:
இலங்கை
Sri Lanka revives draconian law to gag media
இலங்கை ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போட கொடூரமான சட்டத்தை புதுப்பிக்கிறது
By Sampath Perera
1 July 2009
Use this version
to print | Send
feedback
இலங்கை அரசாங்கம், ஊடகங்களை கட்டுப்படுத்தவும் வரம்புமீறும் பத்திரிகையாளர்களையும்
வெளியீட்டாளர்களையும் தண்டப் பணம் மற்றும் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கும் பரந்த அதிகாரங்களுடன் கூடிய, ஒரு
சட்டரீதியான சபையான இலங்கை பத்திரிகை சபையை செயற்படுத்தும் சட்டத்தை புதுப்பித்துள்ளது.
ஆழமான பொருளாதார நெருக்கடி மற்றும் பரந்த சமூக அமைதியின்மையை இலக்காக்க
கொண்டு 1973ல் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் கூட்டரசாங்கத்தினால் இந்தச் சட்டம் முதலில் அமுல்படுத்தப்பட்டது.
அரசாங்கம் கிராமப்புற சிங்கள இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சியொன்றை இதன் மூலம் நசுக்கியதோடு நாடு
முழுவதுமான வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் உட்பட தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சி கண்டுவந்த தொழிற்சங்க
நடவடிக்கைகளையும் எதிர்கொண்டிருந்தது. 1964ல் ட்ரொட்ஸ்கிசத்தைக் கைவிட்ட லங்கா சமசமாஜக் கட்சி,
அந்த ஆளும் கூட்டணியில் ஒரு பிரதான பாத்திரம் ஆற்றியது.
இந்த பத்திரிகைச் சபை 2002ல் பாராளுமன்றத்தில் இரு கட்சிகளின் தீர்மானத்தின்
ஊடாக இயங்காமல் நிறுத்தப்பட்டது. அதுவரை இந்தச் சபை ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் ஊடகங்களை
அச்சுறுத்தும் ஒரு இயந்திரமாக தொடர்ந்தும் இயங்கி வந்தது. 2002ல் தான் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான
ஐக்கிய தேசியக் முன்னணி அரசாங்கம் நிரந்தர சமாதானத்துக்காக சர்வதேச ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட
பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டது. ஆனாலும்,
இந்தச் சட்டம் ஒதுக்கித் தள்ளப்படவில்லை.
2006ல் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள்
தள்ளியதோடு அவரது அரசாங்கம் ஊடகங்களுக்கு அச்சுறுத்தலும் நெருக்குவாரமும் விடுத்த போதிலும், பத்திரிகைச்
சபையை புதுப்பிக்கவில்லை. இப்போது அவ்வாறு செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டிருப்பது அரசியல் பலவீனத்தின்
அறிகுறியே அன்றி பலம் அல்ல. புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த அரசாங்கம், இப்போது பிரமாண்டமான
பாதுகாப்புச் செலவின் விளைவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பூகோள பின்னடைவினால் மேலும்
மோசமடைந்து வருகின்ற நிலையில் எதிர்கொள்கின்றது.
பத்திரிகை சபையின் தலைவர் உட்பட புதுப்பிக்கப்பட்ட சபையை நியமிக்கும்
பிரத்தியோக அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு. அதன் கட்டளைகளையும் தணிக்கைகளையும் எந்தவொரு நீதிமன்ற
சட்டத்தாலும் சவால் செய்ய முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தச் சபை பொதுஜன விமர்சனத்துக்கு
மேலாக அமைக்கப்பட்டுள்ளது. "இத்தகைய சபையினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணையினதும்
முன்னேற்றத்தின் போதும் அல்லது முடிவின் பின்னரும் சபையை அல்லது அதன் எந்தவொரு உறுப்பினரையும்
அவமதிப்புக்குள்ளாக்கும் எந்தவொரு செயலிலும் அல்லது போதுமான காரணங்கள் இன்றி அறிக்கைகளை
வெளியிடுவதிலும்" எவரும் ஈடுபட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும் என 12வது விதி தெரிவிக்கின்றது.
அரசாங்க கலந்துரையாடல்கள் பற்றிய எந்தவொரு பார்வையையும்
வெளிப்படுத்துவதில் இருந்து ஊடகங்களை இந்தச் சட்டம் தடை செய்கின்றது. "அமைச்சர்களது அமைச்சரவை
கூட்டத்தின் முன்னெடுப்புகளின் உள்ளடக்கமாக இருக்கக் கூடியதை அல்லது அதன் எந்தவொரு பாகத்தையும் கொண்ட
எந்தவொரு விவகாரத்தையும் எந்தவொரு செய்தித் தாழிலும் எவரும் வெளியிட அல்லது வெளியிடக் காரணமாக
இருக்க கூடாது," என அது தெரிவிக்கின்றது. அமைச்சர்களுக்கு இடையில் கைமாறப்படும் ஆவணங்களின்
உள்ளடக்கத்தைக்கூட வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
மிக மிக முக்கியமான கட்டுப்பாடுகள் 16வது விதியில் உள்ளடங்கியுள்ளன. அதன் 3வது
உப விதி தெரிவிப்பதாவது: "அரச இரகசிய விதியின் கீழ் வரும், எந்தவொரு அரச இரகசியத்தையும் அல்லது
இராணுவம், கடற்படை, விமானப் படை அல்லது பொலிஸ் ஸ்தாபனங்கள், உபகரணங்கள் அல்லது பதவிகள்
சம்பந்தப்பட்ட எந்தவொரு விவகாரத்தை பற்றியும் இலங்கை குடியரசின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்துவதாகத்
தோன்றும் வகையில் எந்தவொரு பத்திரிகையிலும் எந்தவொரு நபரும் வெளியிடவோ அல்லது வெளியிடக்
காரணமாகவோ கூடாது."
இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் மீதான இத்தகைய ஒட்டுமொத்த
தடையும் விசேடமாக குறிப்பிடத் தக்கதாகும். இராஜபக்ஷ ஊடகங்கள், வேலை நிறுத்தம் செய்யும்
தொழிலாளர்கள், ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் மற்றும் எதிர்க் கட்சி அரசியல்வாதிகள் போன்ற எதிரிகளை
அவர்கள் "தேசிய பாதுகாப்பை" கீழறுப்பதாக மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டி வந்துள்ளார். புலிகளின் தோல்வியின்
பின்னரும், அரசாங்கம் கொடூரமான அவசரகால அதிகாரங்களை அகற்றாமல் வைத்திருப்பதோடு இராணுவத்தை
ஊதிப் பெருக்கச் செய்கின்றது. அது குறிப்பாக கடைசி மோதல்களில் இராணுவத்தால் சிவிலியன்கள் கொல்லப்பட்டது
பற்றிய மற்றும் கிட்டத்தட்ட 300,000 தமிழர்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பது பற்றிய
எந்தவொரு விமர்சனமும் தொடர்பாக நுண்ணுனர்வுடன் உள்ளது.
4வது உப பிரிவானது நிதியம், ஆதாயம், அரசாங்கத்தின் அல்லது அமைச்சின் அல்லது
மத்திய வங்கியின் கீழ் ஆராயப்பட்டுவருவதாகக் கூறப்படும் பரிமாற்றக் கட்டுப்பாடு அல்லது ஏற்றுமதி கட்டுப்பாடு
நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு அறிக்கையையும், பற்றாக்குறை அல்லது எதிர்பாராத இலாபத்தின்
உருவாக்கத்துக்கு வழிவகுக்கக் கூடிய அல்லது இலங்கையின் பொருளாதாரத்துக்கு பிரதிகூலமான தாக்கத்தை
எற்படுத்தக் கூடிய எந்தவொரு வெளியீட்டையும்" வெளியிடுவதை தடை செய்கின்றது.
