மற்றும்
சுகாதாரமற்ற நிலைமையானது தண்ணீர் மூலம் தொற்றும் நோய்களை ஏற்படுத்தும் என உதவி முகவரமைப்புக்கள்
எச்சரித்துள்ளன. அம்மை, மஞ்சல் காமாலை மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவை முகாங்களில் தோன்றியிருப்பதாக
தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் உள்ள சர்வதேச மனிதாபிமான அமைப்பான சொலிடார் அமைப்பின் இலங்கைத்
தலைவர் ரிச்சர்ட் ஸ்சிமிட், "தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தாவிட்டால்" நிலைமை மோசமடையும்
என தெரிவித்தார்.
ஓ.சி.எச்.ஏ. தகவலின்படி, ஜூன் 5ம் திகதி அளவில், ஐ.நா. அகதிகள்
முகவரமைப்பும் மற்றும் அதன் கூட்டு அமைப்புக்களும் தற்போதுள்ள தங்குமிடங்களின் பற்றாக்குறையை நிரப்ப சுமார்
6,500 அவசர தங்குமிடங்களையும் 13,000 க்கும் மேற்பட்ட கூடாரங்களையும் அமைத்த போதிலும், இன்னும்
அதிகம் தேவைப்படுகிறது. இலங்கையின் ஐ.நா. வதிவிட இணைப்பாளர் நெயில பூனே, ஐ.ஆர்.ஐ.என். செய்திச்
சேவையுடன் பேசுகையில், "மிகவும் சிறிய இடத்தில் பல பேர்" இருப்பதால் நிலைமை திருப்தியில்லை எனத்
தெரிவித்தார். ஐந்து பேருக்கு அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் கிட்டத்தட்ட 10 முதல் 15 வரையானவர்கள்
உள்ளனர்.
"சில இடங்களில் 100 அகதிகளுக்கு ஒரே ஒரு மலசல கூடமே உள்ளது," என பூனே
மேலும் தெரிவித்ததார். இருக்க வேண்டிய எண்ணிக்கை 20 அகதிகளுக்கு ஒன்றாகும் எனவும் அவர் கூறினார். 2008
நவம்பரில் வவுனியாவுக்கு அருகில் மெனிக் பார்மில் பிரமாண்டமான முகாங்கள் அமைக்கப்பட்ட போது முதலாவதாக
கட்டப்பட்ட குழி மலசலகூடங்கள் நிரம்பிவழிவதால், அகதிகள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
உலக தரிசனம் தொண்டு நிறுவனம் ஜூலை 11 விடுத்துள்ள அறிக்கையில், பருவ மழை
நெருங்கி வருவதும் சுகாதார வசதிகள் பற்றாக்குறையாக இருப்பதும் இலட்சக்கணக்கான மக்கள் நோய்வாய்ப்படும்
ஆபத்துக்குள் தள்ளும் என்பதையிட்டு கவலையடைந்துள்ளதாக தெரிவித்தது. "குறைந்தபட்ச சர்வதேச தரத்தை
பேண," மெனிக் பார்புமுக்கு குறைந்தபட்சம் "11,500 க்கும் மேற்பட்ட மலசலகூடங்கள் தேவை", என அந்த
அமைப்பு தெரிவித்துள்ளது. "இன்னும் இரண்டு வாரங்களில் பருவ மழை எதிர்பார்க்கப்படுவதால், மிகவும்
அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்யவும் சுகாதார நெருக்கடி ஏற்படும் சாத்தியத்தை தவிர்க்கவும் குறைந்த
பட்சம் 2,500 மலசல கூடங்கள் உடனடியாகத் தேவை."
உலக உணவுத் திட்டத்தின் இலங்கைத் தலைவர் அட்னான்கான், தடுத்து
வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்தும் பங்கீடுகளை வழங்க 35 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரமாகத்
தேவைப்படுவதாகத் தெரிவித்தார். இந்தப் பணம் உடனடியாகக் கிடைக்காவிட்டால், பற்றாக்குறை ஏற்படும்.
ஏனெனில், இலங்கைக்கு உணவுப் பொருட்களை கப்பலில் கொண்டுவர மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகும். இதுவரை
அடிப்படை பங்கீடுகளை வழங்குவது உலக உணவுத் திட்டத்தால் இயலக்கூடியதாக இருந்தாலும், குழந்தைகளுக்கும்
பாலூட்டும் தாய்மாருக்கும் உணவழிப்பது பிரச்சினைக்குரியதாகும்.
விநியோகங்களை வழங்குவதற்கு இப்போது தங்களுக்கு சிறந்த வழியிருக்கின்ற
போதிலும், ஏனைய உதவிகள் மற்றும் வழக்கறிஞர் சேவைகளை வழங்க வழியில்லை என முகாங்களில் வேலை செய்ய
அனுமதிக்கப்பட்டுள்ள உதவி முகவரமைப்புக்கள் தெரிவிக்கின்றன. ஊடகங்களும் எதிர்க் கட்சி அரசியல்வாதிகளும் முகாங்களுக்கு
செல்வது இன்னமும் தடை செய்யப்பட்டுள்ளது. "முகாங்களில் முகாமைத்துவத்தையும், இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு
ஆதரவு மற்றும் பராமரிப்பை பேணுவதிலும் மற்றும் அவர்கள் விரும்பும் விதத்தில் அவர்களது சொந்த வீடுகளுக்குச்
திரும்புவதை அல்லது குறிப்பிட்ட இடத்துக்குச் செல்வதை துரிதப்படுத்த குறைந்தபட்ச சர்வதேச தரத்தையேனும் பரிந்துரைப்பதோடு
கடைப்பிடிப்பதாகவும்" உலக தரிசனம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூன் 19 அன்று ஜெனீவாவில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில், ஐ.நா. அவசர
நிவாரன இணைப்பாளர் ஜோன் ஹொல்ம்ஸ், பதட்ட நிலைமைகளை குறைப்பதன் பேரில் சாதாரண வாழ்க்கைக்கு
திரும்புவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார். உதவி
வழங்குபவர்களுக்கான நுழைவு அனுமதியில் முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், "மிகவும் கவலைக்குரியது எதுவெனில்,
முகாம்களின் பண்பாகும். கண நேரம் அவர்களை உள்ளேயும் வெளியேயும் சுதந்திரமாக நடமாட அகதிகள்
அனுமதிக்கப்படாமை என்ற விடயத்தில், ஒரு வகையில் அவற்றை தடுப்பு முகாம்களாகவே விவரிக்க முடியும்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கு மாறாக, அடிப்படை வசதிகளை
வழங்குவதற்கான பொறுப்பைக் கூட கொழும்பு அரசாங்கம் மறுக்கின்றது. தேவையான மலசலகூட வசதிகளை
வழங்குவது ஐ.நா. வின் கடமையே அன்றி இலங்கை அரசாங்கத்தின் கடமை அல்ல என மீள் குடியேற்ற அமைச்சர்
ரிஷாத் பதூர்தீன் பி.பி.சி. சிங்கள சேவையான சந்தேஷ்யவுக்குத் தெரிவித்தார். ஐ.நா. வுக்கு சர்வதேச நிதி
கிடைப்பதோடு "அவர்கள் பக்கத்திலேயே தாமதம் இருக்கின்றது" என அவர் கூறினார்.
பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, 10 வயதுக்கு குறைந்தவர்களையும்
60 வயதுக்கு மேற்பட்டவர்களையும் மட்டுமே அரசாங்கம் முகாங்களை விட்டு வெளியேற அனுமதித்துள்ளது. 11
அல்லது 12 வயது இளையவர்கள் கூட புலி சந்தேக நபர்களாக கருதப்படுகின்றனர்.
தமிழ் அகதிகளை நடத்தும் விதமானது கொழும்பு அரசியல் ஸ்தாபனம்
பேரினவாதத்தில் ஊறிப்போயுள்ளதையே காட்டுகிறது. எதேச்சதிகாரமான முறையில் தமிழ் அகதிகளை சிறைவைத்து
அவர்களது அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுக்கும் அதே வேளை, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின்
அரசாங்கம் இன்றியமையாத சுகாதார மற்றும் உடல்நல வசதிகளுக்கான உரிமையைக் கூட அங்கீகரிக்கவில்லை.
முகாங்களுக்குள் ஏற்படும் உயிரிழப்புக்களைப் பற்றி கூட எந்தவிதத்திலும் அக்கறை
காட்டப்படுவதில்லை. சமூக சேவைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் லயனல் பிரேமசிறி தெரிவிக்கையில்,
உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள், "முகாம்களில் வயது
கூடியவர்கள் உயிரிழப்பது இயற்கையே" என்றார். தங்குமிடம் வசதியின்றியும் அளவு மீறிய கூட்டம் இருப்பதாகவும்
தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளை நிராகரித்த பிரேமசிறி, "அவர்களது சொந்த வீடுகள் அல்லது ஹோட்டல்களுக்கு
சமமான நிலைமை அங்கில்லை என்றது உண்மை, ஆனால் நாம் அவர்களுக்கு போதுமான வசதிகளை
வழங்கியிருக்கின்றோம்," என்றார்.
புதன் கிழமை விடுத்த அறிக்கையொன்றில், முகாம்களில் நிலைமை பயங்கரமானது
என்பதை ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மறைமுகமாக ஏற்றுக்கொண்டார். "எந்தவொரு
நபரோ அல்லது குழுவோ அகதிகளுக்கு உதவிகளை வழங்க முடியும், ஆனால், அவர்களது துன்பங்களை எவரும்
சுரண்டிக்கொள்ள அரசாங்கம் அனுமதிக்காது" என அவர் தெரிவித்தார். அரசியல் நன்மைகள் அடைய அல்லது
வெளிநாட்டு நிதிகளைப் பெற அரசியல் கட்சிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை அரசாங்கம் அனுமதிக்காது
என அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கம் முகாம்களில் நிலவும் திகைப்பூட்டும் நிலைமைகளை மூடிமறைக்க
முயற்சிக்கும் அதே வேளை, அரச சார்பற்ற முகவரமைப்புக்கள் மற்றும் ஊடகங்கள் முகாங்களுக்கு செல்வதை தடை
செய்திருப்பதும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் யுத்த வலயத்தில் சிக்கியிருந்த போது சந்தித்த சோதனைகளை
பற்றி பேசுவதை தடுப்பதை இலக்காகக் கொண்டதாகும். இராணுவத்தின் இறுதித் தாக்குதலின் போது புலிகளிடம்
எஞ்சியிருந்த பிரதேசம் கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்கானது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில்
பெரும்பாலானவர்கள் யுத்தக் குற்றங்களை நேரடியாக அனுபவித்தவர்களும் மற்றும் எந்தவொரு விசாரணையிலும்
சாட்சியாக இருக்கக் கூடியவர்களுமாவர்.
2006-2007ல் கிழக்கில் இராணுவத் தாக்குதல்களின் போது நடந்த பல
சம்பவங்கள் தொடர்பான அதன் சொந்த விசாரணைகளை மூடுவதற்கு இந்த வாரம் அது எடுத்த முடிவு,
எந்தவொரு விசாரணையையும் தடுப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி நிஸ்ஸங்க உடலகம தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு, காணாமல்
போனவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் பற்றி விசாரிக்க 2006ல் ஸ்தாபிக்கப்பட்டது. அதன் பதவிக்காலத்தை
நீடிக்க அரசாங்கம் மறுத்துவிட்டதனால், ஜூன் 14 அன்று அது எந்தவொரு முடிவும் காணாமல் முடிவடைந்தது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான துணை இயக்குனர் எலெயின் பியர்சன்,
"இரு தரப்பினரதும் துஷ்பிரயோகங்கள் பற்றி ஒரு சர்வதேச விசாரணையை நடத்தும் தேவை முன்னெப்போதையும்
விட இப்போது அவசியமாகியுள்ளது," என்றார். ஆனால், விசாரணை ஆணைக்குழு மூடப்படுவதற்கு முன்னதாக அதற்கு
முன்வைக்கப்பட்ட ஏழு அறிக்கைகளைக் கூட வெளியிட அரசாங்கம் மறுத்துவிட்டது.
முன்நாள் புலிகள் சார்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
ஜோசப் பரராஜசிங்கம் கொல்லப்பட்டமை, பட்டினிக்கு எதிரான இயக்கம் என்ற பிரான்ஸ் அரச சார்பற்ற
நிறுவனத்தைச் சேர்ந்த 17 தமிழ் ஊழியர்கள் மூதூரில் கொல்லப்பட்டமை மற்றும் திருகோணமலையில் ஐந்து தமிழ்
மாணவர்கள் கொல்லப்பட்டமை ஆகிய விவகாரங்கள் இந்த ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த
ஒவ்வொரு சம்பவங்களினதும் ஆதாரங்கள், இராணுவத்தை அல்லது அதனுடன் இணைந்து செயற்படும் துணைப்படைக்
குழுக்களின் பக்கத்தையே சுட்டிக்காட்டின.
இந்த வாரம், நடமாடுவதற்கான சுதந்திரம் மற்றும் எதேச்சதிகாரமான தடுத்து
வைப்பில் இருந்து விடுதலை ஆகியவை உட்பட இலங்கை அரசியலமைப்பின் கீழ் உள்ள, தடுத்து
வைக்கப்பட்டுள்ளவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட
இரு வழக்குகளை எதிர்ப்பதிலும் மற்றும் ஒத்தி வைப்பதிலும் அரசாங்கம் வெற்றி கண்டது. இராஜபக்ஷவின் இராணுவ
ஆதரவிலான ஆட்சியானது, மேலும் மேலும் சர்வதேச சட்டங்கள் மற்றும் நாட்டின் சொந்த அரசியலமைப்பு உட்பட
சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளை பகிரங்கமாக அலட்சியம் செய்தவாறே செயற்படுகின்றது.
|