WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா
:
இலங்கை
Sri Lanka: The battle for Kilinochchi continues
இலங்கை: கிளிநொச்சிக்கான போர் தொடர்கின்றது
By our correspondents
27 December 2008
Back to screen version
இலங்கை இராணுவம் வடக்கு மாவட்டமான வன்னியில் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான
தாக்குதலை தொடர்ந்து முன்னெடுக்கின்ற நிலையில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் உயந்துள்ளன. இராணுவம் தனது இரு படைப்
பிரிவுகளை பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக மையமான கிளிநொச்சியை சூழ ஒருமுகப்படுத்தியுள்ள
போதிலும், அதன் தாக்குதல்கள் கடந்த வாரம் பின்னடைவை சந்தித்திருந்தன.
சுயாதீனமான செய்திகள் கிடைக்காததோடு இருதரப்பும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை
மிகைப்படுத்திக் காட்டுவது வழமையாகும். கிளிநொச்சியின் மேற்கில் உருத்திரபுரத்தில் இருந்து தொடுத்த தாக்குதலை முறியடித்ததில்
100 சிப்பாய்கள் கொல்லப்பட்டு 250 பேர் காயமடைந்ததாக கடந்த திங்கட்கிழமை புலிகள் அறிவித்தனர். டிசம்பர்
25ம் திகதி, கிளிநொச்சிக்கு அருகில் நடந்த பல மோதல்களில் 40 புலி போராளிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு
அமைச்சு அறிவித்தது.
இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2006 யூலையில் யுத்தத்தை மீள ஆரம்பித்ததில்
இருந்து, புலிகள் கிழக்கையும் மற்றும் வன்னியின் மேற்கில் அரைவாசிப் பகுதியில் இருந்த தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களை
இழந்தனர். கிளிநொச்சியின் வீழ்ச்சி புலிகளுக்கு ஒரு அரசியல் அடியாக மட்டுமன்றி, வட-கிழக்கு கரையோரத்தில் புலிகளின்
எஞ்சியுள்ள பிரதான பிரதேசமான முல்லைத் தீவு மீது குவிமையப்படுத்துவதற்கு
இராணுவத்திற்கு வழிதிறந்துவிடும்.
இலங்கை இராணுவத்தின் அறிக்கையின்படி கூட, புலிகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவின்
வீழ்ச்சியைத் தடுக்க கடுமையான எதிர்த் தாக்குதல்களை முன்னெடுக்கின்றனர். இராணுவம் இந்த வரம் முல்லைத்தீவின் தெற்குப்
பக்கமாக முள்ளியவளை நகரத்துக்குள் நுழைந்து விட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
புலிகளின் பேச்சாளரான பா. நடேசன் திங்கட்கிழமை பி.பி.சி. யில் பேசியபோது, தமது
இயக்கம் கிளிநொச்சி விழுந்தாலும் கூட போரைத் தொடரும் என கூறினார். "சுதந்திரம்... ஒரு நகரத்தை மட்டும்
சார்ந்திருப்பதில்லை. எங்களால் பல சமூகங்களை, பல நகரங்களை உருவாக்க முடியும். எங்களது சுதந்திரப்
போராட்டத்தை மக்கள் ஆதரிக்கின்றார்கள்," என அவர் கூறினார். இராணுவம் நகரத்தைக் கைப்பற்றும் என்ற செய்தியை
புலிகள் முன்னர் நிராகரித்திருந்தார்கள்.
ஜனாதிபதி ராஜபக்ஷ, வாழ்க்கை நிலைமைகள் சீரழிந்து வருவது மற்றும் ஜனநாயக
உரிமைகள் மீதான தாக்குதல்கள் சம்பந்தமான அதிருப்தியை திசைதிருப்புவதன் பேரில் ஒரு வெற்றியை பெற மூர்க்கமாக
முயற்சிக்கின்றார். அவருடைய அரசாங்கம், அரசியல் எதிரிகளை அடக்குவதற்கான உபாயமாக யுத்தத்தை
சுரண்டிக்கொள்வதோடு உழைக்கும் மக்கள் யுத்த முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
பாதுகாப்புப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல புதன்கிழமை ஊடகங்களுக்குத்
தெரிவித்ததாவது: "ஜனாதிபதி, நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில்
மிகவும் விழிப்புடன் உள்ளார். அதனாலேயே கிளிநொச்சி நோக்கிய படை நகர்வு மிகவும் மெதுவாக இடம்பெறுகிறு."
உண்மை என்னவெனில், புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள பொது மக்களை பீதிக்குள்ளாக்குவதன் பேரில்,
இராணுவம் மீண்டும் மீண்டும் வான்தாக்குதல் மற்றும் ஆட்லறித் தாக்குதல்களை கண்மூடித்தனமாக நடத்திக்
கொண்டிருக்கின்றது.
மாதக் கணக்காக, அரசாங்கமும் இராணுவமும் உடனடியாக கிளிநொச்சியைக்
கைப்பற்றுவோம் என அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. கடந்த வாரத்தின் சண்டே டைம்ஸ் பத்திரிகையின்
படி, இறுதி தாக்குதல் நடக்கப்போகின்றது என்ற செய்தி கேள்விபட்ட பின்னர் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள்
கொழும்பில் கூடினர். டிசம்பர் 23ம் திகதி சுமார் 7000 துருப்புக்கள் தாக்குதலுக்காக தள்ளிவிடப்பட்டார்கள். ஆனால்
கடுமையான எதிர்த்தாக்குதலால்களை எதிர்கொண்டு பின்வாங்கத் தள்ளப்பட்டார்கள். கூடுதலான வெளிநாட்டு
பத்திரிகையாளர்கள் இப்போது வெளியேறிவிட்டார்கள்.
கொழும்பு அரசாங்க வைத்தியசாலையில் காயமடைந்து சிகிச்சை பெறும் பல
சிப்பாய்களுடன் எமது நிருபர்கள் உரையாடினார்கள். கொழும்பில் உள்ள ஆஸ்பத்திரிகளில் ஒரு தொகை காயமடைந்த
படையினரை காணக்கூடியதாக இருந்தது. பிரதான ஆஸ்பத்திரிகள் புதிதாக அனுமதிக்கப்பட்டவர்களால் நிரம்பி
விட்டதனால், சில காயமடைந்த சிப்பாய்கள் புறநகர்ப் பகுதியில் உள்ள வேறு ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றப்பட்டார்கள்.
வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்த சிப்பாய்களுடன்
WSWS நிருபர்கள்
உரையாடினார்கள். பெரும்பாலானவர்கள் முழுமையான பேட்டியைத் தருவதற்கு விரும்பாத அதே வேளை, அவர்கள்
யுத்ததையிட்டு தெளிவான வெறுப்பும் மற்றும் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி பீதியும் கொண்டிருந்தனர்.
காயமடைந்தவர்களை பத்திரிகையாளர்கள் அணுகுவதை தவிர்ப்பதற்காக ஆஸ்பத்திரிகளில் அதிகாரிகள் சீருடையுடனும் சீருடை
இன்றியும் இருந்தார்கள்.
"நாங்கள் எல்லோரும் இந்த யுத்தத்தின்
முடிவினைப் பார்க்க வேண்டும். இந்த வார்ட்டைப் பாருங்கள். இந்த வார்ட்டில் உள்ள எனது சக சிப்பாய்கள்
அனைவரும், தமது இளமை காலத்திலேயே முடமாகி இருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் தங்களுடைய ஏதாவது
ஒரு உறுப்பை இழந்துள்ளார்கள். நான் எனது வலது காலை இழந்துள்ளேன்,'' என ஒரு சிப்பாய் எமது நிருபருக்கு
கூறினார்.
"நான் [வடமத்திய மாகாணத்தில்]
அநுராதபுரத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். நாங்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
நாங்கள் எமது இளமைக் காலத்தை இந்த யுத்தத்திற்காக காட்டுக்குள் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். செல்வந்த
குடும்பங்களில் இருந்து வந்த இளைஞர்களுக்கு இருந்த தெரிவு எங்களுக்கு கிடையாது. இப்போது நாங்கள் எமது
வழ்க்கையை ஊனமுற்றவர்களாகக் கழிக்கப் போகிறோம்,'' என அவர் சொன்னார்.
''எங்களுக்கு வறுமை மற்றும் வேலையின்மை இருந்த போதும் நான் இராணுவத்தில் இணையும்
முடிவை எனது பெற்றோர் எதிர்த்தனர். இப்பொழுது அவர்களை சொன்னது சரி என்று எண்ணுகின்றேன்,'' என அவர்
சொன்னார்.
13 வருட சேவை அனுபவம் கொண்ட ஒரு
கோப்ரல் களமுனையைப் பற்றி விளங்ககப்படுத்தினார். புதிதாகச் சேரும் படையினர்கள் ஆக மூன்று மாதப் பயிற்சியுடன்
யுத்த முனைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார். கடுமையாக நடைபெறும் சண்டகளைப்
பற்றி கருத்துத் தெரிவித்த அவர்: ''கடந்த இரு மாதங்களாக, துருப்புக்கள் எவ்விதமான ஓய்வுமின்றி தொடர்ச்சியாக
முன்னோக்கி நகரத் தள்ளப்பட்டார்கள். "ஒரு அங்குலமேனும் முன்னே செல்ல" எங்களுக்கு கட்டளை வந்தது.
"சில மோதல்களில், நாங்கள் இறந்தவர்களை மட்டுமல்ல காயப்பட்டவர்களையும் கைவிட்டுவர
நிர்ப்பந்திக்கப்பட்டோம். அவர்களின் நெஞ்சைப் பிளக்கும் குரல் எந்நேமும் எனது காதுகளில் எதிரொலித்த வண்ணமே உள்ளது.
புலிகளால் இப்போது யுத்தத்தில் வெல்ல முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் நம்பிக்கையற்ற நிலையில்
இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கைவிட மாட்டார்கள் என்று தோன்றுகிறது. இது களமுனையின் கொடூரமாகும். இந்த
யுத்தம் முடிவுற வேண்டும்," என அவர் சொன்னார்.
WSWS நிருபர்கள்,
மத்திய மலையக மாவட்டத்தில் உள்ள டுனுவில்ல கிராமத்தில் உள்ள
லான்ஸ் கோப்ரல் ஜி. சுரேஷின் வீட்டிற்கு சென்றார்கள். நவம்பர் 9 ம்திகதி கிளிநொச்சிக்கான சண்டையில் கொல்லப்படும்
போது அவருக்கு 20 வயது மட்டுமே.
டுனுவில்ல கிராமத்துக்கு செல்வது மிக சிரமமாகும். அங்கு செல்ல பொருத்தமான பாதை
கிடையாது. அந்தக் கிராமத்தவர்கள் கோப்பி, கொக்கோ, கராம்பு மற்றும் சாதிக்காய் போன்ற மரபுவழிப் பயிர்ச்
செய்கையின் மூலம் தமக்குப் போதுமான வருமானத்தை ஈட்ட முடியாமல் இருக்கிறார்கள். ஆகவே அங்கு பல இளைஞர்கள்
இராணுவத்தில் இணையத் தள்ளப்பட்டார்கள்.
சுரேசின் குடும்பத்தினர் தகரக் கூரையுடைய ஒரு குடிசையில் வாழ்கிறார்கள். அவருடைய
தந்தை ஒரு தச்சுத் தொழிலாளி மற்றும் அவரது அண்ணன் ஒரு கட்டுமானத் தொழிலாளி. அவரது இரண்டு தங்கைகள்
இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சுரேஸ் ஒரு புதிய வீட்டைக் கட்டுவதற்காகவும் மற்றும் தனது தங்கைகளைப்
படிக்க வைத்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காகவும் சம்பாதிக்கும் நோக்குடன், தனது கல்வியை இடை
நிறுத்தி விட்டு இராணுவத்தில் இணைந்து கொண்டார்.
சுரேஸ் பாடசாலையை விட்டு விலகிய பின்னர், பல இடங்களில் வேலை செய்தாலும், அங்கு
மிகவும் குறைந்த சம்பளமே கிடைத்ததால் அவர் வேலையை விட்டு விலகினார். அவர் இறுதியாக தந்தையின் எதிர்ப்பின்
மத்தியிலும் இராணுவத்தில் இணைந்து கொண்டார். "எனக்கு ஏதுவும் நடக்கலாம். ஆனால் உங்களுக்கு ஏதாவது
கிடைக்கும்," என சுரேஸ் தனது தந்தைக்கு கூறினார்.
சுரேஷ் இந்த வருடமே இராணுத்தில் இணைந்து கொண்டு, அவர் தனது பயிற்சியை
ஒக்டோபர் மாதம் நிறைவு செய்த பின்னர் கஜபா படைப் பிரிவில் இணைக்கப்பட்டார். சுரேஷ் தனது தாயாருக்கு
ஒக்டோபர் 24 அன்று தொலை பேசியில் பேசிய போது, "எங்களை முன்னணி நிலைகளுக்கு போகுமாறு பணித்துள்ளனர்,
ஆனால் எந்த பிரதேசத்துக்கு நான் போகப் போகிறேன் என தெரியாது," என்றார்.
அவருடைய தாயார் கோபத்துடன்
WSWS க்கு கூறியதாவது:
"ஏன் இத்தகைய குறுகிய பயிற்சியின் பின்னர் இவ்வாறு அவரை யுத்தத்திற்கு அனுப்பினார்கள். ஒரு வாகனம் ஓட்டுவதற்கும்
கூட ஒருவருக்கு பயற்சி தேவை. எனது மகன் இந்த யுத்தத்தினால் இளமையிலேயே இறந்து விட்டார். அவருடைய
மரணத்துக்கு இந்த அரசாங்கமே பொறுப்பாகும். " |