World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

The New York Times and Gaza: Justifying genocide

நியூயோர்க் டைம்ஸும் காசாவும்: நியாயப்படுத்தப்படுகின்ற இனப்படுகொலை

By Bill Van Auken
31 December 2008

Back to screen version

காசா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் விமான தாக்குதலின் நான்காம் நாளில், அமெரிக்க ஆளும்வர்க்க தாராளவாதத்தின் குரலாக ஒலிக்கும் நியூயோர்க் டைம்ஸ் முதன்முறையாக அதன் தலையங்க பக்கத்தில் இந்த விடயத்திற்கு இடம் அளித்திருந்தது.

ஒரு முதன்மை தலையங்கத்தில், டைம்ஸ் அதன் நிலையை சுருக்கமாக விளக்கி இருந்தது. "இஸ்ரேல், தன்னைத்தானே பாதுகாத்து கொள்ள வேண்டும்" என்று தொடங்கிய அந்த தலையங்கம், "இஸ்ரேலிய பிராந்தியத்தில் இந்த மாதம் ராக்கெட் தாக்குதல் நடத்தியதன் மூலம் ஆறு மாதமாக இருந்த போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக ஹமாஸ் பொறுப்பேற்க வேண்டும்" என்று குறிப்பிட்டது.

பாலஸ்தீனியர்கள் வன்முறையை ஆரம்பிப்பவர்கள், பாதிக்கப்பட்ட நாடு இஸ்ரேல் என்ற அமெரிக்க ஊடகத்தால் பொதுவாக முன்வைக்கப்பட்ட தகவல்களிலிருந்து, இந்த பத்திரிக்கையின் செய்திகளைச் சிறிது வேறுபடுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு இஸ்ரேலியர்களுக்குமாக சுமார் 100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்பது போன்ற கொடூரங்களும், மோதலின் சமமற்ற ஒப்பீடுகளும் ஒருபோதும் கவனத்தில் எடுக்கப்படவில்லை.

காசா பகுதிக்குள் இஸ்ரேல் இராணுவத்தால் நடத்தப்பட்ட ஓர் எல்லை தாண்டிய தாக்குதல் தான் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது என்பது வெளிப்படையாக இருந்தாலும் கூட, டைம்ஸ் இதழ் அதை நிராகரித்து யுத்த விளக்கத்தை விவரித்திருந்தது. நவம்பர் 4ல் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹமாஸ் பாதுகாப்பு படையின் ஆறு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். இந்த தேதி, அமெரிக்காவில் தேர்தல் நாளாகவும் பொருந்தி இருந்தது. இந்த தாக்குதல் இஸ்ரேலிய அரசால் அரசியல்ரீதியாக திட்டமிடப்பட்ட தூண்டுதல் என்பதை தான் இந்த தேதி பொருத்தம் எடுத்துக்காட்டுகிறது. இதன் மூலம் இஸ்ரேல், அதன் தவிர்க்க முடியாத இந்த தாக்குதலை அமெரிக்காவில் தேர்தல் நடக்கும் வரை தள்ளி வைத்திருந்தது என்பதை தீர்மானிக்க முடிகிறது.

இராணுவத்திற்கு தேவைப்பட்ட கால அவகாசத்தை வழங்குவதற்காகவே ஜியோனிஸ்ட் ஆட்சி யுத்தநிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது என்றும், காசா மீதான தாக்குதல் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டு இருந்ததாக இஸ்ரேலில் செய்தி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் லெபனானில் இஸ்ரேல் இராணுவம் தோல்வி அடைந்த பின்னர், அதன் நம்பகத்தன்மையை மீண்டும் நிரூபிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இதன் மூலம் அது அப்பிராந்தியத்தில் உள்ள பிறருக்கும் இதை வெளிப்படுத்திக் காட்ட விரும்புகிறது.

தற்போது இஸ்ரேலால் நடத்தப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கை அதன் சுய-பாதுகாப்புக்கானதல்ல. அது முற்றிலும் புவிசார்-அரசியல் நோக்கத்தின் அடிப்படையிலும், அதன் சொந்த உள்நாட்டு அரசியல் மற்றும் சமூக முரண்பாடுகளின் பிரதிபலிப்பின் அடிப்படையிலும் நடத்தப்பட்டதாகும்.

உயிரிழந்த மற்றும் காயமடைந்த பாலஸ்தீன ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு ஒரு வார்த்தையில் கூட இரக்கம் தெரிவிக்காமல், காசா மீதான தாக்குதல் இஸ்ரேலுக்கு நன்மை அளிக்கும் என்று ஊக்குவித்திருந்த டைம்ஸ் தலையங்கம், "பொதுமக்களைக் காயப்படுத்துவதை குறைத்துக் கொள்ளுமாறு" இஸ்ரேலிய ஆட்சிக்கு ஒரு முறையீட்டை மட்டும் முன்வைக்கிறது.

இஸ்ரேலின் இந்த கொடூரமான தாக்குதலினால் போதிய உணவு, மருந்துப் பொருட்கள், மின்சாரம், சுத்தமான நீர் அல்லது பிற வாழ்க்கை தேவைகள் இல்லாமல் செய்து, காசா மக்களை ஏழ்மையிலும், பசியிலும் தள்ளியிருப்பது குறித்து இந்த தலையங்கம் எதுவும் குறிப்பிடவில்லை. போர்நிறுத்தம் இந்த கடுமையான நிலைமைகளை மட்டுப்படுத்தி இருக்கும். ஆனால் காசாவில் இஸ்ரேல் அதன் மூக்கை நுழைத்தது. 60 ஆண்டுகள் இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளின் விளைவாக எவ்வாறு 1.5 மில்லியன் மக்கள் இவ்வாறான கடுமையான நிலைமைகளுக்குள் தள்ளப்பட்டார்கள் என்றோ அல்லது இந்த குறுகிய நிலப்பகுதியில் அவர்கள் எவ்வாறு கொண்டு வரப்பட்டார்கள் என்றோ அந்த தலையங்கம் எதுவும் குறிப்பிடவில்லை.

டைம்ஸ் தலையங்கம் முற்றிலும் உண்மைக்கு மாறானதாக எடுத்துக்கொண்டால், அந்த பத்திரிக்கையின் செவ்வாய்கிழமை பதிப்பில் வெளியாகி இருந்த கருத்துக்கணிப்பு முற்றிலும் குற்றம்சார்ந்ததாகும்.

ஓர் இஸ்ரேலிய வரலாற்றாளரான பென்னி மோரீஸ் தான் அதை எழுதியவர். அவரின் கண்ணோட்டம் பொதுவாக இஸ்ரேலிய இடதுசாரியாக பார்க்கப்பட்டாலும், கடந்த சில ஆண்டுகளாக அவர் தீவிர வலதுசாரியாக தொங்கி கொண்டிருக்கிறார்.

"ஏன் பயமுறுத்தப்படுவதாக இஸ்ரேல் உணர்கிறது" என்பது தான் மோரீஸ் எழுதிய கட்டுரையின் தலைப்பு. அது காசா மீதான தாக்குதலை நீளமாகவும், செளகரியமாகவும் நியாயப்படுத்தி இருப்பதுடன், வரவிருக்கும் பெரிய குற்றங்கள் குறித்தும் எச்சரிக்கிறது.

இஸ்ரேல், மேற்கிலுள்ள அதன் நேச நாடுகளின் ஆதரவால் பாதுகாக்கப்பட்டிருந்த போதும், அதிகரித்து வரும் அபாயகரமான எதிரிகளால் சூழப்பட்டுள்ளதாக அவர் எழுதி இருந்தார். "கிழக்கில் ஈரான், வடக்கில் லெபனிய அடிப்படைவாத அமைப்பான ஹெஜ்பொல்லாஹ்... தெற்கில், காசா பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் இஸ்லாமிய ஹமாஸ் இயக்கம் ஆகியவற்றை இஸ்ரேல் எதிர்கொண்டு வருகிறது."

இந்த "பயங்கரமான அச்சுறுத்தல்களால், தங்களின் 60 ஆண்டு கால பழைய நாட்டின் மீது அனைத்து கதவுகளும், வரலாறும் மூடப்படுவதாக இஸ்ரேலியர்கள் உணர்கிறார்கள்." என்று மோரீஸ் குறிப்பிட்டிருந்தார்.

யார் யாரை அச்சுறுத்துவது? எந்த நிரந்தர எல்லையையும் அங்கீகரிக்காத உலக நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகும். வடக்கில், அது தொடர்ந்து லெபனானை தாக்கி வருகிறது. கடைசியாக 2006 ஜூலையில், அந்நாட்டின் தெற்கிலும், பெய்ரூட்டின் நகரங்களிலும் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்தியது. அதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கிழக்கில், மேற்கு படுகை பாலஸ்தீனியர்களை ஒரு பெரிய சுவற்றுக்குப் பின்னால் அடைத்தும், அவர்களை நிபந்தனைகளுக்கு உட்படுத்தியும், சாலை தடுப்புகள் மற்றும் ஒடுக்குமுறையாலும் அவர்கள் தங்கள் வாழ்வில் தாங்க முடியாத நிலைமைகளை உருவாக்கியது. தெற்கில், தற்போது அதன் அண்மையில் உள்ள காசாவின் மீது தாக்குதல் நடத்துகிறது. தரைவழி தாக்குதலுக்கும் தயாராகி வருகிறது.

ஈரான் குறித்து, ஜூலையில் டைம்ஸில் வெளியான ஒரு முக்கிய கட்டுரையில் மோரீஸ் அதை அச்சுறுத்தும் வகையில் எழுதியிருந்தார். முக்கியமாக ஈரானிய மக்களை அணுஆயுத தாக்குதல் குறித்து அச்சுறுத்தி இருந்தார். ஈரானின் அணு உலைகள் மீது ஓர் உத்தியோகப்பூர்வ தாக்குதல் நடத்த வலியுறுத்தி மோரீஸ் பின்வருமாறு எழுதினார். "இதன் விளைவாக ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் காயம் அடைவார்கள் என்பதுடன் சர்வதேச அனுதாபத்திற்கும் ஈரான் ஆளாக வேண்டியிருக்கும்." என்று குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த தாக்குதல் ஈரானின் அணுசக்தி திட்டத்தைத் தடுக்கவில்லையானால், "இதற்கு மாற்றாக, அணுசக்தியினால் உபயோகமற்ற நாடாக ஈரான் மாற்றப்படும்" என்று குறிப்பிட்டார்.

மோரீஸ், அவரின் சமீபத்திய செய்திகளில், சமுதாய நிலைமை அஞ்சத்தக்கதாக இருப்பதை உணர்வதாக வெளியிட்டிருந்தார். இஸ்ரேலின் 1967க்கு முந்தைய எல்லைகளுக்குள் வாழும் 1.3 மில்லியன் அரேபிய குடிமக்கள், யூத நாட்டை கலைக்க முறையிடுவதாக அவர் எச்சரித்தார்.

இந்த அரேபிய-இஸ்ரேலியர்கள் தீவிரமயமாக்கப்பட்டுள்ளதுடன், பாலஸ்தீன தேசிய கொள்கைகளையும் வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிடுகிறார். அடுத்ததாக, அரேபிய-இஸ்ரேலியர்கள் இடையே காணப்படும் உயர்ந்த பிறப்பு விகிதம் உள் இந்த நிலை நீடித்தால், 2040க்கு முன்னதாகவே இஸ்ரேலிய குடிமக்களில் பெரும்பான்மையினராக அவர்கள் மாறிவிடக்கூடும். ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்குள், 1948க்கு முந்தைய பாலஸ்தீன எல்லைகளுக்குள் (இஸ்ரேல், மேற்கு படுகை மற்றும் காசா ஆகியவை உள்ளடங்கியது) அரேபியர்கள் பெரும்பான்மையினராக ஆகக்கூடும்.

"பெரும்பாலான யூதர்கள், அரேபிய சிறுபான்மையினரை ஐந்தாவது முக்கிய தூணாக காண்கின்றனர்." என்று மோரீஸ் உறுதிப்பட தெரிவித்தார்.

மேற்கத்திய ஜனநாயக மற்றும் தாராளவாத கொள்கைகளுக்கு இஸ்ரேல் ஒத்துக் கொண்டிருப்பதால், இஸ்ரேல் முகங்கொடுத்துள்ள அச்சுறுத்தல்களை அது எதிர்கொள்வது மிகவும் சிரமமாகும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அபிவிருத்திகளிலிருந்து ஏற்பட்ட அபாய உணர்வினால், கடந்த வாரம் கடுமையான எதிர்நடவடிக்கைக்கு அதனை இட்டு சென்றதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இதனால் சக்தி வாய்ந்த கூடுதல் தாக்குதல்கள் தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதாகவும் பல புதிய உண்மைகள் அவரால் அளிக்கப்பட்டன.

சாதாரண வாசகரைப் பொறுத்தமட்டில், இஸ்ரேலின் சுய-பாதுகாப்பு என்ற பெயரில் மேலும் பெரிய படுகொலைகளை ஏற்று கொள்வதை வலியுறுத்துவதையே மோரீஸின் இந்த கருத்து வெளிப்படுத்துகிறது.

பென்னி மோரீஸ் நடத்தும் அரசியல்

ஆனால், பாலஸ்தீனர்களின் இனத்துடைப்புக்கு மோரீஸ் ஓர் ஆர்வலராகவும், பொது வழக்கறிஞராகவும் இருப்பதை டைம்ஸ் இதழ் மிக நன்றாகவே அறிந்திருந்தது. அவரின் அரசியல் வரலாற்றை மிக தெளிவாக உணர்ந்திருப்பவர்களுக்கு, அவரின் வாதங்களிலிருந்து வரும் இனப்படுகொலைக்கான நியாயப்பாடுகள் தெளிவாக புரியும்.

இஸ்ரேல் வன்முறைகள் மூலமே உருவாக்கப்பட்டது என்றும், மூன்றே கால் மில்லியனுக்கும் மேலான பாலஸ்தீனர்களை (இந்த நாடற்ற அகதி மக்கள் தற்போது 4 மில்லியன் அண்மையிலான எண்ணிக்கையில் உயர்ந்துள்ளனர்) அவர்களின் நிலத்தை விட்டு வெளியேற்றியது என்று ஜியோனிஸ்ட் நாட்டின் அடிப்படை பழங்கதைகளையும், ஆவண ஆதாரங்களையும் 1980களில் வெளியிட்டு, இஸ்ரேலின் "புதிய வரலாற்றாளர்கள்" என்று அழைக்கப்பட்டவர்களில் ஒருவராக மோரீஸ் முதலில் பெயர் பெற்றார்.

பின்னர் அவர், 2000த்தின் தொடக்கத்தில் இடதுசாரி மனிதராக கருதப்பட்ட போதிலும், இரண்டாவது இன்டிபாடா (intifada - பாலஸ்தீன அரேபியர்களின் எழுச்சி) மற்றும் இறுதிகட்ட கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த போதும், அவர் வலதுபக்கம் திரும்பினார். பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் நடந்த படுகொலைகள் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு இஸ்ரேல் இராணுவ படைகள் தான் முழு பொறுப்பு என்று புதிய ஆய்வுகளை எடுத்துக்காட்டி முந்தைய அவரின் கருத்துக்களைத் தாங்கி பிடித்த மோரீஸ், பின்னர் இந்த குற்றங்களை நியாயப்படுத்தி அவற்றிற்கு ஆதரவாக இருந்தார்.

2004 ஜனவரியில் Ha'aretz இதழுக்கு அளித்த பேட்டியில் மோரீஸ் அவரின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்: "சில சூழ்நிலைகளில் வெளியகற்றல் என்பது ஒரு யுத்த குற்றமாக ஆகாது. 1948 வெளியேற்றங்களை யுத்த குற்றங்களாக நான் கருதவில்லை. முட்டைகளை உடைக்காமல் உங்களால் ஆம்லெட் செய்ய முடியாது. உங்கள் கரங்களை நீங்கள் கறைபடியச் செய்தே ஆக வேண்டியுள்ளது."

அவர் தொடர்ந்து கூறுகையில், இஸ்ரேலின் நிறுவனர் டேவிட் பென்-குரியன் ஒரு முழுமையான வேலையைச் செய்திருக்க வேண்டும். அரேபியர்களின் மொத்த நாட்டையும் அவர் துடைத்து விட்டிருக்க வேண்டும். வரலாற்றுரீதியான நியாயப்படுத்தலாக (நியாயமாக) அவர் குறிப்பிடுகையில், "இந்தியர்களை இல்லாதொழிக்காமல் இருந்திருந்தால், அமெரிக்க ஜனநாயகம் கூட உருவாக்கப்பட்டிருக்க முடியாது." என்றார்.

"இனத்துடைப்பை நியாயப்படுத்தும் சூழ்நிலைகளும் வரலாற்றில் உள்ளன." என்று தொடர்ந்த அவர், "21ஆம் நூற்றாண்டில் இந்த வார்த்தைகள் முற்றிலும் எதிர்மறையானது என்பதை நான் அறிவேன். ஆனால் இனச்சுத்திகரிப்பு அல்லது இனப்படுகொலை (உங்கள் மக்களை இல்லாதொழிப்பது) என்ற இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தால், நான் இனச்சுத்திகரிப்பையே தேர்ந்தெடுப்பேன்." என்றார்.

மோரீஸ் வெறுமனே வரலாற்றை பற்றிய அவரின் கருத்துக்களை மட்டும் குறிப்பிடவில்லை. அவர் 2004ல், அவரின் ஒரு பேட்டியில், "பிற சூழ்நிலைகளில் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் யுத்தம் மற்றும் நெருக்கடியால் உணரப்பட இருக்கும் சூழ்நிலைகளில் வெளியேற்றம் என்பது முற்றிலும் நியாயமாகவே கருதப்படும். அவை அவசியமானதாகவும் கூட இருக்கலாம்." என்று குறிப்பிட்டிருந்தார்.

Ha'aretz பேட்டியில் மட்டுமின்றி வேறோர் இடத்திலும், "பாலஸ்தீன மக்களை ஒரு வெறிபிடித்த மிருகமாக வரையறுத்த அவர், அது ஒரு வழியிலோ அல்லது பிற வழிகளிலோ அடைக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார். "அழிப்பது அல்லது அழிக்கப்படுவது என்ற இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டுமானால், அழிப்பதே சிறந்ததாகும்" என்று அவர் வரையறுத்தார்.

இது தான் பாசிச மொழி. அது இஸ்ரேலில் ''வெளியேற்றல்'' ("transfer") என்று அறியப்பட்ட கொள்கையை போலித்தனமான சிந்தனையுடன் நியாயப்படுத்துகிறது. அதாவது, இஸ்ரேல் மாகாணங்களில் இருந்து, முக்கியமாக மேற்கு படுகை மற்றும் காசா ஆகியவற்றிலிருந்தும், மீதமிருக்கும் அரேபிய மக்களை கட்டாயமாக வெளியேற்றுவது தான் அந்த கொள்கையின் நோக்கம். தொடக்கத்தில், மறைந்த மீர் கஹானியால் இதுபோன்ற பாசிச மூலங்கள் முன்கொண்டு வரப்பட்டன. பின்னர் தொடர்ந்து அது இஸ்ரேலின் முக்கிய கட்சிகள் மற்றும் தலைவர்களால் ஊக்கப்படுத்தப்பட்டது. இஸ்ரேலிய தலைவராக தாம் "இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன குடிமக்களிடம்", 'உங்கள் தேசிய விருப்பங்கள் வேறு எங்கோ உள்ளன' என்று தெரிவிப்பேன் என்று அறிவித்ததன் மூலம் பிரதம மந்திரிக்கான ஒரு முன்னணி வேட்பாளரான வெளியுறவு துறை மந்திரி Tzipi Livni சமீபத்தில் அவரின் கொள்கையை சற்றே வெளிப்படுத்தி இருந்தார்.

இனத்துடைப்பு மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றிற்கு இடையே மோரீஸ் தவறான வேறுபாடுகளைக் காட்டுகிறார். ஒரு நடைமுறை மற்றொன்றுக்கு இட்டு செல்கிறது. நாஜிகளின் "இறுதி தீர்வு" தொடக்கத்தில் ஜேர்மனியிலிருந்து யூதர்களின் கட்டாய புலம்பெயர்வு மற்றும் வெளியேற்றமாகத்தான் அழைக்கப்பட்டது. பின்னர் தான் மரண முகாம்கள் உருவாயின.

மோரீஸின் கட்டுரையை வெளியிட்டிருக்கும் டைம்ஸ் பிரசுரமானது, இனத்துடைப்பு மற்றும் இனப்படுகொலையில் அதன் சொந்த சந்தர்ப்பவாத மற்றும் கொடூர போக்கையையே அடிக்கோடிடுகிறது. இந்த நடைமுறைகளை அது எதிர்க்கிறதா அல்லது வாய் பேசாமல் அவற்றை ஏற்று கொள்கிறதா என்பது அவற்றை யார் செய்கிறார்கள் என்பதையும், யார் நலனுக்காக அது செய்யப்படுகிறது என்பதையும் பொறுத்து தான் அமைகிறது.

இதேபோன்று, சூடானுக்கு எதிராக ஒபாமா இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய கட்டுரையாளர் நிக்கோலஸ் கிரிஸ்டாப்பின் கட்டுரையையும் அது பிரசுரித்திருந்தது. டால்பரில் இனப்படுகொலை என்பதாக இதை அவர் வரையறுத்தார். இவ்வாறே, போஸ்னியாவில் இனத்துடைப்புக்கும், கோசொவாவிலும் இதேபோன்ற மாற்றங்களுக்கு பிரதிபலிப்பாக முன்னாள் யூகோஸ்லோவியா மீதான அமெரிக்க தாக்குதலுக்கும் ஒரு முக்கிய ஆதரவாளராக இந்த பத்திரிக்கை இருந்தது.

ஆபிரிக்காவிலுள்ள எண்ணெய் வள நாடுகளைத் தமது கட்டுப்பாட்டில் ஒன்றிணைக்கவோ அல்லது நேட்டோவின் செல்வாக்கை கிழக்குமுகமாக விரிவாக்கவோ இனத்துடைப்பை எதிர்க்க வேண்டிய தேவையிருந்தால், அது சட்டப்படி அவசியமாகிறது. ஆனால் அதே இனத்துடைப்பு அமெரிக்க கூட்டாளிகளால் கையாளப்படும் போது, அது அமைதியாக ஆதரிக்கப்படுகிறது.

சியோனிசம் என்பதன் கீழ் தொடங்கப்படும் தேசியவாத திட்டங்களால் எட்டப்பட்ட அரசியல், சமூக மற்றும் நீதிக்கான குருட்டுத்தனமான பாதைகளைத்தான், காஜா தாக்குதல் மற்றும் பல கொடூரமான குற்றங்களை ஆதரிக்கும் மோரீஸ் போன்றவர்களின் கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

1938ல், லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிடுகையில், "யூதர்களை பாலஸ்தீனத்திற்கு புலம்பெயர்ப்பதன் மூலம் யூதர் பிரச்சனையைத் தீர்க்கும் முயற்சி" என்பது "யூத மக்களை அவமதிப்பதையே" குறிக்கிறது என்று குறிப்பிட்டார். "இராணுவ நடவடிக்கைகளில் எதிர்கால அபிவிருத்திகள் பாலஸ்தீனியர்களை இரத்த ஆறுக்குள் தான் கொண்டு செல்லும்" என்று குறிப்பிட்ட அவர், யூத மக்களின் மீட்சி என்பது முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கி எறிவதில் இருந்து பிரிக்க முடியாததாக இருப்பதாக" விளக்கினார்.

எழுபது ஆண்டுகள் முடிந்த பின்னரும், இஸ்ரேலில் உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கு மட்டுமின்றி அனைத்து பிராந்தியத்திற்கும் சியோனிச திட்டம் ஓர் இரத்த ஆறாகவே மாறியிருந்து அச்சுறுத்துகிறது. முதலாளித்துவத்திற்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்திற்கும், மத்திய கிழக்கில் ஒரு சோசலிச கூட்டமைப்பை உருவாக்கவும் யூதர்கள், அரேபியர்கள் போன்ற தொழிலாளர் வர்க்கத்தை ஒருங்கிணைத்து போராடுவதொன்றே இதற்கு மாற்று தீர்வாக உள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved