World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

EU summit in Brussels

European heads of government bow to banks

பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாடு

ஐரோப்பிய அரசாங்கங்களின் தலைவர்கள் வங்கிகளுக்கு தலைவணங்குகின்றனர்

By Peter Schwarz
26 June 2009

Back to screen version

ஓராண்டிற்கும் மேலாக ஐரோப்பிய அரசியல்வாதிகள் சர்வதேச நிதிய நெருக்கடி மீண்டும் வராமல் இருப்பதற்காக நிதியச் சந்தைகளை கட்டுப்படுத்தி ஊகவணிகர்களின் நடவடிக்கையையும் கட்டுப்படுத்துவதாக உறுதிமொழி அளித்து வருகின்றனர். இப்பொழுது இறுதியாக மலை சற்று நகர்ந்து கடைசியில் ஒரு எலியை ஈன்றுள்ளது. ஐரோப்பிய அரசுகள் மற்றும் அரசாங்கங்களின் தலைவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னர் பிரஸ்ஸல்ஸில் நடத்திய மாநாட்டில் ஒப்புக்கொண்டுள்ள கட்டுப்பாடுகள், அமெரிக்காவால் உறுதியற்ற வகையில் ஏற்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைவிட பலவீனமானதாக உள்ளன.

ஒரு ஐரோப்பிய முறையின் ஆபத்து பற்றிய குழு ("European Systemic Risk Board ESRB") என்பது திட்டமிடப்பட்டுள்ளது; இது எச்சரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை வெளியிடும்; ஆனால் அவை முடிவை செயலாக்கம் செய்ய முடியாதவை. இதைத்தவிர, இருக்கும் அதிகாரிகள் மற்றும் குழுக்கள் ஒன்றோடொன்று இன்னும் நெருக்கமாக பிணைக்கப்படும். ஐரோப்பிய மற்றும் உலகந்தழுவிய தீவிரச் செயற்பாடு உடைய வங்கிகளின் நாளாந்த வணிகத்தின் பொறுப்பு தேசிய கண்காணிப்பு அதிகாரிகளிடம்தான் இருக்கும்.

வங்கிகள் மற்றும் ஹெட்ஜ் நிதிகளின் செயற்பாடுகள் மீதான கட்டுப்பாடுகள் சிறிது தீவிரப்படுத்தப்படும்; ஆனால் அமெரிக்காவுடன் பொதுவான முறையில் ஐரோப்பாவும் உலகம் முழுவதும் உள்ள நிதிய நெருக்கடியை கட்டவிழ்த்துவிட்ட பொறுப்பற்ற, நெறியற்ற ஊகவணிகத்தை தொடர்ந்து அனுமதிக்கும். வங்கிகள் தங்கள் வணிகத்தை கடன் எஞ்சியவை, உயர் ஆபத்து கடன் தவணை தவறல் பரிமாற்றங்கள், இன்னும் முற்றிலும் ஊக நிதியத் தொகுப்பை தொடரும். துல்லியமாக எத்தகைய நிதியச் செயற்பாடு அனுமதிக்கப்படும் என்பதை தீர்மானிக்க அதிகாரக்குழு ஏதும் இராது.

வங்கிகள் தங்கள் இருப்புநிலைக் குறிப்புக்களில் இருந்து கடன் பொதிகளை வெளியே இருந்து பெற்று வரி ஆதாயம் இருக்குமிடங்களுக்கு மாற்றவும் முடியும்; இவை பொதுவாக எந்தக் கண்காணிப்பிற்கும் உட்பட்டவை அல்ல. இதன் பொருள் வங்கிகள் உத்தியோகபூர்வ இருப்புநிலைக்குறிப்புக்களில் வராமல் பில்லியன்களை மறைத்து வைக்க முடியும். அத்தகைய நடைமுறைகள்தாம் ஏற்கனவே பல நூற்றுக்கணக்கான பில்லியன்கள் இழப்பில் முடிந்துள்ளன--மிகக் குறிப்பாக ஜேர்மனியில் பல அரச வங்கிகளிலும் Hypo Real Estate லும் ஆகும்.

