World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan death squads kill editor and ransack TV station

இலங்கை கொலைப் படை பத்திரிகை ஆசிரியரை கொன்றதோடு தொலைக்காட்சி நிலையத்தையும் தாக்கி அழித்தது

By K. Ratnayake
13 January 2009

Back to screen version

இலங்கையில் கடந்த வாரம் ஊடகங்கள் மீது நடத்தப்பட்ட இரண்டு வன்முறைத் தாக்குதல்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது இனவாத யுத்தத்தை பற்றிய எந்தவொரு மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனத்தையும் அரசாங்கமும் இராணுவமும் பொறுத்துக்கொள்ளாது என்ற தெளிவான எச்சரிக்கையை விடுக்கின்றது.

கடந்த வியாழன், சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசன்த விக்கிரமதுங்க வேலைக்குச் செல்லும் போது சுறுசுறுப்பான புறநகர் பகுதி வீதியொன்றில் வாகனத்தை செலுத்திய வேளை வெட்ட வெளிச்சமான காலைப் பொழுதில் சுட்டுக் கொல்லப்பட்டார். கண்கண்ட சாட்சிகளின் படி, நான்கு துப்பாக்கிதாரிகள் அவரது காரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். ஒருவர் வாகனத்தை இடைமறிக்க இன்னொருவர் வாகனத்தின் கண்ணாடியை இடித்து துளையிட்டு கைத்துபாக்கியால் விக்கிரமதுங்கவை சுட்டார். ஏனைய இருவரும் காவலுக்கு நின்றனர். உயர் பாதுகாப்பு வலயத்துக்கு அடுத்தும் விமானப் படை சோதனைச் சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திலும் இந்த சம்பவம் நடந்திருந்த போதிலும் நான்கு பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர், எம்.டி.வி./சிரச ஒலிபரப்பு வலையமைப்பிற்குள் விடியற் காலை பாய்ந்த ஒரு ஆயுதக் கும்பல், பாதுகாவலர்களை அடக்கிவிட்டு கட்டிடத்தை தாக்கியழித்துள்ளன. தானியங்கி துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கைக்குண்டுகள் மற்றும் ஒரு கண்ணிவெடி சகிதம் ஆயுபாணிகளாக இருந்து சுமார் 20 முகமூடியிட்ட ஆயுததாரிகள், கட்டுப்பாட்டு அறை, அலுவலகங்கள் மற்றும் ஸ்டூடியோவையும் அழித்தனர். பொலிசாருக்கு அறிவித்தல் விடுத்தும் 30 நிமிட வன்முறைகள் முடிவடையும் வரை அவர்கள் வரவில்லை. WSWS உடன் பேசிய செய்தி இயக்குனர் அசோக டயஸ், இது "ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல்" என கண்டனம் செய்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கும் மற்றும் அரசாங்கத்தையும் யுத்தத்தையும் விமர்சிக்கும் எவருக்கும் எதிராக இலக்குவைக்கப்பட்ட பல நூறு கடத்தல்கள், படுகொலைகள் மற்றும் வன்முறைத் தாக்குதல்களுக்கு பொறுப்பான, இராணுவ அனுசரணையிலான குண்டர் கும்பல்களின் தரக்குறியீடுகளை இந்த இரு சம்பவங்களும் கொண்டுள்ளன. முந்தைய வாரத்தில் புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றியதை அடுத்து, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ பிற்போக்கு வெற்றி ஆரவாரத்தை கிளறிவிட்ட நிலையிலேயே கடந்த வார சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

விக்கிரமதுங்கவின் கொலையாளிகள் தப்பிச்செல்ல முடிந்ததும், கனமாக ஆயுதம் தாங்கிய 20 பேர் இரவில் தடையின்றி பயணித்ததும், பாதுகாப்பு படையினரின் உடந்தையை சுட்டிக்காட்டுகின்றன. கொழும்பு பூராவும் மற்றும் சூழவுள்ள புறநகர்களிலும் பொலிசும் இராணுவமும் சோதனைச் சாவடிகள் மற்றும் வீதித்தடைகளின் பிரமாண்டமான வலையமைப்பை பராமரிக்கின்றன. வாகனங்கள், பயணிகள், பாதசாரிகளும் கூட நிறுத்தப்பட்டு சோதனையிடப்படுவது வழமையாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, எம்.டி.வி./சிரச மீது தாக்குதல் நடத்தியவர்கள் இலக்கத் தகடின்றி ஒரு வெள்ளை வானிலேயே வந்துள்ளனர். இது பல தசாப்தங்களாக இலங்கையில் இராணுவக் கொலைப் படைகளின் குறியீடாகும்.

