World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா: பிரான்ஸ்French workers need a socialist perspective to fight the economic crisis பிரெஞ்சு தொழிலாளர்களுக்கு பொருளாதார நெருக்கடியை எதிர்த்துப் போராட ஒரு சோசலிச முன்னோக்கு தேவை Statement of World Socialist Web Site editorial board ஜனவரி 29ம் தேதி பொருளாதார நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில் அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து பிரான்சின் தொழிற்சங்கங்கள் நடத்தும் ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் தேசிய நடவடிக்கை நாள் அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கீழ்க்கண்ட அறிக்கையை விநியோகிக்கின்றது. பிரான்சின் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள ஜனவரி 29ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் தேசிய நடவடிக்கை நாளன்று தொழிலாளர்களை எதிர்கொள்ளும் மத்திய பிரச்சினை அரசியல் முன்னோக்கு பற்றியதாகும். பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளுகையில் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளையும், வாழ்க்கைத் தரங்களையும் எந்த அடிப்படையில் பாதுகாக்க முடியும்? உலகம் முழுவதும் வங்கிகளுக்குள் டிரில்லியன் யூரோக்கள் உட்செலுத்தப்பட்ட ஒருதொடர் பிணையெடுப்பின் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் மாதம் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஏற்பாடு செய்திருந்த 360 பில்லியன் வங்கிகளுக்கான பிணையெடுப்பு, முதலாளித்துவத்தின் பாரிய தோல்வியைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதே நேரத்தில் நிதியப் பொறுப்பற்ற தன்மை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்ற பல தசாப்தங்களாக நிகழ்ந்த செயல்கள் மூலம் குவிக்கப்பட்ட ஆளும் உயரடுக்கின் செல்வங்களை அப்படியே பாதுகாப்பதையும் இலக்காகக் கொண்ட விதத்தில், நொருங்கிச் சிதைந்துள்ள உலக நிதிய முறையை உறுதியாக்கும் பிணை எடுப்புக்களால் கடன் கொடுப்பதையும் மற்றும் தொழில்துறை செயற்பாடுகளின் சரிவையும் தடுத்துநிறுத்த முடியவில்லை. தொழிலாளர்களுடைய நலன்கள் முழு தொழிலாள வர்க்கத்தையும் வங்கிகள் மற்றும் பிற முக்கிய தொழில்களையும் பொதுவுடமைகளாக மாற்றும் நோக்கத்திற்காக தொழில்துறை மற்றும் அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதனூடாகத்தான் முடியும்; அவை ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு நிர்வகிக்கப்பட்டு பிரான்சிலும் சர்வதேரீதியாகவும் தொழிலாளர்களின் மேற்பார்வையின் கீழ் இயங்க வேண்டும். தனியார் சொத்துக்களை பாதுகாத்தல் என்பது மிகப் பெரும் செல்வம் படைத்தவர்களுடைய வங்கிக் கணக்குகளில் டிரில்லியன் கணக்கான யூரோக்கள் குவித்து வைத்தலுக்கு தடையற்ற தன்மையைத்தான் கொடுக்கும். தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் பணி, பொருளாதார நடவடிக்கையை விரிவுபடுத்துதலும் தொழிலாளர்கள், ஓய்வு பெற்றவர்கள், சிறு வணிக உரிமையாளர்களாகிய மக்களை ஏழைகளாக்காமல் தவிர்த்தலும் ஆகும். இப்போராட்டத்தின் மிக அடிப்படையான தேவை தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் நெருக்கடிக்கு சாத்தியப்பாடற்ற, தேசியரீதியாக விடையிறுப்புக்களை காட்டும் பிரான்சின் அரசியல் ஆளும்வர்க்கத்தில் இருந்து முற்றிலும் உடைத்துக் கொள்வதுடன், பொருளாதாரம் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படடுவதற்காக தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் தலைமையை கட்டியமைக்ககவேண்டும். பணத்தை மிச்சப்படுத்துவதற்காக மருத்துவமனைகள், ஓய்வூதியங்கள் மற்றும் பிற சமூகத் திட்டங்களுக்கான செலவினங்கள் குறைக்கப்படும் என்று வலியுறுத்தியுள்ள சார்க்கோசியின் வர்க்க திமிர்த்தனத்தை இந்த வங்கிகளின் பிணையெடுப்பு அம்பலப்படுத்தியுள்ளது. இத்தகைய கூற்றை சார்க்கோசி மட்டும் கூறவில்லை. ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் சோசலிஸ்ட் கட்சியைச் (PS) சேர்ந்த முன்னாள் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் ஆகியோரும் இத்தகைய வாதங்களை இவருக்கு முன்னதாகவே தங்கள் சிக்கன, தனியார்மயமாக்கல் கொள்கைகளுக்கு ஆதரவாக முன்வைத்திருந்தனர். செல்வம் படைத்தவர்கள் மற்றும் வங்கிகளுக்கு பணம் தேவைப்படும்போது, அரசாங்கம் விரைவில் அவற்றிற்கு உதவுகிறது. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படைத் தேவைகள்தான் அதிக செலவு கொடுப்பவை எனக் கருதப்படுகின்றன. இந்தப் பிணை எடுப்பு, கடன் கொடுத்தல் அல்லது தொழில்துறை எதற்கும் உதவவில்லை. மத்திய வங்கி கொடுத்துள்ள தகவல்படி, நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுத்தல் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் சரிந்து கொண்டிருக்கிறது; நுகர்வோர் கடன்எடுப்பு நவம்பர் மாதம் 7 சதவிகிதம் குறைந்துவிட்டது. சமீபத்திய மாதாந்திரப் புள்ளிவிவரங்கள் பிரான்சில் தொழில்துறை உற்பத்தி ஆண்டு வீதம் 9 சதவிகிதம் என்ற விதத்தில் சரிந்துள்ளதைக் காட்டியுள்ளது; La Monde பத்திரிகை சிறுதொழிற்துறைப் பிரிவுகள் 25 சதவிகித சரிவைக் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் மிக அதிக அளவாக 64,000 வேலைகள் இழக்கப்பட்டன. இது அப்பட்டமாக தெளிவாக்கப்பட வேண்டும்: வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடும் தொழிற்சங்கங்களின் நோக்கு, முதலாளித்துவ நெருக்கடியின் தாக்கத்திற்கு தொழிலாள வர்க்கம் எதிர்ப்புத் தெரிவித்தலை திரட்டுவதல்ல; மாறாக அதை தடுத்து, சிதைவடையச் செய்ய வேண்டும் என்பதுதான். சமீபத்தில் Le Monde எழுதியது போல், "சோசலிஸ்ட் கட்சி, தொழிற்சங்கங்கள், முதலாளிகள் வட்டங்களில் இருப்பதைப் போலவே எலிசேயிலும் (Elysée) ஒவ்வொருவரும் சமூக நிலையின் கொந்தளிப்பு பெரும் வெடிப்பிற்கு உட்படுமோ என அஞ்சுகின்றனர்." பிரெஞ்சு முதலாளித்துவத்தின் பாதுகாவலர்கள் அனைவரும் தங்களால் கட்டுப்படுத்த இயலாத ஒரு சமூக இயக்கத்தின் வெடிப்பு பற்றி அஞ்சுகின்றனர். எனவேதான் செப்டம்பரில் நிதிய நெருக்கடி பாரிய பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெளிவாக தெரிந்த போதிலும் கூட டிசம்பர் வரை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அழைப்பை விடுவதற்கு காத்திருந்தன. கடன்கள் கொடுத்தல் சரிவு, பங்குச் சந்தைகள் சரிவு, அவற்றைத் தொடர்ந்து அமெரிக்க முதலீட்டு வங்கி லேஹ்மன் பிரதர்ஸின் சரிவு என்று ஏற்பட்ட நேரத்திலும் ஒன்றும் செய்யவில்லை. குறிப்பாக தொழிற்சங்கங்கள் கிரீஸ் நாட்டில் ஒரு 15 வயது சிறுவன் அலெக்சாண்ட்ரோஸ் கிரிகோரோபொலஸ் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து பாரிய கலகம் எழுச்சியுற்றபோதும் மெளனமாக இருந்தன; ஏனெனில் இத்தகைய மக்கள் எதிர்ப்புக்கள் ஐரோப்பா முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சம் இருந்தது. ஜனவரி கடைசி வரை வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் தாமதித்தது, சார்க்கோசி அரசாங்கத்தின் பள்ளிச்சீர்திருத்தத்திற்கு எதிராக நடக்கும் பள்ளி மாணவர்கள் எதிர்ப்புக்களை தனிமைப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டிருந்தது. பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தினுள் தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன வளர்ச்சியை அடைந்துவிடுமோ என்ற அச்சம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. பழைமைவாத நாளேடான Le Fegaro "நெருக்கடியினால் மக்கள் எழுச்சி தோன்றிவிடுமோ என்ற அச்சம் ஐரோப்பியத் தலைவர்களுடைய மனதில் பெருமளவு நிறைந்துள்ளது." பால்டிக் நாடுகள், ஐஸ்லாந்து, பல்கேரியா போன்ற நாடுகளில் நடக்கும் பெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள், கலகங்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, "பிரச்சினைக்கான தீர்வு ஏதும் உடனடியாக இல்லாததால், இந்த எதிர்ப்பு இயக்க நெருக்கடி ஆழமடையும்போது அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் பரவும் அபாயத்தைக் கொண்டிருக்கவில்லையா?" என எழுதியது. அப்படியே கூறப்படுவதை எடுத்துக் கொண்டாலும், தொழிற்சங்கங்களின் ஜனவரி 5ம் தேதி "பொதுவான கொள்கை" இயற்றப்படுவதற்கு செல்வாக்கு செலுத்தும் நோக்கம் கொண்ட வேலைநிறுத்தம் என்ற பொது அறிக்கை பல முரண்பாடுகளை கொண்டுள்ளது. வேலைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று இது அழைப்பு விடுகிறது; வணிகச் சரிவை எதிர்நோக்கியுள்ள நிறுவனங்கள் குறைந்த ஊதியம், பணி நீக்கம் ஆகியவற்றை "இருக்கும் வேலைகளையும் ஊதியங்களையும் காத்தல்" என்பதுடனை இணைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது. அரசாங்கக் கட்டுப்பாடுகள் "ஊகவணிகம், வரிச்சலுகை பாதுகாப்புக்கள், சர்வதேச நிதியத்தின் பெருக்கம், மூலதன வரத்து கட்டுப்படுத்துல்" ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது. அவர் விரும்பினாலும் எப்படி சார்க்கோசி, நியூயோர்க், லண்டன், டோக்கியோ அல்லது ஹாங்காங்கில் உள்ள நிதி அளிப்போர் ஒரு புறம் இருக்க, பிரான்சின் பில்லியனர்களிடையே இருக்கும் தன்னுடைய நண்பர்கள் Bollore, Lagarderle ஆகியோரையே கட்டுப்படுத்த முடியும் என்பது தெளிவாகக் கூறப்படவில்லை. பொது அறிக்கையின் தேசியவாத முன்னோக்கு பிற்போக்குத்தனம் வாய்ந்ததும், சாத்தியப்பாடற்றதும் ஆகும். கடந்த ஆண்டு உலகச் சந்தைகளில் மூலப் பொருட்களின் பாரிய விலையேற்றத்தினால் ஏற்பட்ட பெரிய பணவீக்க எழுச்சியை சார்க்கோசி எவ்வாறு கட்டுப்படுத்த முடியவில்லையோ, அதேபோல், பிரான்ஸ் தனியாக பிரெஞ்சின் பொருளாதாரத்தை உலக நெருக்கடியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியாது. 