"ஓரளவு மறைவு உள்ள நிதிய அமைப்புக்களின் வணிக நடைமுறைகளில் எந்த விதமான உண்மை முறிவும் இருக்காது" என்றுதான் Süddeutsche Zeitung, "தளைகளற்ற அரக்கன்" (The Unbridled Monster) என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் முடிவுரையாகக் கூறியுள்ளது. "இதன் விளைவாக, அடுத்த நெருக்கடி, அடுத்த பெரும் சரிவும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட முறையில் உள்ளது."
ஜூன் மாதத் தொடக்கத்தில் ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் அமெரிக்க அரசாங்கத்தை, அமெரிக்க நிதிய அமைப்புக்களில் டிரில்லியன் கணக்கான டாலர்களை உட்செலுத்தியதற்கும், சர்வதேச நிதியச் சந்தைகளின்மீது புதிய கட்டுப்பாடுகளை சுமத்துவதற்கு முன் மீண்டும் நிதியச் சந்தைகளின் மீது தங்கள் இரும்புப் பிடியை அமைத்துக் கொள்ள அவற்றுக்கு உதவியுள்ளது என்றும் கடுமையாக குறைகூறினார். ஆனால், இப்பொழுது, ஐரோப்பாவிலும், நிதிய நலன்கள், அவற்றிற்கு ஆதரவாளர்கள்தான் வருங்கால வணிக நலன்கள் மற்றும் இலாபங்கள் என்று வரும் விதிகளை நிர்ணயிக்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக பிரிட்டிஷ் அரசாங்கம், ஐரோப்பாவின் மிகப் பெரிய வணிக மையம் என்ற லண்டன் நகரத்தின் அந்தஸ்தை காக்க வேண்டும் என்று கவலையுடன் இருப்பது, பயனுடைய புதிய கட்டுப்பாடு எதையும் எதிர்க்கிறது. ஆனால் ஜேர்மனிய மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்களும் தங்கள் நாடுகளில் நிதிய தன்னலக்குழுக்களுடன் மோதுவதை விரும்பவில்லை. இரு அரசாங்கங்களும் மக்கள் வரிப்பணத்தின் பல நூற்றுக் கணக்கான பில்லியனை நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வங்கிகளுக்கு கொடுத்துள்ளன; ஆனால் பேரழிவிற்கு பொறுப்பு கொண்ட ஒரு நிதியப் பிரிவின் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இப்பொழுது அவர்கள் பரந்த கட்டுப்பாடு "ஒரு போட்டித் தன்மையில் பாதகமானது" என்று கருதி, தங்கள் போட்டியாளர்களைப் பலியிட்டு நெருக்கடியை தீர்க்க முயல்கின்றனர். இதன் விளைவு ஐரோப்பாவிற்குள் பெருகிய முறையில் அழுத்தங்கள் வெளிவந்துள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கியின் குழு உறுப்பினர் Lorenzo Bini Smaghi சமீபத்தில் மிலானில் நடந்த மாநாடு ஒன்றில் நிதியச் சந்தைகள் கட்டுப்பாடு பற்றி எச்சரித்தார்: "சீர்திருத்தத்திற்கான அவசரத் தேவை என்பது கரைந்துவிடக்கூடிய ஆபத்து உள்ளது; தேசியப் போக்குகள் மற்றும் நிறுவன அமைப்புக்களின் பொறாமைகள் மீண்டும் தலையெடுக்கும் ஆபத்தும் உள்ளது."