நேற்று கொழும்பில் விக்கிரமதுங்கவின் இறுதிச் சடங்கில் பங்குபற்றிய ஆயிரக்கணக்கானவர்கள், அவரது கொலைக்கு அரசாங்கத்தை குற்றஞ்சாட்டி சுலோகங்களை கோஷித்தனர். கடந்த அக்டோபரில் அவரை ஜனாதிபதி "பயங்கரவாத பத்திரிகையாளர்" என முத்திரை குத்தியதாக சுட்டிக்காட்டிய பாரிஸை தளமாகக் கொண்ட எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் சங்கம் (RSF), ஆசிரியருக்கு எதிராக பகைமையை கிளறிவிட்டதாக அரசாங்கத்தை குற்றஞ்சாட்டினர். கொலையை கண்டித்து அறிக்கை வெளியிட்ட சர்வதேச மன்னிப்புச் சபை, இராஜபக்ஷவின் பதவிக் காலத்தில், பத்திரிகையாளர்கள் உட்பட 14 ஊடக ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும் அச்சுறுத்தல் காரணமாக மேலும் 20 பேர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

பழமைவாத எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி.) ஆதரவாளரான விக்ரமதுங்க, கொழும்பு ஸ்தாபனத்தின் ஏனையவர்களைப் போல் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆதரித்தவராவர். ஆயினும், அதே சமயம், யுத்தம் முன்னெடுக்கப்படுகின்ற முறை தொடர்பாக அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகளை விக்கிரமதுங்க விமர்சித்தார். உயர்மட்ட ஜெனரல்கள் மற்றும் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட உயர்மட்ட மோசடிகளின் சான்றுகளை சன்டே லீடர் அம்பலப்படுத்தியது.

பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோடாபய இராஜபக்ஷ, விக்கிரமதுங்கவுக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. நட்ட ஈடாக கோடாபய இராஜபக்ஷ ஒரு பில்லியன் ரூபா கோரும் இந்த வழக்கு, பாதுகாப்பு கொடுக்கல் வாங்கலில் மோசடிகளை அம்பலப்படுத்தி சண்டே லீடரில் வெளிவந்த ஒரு கட்டுரை சம்பந்தப்பட்டதாகும்.

அதே சமயம், பாராளுமன்றத்தை ஓரந்தள்ளிவிட்டு இராணுவத்தில் தங்கியிருப்பது உட்பட இராஜபக்ஷவின் அதிகரித்துவரும் எதேச்சதிகாரமான ஆட்சி முறை பற்றி கொழும்பில் உள்ள ஆளும் தட்டின் சில பகுதிகளின் கவலையை விக்கிரமதுங்கவின் விமர்சனங்கள் பிரதிபலித்தன. தான் ஒரு இலக்கு என்பதை நன்கு அறிந்திருந்த விக்கிரமதுங்க, தனது சொந்த மரண அறிவித்தலை எழுதியிருந்தார். கடந்த வாரக் கடைசியில் வெளியான சண்டே லீடரில் ஆசிரியர் தலையங்கமாக வெளியிடப் பட்டிருந்த அதில், அவர் இலங்கையை நாஸி ஜேர்மனியுடன் ஒப்பிட்டிருந்தார்.

நாம் இருவரும் முன்நாள் நண்பர்கள் என்பதை குறிப்பிட்டிருந்த விக்கிரமதுங்க, நேரடியாக ஜனாதிபதிக்கு முகவரியிட்டிருந்தார். "நான் உயிரிழந்தவுடன் நீங்கள் (இராஜபக்ஷ) தெய்வீகத் தன்மை காட்டும் வழமையான பேரொலிகளை எழுப்புவதோடு துரிதமான மற்றும் தீவிரமான விசாரணையொன்றை நடத்துமாறும் பொலிசாருக்கு வேண்டுகோள் விடுப்பீர்கள். ஆனால், நீங்கள் கடந்த காலத்தில் கட்டளையிட்ட சகல விசாரணைகளையும் போல், இது பற்றியும் எதுவும் வெளிவராது. உண்மையை சொன்னால், எனது இறப்புக்கு பின்னால் இருப்பது யார் என்பது எங்கள் இருவருக்கும் தெரியும்."

"கவலைக்குரியவாறு, இளமைக் காலத்தில் எங்களது நாடு பற்றி நீங்கள் கொண்டிருந்த கனவுகள் அனைத்தையும், வெறும் மூன்றே ஆண்டுகளில் சுக்குநூறாக்கிவிட்டீர்கள். தேசப்பற்று என்ற பெயரில் நீங்கள் மனித உரிமைகளை நசுக்கியுள்ளீர்கள், கட்டற்ற மோசடிகளை பேணி வளர்த்துள்ளதோடு உங்களுக்கு முந்தைய ஜனாதிபதிகள் செய்திராதளவு வெகுஜனங்களின் பணத்தை வீணாக்கியுள்ளீர்கள்... வேறு எவரும் நீங்கள் செய்தவாறு அதிகளவு இந்த நிலத்தில் இரத்தம் சிந்தச் செய்யவில்லை அல்லது நீங்கள் செய்வது போல் பிரஜைகளின் உரிமைகளை நசுக்கவில்லை."

அரசாங்கங்கள் ஜனநாயக உரிமைகளை நசுக்குகின்ற மற்றும் தசாப்த காலங்களாக இரத்தம் சிந்துகின்ற இலங்கையின் சூழ்நிலையை எடுத்துக்கொண்டால், ஒரு முன்நாள் நண்பரால் எழுதப்பட்டுள்ள இந்த ஆசிரியர் தலையங்கம், இராஜபக்ஷ அர்சாங்கத்தின் மீதான ஒரு அசாதாரணமான குற்றச்சாட்டாகும். இராஜபக்ஷவின் கீழ், 2002 யுத்த நிறுத்தத்தை மீறிய, இனவாத யுத்தத்தை மீண்டும் முன்னெடுத்த மற்றும் அதை ஜனநாயக உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்துகின்ற ஒரு அரசியல்-இராணுவ குழுவின் கைகளில் அதிகாரங்கள் முன்னெப்போதுமில்லாத அளவு குவிந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய வழிமுறைகள் இறுதியாக உழைக்கும் மக்களின் பிரமாண்டமான எதிர்த்தாக்குதலை தோற்றுவிக்கும் என பீதியடைந்துள்ள அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு பகுதியினருக்காகவே விக்கிரமதுங்க பேசினார்.

எம்.டி.வி./சிரச விவகாரத்தில், அரசாங்கம் இன்னுமொரு அடி மேலே சென்று, எதிர்க் கட்சியான யூ.என்.பி. மீது குற்றஞ்சாட்ட முயற்சிக்கின்றது. அநாமதேய தகவலின்படி இயங்குவதாக தோன்றும் வகையில் செயற்படும் பொலிஸ், யூ.என்.பி. நகரசபை உறுப்பினர் ஒருவரை கைது செய்து, இந்தத் தாக்குதல்களுக்கான ஆயுதங்களை கொண்டு செல்வதற்கு அவர் உதவியதாக குற்றஞ்சாட்டுகிறது. இராஜபக்ஷவை விமர்சிக்கும் ஒரு தொலைக்காட்சி நிலையத்தை தாக்கியழிப்பதில் நகரசபை உறுப்பினர் அல்லது யூ.என்.பி. ஈடுபட்டது ஏன் என அரசாங்கமோ அல்லது பொலிசோ எந்தவொரு விளக்கத்தையும் வழங்கவில்லை.

எம்.டி.வி./சிரச "தேசப்பற்று அற்ற" போக்குள்ளவை என அரச ஊடகங்களில் கண்டனங்கள் வெளியானதை அடுத்தே இந்த தாக்குதல் நடந்துள்ளது. கிளிநொச்சியில் இராணுவத்தின் வெற்றியை பற்றி திருப்தியான அளவு செய்தி வெளியிடாத இந்த தொலைக்காட்சி சேவை, அதே தினம் கொழும்பில் புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலுக்கு அதிக முதலிடம் கொடுத்தது என அரசாங்கத்தின் ஊதுகுழல்கள் பிரகடனம் செய்தன. சண்டே லீடரைப் போல், எம்.டி.வி./சிரசவும் முழுமையாக யுத்தத்தை ஆதரித்த போதிலும், அரசாங்கத்தின் மோசடிகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் பற்றி விமர்சித்தன.

புலிகளின் மீதான இராணுவ வெற்றி பற்றிய அரசாங்கத்தின் முழக்கங்களை பொறுத்தளவில், எம்.டி.வி./சிரச மீதான தாக்குதல்கள் மற்றும் விக்கிரமதுங்கவின் கொலையும் இராஜபக்ஷவின் அரசாங்கம் எந்தளவு பலவீனமானது என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. கடந்த வெள்ளிக் கிழமை, தேசிய தொலைக்காட்சியில் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட ஆணையிறவை இராணுவம் கைப்பற்றியதை அறிவித்த ஜனாதிபதி, "மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இத்தகைய வெற்றிகளை குறைத்து மதிப்பிட" முயற்சிக்கும் சூழ்ச்சிக்காரர்கள் பற்றி முன்னீடுபாடு காட்டினார்.

"இத்தகைய வெற்றிகளை அடைய பெரும் அர்ப்பணிப்புடன் செயற்படும் இராணுவத் தளபதிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவதே இத்தகைய சூழ்ச்சிக்காரர்களின் குறிக்கோள்," என இராஜபக்ஷ பிரகடனம் செய்தார். "எங்களுடைய வெற்றிகளை எங்களிடமிருந்து பறிப்பதற்கு குறுக்கீடு செய்யும் பலவித சர்வதேச சக்திகளுக்கு வழியேற்படுத்துவதன்" பேரில் அவர்கள் "துருப்புக்களின் மனவலிமையை அழித்து நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குள் தள்ள" முயற்சிக்கின்றார்கள்," எனவும் அவர் தெரிவித்தார்.

இராஜபக்ஷ சூழ்ச்சிக்காரர்களின் பெயர்களைக் குறிப்பிடவும் அல்லது இந்த சூழ்ச்சி தொடர்பான உறுதியான விபரங்கள் எதையும் வெளியிடவும் தவறியமை ஆச்சரியத்திற்குரியதல்ல. அவரது சித்தப்பிரமை, எல்லாவற்றுக்கும் மேலாக யுத்தத்தின் செலவை தாங்கத் தள்ளப்பட்டுள்ள மற்றும் இப்போது பூகோள பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக வாழ்க்கைத் தரம் துரிதமாக சீரழிந்துவருவதை எதிர்கொள்ளும் பரந்த உழைக்கும் மக்கள் தொடர்பான பீதியையே பிரதிபலிக்கின்றது.

இராணுவத்தின் வெற்றிகளுக்கு பின்னால் மக்களின் பரந்த நன்னிலை உணர்வு ஒன்றும் சேரவில்லை. அரசாங்கத்தின் கட்டளையின் படி, பாடசாலைகள் உட்பட அரச நிறுவனங்கள் கிளிநொச்சி வெற்றியை "கொண்டாடத்" தள்ளப்பட்டன. பல சிங்கள பேரினவாத அமைப்புகள் ஒப்பீட்டளவில் சிறிய கூட்டங்களை நடத்தின. ஆனால் கனிசமானளவு குழப்ப நிலை இருந்த போதிலும், 25 ஆண்டுகால யுத்தம் விரைவில் முடிவடைந்தால் வாழ்க்கை முன்னேற்றமடையலாம் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே உழைக்கும் மக்கள் மத்தியில் உள்ளது.

இத்தகைய எதிர்பார்ப்புகளை இட்டு நிரப்ப அரசாங்கம் இலாயக்கற்றது என்பது துல்லியமாக சரியாகும். "சூழ்ச்சிக்காரர்கள்" பற்றிய இராஜபக்ஷவின் கருத்து, எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கு பயன்படக்கூடிய நடவடிக்கைகள் பற்றிய தெளிவான சாத்தியமான எச்சரிக்கையாகும். இராணுவம் புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசங்களையும் கைப்பற்றினால், கிளிநொச்சி வீழ்ந்ததன் பின்னர் இராஜபக்ஷ கூறிக்கொண்டது போல், இந்த "வெற்றி சமாதானம், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை" கொண்டுவராது. மாறாக தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட பொலிஸ் அரச நடவடிக்கைகளையே கொண்டுவரும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved