World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா: இலங்கைSri Lankan government stages sham local elections இலங்கை அரசாங்கம் போலி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துகிறது By S. Jayanth இராணுவம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த மாதம் வரை இனவாத யுத்தம் ஒன்றை நடத்தி வந்த வடக்கில், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இரு நகரங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த இலங்கை அரசாங்கம் தயாராகி வருகின்றது. புலிகளிடம் கடைசியாக எஞ்சியிருந்த பலத்தையும் அழித்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஒரு ஜனநாயக பகட்டுத் தோற்றத்தை காட்டுவதற்காகவும் அவரது குற்றவியல் யுத்தம் தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் எழும் விமர்சனங்களை திசை திருப்பவும் ஆகஸ்ட் 8 அன்று தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மோதலின் கடைசி மாதங்களில், புலிகளிடம் எஞ்சியிருந்த பகுதிகள் மீது இராணுவம் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதோடு பத்தாயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். மோதலில் இடம்பெயர்ந்த 300,000 வரையான தமிழ் சிவிலியன்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் இத்தகைய பிரமாண்டமான முகாம்கள் இருப்பதானது, வடக்கிற்கு "ஜனநாயகத்தை" கொண்டுவருவதாக இராஜபக்ஷ கூறுவதை கேலிக்கூத்தாக்குகிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கானவர்களின் அரசியலமைப்பு மற்றும் சட்ட உரிமைகளை அரசாங்கம் மீறுகின்ற அதே வேளை, அது அருகில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நகரங்களில் "தேர்தல்களை" நடத்தவுள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பிலான வடக்கு மாகாணத்தில் வவுனியாவும் யாழ்ப்பாணமும் கோட்டையாகும். மோதல்கள் முடிவடைந்தாலும் வீதித் தடைகள், சோதனைச் சாவடிகள் மற்றும் முறையான ரோந்து நடவடிக்கைகளும் தொடர்ந்தும் இருக்கின்றன. வவுனியாவுக்கு அருகில் உள்ள பிரமாண்டமான மெனிக் பார்ம் தடுப்பு முகாமில் இருப்பவர்களை பார்வையிட விரும்பும் உறவினர்கள், பிரதேசத்துக்குள் நுழையும் முன்னர் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். 1998ல் இருந்து வட மாகாணத்தில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடக்கவில்லை. யாழ்ப்பாண மாநகர சபைக்கு 100,417 வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதோடு வவுனியாவில் 24,626 பேர் பதிவுசெய்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ளதோடு பெரும்பாலானவர்கள் தடுப்பு முகாம்களிலேயே உள்ளனர். மாநகர சபை பிரதேசத்தையும் உள்ளடக்கியுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 40 வீதமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்துள்ளவர்களுக்காக வாக்குச் சாவடிகளை அமைப்பதாக தேர்தல் ஆணையகம் அறிவித்திருந்தாலும், பலர் வாக்களிக்க முடியாதவர்களாகவே இருப்பர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 25ம் திகதியுடன் முடிவடைந்துவிட்டது. யாழ்ப்பாணத்தில் நான்கு கட்சிகளும் இரண்டு சுயாதீனக் குழுக்களும் போட்டியிடுவதோடு வவுனியாவில் ஆறு கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணிக்குப் புறம்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி மற்றும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் (யூ.என்.பி.) போட்டியிடுகின்றன. சுதந்திர முன்னணியானது இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) தலைமையிலான கூட்டணியாகும். எவ்வாறெனினும், ஸ்ரீ.ல.சு.க. க்கு முழு நகரிலும் குறிப்பிடத்தக்க அரசியல் அடித்தளம் இல்லாததோடு அதன் கூட்டணி பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு (ஈ.பி.டி.பி.) சுதந்திர முன்னணி பட்டியலில் போட்டியிடுமாறு அழுத்தம் கொடுத்தது. இராஜபக்ஷ மற்றும் யுத்தம் தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் பகைமை வலுவடைந்திருப்பது பற்றி மிகவும் விழிப்புடன் இருந்த நிலையில், ஈ.பி.டி.பி. மட்டுமே சுயாதீனமாக போட்டியிடும் நிலைப்பாட்டை கைவிட்டு சுதந்திர முன்னணியின் வேண்டுகோளுக்கு தயக்கத்துடன் உடன்பட்டது. ஈ.பி.டி.பி. கிழக்கு மாகாண தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டது. யாழ்ப்பாணத்துக்கான சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும் 29 பேரில் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் 20 பேர் உள்ளனர். தமிழ் அரசியல் கட்சியான ஈ.பி.டி.பி. ஆட்சியில் இருக்கும் கொழும்பு அரசாங்கத்துடன் கூட்டணி சேர்வதிலும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆதரிப்பதிலும் இழிபுகழ் பெற்றதாகும். அதன் துணைப்படை யாழ்ப்பாணத்தில் இராணுவத்துடன் நெருக்கமாக செயற்படுவதோடு அதன் குண்டர் நடவடிக்கைகளுக்கும் பிரசித்தி பெற்றதாகும். தேர்தல் நெருங்கும் போது, அரசியல் எதிரிகளை பீதிக்குள்ளாக்கவும் சாதாரண வாக்காளர்களை அச்சுறுத்தவும் மற்றும் வாக்குப் பெட்டிகளை நிரப்பவும் ஈ.பி.டி.பி. ஆயுததாரிகள் இராணுவத்துடன் சேர்த்து இறக்கப்படுவர். கடந்த காலத்தில் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் ஈ.பி.டி.பி. மீது சுமத்தப்பட்டுள்ளன. அத்தகைய பிரச்சாரங்கள் தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்படுகின்றன. புதன் கிழமை பெயர் குறிப்பிடாத நபர்கள் ஒரு கையொப்பமிடப்படாத கடிதமொன்றை எழுதி அதை பிரசுரிக்குமாறு கோரி உதயன், வலம்புரி மற்றும் தினக்குரல் செய்திப் பத்திரிகைகளின் யாழ்ப்பாண அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். உதயனின் படி, அந்தக் கடிதம் "புலி பயங்கரவாத அச்சுறுத்தல் அழிக்கப்பட்டுவிட்டது! ஜனநாயக சக்திகளை அனைவரும் வரவேற்க வேண்டும்," என தலைப்பிடப்பட்டிருந்தது. அந்த அரசாங்க சார்பு கடிதம் பிரசுரிக்கப்படாததை அடுத்து, குண்டர் கும்பல்கள் அந்தப் பத்திரிகைகளின் பிரதிகளுக்கு தீயிட்டது. இதை எதிர்கால வன்முறைகளுக்கான அச்சுறுத்தல் என்று மட்டுமே சொல்ல முடியும். கடந்த மூன்று ஆண்டுகளாக, குறிப்பாக உதயன் பத்திரிகை இராணுவத்துடன் சேர்ந்து செயற்படும் குண்டர்களின் தாக்குதல்களுக்கு உள்ளானது. 2006 மே மாதம் நடந்த அத்தகைய ஒரு தாக்குதலில் அந்தப் பத்திரிகையின் இரு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். ஈ.பி.டி.பி. யை தூக்கி நிறுத்தும் முயற்சியில், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அருகில் உள்ள தீவான காரைநகருக்கு வந்து கூட்டமொன்றை நடத்திய ஜனாதிபதியின் சகோதரர் பெசில் இராஜபக்ஷ, உள்ளூர் மீனவர்கள் மத்தியில் கசப்பான எதிர்ப்பை கிளப்பிவிட்ட மீன் பிடித் தடைகளை அகற்றுவதாக அறிவித்தார். புலிகளின் கடத்தல்கள் என சொல்லப்படுவதை குறைக்கும் முயற்சியில் கடற்படை இரவு மீன்படி நடவடிக்கைகளுக்கு தடை விதித்திருந்தது. ஈ.பி.டி.பி. தலைர் டக்லஸ் தேவாநந்தா யாழ்ப்பாணத்தில் தற்போது அமுலில் உள்ள ஊடரங்குச் சட்டத்தை அகற்றுமாறு "வேண்டுகோள்" விடுத்தார். புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான இராணுவத் தளபதி ஊரடங்குச் சட்டத்தை அகற்றுவதற்கு மறுத்து, இரண்டு மணித்தியாலங்களுக்கு குறைக்க மட்டும் உடன்பட்டுள்ளார். மீனவர்கள் இப்போது இரவில் கடலுக்குச் சென்றாலும் நன்கு விடிந்த பின்னரே கரைக்கு வர முடியும். கடந்த வெள்ளிக்கிழமை பெசில் இராஜபக்ஷவுடன் இணைந்துகொண்ட அமைச்சர் ஜோன் செனவிரட்னவும் டக்லஸ் தேவாநந்தாவும், 24 மணித்தியால மின்சார வசதியை மீண்டும் ஏற்படுத்துவதாகவும் ஏ9 வீதியூடாக தெற்கில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பொருட்களை எடுத்துவர வாகனங்களை அனுமதிப்பதாகவும் வாக்குறுதியளித்தனர். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பிரதான பாதையான ஏ9 பாதையை இராணுவம் பல மாதங்களுக்கு முன்னரே கைப்பற்றிக்கொண்ட போதிலும், மக்கள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து மீது இறுக்கமான கட்டுப்பாட்டை பேணுதன் பேரில் அதைத் திறக்க மறுத்துவிட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பானது "தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்" என்ற புலிகளின் போலி உரிமைகோரலை ஏற்றுக்கொண்ட கட்சிகளின் கூட்டணியாக 2002 யுத்த நிறுத்தத்துக்கு முன்னதாக ஸ்தாபிக்கப்பட்டது. புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து, தமிழ் கூட்டமைப்பு புலிகளிடம் இருந்து தூர விலகிக்கொள்ள முயற்சித்தது. "புலம்பெயர்வில் இருந்து நாடுகடந்த அரசு" ஒன்றை அமைக்கும் வெளிநாட்டில் உள்ள புலி-சார்பு குழுக்களின் முயற்சிகளை ஆதரிக்கவில்லை என தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள் பிரகடனம் செய்தனர். யுத்த அகதிகளுக்கு உடனடி உதவி வழங்குதல், யாழ்ப்பாண நகரை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் நீண்ட கால முரண்பாடுகளுக்கு "அரசியல் தீர்வு" காணுதல் ஆகிய மூன்று அம்ச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கட்சி செயற்படுவதாக தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமேச்சந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இந்த கடைசி கோரிக்கை, கொழும்பு அரசாங்கத்துடன் இணங்கிப் போகும் தமிழ் முதலாளித்துவத்தின் சார்பிலான ஒரு முயற்சியும், முதற் கட்டமாக யுத்தத்துக்கு எரியூட்டிய உத்தியோகபூர்வ தமிழர்-விரோத பாகுபாட்டை சீர்படுத்தும் முயற்சியுமாகும். தமிழ் கூட்டமைப்போ அல்லது புலிகளோ சாதாரண உழைக்கும் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. புலிகள் வடக்கு மற்றும் கிழக்கில் பெரும் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, அவர்கள் எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் அடக்குவதற்கு சரீர வன்முறையை பயன்படுத்தத் தயங்கவில்லை. புலிகளின் கடுமையான வரி விதிப்புகள் பரந்த பகைமைக்கு எரியூட்டியது. எவ்வாறெனினும், யுத்தத்துக்கு ஆதரவளித்த தமது எதிரிகளின் சாதனைகளை எடுத்துக்கொண்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிப்பிடத்தக்க ஆதரைவைப் பெறக்கூடும். தேர்தல் தொடர்பாக பிரேமச்சந்திரனுக்கு மாயைகள் இருக்கவில்லை. "தேர்தல் நீதியானதும் நேர்மையானதுமாக இருக்கும் என தமிழ் கூட்டமைப்பு நம்பவில்லை" என அவர் தெளிவாக அறிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட போது, நீண்டகால தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி பிளவுபட்டது. பெரும்பான்மையானவர்கள் தமிழ் கூட்டமைப்புடன் இணைந்துகொண்ட அதே வேளை, வி. ஆனந்தசங்கரி தலைமையிலான சிறுபான்மை குழு மறுத்துவிட்டது. புலிகளை கசப்புடன் எதிர்த்ததோடு யுத்தத்தையும் ஆதரித்த ஆனந்தசங்கரி, தமது சொந்த நிலைப்பாட்டை தூக்கி நிறுத்துவதன் பேரில் புலிகளின் தோல்வியை பயன்படுத்திக்கொள்ள விரக்கதியுடன் முயற்சிக்கின்றார். "பயங்கரவாத" புலிகளை ஆதரித்தமைக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களது ஆசனங்களை பறிக்க வேண்டும் என அண்மையில் அவர் வலியுறுத்தினார். யாழ்ப்பாணத்தில் தேர்தல் தொடர்பாக பரந்த எதிர்ப்பும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள கட்சிகள் தொடர்பாக வெறுப்பும் இருப்பதை உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் கண்டனர். தமது பிரச்சினைகளை அணுகாதமையினால் தேர்தல் பற்றி பெரும்பாலனாவர்களுக்கு நம்பிக்கை இல்லை என ஒரு பாடசாலை அதிபர் தெரிவித்தார். அவர் இரு சோதனைச் சாவடிகளை கடந்தே பாடசாலை செல்ல வேண்டும். அவர் அங்கு ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்படுகிறார். 1999ல், அவரது பாடசாலையில் 460 மாணவர்கள் இருந்தனர். 2006ல் இந்த எண்ணிக்கை 200 ஆக குறைந்ததோடு இப்போது சுமார் 50 மாணவர்களே உள்ளனர். "இவை அனைத்தும் யுத்தத்தினாலேயே நடந்தது," என அவர் கூறினார். "இந்தத் தேர்தல் ஒரு கேலிக்கூத்து. மக்களுக்கு சுதந்திரமே தேவை," என அவர் மேலும் தெரிவித்தார். எவருக்கும் தேர்தலில் அக்கறையில்லை என ஒரு கூட்டுறவு களஞ்சியசாலை தொழிலாளி தெரிவித்தார். "இந்த சகல கட்சிகளும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிரானவை. அவர்கள் பழைய வெறுக்கத்தக்க பகுதியினர். நீங்கள் கேட்கும் வரை, யாரும் இந்தத் தேர்தலைப் பற்றி பேசுவதை அல்லது கேட்பதை நான் கேள்விப்படவில்லை. அவர்களால் [துணைப்படை குழுக்கள்] மக்களின் ஜனநாயக உரிமைகளை காக்க எதுவும் செய்ய முடியாது. நாங்கள் முகாங்களில் அடைக்கப்பட்டுள்ள எங்களது மக்களின் தலைவிதியைப் பற்றி கவலைப்படுகிறோம். ஒவ்வொரு நாளும் ஒருவர் இறந்ததை, பிள்ளைகள் சுகயீனமடைவதை அல்லது அடக்குமுறை சம்பவங்களை கேள்விப்படுகிறோம். "ஊரடங்குச் சட்டம் சில மணித்தியாலங்கள் மட்டுமே தளர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும், இராணுவம் எல்லா இடங்களிலும் நிற்பதால் பாதைகளில் அல்லது வீதிகளில் நிற்க மக்கள் பயப்படுகின்றனர். முன்னரை போல் இங்கு பல வீதித் தடைகள் உள்ளன. கடந்த சில வாரங்களாக, கூட்டுறவு களஞ்சிய சாலையில் மா இருக்கவில்லை. இளைஞர்களின் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. இந்த நிலைமையில் மக்களுக்கு எதிர்காலம் கிடையாது." |