இந்த பூசலின் போக்கில், ஐரோப்பிய ஒன்றியமும் அதன் நிறுவனங்களும் வெளிப்படையாக ஐரோப்பாவின் மிகச் சக்திவாய்ந்த நிதிய நலன்களின் நிர்வாகப் பிரிவு போல் செயல்படுவதுடன், அந்தவழிவகையில் இருக்கும் ஜனநாயக மரபுகளை கேலிக்கூத்தாக ஆக்கியுள்ளன. இரு போக்குகள் பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் தெளிவாக வெளிப்பட்டிருந்தன. ஐரோப்பிய குழுவின் தலைமையகத்தின் ஐந்தாம் மாடியில் உள்ள வல்லுனர்கள் இந்த இலையுதிர்காலத்திலேயே சட்டமாக வரக்கூடிய நிதியச் சந்தைகள் பற்றிய கட்டுப்பாடுகளை பற்றி பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருக்கையில், அரசாங்கத்தின் தலைவர்கள் அதற்கு இரண்டு மாடிகள் மேல் அயர்லாந்து வாக்காளர்கள் நிராகரித்துவிட்ட போதிலும், லிஸ்பன் உடன்பாட்டை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி விவாதித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிர்ப்பு என்பது ஐரோப்பிய மக்களால் பெருகிய முறையில் வளர்ந்து வெளிப்படையாகவும் தெரிய வந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசாங்கங்கள் இன்னும் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே தங்கள் விருப்பத்தை செயல்படுத்த விரும்புகின்றனர்.

பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநாட்டிற்கு பத்து நாட்கள் முன்புதான் ஐரோப்பிய தேர்தலில் பங்கு பெறுதல் என்பது வரலாற்றிலேயே இல்லாத மிகக்குறைவான 43 சதவிகிதத்தை கண்டது. ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்புக் கட்சிகள் --முக்கியமாக வலதுசாரித் தன்மை கொண்டவை-- பல நாடுகளிலும் பெருகிய முறையில் ஆதரவைப் பெற முடிந்தது. தேர்தல் முடிவு பொதுவாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் வணிகச் சார்பு பற்றி எதிர்ப்பைக் காட்டுவதின் அடையாளமாக விளக்கம் காணப்பட்டுள்ளது. ஆனால் இந்த எதிர்ப்பிற்கான காரணத்தை விவாதித்து மக்கள் கருத்திற்கு ஏற்ப மாறுதல்களை செய்வதற்கு பதிலாக, அரசாங்கத்தின் தலைவர்கள் வாக்காளர்களை எப்படி ஏமாற்றலாம் என்பது பற்றி சட்ட பிரச்சினைகளை விவாதிக்க பல மணி நேரத்தை செலவிட்டுள்ளனர்.

ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு மாற்றாக லிஸ்பன் உடன்பாடு இயற்றப்பட்டுள்ளது. பிரான்சிலும் நெதர்லாந்திலும் நடைபெற்ற வாக்கெடுப்புக்களில் ஐரோப்பிய அரசியலமைப்பு தோற்கடிக்கப்பட்டது. அதன்பின் ஐரோப்பிய ஒன்றிய அரசியல் வாதிகளுக்கு ஏமாற்றம் கொடுக்கும் வகையில் அயர்லாந்து வாக்காளர்கள் ஒரு ஆண்டிற்கு முன் லிஸ்பன் உடன்பாட்டை எதிர்த்து வாக்களித்தனர். இத்தகைய நிராகரிப்பு வந்துவிடக்கூடும் என்ற அச்சத்தால் மற்ற பெரும்பாலான நாடுகளில் அரசாங்கங்கள் வாக்கெடுப்பை அனுமதிக்கவில்லை. ஆனால் உடன்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் இசைவையும் பெறாமல் சட்டமாக முடியாது. அயர்லாந்துடன்கூட போலந்து, செக் குடியரசு ஆகியவையும் உடன்பாட்டிற்கு இசைவைக் கொடுக்கவில்லை; ஜேர்மனியில் பிரச்சினை ஜூன் மாதம் நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உடன்பாட்டிற்கு எதிரான முறையீடு பற்றி தீர்ப்பை அளிக்கும்போது முடிவு செய்யப்படும்.

அயர்லாந்தில் இரண்டாம் கருத்து வாக்கெடுப்பு லிஸ்பன் உடன்பாட்டின்மீது என்பது இப்பொழுது அக்டோபரில் நடைபெறும். இரண்டாம் முறையாகத் தோல்வியைத் தவிர்க்கும் வகையில், பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநாடு பல சலுகைகளுக்கு உடன்பட்டது; அவை ஐரோப்பிய ஒன்றியத்தின் குறிப்பிட்ட வலதுசாரி எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்தும் நோக்கத்தை கொண்டிருந்தன. ஐரோப்பிய ஒன்றியம் அயர்லாந்தின் கருக்கலைப்பை தடுக்கும் கடுமையான சட்டங்களை சவாலுக்கு உட்படுத்த முற்படாது என்பதை உச்சிமாநாடு ஒப்புக் கொண்டது. அதே போல் அயர்லாந்தின் வரிவிதிப்புக் கொள்கையிலும் அது தலையிடாது (மிகக் குறைந்த வரிவிதிப்பை ஒட்டி அயர்லாந்து பல சந்தேகத்திற்குரிய வங்கிகளை ஈர்க்க முடிகிறது.); மேலும் அது நாட்டின் நடுநிலை இராணுவ அந்தஸ்த்தையும் ஏற்கிறது.

ஆனால் இச்சலுகைகள் லிஸ்பன் உடன்பாட்டில் எழுதப்படமாட்டா; ஏனெனில் அதற்கு முழு மறு ஒப்புதல் கொடுக்கும் வழிவகையும் பழையபடி தொடக்கப்பட வேண்டும்; அது ஒருவேளை தோல்வியில் முடிவடையலாம். மாறாக சலுகைகள் ஒரு துணை வழிவகையில் சேர்க்கப்படும்; அதன் சட்ட நெறி பின்னர் முடிவெடுக்கப்படும். சலுகைகள் "பெருமளவில் அடையாளத் தன்மை கொண்டவைதான்" என்று வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்; அவை "ஏற்கனவே ஒன்றியத்தில் இருக்கும் சட்டத்தை உறுதி செய்கின்றன." (Neue Zucher Zeitung)

வேறுவிதமாகக் கூறினால் முழு செயற்பாடும் லிஸ்பன் உடன்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க மாற்றும் ஏதும் வராது என்ற சூழலில் அயர்லாந்து வாக்களர்களை ஏமாற்றும் அப்பட்டமான சூழ்ச்சிக் கையாளல் ஆகும்.

பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநட்டில் ஆதிக்கம் செலுத்திய மற்றொரு விஷயம் ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஜோஸே மானுவல் பாரோசோவிற்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நீட்டிப்பது ஆகும். இப்பிரச்சினையில் திரை மறைவிலான பேரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாட்டில் தனித்தன்மை உடையது ஆகும்.

உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெலும் பிரான்ஸின் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியும் இந்த இலையுதிர்காலத்தில் முடிவடையும் பாராசோவின் தற்போதைய பதவிக்காலத்தை நீட்டிப்பது என்பதில் உடன்பட்டனர். திரைக்குப் பின் அவர்கள் மற்ற அரசாங்கத் தலைவர்களையும் இதற்கு இணங்கச் செய்வதில் வெற்றி பெற்றனர். "சைப்ரஸில் உள்ள கம்யூனிஸ்ட்டுக்கள் முதல் இத்தாலியின் பெர்லுஸ்கோனி வரை 27 தலைவர்களும் பாரோசோவிற்கு ஆதரவைக் கொடுத்தனர்" என்று அதில் பங்கேற்ற ஒருவர் கூறினார்.

பாரோசோவை இவ்வளவு ஈர்ப்புத்தன்மை கொண்டவாராக செய்திருப்பது "அவருடைய குறிப்பிடத்தக்க வகையில் சரிசெய்துவிடும் தன்மையாகும்." என்று ஜேர்மனிய FAZ செய்தித்தாள் குறிப்பிடுகிறது. இப்பொழுது முக்கிய பழமைவாத அரசியல்வாதியாக இருக்கும் முன்னாள் மாவோயிஸ்ட், வலுவான வணிகம் அல்லது நிதிய செல்வாக்குக் குழுவின் நலன்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளும் திறனால் புகழ் பெற்றுள்ளார்.

FAZ இத்தகைய வரம்பிலாத சந்தர்ப்பவாதத்தை கீழ்க்கண்டவாறு விளக்குகிறது: "அவருடைய இயக்கத்தின் கீழான குழுதான் ஐரோப்பாவில் தாராளமயம் பெரிதும் பேசப்பட்ட காலத்தில் ஒற்றைச் சந்தைக்கு (Single Market) எஞ்சினாக இருந்தது. பின்னர் உலந்தழுவிய முறை அதன் அதிக ஈர்ப்பு இல்லாத பக்கத்தை காட்டத் தொடங்கிபோது, அவர் சமூக சட்டமியற்றுதலை கண்டுபிடித்தார்; ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரையில் அத்தகைய பிரச்சினைகளில் அது தலையிடுவதற்கு குறைந்த வரம்பைத்தான் பெற்றிருந்தது. அதன் பின்னர் வங்கிகளை காப்பாற்றி கார்த்தயாரிப்பு நிறுவனங்களை நிதிய நெருக்கடியின்போது ஆதரிப்பது என்று வரும்போது, அவருடைய குழுவின் உறுப்பினர்கள் பிறர் களிப்பை கெடுக்க விரும்பாதவர்கள் போல் இருந்தனர்."

பாரோசோ இரண்டாம் பதவிக்காலத்தை பெறுதல் என்பது இடர்பாடுகளை சந்தித்துள்ளது; ஏனெனில் ஐரோப்பிய பாராளுமன்றம் தன் கருத்தும் அறியப்பட வேண்டும் என்று கூறுகிறது. சமூக ஜனநாயகத்தின் பாராளுமன்றக் குழுவின் தலைவரான மார்ட்டின் ஷல்சும், பசுமைக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரான டானியல் கோன் பென்டிட்டும், பாரோசோ நியமனம் பற்றி முன்கூட்டி அறிவித்தலுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இந்த முடிவு லிஸ்பன் ஒப்பந்தம் நடைமுற்கு வரவிருக்கும் இலையுதிர்காலத்தில் எடுக்கப்படலாம் என்று கருதுகின்றனர். அப்பொழுது வேட்பாளருக்கு வாக்களித்தல் என்று மட்டும் இல்லாமல், ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்கு குழுவின் தலைவரை போட்டியிட விண்ணப்பிப்பதிலும் பங்கு பெறும் உரிமை இருக்கும்.

உண்மையில் சமூக ஜனநாயகவாதிகளோ அல்லது பசுமை வாதிகளோ பாரோசோவிற்கு உண்மையான தடைளைக் கொண்டிருக்கவில்லை. "திரு பாரோசோவிற்கு எதிர்ப்பு தன்னுடைய புதிய குழுவிற்கு நியமனங்களை அவர் பரிசீலிக்கும்போதும் தன்னுடைய இரண்டாம் பதவிக்காலத்திற்கு திட்டம் இயற்றும்போதும், அவரிடம் இருந்து சலுகைகளை பெற வேண்டும் என்ற விருப்பத்தையொட்டித்தான் அதிகமாக உந்துதல் கொண்டுள்ளது." என்று பிரிட்டிஷ் பைனான்ஸியல் டைம்ஸ் கூறியுள்ளது. வேறுவிதமாகக் கூறினால், Schulz, Cohen Bendit ஆகியோருக்கு முக்கிய பிரச்சினை தங்கள் பதவிகள் செல்வாக்கு பற்றிய நிலைப்பாடே அன்றி, கொள்கை பற்றி அடிப்படை வேறுபாடுகள் அல்ல.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved