World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிLeft Party in Berlin supports Israeli war on Gaza காசா மீதான இஸ்ரேலியப் போருக்கு பேர்லின் இடது கட்சி ஆதரவளிக்கிறது By Hendrik Paul and Peter Schwarz பேர்லினில் இடது கட்சியின் தலைவரான கிளவுஸ் லெடரர் காசாக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு பகிரங்கமாக ஆதரவைத் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறு பாலஸ்தீனிய மக்கள் மீதான இராணுவத் தாக்குதலை நிபந்தனையற்ற முறையில் ஆதரித்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசினார். இஸ்ரேலுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்திற்கு பேர்லினில் இருக்கும் யூத அமைப்புக்களால் அழைப்பு விடப்பட்டிருந்தது; மூனிச் மற்றும் பிராங்க்பேர்ட்டிலும் இதே போன்ற நிகழ்வுகள் அன்றே நடத்தப்பட்டன. பேர்லின் ஊர்வலமானது அதற்கு முதல் நாள் பேர்லினில் நடந்த போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் பிரதிபலிப்பாக ஒழுங்குசெய்யப்பட்டது. பல போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கிட்டத்தட்ட 40,000 பேர் கலந்து கொண்டனர். இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலை ஆதரித்தவர்களால் தங்கள் பங்கிற்கு ஒழுங்குசெய்யப்பட்ட போர் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு சில நூறுபேரை மட்டுமே திரட்ட முடிந்தது. முக்கியமாக முழுநேர அரசியல்வாதிகள், பல அமைப்புக்களில் அலுவலர்களாக இருப்பவர்கள் என அணிகளில் பங்கு பெற்றவர்கள் இஸ்ரேலுடன் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று கூறிய பதாகைகளை ஏந்தியிருந்தனர் --"இஸ்ரேலுக்கு தன்னைக் காத்துக் கொள்ளும் உரிமை உண்டு!", "நமக்கு வெற்றி தேவை" என்று அவற்றில் எழுதப்பட்டிருந்தது. பேர்லின் ஆர்ப்பாட்டத்திற்கு உத்தியோகபூர்வ அழைப்பு இஸ்ரேல் இராணுவம் காசா மக்கள்மீது நடத்திய மிருகத்தன இராணுவத் தாக்குதலை வெளிப்படையாக ஆதரித்த விதத்தில் கூறியது: "இஸ்ரேலின் தற்காப்பு முறையானது, ஒரு குற்றம் அல்ல!' இதன்பின் காசாவில் இருக்கும் 1.5 மில்லியன் பாலஸ்தீனிய குடிமக்களின் பாரிய கஷ்டங்கள் "பயங்கரவாத ஹமாஸ்கள்" "மனிதர்களை கேடயங்களாக பயன்படுத்துவதால்" ஏற்கப்பட வேண்டியதுதான் என்றும் அதையொட்டி "சாதாரண மக்கள் பாதிப்பு தவிர்க்க முடியாதது" என்றும், ஹமாஸ்தான் "இப்பூசலை தொடக்கியது", "இருபுறத்திலும் இருக்கும் துன்பங்களுக்கு அதுதான் பொறுப்பு" என்றும் இந்த அழைப்பில் கூறப்பட்டது. இந்த அழைப்பில் இறுதியாக கோரப்பட்டதாவது: "இஸ்லாமிய பயங்கரவாத சர்வாதிகார அமைப்பான ஹமாஸ் நிரந்தரமாக அழிக்கப்பட வேண்டும்"; இதையொட்டி ஹமாஸ் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை இஸ்ரேலிய இராணுவம் கொன்றுவிடுவதற்கு உட்குறிப்பாக ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. காசா மீது இஸ்ரேலிய தாக்குதல் ஆரம்பித்த பின், ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெல் (CDU) இஸ்ரேலுக்கு தன்னுடைய நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுக்க முன்வந்தார். ஆனால் பேர்லின் அணிவகுப்பு அமைப்பாளர்களுக்கு இது போதவில்லை போலும். அவர்கள் ஜேர்மனி, இப்பூசலில் ஒரு முக்கிய பங்கு கொண்டுள்ளது" என்றும் குறிப்பாக ஈரானுடன் ஜேர்மனியில் வணிகத்தையும் குறைகூறினர். இந்த முறையீட்டில் இதன் பொருள் ஜேர்மனி ஈரானுக்கு கொடுக்கும் நிதி உதவி ஈரான் மூலமாக இறுதியில் ஹமாஸ் இயக்கத்திற்கு என்பதாகும். வெறித்தனமான தொனி இந்த அழைப்பில் இருந்த போதிலும்கூட, பேர்லின் செனட்டில் உள்ள அனைத்து அரசியில் கட்சிகளும் தங்கள் முக்கிய பிரதிநிதிகளை ஆர்ப்பாட்டத்திற்கு அனுப்பிவைத்திருந்தன. கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியின் (CDU) சார்பில் பேசியவர் கட்சியின் பாராளுமன்றப் பிரிவின் தலைவரான பிராங் ஹெங்கல் ஆவார். தாராளவாத ஜனநாயக கட்சி (FDP) தன் மாநிலத் தலைவர் மார்க்கூஸ் லோனிங்கை அனுப்பி வைத்தது. பாராளுமன்ற குழுத்தலைவர் பிரன்ஸிஸ்கா ஐஸ்ரட்- போலிங் பசுமைக் கட்சி சார்பில் பேசினார்; மாநிலப் பாராளுமன்றத்தின் தலைவர் வால்டர் மொம்பெர் சமூக ஜனநாயகக் கட்சியினால் (SPD) அனுப்பிவைக்கப்பட்டார். இடது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி மாநில தலைவரான கிளவுஸ் லெடரர் பங்கு பெற்றார். கிறிஸ்துவ ஜனநாயக கட்சி வாதியான ஹெங்கலும் தடையற்ற சந்தைக்கு ஆதரவு தரும் லோனிங்கும் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்ற உறுதிமொழிகளைக் கொடுத்ததற்கு கூட்டத்தில் இருந்து பெரும் கரவொலியை பெற்றனர். இஸ்ரேல் ஒரு காட்டுமிராண்டித்தனமான இராணுவக் குறுக்கீட்டை செய்துள்ளதற்கு ஆதரவைக் கொடுத்திருப்பதை நியாப்படுத்தும் வகையில் லோனிங், "இஸ்ரேலில் கருத்து சுதந்திரம் உள்ளது; அதன் அண்டை நாடுகளில் இருந்து அது இதை வேறுபடுத்திக் காட்டுகிறது" என்றார். இஸ்ரேலிய இராணுவம் கடுமையான தணிக்கையை போர் பற்றி நிறுவியுள்ளது என்பதைப்பற்றி அவர் வேண்டுமென்றே குறிப்பிடவில்லை; இது பல சட்டத் தீர்ப்புக்களுக்கு முற்றிலும் எதிரானதாகும்; போர்ப்பகுதியில் சுதந்திர செய்தியாளர்கள் செல்வதையும் அது அனுமதிப்பதில்லை. சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியின் பிரதிநிதிகளான மொம்பர் மற்றும் ஐஸ்ரட்- போலிங் ஆகியோரும் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு கொடுத்து, ஹமாஸ்தான் போருக்குப் பொறுப்பு என்பதை கூட்டுக் குரலாக ஒலித்தனர். ஆனால் ஒரு பேச்சுவார்த்தைக்குட்பட்ட தீர்வு வேண்டும் என்பதை அவர்கள் தயக்கத்துடன் தெரிவித்தபோது, ஆக்கிரோஷம் நிறைந்த இஸ்ரேல் ஆதரவுடைய கூட்டம் அதை ஏளனமாக ஒலி எழுப்பி, எதிர்க்குரல் கொடுத்த வகையில் எதிர்த்தது. உண்மையில், பசுமைக் கட்சியின் பிரதிநிதி பாலஸ்தீனிய மக்கள் அங்கிருப்பதற்கு உரிமை பெற்றவர்கள் என்றும், "இஸ்ரேல் இந்தப் போரை அறநெறி அடிப்படையில் வெல்ல முடியாது" என்று கூறியபின் தன்னுடைய உரையை தொடர முடியவில்லை. ஆனால் இடது கட்சியின் பிரதிநிதிக்கு முற்றிலும் மாறான வரவேற்பு இருந்தது. அவருடைய உரை பல முறை பெரும் கரவொலி மற்றும் களிப்புக் குரல்கள் வெளிப்படுத்தவிதத்தில் தலையீட்டிற்கு உட்பட்டது. காசா போருக்கு எதிர்ப்பு கூறுபவர்கள் அனைவரும் யூத எதிர்ப்பாளர்கள் என்று குற்றம் சாட்டிய விதத்தில் அவர் கூடியிருந்த மக்களுடன் தமது ஒற்றுமையை நிறுவிக் கொண்டார். தன்னுடைய கருத்தில், "இந்த காசா பகுதியில், இஸ்ரேலுக்கு தெற்கில் நடக்கும் மிருகத்தனமான, கடுமையான பூசல், எமது நாட்டில் யூத எதிர்ப்பை எவரும் பயன்படுத்த உதவிடக்கூடாது என்பதை வலியுறுத்தத்தான்" தான் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றதாக அவர் கூறினார். எந்த பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும் அவருடைய செய்தி காசாமீது தாக்குதலுக்கு எதிராக பரந்த எதிர்ப்புகள் வந்தபின் கூறப்பட்டமை தெளிவாக காட்டுவது என்னவெனில்; இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் அதன் இராணுவத்தை குறைகூறல் யூத எதிர்ப்பு ஆகும், அது நிராகரிக்கப்படவேண்டும் என்பதே அது. உண்மையில், இதற்கு எதிரிடை நிலைதான் சரியாகும். இஸ்ரேலிய அரசாங்கத்தின் குற்றம் சார்ந்த நடவடிக்கைகள், யூதர்களுக்கான தான் நடந்து கொள்ளுவதாக அது கூறுவது (அதன் கொள்கைகளை விமர்சிக்காமை) ஆகியவைத்தான் யூத எதிர்ப்பை ஊக்குவிப்பதாகும். இஸ்ரேலிலும் உலகின் பல பகுதிகளிலும் பல யூதர்கள் இஸ்ரேல் காசாமீது நடத்தும் தாக்குதலை பெரும் திகைப்பு மற்றும் சீற்றக் கலவையுடன் கண்டு இஸ்ரேலிய அரசாங்கத்தின் கொள்கைகளை நிராகரிக்கின்றனர். லெடரர் பேர்லின் அணிவகுப்பில் பங்கு பெற்ற போர்வெறியர்களிடம், "அன்பு நண்பர்களே" என்று உரையை தொடக்கினார். மற்ற பேச்சாளர்களைப் போல் இவரும் போருக்கு முந்தைய வரலாறான வெளியேற்றப்பட்டது, பல தசாப்தங்கள் பாலஸ்தீனம் அடக்கப்பட்டுள்ளமை என்பவற்றை புறக்கணித்தார். ஹமாஸ் ஏவிய கஸாம் ஏவுகணைகள்தான் போருக்கு அடிப்படைக் காரணம் என்று அறிவித்தார். "பொதுமக்கள் இருக்கும் [இஸ்ரேலியப் பகுதிகளான] Ashdod, Beer Sheva, Ashkelon ஆகியவை மீது பகுதியில் குண்டுகள், ராக்கெட்டுக்கள் போடப்படுவதை எதுவும், எதுவும் நியாப்படுத்தாது" என்றும், "என்னைப் பொறுத்தவரையில் இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் எமது நாட்டில் எந்த விவாதத்திலும் இதுதான் தொடக்கக் கருத்தாக இருக்க வேண்டும்." அவர் கூறினார். காசாப்பகுதியில் மக்கள் நிறைந்துள்ள இடங்களில் பாரிய அழிப்புக்கள் நடத்தப்படுவது பற்றி லெடரர் ஏதும் கூறவில்லை. பாலஸ்தீனிய மக்களின் பெருந்திகைப்பு பற்றியும் அவர் ஏடும் குறிப்பிடவில்லை; அவர்களுக்கு தங்களை காத்துக்கொள்ளும் வழிவகையும் இல்லை, இஸ்ரேலிய இராணுவம் கொலைகாரத்தனாமாக முன்னேறும்போது தப்பிக்கவும் வழி இல்லை. அதேபோல் இஸ்ரேலிய இராணுவத்தின் விகிதத்திற்கு மீறிய வலிமை பற்றியும் அவர் ஏதும் குறவில்லை; இதையொட்டி ஒரு இஸ்ரேலிய இறப்பிற்கு ஈடாக 100 பாலஸ்தீனியர்களுக்கும் மேலாக கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலாக லெடரர் பொதுமக்கள் பாதிப்பு பற்றி முதலைக்கண்ணீர் வடித்து ஹமாஸ்தான் இதற்குப் பொறுப்பு என்றார். "எவ்வித நவீனமயமான ஆயுதமுறைகள் பயன்படுத்தப்பட்டாலும், எவர் போருக்குத் தலைமை தாங்கினாலும், பேரழிவு முதலிலும் முக்கியமாகவும் சாதாரண மக்களை தாக்குகிறது; இதற்குக் காரணம் தற்காலப் போரில் பொதுமக்கள் பிணைவைப்பதுதான். இதுதான் ஹமாஸ் தொடரும் முற்றிலும் பொருத்தமற்ற போர் மூலோபாயத்தில் துல்லியமாக காணப்படுகிறது." இடது கட்சியின் உயர்மட்டத் தலைவர் போர் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றது இந்த இமைப்பு இன்னும் வலதிற்கு சாய்ந்துள்ளதின் நிரூபணம் ஆகும். அது நிறுவப்பட்டதில் இருந்தே இடது கட்சி (குறைந்தது பேச்சளவிலேனும்) கூட்டாட்சி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் இருந்து தன்னைப் பெரிதும் ஒதுக்கி வைத்துக்கொண்டு கொசோவோ மற்றும் ஆப்கானிஸ்தானத்தில் ஜேர்மனிய இராணுவம் குறுக்கீடு செய்வதை நிராகரித்திருந்தது. இப்பொழுது மத்திய கிழக்கு பூசலை எதிர்கொள்கையில், இது ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையில் உத்தியோகபூர்வ நிலைக்கு பாய்ந்துவிட்டது; இது பசுமைக் கட்சி 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்ததை ஒத்திருக்கிறது. ஒரு தசாப்தத்திற்கு முன்பு கூட்டாட்சி கூட்டணி அரசாங்கத்தில் இடம் பெறுவதற்காக பசுமை வாதிகள் தங்கள் அமைதிவாத நிலைப்பாட்டைக் கைவிட்டு, யூகோஸ்லேவியாவிற்கு எதிரான நேட்டோ போருக்கு ஆதரவு கொடுத்தது. அப்பொழுது முதல் அது ஜேர்மனிய இராணுவவாதத்தின் மிக வலுவான ஆதரவாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கூட்டாட்சி இடது கட்சிப் பாராளுமன்ற பிரிவின் தலைவராக கிரிகோர் கீஸி கடந்த வசந்த காலத்தில் இஸ்ரேல் தொடர்பான அரசியல் நிலப்பாட்டில் மறுதகவமைவு கொள்ள வேண்டும் என்று குறிப்பிடத்தக்க உரை ஒன்றில் கட்சியின் புதியபோக்கை மாற்றத்தலைப்பட்டார். இஸ்ரேலின் கொள்கையை "ஏகாதிபத்தியத்தன்மை" உடையது எனக் கூறுவதை அவர் நிராகரித்து, இஸ்ரேல் நாட்டின் நிலைப்பாட்டு உரிமையை "இடது" ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இப்பொழுது லெடரர் ஒருபடி மேலே சென்று பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலின் தீய தாக்குதல்களுக்கும் ஆதரவு கொடுத்துள்ளார். இவர் ஒன்றும் தனியே இல்லை என்பது இடது கட்சியின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் முந்தைய நாள் நடந்த போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் காணப்படவில்லை என்பதில் நிரூபணம் ஆகிறது. லெடரர் ஒன்றும் அரசியலில் தெரியாத மனிதரல்ல. கடந்த எட்டு ஆண்டுகளில் அரசாங்க பொறுப்பை இடது கட்சி பகிர்ந்து கொண்டுள்ள ஜேர்மனி மாநிலம் ஒன்றே ஒன்றில் இவர்தான் கட்சித் தலைவர் ஆவார். பேர்லினில், சமூக ஜனநாயகக் கட்சியுடன் ஒரு கூட்டணியில் இடது கட்சி முதலாளித்துவ அரசாங்கத்திற்கு தன்னுடைய விசுவாசத்தை நிரூபித்து சமூக நல செலவினக் குறைப்புக்கள் செயல்படுத்தி, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கடுமையான குறைப்புக்களைக் காட்டியது. தற்போதைய பொருளாதார சமூக நெருக்கடி தீவிரமடைகையில், இடது கட்சி இப்பொழுது அரசாங்கப் பொறுப்பை கூட்டாட்சி மட்டத்திலும் கொள்ள தயாரிப்புக்களை நடத்துகிறது. இந்த இலக்கை ஒட்டி, அதற்கு ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைத் தூண்களை ஏற்கும் நிலை உள்ளது; இதில் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவும் உள்ளது. காசாவில் தற்பொழுது நடக்கும் போர் இடது கட்சியை மதில்மேல் வெறுமே உட்கார முடியாமல் செய்துவிட்டது. தன்னுடைய நிறங்களை அது காட்ட வேண்டியுள்ளது. இதை அது கிளவுஸ் லெடரர் மூலம், கடந்த ஞாயிறன்று இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுத்த ஆர்ப்பாட்டத்தில் அவரைப் பங்கு பெறச் செய்ததின் மூலம் செய்துள்ளது. |