World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP opposes Sri Lankan government's ban on LTTE

புலிகள் மீதான இலங்கை அரசாங்கத்தின் தடையை சோ.ச.க. எதிர்க்கின்றது

By the Socialist Equality Party (Sri Lanka)
24 January 2009

Use this version to print | Send this link by email | Email the author

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடை, அரசியல் எதிரிகள் மற்றும் மிகவும் பரந்தளவில் தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீதும் பாய்வதற்கான தயாரிப்பே என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரிக்கின்றது.

புலிகளுக்கு எதிரான இராணுவத்தின் அண்மைய முன்னேற்றங்கள் சமாதானத்துக்கும் சுபீட்சத்துக்கும் வழிவகுப்பதற்கு பதிலாக, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தீவில் குவிந்துவரும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினையால் உருவெடுத்துக்கொண்டிருக்கும் எதிர்ப்புக்கு பதிலளிக்க, இராணுவவாத வழிமுறையை பயன்படுத்த தயாராகிக்கொண்டிருக்கின்றார்.

ஜனவரி 7 அன்று விதித்துள்ள இந்தத் தடை நேரடியாக புலிகள் மீதானதாக இல்லை. அரசாங்கம் ஏற்கனவே இந்த தமிழ் பிரிவினைவாத இயக்கத்துக்கு எதிராக யுத்தமொன்றை முன்னடுத்துக் கொண்டிருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஏற்கனவே அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தின் கீழ் "புலி சந்தேக நபர்களாக" நூற்றுக்கணக்கானவர்கள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

"பயங்கரவாதத்தை" அழிக்கும் தோரணையில் இந்த புதிய ஆணை அரசுக்கு பெரும் அதிகாரங்களை வழங்குகின்றது. "புலிகளுடன் சம்பந்தப்பட்ட, அல்லது பிரதிநிதித்துவம் செய்யும், அல்லது புலிகளின் சார்பில் செயற்படும்... அதாவது வெகுஜன பாதுகாப்பு நலனுக்கு, மக்களின் ஒழுங்கை பேணுவதற்கு மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விநியோகங்கள் மற்றும் சேவைகளை முன்னெடுப்பதற்கு கேடு உண்டாக்குபவையாக ஆகியிருக்கும் ஏனைய அமைப்புக்களை'' தடை செய்வதற்கும் இது அதிகாரங்களை வழங்குகிறது.

இந்த விதிகள், புலிகளை ஆதரிக்கும் பாராளுமன்ற அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக உடனடியாக பயன்படுத்தப்படக் கூடும். எவ்வாறெனினும், அத்தகைய பரந்த முடிவுகள், அரசாங்கத்தின் எதிரிகள் என கருதப்படும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் அல்லது மாணவர் சங்கங்கள் உட்பட எந்தவொரு அமைப்புக்கும் எதிராக பயன்படுத்தப்பட முடியும். தனிநபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அமைப்புக்களின் நிதி மற்றும் சொத்துக்கள் அபகரிப்பும் தண்டனைகளுக்குள் அடங்குகின்றன.

விமர்சகர்களை, வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை, ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்களை மற்றும் விவசாயிகளை "புலி ஆதரவாளர்கள்" என முத்திரை குத்துவதில் இராஜபக்ஷவின் அரசாங்கம் இழிபுகழ்பெற்றதாகும். கடந்த மூன்று ஆண்டுகள் பூராவும் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கானவர்கள் "காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்" அல்லது பகிரங்கமாக கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் முன்னணி தமிழ் கூட்டமைப்பு அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் இளம் தமிழர்களும் அடங்குவர். இந்த மாத முற்பகுதியில், அரசாங்கத்தை விமர்சித்த சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசன்த விக்கிரமதுங்க வாகனத்தில் வேலைக்கு சென்றுகொண்டிருந்த போது பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும், குறிப்பாக வேலை நிறுத்தம் செய்பவர்களை யுத்த முயற்சிகளை கீழறுப்பவர்கள் என கண்டனம் செய்துள்ளனர். கடந்த ஜூலையில், சம்பள உயர்வு கோரி இலட்சக்கணக்கானவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்குபற்றிய போது, பாதுகாப்பு பேச்சாளர் கெஹெலியே ரம்புக்வெல்ல, சம்பள உயர்வு கோரிக்கையை வழங்கினால் இராணுவச் செலவை நிறுத்த வேண்டிவரும், புலிகளின் தேவையும் இதுவே, என பிரகடனம் செய்தார். "ஆகவே இந்த இரு சாராருக்கும் [தொழிற்சங்கங்களுக்கும் புலிகளுக்கும்] இடையில் ஏதாவது தொடர்பு இருக்கக் கூடும்" என அவர் தெரிவித்தார்.

சிங்கள பேரினவாத ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இந்த தடையின் அதிகார எல்லையை கோடிட்டுக் காட்டினார். "புலிகளின் நோக்கத்துக்கு சுற்றிவளைத்தும் நேரடியாகவும் ஆதரவளிக்கும்" புலிகள்-சார்பு செயற்பாட்டாளர்களை குறைக்கும்... பயங்கரவாதிகளுக்கு நிதி ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் உதவி செய்யும் சக்திகளை தோற்கடிப்பதற்கு இது தீர்க்கமானதாகும்," என அவர் தெரிவித்தார். ஹெல உறுமய ஆளும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளியாகும்.

இனவாத யுத்தத்தையும் மற்றும் அதோடு சேர்ந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் நியாயப்படுத்துவதற்காக, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் புதிய-காலனித்துவ யுத்தங்களை நடத்துவதற்கு புஷ் நிர்வாகம் வழங்கிய அதே போலி சாக்குப் போக்குகளை இராஜபக்ஷவும் பயன்படுத்துகிறார். வடக்கிலும் கிழக்கிலும் தனியான அரசு ஒன்றை ஸ்தாபிப்பதன் பேரில், "பயங்கரவாத நடவடிக்கைகளிலும் மற்றும் ஏனைய வன்முறைகளிலும் ஈடுபடுதல், ஆயுதப் படைகளுடன் சட்ட விரோதமாக ஆயுத மோதலில் ஈடுபடுகின்றமை, மற்றும் ஆயுதங்களை கைவிட்டு, சரணடைந்து ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபடத் தவறியமை'' ஆகியவையே புலிகளை தடை செய்ததற்கான காரணங்கள் என உத்தியோகபூர்வமான அறிவித்தலாகும்.

ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக என அரசாங்கம் கூறிக்கொள்வது முற்றிலும் மோசடியானதாகும். நிச்சயமாக நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் திட்டமிட்டு செய்த பாரபட்சங்களின் காரணமாகவே 1983ல் யுத்தம் வெடித்தது. தீவில் உள்ள சிங்களப் பெரும்பான்மை உயர் தட்டுக்களின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கு நிலையை உறுதிப்படுத்திக்கொள்ளவே 2006 நடுப்பகுதியில் இராஜபக்ஷ புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மீண்டும் தொடக்கி வைத்தார்.

புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல. வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்காக ஒரு தனியான முதலாளித்துவ அரசுக்கான அதன் கோரிக்கை, தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்கின்றது. "பயங்கரவாதம்" என்பது தனது யுத்தத்தின் பிற்போக்கு இனவாத நோக்கங்களை மூடிமறைக்கவே இராஜபக்ஷ அரசாங்கத்தால் சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது. புலிகளை பயங்கரவாதிகள் என கண்டனம் செய்யும் அதே அரசாங்கம்தான், எதேச்சதிகாரமான கைதுகள், கொலைப் படைகள் மற்றும் பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீதான கண்மூடித்தனமான செல்வீச்சுகள் மற்றும் குண்டுத் தாக்குதல்களின் ஊடாக தமிழ் சிறுபான்மையினரை பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகும்.

தனது தடை உத்தரவில், வாஷிங்டனின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை" உதவிக்கு நாடிய இராஜபக்ஷ, "பயங்கரவாத துன்பத்தை உலகில் இருந்து அகற்றுவதற்கு, இறைமை கொண்ட அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தை சட்டவிரோதமாக்குவதும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் அமைப்புக்களை விலக்கு இன்றி தடை செய்வதும் அவசியமானதாகும்," என பிரகடனம் செய்தார்.

புலிகளின் நிர்வாக மையமான கிளிநொச்சியை இலங்கை இராணுவம் கைப்பற்றியதை அடுத்து சில நாட்களுக்குள் இந்த தடை அமுல்செய்யப்பட்டது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஜனவரி 7ல் விடுத்த அறிக்கையில், "புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு பரிந்துரைக்கவில்லை" என பிரகடனம் செய்ததன் மூலம் யுத்தத்துக்கான தனது வெளிப்படையான ஆதரவை அமெரிக்கா சமிக்ஞை செய்தது. முன்னதாக, "சமாதான பேச்சுக்களினதும்" 2002 யுத்த நிறுத்தத்தினதும் சர்வதேச அனுசரணையாளராக ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் ஜப்பானுடன் அமெரிக்காவும் இருந்தது.

எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைக்கான எந்தவொரு சாத்தியத்தையும் விளைபயனுள்ள வகையில் இல்லாமல் ஆக்கும் இந்த தடையை விதிக்க, அமெரிக்க அறிக்கை இலங்கை அரசாங்கத்துக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஆயுதப் படைகளின் தளபதிகளுமாக இலங்கை பாதுகாப்பு சபை ஒன்று கூடி தீர்மானித்த இந்தத் தடை, அதன் பின்னர் அமைச்சரவை ஊடாக நிறைவேற்றப்பட்டது.

இப்போது இராஜபக்ஷ அமெரிக்காவில் செப்டெம்பர் 11 தாக்குதல்களின் பின்னர் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட 1373ம் இலக்க தீர்மானத்தின் கீழ் புலிகள் மீது சர்வதேச தடை ஒன்றை அமுல்படுத்த முயற்சிக்கின்றார். புலிகளை பயங்கரவாத பட்டியலில் சேர்ப்பதற்கு ஐ.தா. உறுப்பு நாடுகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருப்பதாக டெயிலி மிரர் பத்திரிகை ஜனவரி 12ல் செய்தி வெளியிட்டிருந்தது. இத்தகைய நகர்வு, உலகம் பூராவும் உள்ள கனிசமான தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் புலிகளை ஆதரிப்பதை தடுப்பதற்கு பயன்படுத்தப்படும்.

கிளிநொச்சியில் இராணுவத்தின் வெற்றிக்கு குழிபறிக்கும் "சூழ்ச்சி" பற்றி அரசாங்கம் அச்சுறுத்தும் வகையில் எச்சரித்துள்ளது. தேசபக்தி கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யவும் இனவாத பதட்டங்களை கிளறுவதற்கும் அது எடுத்த முயற்சிகள் பரந்தளவில் தோல்விகண்டது. உழைக்கும் மக்கள் மத்தியில் யுத்தம் இறுதி முடிவை அடையும் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும், 25 ஆண்டுகால மோதல்களின் விளைவாக சுமக்கத் தள்ளப்பட்டுள்ள எண்ணற்ற சிரமங்களைப் பற்றி அவர்கள் தீவிர விழிப்புடன் உள்ளனர்.

பெப்பிரவரி 14 நடைபெறவுள்ள இரு மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தை விட்டுக்கொடுப்பற்று எதிர்ப்பதோடு தமிழ், முஸ்லிம், சிங்களம் உட்பட அனைத்து உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கின்றது. இரு பிரதான எதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் (யு.என்.பி.) சிங்கள அதிதீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) புலிகளை தடை செய்வதை ஆதரித்தன. உண்மையில், இந்தத் தடையை அமுல்படுத்த ஜே.வி.பி. அரசாங்கத்தை நெருக்கி வந்தது.

சகல விதமான எதிர்ப்புக்கும் எதிராக அரசாங்கம் பயன்படுத்தும் சர்வாதிகார வழிமுறைகளுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். இலங்கையின் பாராளுமன்ற "ஜனநாயகத்தின்" மட்டுப்படுத்தப்பட்ட வடிவத்தையாவது பாதுகாப்பதற்கு மாறாக, அதை ஒரு வெற்றுக் கூடாக தரங்குறைத்துள்ளதோடு பொலிஸ் அரச திட்டங்களை இராஜபக்ஷ வகுத்துக் கொண்டிருக்கின்றார்.

இந்தத் தடையை எதிர்க்கும் போது, சோ.ச.க. புலிகளுக்கு எந்தவொரு அரசியல் ஆதரவும் வழங்கவில்லை. புலிகளின் தமிழ் பிரிவினைவாத வேலைத்திட்டம், தமிழ் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களை அன்றி தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. அரசாங்கத்தின் சிங்கள மேலாதிக்கவாதம் தொழிலாள வர்க்கத்தை மத, இன மற்றும் மொழி அடிப்படையில் பிளவுபடுத்த சேவை செய்வது போல், சாதாரண சிங்கள மக்கள் மீதான புலிகளின் வன்முறைத் தாக்குதல்களும் அதே பிற்போக்கு தேவைகளுக்கே சேவை செய்வதோடு, கொழும்பில் உள்ள சிங்கள அதிதீவிரவாதிகளுக்கும் பயனளிக்கின்றது.

சோசலிச அனைத்துலகவாத வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச சமத்துவக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை ஆயுதப் படைகள் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்கப்பட வேண்டும் எனக் கோருகின்றது. தெற்காசியா சோசலிச குடியரசு ஒன்றியத்தின் பாகமாக ஸ்ரீலங்கா- ஈழம் சோசலிச குடியரசின் வடிவத்தில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக, அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் எதிராக தமிழ் மற்றும் சிங்கள தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கான அத்தியாவசியமான முன்நிபந்தனையே இந்தக் கோரிக்கையாகும்.