World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Michael Jackson's death

மைக்கல் ஜாக்சனின் மரணம்

By David Walsh
27 June 2009

Back to screen version

50 வயது பாடகரான மைக்கல் ஜாக்சன் காலமான செய்தியை உண்மையான வருத்தத்துடன், ஆனால் அசாதாரண வியப்பின்றி எதிர்கொள்கிறோம். முழு சூழல்களையும் ஆராய்கையில், அவரது இந்த சகாப்தம் எப்படி மகிழ்ச்சியில் முடிந்திருக்க முடியும் என்பதும் தெளிவாக இல்லை. மகத்தான புகழையும் வெற்றியையும் அமெரிக்காவில் அனுபவிக்கும் நபர்கள், பல நேரமும் ஒரு கொடூரமான விலையை அதற்கு செலுத்தவேண்டியுள்ளது.

ஐயத்திற்கு இடமின்றி, ஏராளமான மக்கள் ஜாக்சன் மரணத்தால் வருத்தமுற்று உள்ளனர். உலகளவில் புகழ் பெற்ற, பாடிய உயர் நட்சத்திரங்களுள் அவர் முதலாவதாக இருந்தார். உலகெங்கிலும் முக்கால் பில்லியன் இசைத்தட்டுக்கள் விற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவருடைய இசையையும் நடனத்தையும் ரசித்தவர்கள், அவருடைய சொந்த வாழ்வின் வெளிப்படையான அதிர்ச்சிகள் பற்றியும் பரிவுணர்வான விதத்தில், தமது இயல்பான உணர்வை வெளிப்படுத்துவர்.

இதற்கு முற்றிலும் எதிரிடையானதைத்தான் களிப்புத் தொழில் அரசர்கள், செய்தி ஊடகம் மற்றும் நகைப்பிற்கிடம் தரும் வகையில் பல அரசியல் புள்ளிகளின் பிரதிபலிப்பு பற்றிக் கூறுமுடியும். (பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன், ஜேர்மனியின் பொருளாதார மந்திரி கார்ல் தியோடர் ஜு கட்டன்பர்க்கில் இருந்து முன்னாள் தென் கொரிய ஜனாபதி கிம் டே ஜங் மற்றும் பிலிப்பைன்ஸின் முதல் சீமாட்டியான இமெல்டா மார்க்கோஸ் ஆகியவர்கள்). இங்கு நிதிய (மற்றும் அரசியல்கூட) கணப்பீடுகளும் வெற்றுத்தனமும் ஒன்றோடு ஒன்று போட்டியிடுகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு வாடகை வீட்டில் வியாழன் பிற்பகல் ஜாக்சன் இறந்தது பல வலைத் தளங்களிலும் பாரிய பரபரப்பான வெடிப்பை ஏற்படுத்தியது: அதைத்தவிர அவருடைய இசையின் விற்பனையில் பெரும் ஏற்றம் இருந்தது. கேபிள் தொலைக்காட்சிகளும் இணையத்தள செய்திப் பிரிவுகளும் கிட்டத்தட்ட வேறு எதையும் பற்றிப் பேசவில்லை. வெள்ளியன்று MTV "ஜாக்சனின் இசை அமேசான் உயர் 15 சிறந்த விற்பனைப் பட்டியலில் ஒவ்வொரு இடத்தையும் பெற்று iTunes உடைய இசைநிகழ்ச்சிகள், தனிப்பாடல்களை வலைத்தள கீழிறக்கத்தில் உயர் 20 என்ற இடத்தை பெற்றிருந்தது."

ஜாக்சனின் மரணம் உடனடியாக சில வட்டங்களில் இந்த ஆண்டு சரிந்து கொண்டிருக்கும் குறுந்தகடு விற்பனையை முன்னேற்றுவிக்கும் தங்கம் போன்ற வாய்ப்பு என்று கருதினாலும், ஒரு இழிந்த கொள்ளை முறைப் பிரிவான இசைப்பதிவு தொழில் நிர்வாகிகளுக்கு எந்த அநீதியும் குறிப்பாக இழைக்கப்படவில்லை எனலாம் (பகுப்பாய்வாளர்கள் 2009ம் ஆண்டு மொத்த இசைப்பிரிவு விற்பனைகள் 23 பில்லியன் டாலர், 2006ல் இருந்து 16 சதவிகிதம் குறைவாக இருக்கும் என்று கணித்துள்ளனர்.)

ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில் ஜாக்சனின் சிறந்த விற்பனை இசைக்கு முழு உரிமைகள் பெற்றுள்ள சோனியின் (Sony) தலைமை நிர்வாக அதிகாரி ஹோவர்ட் ஸ்ட்ரிங்கர், பாடகர் "அவருடைய தலமுறைக்கு மிகச்சிறந்த இசைவாணர், ஒரு தசாப்தத்தின் பேரார்வம் மற்றும் படைப்பாற்றலை இசைமூலம் வெளிப்படுத்திய மேதை" என்று கூறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் Blookberg மின்நாடா பணியகம் "சோனி மறைந்த பாப் பெருமித கெளரவச் சின்னத்தின் CD, DVD க்களின் மறுவிற்பனை மூலம் அதன் வருவாயை உயர்த்திக் கொள்ள முடியும்" என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் டோக்கியோவில் உள்ள Deutsche Bank AG ஆய்வாளர் இந்த பரபரப்பின் முகத்தில் குளிர்நீரைத் தெளிக்கும் வகையில் நிறுவனம் ஜாக்சன் இறப்பின் மூலம் பெறும் மொத்த வருமானங்கள் "குறைந்ததாக இருக்கும், சோனியின் பங்கு விலையில் பாதிப்பை ஏற்படுத்தாது" என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

வெகுஜன செய்தி ஊடகத்தைப் பொறுத்த வரையில் 2005ல் ஜாக்சன் மீது கலிபோர்னியாவில் சிறாரிடம் தவறாக நடந்து கொண்டது பற்றி விசாரணை நடந்தபோது, பல செய்தி நிறுவனங்களும் ஒவ்வொரு உவப்பற்ற விவரத்தையும் உயர்த்திக் காட்டி மிக இழிவான முறையில் அவருடைய தனி வாழ்வைப் பற்றி ஊகங்களை தெரிவித்தன. அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டது ஒரு கூட்டு ஏமாற்றக் குரலைத்தான் பரபரப்பு செய்தி ஊடகத்திடம் இருந்து வெளிப்படுத்தியது. ஜாக்சனுக்கு சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்ற வாய்ப்பு அவரை இழிவுபடுத்திக் கூறும் தகவல்களை வெளியிட்டு, பயன்படுத்திக் கொள்ளும் வாயப்பு என்றுதான் கருதப்பட்டது.

அவருடைய மரணத்திற்கு பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் குறிப்பிட்டது: "அவர் உயிருடன் இருக்கும்போது இரக்கமற்றமுறையில் அவரை தாக்கிய பரபரப்பு ஏடுகள், "வாக்கோ ஜாக்கோ" என்று அவருடைய தன்னிச்சை நடவடிக்கைகள், பெருகிய முறையில் வினோதமான தோற்றங்கள் மற்றும் சிறாரிடம் தவறாக நடந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அவரை முத்திரையிட்ட ஏடுகள், திடீரென "ஒரு பில்லியன் உயிர்களுக்கு இசையமுதம் கொடுத்த நபர்" என்று பெரும் பாராட்டை தெரிவிக்கின்றன."

இத்தகைய விவகாரங்களில் மிகவும் கசப்பான தாக்குதலை செய்தவற்றுள் ஒன்றான ரூபர்ட் மர்டோக்கின் பிரிட்டனில் இருக்கும் Sun உதாரணத்திற்கு வெள்ளியன்று பிரசங்கம் செய்யும் விதத்தில் இருந்து பின்வருமாறு கூறியது: "தன்மீது குற்றம் சுமத்தியவர்களிடம் அவர் போராடினார், ஆனால் அவருடைய உடல்நலம் முறிந்தது, அவருடைய செல்வம் அழிந்தது. இன்று உலகம் நேசித்த மைக்கல் ஜாக்சனை நாம் நினைவுகூருவோம். ஜாக்சன் ஐந்து என்ற சிறுவயது நட்சத்திரம், அவருடைய திறமை, பெரும் ஈர்க்கும் தன்மை, சிறப்பு இயல்புகள் உலகைக் கவர்ந்தன....

"உலகம் முழுவதும் அவருடைய அரங்காக இருந்தது; மனிதகுலம் முழுவதும் அவருடைய பார்வையாளர்கள். அவரைப் பார்க்கும் நல்வாய்ப்பு பெற்றவர்கள் அதை மறக்கவே மாட்டார்கள். அவருடைய இசைத்தட்டுக்களை வைத்துள்ளவர்கள் --அவை இல்லாதவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார்கள்-- அவற்றை இன்று கேட்டு, கலங்கி அழுவர்."

இத்தகைய ஊழல் மலிந்த, பாசாங்குத்தன சூழலில்தான் ஜாக்சன் செயல்பட்டார். அதுவே அவரைத் திறமையுடன் அழித்துவிட்டது. அதன் உடனடி உளரீதிக்காரணம் எதுவானலும் அவருடைய மரணத்தை அவருடைய வாழ்வின் காயங்களில் இருந்து பிரித்துப் பார்த்தல் ஒவ்வாச் செயலாகிவிடும். 40 ஆண்டுகளாக சிறப்புத் திறமையுடன் களிக்க வைத்தவர், முடிவில்லாமல் செய்தி ஊடகத்தால் தொடர்புபட்டவர், அவதூறுகளால் அலைக்கழிக்கப்பட்டவர், மீண்டும் திரும்பி உயரிடத்திற்கு வருவதற்கு பெரும் அழுத்தத்திற்கு உட்பட்டவர், பல ஆண்டுகளாக உடல் நலம் சரியாக இல்லாதவர், இப்படிப்பட்ட ஜாக்சன் ஜூலையில் இருந்து மார்ச் 2010 வரை தொடர்ச்சியாக கடும் உழைப்பை காட்ட வேண்டிய 50 தொடர் இசை நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன் காலமானார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தவர்கள் அவற்றிற்கு முன்பு ஜாக்சன் "தொடர்ச்சியான, கடின மருத்துவ சோதனைகளுக்கு" உட்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்; இந்த நிகழ்ச்சிகள் பல நூற்றுக்கணக்கான மில்லியன்கள் கடனில் இருந்து மீள்வதற்கு பாடகருக்கு ஓரளவு உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜாக்சனை சூழ்ந்திருந்த கொடூர, இரக்கமற்ற தன்மைக்கு ஏற்ப பிரிட்டனின் பந்தயப் பணம் சவால் விடும் நிறுவனம் வில்லியம் ஹில் ஜாக்சன் தான் முதலில் அறிவிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு வந்தால் கட்டிய பணம் போல் எட்டு மடங்கு தருவதாக அறிவித்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் பொதுவிளம்பர ஆலோசகர், முன்பு பாடகருக்கு துணையாக இருந்த மைக்கல் லெவைன், ஒரு செய்தியாளர் கூட்டத்தில் "ஒரு மனிதரால் இந்த அளவிற்கு நீடித்த அழுத்தத்தை தொடர்ந்து தாங்க இயலாது." எனத்தெரிவித்தார்:

இவருடைய வாழ்க்கைப் போக்கில் பல நிகழ்வுப்போக்குகள் ஒன்றாக இணைந்து மைக்கல் ஜாக்சனின் விதியை முடித்தன. இதில் முதன்மையானது அவருடைய மகத்தான திறமை என்பதைக்கூறத் தேவையில்லை. இந்தக் கட்டத்தில் அவருடைய தன்னைக் காத்துக் கொள்ளும் செய்தி ஊடகப் பரபரப்பு மற்றும் மிகைப்படுத்தலின் பின்னணியில் நின்று அவர் பெற்றிருந்த சிறப்புக்களை பற்றிய துல்லிய சித்திரத்தை கொடுக்க இயலாது. 1968ல் அவர் Motown Records க்கு அப்பொழுது 10 வயதே நிரம்பியிருந்த ஜாக்சன் கொடுத்த பாடல் தேர்விற்கான நிகழ்ச்சியின் ஒளிப்பதிவுகாட்சி எப்படிப்பட்ட புகழ்வாய்ந்த இசைமேதையாக அவர் இருந்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. ஒரு வர்ணனையாளர் குறிப்பிடுவது போல், "ஜாக்சன் நடனமாடுகிறார், கூவுகிறார், அரங்கில் அசைந்து சுற்றி வருகிறர், அவர் கை கால்கள் ஏதோ தனியே இயங்குவது போல் உள்ளன, வெற்றிகரமாக மனித உடல்கூட ஜடப் பொருள் போல் இல்லாமல் ஒரு கருவி போல் இயங்க முடியும் என்பதை வெற்றிகரமாக நிரூபித்துக் கொண்டு." (Guardian)

