World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

China: Protests in Xinjiang point to deepening social tensions

சீனா : சின்ஜியாங்கில் எதிர்ப்புக்கள் ஆழமடைந்துவரும் சமூக பதட்டங்களை காட்டுகின்றன

By John Chan
8 July 2009

Use this version to print | Send feedback

ஞாயிறன்று மேற்கு சிங்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியின் தலைநகரான உரும்க்கியில் ஆயிரக்கணக்கான மக்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சீன பாதுகாப்புப் படைகள் கொடூரமாக நசுக்கின. இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் இன வகை பதட்டங்கள் ஆழமடைந்துவரும் உலக பொருளாதார பின்னடைவினால் எரியூட்டப்பட்டுள்ள சீனாவில் வளர்ந்துவரும் சமூக அரசியல் நெருக்கடியின் அடையாளம் ஆகும்.

எண்ணெய் வளம் மிக்க ஆசிய மாநிலமான ஜிங்ஜியாங் சீனாவின் துருக்கி மொழி பேசும் எட்டு மில்லியன் முஸ்லிம் சிறுபான்மையினரான உய்குர்களுக்கு தாயகம் ஆகும். ஜிங்ஜியாங்கில் 20 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்; இதில் ஹுய் முஸ்லிம்கள், மங்கோலியர்கள், காஜக்குகள் இன்னும் மற்ற மத்திய ஆசிய சிறுபான்மையினருடன் ஹான் சீனர்களும் வசிக்கின்றனர். இந்த மூலோபாயமிக்க பகுதியில் அமைந்த இம்மாநிலம் அதன் எல்லைகளை ஆப்கானிஸ்தான், ரஷ்யா, இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுடன் கொண்டிருப்பதுடன், மத்திய ஆசியாவில் இருந்து சீனா கட்டமைத்த எண்ணெய் மற்றும் எரிவாயுக் குழாய்த் திட்டங்களுக்கு இடைவழி நிலமும் ஆகும்.

ஆரம்பத்தில் மாலை 6 மணிக்கு உரும்கி பெரிய கடைவீதியில் 300 உய்குர் மாணவர்களை மட்டுமே கொண்டிருந்த ஞாயிறு எதிர்ப்பானது, கடந்த வாரம் தெற்கு சீனாவில் உய்குர் தொழிலாளர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு நீதி கேட்டு சீற்றத்துடன் எழுந்த கோரிக்கைகளால் எரியூட்டப்பட்டது. ஞாயிறு ஆர்ப்பாட்டம் பார்வையாளர்கள், பஸ்ஸில் பயணித்தவர்கள் சேர்ந்தபோது விரைவில் 1,000 க்கும் அதிகமாக ஆயிற்று. இதைத்தொடர்ந்து அங்கு போலீஸ் வந்தது, கிட்டத்தட்ட இரவு 7 மணிக்கு எதிர்ப்பாளர்கள் கற்களையும் காய்கறிகளையும் போலீசார் மீது வீசத்தலைப்பட்டனர்; அதன் பின் ஹான் குடிமக்களையும் அருகில் இருந்த கடைகளையும் தாக்கத் தொடங்கினர். கலகப்பிரிவு போலீஸ் மற்றும் துணை இராணுவத் துருப்புக்கள் எதிர்ப்பை நீர் பீய்ச்சி அடித்தல், கண்ணீர்ப்புகை, தடியடி இவற்றைக் கொண்டு அடக்கும் வரை இந்த அமைதியின்மை, சில மணி நேரங்கள் நீடித்தது.

உத்தியோகபூர்வ புள்ளி விவரங்களின்படி, குறைந்தது 156 பேராவது கொல்லப்பட்டனர், 1,000க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். 200 கடைகள், 14 வீடுகளுக்கும் மேலாக சேதமுற்றதுடன் 261 வாகனங்களுக்கும் கலகத்தின்போது தீ வைக்கப்பட்டது. ஆனால் எவ்வளவு உய்குர் எதிர்ப்பாளர்கள் பூசலின்போது கொல்லப்பட்டனர் என்பதை சரி பார்ப்பது கிட்டத்தட்ட இயலாத காரியம் ஆகும்; ஏனெனில் சீன அதிகாரிகள் இணையதளத்தையும் உரும்கிக்கு செல்லும் மொபைல் தொலைபேசி இணைப்புக்களையும் துண்டித்து விட்டனர்.

அரசாங்க செய்தி ஊடகம் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பதட்டங்களை அதிகரிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபட்ட உய்குர்கள் ஹான் மக்களை தாக்கியதாக சித்தரித்துள்ளனர். நேற்று ஆயிரக்கணக்கான ஹான் சீனர்கள், கத்திகள், கோடாரிகள், எஃகு குழாய்கள் ஆகியவற்றை ஏந்தி உரும்கியின் உய்குர் பகுதியில் நுழைந்து பழிவாங்க போவதாக அச்சுறுத்தினர். நகரம் முழுவதும் இனவழி மோதல்கள் முழு அளவில் வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் கலகப் போலீசார் ஹான் சீன ஆர்ப்பாட்டக்காரர்களை கண்ணீர்ப்புகை குண்டுகளுடன் அடக்கினர்.

ஸ்ராலினிச சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சி ஞாயிறன்று நடந்த உரும்கி எதிர்ப்பை ஒரு "வன்முறை நிறைந்த குற்றம்" என்று அறிவித்து, இது அடக்கப்பட வேண்டியது என்று கூறி இதற்குக் காரணமாக "மூன்று சக்திகள்" --பிரிவினைவாதம், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம்--இருப்பதாகவும், அவை புலம்பெயர்ந்துள்ள உய்குர் குழுக்களால் ஊக்குவிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது. இத்தகைய விடையிறுப்பு மார்ச் 2008ல் திபெத்தில் நடந்த எதிர்ப்புக்கள் நாடுகடந்து வாழும் தலாய் லாமாவால் தூண்டிவிடப்பட்டது என்ற பெய்ஜிங்கின் கூற்றுக்களைத்தான் எதிரொலிக்கிறது.

அரசாங்க அறிக்கை ஒன்று, முன்கூட்டித் திட்டமிடப்பட்ட, "முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட வன்முறைக் குற்றத்தை", இது "வெளியில் இருந்து தூண்டப்பட்டது, இயக்கப்பட்டது, உள்நாட்டில் இருக்கும் சட்டவிரோத சக்திகளால் செயல்படுத்தப்பட்டது" என்று கண்டித்துள்ளது. நாட்டை விட்டு புலம்பெயர்ந்து வாழும் வணிகப் பெண்மணி ரெபியா கதீர் தலைமையிலான உலக உய்குர் காங்கிரஸ் (WUC) என்ற அமைப்பை இதற்காக பெய்ஜிங் குற்றம் சாட்டியுள்ளது.

பெய்ஜிங்கின் குற்றச்சாட்டுக்ளை நிராகரித்த WUC ஞாயிறு ஆர்ப்பாட்டத்தில் 10,000 பேர் பங்கு பெற்றனர் என்றும் 600 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் என்றும் கூறியுள்ளது. UAA எனப்படும் உய்குர் அமெரிக்கச் சங்கம் ஜின்ஜியாங் பல்கலைக்கழத்திற்கு விரைந்த ஆயுதமேந்திய துருப்புக்களால் இரண்டு டஜன் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் அல்லது கவச வாகனங்கள்ளால் நசுக்கிக் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டி, UAA, மாணவர் எதிர்ப்பு தொடக்கத்தில் அமைதியாகத்தான் இருந்தது என்றும், அரசாங்க எதிர்ப்பு அல்ல என்றும், ஆர்ப்பாட்டக்காரர்கள் சீன் கொடியைத்தான் பிடித்துச் சென்றனர் என்றும் கூறியுள்ளது. போலீசார் கூட்டத்தை தாக்கிய பின்புதான் அது வன்முறையில் இறங்கியது என்று UAA தெரிவித்துள்ளது.

இந்தப் பூசல்கள் இன்னும் பரந்த அமைதியின்மையை தூண்டிவிடக்கூடும் என்பதை பெய்ஜிங் நன்கு உணர்ந்துள்ளது. உரும்கியில் ஊரடங்கு உத்தரவுகளை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது, மொபைல் தொலைபேசி தடுப்பு மற்றும் இணையதள தடுப்புக்களை இன்னமும் தொடர்கிறது. மொத்தம் 20,000 பாதுகாப்பு படையினர், தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் கவச வண்டிகளுடன் அப்பகுதியில் நிறுத்தப்பட்டு நகரம் மூடப்பட்டுள்ளதுபோல் உள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி போலீசார் 1434 பேரைக் கைது செய்துள்ளது.

இத்தகைய பலத்த பாதுகாப்பு இருந்தும், நூற்றுக்கணக்கான உய்குர்கள், பெரும்பாலானவர்கள் மகளிர், செவ்வாயன்று பெரும் ஆயுதமேந்திய போலீசாரை எதிர்கொண்டு, தங்கள் கணவர்களையும் மகன்களையும் விடுவிக்குமாறு கோரினர். திங்களன்று ஒரு சிறிய எதிர்ப்பு ஜிங்ஜியாங்கின் இரண்டாம் பெரிய நரமான காஷ்கரில் நடைபெற்றதாக தகவல்கள் வந்துள்ளன.

வர்க்கப் பிரச்சினைகள்

இத்தகைய சீற்றம் மிகுந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆரம்ப தூண்டுதல் ஜிங்ஜியாங்கில் இருந்து தொலைதூரத்தில் இருந்தது--கடந்த வாரத் தொடக்கத்தில் உய்குர் மற்றும் ஹான் தொழிலாளர்களுக்கு இடையே வன்முறைகூடிய கைகலப்பு ஒன்று தெற்கு சீனாவில் முக்கிய ஏற்றுமதிப் பகுதியான குவாங்டோங் மாநிலத்தில், ஷாவோகுவான் நகரத்தில் உள்ள Early Light விளையாட்டு பொம்மை ஆலையில் ஏற்பட்டது.

ஒரு ஹாங்காங் தொழிலதிபருக்கு உரிமையான Early Light, நிறுவனங்கள் குறைவூதிய தொழிலாளர்களை வறிய இன சமூகங்களில் இருந்து எடுக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சிக்கு இணங்க சமீபத்தில் 800 உய்குர் தொழிலாளர்களை அண்மையில் வேலைக்கு சேர்த்தது; இது ஏற்றுமதி பெரும் சரிவில் இருக்கும்போது நடந்துள்ளது. தன்னுடைய வேலையை இழந்த ஒரு ஹான் தொழிலாளர் உள்ளூர் வலைத் தளத்தில் ஆறு உய்குர் தொழிலாளர்கள் ஆலையில் இரு பெண்களை கற்பழித்தனர் என்ற குற்றச் சாட்டைக் கூறியிருந்தார்--இக்கூற்று பின்னர் போலீசாரால் பொய்யென என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போலிக்கூற்று, இனவகை வெறுப்பினால் உந்தப்பட்டு, பெய்ஜிங் ஹான் வெறியை வளர்ப்பதை ஊக்குவித்தது; இதையொட்டி உய்குர்கள்மீது ஆலை பொது வசிக்குமிடத்தில் வன்முறைத் தாக்குதலுக்கு வழிவகுத்தது. இதில் இரண்டு உய்குர்கள் கொல்லப்பட்டனர், 400 பேருக்கும் அதிகமான போலீசார் பூசலை நிறுத்த அழைக்கப்பட்டனர்.

வதந்தியை பரப்ப பொறுப்பாய் இருந்த தனிநபர் கைதுசெய்யப்பட்டாலும், உய்குர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் பற்றிய வீடியா காட்சிகள் இணையதளத்தில் போடப்பட்டன; அவை விரைவில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் ஜிங்ஜியாங் என்ற இடத்தில் சீற்றம் மிகுந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தூண்டு கோலாக இருந்தன.

கொலைகள் பற்றிய கவலையுடன் கூட, பெய்ஜிங் உய்குர்களுக்கு கெளரவமான வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை கொடுக்கத் தவறியதால் ஏற்பட்ட விரக்தியினாலும், ஜிங்ஜியாங், மற்றும் ஏனைய உட்பகுதிகளில் வாழும் மக்களுக்கும் செல்வம் கொழிக்கும் கிழக்கு மாநிலங்களில் இருக்கும் மக்களுக்கும் இடையிலான சமத்துவமின்மை உள்பட, பரந்த சமூக சமத்துவமின்மையினாலும் எதிர்ப்புக்கள் எரியூட்டப்பட்டன.

ஷங்காய்க்கு எரிவாயுவை எடுத்துக் கொண்டு செல்லும் 4,200 கிலோமீட்டர் மேற்கு-கிழக்கு குழாய்த்திட்டம் நிறைவுற்றதை தொடர்ந்து, ஜிங்ஜியாங் ஒரு சக்தி பூரிப்பை கொண்டுள்ளது. டாரிம் பள்ளத்தாக்கில் இயற்கை எரிவாயு உற்பத்தி 2000த்தில் இருந்து 2007க்குள் இருபது மடங்கு அதிகரித்துள்ளது; ஆனால் பரந்த இலாபங்கள் உள்ளூர் மக்களுக்கு பயன் அளிக்கவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் வந்த பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையின்படி, ஜிங்ஜியாங் அரசாங்கம் 2005ல் இப்பகுதியில் பெட்ரோ கெமிக்கல் தொழில்கள் மூலம் தோற்றுவிக்கப்பட்ட 14.8 பில்லியன் யுவான் வரிவருவாயில் 240 மில்லியன் யுவான் மட்டுமே பெற்றது. எண்ணெய் தொழிலில் சில உய்குர்களே அதிலும் மிகக் குறைந்த ஊதியம் கொடுக்கும் வேலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ள நிலையில், இனவழி பாகுபாடுகள் எங்கும் அதிகமாகி உள்ளன. ஒரு முன்னாள் PetroChina ஊழியர் பைனான்சியல் டைம்ஸ்- இடம் Korla துணைநிறுவனத்தில் இரு உய்குர் காரோட்டிகள் மட்டுமே இருப்பதாகக் கூறினார். "ஆனால் அவர்களும் வேறு வேலைப்பிரிவிற்கு மாற்றப்பட்டனர், ஏனெனில் உயரதிகாரிகள் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் என்று நினைக்கின்றனர்" என்று அவர் கூறினார்.

இப்பகுதியில் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்காக, பெய்ஜிங் ஆப்கானிஸ்தானிலும் மத்திய ஆசியாவிலும் அமெரிக்கா நிலைகொண்டுள்ளதை எதிர்கொள்ளும் முகமாக 2001ல் ரஷ்யா மற்றும் நான்கு மத்திய ஆசிய நாடுகளுடன் SCO எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை நிறுவியுள்ளது. பல "பயங்கரவாத எதிர்ப்பு" பயிற்சிகளை SCO நடத்தியுள்ளது. எந்தவித பிரிவினைவாத கிளர்ச்சிகளுக்கும் எதிரான தயாரிப்பாக ஜிங்ஜியாங்கிலும் ஒன்று நடைபெற்றது. இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் பெய்ஜிங்மீது அதிக விரோதப் போக்கை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆகஸ்ட்டில் ஜிங்ஜியாங்கில் 18 போலீசார் கொல்லப்பட நேர்ந்த தாக்குதல்களுக்காக, ஏப்ரலில் இரு உய்குர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

