: மத்திய
கிழக்கு
The Gaza crisis and the perspective of permanent
revolution
காசா நெருக்கடியும் நிரந்தரப் புரட்சி முன்னோக்கும்
By Bill Van Auken
30 December 2008
Use this version
to print | Send
this link by email | Email
the author
காசாவிற்கு எதிரான தாக்குதல் மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் மக்கள்
சீற்றத்தை தூண்டிவிட்டுள்ளது; அரபு உலகம் மற்றும் பிற இடங்களிலும் உள்ள அரசாங்கங்கள் அமெரிக்க இஸ்ரேலிய
போர்க்குற்றத்தை நியாப்படுத்தும் விதத்தை ஆதரவு தெரிவிக்க வரிசையில் நிற்கின்றன.
பெரும்பாலும் பாதுகாப்பற்ற, அரைப்பட்டினியில் ஒரு முற்றுகைக்குட்பட்ட பகுதியில்
இருக்கும் 1.5 மில்லியன் மக்கள்மீது நடத்தப்படும் "முழுப் போர்" என்ற இஸ்ரேலின் அறிவிப்பு, சீற்றத்தையும் இகழ்வையும்தான்
நியாயமாக எதிர்கொள்கிறது. இதேபோல்தான் செய்தி ஊடகத்தில் வரும் பாசாங்குத்தன பொய்கள் நிறைந்த அறிக்கைகளும்
உள்ளன; அவை இஸ்ரேல் இடைவிடாமல் மின்னல் வேகத்தில் குடியிருப்புக்கள், காவல் நிலையங்கள், பல்கலைக்கழகங்கள்,
மசூதிகள், அலுவலகக்கட்டிடங்கள் மீது நடத்தும் தாக்குதல்களைப் பற்றி "தற்காப்பு" செயல் எனக் கூறுவதும் உள்ளது;
ஆக்கிரமிப்பாளர்களையும், ஆக்கிரமிப்பு செய்பவர்களையும் சமமாக நடத்துதல், திறனற்ற உள்ளூர்தயாரிப்பு ராக்கெடுக்களை
அமெரிக்கா அளிக்கும் F-16
Hellfire
ஏவுகணைகள் மற்றும் "வழிகாட்டல் முலம் நேர்த்தியாக தாக்கும் குண்டுகளுடன்" ஒப்பிடுவதும் அப்படித்தான் உள்ளது.
ஆனால் அறநெறிச் சீற்றம் மற்றும் இஸ்ரேலை கண்டிப்பது என்பது மட்டும் காசாவில்
நடக்கும் கொடூரங்களுக்கு தக்க விடையாகாது. எல்லாவற்றிற்கும் மேலாகத் தேவைப்படுவது ஒரு அரசியல்
முன்னோக்கு ஆகும்.
இப்பொழுது தாக்கப்படுபவர்களில் பெரும்பாலனவர்கள் 1967ம் ஆண்டுப்
போரின்போது இஸ்ரேலின் விரிவாக்கப் போரை அடுத்து தங்கள் வீடுகளில் இருந்து விரட்டப்பட்டு வன்முறைக்கு உள்ளான
அகதிகளின் குழந்தைகள் ஆவர். இப்பொழுது போல் அப்பொழுதும் பாலஸ்த்தீனியர்களின் நிலை உலக அரசாங்கங்களால்
பெரிதும் புறக்கணிக்கப்பட்டது; அவர்களுக்காக பேசுகிறோம் என்று கூறிய அரபு முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளும்
அவர்களுடைய நலன்களைக் காட்டிக் கொடுத்தன.
கடந்த மூன்று நாட்களாக காசாவில் கொடூரமான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு
இருக்கையில் தற்போதைய அரபு முதலாளித்துவ அரசாங்கங்கள் பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலுக்கு நேரடி
உடந்தையாக செயல்படுகின்றன அல்லது தங்கள் மறைமுகமான அரசியல் ஆதரவைக் கொடுக்கின்றன என்பது
தெளிவாகியிருக்கிறது.
அமெரிக்க ஆதரவைக் கொண்ட போலீஸ் அரச ஆட்சியான எகிப்தின் ஹொஸ்னி
முபாரக்கின் ஆட்சிதான் மிக அதிகமான குற்றம் வாய்ந்த பங்கைக் கொண்டுள்ளது. இஸ்ரேலுடன் ஒத்துழைக்கும்
விதத்தில் காசா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை சுமத்தும் விதத்தில் எகிப்திற்கும் காசாவிற்கும்
இடையே இருக்கும்
ராபா போக்குவரத்து வழியை மூடிவிட்டது. குண்டுவீச்சு நடக்கத்
தொடங்கியவுடன் பீதியுற்ற பாலஸ்தீனியர்கள் எகிப்திய எல்லை வழியை தற்காத்துக்கொள்ள தப்பியோடி வருகையில்
எகிப்திய இயந்திரத் துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டனர்.
வேண்டுமென்றே ஹமாஸ் தலைமையை ஏமாற்றும் விதத்தில் குண்டுத்தாக்குதல்
தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்னதாக இஸ்ரேல் அத்தகைய தாக்குதலை நடத்தும் திட்டத்தைக்
கொண்டிருக்கவில்லை என்று கெய்ரோ ஆட்சி கூறியதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த எகிப்திய உத்தரவாதம்தான்
கட்டிடங்கள் காலி செய்யப்படாமல் போனதற்குக் காரணம் என்றும் அதையொட்டித்தான் இறந்தவர்கள்,
காயமுற்றவர்கள் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது என்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
லண்டனை தளமாகக் கொண்ட
al-Quds al Arabi
என்னும் செய்தித்தாள் எகிப்திய உளவுத்துறை மந்திரி ஒமர் சுலைமான் இஸ்ரேல் இத்தகைய தாக்குதலை காசாமீது
நடத்தத் திட்டமிட்டுள்ளதாக பல அரபுத் தலைவர்களிடம் எச்சரித்திருந்தார் என்று அரபு தூதர் ஒருவரை
மேற்கோளிட்டுக் கூறியுள்ளது.
எகிப்தின் வெளிநாட்டு மந்திரி அஹ்மத் அபுல் கீட் சனிக்கிழமை அன்று ஒரு
செய்தியாளர் கூட்டத்தில் காசாவிற்கு எதிரான வன்முறைக்கு ஹமஸ்தான் காரணம் என்று கூறினார். "நீண்ட
காலமாகவே எகிப்து இது பற்றி எச்சரித்துள்ளது; இத்தகைய எச்சரிக்கைகளை புறக்கணிப்பவர்கள்தான் இந்த
விளைவிற்கு பொறுப்பு ஆவார்கள்" என்று அவர் கூறினார்.
செளதி முடியாட்சிக்கு நெருக்கமாக இருக்கும் செய்தித்தாள்கள் இஸ்ரேலிய
தாக்குதலை வரவேற்று இவை மத்திய கிழக்கில் இருக்கும் "ஈரானின் முகவர்கள்" மீதான தாக்குதல் என்று விவரித்துள்ளன.
ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலைமையில், ரமல்லாவில் இருக்கும் பாலஸ்தீனிய
அதிகாரத்தின் பிரதிநிதிகள், இஸ்ரேலிய செய்தி ஊடகத்திடம் காசாவில் நடைபெறும் படுகொலையை தாங்கள்
அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு என்று பார்ப்பதாகக் கூறினர்; சியோனிச நடைமுறையிடம்,
ஹமாஸ் நிர்வாகத்தை அதிக சக்தி வாய்ந்த குண்டுகள் மூலம் அகற்றுவதில் இஸ்ரேல் வெற்றியடைந்தால் தாங்கள்
அங்கு செல்லத் தயாராக இருப்பதாகவும் கூறினர்.
இத்தாக்குதல்களை சம்பிரதாயமாக கண்டித்த ஆட்சிகள்கூட மற்றும் மற்ற அரபு
அரசாங்கங்களை இதற்கு உடந்தை என்று குறை கூறியவையும்கூட --ஈரான், லிபியா போன்றவை-- தங்கள்
வட்டார, முதலாளித்துவ அரசியல் நலன்களை முன்னேற்றுவிப்பதற்குத்தான் அவ்வாறு செய்துள்ளன.
அரபு ஆட்சிகள் முழுவதின் எதிர்வினைகளின் அடையாளம் போல், புதன்வரை அரபுக்
குழுவின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஒத்திப் போடப்பட்டுள்ளது; இது இஸ்ரேலுக்கு, மற்றொரு வலுவற்ற
பிரகடனத்தை எதிர்கொள்ளுமுன், ஐந்து முழு நாட்கள் அவகாசத்தை அளிக்கிறது.
அதன் தலைவர்களை படுகொலை செய்தலுக்கு எதிராக ஹமாஸை காத்தல், மற்றும்
அதன் ஆதரவாளர்களை "பயங்கரவாதிகள்" என்று முடிவில்லாமல் சிவிலிய மக்கள்மீது அரச பயங்கரவாதம் நடத்திக்
கொண்டிருப்பவர்கள் தூற்றிக் கொண்டிருப்பது நடைபெறுகையில், இந்த இஸ்லாமிய இயக்கம் அமெரிக்க இஸ்ரேலிய
தாக்குதலை எதிர்கொாண்டு தோற்கடிக்க உண்மையான முன்னோக்கைக் கொண்டிருக்கவில்லை.
தெற்கு இஸ்ரேலில் ஏவுகணைகள் செலுத்துவது பொருளாதாரத் தடைகளை
அகற்றுவதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்த இஸ்ரேலை நம்பவைப்பதை நோக்கமாகக் கொண்டது ஆகும்; அதே
போல் "தியாகிகள் நடவடிக்கைகள்" என்ற முறை புதுப்பிக்கப்பட்டு இளமையான பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய
விடுதிகள் பஸ்கள் ஆகியவற்வறைத் தகர்க்க தற்கொலைப்படையாக அனுப்புவது ஆகியவை சியோனிச ஆட்சிக்கு
அழுத்தம் கொடுக்கும் தன்மையைக் கொண்டது ஆகும்.
அரபு நாடுகளில் தேசியவாதம், இஸ்லாமியவாதம் இவற்றின் மேலாதிக்கத்தினால்
சியோனிச ஆட்சியை விட அதிக ஆதாயத்தை எவரும் பெற்றிடவில்லை. தற்போதைய பெரும் சரிவில் இருந்து
வெளியே வருவதற்கு தேசியப் பாதை எதுவும் கிடையாது.
மற்றொரு சிறு தேசிய அரசை இப்பகுதியில் தோற்றுவிப்பது பல தசாப்தங்களாக
நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாலஸ்தீனியர்களை அகற்றும் செயலுக்கு தீர்வு ஆகாது. இஸ்ரேலிய குடியிருப்புக்கள்,
பாதுகாப்புச் சாலைகள் அமைத்தது, சோதனைச் சாவடிகள், சுவர்களை எழுப்பியது ஆகியவை மூலம் மேற்குக்
கரை மற்றும் காசா பிரிவினை செய்து கொடுத்தது, அத்தகைய நிலப்பகுதி
Bantusta
மாதிரி சிறையைத்தான் பிரதிபலிக்கும், அங்கு ஒரு பாலஸ்தீன முதலாளித்துவ தேசிய ஆட்சிதான் காவலாக இருக்கும்
என்பதை தெளிவாக்கியுள்ளது.
இஸ்ரேலிய அதிகாரிகள் அத்தகைய அரக்கத்தனமான நிலையைத் தோற்றுவிப்பதற்கு
ஒரு வழிவகையாகத்தான் "சமாதான வழிவகையை" காண்கிறார்கள்; இது "இரு அரசுகள் கொண்ட தீர்வு" என்று
கூறப்படுகிறது; இதையொட்டி இஸ்ரேலில் உள்ள ஒரு மில்லியன் அரபு மக்களை வெளியேற்றுவதற்கான அரசியல்
அஸ்திவாரம் போடப்படுகிறது; இது இனவழி முறையில் மிகப் பெரிய துடைத்தழித்தலை செயற்படுத்தும்.
இத்தகைய வெறித்தனமான முன்னோக்கு, காசா மீதான தாக்குதல் போலவே,
சியோனிசத்தின் நெருக்கடி மற்றும் அரசியல் திவால்தன்மையின் வெளிப்பாடு ஆகும். இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும்
அங்குள்ள முக்கிய கட்சிகள் இராணுவக் குழுவிற்கு தாழ்ந்து நிற்பவை ஆகும். இந்த ஆட்சி ஒரு பொறுப்பற்ற
இராணுவச் செயலில் இருந்து அடுத்த பொறுப்பற்ற செயலுக்கு தாவுகிறது. லெபனானில் இருந்து காசாவிற்கு, அதன்
பின் ஈரானையும் அச்சுறுத்தி தடுமாறுகிறது; இதையொட்டி இஸ்ரேலின் பெரும்பாலான மக்களுக்கும் பீதி
கொடுப்பதுடன் மனத்தளர்ச்சியை அளிக்கும் அதேவேளை சிவிலிய மக்கள்மீது அழிவையும் சுமத்துகிறது.
தன்னுடைய அதிகாரத்தை அச்சம், நாட்டுவெறி இவற்றை இடைவிடாமல் வளர்ப்பதின்
மூலம் தக்க வைத்துக்கொள்ள அரசாங்கம் முற்படுகையில், பல இஸ்ரேலியர்கள் வன்முறை வெளிப்பாட்டை,
வெறுப்புடன் காண்பதுடன் இது புதிய பேரழிவுகளுக்கு வகை செய்யும் என்றும் உணர்கின்றனர்.
இறுதியில், இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஆக்கிரோஷமான இராணுவவாதம், சியோனிச
கொள்கையின் வெளிப்பாடு என்பது மட்டும் இல்லாமல், இஸ்ரேலிய சமூகத்தில் நீண்ட காலமாக இருக்கும் சமூக,
அரசியல் மற்றும் வர்க்க வெடிப்புக்களின் வெளிப்பாடும் ஆகும். பரந்த சமூக சமத்துவமற்ற தன்மையைக்
கொண்டுள்ள ஒரு சமுதாயத்தில், பிரதம மந்திரி எகுட் ஒல்மெர்ட் என்னும் தனிநபரின் கீழ் இருக்கும் ஆட்சி --நிதிய
மற்றும் அரசியல் ஊழலுக்காக குற்றம் சார்ந்த பெரிய விசாரணையில் இருந்து மயிரிழையில் தப்பிய நபர்-- என்பது
முழு சியோனிச நடைமுறையின் சிதைவைத்தான் வெளிப்படுத்துகிறது.
நன்கு புலப்படுத்தும் தன்மையை கொண்டுள்ள வர்ணனை ஒன்றில் ஒல்மெர்ட்டின் செய்தித்
தொடர்பாளர் Mark Regev
காசாவில் முதல் சுற்று குண்டுவீச்சுக்களை தொடர்ந்து நடைபெற்ற அரசாங்க கூட்டத்தில் கூறினார்: "இன்று
மந்திரிசபை அறையில் ஒரு புது சக்தி இருந்தது; நீண்ட காலம் பொறுமையை காட்டியபின் இறுதியில் நாம்
செயல்பட தொடங்கிவிட்டோம் என்று." நிரபராதிகள் பலரை வான்வழி குண்டுவீச்சின் மூலம் படுகொலை செய்வது
என்பதுதான் இவர்களுடைய புதுப்பிக்கப்பட்ட அரசியல் "சக்தி" போலும்; இது இந்த ஆட்சியின் தன்மை பற்றி
நிறைய எடுத்துக் கூறுகிறது.
சியோனிசத்திற்கு எதிரான உண்மையான போராட்டம் என்பது அரபு, யூத
தொழிலாளர்களை அவர்களின் வர்க்க நலன்களின் அடிப்படைகளில் ஒன்றிணைக்கும், தேசிய எல்லைகளை கடந்த ஒரு
வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே கருக்கொள்ள முடியும். அரபு மற்றும் இஸ்ரேலிய
தொழிலாளர்களை சுயாதீனமாக மற்றும் ஐக்கியப்படுத்தப்பட்ட வகையில் அணிதிரட்ட முற்படும் வர்க்க
முன்னோக்கிற்கு வெளியே மத்திய கிழக்கில் சியோனிசம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு மரண அடி கொடுக்கக்கூடிய
உண்மையான வழிவகை ஏதும் கிடையாது.
கெய்ரோவில் இருந்து பாக்தாத் வரை காசாவிற்கு ஆதரவாக வெடித்தெழுந்துள்ள
ஆர்ப்பாட்டங்களின் ஆதரவு இஸ்ரேலுக்கு மட்டும் எதிராக இயக்கப்படவில்லை; அழுகிப்போன அரபு ஆட்சிகளுக்கு
எதிராகவும் வெடித்துள்ளன; இந்த ஆட்சிகள் இஸ்ரேலின் மிக நம்பிக்கைக்கு உரிய நட்பு ஆட்சிகளாக உள்ளன. சமீபத்திய
நடவடிக்கைகளுக்கு மக்கள் இயக்கம் வெறுமனே ஒரு எதிர்விளைவு அல்ல, மாறாக மத்திய கிழக்கில் மற்றும் அதே
போல் ஐரோப்பா, அமெரிக்க மற்றும் உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கம் உலக முதலாளித்துவத்தின் ஆற்றொணா
நெருக்கடியால் உந்தித்தள்ளப்படும் பெருகிய முறையிலான தீவிரமடைதலின் ஒரு பகுதியே ஆகும்.
பாலஸ்தீனிய மக்கள், இஸ்ரேலிய
F-16 களுக்கும்
Apache
ஹெலிகாப்டர்களுக்கும் எதிராக காசாவில் காட்டும் தீரம் ஒரு புறம்
இருந்தாலும், சியோனிச ஆட்சிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் அதன் வலுக்குறைந்த பாதிப்பிடம் வர்க்கப்
போராட்டத்தை தீவிரப்படுத்தப்படுத்தலும், எகிப்து, பிற அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேலிலேயும் சோசலிசப்
புரட்சிக்கான வாய்ப்பு வளமும்தான்.
ஒரு உண்மையான புரட்கர மாற்றீடு என்பது லியோன் ட்ரொட்ஸ்கியால்
வளர்த்தெடுக்கப்பட்ட நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் கட்டியமைக்கப்பட முடியும்.
ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஒடுக்கப்பட்ட நாடுகளில் அடிப்படை ஜனநாயக மற்றும் தேசியப் பணிகள் - முந்தைய
வரலாற்றுக் காலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் தோற்றத்துடன் தொடர்பு கொண்ட பணிகள்--ஒரு சோசலிச,
சர்வதேச முன்னோக்கில் செயல்படும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன மற்றும் அரசியல் அணிதிரளல் மூலம்
மட்டுமே அடையப்படமுடியும் என்று ட்ரொட்ஸ்கி நிறுவியுள்ளார்.
இப்பகுதியில் கடுமையான பூசல்கள் மற்றும் அரசியல் சோகத்திற்கு மையமாக
இருக்கும் பாலஸ்தீனிய பிரச்சினை, இறுதிப் பகுப்பாய்வில் தவிர்க்க முடியாமல் மத்திய கிழக்கிலும் சர்வதேச
அளவிலும் சோசலிச புரட்சியின் விதியுடன்தான் பிணைந்துள்ளது. காசாவில் விரிவடையும் நிகழ்வுகள், இன்னும்
அவசரமான முறையில் உலகளவில் முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டத்தின் ஒரு
பகுதியாக, மத்திய கிழக்கில் ஒரு சோசலிச கூட்டமைப்பிற்காக போராடுவதில் அரபு மற்றும் யூத தொழிலாள
வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் மாபெரும் அவசியத்தை முன்வைக்கின்றன. |