"தேசத்தைக் கட்டியெழுப்புதல்" என்ற போர்வையின் கீழ், அரசாங்கம் தொழிலாள
வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீது பெரும் தாக்குதல் ஒன்றுக்குத் தயாராகின்றது. தனது வெற்றி உரையில்,
"யுத்த வீரர்கள்" செய்தது போல் உழைக்கும் மக்களும் அர்ப்பணிக்க வேண்டும் என இராஜபக்ஷ பிரகடனம்
செய்தார். இந்தச் சட்டத்தின் உப விதி, அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் தொடர்பான எந்தவொரு
விமர்சனத்தையும் நசுக்குவதற்கு விளைபயனுள்ள வகையில் வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
புலிகளின் தோல்வியை அடுத்து அரசாங்கத்தால் கிளறிவிடப்பட்ட இனவாத வெற்றி
ஆரவாரச் சூழ்நிலையின் மத்தியிலேயே இந்த பத்திரிகைச் சபை புதுப்பிக்கப்பட்டுள்ளது. புலிகளின் தோல்வியின்
பின்னாலேயே அரசாங்கத்தை அல்லது இராணுவத்தை விமர்சிக்கும் எவருக்கும் எதிரான அடக்குமுறைகள்
அச்சுறுத்தல்களும் உக்கிரமாக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, எவ்வளவு மட்டுப்படுத்தப்பட்டது என்பது ஒரு
புறமிருக்க, அரசாங்கத்தின் குற்றவியல் யுத்தத்தைப் பற்றிய எந்தவொரு விசாரணையையும் தடுக்க இராஜபக்ஷ
உறுதிகொண்டார்.
இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் கொலைப் படைகளால் கடந்த மூன்று ஆண்டுகளாக
பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கான கடத்தல்கள் மற்றும் படுகொலைகளும்
செய்யப்பட்டிருப்பது தொடர்பான பொலிஸ் விசாரணையை ஆராய பாராளுமன்ற தேர்வுக் குழுவொன்றை நியமிக்க
வேண்டும் என கடந்த மாதம் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்தது. ஊடக அமைச்சர்
அணுர பிரியதர்ஷன யாப்பா இந்தப் பிரேரணையை ஒட்டு மொத்தமாக நிராகரித்து விட்டார். "11
பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என நீங்கள் சொல்லும் போது, இந்த எண்ணிக்கை தொடர்பாக
எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இந்த பத்திரிகையாளர்கள் பட்டியலில், விடுதலைப் புலிகளின் வானொலியான
புலிகளின் குரலுக்காக வேலை செய்தவர்களின் பெயர்களும் உள்ளன. அவர்களையும் ஊடகவியலாளர்கள் என
அடையாளம் காண்பதா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை," என தெரிவித்தார்.
கடத்தல்கள் தொடர்கின்றன. ஒரு தமிழ் ஊடகவியலாளரான கிரிஷ்னி கந்தசாமி
(இஃபாம்), அவர் பொலிசார் என சந்தேகித்த ஒரு கும்பலால் கடத்தப்பட்டு கொழும்பு நகருக்கு வெளியில்
கொண்டு செல்லப்பட்டார். அவர்கள் அரசாங்க-சார்பு கொலைப் படைகளின் தரக் குறியீடான வெள்ளை
வானிலேயே வந்தனர். அந்தக் குண்டர்கள், இடையில் இருந்த பல எண்ணிக்கையிலான சோதனைச் சாவடிகளில்
எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளாமல் அவரை 116 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்டிக்கு கொண்டு
சென்று இறக்கிவிட்டிருந்தனர்.
வடபகுதி நகரான யாழ்ப்பாணத்தில் வெளியாகும் உதயன் தமிழ் பத்திரிகையின்
செய்தியாளர்கள், விற்பனை முகவர்கள் மற்றும் ஏனைய ஊழயர்களுக்கும் ஜூன் 30 அன்று பத்திரிகைக்கு வேலை
செய்வதை நிறுத்துமாறும் அல்லது விளைவை எதிர்கொள்ள நேரிடும் என இறுதி நிபந்தனை விடுக்கப்பட்டது. கடந்த
மூன்று ஆண்டுகளாக இந்தப் பத்திரிகை மீண்டும் மீண்டும் தாக்குதலுக்குள்ளானது. கடந்த வாரம், பெயர் குறிப்பிடாத
நபர்களால் அனுப்பிவைக்கப்பட்ட கையொப்பமில்லாத அரசாங்க-சார்பு கடிதமொன்றை வெளியிட மறுத்ததை
அடுத்து யாழ்ப்பாண நகரத்தில் உதயன் மற்றும் ஏனைய தமிழ் பத்திரிகைகளின் பிரதிகள் அபகரிக்கப்பட்டு
தீயிடப்பட்டன.
கடந்த மாத முற்பகுதியில், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின்
பொதுச் செயலாளர் பொத்தல ஜயந்த அடையாளந்தெரியாத கும்பலால் கொழும்பு புறநகர் பகுதியில் இருந்து
கடத்தப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டார். கடந்த ஆண்டு அவருக்கு அழைப்புக் கட்டளை அனுப்பிய
பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ, இராணுவத்தை விமர்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை
விடுத்தார்.
ஊடகங்கள் மீதான தாக்குதலில் எதுவும் பொலிசாரால் சரியாக
விசாரிக்கப்படவில்லை. பத்திரிகைச் சபையை மீண்டும் ஸ்தாபிப்பதனானது எந்தவொரு விமர்சன ரீதியான செய்தி
வெளியீட்டையும் மேலும் நசுக்கும் வழிமுறையை அரசாங்கத்துக்கு வழங்குகிறது. பெரும் பகுதி யுத்தத்தை ஆதரித்து
அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்களையே காட்டிய சில பகுதி
ஊடகங்கள், புதிய சட்டம் தொடர்பாக கொஞ்சம் கவலை தெரிவித்துள்ளன.
கடந்த வாரக் கடைசியில் சண்டே டைம்ஸ் வெளியிட்ட ஆசிரியர் தலைப்பு
தெரிவித்ததாவது: "அரசாங்கத்தின் சட்டம் ஊடகங்களுக்கு மட்டுமன்றி பிரஜைகளது முதுகிலும் குத்துவதாகும். இந்த
பத்திரிகை சபை, ஊடக சுதந்திரத்தின் மீது 'மெய்சிலிர்க்கும் தாக்கத்தை' அர்த்தப்படுத்துகிறது; அது ஊடகப்
செயற்பாட்டாளர்களை தலையில் தொங்கவிடும், 'திடீரென தோன்றிய பேரிடர்' என்ற பழமொழியை
நினைவூட்டுகிறது." அது மேலும் தெரிவித்ததாவது: "இத்தகைய ஜனநாயகமற்ற நடவடிக்கைகள், ஜனாதிபதியின்
மதிப்புக்கு ஒவ்வாததாகும். பத்திரிகைச் சபை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதானது யுத்தத்துக்கு பிந்திய
இலங்கையின் எதர்காலம் பற்றிய ஒரு இருண்ட சித்திரத்தை காட்டுவதோடு இலங்கையில் 'அரச
கொடூரத்தின்' அறிகுறி இருக்கிறதா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன."
எவ்வாறெனினும், அரசியலமைப்பு, சட்டம் மற்றும் பாராளுமன்றத்தை மேலும் மேலும்
அலட்சியம் செய்து செயற்படும் ஜனாதிபதி இராஜபக்ஷ, தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்கள், சிரேஷ்ட
அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் குழுவொன்றின் ஊடாக இயங்குகிறார். ஜனநாயக உரிமைகள் மீதான
இராஜபக்ஷவின் வெளிப்படையான தாக்குதல்கள், அரச இயந்திரத்தின் சட்டப்பூர்வத் தன்மையை கீழறுப்பதை
மட்டுமே செய்வதோடு உழைக்கும் மக்களின் எதிர்பைக் கிளறிவிடும் என்ற பீதி ஆளும் கும்பலின் சில பகுதிகளிடம்
இருப்பதையே சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் பிரதிபலிக்கின்றது.
பத்திரிகை சபை புதுப்பிக்கப்பட்டமை, ஒரு தெளிவான கேள்வியை எழுப்புகிறது:
யுத்தம் முடிவடைந்திருந்தால், அரசாங்கம் ஊடகங்கள் மீது இறுக்கமான கட்டுப்பாடுகளை திணிப்பது ஏன்? பதில்
மிகவும் தெளிவானது: ஆட்டம் கண்டு போயுள்ள இந்த அரசாங்கம் தொழில், வாழ்க்கைத் தரம் மற்றும் உழைக்கும்
மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது மோசமான தாக்குதல் தொடுக்கத் தயாராகின்றது என்பதாகும். |