2007 அமெரிக்கத் குறைந்த பிணையுள்ள சந்தைச் சரிவின்போதும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் கடன் கொடுத்தல் சரிவு, வீடுகள் குமிழிகளின் பாதிப்பின் போதும் இந்த நெருக்கடி ஆரம்பத்தில் சில நாடுகளில் கூடுதலான செறிவடைந்திருந்தபோதிலும் இப்பொழுதும் இது ஒரு உலகளாவிய நிகழ்வாகியுள்ளது. உலகந்தழுவிய முறையில் கடன் கொடுத்தல் குறைந்துள்ளமையும் மற்றும் உலக வர்த்தகத்தினதும் சொத்து மதிப்புக்களினது சரிவும் ஒவ்வொரு தேசிய பொருளாதாரத்தையும் தாக்கி வருகிறது. தொழிற்சங்கங்களுடைய வேலைத்திட்டத்தில் உள்ள தெளிவற்ற தன்மை ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை விளக்குவதற்கு அதிகாரத்துவத்திடம் துணிவில்லை; ஏனெனில் அவை ஒரு தொழிலாள வர்க்க விரோதப் போக்குடைய கடும்சிக்கன நடவடிக்கைகளை புகுத்த முற்படும் பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் இளைய பங்காளிகளாகும். இது அதிகரித்தளவில் மூடிமறைக்கப்படுதல் கடினமாகும். ஜனவரி 25ம் தேதி சார்க்கோசியின் பொதுச் செயலாளரான Claude Gueant, Le Parisien பத்திரிகைக்கு ஒரு பேட்டி கொடுத்தார்; அதில் 29ம் தேதி வேலைநிறுத்தம் பற்றி "கவலைப்படவில்லை, தான் கவனித்து வருவதாக" அவர் கூறியுள்ளார். சார்க்கோசி வலுவான தொழிற்சங்கங்களை விரும்புகிறாரா என கேட்கப்பட்டதற்கு அவர் "ஆம், அவற்றின் பங்கு மிகவும் முக்கியமாகும். தொழிற்சங்கங்கள் வலுவான இன்னும் சிறந்த பங்காளிகளாள இருப்பதற்குத் தேவையான முன்முயற்சிகள் எடுக்கப்படும்." என பதிலளித்தார். இது ஜனவரி 13ம் தேதி எலிசே ஜனாதிபதி மாளிகையில் சார்க்கோசிக்கும் ஐந்து முக்கிய உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்க கூட்டுமைப்புக்கள் (CGT, CFDT, FO, CFTC, CGC) ஆகியவற்றிற்கும் இடையே நடந்த பேச்சுக்களுக்கு பின் கூறப்பட்டது. எலிசே கொடுத்த ஊடகக் குறிப்பின்படி, சார்க்கோசி, "பெருநிறுவன மறுகட்டமைப்பு பற்றிய கருத்துக்கள் பற்றிய திட்டத்தை தொழிற்சங்கங்களுக்கு தெரிவிக்கவும், அவற்றுடன் ஆலோசிக்கவும்" முயன்றார் என்றும், "வேலைகள் நிர்வாகம் பற்றிய எதிர்காலத்திட்டத்தில் ஒத்துழைப்பு நாடுவது" பற்றியும் விவாதிக்கப்பட்டது. பொருளாதார வீழ்ச்சயின் பின்னணியில் இதன் ஒரே பொருள் வேலை மற்றும் ஊதியக் குறைப்புக்களுக்கு தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதுதான். இந்த மூலோபாயத்தின் அடிப்படையில், தொழிற்சங்கங்கள் 2008 வசந்த கால, கோடை வேலைநிறுத்தங்களின்போது அரசாங்கத்திற்கான ஒத்துழைப்பை மீண்டும் அளித்தன. அந்த நேரத்தில் தொழிற்சங்கங்கள் ஒரு பொது நிலைப்பாடு பற்றிய பேச்சு வார்த்தைகளை நடத்தின. அதில் 35 மணித்தியால பணிநேரம் அடங்கியிருந்த ஒய்வூதியம் மற்றும் தொழிற்ச்சட்டங்களை வலுவிழக்கச் செய்யும் வகையில் சார்க்கோசியுடன் ஒரு அடிப்படை உடன்பாடு ஒன்றை நடாத்தின; பின்னர் இழிந்த முறையில் தொடர்ச்சியாக அதிக இடைவெளி விட்டு நடத்தப்பட்ட வேலைநிறுத்தங்கள் தொழிலாளர்களின் போராட்டங்களை சக்தியற்றதாக்குவதற்கும் மற்றும் அவர்களை மனத்தளர்ச்சி அடையவைப்பதாகவுமே இருந்தது. இதன் விளைவாக, அனைத்து அரசாங்க சமூகக் குறைப்புக்களும் இயற்றப்பட்டன. இதை இழிவுடன் எதிர்கொள்ளும் வகையில் தொழிலாளர்கள் டிசம்பர் மாதம் நடைபெற்ற தொழிற்சங்கத் தேர்தல்களில் மிக அதிகமான அளவு வாக்குப் போடுவதை தவிர்த்தல் என்பதைக் காட்டினர் (74.35 சதவிகிதம்) பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்புவிடுத்தல் மூலம் சார்க்கோசிக்கு எதிர்ப்பு காட்டுவது போன்ற தோற்றத்தை காட்ட தொழிற்சங்கங்கள் அச்சப்படாமைக்கு காரணம், வேலைநிறுத்தத்திற்கு தாங்கள் தலைமை தாங்க இருப்பதையும், பொருளாதாரத்தைத் தொழிலாளர்கள் கட்டுப்படுத்துதல், தொழிலாளர் அரசாங்கத்தை அமைத்தல் போன்ற செயல்கள் மூலம் நெருக்கடியைத் தீர்க்க ஒரு அரசியல் பிரசாரத்தை செய்ய முன்வராது என்பதால் தம்மை அரசியல் ஆளும்வர்க்கத்தின் எந்த சக்தியும் சவாலுக்கு உட்படுத்தாது என்ற நம்பிக்கையை அவை கொண்டுள்ளதுதான். பிரான்ஸின் "இடது" கட்சிகள் என அழைக்கப்படுபவற்றின் உண்மையான அரசியல் விசுவாசங்கள் எங்கு உள்ளன என்பது பற்றிய தொழிற்சங்கங்களின் கணிப்பு அதாவது ஆளும் வர்க்கத்துடன் உள்ளது என்பதில்) அவை முற்றிலும் சரியான கணிப்பைத்தான் கொண்டுள்ளன. உத்தியோகபூர்வ இடது கட்சிகளான சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி அனைத்தும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு கொடுத்து மக்கள் அழுத்தம் கீழிருந்து வந்தால் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்படலாம் என்ற கருத்திற்கும் ஆதரவு கொடுக்கின்றன. "மிகத்தீவிர" இடது கட்சிகளை பொறுத்தவரையில், தொழிற்சங்க அதிகாரத்துவத்தை பற்றிய அவை எப்பொழுதாவது குறைகூறுதல் என்பது தொழிற்சங்கங்களுக்கு பின் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் பிணைந்து நின்று, அதிகாரத்துவம் ஒரு சுயாதீன தொழிலாள வர்க்க அரசியல் போராட்டம் எழுச்சி பெறுவதை தடுத்து திசைதிருப்ப முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இக்கட்சிகளான Ligue Communiste Revolutionnaire, அதன் New Anti-Capitalist Party, Lutte Ouvriere (தொழிலாளர் போராட்டம்) மற்றும் Parti des Travailleurs (தொழிலாளர் கட்சி) ஆகியவை அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அரசியல் இயக்கம் கட்டமைப்பதை எதிர்க்கின்றன. பிரெஞ்சு தொழிலாளர்களுக்கு உடனடியாக ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் ஐக்கியப்படுத்தப் போராடும் அரசியல் கட்சி அவசியமாகும். அதிகரிக்கும் வேலையின்மை மற்றும் வறுமையை அகற்றுவதற்கு ஒரு சோசலிச மாற்றீடு வேண்டும் என விரும்பும் தொழிலாளர்களையும், இளைஞர்களையும் WSWS ஐப் படிக்குமாறும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் தொடர்பு கொள்ளுமாறும் பிரான்சில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவு ஒன்றைக் கட்டமைக்கப் போராடுமாறும் அழைப்பு விடுகிறோம். |