அதே நேரத்தில் வாஷிங்டன் பெய்ஜிங்கின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு" ஒப்புதல் கொடுத்தமையானது, ஜிங்ஜியாங்கில் அனைத்து எதிர்ப்பும் "பயங்கரவாதத் தன்மை உடையவை" என்ற ஸ்ராலினிச ஆட்சியின் கூற்றுக்களை நெறிப்படுத்தியுள்ளது. 2001ல் முன்னாள் புஷ் நிர்வாகம் கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் ஒரு "பயங்கரவாத அமைப்பு" என்று வரையறை செய்து சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் போட்டது. இதை ஒட்டி பெய்ஜிங்கின் ஆதரவு ஆப்கானிஸ்தான்மீதான அமெரிக்கப் படையெடுப்பிற்கு கொடுக்கப்பட்டது. அமெரிக்க இராணுவம் 17 உய்குர்களை (சீன நாட்டினர்) ஆப்கானிஸ்தானில் சிறைப்பிடித்து அவர்களை குவாண்டநாமோ குடாவில் அடைத்தது. இன்று அவர்களை இன்னும் காவலில் வைத்திருப்பதற்கு அமெரிக்காவிடம் ஆதாரம் இல்லாதபோது, வெகு சில நாடுகள்தான் அக்கைதிகளை ஏற்கத் தயாராக உள்ளன

உய்குர்கள் கிட்டத்தட்டட உரும்கியின் 2.3 மில்லியன் மக்களில் 10 சதவிகிதத்தினராக உள்ளனர்; நகரத்தின் மிக ஒடுக்கப்பட்ட தட்டுக்களில் உள்ளனர். இந்த மாநிலத்தில் பெய்ஜிங்கின் போலீஸ் அரசு வழிமுறைகள் இருப்பதும், அதன் கொள்கையான ஹான் சீனர்கள் குடியேற்றத்திற்கு ஆதரவு என்பதும் இப்பகுதியில் பதட்டங்களை ஆழப்படுத்தியுள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக ஜிங்ஜியாங்கில் இருக்கும் அனைத்து இனவழி பதட்டங்களும் சீன முதலாளித்துவத்தின் நலிந்த தன்மையை உயர்த்திக் காட்டுகின்றன, இது முழு தொழிலாள வர்க்கமும் சுரண்டப்படும்போது தீவிரமாகியுள்ளது; நாடு முழுவதும் மகத்தான சமூக, இனவழி பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் சந்தைச் சீர்திருத்தம் CCP உடைய முந்தைய சிந்தனைப்போக்கு நெறியையும், தான் ஒரு சோசலிச இயக்கம் என்ற அதன் கூற்றையும் கீழறுத்து விட்டது. ஆட்சி, ஹான் இன வெறிக்கு மாறியிருப்பது, நகர்ப்புற மத்தியதர வர்க்கங்கள் மற்றும் புதிய முதலளித்துவ உயரடுக்கின் பகுதியினரிடையே ஆதரவை அதிகரிக்கும் நோக்கம் கொண்டது, 100 மில்லியன் மக்களுக்கு மேல் உள்ள நாட்டில் 50 இனவழி சிறுபான்மைக்கும் மேல் இருக்கும் நாட்டில் ஆழ்ந்த அரசியல் உட்குறிப்புக்களைக் கொண்டுள்ளது.

ஜிங்ஜியாங் எதிர்ப்புக்கள் ஆழ்ந்துவரும் சிந்தனைப்போக்கு மற்றும் அரசியல் நெருக்கடியின் வெடிப்புத்தன்மை மிகுந்த வெளிப்பாடு ஆகும். 1949ல் அதிகாரத்திற்கு வந்தபின், CCP ஒரு சோசலிச வருங்காலத்தை தான் கொண்டுவந்து இன பிரிவினையை அகற்றும் கருத்துக்களைக்கூறி சீனாவில் இருந்த பெரும்பாலான இனவழி சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற்றது. ஆனால் 1949ம் ஆண்டுப் புரட்சி, ஒரு சோசலிச அல்லது கம்யூனிசப் புரட்சி அல்ல; இது ஸ்ராலினிச முன்னோக்கான சோசலிசத்திற்கான தேசிய பாதை என்பதை அடிப்படையாகக் கொண்டது; இது பின்னர் கடந்த 30 ஆண்டுகளில் முதலாளித்துவ சந்தை முகாமிற்கு மாவோயிச ஆட்சியால் வெளிப்படையாக திரும்புவதற்கு வழிவகுத்தது.

சீனாவை முதலாளித்துவ உலகின் தொழிற்கூடமாக பெய்ஜிங் மாற்றியிருப்பது, சமூகச் சமத்துவமின்மையை பெரிதும் அதிகப்படுத்தியுள்ளது மட்டுமின்றி, இனவகை உறவுகளை மட்டுப்படுத்துதல் அல்லது மத்தியஸ்தம் செய்யும் அதன் திறனையும் கீழறுத்து விட்டது.

ஷங்காயை தளமாக கொண்ட Fuda பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜியன் ஜுன்பாவோ என்னும் பேராசிரியர், Asia Times -க்கு இன்று எழுதியிருப்பதாவது; "இன்று சாதாரண மக்கள் நாட்டின் சொந்தக்காரர்கள் என்று உண்மையில் கருதப்படவில்லை. தொழிலாளர்கள் ஒரு மரியாதைக்குரிய வர்க்கமாக இல்லை. முதலாளித்துவத்தினர் அரசாங்கத்தின் கெளரவம் மிக்க விருந்தாளிகளாகிவிட்டனர். ...சோசலிச தொழிலாளர் என்ற சீனமக்களுடைய பகிர்ந்து கொள்ளப்பட்ட அடையாளம்--- மெதுவாக நொருங்கி வருகிறது. உரும்கியில் ஏற்பட்டுள்ள கலகங்கள் மிக, மிகப் பெரிய கலகங்களின் துவக்கம்தான்."

இதுகாறும் வாஷிங்டன் பெய்ஜிங்கின் அடக்குமுறையை வெளிப்படையாக கண்டிக்கவ்லை; சீனா மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்க காங்கிரஸ் உய்குர் புலம் பெயர்ந்த குழுக்களுக்கு நேரடியாக நிதி உதவி அளித்துள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுக்களை அமெரிக்க ஐரோப்பிய அரசாங்கங்கள் புறக்கணிப்பதாக அச்சுறுத்தியிருந்த கடந்த ஆண்டு திபெத்தில் இருந்த அமைதியின்மையுடன் ஒப்பிட்டால், வாஷிங்டன் ஜிங்ஜியாங் எதிர்ப்புக்களுக்கு கொடுக்கும் விடையிறுப்பு மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளது என்று கூறலாம். வெள்ளை மாளிகை செய்தி ஊடக செயலாளர் ரோபர்ட் கிப்ஸ், "அனைவரும் ஜிங்ஜியாங் பற்றி நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.

சீனாவில் மகத்தான அமெரிக்க முதலீடு இருக்கையில், பெய்ஜிங் மிக அதிக அளவு அமெரிக்காவிற்கு கடனைக் கொடுத்துள்ள நாடு என்ற நிலையில், மிக அதிகக் கடனை வாங்கியுள்ள அமெரிக்கா சீனத் தொழிலாள வர்க்கத்தை கட்டுப்பாட்டின்கீழ் இருத்துவதற்கு நேரடி பொருளாதார பணயத்தைக் கொண்டுள்ளது. பெய்ஜிங் போலவே வாஷிங்டனும் ஜின்ஜியாங்கில் உள்ள அமைதியின்மை சீனா முழுவதும் சமூக வெடிப்பிற்கு எரியூட்டலாம் என்று கவலை கொண்டுள்ளது.