:
ஆசியா
:
இலங்கை
Sri Lanka: Fall
of Kilinochchi marks turning point in civil war
இலங்கை: கிளிநொச்சியின் வீழ்ச்சி உள்நாட்டு யுத்தத்தின் திருப்புமுனையைக் குறிக்கிறது
By Sarath Kumara
5 January 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
பல மாதங்களாக நடைபெற்ற கடுமையான மோதல்களின் பின்னர், பிரிவினைவாத
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைமையகமான கிளிநொச்சி நகரை கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம்
வெள்ளிக் கிழமை அறிவித்தது. கிளிநொச்சியின் வீழ்ச்சியானது புலிகளின் இராணுவத் தோல்வியின் முன்நோடியாக
இருக்கக் கூடும். ஆனால், அவ்வாறே நிரூபிக்கப்பட்டாலும் கூட, அது தீவுக்கு சமாதானத்தையும் சுபீட்சத்தையும்
கொண்டுவரும் புதிய காலகட்டத்தை முன்னறிவிக்கவில்லை.
கிளிநொச்சி யாழ்ப்பாணக் குடாநாட்டை தலைநகர் கொழும்புடன் இணைக்கும் ஏ9
அதிவேகப் பாதையில் இருக்கின்றது. புலிகள் இந்த நகரையும் மற்றும் அதனைச் சூழவுள்ள வன்னிப் பிராந்தியத்தையும்
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கிளிநொச்சி நீதிமன்றம், பொலிஸ் மற்றும்
நிர்வாக அலுவலகங்கள் உள்ளடங்களாக ஒரு முழுமையான தலைநகராகவே மாற்றப்பட்டிருந்தது. இதன் வீழ்ச்சியானது
புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள வடகிழக்கில் இருக்கும் முல்லைத்தீவை நோக்கி புதிய நகர்வுக்கான வழியைத்
திறந்துள்ளது.
கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமையானது ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ 2002
யுத்த நிறுத்த உடன்படிக்கையை விளைபயனுள்ள வகையில் கிழித்தெறிந்து, 2006 ஜூலையில் யுத்தத்தை மீண்டும் முன்னெடுத்ததில்
இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் கொடூரமான மோதல்களின் உச்சகட்டமாகும்.
இராணுவம், புலிகளை பலவீனப்படுத்தி தோற்கடிப்பதை இலக்காகக்கொண்ட முற்றுகை யுத்தத்தை முன்னெடுப்பதற்காக
தனது அதிகபட்ச எண்ணிக்கையையும் அதி உயர் சுடுதிறனையும் பயன்படுத்தியது. கிழக்கில் புலிகளின் கோட்டைகளில்
இருந்து அவர்களை வெளியேற்றிய இராணுவம், 2007 நடுப்பகுதியில் இருந்து வன்னி பிரதேசத்தின் மீது கவனத்தை
குவித்து, பிராந்தியத்தின் மேற்கில் அரைப் பகுதியை கைப்பற்றியதோடு கடந்த ஆண்டின் கடைப் பகுதியில் தென்னிந்தியாவுக்கான
புலிகளின் விநியோகப் பாதையையும் துண்டித்தது.
எவ்வாறாயினும், கிளிநொச்சிக்கான யுத்தம் புலிகளின் உறுதியான எதிர்தாக்குதலால்
மாதக் கணக்காக இழுபட்டது. தமது வெற்றியை வெளிக்காட்டும் ஆர்வத்துடன், இராணுவம் தனது துணையுடன் நேற்று
சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று நகரைச் சுற்றிக் காட்டியது. இந்த தாக்குதலுக்கு தலைமை
தாங்கிய மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் ஊடஙக்களுடன் பேசுகையில், "கிளிநொச்சிக்குள் நுழைவது மிகவும் கடினமாக
இருந்தது, புலிகளின் மண் அணைகள் மற்றும் அகழிகளை தகர்ப்பதற்கு 1 1/2 மாதங்கள் சென்றன," என்றார்.
அரைகுறையான அறிக்கைகளும் போட்டோக்களும் குண்டுத் தாக்குதலில் தகர்ந்து
போன நகரத்தை காட்டின. பெரும்பகுதி பொதுமக்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அங்கிருந்து
வெளியேறிவிட்டனர். புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வாழும் பொதுமக்களை பீதிக்குள்ளாக்க இராணுவம்
மீண்டும் மீண்டும் தனது ஆட்லறிகளையும் விமானப் படையையும் பயன்படுத்தியது. யுத்த வலயங்களுக்குள் சுயாதீன
நிருபர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், மோதல்கள் தொடர்பாக சரியான தகவல்கள் கிடைப்பதில்லை.
இரு தரப்பும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை
மிகைப்படுத்துவதை வழமையாகக் கொண்டுள்ள போதிலும், நகரைக் கைப்பற்றுவதற்கான சண்டையில்,
நூற்றுக்கணக்கான சிப்பாய்கள் மற்றும் புலிப் போராளிகளும் கொல்லப்பட்டும் மேலும் பலர்
காயமடைந்துள்ளதாகவே தெரிகின்றது.
கடந்தவாரம் ஏ9 வீதியில் கிளிநொச்சிக்கு வடக்காக உள்ள பரந்தன் நகரம்
கைப்பற்றப்பட்டமை, புலிகளுக்கு விழுந்த இறுதியான பலத்த அடியாகும். மூன்று பக்கங்களிலும் முழுமையாக
துண்டிக்கப்பட்ட நிலையை எதிர்கொண்ட புலிகளின் தலைமை, நகரில் இருந்து பின்வாங்கியது. ஓய்வு கிடையாது என
ஏற்கனவே இலங்கை இராணுவம் சுட்டிக் காட்டியுள்ளது. 2000 ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் கைப்பற்றிய பெரிய
இராணுவத் தளமான, யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு தெற்காக அமைந்துள்ள ஆனையிறவை அடுத்த உடனடி இலக்காக
உள்ளது. இராணுவம் முல்லைத்தீவை நோக்கியும் முன்னேறுகின்றது.
புலிகள் மீதான இராணுவ வெற்றிக்காக அனைத்தையும் பணையம் வைத்துள்ள
அரசாங்கம், கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதன் முழு பெறுமதியையும் சுரண்டிக்கொண்டிருக்கின்றது. "இதை
வர்ணிப்பதற்கு எந்த சொல் அல்லது மொழி பயன்படுத்தப்பட்டாலும், இது ஒப்பிடமுடியாத ஒரு வெற்றி என்பது
உண்மை," என ஜனாதிபதி இராஜபக்ஷ வெள்ளிக்கிழமை புகழ்ந்து கொண்டார். தனது நவ-காலனித்துவ
ஆக்கிரமிப்புகளுக்கு புஷ் நிர்வாகம் கூறும் அதே சாக்குப் போக்குகளை பயன்படுத்திய அவர், "எங்களது வீர
துருப்புக்கள் சாதித்திருப்பது என்னவெனில், புலிகளின் கோட்டையை கைப்பற்றியது மட்டுமல்ல, பயங்கரவாதத்துக்கு
எதிரான உலகின் போராட்டத்திலும் ஒரு பெரும் வெற்றியாகும்," என பிரகடனம் செய்துகொண்டார்.
எவ்வாறெனினும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமையிலான
ஆக்கிரமிப்பிலும் பார்க்க இலங்கையில் உள்நாட்டு யுத்தம் பெரிதும் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" அல்ல.
தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் தமது ஆட்சியை தூக்கி நிறுத்தவும் தீவின் சிங்களப் பெரும்பான்மையினரின்
ஆளும் தட்டால் கிளறிவிடப்பட்ட ஆழமான தமிழர் விரோத வேறுபாட்டின் உற்பத்தியே இந்த மோதலாகும்.
1970களில் தோன்றிய புலிகள் இயக்கம், தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் சிறுபான்மையினருக்கு ஒரு தனி
அரசைக் கோரும் முதலாளித்துவ தேசியவாத வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
அரசாங்கம் வெற்றிக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய முயற்சித்த போதிலும்,
நீண்டகால இனவாத யுத்தத்திற்கு தொடர்ந்தும் விலை கொடுத்துவரும் தமிழ் அல்லது சிங்கள சாதாரண உழைக்கும்
மக்கள் மத்தியில் குதூகல மனநிலை காணப்படவில்லை. 25 ஆண்டுகால மோதலில் 70,000 க்கும் மேற்பட்டவர்கள்
கொல்லப்பட்டுள்ளார்கள். பலர் காயமடைந்து முடமாக்கப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கானவர்கள் அவர்களது
வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு அவர்கள் பல ஆண்டுகளாக இழிநிலையிலான அகதி முகாம்களில்
கொஞ்சமும் திருப்தியின்றி வாழ்ந்து வருகின்றார்கள்.
மோதல்கள் பலமாதங்களுக்கு இழுபடக்கூடிய நிலைமையும் இன்னமும் கூர்மையான
எதிர்விளைவுகளுக்கான சாத்தியமும் இருந்துகொண்டுள்ள அதேவேளை, வடக்கில் புலிகளிடம் எஞ்சியுள்ள பகுதிகளையும்
கைப்பற்ற இராணுவம் முயற்சிக்கின்றது. ஆனால் இந்த "விடுவிப்பு" தீவுக்கு சமாதானத்தை கொண்டுவரும் என
எதிர்பார்க்கும் எவரும் கசப்புடன் ஏமாற்றப்படுவார். நகரங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க மற்றும் நேரடி
மோதல்களை முன்னெடுக்க புலிகள் இயலுமையற்றுப் போனாலும் அவர்களால் பல ஆண்டுகளுக்கு கொரில்லா
யுத்தத்தை முன்னெடுக்க முடியும்.
எவ்வாறெனினும், மிகவும் அடிப்படையில், யுத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட அரசியல்
பிரச்சினைகளை தீர்ப்பது ஒரு புறமிருக்க அவற்றை அணுகுவதற்கு கூட அரசாங்கம் இயல்பாகவே
இலாயக்கற்றதாகும். கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதை அறிவித்து இராஜபக்ஷ பிரகடனம் செய்ததாவது: "இது இன
மற்றும் மத அடிப்படையில் மக்களை பிரிக்க முற்பட்ட நச்சுத்தனமான பிரிவினைவாதத்தின் மீதான ஒரு
வெற்றியாகும்." ஆனால், இது யதார்த்தத்தை தலைகீழாக நிறுத்துவதாகும். கால் நூற்றாண்டு காலமாக,
ஆட்சியில் இருந்துவந்த அரசாங்கங்கள் தீவின் சிங்கள உயரடுக்குகளின் அதிகாரத்தையும் சொத்துக்களையும்
பாதுகாக்க பிற்போக்கு இனவாத யுத்தத்தை முன்னெடுத்து வந்தன. புலிகளை அடக்கினாலும், இனவாத
முரண்பாடுகள் இன்னுமொரு வடிவத்தில் தவிர்க்க முடியாமல் தலைநீட்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த இரு ஆண்டுகளாக, அரசாங்கம் யுத்தத்தின் முழு
பொருளாதார சுமையையும் உழைக்கும் மக்கள் மீதே சுமத்தியது. பாதுகாப்புக்கான செலவு அதிகரிக்கப்பட்டுள்ள
அதே வேளை, கல்வி, நலன்புரி சேவைகள் மற்றும் சுகாதார சேவைக்கான நிதி வெட்டித் தள்ளப்பட்டுள்ளதோடு
வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இராஜபக்ஷ விமர்சகர்களையும் எதிரிகளையும் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கையில்
ஈடுபடும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளையும் தேசிய பாதுகாப்பை கீழறுப்பவர்களாகவும்
புலிகளின் சார்பாக இயங்குபவர்களாகவும் குற்றஞ்சாட்டினார். அரசாங்கம் புலிகளை "பயங்கரவாதிகள்" என
கண்டனம் செய்யும் அதே வேளை, இராணுவம் கொலைப்படைகளுடன் தொடர்பு வைத்துள்ளது. 2005 நவம்பரில்
இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நூற்றுக்கணக்கானவர்களை கொலை செய்யப்பட்டதற்கும் கடத்திச்
செல்லப்பட்டதற்கும் இந்த கொலைப் படைகளே பொறுப்பாகும்.
வெள்ளிக்கிழமை தனது உரையில் இராஜபக்ஷ மேலும் அர்ப்பணிப்புகளுக்கு அழைப்பு
விடுத்தார். இந்த போலி ஈழப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வரை, புலிகள் "இறுதியாக
தோற்கடிக்கப்படும்" வரை இன்னும் சிறிது காலத்துக்கு உங்களுடைய இந்த அர்ப்பணிப்பும் பொறுமையும்
தாய்நாட்டுக்கு தேவை. ஆனால் புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசங்களை கைப்பற்றுவது அர்ப்பணிப்புக்கான
கோரிக்கைக்கு முடிவுகட்டாது. யுத்தச் செலவு தீவின் மீதான பூகோள நிதி நெருக்கடியின் தாக்கத்தை மேலும்
அதிகரிக்கச் செய்துள்ளதோடு தவிர்க்க முடியாமல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தோற்றுவிக்கும். புலிகளுக்கு
எதிராக பயன்படுத்தப்படும் அதே இராணுவ தானியங்கி துப்பாக்கிகள், சிங்கள மற்றும் தமிழ் உழைக்கும் மக்களுக்கு
எதிராக திருப்பப்படும்.
இராஜபக்ஷ அரசாங்கமானது கொழும்பு அரசியல் வாழ்வில் தனது
சொந்தமுத்திரையை அதிகரித்தளவில் குத்தும் இராணுவத்தில் கனமாகத் தங்கியுள்ளது. பாதுகாப்பு படைகளையும் முழு
அரசியல் ஸ்தாபனத்தையும் ஊக்குவிக்கும் சிங்கள மேலாதிக்கவாதத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இராணுவத்
தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, கனேடிய செய்தித் தாள் ஒன்றுக்கு கடந்த செப்டெம்பரில்
தெரிவித்ததாவது: "இந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தம் என நான் பலமாக நம்புகிறேன். நாங்கள்
நாட்டில் 75 வீதம் பெரும்பான்மையாக வாழ்கின்றோம், நாங்கள் விட்டுக்கொடுக்கப் போவதே இல்லை, மற்றும்
எங்களுக்கு இந்த நாட்டை பாதுகாக்க உரிமை உண்டு. அவர்கள் [சிறுபான்மையினர்] இந்த நாட்டில் எங்களுடன்
வாழலாம். ஆனால் அவர்கள் சிறுபான்மையினர் என்ற சாக்குப் போக்கின் கீழ் ஒவ்வாத எதையும் கேட்க
முயற்சிக்க கூடாது."
வடக்கின் "விடுதலை" எவ்வாறு இருக்கும் என்பது கிழக்கில் நடந்துகொண்டிருப்பவற்றில்
ஏற்கனவே தெளிவாகியுள்ளது. கடத்தல்கள், கப்பம் வாங்குதல் மற்றும் படுகொலைகளுக்கு பேர்போன ஒரு துணைப்படைக்
குழுவின் தலைவரை மாகாண நிர்வாகத்திற்கு தலைவராக அரசாங்கம் இருத்தியுள்ளது. இந்த "தேர்வுசெய்யப்பட்ட"
அரசாங்கம் வெறுமனே பிராந்தியத்தை ஒரு மலிவு உழைப்பு களமாக மாற்றுவதை இலக்காகக் கொண்ட ஒரு இராணுவ
ஆக்கிரமிப்பின் பகட்டுத் தோற்றமே ஆகும். அரசாங்கமும் இராணுவமும் "விடுவிக்கப்பட்ட வடக்கிலும்" இந்த நடவடிக்கையை
முன்னெடுக்க எண்ணுகின்றன. மற்றும் எங்காவது தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு தோன்றினால் அதே வழிமுறை பயன்படுத்தப்படும்.
புலிகளைப் பொறுத்தளவில், இராணுவப் பின்னடைவானது அவர்களது அரசியல்
முன்நோக்கின் வங்குரோத்தின் ஒரு வெளிப்பாடாகும். புலிகளின் தமிழ் பிரிவினைவாதமானது கொழும்பு அரசியல்
ஸ்தாபனத்தின் உடைய சிங்கள மேலாதிக்கவாதத்தின் நிழலுருவமேயாகும். புலிகள் சாதாரண சிங்கள உழைக்கும்
மக்களுக்கு எந்தவொரு வேண்டுகோளும் விடுக்கத் தவறியது மட்டுமன்றி, அரசாங்கம் முன்னெடுக்கும் யுத்தத்திற்கு
அவர்கள் மீது குற்றஞ்சாட்டுவதன் மூலம் தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர்களுக்கு இடையில் ஒரு பிளவை
ஏற்படுத்துகின்றனர். 1996ல் மத்திய வங்கி மீதான இழிபுகழ்பெற்ற குண்டுத்தாக்குதலைப் போன்று சாதாரண
சிங்களவர்கள் மீதான அதன் தாக்குதல்கள், சிங்கள அதிதீவிரவாத ஆலைக்கு தானியங்களை வழங்குகிறது.
புலிகளின் அரசியல் பொறுப்பாளரான பா. நடேசன் கடந்த வாரம் ராய்ட்டருக்கு
பேசுகையில், புலிகளின் மூலோபாயம் "ஒரு நகரத்தையோ அல்லது மாநகரத்தையோ மையமாகக்கொண்டதல்ல,"
மற்றும் "நிலங்களை இழப்பதும் மீண்டும் கைப்பற்றுவதும் பொதுவானது," என தெரிவிப்பதன் மூலம் எதிர்கொண்டுள்ள
மோசமான நிலைமைக்கு மிகச் சிறந்த சாத்தியமான முகத்தை சித்தரிக்க முயற்சித்தார். அவர் மேலும்
தெரிவித்ததாவது: "எங்களது சுதந்திர போராட்டம், அதன் இலக்கை அடையும் வரை தொடர்ந்தும் யுத்த
நகரங்களை உருவாக்கும்." தளர்வுறும் மன வலிமையை தூக்கி நிறுத்தும் அவநம்பிக்கையான முயற்சியில், புலிகள்
வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் விமானப் படை தலைமையகத்துக்கு அருகில் ஒரு தற்கொலைத் தாக்குதலை
நடத்தினர். இதில் 3 விமானப் படையினர் கொல்லப்பட்டதோடு பொதுமக்கள் உட்பட மேலும் 30 பேர்
காயமடைந்தனர்.
அரசாங்கமும் இராணுவமும் இந்த சம்பவத்தை இன்னுமொரு அடக்குமுறை
நடவடிக்கைக்கான காரணமாக பயன்படுத்திக்கொண்டன. வாரக் கடைசியில் கொழும்பிலும் மற்றும் சூழவுள்ள
புறநகர் பகுதியிலும் வாழும் தமிழர்கள் மீண்டுமொரு முறை சுற்றிவளைக்கப்பட்டதோடு 2003க்கு பின்னர்
வந்தவர்கள் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்ய கட்டளையிடப்பட்டார்கள்.
புலிகளின் தனியான குட்டி-ஈழம் அரசுக்கான கோரிக்கையானது, எப்பொழுதும் அமெரிக்கா,
ஐரோப்பிய ஒன்றியம் அல்லது பிராந்தியத்தின் முன்னணி சக்தியான இந்தியா போன்ற பெரும் வல்லரசுகளில் ஒன்றின்
அல்லது பலதின் ஆதரவை எதிர்பார்ப்பதையே அடிப்படையாக் கொண்டிருக்கின்றது. எவ்வாறெனினும், 2003ல் சமாதான
பேச்சுக்கள் குழம்பிப்போனதை அடுத்து, புலிகள் சர்வதேச ரீதியில், குறிப்பாக அமெரிக்காவால் விளைபயனுள்ள
வகையில் தனிமைப்படுத்தப்பட்டனர். புஷ் நிர்வாகத்தைப் பொறுத்தளவில், தெற்காசியாவில், விசேடமாக இந்தியா
தொடர்பாக, அமெரிக்காவின் நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த மோதல்களுக்கு முடிவுகட்டும் ஒரு வழிமுறையாகவே
சமாதானப் பேச்சுக்கள் இருந்துவந்துள்ளன.
இந்தியா மிகவும் அனுதாபம் காட்டும் என்ற புலிகளின் எதிர்பார்ப்பு பெறுமதியற்றது
என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இந்திய அரசாங்கம் தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் வெகுஜன எதிர்ப்பைப்
பற்றி நுண்ணுனர்வுடன் உள்ள அதே வேளை, புலிகளின் போராட்டம் இந்தியாவில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களுக்கு
ஊக்குவிப்பு வழங்குவதை தடுப்பதிலேயே அது பிரதானமாக அக்கறை காட்டுகிறது. புது டில்லி மறுபக்கம் அதன் பிராந்திய
எதிரியான பாகிஸ்தான் கொழும்பில் எந்தவொரு ஆதாயத்தையும் பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வதன்
பேரில், இலங்கை இராணுவத்துக்கு இரகசியமாக பயிற்சி, புலனாய்வு தகவல்கள் மற்றும் தளபாடங்களையும் வழங்குகிறது.
புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்படும் நிலையில், "சர்வதேச சமூகத்தை"
தலையிடுமாறு பரிதாபமாக வேண்டுமளவுக்கு இறங்கி வந்துள்ளனர். பெரும் வல்லரசுகள் இலங்கை இராணுவத்தின்
அட்டூழியங்களை மென்மையாக விமர்சிக்கும் அதேவேளை, அவர்களது நிலைப்பாடு, இராஜபக்ஷ அரசாங்கம்
சர்வதேச ரீதியில் எதிர்ப்பே இன்றி 2002 யுத்த நிறுத்தத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகிக்கொண்ட
போது தெட்டத் தெளிவாகியது. புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டால், முன்னால் இந்தியப்
பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என
எதிர்பார்ப்பதாக கிளிநொச்சி வீழ்ச்சியை அடுத்து இந்தியா அறிவித்தது.
உடனடியாக அடுத்துவரும் வளைவுகளும் திருப்பங்களும் என்னவாக இருந்தாலும்,
இலங்கையில் உள்ள உழைக்கும் மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் அபிலாஷைகளில் எதுவும் இந்த பிற்போக்கு
யுத்தத்தில் இராணுவ வெற்றியின் ஊடாக கிடைக்காது. |