இந்தியானாவின் தொழில்நகரமான காரியில் வளர்ந்த ஜாக்சன் அக்காற்றில் இருந்த இசை மற்றும் உணர்வை உள்வாங்கினார்; மேலும் பொதுஉரிமைகள் இயக்கத்தின் போராட்டங்கள், தியாகங்கள் ஆகியவற்றால் வெளிவந்த வணிக வாய்ப்புக்களையும், முந்தைய தலைமுறைகளின் ஆபிரிக்க-அமெரிக்க கலைஞர்களின் மரபியத்தில் இருந்து வந்த வாய்ப்புக்களையும் துய்த்தார்.

நாம் 2003ல் குறிப்பிட்டபடி, ஒரு கஷ்டமான குடும்ப பின்னணியில் வந்த "ஜாக்சன் அவருடைய உளரீதியான பலவீனங்கள் இருக்கையில், மிகப் பொருத்தமான நேரத்தில் என்று இல்லாமல், அமெரிக்க கேளிக்கைத் துறையின் எலும்பை முறிக்கும் இயந்திரத்தின் பாதிப்பிற்கு உட்பட்டார்."

"ஜாக்சனின் மிகப் பெரிய தனிநபர் வெற்றி அமெரிக்காவில் ரேகன் ஆண்டுடன் பிணைந்திருந்தது; இக்காலத்தில் பல அமெரிக்கர்கள் 1970 களின் தீவிரமயமாக்கலை பின்னுக்கு தள்ளிவிட்டு, செல்வந்தர்கள் ஆவதில் கவனம் செலுத்தினர். தன்னலம், எல்லா வசதிகளையும் துய்த்தல், தனிநபர் வாழ்விற்கு மேன்மை, பேராசை ஆகியவைதான் முக்கியமாக கருதப்பட்டன. ஜாக்சன் மகத்தான ஆற்றல் பெற்றிருந்த இசைவாணராக, நடனமாடுபவராக, பாடல்கள் எழுதுபவராக இருந்தார். ஆனால் ஒருவர் தன் இசையின் மூலம் எதைப்பற்றியாவது கூறுதல் என்பது இயல்பாக வருவதும் இல்லை, இடைவிடா பயிற்சி மூலமும் வருவதில்லை, பெற்றோர் கொடுக்கும் அழுத்ததின் மூலமும் வருவதில்லை."

"ஜாக்சன் 5 பரந்த எதிர்ப்புக்கள் இருந்த காலத்தில், குறிப்பாக மோடெளனில் இசைத் துறையில் சிறப்பாகத் தோன்றினார். "கறுப்பர் முதலாளித்துவத்தில்" அயரா நம்பிக்கை கொண்டிருந்த இசைப்பதிவாளர் பெர்ரி கோர்டியின் நிறுவனம் கூட தீவிரமயமான சிந்தனைகளுடன் தொடர்பைப் பெறாமல் இல்லை.

"1971 ல் கோர்டியும் பாடகர் மார்வின் கேயேயும் ஒரு வியட்நாம் எதிர்ப்பு போர்ப் பாடலான "What's Going On" என்பதை மார்வின் கேயேயின் பதிவு செய்யும் விருப்பம் தொடர்பாக மோதிக்கொண்டனர். கேயேயின் நெருங்கிய உறவினர் வியட்நாம் போரில் இறந்திருந்தார்; அவருடைய சகோதரர் அங்கு மூன்று முறை போர்க்களத்திற்கு (இசை நிகழ்ச்சிகளுக்காக) சென்றவர், அந்த நேரத்தில் "உலகம் என்னைச் சுற்றி வெடித்துக்கொண்டிருக்கையில், நான் எப்படி காதல் பாட்டுக்களை பாடிக் கொண்டிருக்க முடியும்" என்று உரக்கச் சிந்தித்தார். மற்ற கறுப்பு பாடகர்கள் Stevie Wonder போன்றவர்கள் 1970களின் ஆரம்ப ஆண்டு ரிச்சார்ட் நிக்சனைப் பெரிதும் குறைகூறிய பாட்டுக்களை பதிவு செய்தனர். கர்ட்டிஸ் மேபீல்ட் போர், இனவெறி ஆகியவை பற்றித் தளராத எதிரியாவார்.

"தங்கள் குற்றம் ஏதும் இல்லாத நிலையில், ஜாக்சன்கள், "பபிள்காம் ஆன்மா" என்று பின்னர் அறியப்பட்ட அனைத்திற்கும் இசைத் துறை கொடுத்த மாற்று மருந்தாகச் செயல்பட்டனர். 1970களின் கடைசிப் பகுதியில் ஜாக்சன் தன்னுடைய சிறுவயது உருவகப்பாட்டில் இருந்து விலகினார்; ஆனால் அவருடைய சாதனையை மிகைப்படுத்த வேண்டிய தேவையில்லை. மிக அசாதாரணமான திறைமைகளை அவர் வெளிப்படுத்தினார்; ஆனால் அவருடைய பாடல்களின் பொருளுரைகள் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளுணர்வைக் காட்டவில்லை; உறுதியாக எதிர்ப்பின் உயரிடங்களையும் காட்டவில்லை. ஜாக்சன் பற்றிய செய்தி ஊடக விவாதங்களில், அவருடைய உண்மையான திறன் பற்றிய பாராட்டிற்கும், செய்தியாளர்களும் தொழில்துறை உட்பிரிவு பெரிய மனிதர்களும் அவருடைய விற்பனை விவரங்கள், தனிச் சொத்துக் குவிப்பு பற்றி உயர்வாகக் கூறியதிற்கும் இடையே வேறுபாட்டைக் காண வேண்டும்."

இது ஜாக்சனின் ஆடல், பாடலில் இருந்த தேர்ச்சியின் திறனைக் குறைத்துவிடாது. அவை ஒருவேளை அவற்றின் உயர்ந்த நிலையை 1980 களில் அடைந்திருக்கக் கூடும். அக்கால கட்டத்தில் அவருடைய இசை நிகழ்வைப் பற்றி WSWS வாசகர் ஒருவர் நினைவு கூறுகிறார்: "இக்குழு பல பழைய பாடல்களை இணைந்து பாடியது; பின்னர் மைக்கல் தன் பாடல்களை இசைப்பார். சில நேரங்களில் அவர் தன் பாடல்களை வரிசையாகப் பாடி சற்று இடைவெளி கொடுக்க அரங்கில் இருந்து ஒதுங்கும்போது, மற்ற ஜாக்சன்கள் இசைப்பர்; ஜேர்மைன் தன்னுடைய புதிய தனிப்பாட்டுத் தொகுப்பில் இருந்து சில பாடல்களை பாடுவார். ஆனால் இது நேரத்தை ஓட்டுவதற்குத்தான். அனைவரும் மைக்கல் மீண்டும் பாட வருவதற்கு காத்திருப்போம். இதன் பின் மைக்கல் அரங்கிற்கு மீண்டும் வருவார், அரங்கம் முழுவதும் கிறுக்குப் பிடித்தாற்போல் வெறி கொள்ளும்.... எப்படிப்பட்ட நடன மேதை! எத்தைகைய ஆற்றல்! உண்மையிலேயே அவர் பார்வையாளர்களை மயக்கினார்."

ஒப்புமையில் புதிய தொழில்நுட்பம் வடிவமைப்புக்கள் ஆகியவற்றின் நலன்களையும் ஜாக்சன் கொண்டிருந்தார்: இசை வீடியோ 1980களின் தொடக்கத்தில் MTV (இசைத் தொலைக் காட்சி), மற்றும் கேபிள் தொலைக்காட்சி இணையங்கள் அறிமுகமானவுடன் முக்கியத்துவம் பெற்றது. 1983ல் கிட்டத்தட்ட 14 நிமிஷங்கள் ஓடிய அவருடைய "Thriller" பாடல் வெளியிடப்பட்டது; இதுகாறும் இல்லாத வகையில் அதற்கான செலவு அரை மில்லியன் டாலர்கள் என்று கூறப்பட்டது. "Thrillier" ஆல்பம் வியத்தகு முறையில் 109 மில்லியன் பிரதிகள் விற்பனையை கண்டது; எல்லாக் காலத்திலும் தலைசிறந்த விற்பனையானது என்ற புகழையும் கொண்டது.

கேளிக்கை மற்றும் செய்தி ஊடக உலகிற்கு அத்தகைய மாபெரும் வெற்றி பணம் மற்றும் இரத்தத்தை குறிக்கிறது. ஒருபுறத்தில் CD, DVD விற்பனைகள், நேரடி நிகழ்ச்சிகள், ஒப்புதல் நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் இன்னும் பலவும் பெருநிறுவனங்களுக்கு மகத்தான இலாபத்தை தோற்றுவிப்பவை இருந்தன. இவை ஜாக்சன் இன்னும் பலரின் அசாதாரண உண்மைத் திறன்களை சுரண்டி வாழ்ந்தன. பல ஆண்டுகள் பாடல் திறமை அல்லது பாடல்களை இயற்றும் திறமை, நேர்மை, தயாள குணம், மனிதத்தன்மை என்று இசைக் கலைஞர் தன்னுடைய இசைக்கு கொண்டுவரும் தன்மைகள் தொழிலுக்கு அவற்றின் பண வரவைப் பொறுத்துத்தான் மதிப்பைக் கொண்டிருந்தன.

மறுபுறத்தில், புகழ் பெற்றவரே அமெரிக்காவில் முக்கிய, காத்திரமற்ற பங்கை கொள்ளுகிறார். முக்கியமான பிரச்சினைகள் பற்றி மிகக் குறைவான உத்தியோகபூர்வ விவாதங்கள் நடக்கும் ஒருநாட்டில் (வலதுசாரிக்கும் மற்றதற்கும், இன்னும் அதிக வலதுசாரிக் கருத்துக்களுக்கும் இடையே), அரசியல் வாழ்வு என்பது கிட்டத்தட்ட முன்கூட்டி எழுதி வைக்கப்பட்டதை நடத்துவதாக இருக்கும்போது, செல்வந்தர்கள், புகழ் பெற்றவர்களுடைய வாழ்க்கையை பற்றி ஆர்வத்துடன் காணும் மனப்பாங்குதான் வெற்றுத்தன்மையை நிரப்புவதுடன் மக்களின் கவனத்தை உண்மையான தேவைகள், நலன்கள் ஆகியவற்றில் இருந்து திசை திருப்புகின்றன.

ஆனால், அதே நேரத்தில், மக்களுடைய பெரும் ஏமாற்றமும் அதிருப்தியும் மறைவதில்லை. செய்தி ஊடகத்தால் வளர்க்கப்பட்ட மக்களுடைய "புகழ் வாய்ந்தவர்கள்" பற்றிய அணுகுமுறை விமர்சனமற்ற பாராட்டிற்கும் எதிர்ப்பிற்கும் இடையே பலநேரமும் ஊசலாடும். பரபரப்பு ஏடுகள், உரை நிகழ்வுகள் மற்றும் "கேளிக்கைச் செய்தி நிகழ்ச்சிகள்" போன்றவை இந்த உணர்வுகளை தங்கள் சொந்த நோக்கத்திற்கு திரிக்கின்றன. துரதிருஷ்டவசமான விளையாட்டுவீரர்கள், பாப் பாடகர் அல்லது திரைப்படக் கலைஞர் ஆகியோர் உயரிடத்தில் இருந்து விழுந்தால் உண்மையில் மிக அரக்கத்தனமான முறையில் தாங்கள் சித்தரிக்கப்படுவதைக் காண்பர்.

ஜாக்சன் போன்றோருக்கு, அரிய அளிப்புக்கள் இருந்தும் உளரீதியாக ஆழ்ந்த உளைச்சலில் இருப்பவர்களுக்கு, வன்முறையாக அலைக்களிக்கப்பட்டு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து கொண்டே இருப்பவர்களுக்கு, ஒரு நாள் பெரும் பாராட்டு, மறுநாள் ஏளனப்படுத்தப்படுதல், அதற்கும் மறுநாள் வெறுக்கப்படல் என்ற நிலை குறிப்பிடத்தக்க வகையில் வருத்தத்தை தந்திருக்க வேண்டும். தன்னுடைய சொற்களின்படியே அரங்கில் தன்னுடைய நிகழ்ச்சிக்காகவே வாழ்ந்தவர், ஏராளமான முகமறியா மக்களின் பாராட்டிற்காகவே வாழ்ந்தார்.

இப்பொழுது, மிகப்பெரிய செய்தி ஊடக, கேளிக்கைத் துறை இயந்திரம் அடுத்த பலியாளரை நோக்கி கண்களைத் திறந்து வைத்துக் காத்திருக்கையில் ஜாக்சன் மரணத்தில் இருந்து எவ்வளவு ஆதாயத்தை திரட்ட முடியுமோ அதை அபகரிக்க முற்படும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved