ஐரோப்பா
European diplomacy in Gaza crisis prepares trap for
Palestinians
காசா நெருக்கடியில் ஐரோப்பிய இராஜதந்திரம் பாலஸ்தீனர்களுக்கான பொறியை
உருவாக்குகிறது
By Peter Schwarz
7 January 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து அனைத்து போர்நிறுத்த
கோரிக்கைகளையும் எதிர்த்திருப்பதுடன், இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அமெரிக்க அளித்திருக்கும் போதினும்,
ஐரோப்பா சில முக்கிய இராஜாங்க முனைவுகளை எடுத்திருக்கிறது. தற்போது மத்திய கிழக்கில் பல உயர்மட்ட
ஐரோப்பிய இராஜாங்க நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக, அதன் வெளியுறவுத்துறை கமிஷனர் பெனிரா
பெறேரோ-வால்ட்னர், மூத்த இராஜாங்க அதிகாரி ஜேவியர் சொலானா ஆகியோருடன் பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும்
செக் குடியரசின் வெளியுறவுத்துறை மந்திரிகளும் அப்பகுதிக்கு பயணித்துள்ளனர். தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின்
சார்பில் செக் குடியரசு தலைமை வகிக்கிறது. மத்திய கிழக்கிற்கான நால்வர் குழுவின் (ஐக்கிய நாடுகள், அமெரிக்கா,
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா) சார்பில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர் அப்பிராந்தியத்திற்கு
விஜயம் செய்திருந்தார். திங்களன்று பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சார்கோசி அப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
அத்துடன் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மத்தியதரை ஒன்றியத்தின் இணை தலைவராக செவ்வாயன்று நடந்த பதவி ஏற்கும்
விழாவிலும் அவர் கலந்து கொண்டார். எகிப்து ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் இந்த ஒன்றியத்தின் இராண்டாவது இணத்தலைவராவார்.
ஐரோப்பிய பிரதிநிதிகள் அனைவரும் ஓர் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு
விடுத்துள்ளனர். அவர்கள் தங்களின் திட்டங்களை முபாரக்குடனும், பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ், இஸ்ரேலிய
பிரதம மந்திரி ஹூட் ஓல்மர்ட் மற்றும் சிரியா ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத் ஆகியோருடனும் சார்கோசியுடனும்
விவாதித்துள்ளனர். அதே நேரத்தில், இஸ்ரேல் தாக்குதலின் உடனடி இலக்காக உள்ள ஹமாஸூடன் எவ்வித
பேச்சுவார்த்தை நடத்துவதையும் ஐரோப்பிய பிரதிநிதிகள் நிராகரித்துள்ளனர்.
காசா மீதான இஸ்ரேலிய தாக்குதை எதிர்க்கும் பலரும் ஐரோப்பாவின் இந்த
இராஜாங்க முனைவுகளை வரவேற்றுள்ளனர். சான்றாக, ஜேர்மனி இடது கட்சியின் வெளியுறவு விவகாரத்துறையின்
செய்தி தொடர்பாளர் வோல்ஃப்கேங்க் கெர்கி பிரென்சு ஜனாதிபதியின் தலையீட்டைப் பாராட்டி உள்ளார்.
இஸ்ரேலின் அமைதி தூதர் மைக்கேல் வார்சவிஸ்கி மட்டும், இந்த முனைவுகள்
போதுமானவை அல்ல என்றும், இவை போதிய விரைவாக செயல்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
பிரான்ஸ் "புதிய
முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி"
வலைத்தளத்தில், "இதில்
சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இரத்த வெள்ளத்தைத் தடுக்க உடனடியாக தங்களின் அரசாங்களுக்கு அழுத்தம்
அளிக்க வேண்டும் என்றும், ஒரு நாள் கூட நீட்டிக்காமல் உடனடியாக இப்போதே அவை தலையிட அவர்கள்
வலியுறுத்த வேண்டும் என்றும்"
அவர் இத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் ஓர் உடனடி கோரிக்கை விடுத்தார். காசா மக்களின்
பாதுகாப்பிற்கும், தாக்குதல் முகப்பிற்கும் இடையே தன்னை நிலைநிறுத்த கூடிய ஒரு சர்வதேச படையை
அனுப்புவதற்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
இதுபோன்ற அறிவிப்புகள் ஐரோப்பிய தலையீட்டின் உண்மையான பாத்திரத்தை
அங்கீகரிக்க மறுக்கின்றன.
இஸ்ரேலிய தாக்குதலை எந்த ஐரோப்பிய அரசாங்கமும் கண்டிக்கவில்லை என்பதுடன்,
ஒரு யுத்த குற்றம் எனும் அதன் உண்மையான பெயரில் எந்த அரசாங்கமும் அதை அழைக்கவும் இல்லை என்பது
முதன்மையாக கவனிக்க வேண்டிய புள்ளியாக உள்ளது. அதற்கு மாறாக, இஸ்ரேலால் எடுக்கப்பட்ட
நடவடிக்கைகளை அவை நியாயப்படுத்தி உள்ளன. அதாவது, சுய-பாதுகாப்பிற்கான சட்டபூர்வ நடவடிக்கை என்ற
பெயரில், காசா மக்கள் மீதான இஸ்ரேலின் 18 மாத தடை நடவடிக்கைககள், ஹமாஸ் தலைவர்கள் மீதான
தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பற்ற மாகாணங்களிலும், மக்கள் நிறைந்த பகுதிகளிலும் அதன் விமானத்தாக்குதல்கள்
ஆகிய நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட்டுள்ளன.
தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் ராக்கெட்களால் தாக்குதல் நடத்தியதைக் குறிப்பிட்டு
பாலஸ்தீனியர்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், ஜனாதிபதி சார்கோசி தமது பயணத்தைத் தொடங்கும்
முன்னதாக வெளிப்படையாகவே ஹமாஸை குற்றஞ்சாட்டினார் - ஆனால், இஸ்ரேல் இராணுவம் குறித்து அவர் எதுவும்
கூறவில்லை. செக் அரசாங்கத்தின் தலைவர் மற்றும் தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மெரிக்
டொபொலனிக், இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை ஒரு "பாதுகாப்பு"
பாத்திரத்தை வகிப்பதாக அறிவித்தார். ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கெல், இஸ்ரேல் பிரதம
மந்திரியுடனான ஒரு தொலைபேசி உரையில், மோதலுக்கான முழு பொறுப்பும் தெளிவாகவும், முற்றிலுமாகவும்
ஹமாஸைத் தான் சாரும் என்று அறிவித்திருந்தார்.
போர்நிறுத்தத்திற்கு முறையிடுவதில், ஐரோப்பிய அரசாங்கங்கள் முற்றிலும்
முதன்மையாக அவற்றின் சொந்த புவிசார்-அரசியல் நலன்களை மட்டுமே தொடர்கின்றன.
அவை, அரேபிய ஆட்சிகளுடன் பொருளாதார மற்றும் அரசியல் தொடர்புகளை
கொண்டிருப்பதால், இஸ்ரேல் செயல்படுத்தும் காட்டுமிராண்டித்தனமான முறைகளால் அரேபிய ஆட்சிக்கு குழி
தோண்டப்படும் என்று அஞ்சுகின்றன. இஸ்ரேல் நடவடிக்கைகள் மீதான பரந்த வெறுப்புகள், அமெரிக்கா மற்றும்
இஸ்ரேலுடன் நெருக்கமாக கூட்டணி வைத்துள்ள அரேபிய ஆளும் ஆட்சிகளுக்கு எதிராக திரும்பி வருகின்றன.
காசாவின் கொடூரமான யுத்தத்திற்கு பிந்தைய விளைவாக இஸ்ரேலின்
ஸ்திரமின்மையைக் குறித்தும் ஐரோப்பிய ஆளும் வட்டாரங்கள் அச்சம் கொண்டுள்ளன.
ஜனவரி 5ல், பிரான்சின் பிற்போக்குவாத செய்தித்தாளான
Figaro, "ஒரு
போர்நிறுத்தத்திற்காக உடனடி தலையீடு தேவை"
என்று தலைப்பிட்ட ஒரு தலையங்கத்தில், பின்வரும் அறிவிப்புடன் இதுபோன்ற
அபிவிருத்திகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்தது: "இந்த
புதிய பாலஸ்தீனிய நாடகத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர உயர, அத்துடன் அதிருப்தியும் உயரும்
என்பதால், நிச்சயமாக உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன."
அது மேலும் குறிப்பிடுகையில்,
"சிக்கல்கள் இருந்த போதினும்,
தாமதமின்றி ஒரு போர்நிறுத்தம் தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது. ஏனெனில், இன்னும் மோதமாச நிலைமை
ஏற்படக்கூடும்:
அதாவது, மக்கள் மிகுந்த பகுதிகளில் தரைவழி தாக்குதல் கொலைகார விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
ஹெஜ்பொல்லாஹ் அதன் இரண்டாவது அணியை லெபனானில் ஏற்படுத்தினால் என்ன ஆகும்? அமெரிக்காவின் முடக்க
நிலைமை ஒரு வெற்றிடத்தை உருவாக்கி உள்ளது என்பதுடன் அது பல தீவிரவாதிகளையும் ஊக்கப்படுத்தி வருகிறது
என்பதால், உடனடியாக செயல்பாடு தேவைப்படுகிறது."
என்று குறிப்பிட்டது.
ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்கள் நாடுகளின் ஸ்திரத்தன்மை குறித்தும் அஞ்சுகின்றன.
குறிப்பாக, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் அரேபிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த மில்லியன்கணக்கானவர்கள்
வசிக்கும் பிரான்ஸ் முக்கியமாக அஞ்சுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் பிரான்ஸ் நகர்புறங்களில் ஏற்பட்டிருக்கும் தாங்க
முடியாத நிலைமைகளுக்கு எதிராக போராடி வரும் பல இளைஞர்கள், அரேபிய நாடுகளையும், முஸ்லீம்
தலைமுறையையும் மற்றும் பாலஸ்தீனியர்கள் என்று அடையாளம் காட்டிக் கொள்பவர்களாகவும் உள்ளனர்.
இறுதியாக, ஆனால் முடிவாக அல்லாமல், நிர்வாக மாற்றம் மற்றும் ஓர் ஆழ்ந்த
பொருளாதார நெருக்கடியில் மாட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் முடங்கிய நிலைமையை ஐரோப்பியர்கள்
ஆதரிக்கிறார்கள். அவர்கள் மத்தியகிழக்கில் தங்களின் நிலையை வலுப்படுத்தவும், மீண்டும் நிலைநிறுத்தவும்
இதையொரு வாய்ப்பாக கருதுகிறார்கள். இது குறிப்பாக பிரான்சுக்கு முற்றிலுமாக பொருந்துகிறது. ஓட்டோமன்
சாம்ராஜ்ஜியத்தின் சிதைவைத் தொடர்ந்து, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவால் கட்டாயமாக வெளியேற்றப்படும்
வரையில் அப்பிராந்தியத்தில் இருந்த முக்கிய காலனி ஆதிக்க சக்திகளில் ஒன்றாக அது விளங்கியது.
இந்த புள்ளியும்
Figaro
தலையங்கத்தால் பின்வருமாறு சுட்டிக்காட்டப்பட்டது: "அமெரிக்கர்களின்
தலையீடு தற்காலிகமாக இல்லாதிருப்பதால், குடியரசின் ஜனாதிபதி மீண்டும் ஒரு முறை ஐரோப்பியர்களின்
பங்களிப்பை உருவாக்க நினைக்க கூடும்."
அதிகாரத்தை ஏற்றுக் கொண்டதிலிருந்து, மத்தியதரைக்கடல் பிராந்தியத்திலும்,
மத்திய கிழக்கிலும் பிரான்சின் நிலையை வலுப்படுத்த சார்கோசி திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு
ஜூலையில் மத்தியதரைக்கடல் பிராந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டதும், அத்துடன் வாஷிங்டனின் பரியாஹ்
(தீண்டதகாதவர்) என்று போற்றப்படும் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-ஆசாத்துடனான சார்கோசியின் கூட்டணியும்
இந்த நோக்கம் கொண்டதேயாகும். சார்கோசி, அவருக்கு முன்பிருந்த வேறெந்த பிரென்சு ஜனாதிபதிகளை
விடவும், இஸ்ரேலுடன் மிக நெருக்கமான உறவையும் ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்.
மத்திய கிழக்கு செயல்பாட்டை அமைப்பதற்கு முன்னதாக, சார்கோசி
இப்பிராந்தியத்தில் அவரின் நெருக்கமான உறவுகளை அதிகரித்திருந்தார்.
"பிரான்ஸ் ஒரு முக்கிய பொறுப்பை ஏற்க வேண்டிய நிலையில்
இருக்கிறது, ஏனெனில் சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகளுடனும் ஒரு நம்பிக்கையையும், நட்புறவையும் அதனால்
ஏற்படுத்த முடியும்."
என அவர் ஒரு பேட்டியில் கூறிய தகவல்கள், லெபனானின் மூன்று தினசரி செய்திதாள்களில் பிரசுரமாகி இருந்தது.
ஜேர்மனியும் மத்திய கிழக்கில் அதன் சொந்த நலன்களைத் தக்க வைக்க முயன்று
வருகிறது. ஜேர்மனியின் இராஜதந்திரம் - குறைந்தபட்சம், யூதப்படுகொலை (ஹோலோகாஸ்டில்) நாட்டின்
கடந்த கால பங்களிப்பினால் அல்லாமல் - சார்க்கோசியை விட மிக அமைதியாக தொடர்ந்து வருகிறது. ஆனால்
அது அதனுடைய குறிக்கோளாகவும் இருக்கிறது. சார்கோசி சுறுசுறுப்பாக அவரின் ஊடகங்களுடன் மத்திய கிழக்கிற்கு
பயணம் மேற்கொண்டிருக்கும் போது, ஜேர்மன் அதிபர் மெர்கேல் மற்றும் அவரின் வெளியுறவு துறை மந்திரி
பிரான்க்-வால்டர் ஸ்டெயின்மீர் முக்கிய பங்களிப்பாளர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.
சமீபத்திய ஆண்டுகளில், பொதுவான தன்னாட்சி பாலஸ்தீனிய பிராந்தியங்களில் போலீஸ் மற்றும் சட்டரீதியான
ஆணையங்களை அமைப்பதில் ஜேர்மனி ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது.
ஐரோப்பியர்களால் முன்வைக்கப்படும் போர்நிறுத்தம் அவர்களின் ஏகாதிபத்திய
ஆசைகளையே வெளிப்படுத்தி காட்டுகின்றன. பாலஸ்தீன மக்களின் விடுதலையைப் பாதுகாப்பது அல்லது அவர்களின்
அவலத்தை போக்குவதற்கு பதிலாக, ஐரோப்பிய சக்திகள் அவற்றின் ஒடுக்குமுறையை மேலும் துல்லியமான வகையில்
நிலைநாட்ட விருப்பம் கொள்கின்றன. இதற்கு முடிவாக, ஒரு நிரந்தரமான போலீஸ் படையின் சேவைகள்
அவற்றிற்கு தேவைப்படுகின்றன. பெரும்பாலும் இந்த முக்கிய பாத்திரத்தில் எகிப்திய ஆட்சியின் இரும்புமனிதர்
முபாரக்கும், அமெரிக்காவின் பின்புலத்தில் உள்ள அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீனிய ஆணையமும் பங்கு வகிக்க
கூடும்.
காசாவில் இஸ்ரேல் அதன் விமானத் தாக்குதலையும், தரைவழி தாக்குதலையும்
தீவிரப்படுத்தி வரும் நிலையில், வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் ஆகியவற்றிற்கு பொருந்தும் வகையில் ஓர்
உடன்பாட்டை எட்டுவதற்கு ஐரோப்பியநாடுகள் முயன்று வருகின்றன. எகிப்திய அரசாங்கத்துடனான ஐரோப்பிய
பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை குறித்து பிரான்சின் செய்தித்தாள்
Le Monde
வெளியிட்டிருந்த செய்தியின்படி, போர்நிறுத்த உடன்பாட்டிற்கு இஸ்ரேலை
சம்மதிக்க செய்யும் வகையில், காசாவிற்குள் ஆயுதங்கள் கடத்தப்படுவதை முடிவுக்கு கொண்டு வர பிரான்ஸ்
விரும்புகிறது. இதற்கு முடிவாக, பெரும்பாலும் ஒரு சர்வதேச படையை நியமிப்பதன் மூலம், எகிப்து மற்றும்
காசாவிற்கு இடையிலான எல்லையில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டியதிருக்கும்.
Süddeutsche Zeitung
மேலும் பல கூடுதல் முனைவுகளைப் பரிந்துரைக்கிறது. பாலஸ்தீனியர்களை சினாய்
பாலைவனத்திற்கு விரட்டுவதும், "1.5
மில்லியன் பாலஸ்தீனியர்களை எகிப்தின் பொறுப்பில் தள்ளுவதும் தான்"
இஸ்ரேல் ஒடுக்குமுறையின் உண்மையான நோக்கமாகும் என்று இந்த பத்திரிக்கை குறிப்பிடுகிறது.
"1967ஆம் ஆண்டின் ஆறு நாள்
யுத்தத்துடன் இந்த சூழ்நிலையை ஒப்பிடலாம்"
என்று அப்பத்திரிக்கை தொடர்ந்து குறிப்பிடுகிறது. "அந்த
காலத்தில் இஸ்ரேலிய துருப்புகளால் அரேபிய யுத்த அகதிகள் அண்டை நாடுகளான அரேபிய நாடுகளுக்குள் விரட்டப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அங்கு நிரந்தரமாக தங்கி விட்டனர். தற்போதைய விடயத்தில், போர்நிறுத்தம் ஒரு மத்திய
அதிகாரத்தின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்டால், இந்த அட்டூழியங்களை இஸ்ரேல் ஒரு முடிவுக்கு கொண்டு வரமுடியும்.
எகிப்து இதில் ஒரு முக்கிய நபராக உள்ளது. மக்கள் ஏதேனும் உண்பதற்கேனும் உத்தரவாதம் அளிக்கும் வகையில்
ஹமாஸை முடக்குவதற்கான பணியை கெய்ரோவிடம் ஒப்படைக்கலாம். அது காசா பகுதி நிர்வாகத்தின் பாதி பொறுப்பை
அதனிடம் ஒப்படைப்பதாகும்."
" நாங்கள் இஸ்ரேலின் நெருங்கிய
கூட்டாளியாவோம் மற்றும் கெய்ரோவின் மிக முக்கிய நிதி ஆதாரமாகவும் உள்ளோம். வேறு யாரும் இல்லை
என்பதை முபாரக் அறிவார்"
என்ற வரிகளுடன் கெய்ரோவிற்கு அழுத்தம் அளித்து, மேற்கூறியது போன்றதொரு தீர்வை அமெரிக்கா உருவாக்கலாம்
என்று Süddeutsche Zeitung
குறிப்பிடுகிறது.
பிரிட்டிஷ் பைனான்சியல் டைம்ஸூம் இதே போன்றதொரு தீர்மானத்தை முன்வைக்கிறது.
"காசா பகுதியையும்,
அதில் வாழும் மக்கள் குறித்த பொறுப்பையும் கெய்ரோவிற்கு மாற்றுவது தான் காசாவில் இஸ்ரேலின் உண்மையான
நோக்கம்" என்று எகிப்து
சந்தேகிப்பதாக அப்பத்திரிக்கை எழுதுகிறது. "இந்த
கொடுமையான விளையாட்டில் நாங்கள் தான் மிகவும் பாதிக்கப்படுகிறோம்... நாங்கள் எல்லைகளைத் திறந்துவிடும்
போது, நிறைய அகதிகள் உள்நுழையும் அபாயம் ஏற்பட்டால், என்ன நடக்கும்? காசா மக்களை நாங்கள் செனாயிற்கா
திருப்பி விட முடியும்?"
என்று ஓர் உயர்மட்ட எகிப்திய அதிகாரி குற்றஞ்சாட்டுவதாக அந்த பத்திரிக்கை குறிப்பிடுகிறது.
ஐரோப்பிய ராஜதந்திரம் ஒரு கொடிய பாத்திரத்தைக் கொண்டிருப்பதைத் தான்
இதுபோன்ற விமர்சனங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உயிரிழக்கவும், நூறு
ஆயிரக்கணக்கான மக்கள் காசாவில் இருந்து வெளியேறவும் காரணமான ஒரு யுத்தத்திற்கு பின்னால், காசாவை ஒரு
பெரிய சிறைச்சாலையாக மாற்றும் தீர்வைத் தான் ஐரோப்பிய நாடுகள் தயாரித்து வருகின்றன. இஸ்ரேல்,
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றின் கூட்டணியுடன், இந்த சிறைச்சாலையின் நிர்வாகம் எகிப்து மற்றும்
பாலஸ்தீன ஆணையத்திடம் ஒப்படைக்கப்படலாம்.
|