World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : இலங்கைSri Lankan SEP stands in provincial elections to oppose war and attacks on democratic rights இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி யுத்தம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்க மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்றது By the Socialist Equality Party (Sri Lanka) இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) பெப்பிரவரி 14 நடைபெறவுள்ள இரு மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுகின்றது. மத்திய மாகாணத்தில் நுவரெலியா மற்றும் வடமேல் மாகாணத்தில் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 19 வேட்பாளர்கள் அடங்கிய இரு பட்டியல்களை கட்சி தாக்கல் செய்துள்ளது. மத்திய மலையக மாவட்டங்களில் உள்ள தீவின் பரந்த தேயிலை பெருந்தோட்டங்களின் மத்தியிலேயே நுவரெலியா உள்ளது. இந்த மத்திய மலையக மாவட்டங்களில் வாழும், குறைந்த ஊதியம் பெறும் ஒடுக்கப்பட்ட தொழிலாளர் படையில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் பேசும் மக்களாவர். மேற்குக் கடற்கரைப் பகுதியில் புத்தளம் மாவட்டத்தில் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களும் கலந்து வாழ்கின்றனர். இவர்களில் 25 ஆண்டுகால கசப்பான உள்நாட்டு யுத்தத்தால் ஏனைய பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த பலரும் அடங்குவர். சோ.ச.க. யின் வேட்பாளர் பட்டியலில் தோட்டத் தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், வேலையற்ற இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பத் தலைவிகளும் உள்ளனர். நுவரெலியாவில் மயில்வாகனம் தேவராஜா வேட்பாளர்களுக்கு தலைமை வகிக்கின்றார். 55 வயதான இவர், இரு தசாப்தங்களுக்கும் மேலாக முழுநேர கட்சி அமைப்பாளராக செயற்படுகின்றார். நீண்டகால கட்சி உறுப்பினரான 52 வயதான நிஹால் கீகியனகே புத்தளம் மாவட்டத்தில் பிரச்சாரத்திற்கு தலைமை வகிக்கின்றார். ஏனைய அரசியல் கட்சிகளுக்கு எதிராக, சோ.ச.க. வேட்பாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் முன்னெடுக்கின்ற யுத்தத்தை உறுதியாக எதிர்ப்பதோடு, வடக்கு கிழக்கில் இருந்து அனைத்து துருப்புக்களும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்கப்பட வேண்டுமெனவும் கோருகின்றனர். இது விடுதலைக்கான அல்லது பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் அல்ல. மாறாக சிங்கள ஆளும் தட்டின் அதிகாரத்தையும் சொத்துக்களையும் தக்கவைத்துக்கொள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய முழு தொழிலாள வர்க்கத்தின் மீதும் முன்னெடுக்கப்படும் யுத்தமாகும். தொழிலாளர்கள் இனவாத அரசியலின் பிரிவினை நிலைப்பாட்டை தீர்க்கமாக நிராகரித்து, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமது பொது வர்க்க அவசியங்களுக்கான ஒரு போராட்டத்தில் ஐக்கியப்பட வேண்டும் என சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. இந்தத் தேர்தல், புலிகளின் நிர்வாக தலைமையகமான கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றியதை அடுத்து கொழும்பில் உள்ள அரசியல் ஸ்தாபனத்தின் வெற்றி ஆரவாரத்தின் மத்தியிலேயே இடம்பெறுகின்றது. இது "முழு இனத்தினதும் வெற்றி" என இராஜபக்ஷ பிரகடனம் செய்ததோடு "சமாதானம், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை" பற்றிய கனவை யதார்த்தமாக்கியதற்காக துருப்புக்களை பாராட்டினார். இது உங்களுடைய யுத்தமோ அல்லது உங்களுடைய "வெற்றியோ" அல்ல என சோ.ச.க. தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கின்றது. தொழிலாளர்களை பிளவுபடுத்தவும் முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு சமூக அடித்தளத்தை உருவாக்கவும் கிளறிவிடப்பட்ட தசாப்த கால தமிழர் விரோத பேரினவாதத்தின் உற்பத்தியே 1983ல் வெடித்த யுத்தமாகும். கடந்த இரண்டரை தசாப்தங்களாக யுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுத்த ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள், அதன் முழு சுமையையும் உழைக்கும் மக்களின் முதுகிலேயே கட்டிவிட்டன. எஞ்சியுள்ள பிரதேசங்களில் இருந்தும் புலிகளை வெளியேற்றுவதில் இராணுவம் வெற்றிகண்டால், அது இராஜபக்ஷவினதும் அவர் தங்கியிருக்கின்ற அரசியல்-இராணுவ கூட்டினதும் கைகளை மட்டுமே பலப்படுத்தும். அத்தகைய "வெற்றி" புதிய சமாதான மற்றும் ஜனநாயக காலகட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கு மாறாக, ஜனநாயக உரிமைகளை மேலும் நசுக்குவதற்கும் சமூகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் இராணுவமயமாக்குவதற்கும் வழிவகுக்கும். "சமாதானத்தின்" மீது எதிர்பார்ப்பு கொண்டு இராணுவத்தின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பதிலாக, அதை 200,000 வரை 50 வீதம் அதிகரிப்பதற்கு இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இராஜபக்ஷ 2002 யுத்த நிறுத்தத்தை கிழித்தெறிந்து நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் மூழ்கடித்துள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகள் பூராவும், அரசாங்கம் எதிர்ப்புக்களை அடக்கவும் அச்சுறுத்தவும் பயங்கர ஆட்சியை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இராணுவ அனுசரணையிலான கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளனர். "தேசிய பாதுகாப்பை கீழறுப்பதாக" கூறி ஊடகங்கள், ஆர்ப்பாட்டம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மற்றும் உயர் நீதிமன்றத்துக்கு எதிராகக் கூட வன்முறை ரீதியான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. பாராளுமன்றம் ஒரு பயனற்ற கூடாக தரம் இறக்கப்பட்டது. தீவு உலகிலேயே பிரமாண்டமான அமைச்சரவையால் ஆளப்பட்ட போதிலும், உண்மையான முடிவுகள் அதிகாரத்துவவாதிகளாலும் ஜெனரல்களாலும் தான் எடுக்கப்படுகின்றன. இவர்களின் ஆலோசனைகளுக்கு ஜனாதிபதியின் கும்பலும் செவிசாய்க்கின்றது. "கிளிநொச்சி வெற்றியில்" இருந்து நிகழும் சம்பவங்களில் இருந்து தெளிவான எச்சரிக்கைகளை புரிந்துகொள்ள வேண்டும். எம்.டி.வி./சிரச வலையமைப்பின் செய்தி வெளியீடுகள் "தேசப்பற்று அற்றவை" என கண்டனம் செய்யும் அரசாங்கத்தால் இயக்கப்பட்ட பிரச்சாரத்தை அடுத்து, டிசம்பர் 6ம் திகதி அதன் அலுவலகம், ஸ்டூடியோ மற்றும் கட்டுப்பாட்டு அறையும் தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் கிரனேட்டுகளுடன் பாய்ந்த ஆயுதக் கும்பலால் நாசம் செய்யப்பட்டன. டிசம்பர் 8ம் திகதி, அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்கும் முறை பற்றி விமர்சிக்கும் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க பட்டப் பகலில் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அரசாங்கமும் இராணுவமும் தொழிலாள வர்க்கத்தின் மீது திரும்ப ஒருபோதும் தயங்கப் போவதில்லை. 1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான பூகோள முதலாளித்துவ நெருக்கடியின் மத்தியில், ஆசியா பூராவும் மற்றும் உலகின் ஏனைய பகுதிகளிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களைப் போலவே, இலங்கை தொழிலாளர்களும் தமது தொழில்கள் இழக்கப்படுவதற்கான வாய்ப்பையும் தமது வாழ்க்கைத் தரம் அழிவுகரமாக சீரழிவதற்கான வாய்ப்பையும் எதிர்கொள்கின்றனர். ஆடை, தேயிலை மற்றும் ஏனைய உற்பத்திகளின் ஏற்றுமதியும் ஏற்கனவே மோசமாக சுருங்கிப் போயுள்ளன. 2006ம் ஆண்டில் 69 பில்லியன் ரூபாயில் இருந்து 2008ல் 200 பில்லியன் வரை மும்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள பிரமாண்டமான இராணுவச் செலவால், பூகோள பொருளாதார கொந்தளிப்பின் தாக்கம் மேலும் குவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகள் பூராவும், உழைக்கும் மக்கள் யுத்தத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும் என அரசாங்கம் கோரிவருகின்றது. தொழிலாளர்கள் சம்பள உயர்வும், வேலையற்றோர் தொழிலும், விவசாயிகளும் மீனவர்களும் மானியங்களையும், அல்லது ஏழைகள் சமூக நலன்களையும் கேட்கும் போதெல்லாம், பணம் இல்லை என்ற பதிலை இராஜபக்ஷ தயாராக வைத்திருந்தார். ஆயினும், மனித உயிர்களின் மற்றும் வளங்களின் கெடு நோக்கான அழிவு என்ற விடயத்திற்கு வரும்போது அங்கு வரையறை எதுவும் கிடையாது! கிளிநொச்சியின் வீழ்ச்சியை அடுத்து, "இன்னும் சிறிது காலத்துக்கு உங்களது அர்ப்பணிப்பும் பொறுமையும் தாய்நாட்டுக்கு வேண்டும்" என இராஜபக்ஷ பிரகடனம் செய்தார். ஆனால், புலிகளை அடக்குவதில் இராணுவம் வெற்றிகண்டாலும், தாய்நாட்டுக்கு அர்ப்பணியுங்கள் என்ற அழைப்புக்கு முடிவு இருக்காது. உழைக்கும் மக்கள் மீதான தனது தாக்குதலை உக்கிரமாக்குவதை தவிர பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்திடம் தீர்வு கிடையாது. யுத்தத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற இனவாதம், குண்டர் நடவடிக்கை மற்றும் பொலிஸ் அரச அடக்குமுறை போன்ற வழிமுறைகள், தமது தொழில்கள், நிலைமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை காத்துக்கொள்ள போராடும் தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்க பயன்படுத்தப்படும். எந்தவொரு எதிர்க் கட்சியும் மாற்றீடு எதையும் வழங்கவில்லை. வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி), பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் புலிகளின் வெளிப்படையான பிரதிநிதிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரின் கட்சிகள் அனைத்தும் இராணுவ வெற்றியோடு இணைந்துகொண்டன. சமாதான பேச்சுக்கான அழைப்பை கைவிட்டுள்ள யூ.என்.பி., தற்போதைய யுத்தத்துக்கு தயார் செய்வதற்கு இராணுவத்தை அனுமதிப்பதற்கான ஒரு சாதுரியமான சூழ்ச்சித் திட்டமே 2002ல் புலிகளுடன் கைச்சாத்திட்ட யுத்த நிறுத்தம் என இப்போது கூறிக்கொள்கின்றது. ஜே.வி.பி. தன்பங்குக்கு 2006ல் யுத்தத்தை மீண்டும் முன்னெடுக்க இராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுத்ததில் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது. இந்த அருவருக்கத்தக்க பேரினவாதத்துக்கு எதிராக, சோ.ச.க. வேட்பாளர்கள் சோசலிச அனைத்துலகவாத கொள்கையின் அடிப்படையில் யுத்தத்துக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் ஒரு வர்க்கத் தீர்வை அபிவிருத்தி செய்வார்கள். ஆசியா பூராவும் மற்றும் சர்வதேச ரீதியிலும் தமது வர்க்க சகோதர சகோதரிகளைப் போல் அதே பிரச்சினைகள், பாதிப்புகள் மற்றும் அபிலாஷைகளை இலங்கை தொழிலாளர்களும் பங்கிட்டுக்கொள்வதோடு, பல சந்தர்ப்பங்களில் ஒரே நாடுகடந்த கூட்டுத்தபானங்களால் சுரண்டப்படுகிறார்கள். பிராந்தியம் பூராவும் உள்ள முதலாளித்துவ வர்க்கம், மிகவும் அடிப்படையான ஜனநாயக மற்றும் தேசிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலாயக்கற்றது என்பதற்கு மிகத் தெளிவான உதாரணமே இலங்கை யுத்தமாகும். பல தசாப்தங்களாக மத, இன மற்றும் மொழி பேதங்கள், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் முதலாளித்துவ ஆட்சிக்கு முண்டுகொடுக்கவும், இலட்சக்கணக்கான சாதாரண மக்களுக்கு பேரழிவை உருவாக்கவும் சுரண்டிக்கொள்ளப்பட்டுள்ளன. மீண்டும் ஒருமுறை மும்பை அட்டூழியத்தை அடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் யுத்தப் பேரிகை கொட்டுகின்றன. இன மற்றும் மத வகுப்புவாதத்துக்கும் இராணுவவாதத்துக்கும் எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம், இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் தெற்காசியா பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு முன்னணி பாதையை காட்டுவார்கள். தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து துருப்புக்களை வெளியேற்றக் கோருவதன் மூலம், சோ.ச.க. புலிகளுக்கு அரசியல் ஆதரவு வழங்கவில்லை. அரசாங்கத்தின் சிங்கள மேலாதிக்கவாத நாணயத்தின் மறு பக்கமே புலிகளின் பிரிவினைவாத வேலைத்திட்டமாகும். தமிழ் உயர்தட்டு பகுதியினரின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் புலிகள் அமைப்பு, யுத்தத்துக்கு முடிவுகட்டவும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தவும் இயலுமை கொண்ட ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்புவிடுக்க இயல்பாகவே இலாயக்கற்றதாகும். சர்வதேச "சமாதான முன்னெடுப்பு" ஒரு தீர்வை வழங்குகிறது எனக் கூறிக்கொள்ளும் நவசமசமாஜ கட்சி போன்ற மத்தியதர வர்க்க தீவிரவாதிகளை அம்பலப்படுத்த இந்த யுத்தம் சேவை செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய அனுசரணையாளர்களைப் பொறுத்தளவில், பிராந்தியத்தில் தமது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் ஒரு முறையே சமாதான பேச்சாகும். அவர்கள் அனைவரும் 2006ல் இலங்கை இராணுவம் தாக்குதல்களை புதுப்பித்ததை மெளனமாக ஆதரித்ததோடு கடந்த ஆண்டு இராஜபக்ஷ 2002 யுத்த நிறுத்தத்தை உத்தியோகபூர்வமாக மீறிய போது தெளிவாக அமைதிகாத்தனர். புலிகளுடனான சமாதான பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதை ஆதரிக்கவில்லை என இப்போது அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துள்ளது. யுத்தத்துக்கு எதிரான உண்மையான அரசியல் போராட்டமானது, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காக போராடுவதுடன் இணைக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகளை அணுகுவதற்கான சோசலிச திட்டங்களுக்காக சோ.ச.க. வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வார்கள். எவ்வாறெனினும், ஒரு சிறிய தீவின் எல்லைகளுக்குள் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பது சாத்தியமற்றதாகும். உலகம் பூராவும் உள்ள உழைக்கும் மக்கள், பொருளாதார பின்னடைவையும் மற்றும் வர்த்தக மோதல்களதும் யுத்தத்தினதும் அச்சுறுத்தும் ஆபத்தையும் எதிர்கொண்டுள்ளனர். இதனாலேயே தெற்காசியாவிலும் உலகம் பூராவும் பரந்த சோசலிச குடியரசு ஒன்றியத்தின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா மற்றும் ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டத்தை சோ.ச.க. அபிவிருத்தி செய்கின்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது சாத்தியமானளவு கூடுதலான வாசகர்களை அடைய சோ.ச.க. முயற்சிக்கின்றது. ஆகையால், எமது வேலைத்திட்டத்தை ஆதரிக்கும் அனைவரையும் கட்சிக்கு நிதி வழங்குவதோடு, பகிரங்க கூட்டங்களுக்கு வருகை தந்து, எமது பிரச்சார பிரசுரங்களை விநியோகிக்க உதவுமாறும், எல்லாவற்றுக்கும் மேலாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியில் இணைய விண்ணப்பிக்குமாறும் நாம் அழைப்புவிடுக்கின்றோம். |