World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காObama, Bush team up behind another $350 billion for the banks புஷ், ஒபாமா ஒன்றாகச் சேர்ந்து இன்னொரு 350 பில்லியன் டாலரை வங்கிகளுக்கு கொடுக்கின்றனர் By Barry Grey இருப்பவற்றில் முக்கியமானதை முதலில் எடுத்துக் கொள்வோம். வியாழனன்று ஜனாதிபதி புஷ் தன்னுடைய இறுதி உரையைக் கூறுமுன், பாரக் ஒபாமா 44வது ஜனாதிபதியாக அடுத்த செவ்வாயன்று பதவி ஏற்பதற்கு முன், வெளியேறும் வரவிருக்கும் நிர்வாகங்கள் இணைந்த முயற்சியில் இரண்டாவது 350 பில்லியன் டாலர் வரிசெலுத்துவோர் பணத்தை, வங்கிகள் பிணை எடுப்பிற்காக அளிப்பதில் ஈடுபட்டுள்ளன. ஒபாமா திங்கட்கிழமை காலை புஷ்ஷிடம் தொலைபேசி தொடர்பு கொண்டு TARP (Troubled Asset Relief Program) ல் இருந்து 700 பில்லியன் டாலரில் இரண்டாம் பகுதியை, அக்டோபர் 3 ம் தேதி காங்கிரஸ் ஒப்புக் கொண்ட வோல் ஸ்ட்ரீட்டிற்கு வழங்கிய பண மழையின் இரண்டாம் பகுதியை கோருமாறு தெரிவித்தார். கிட்டத்தட்ட உடனே புஷ் இதன்படி நடந்து கொண்டார்; திறைசேரி கூடுதலான பில்லியன்களை நிதி நிறுவனங்களுக்கு மாற்றும் ஜனாதிபதியின் வேண்டுகோளை, அவையின் இரு பிரிவுகளும் நிராகரித்தால்தான் காங்கிரஸ் 15 நாள் கால அவகாசத்தில் தடுக்க முடியும். அப்படி நடக்காத செயல் நடந்து விட்டாலும், ஜனாதிபதி காங்கிரஸ் நடவடிக்கையை தவிர்க்கும் வகையில் தடுப்பதிகாரத்தை பயன்படுத்த முடியும்; அப்பொழுது இரு பிரிவுகளிலும் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைதான் தடுப்பதிகாரத்தை தகர்க்க முடியும்--அரசியலை பொறுத்த வரை அவ்வாறு நடப்பது கடினம்; ஏனெனில் ஜனநாயகக் கட்சி பெரும் ஆதரவை பிணை எடுப்பிற்கு கொடுத்துள்ளது; இரு காங்கிரஸ் பிரிவுகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை கொண்டுள்ளது. ஒபாமாவும் அவருடைய உயர்மட்ட பொருளாதார உதவியாளர்களும் முழுநேரத்தையும் செலவழித்து முக்கிய ஜனநாயக, குடியரசுக் கட்சித் தலைவர்களை சந்தித்து காங்கிரஸில் ஆதரவை நாடும் விதத்தில் வங்கிகளுக்கான பிணை எடுப்புப் பணம் அளிப்பதற்கு முன்னுரிமை அளித்தனர். பெருவணிகத்தின் தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்ட ஒபாமாவின் 800 பில்லியன் டாலர் பொருளாதார ஊக்கப் பொதி, பெப்ருவரி மாதம் நடுப்பகுதிவரை காங்கிரசின் முடிவுக்காக காத்திருக்ககூடியது, ஆனால் செனட் பெரும்பான்மை தலைவர் ஹாரி ரீட், TARP பணத்திற்கு அதிகபட்சம் இந்த வெள்ளிக்குகள் வாக்கெடுப்பு நடத்துவதாக உறுதியளித்துள்ளார். TARP பணத்தின் இரண்டாம் பகுதிக்கு புஷ்-ஒபாமா கூட்டு முயற்சி கொடுத்துள்ளதானது காங்கிரஸின் இருகட்சிக்காரர்களிடம் இருந்தும் நிறைய புகார்களை வெளிப்படுத்தியுள்ளது; வங்கிகள் முதல் தவணையாக வாங்கிய பில்லியன் கணக்கான பணத்தையே கடன்கொடுக்க மறுப்பது பற்றியும், ஜனநாயகக் கட்சியினர் வங்கிகள் அடைமானக் கடனால் இழக்கும் வாய்ப்பு உடைய வீடுகளின் சொந்தக்காரர்களுக்கு தக்க உதவி கொடுக்கவில்லை என்பது பற்றியும் இத்தகைய புகார்கள் வந்துள்ளன. பணத்தை வங்கிகள் எப்படிப் பயன்படுத்தின என்பது பற்றி தடைகள் ஏதும் இல்லாமை தொடர்பாக கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன; அதே போல் நிர்வாக அதிகாரிகளின் ஊதியம் பற்றி சரியான வரம்புகள் இல்லாததும் குறைகூறப்பட்டுள்ளது; மேலும் காங்கிரஸ் அல்லது பொதுமக்களுக்கு கூட வங்கிகள் அரசாங்கத்தில் இருந்து பெற்ற நிதியை எப்படி செலவழித்தது என்று கூட கூற வேண்டியதில்லை என்பதும் புகாருக்கு உரியதாகியுள்ளது.350 பில்லியன் டாலர் என்று ஏற்கனவே வழங்கப்பட்ட பணத்தில், 250 பில்லியன் டாலர் வங்கிகளுக்கும் நிதிய நிறுவனங்களுக்கும் சென்றது; இதில் 125 பில்லியன் டாலர் 9 பெரிய வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டதும் அடங்கும். மற்றொரு 40 பில்லியன் டாலர், மாபெரும் காப்பீட்டு நிறுவனமான American International Group ஐ காப்பாற்ற முன்பு கொடுக்கப்பட்ட 100 பில்லியன் டாலருடன் சேர்க்கப்படும்; 19 பில்லியன் டாலர் அவசர கால கடனாக ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லருக்கும், ஏனைய நிறுவனங்களுக்கு 20 பில்லியன் டாலரும் சென்றன. அரசாங்கக் கடன்கள், உத்தரவாதங்கள் என்ற விதத்தில் Citigroup ற்கு ஒதுக்கப்பட்ட 300 பில்லியன் டாலரோடு இன்னொரு 25 பில்லியன் டாலரும் உட்செலுத்தப்பட்டது. தங்கள் இருப்புக்களை அதிகரித்துக்கொள்ள வங்கிகள் இப்பணத்தை பயன்படுத்திக் கொண்டன, சில பெரு நிறுவனங்களை பொறுத்தவரையில் நிதி மந்திரி ஹென்றி போல்சன் இயற்றிய ஒருதலைப்பட்ச வரிவிலக்குடைய தன்மையை கொண்டு சிறு நிறுவனங்களை வாங்குவதற்கு பயன்படுத்தின; போல்சன் கோல்ட்மன் சாஷ்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்; அத்தகைய உதவி வோல் ஸ்ட்ரீட்டிற்கு கூடுதலான நிதிப் பலத்தை வசதிப்படுத்த கொடுக்கப்பட்டது. "தெளிவற்ற நிலை, வெளிப்படையற்ற தன்மை, பணம் எப்படிச் செலவழிக்கப்பட்டது என்பதை அறியமுடியாத நிலை, வீடுகள் பற்றி தைரியமான நடவடிக்கை எடுப்பதில் தோல்வி" ஆகியவை இருப்பதாக ஒபாமாவே திங்களன்று குறிப்பிட்டார். இதைப்பற்றி தான் "ஏமாற்றம்" அடைந்துள்ளதாகவும் கூறினார். "இத்திட்டத்தின் அடுத்த கட்டத்தில் சில நடைமுறைகளில் அடிப்படை மாற்றம் கொண்டுவரப்படும்" என்றும் அவர் உறுதியளித்தார். இதுவும் இதேபோன்ற அறிக்கைகளும் காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சி முக்கிய உறுப்பினர்களிடம் இருந்து வருவது, பெருமந்த நிலைக்காலத்திற்கு பின்னர் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை கொண்டுவந்த நிதிய கொள்ளைத் திட்டங்கள், மற்றும் இலாபங்களை அதிகப்படுத்துவதற்காக தங்கள் இருப்புக்களை மிகையாக்கிய அதே நிறுவனங்களுக்கு கூட்டாட்சி நிதியை அள்ளி வீசியிருப்பது பற்றிய பொது மக்களின் சீற்றத்தை குறைப்பதற்காக பாவிக்க்கும் போலி வார்த்தைகளாகும். அமெரிக்க மக்களின் இருப்புக்கள் இழிந்த நிதிய உயரடுக்கிடம் வாரி வழங்குவதை தொடர சில அரசியல் மறைப்பு தேவைப்படுகிறது. ஆனால் இத்தகைய திருப்தியுரைகளும் தொடர்புடைய அரசியல் தந்திர உத்திகளும் அரசாங்கம், இரு கட்சிகள் ஆகியவை ஆளும் வர்க்கத்தின் மிக சக்திவாய்ந்த பிரிவுகளுக்கு முற்றிலும் தாழ்ந்து நிற்பதை மறைக்க முடியாது. இழிவான பரபரப்புடன் வெளியறும், உள்ளேவரும் நிர்வாகங்கள் இரண்டும் வோல் ஸ்ட்ரீட்டின் தேவைகளை பூர்த்தி செய்யக் காட்டும் நிலை, பணத்தை மிக அதிக அளவில் உட்செலுத்தும் முறை, அமெரிக்க "ஜனநாயகத்தின்" அடித்தளத்தில் இருக்கும் வர்க்க உறவுகளைப் பற்றிய நடைமுறை உதாரணத்தை தருகிறது. ஒபாமா 350 பில்லியன் டாலர் அதிக பணத்தை வங்கிகளுக்காக கோரிய தினத்திற்கும் முந்தைய நாளில், அவர் தன்னுடைய நிர்வாகம் முக்கிய நிதிய குறைப்புக்களையும் கட்டுமான "சீர்திருத்தங்களையும்" சமூக நலத் திட்டங்களின் தளங்களான சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி ஆகியவன்றின் மீது சுமத்த இருப்பதாகக் கூறினார் --இவற்றைத்தான் பல மில்லியன் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் நம்பியுள்ளனர். ABC News க்கு கொடுத்த பேட்டி ஒன்றில், "சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு உட்பட தக்க சீர்திருத்தத்தை" அவர் செயல்படுத்துவாரா, "நாட்டில் இருக்கும் அனைவரும் இதற்காக தியாகம் செய்ய வேண்டுமா?" என்று வினவப்பட்டார். "ஆம். நீங்கள் விளக்கியிருப்பதைத்தான் நாங்கள் துல்லியமாகச் செய்ய இருக்கிறோம்...ஒவ்வொரும் ஏதேனும் கொடுக்க வேண்டும்." என்று ஒபாமா விடையிறுத்தார். அதாவது நிதிய பிரபுத்துவத்தில் இருக்கும் பல மில்லியன், பில்லியனுக்கு உரிமையாளர்களை தவிர, ஒவ்வொருவரும், கொடுக்க வேண்டும். வெடிப்புத் தன்மை உடைய தொழிலாள வர்க்கம் பெரிதும் நம்பியிருக்கும் இந்த முக்கிய சமூகத் திட்டத்தை, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு நிதியை உட்செலுத்துவதால் வரக்கூடிய வரவு/செலவு திட்ட பற்றாக்குறையை, ஈடுகட்டுவதற்காக ஏன் குறைக்கப்பட வேண்டும் என்று ஒருவரும் விளக்கக்கூட முற்படவில்லை. உண்மையில், TARP திட்டம் இயற்றப்பட்டபோது இருந்தது போல், எவ்வித பொது விவாதம் அல்லது முக்கியமன காங்கிரஸ் விவாதமும் இது பற்றிக் கிடையாது; அது தவிர்த்திருக்க வேண்டிய பொருளாதாரப் பேழிவு ஏன் முதல் தவணை கொடுக்கப்பட்டும் கூட, தவிர்க்கப்படவில்லை என்பது பற்றிய மதிப்பீடு ஏதும் இல்லை; அதே போல் இரண்டாம் தவணை மட்டும் எப்படி நிலைமையைச் சீராக்கும், எவருக்கு அது நன்மையை தரும், பொருளாதார நெருக்கடியில் வோல் ஸ்ட்ரீட் தப்பிக்க முதலில் தவணையாக கொடுக்கப்பட்ட பகுதியை விட இது எப்படிச் சிறந்தது என்பதும் கூறப்படவில்லை. மீண்டும் அமெரிக்க மக்களின் தலைமீது துப்பாக்கி முனை வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்களுக்கு எழுதி கடிதம் ஒன்றில், ஒபாமாவின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகரான லோரன்ஸ் சம்மர்ஸ் "ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா தேவை தவிர்க்க முடியாதது, அவசரமானது என்று கருதுகிறார். நாம் தாமதப்படுத்த இயலாது" என்று எழுதியுள்ளார். காங்கிரஸிற்கு எழுதிய கடிதத்தில் சம்மர்ஸ், "நிறுவனங்கள் விதிவிலக்கான உதவியை" பெறுகின்றன என்றும் அவை "கடுமையான, ஆனால் நியாயமான" வரம்புகளை நிர்வாகிகள் ஊதியம் மற்றும் பிற தடுப்புக்களை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இத்தகைய உத்தரவாதங்கள் எந்த அளவிற்கு மதிப்புடையவை என்பதை சம்மர்ஸ் மற்றும் ஒபாமாவின் நிதி மந்திரியாக வரக்கூடிய டிமோதி கீத்னர் ஆகியோர் வேலபார்த்தபோது பெற்றனர் என்பதில் இருந்து தெரியவரும்; பிந்தையவர்தான் TARP திட்டத்திற்கு தலைமை தாங்க இருப்பவர். கிளின்டன் நிர்வாகத்தில் திறைசேரி செயலாளர் என்னும் முறையில் சம்மர்ஸ் வங்கிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தியதுடன் குறைந்த கடன் கொள்கைகளையும் கொண்டுவந்தார்; இவைதான் வீடுகள் மற்றும் கடன் குமிழிகளுக்கு வித்திட்டதோடு 18 மாதங்களுக்கு முன்பு வெடித்தன. நியூ யோர்க்கின் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் என்ற முறையில் கீத்னர், போல்சனுடனும் பெடரல் தலைவர் பென் பெர்னன்கேயுடனும் அரசாங்க கடன்கள், பண உட்செலுத்துல்கள் மற்றும் வங்கிகளுக்கும் நிதிய சந்தைகளுக்கும் உத்தரவாதம் கொடுத்தனர்; அவை இப்பொழுது மொத்தம் கிட்டத்தட்ட 8 டிரில்லியன் டாலர்கள் என்று உள்ளன. திங்களன்று பெர்னன்கே கூடுதலான TARP பணத்தை அளிக்க வலியுறுத்தினார். லண்டன் பொருளாதார பள்ளியில் ஆற்றிய உரை ஒன்றில் அவர் ஒபாமாவின் ஊக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தாலும், இன்னும் கூடுதலான வரிப்பண உட்செலுத்துதல்கள் வங்கி முறைக்கு தேவை என்று குறிப்பிட்டார். இரண்டாம் தவணை மோசமான அடைமானத் தொடர்புடைய கடன்களையும் மற்ற "நச்சு" இருப்புக்களையும் வாங்கப் பயன்படுத்தலாம் என்றும் அவை வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்புக்களை கீழ்நோக்கிக் காட்டுகின்றன என்றும் கூறினார். இத்திட்டம்தான் ஆரம்பத்தில் பெர்னன்கே மற்றும் போல்சனால் கூறப்பட்டன; பின்னர் காங்கிரசில் வங்கிகளுக்கு நேரடியாக பணம் உட்செலுத்தப்படலாம் என்று இயற்றப்பட்ட சில நாட்களில் கைவிடப்பட்டது. அடுத்த பணம் உட்செலுத்துதல் எத்தகைய வடிவில் இருந்தாலும், அது ஒன்றும் ஆழமடைந்து செல்லும் பொருளாதார நெருக்கடியை தீர்க்கப்போவதில்லை. அமெரிக்கா மற்றும் உலக முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள் மற்றும் ஆழ்ந்த அமைப்பு பிரச்சினைகளை இவற்றால் தீர்க்க முடியாது, இயலாது. வங்கிகளுக்கு எந்த அளவிற்கு பணம் கொடுத்தாலும் அடிப்படை உற்பத்தி முறையில் இலாப நெருக்கடியைத் தீர்க்க முடியாது; அதே போல் நெருக்கடியின் மையத்தில் உலகந்தழுவிய உற்பத்தி முறைக்கும் தேசிய அரச அமைப்பு முறைக்கும் இடையே இருக்கும் முரண்பாட்டையும் தீர்க்க முடியாது; அல்லது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள உற்பத்தி முறையின் மகத்தான சரிவை திருப்ப முடியாது; இது பல தசாப்தங்களான ஊக வணிகம் ஒட்டுண்ணித்தனம் ஆகியவற்றின் விளைபொருளாகும். நெருக்கடி வெடித்ததில் இருந்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையைப் போலவும், இது நிதிய உயரடுக்கின் நலன்களைக் காக்கும் வகையில் செலுத்தப்படுவதாகும்; ஒரு தோற்றுவிட்ட பொருளாதார, அரசியல் அமைப்பு முறையின் அஸ்திவாரங்களை தொடக்கூடுச் செய்யாது. ஆரம்பத்தில் இருந்தே, TARP பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கான ஒரு காத்திரமான தீர்வு என்று கருதப்படவில்லை; மாறாக நெருக்கடியை பயன்படுத்தி மிகப் பரந்த அளவில் செல்வத்தை நிதிய பிரபுத்துவத்திற்கு மாற்றும் தன்மையைத்தான் செயல்படுத்திய வழிவகையாக இருந்தது; சாதாரண நிலைமயில் இவ்வாறு செய்வது மிகக் கடினம் ஆகும். பொருளாதாரத்தை சூறையாடியதன் விலை இப்பொழுது தொழிலாள வர்க்கத்தினால் சுமக்கப்படுகிறது. ஒபாமா மற்றும் புஷ்ஷின் ஐக்கிய முன்னணி, வங்கிப் பிணை எடுப்பின் பின்னணியில் இருப்பது, ஒரு "மாறுதலின்" முகவர் என்று தன்னை காட்டிக் கொண்ட ஒபாமாவின் தோற்றத்தில் இருந்த மோசடித்தன்மைக்கு மற்றொரு நிரூபணம் ஆகும்; அதேபோல் வெளியேறும், வரவிருக்கும் நிர்வாகங்களுக்கு இடையே இருக்கும் அடிப்படைத் தொடர்பின் மற்றொரு வெளிப்பாடும் ஆகும். இன்னும் அடிப்படையில், இது அரசாங்கக் கொள்கைகள் ஒரு முற்போக்கான தேர்தல்கள் மூலமோ அல்லது குடியரசு கட்சிக்கு பதிலாக ஜனநாயகக் கட்சியை கொண்டுவருவதின் மூலமோ மாற்றப்பட முடியாது என்ற உண்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்க ஜனநாயகம் என்னும் அதிக அளவில் உளுத்தப்போன முகப்பிற்குப் பின்னால், சமூக வாழ்வு, போர், சமாதனம், ஜனநாயக உரிமைகள் என்ற அடிப்படை பிரச்சினைகள் அனைத்தும் ஆளும் உயரடுக்கின் வர்க்க நலன்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த நிலைமையானது சோசலிசத்திற்காக போராடும் அடிப்படையில் ஒரு சுயாதீன அரசியல் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரள்வின் மூலம்தான் மாற்றப்பட முடியும். |