World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Indian government offers full support for Sri Lankan war

இந்திய அரசாங்கம் இலங்கைப் போருக்கு முழு ஆதரவு கொடுக்கிறது

By Arun Kumar
21 February 2009

Back to screen version

புதனன்று பாராளுமன்றத்திற்கு கொடுத்த அறிக்கை ஒன்றில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முக்கர்ஜி பிரிவினை கோரும் தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) நிபந்தனையற்று சரணடையுமாறு கேட்டுக் கொண்டதுடன், தீவின் வடக்கில் உள்ள போர்ப்பகுதியில் இருந்து தமிழ் குடிமக்களை அகற்றுவதற்கு உதவியளிக்கவும் தயார் என்றார்.

புதுதில்லி இப்படி இலங்கை அரசாங்கத்தின் வகுப்புவாத போருக்கு வெளிப்படையான ஆதரவு கொடுத்திருப்பது தீவின் வடக்குப் போர்ப்பகுதியில் பொறியில் அகப்பட்டுள்ள கிட்டத்தட்ட 250,000 தமிழ் குடிமக்களைப் பற்றிய அக்கறையினால் உந்துதல் பெறவில்லை. மாறாக இது LTTE யின் இராணுவத் தோல்வி தவிர்க்க முடியாதது என்ற கணக்கை தளமாகக் கொண்டுள்ளது; இந்திய அரசாங்கம் இலங்கையின்மீது தன்னுடைய பொருளாதார மற்றும் மூலோபாய நிலையை வலுப்படுத்திக்கொள்ளும் வகைகளில் முற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் முக்கர்ஜி கூறினார்: "[இலங்கையின் உள்நாட்டுப்போர்] பூசல் இராணுவ நடவடிக்கைளின் இறுதிக் கட்டம் என்பதில் நுழையும்போது தமிழர்களின் நலன்களுக்கு சிறந்து உதவும் வகையில் LTTE அப்பகுதியில் இருக்கும் அனைத்து சாதாரணக் குடிமக்களையும் விடுவிப்பதுடன் ஆயுதங்களையும் கைவிட்டுவிட வேண்டும்." "ஒரு பேச்சுவார்த்தைகள் மூலம் வரக்கூடிய உடன்பாட்டிற்கு" இந்தியா தொடர்ந்து ஆதரவு கொடுப்பதாகவும், ஆனால் LTTE "இந்தியாவில் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருந்து வருகிறது என்பதுடன் தமிழ் சமுதாயத்திற்கு அதிக நாசத்தையும் கொடுத்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

ஒரு நயமற்ற சீர்கேடான தன்மையை இந்தியா அங்கு செய்து கொண்டிருக்கிறது. இலங்கை அரசாங்கத்துடன் வெளிப்படையாக உடன்பாட்டை கொண்ட வகையில் புதுதில்லி, LTTE இன் தோல்வியை அடுத்து வரக்கூடிய பொருளாதார வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளவும் முயல்கிறது, அதே நேரத்தில் தன் போட்டி நாடுகளான பாக்கிஸ்தான், சீனா ஆகியவை தீவில் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ளுவதை தடுக்கவும் முற்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பிரதம மந்திரி மன்மோகன் சிங் தென் மாநிலமான தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் சீற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்; இந்தியாவின் 62 மில்லியன் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இங்குதான் வாழ்கின்றனர் சமீபத்திய வாரங்கள் மாநிலம் முழுவதும் வடக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மனிதநேய நெருக்கடி பற்றி எதிர்ப்புக்களை கண்டுள்ளது; அங்கு இலங்கையின் இராணுவ பீரங்கிப்படைத் தாக்குதல்கள் மற்றும் வான்வழி குண்டுவீச்சுக்கள் நூற்றுக்கணக்கான நிரபராதித் தமிழ் மக்களை கொன்று, ஆயிரக்கணக்கானவர்களை காயமுறவும் செய்துள்ளன.

இந்தியாவின் அளிப்பை, அகதிகள் நெருக்கடியை குறைப்பது பற்றியதை தெரிவிக்கும்போது முக்கர்ஜி கவனமாக சொல்லாட்சியை பயன்படுத்தினார்: "போர்ப்பகுதியில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் பொதுமக்களை அகற்ற உதவுவதற்கு, இலங்கை மற்றும் ICRC (சர்வதேச செஞ்சிலுவைக் குழு) ஆகியவற்றுடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது; அவை இவர்களின் பாதுகாப்பு, பரிசீலனை மறுவாழ்வு பற்றி பொறுப்பு ஏற்கும்" என்று அவர் கூறினார். இந்திய இராணுவத்தின் தொடர்பு உட்பட, அகற்றப்படுவது பற்றிய திட்டத்தின் விவரங்கள் கொடுக்கப்படவில்லை.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதாகும்; அகதிகளுக்கு உதவுவது அல்ல. போருக்கு நடுவே அகப்பட்டுக் கொண்டிருக்கும் குடிமக்களுடைய நிலை பற்றி சிறிதும் பொருட்படுத்தாத கொழும்பின் இரக்கமற்ற பொறுப்பற்ற தன்மை பற்றி சர்வதேச அளவில் இலங்கை குறைகூறப்பட்டுள்ளது; அதே போல் அகதிகள் மறுவாழ்வு பற்றிய அதன் திட்டங்களும் குறைகூறலுக்கு உட்பட்டுள்ளன. கிட்டத்தட்ட மூன்று ஆண்டு காலத்திற்கு 200,000 அகதிகள் கட்டாயமாக அடைத்து வைக்கப்படுவதற்காக "பொதுநல கிராமங்கள்" நிறுவப்படும் என்று அது அறிவித்துள்ளது.

கொழும்பின் திட்டங்களை சவாலுக்கு உட்படுத்தாமலும், சில அகதிகளுக்கு பொறுப்பு ஏற்பதாக கூறாத நிலையிலும், இந்திய அரசாங்கம் இலங்கையின் ஜனாதிபதி மகிந்தா இராஜபக்ஷவின் மீது உள்ள சர்வதேச அழுத்தங்களை சற்று குறித்துள்ளது. இலங்கையின் இராணுவச் செய்தித் தொடர்பாளர் கேஹெலிய ரம்புக்வெல்லா தன்னுடைய அரசாங்கம் இந்தியாவின் அளிப்பை வரவேற்பதகவும், "நாம் ஏற்கனவே நிறுவியுள்ள வடிவமைப்பிற்குள் இருக்குமேயானால் அத்தகைய வரவேற்பு" என்று வியப்பிற்கு இடமில்லாத வகையில் கூறியுள்ளார்.

அகதிகளுக்கு ஆதரவு கொடுப்பதாகக் கூறிய முக்கர்ஜியின் கருத்தும் தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு உயிர்ப்பு கொடுக்கும் வடிவமைப்பை கொண்டு; குறிப்பாக புது தில்லியின் ஆளும் கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் (DMK), பாட்டாளி மக்கள் கட்சி (PMK) போன்றவற்றிற்கு. இலங்கை போர் பற்றி பெருகிய மக்கள் சீற்றத்தை எழுச்சி கொண்ட இக்கட்சிகள் வலுவற்ற தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் கட்டாயத்திற்கு உள்ளாயின. DMK, PMK மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (MDMK) ஆகியவை இந்தியா தூதரக முறையில் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளன.

இலங்கையின் ஜனாதிபதி இராஜபக்ஷ தான் ஒரு "அரசியல் தீர்வை" தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையைக் காக்கும் வகையில் போருக்குப் பின்னர் செயல்படுத்த இருப்பதாக புது டெல்லிக்கு உறுதி மொழி கொடுத்துள்ளார். ஆனால், இராஜபக்ஷ ஆட்சியின் உண்மையான முகம் இடைவிடா இராணுவ மிரட்டல் மற்றும் ஒருதலைப்பட்ச காவல் நடவடிக்கைகள் ஆகியவற்றிலும், வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து, LTTE பகுதியில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் கைப்பற்றப்பட்டவர்கள் பற்றிய இறப்புக்கள், "மறைந்துவிடுதல்" என்பவற்றில்தான் தெரியவந்துள்ளது.

முக்கர்ஜியின் அறிக்கையை கொழும்பு அரசாங்கம் வரவேற்றுள்ளது. செய்தி ஊடகத்திற்கு கொடுத்துள்ள அறிக்கையில் புது டெல்லியில் இருக்கும் உயர் ஸ்தானிகர் இக்கருத்துக்களை "ஆக்கபூர்வமானவை" என்று விளக்கினார்; அவர் மேலும் கூறியது: "இருக்கும் நிலை பற்றி இது துல்லியமாக பிரதிபலிக்கிறது; சமாதானம், சமரசம் ஆகியவற்றிற்கு பாதையைக் காட்டுகிறது."

2006 நடுப்பகுதியில் இலங்கையை மீண்டும் போரில் இராஜபக்ஷ அரசாங்கம் ஆழ்த்தியபோது, புது தில்லி தமிழ்நாட்டிலுள்ள அரசியல் நிலைமையைக் கருத்தில் கொண்டு, எச்சரிக்கை நிறைந்த மறைமுக ஆதரவைக் கொடுத்தது. பகிரங்கமாக போர்நிறுத்தம் வேண்டும், "ஒரு அரசியல் தீர்வு வேண்டும்" என்று அழைப்புக் கொடுத்தாலும்கூட அது இராணுவ தளவாடங்களையும் பயிற்சியையும் கொடுத்து வந்தது. கடந்த ஜூலையில் இலங்கையில் இராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா செய்தியாளர்களிடம் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 800 இராணுவ அதிகாரிகளுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து வருவதாகவும், இந்தியாவின் ஆதரவு "மகத்தானது" என்றும் கூறினார்.

புதுதில்லி LTTE இன் தனி நாடு ஒன்றிற்கான போராட்டத்தை எதிர்த்தமை தமிழ்நாடு உட்பட இந்தியாவிற்குள் பிரிவினை இயக்கங்களுக்கு இது ஊக்கம் கொடுக்கும் திறன் கொண்டது என்பது ஓரளவு காரணம் ஆகும். LTTE தோல்வியைத் தழுவும் நிலை, இந்திய அரசாங்கத்தின் முக்கிய கவலை அதன் போட்டியாளர்களைவிட சாமர்த்தியமான தந்திரங்களைக் கொள்ளுவது என்று ஆயிற்று. தமிழ்நாட்டில் எதிர்ப்புக்களை தவிர்ப்பதற்காக குறைந்த பட்ச இராணுவ உதவியைக் கொடுக்கும் இந்தியா போல் அல்லாமல், சீனாவும் பாக்கிஸ்தானும் இலங்கைக்கு நிறைய இராணுவ தளவாடங்களை விற்றுள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் ஒரு பாராளுமன்ற அறிக்கையில் இந்தியாவின் கணிப்புக்களை முக்கர்ஜி விவரித்தார்: "இலங்கையுடன் நாம் விரிவான உறவைக் கொண்டிருக்கிறோம். சிவிலிய மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கவலையில், இந்தியாவின் நலன்களுக்கு தீவின் மூலோபாய முக்கியத்துவத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது... அதிலும் குறிப்பாக பாக்கிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தீவில் மூலோபாய கால்தடத்தைப் பதிய வைக்க முயலுகையில்... நம் கொல்லைப்புறத்தில் சர்வதேச சக்திகள் விளையாட நாம் அனுமதிக்கக்கூடாது".

பொருளாதார நலன்களும் பாதிப்பில் உள்ளன. கடந்த புதன் அறிக்கையில், முக்கர்ஜி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை போருக்குப் பின்னர் வளர்ப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது என்றார். அங்கு வாழும் தமிழர்களுக்கு உதவி செய்தல் என்ற போர்வையில், இந்தியா இராணுவ ஆக்கிரமிப்பு உள்ள பகுதிகளில் முதலீடு செய்யத் தயாராக உள்ளது. போரில் சாதாரண மக்கள் இறப்பு எண்ணிக்கை பற்றிய குறைகூறலினால், புது தில்லி முன்னதாக கிழக்கு திருகோணமலை பகுதியில் விசை ஆலை கட்டமைக்கும் இலங்கை அரசாங்கத் திட்டம் ஒன்றை நிராகரித்திருந்தது. சமீபத்திய தகவல்கள் இந்திய எண்ணெய் பெருநிறுவனமான ONGC இலங்கை கோருவதை செயல்படுத்தத் தயார் எனத் தெரிவிக்கின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved