World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka's independence anniversary: the emergence of a military/police state

இலங்கை சுதந்திர தின கொண்டாட்டம்: இராணுவ/பொலிஸ் அரசின் வெளிப்பாடு

By Peter Symonds
4 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ இந்தவாரம் கொழும்பில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் இராஜதந்திரிகளுக்கும் எதிராக விடுத்த வெளிப்படையான அச்சுறுத்தல், தீவில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை மீண்டும் மெய்சிலிர்க்கும் வகையில் நினைவூட்டுவதாகும். அரசாங்கம் "பயங்கரவாதத்திற்கு எதிராக" யுத்தம் நடத்தும் சாக்கில், எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட இராணுவ/பொலிஸ் அரசுக்கான அடித்தளங்களை துரிதமாக ஸ்தாபித்துவருகின்றது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரரான இராஜபக்ஷ, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் கொடூரமான யுத்தம் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடுவது தொடர்பாகவே பிரதிபலிக்கின்றார். இராணுவத்தின் கண்மூடித்தனமான ஷெல் வீச்சுக்காளால் ஏற்படுத்தப்படும் சாவுகள் மற்றும் அழிவுகள் பற்றிய செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களும், அரசாங்கத்தின் இறுக்கமான ஊடகக் கட்டுப்பாடுகளின் ஊடாக கசிந்துள்ளமை, சர்வதேச ரீதியில் எதிர்ப்புக்களையும் கண்டனங்களையும் தூண்டிவிட்டுள்ளது.

இராஜபக்ஷவை பொறுத்தளவில், இனவாத யுத்தத்தை நியாயப்படுத்த புனையப்படும் பொய் வலையமைப்புக்கு அச்சுறுத்தாலகும் எதுவும் நாசவேலைக்கும் துரோகத்துக்கும் சமனாகும். வாரக் கடைசியில் கருத்துத் தெரிவித்த கருத்துக்களில், வெளிநாட்டு தூதுவர்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் பொறுப்பின்றி செயற்படுவதாக திட்டியதோடு, யுத்தத்தை கீழறுத்தால் "பயங்கரமான விளைவுகளை" சந்திக்க வேண்டுமென எச்சரித்தார். "அவர்கள், பாதுகாப்பு படைகள் கனமான செலவில் புலிகளுக்கு கடைசி மரண அடி கொடுத்துக்கொண்டிருக்கும் போது, புலி பயங்கரவாதிகள் மூச்சுவிட உதவ முயன்றால் விரட்டியடிக்கப்படுவராகள்" என அவர் கூறினார்.

சி.என்.என்., அல் ஜஸீரா மற்றும் விசேடமாக பி.பி.சி தொடர்பாக சமிக்ஞை செய்த இராஜபக்ஷ, மோதலில் சிக்கியுள்ள பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றி உணர்ச்சிகளை தூண்டுவதாக அவர்களைக் குற்றஞ்சாட்டினார். மக்களை அவர்களது விருப்புக்கு மாறாக மனிதக் கேடயங்களாக புலிகள் வைத்திருக்கின்றனர் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டை வலியுறுத்திய அவர், அவர்களை விடுவிக்க புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என "சர்வதேச சமூகத்தைக்" கோரினார். அரசாங்கத்தின் வழியில் வரத் தவறியதாக பி.பி.சி. செய்தியாளர் கிறிஸ் மொரிஸ்ஸை விமர்சித்த அவர், "அவர் பொறுப்புடன் செயற்படாமல் பீதியை உருவாக்க முயற்சித்தால் நான் அவரை நாட்டை விட்டு விரட்டத் தள்ளப்படுவேன்" என எச்சரித்தார்.

இந்த வாரம் பி.பி.சி.க்கு பேட்டி வழங்கிய இராஜபக்ஷ, மக்கள் "பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுபவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் என்ற இரண்டு குழுக்களுக்குள்" அடங்குகிறார்கள் என உறுதியாக பிரகடனம் செய்தார். யுத்த காலம் பற்றிய கருத்து வேறுபாடுகள் அல்லது விமர்சனங்களை தேசத் துரோகமாக கருதுகிறாரா என கேட்ட போது, இராஜபக்ஷ திருப்பிச் சீறினார்: "ஆம், நாங்கள் எங்களது நாட்டை பாதுகாக்க போராடுகிறோம்." அரசாங்கத்தின் மீதான அவர்களது விமர்சனம் எந்தளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஓரங்கட்டிவிட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள், எதிர்ப்பு அரசியல்வாதிகள், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் தொடர்பான அர்சாங்கத்தின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் கண்டனங்களின் பின்னணியில் உள்ள எதிர்ப்போக்கு விளக்கத்தை இந்தக் கருத்துக்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

இலங்கை மோதல்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான ஜனநாயகத்துக்கான யுத்தம் அல்ல. தொழிலாள வர்க்கத்தை பிரித்து பிளவுபடுத்துவதற்காக கொழும்பில் ஆட்சியில் இருந்த அர்சாங்கங்களால் சுரண்டிக்கொள்ளப்பட்ட தமிழர் விரோத இனவாதத்திலேயே அது வேரூண்றியுளளது. 2006 முற்பகுதியில் ஆட்சிக்கு வந்த பின்னர், எந்தவொரு சமரசத்தையும் நிராகரித்த ஜனாதிபதி இராஜபக்ஷ, 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை படுமோசமாக மீறியதோடு, தீவின் சிங்கள தட்டுக்களின் இடையூறற்ற செல்வாக்கை பலப்படுத்துவதை இலக்காகக் கொண்ட இரக்கமற்ற யுத்தத்தை அமெரிக்கா மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளின் ஆதரவுடன் மீண்டும் தொடங்கினார்.

வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அவரது சகோதரரின் நுண்ணுணர்வான பதிலிறுப்புக்கள், புலிகள் மீதான இராணுவ வெற்றிக்குப் பின்னால் ஒரு அரசியல் அமைதியின்மை மற்றும் சமூகப் போராட்டங்களின் அலையொன்று வீசும் என்ற பீதி கொழும்பு ஆளும் வட்டாரத்துக்குள் பரந்தளவில் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. அரசாங்கம் பிரமாண்டமான இராணுவச் செலவுக்காக இலங்கை அரசை முற்றிலும் அடகுவைத்துள்ளதோடு யுத்தத்தின் முழுச் சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தியுள்ளது. இப்போது, தன்னால் பதிலளிக்க முடியாத, முன்னெப்போதுமில்லாத பூகோள பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ள அரசாங்கத்திடம், குறிப்பாக தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கு பொலிஸ் அரச வழிமுறைகளை பயன்படுத்துவதைத் தவிர வேறு மீற்றீடு கிடையாது.

வெளிநாட்டு பத்திரிகையாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும் தொண்டு நிறுவன அதிகாரிகளை வெளியேற்றுவதற்கான அச்சுறுத்தல்கள், உள்நாட்டில் உள்ள விமர்சகர்கள் மற்றும் எதிரிகளுக்கு எதிராக கையாளப்படும் நடைமுறைகளின் ஒரு மங்கலான வெளிப்பாடு மட்டுமே. குறிப்பாக ஊடகமே இலக்குவைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், எம்.டி.வி./சிரச தொலைக்காட்சி நிலையத்தின் ஸ்டீடியோ மற்றும் அலுவலகங்களும் ஆயுதம் தரித்த அர்சாங்க சார்பு குண்டர் கும்பலால் நாசமாக்கப்பட்டு தீ மூட்டப்பட்டது. இரண்டு நாட்களின் பின்னர், சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசன்த விக்கிரமதுங்க, கொழும்பில் வாகனத்தில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த போது உயர்ந்த மட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள தாக்குதல் படையால் பட்டப் பகலில் கொல்லப்பட்டார். ஜனாதிபதி இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததில் இருந்து, குறைந்தபட்சம் ஒன்பது பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 27 பேர் தாக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் விசாரணையின்றி எதேச்சதிகாரமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விக்கிரமதுங்க கொலைசெய்யப்பட்ட பின்னர், டசின்கணக்கான பிரசித்திபெற்ற பத்திரிகையாளர்களும் ஊடக செயற்பாட்டாளர்களும் நாட்டை விட்டு பறந்துள்ளனர்.

ஒட்டு மொத்த தமிழ் சிறுபான்மையினரும் அரசாங்கத்தாலும் பாதுகாப்பு படையினராலும் எதிரிகளாக நடத்தப்படுகின்றனர். அடக்குமுறைகள், தொந்தரவுகள் மற்றும் எதேச்சதிகாரமான கைதுகளும் அன்றாட வாழ்க்கையின் பாகங்களாகும். நாடு முழுவதும் பொலிஸ் மற்றும் இராணுவ வீதித் தடைகள் மற்றும் சோதனைச்சாவடிகளின் வலையமைப்பு ஒன்று இயங்கிவருகின்றது. பெரும் நகரங்களில் உள்ள தமிழர் பிரதேசங்கள் மற்றும் நகரங்களிலும் பொலிஸ் தேடுதல் வேட்டை சகஜமானது. 2007 நடுப்பகுதியில் நடந்த ஒரு குறிப்பிடத்தக்க அச்சமூட்டும் சம்பவமொன்றில், 350க்கும் மேற்பட்ட கொழும்பில் வாழ்ந்துவந்த தமிழ் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களையும் சுற்றிவளைத்த பொலிசும் இராணுவமும், அவர்களை பஸ்களில் ஏற்றி வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தப் பிரதேசத்தில் கொட்டிவிட்டு வந்தனர். "தேசிய பாதுகாப்பு" என்ற அடிப்படையில் இந்த வெளிப்படையான ஜனநாயக உரிமை துஷ்பிரயோகத்தை பாதுகாத்த கோடாபய இராஜபக்ஷ, அவ்வாறு கொண்டுசெல்லப்பட்டவர்கள் விசாரணையின்றி காலவரையறை இன்றி சிறைவைக்கப்படாத காரணத்தால், அது மிகவும் மனிதாபிமானது எனவும் கூட தெரிவித்தார்.

கடந்த 30 மாதங்களாக, முன்னணி அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை கடத்திச் செல்லல், "காணாமல் ஆக்குதல்" மற்றும் கொலைசெய்வதை முன்னெடுக்கும் கொலைப் படைகளின் பயங்கரமான செயற்பாடுகள் மிகவும் கொடியதாகும். மிகவும் குறைந்தபட்சத்திலேனும் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடனேயே இத்தகைய கொலைகள் செய்யப்படுவதோடு இராணுவ அலுவலர்கள் இதில் நடைமுறையில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வீதித் தடைகளும் அடையாள அட்டை பரிசோதனைகளும் வழமையாக இருக்கின்ற ஒரு நாட்டில், இந்த கொலைப் படைகளால் வழமையாக நடு இரவில் சுதந்திரமாக வந்து போக முடிகின்றது. ஒரு சில சம்பவங்களில் மட்டுமே கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தகைய வெளிப்படையான துஷ்பிரயோகங்கள் சாதாரணமான தனிமைப்பட்ட எடுத்துக்காட்டுகள் அல்ல, மாறாக, 25 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தாலும் முழு சமுதாயத்தையும் இராணுவ மயமாக்குவதாலும் கருவூட்டப்பட்ட பிரமாண்டமான இராணுவ/பொலிஸ் இயந்திரத்தின் செயற்பாடுகளையே இவை வெளிப்படுத்துகின்றன. கடந்த மாதம், தறைபோதைய தேசிய அடையாள அட்டை முறைக்கும் மேலாக, சகல பிரஜைகளதும் பரந்த தகவல் தளமொன்றை பாதுகாப்பு இயந்திரத்துக்கு வழங்கும் வகையில், இராணுவ பதிவு முறையொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான இராணுவத் தாக்குதலால் புலிகள் ஏறத்தாழ அழிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் ஏற்கனவே உலகில் பிரமாண்டமானவற்றில் ஒன்றான, இராணுவத்தின் அளவை 150,000 முதல் 200,000 வரை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிடுகின்றது. இதற்கு மேலாக, கடற்படை மற்றும் விமானப் படை ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 30,000 சிப்பாய்களைக் கொண்டுள்ளதோடு ஊர்காவற்படைக்கு 35,000 உறுப்பினர்கள் உள்ளனர். இவை அணைத்தும் சுமார் 20 மில்லியன் ஜனத்தொகையைக் கொண்ட நாட்டில் உள்ளன.

பொலிஸ் அரசு வெளிப்படுவதற்கான மிகவும் சகுனம் மிக்க அறிகுறிகளை, தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் முகத்தோற்றத்தில் காணவேண்டும். இந்த அரசாங்கத்தின் ஜனநாயக உரிமை மீறல்கள் இலங்கையின் தரத்தின்படி கூட சமாந்தரப்படுத்த முடியாது. கொழும்பில் உள்ள அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனங்களும் "ஜனநாயக" நாடு என விபரிப்பதை வழமையாகக் கொண்டிருந்தாலும், பாராளுமன்ற அமைப்பு மிக ஆழ்ந்த சீரழிவுக்குள் சென்றுகொண்டிருக்கின்றது. பிரதான அரசியல் முடிவுகள் பாராளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவையிலோ எடுக்கப்படுவதில்லை. மாறாக, தனது சகோதரர்கள், விசுவாசமான உதவியாளர்கள், ஒரு சில அமைச்சர்கள் மற்றும் நாட்டின் இராணுவ மற்றும் பொலிஸ் தளபதிகளோடு வரையறுக்கப்பட்டுள்ள, ஜனாதிபதி இராஜபக்ஷவைச் சூழவுள்ள ஒரு இராணுவ/அரசியல் குழுவினாலேயே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

தேர்தலில் தெரிவுசெய்யப்படாத ஒரு அதிகாரியான கோடாபய இராஜபக்ஷவால், ஊடகங்கள் மற்றும் எதிர்க் கட்சிகளின் சவாலின்றி இராஜதந்திரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக மூர்க்கமான அச்சுறுத்தல் விடுக்க முடிகின்றது என்ற உண்மை, எண்ணற்ற அதிகாரங்களை ஜனாதிபதியை சூழவுள்ள குழுவின் கைகளில் ஒருமுகப்படுத்தப்பட்டு வருவதை எடுத்துக் காட்டுகின்றது. அவரது சகோதரர் ஜனாதிபதி இராஜபக்ஷ, நாட்டின் ஜனநயாக விரோத அரசியலமைப்பில் உள்ளடங்கியுள்ள அசாதாரணமான நிறைவேற்று அதிகராங்களை முழுமையாக சுரண்டிக்கொள்கின்றார். அவர் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் பதவிகளை தன் வசம் வைத்துள்ளதோடு மேலும் மேலும் அதிகாரக் கட்டளைகளின் மூலம் ஆட்சி செய்கின்றார். அதற்கும் மேலாக, நபர்களை தடுத்துவைக்க, கட்டிடங்களை சோதனையிட, சொத்துக்களை அபகரிக்க, வேலைநிறுத்தங்களை தடை செய்ய மற்றும் தணிக்கைகளை திணிக்க நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டுவரும் அவசரகாலச் சட்டம் மற்றும் தீவின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு மிகப் பரந்த அதிகாரங்கள் உள்ளன.

ஜனாதிபதி இராஜபக்ஷவும் தங்களிடையே பொதுவான நலன்கள் உள்ள அவரது தனிக் குழுவும் சட்டம், அரசியலமைப்பு மற்றும் நீதிமன்றத்தை முழுமையாக அலட்சியம் செய்தே இயங்குகின்றன. அரசியலமைப்புச் சபை மற்றும் ஏனைய சபைகளும், தனக்கு நெருக்கமானவர்களுடனான வலையமைப்பின் இயக்கத்தை கீழறுக்கக் கூடியவை என்பதால், உயர் அதிகரிகள் மற்றும் நீதிபதிகளின் நியமனத்தை மேற்பார்வை செய்யும் அத்தகைய சபைகளை ஸ்தாபிக்க கோரும் அரசியலமைப்பு திருத்தத்தின்படி அவர் செயற்படத் தவறிவிட்டார். அவர் பெற்றோல் விலைகளை குறைக்குமாறு டிசம்பரில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரித்தது மட்டுமன்றி, நீதிபதிகளின் வீடுகளுக்கு கல்லடி விழலாம் என மூடிமறைத்த அச்சுறுத்தலொன்றையும் விடுத்தார். பொலிஸ் அரசு மேடைக்கான சகல பலகைகளும் தயாராக உள்ளன. கிடைக்காமல் இருப்பது சாக்குப் போக்கு மட்டுமே. புலிகளின் இராணுவத் திறனை அழிப்பதுடன் சேர்த்து, துரிதமாக ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் புதிய சுமைகளை திணிப்பதிற்கு எதிராக உழைக்கும் மக்களின் எழுச்சியின் மூலம் உருவாக்கப்படும் "அவசரகால நிலை" என்ற உருவத்தில் அத்தகைய சாக்குப் போக்கு வரக்கூடும்.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற 61வது ஆண்டை 4 பெப்பிரவரி 2009ல் கொண்டாடும் கொழும்பில் உள்ள அரசியல் ஸ்தாபனத்தின் செயற்பாட்டின் பண்பு இதுவேயாகும். முதலாளித்துவ அபிவிருத்தி இடம்பெற்றிராத இலங்கை போன்ற நாடுகளில் உள்ள முதலாளித்துவம், சாதாரண உழைக்கும் மக்களின் ஜனநாயக அபிலாஷைகள் மற்றும் இன்றியமையாத சமூகத் தேவைகளை இட்டு நிரப்ப இயல்பாகவே இலாயக்கற்றது, என்ற லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக கோட்பாட்டின் அடிப்படை கூற்றை இந்த தசாப்தங்களின் முழு வரலாறும் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தில்" அரசாங்கத்தின் வெற்றி பற்றி இன்று உரத்துக் கூவுகின்ற ஜனாதிபதி இராஜபக்ஷ, மோசடித்தனம் நிறைந்த இலங்கை ஆளும் தட்டின் நலன்களைப் பாதுகாப்பதன் பேரில், இம்முறை சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களுக்கு எதிராக புதிய தாக்குதலை முன்னெடுக்க வலுவாக நின்றுகொண்டுள்ளார்.

இந்த உண்மையான ஆபத்து, இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்துள்ள போராட்டத்தின் அறிவாழமிக்க முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமாக ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே, அது புலிகளின் தமிழ் பிரிவினைவாதம் உட்பட சகலவிதமான தேசியவாதம் மற்றும் இனவாதத்தை எதிர்ததோடு யுத்தம், பரந்தளவிலான ஜனநாயக உரிமை மீறல்கள் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக அனைத்து தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்த நெருக்கடியான சூழ்நிலைகளிலும் போராடிவந்துள்ளது. தெற்காசியாவில் சோசலிச குடியரசு ஒன்றியங்களின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற அதன் வேலைத் திட்டம் மட்டுமே, இன மற்றும் வகுப்புவாத மோதல்களால் அடுத்தடுத்து அழிவை சந்தித்துவரும் துணைக்கண்டம் மற்றும் இலங்கையிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு ஒரே முன்னேற்றப் பாதையை காட்டுகிறது.