World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காObama orders 17,000 more troops to Afghanistan ஒபாமா ஆப்èானிஸ்தானிற்கு 17,000 துருப்புக்களை கூடுதலாக அனுப்புகிறார் By Barry Grey19 February 2009 அமெரிக்கத் தலைமையில் ஆக்கிரமிப்பு நடந்துள்ள போரினால் சிதைந்துள்ள நாட்டிற்குப் போரை விரிவாக்குவதற்காக கூடுதலாக 17,000 துருப்புக்களை ஆப்கானிஸ்தானத்திற்கு அனுப்புமாறு ஜனாதிபதி பாரக் ஒபாமா செவ்வாயன்று உத்திரவிட்டுள்ளார். மத்திய ஆசியாவில் அமெரிக்க மூலோபாய நலன்களைக் காப்பதற்கு அவர்களுடைய மகன்களையும் மகள்களையும் கூடுதலான முறையில் கொல்ல அனுப்பப்படுவர் என்று அமெரிக்க மக்களுக்கு ஒபாமா தனிப்பட்ட முறையில் தெரிவிக்காத வெள்ளை மாளிகையில் வெளியிடப்பட்ட ஒரு சுருக்கமாக எழுதப்பெற்ற அறிக்கையில், ஜனாதிபதி ஆப்கானிஸ்தானில் தீவிரமடைந்துள்ள போர் பாக்கிஸ்தானில் எல்லை கடந்த இராணுவக் தலையீட்டின் அதிகரிப்புடன் இணைந்துள்ளது என்று அடையாளம் காட்டினார். அதிகரித்தளவில் படைகளை அங்கு அனுப்புதல் என்பது "ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில்" நிலைமை மோசமாகியிருப்பதை எதிர்கொள்ளுவதற்கு என்றும், ஆப்கானிஸ்தானில் தலிபான் எழுச்சியை "பாக்கிஸ்தான் எல்லையை ஒட்டி" அல்குவேடா கொண்டிருக்கும் பாதுகாப்பான புகலிடங்களுடன் தொடர்புபடுத்தி அவருக்கு முன் பதவியில் இருந்தவரின் கருத்தை எதிரொலிக்கும் வகையில், "அமெரிக்காவை அச்சுறுத்துகிறது'' என்றும் அவர் கூறினார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க எதிர்ப்பு வளர்ந்திருப்பதை உட்குறிப்பாக புஷ் நிர்வாகம் "மூலோபாயத்திற்கு தக்க கவனம், வழிநடத்தில், வளங்கள்" ஆகியவற்றைக் கொடுக்காததால் ஏற்பட்ட தோல்வியினால் என்று கூறி, ஆப்கானியப் போருக்கு "உடனடியான தேவைகள் உள்ளன" என்றும் தன்னுடைய நிர்வாகம் ஆப்கானிஸ்தானிலும் ''அப்பகுதியிலும்'' விரிவான மூலோபாயப் பரிசீலனையை செய்யும் என்றும் கூறினார். இந்த வாரம் போலந்தில் உள்ள கிராகோவில் நேட்டோ பாதுகாப்பு மந்திரிகள் கூட்டத்திற்கு முன்னதாக வருமாறு இந்த அறிக்கை நேரம் குறிக்கப்பட்டிருந்தது. நட்பு நாடுகள்மீது அவற்றின் படைகளை வாஷிங்டன் மற்றும் நேட்டோ தலைமையின் கீழ் அதிகரிக்குமாறு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கப்படும் என்று குறிப்புக் காட்டிய ஒபாமா, "நம்முடைய நண்பர்கள், நட்பு சக்திகளுடன் இணைந்து செயலற்றும் விதத்தில், வெற்றிபெறத் தேவையான வளங்களை பெற்றுக்கொள்ள முயல" தனது நிர்வாகம் தனது மூலோபாயத்தை அபிவிருத்தி செய்யும் என்று கூறினார். இச்சொற்கள் ஏழாண்டுக்காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்களைக் கொன்று 574 அமெரிக்க படையினர்களையும் ( நவம்பர் 2001ல் தலிபன் அரசை அகற்றுவதற்கு போர் துவங்கியதில் இருந்து மிக அதிக இழப்புக்கள் ஏற்பட்ட 2008ல் மட்டும் 155 பேர்) கொன்று குவித்துள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ இராணுவ வன்முறை அதிகரிக்கும் என்பதற்கும் நயமான பேச்சுக்கள் ஆகும். "தெளிவான, அடையப்படக்கூடிய இலக்குகள்" சாதிப்பது பற்றி ஒபாமா கூறினார்; இந்தக் குறிப்பு படைகளின் கூட்டுத் தலைவர் மற்றும் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸினால் கொண்டுவரப்பட்டுள்ள கொள்கை மாற்றம் பற்றியது ஆகும். இவர் புஷ் நிர்வாகத்தில் இருந்து தொடர்ந்து அப்பதவியில் இருப்பதுடன், இவர்தான் ஈராக்கில் படை அதிகரிப்பை மேற்பார்வையிட்டார். இவர் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் நிறுவப்படும் என்னும் போலிக் காரணத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட வகையில் அமெரிக்காவிற்கும் அதன் கைப்பாவையாக காபூலில் இயங்கும் அரசாங்கத்திற்கும் எதிராகத் தோன்றிய எழுச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் மீது தீவிரகவனத்தை காட்டுபவர். செவ்வாயன்று, 2nd Marine Expeditionary படைப்பிரிவில் இருந்து 8000 மரைன்கள் அடங்கிய 17,000 மேலதிக துருப்புக்கள், ஆப்கானிஸ்தானிற்கு 2009 வசந்தகால கடைசியில் அனுப்பப்படுவர் என்றும், 5th Stryker படைப்பிரிவில் இருந்தும், 2வது தரைப்படைப் பிரிவிலிருந்து 4000 பேரும் மற்றும் இந்த ஆண்டு கோடை நடுவில் 5,000 கூடுதலான துருப்புக்களும் அனுப்பப்படும் என்று பென்டகன் அறிவித்தது. மரைன்கள் இப்பொழுது வட கரோலினா காம்ப் லெஜுனேயிலும் தரைப்படை துருப்புக்கள் வாஷிங்டனில் உள்ள லெவிஸ் கோட்டையிலும் உள்ளனர். இவர்கள் தெற்கு ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பப்படுவர்; அவ்விடம் அதிகரித்தளவில் தலிபான் மற்றும் அமெரிக்க எதிர்ப்புப் படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இப்பிரிவுகள் துவக்கத்தில் ஈராக்கிற்கு அனுப்பப்படுவதாக இருந்தது. ஆனால் தன்னுடைய நிர்வாகம் ஈராக்கில் இருக்கும் அமெரிக்கப்படைகளை "பொறுப்புடன்" பின்வாங்குதால் இவற்றை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்ப முடிவதாக ஒபாமா கூறியுள்ளார். உண்மையில் அமெரிக்க துருப்புக்கள் ஈராக்கில் 140,000 என்று உள்ளன; வெள்ளை மாளிகை இதுவரை ஒபாமாவின் பிரச்சார உறுதிமொழியான படைகளை மாதத்திற்கு ஒரு பிரிகேட் வீதம் திரும்பப்பெறப்படும், அதிகாரத்திற்கு வந்த 16 மாதங்களுக்குள் ஈராக்கில் இருக்கும் அனைத்துப் படைகளும் திரும்பப் பெறப்படும் என்பதை செயல்படுத்தவில்லை. உயர்மட்ட இராணுவத் தளபதிகள் பகிரங்கமாக இந்த கால அட்டவணையை வினாவிற்கு உட்படுத்தியுள்ளனர்; தன்னுடைய பிரச்சார உறுதி மொழியை முறிக்க தயாரென்பதையும் ஒபாமா குறிப்பு காட்டியுள்ளார்; எப்படிப் பார்த்தாலும் அது பல்லாயிரக்கணக்கான "போரிடாத" துருப்புக்களை ஈராக்கில் காலவரையற்று நிறுத்தி வைக்கும். இப்பொழுது கிட்டத்தட்ட 36,000 அமெரிக்கத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளன; இவர்களில் 6,000 படையினர் கடந்த மாதம் புஷ் நிர்வாகத்தால் அனுப்பப்பட்டவர்கள். செவ்வாயன்று அறிவிக்கப்பட்டுள்ள புதிய 17,000 துருப்புக்கள் அமெரிக்க இராணுவ நிலைப்பாட்டை அங்கு கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அதிகரிக்கும்; ஆப்கானிஸ்தானத்தில் இருக்கும் உயர்மட்ட அமெரிக்கத் தளபதியான டேவிட் மக்கீர்னன் கோரியிருக்கும் மொத்தக் கூடுதல் 30,000 படையினரை மார்ச் கடைசியில் போர் முயற்சிகள் பற்றிய மூலோபாய பரிசீலனை செய்யப்பட்ட பிறகு ஒபாமா அனுப்பிவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொழுது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளைத் தவிர மற்ற நேட்டோ நாடுகளில் இருந்து 32,000 துருப்புக்கள் உள்ளன. ஆப்கானிஸ்தானிய மக்கள் பெருகிய முறையில் அமெரிக்கத் தலைமையிலான போரினால் உயிரை இழப்பது என்பது செவ்வாயன்று ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்புக் காட்டப்பட்டுள்ளது; அன்றேதான் 2007ல் இருந்து 2008ல் சாதாரணக் குடிமக்கள் இறப்பு 39 சதவிகிதம் கூடிவிட்டது என்ற ஒபாமாவின் அறிவிப்பும் வந்தது. ஐக்கிய நாடுகள் மொத்த பொதுமக்கள் இறப்புக்கள் கடந்த ஆண்டில் 2,118 என்றும் 2007ல் இது 1,523 ஆக இருந்தது என்றும் கூறியுள்ளது. இது நவம்பர் 2007ல் தலிபான் அகற்றப்பட்டபிற்கு ஐ.நா. கொடுத்துள்ள இறப்பு அறிக்கையில் மிக அதிக ஆண்டு பொதுமக்கள் இறப்பு ஆகும். இதுகூட ஐயத்திற்கு இடமின்றி குறைமதிப்பீடு செய்யப்பட்டதுதான்; ஏனெனில் விமானத் தாக்குதல்களிலும் ஏனைய தேடுதல்களிலும் கொல்லப்பட்டவர்கள் அனைவரையும் அமெரிக்கா வாடிக்கையாக தலிபான் அல்லது பிற எழுச்சியாளர்கள் என்ற கணக்கில் வைத்துள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் இறப்புக்களுக்கு தலிபான் மற்றும் பிற அமெரிக்க எதிர்ப்புப் படைகள்தான் காரணம் என்று ஐ.நா. கூறியுள்ளது. ஆனால் அமெரிக்க, நேட்டோ மற்றும் ஆப்கான் அரசாங்கப் படைகள் 828 மக்களைக் கொன்றுள்ளதை அது ஒப்புக் கொண்டது; இதில் 555 பேர் விமானத் தாக்குதலில் பலியானவர்கள். ஐ.நா. கருத்தின்படி 2007ல் இருந்து இது 32 சதவிகிதம் அதிகமாகும். பெருகிய அழிவிற்குப் பொறுப்பு அமெரிக்காதான் ஏற்க வேண்டும்; இதுதான் 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களை ஒரு போலிக் காரணமாக வைத்து ஆப்கானிஸ்தானை வெற்றி பெறும் நீண்ட காலத்திட்டத்தை செயல்படுத்துகிறது; அதையொட்டி அமெரிக்க தன்னுடைய மேலாதிக்கத்தை மத்திய ஆசியாவில் உள்ள பரந்த எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் மீது செலுத்த முடியும்; இதைப்போலவே உலகின் மிக அதிக எண்ணெய் இருப்புக்களில் இரண்டாம் இடத்தைக் கொண்டுள்ள ஈராக் மீது படையெடுத்து ஆக்கிரமித்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்போர் மற்றும் ஆக்கிரமிப்பினால் ஏற்பட்டுள்ள பேரழிவு மூன்ற தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்தும் சூழ்ச்சி, நாச வேலை என்று 1970 களின் இறுதியில் சோவியத் சார்பு அரசாங்கத்தை அகற்றுவதற்கும் சோவியத் ஒன்றியத்தைப் பேரழிவு தரக்கூடிய தரைப்போருக்கு இழுப்பதற்கும் இஸ்லாமிய கெரில்லாக்களான முஜாஹிதீனுக்கு ஆயுதங்கள் கொடுத்த CIA இரகசிய நடவடிக்கைகளில் தொடங்கி இப்பொழுது உச்ச கட்டத்தில் உள்ளது. ஒசாமா பின் லேடன் உட்பட அப்பிரிவுகளில் பல அமெரிக்காவின் நிதி உதவியையும், ஆதரவைப் பெற்றன. அவற்றில் இருந்துதான் அல்கொய்தா உருவாகியது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ஒன்றும் சோவியத்தைவிட சிறப்பு வெற்றியைக் கண்டுவிடவில்லை. ஏழு ஆண்டுகள் போருக்குப் பிறகும், அமெரிக்க, நேட்டோ படைகளும், ஹமித் கர்சாயியின் கைப்பாவை ஆட்சியும் தலைநகர் காபூல் மீதுகூட முழு அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. கடந்தவாரம்தான் தலிபான் கெரில்லாக்கள் காபூலின் மையத்தில் இருக்கும் அரசாங்கக் கட்டிடங்களை ஒருங்கிணைந்த தாக்குதல்களுக்கு பிறகு கைப்பற்றிக்கொண்டனர்; அதில் 26 பேர் இறந்தனர், 57 பேர் காயமுற்றனர். முக்கிய அமெரிக்க-நேட்டோ படைகளுக்கு பொருட்கள் பாக்கிஸ்தான் வட மேற்கில் இருந்து கைபர் கணவாய் வழியே ஆப்கானிஸ்தானத்திற்குள் வரும் பாதை பலமுறையும் எழுச்சியாளர்களால் தாக்கப்பட்டுள்ளது; ஆப்கானிஸ்தானை ஒட்டி எல்லை பாக்கிஸ்தானிய பழங்குடிப்பகுதிகளில் அவர்களுடைய அதிகாரம் பெருகி வருகிறது. அதைத் தவிர இன்னும் மையத்தில் இருக்கும் ஸ்வாட் பள்ளத்தாக்கு போன்ற இடங்கலும் பெருகி வருகிறது; இது இஸ்லாமாபாத்தில் உள்ள பாக்கிஸ்தானிய ஆட்சியையே அச்சுறுத்துகிறது. இதற்கு அமெரிக்க விடையிறுப்பு அதன் இராணுவ வன்முறையை எல்லைக்கு இருபுறமும் அதிகரித்ததுதான். பாக்கிஸ்தானிய எல்லைப் பகுதிகளில் அமெரிக்க விமானத் தாக்குதல்கள் சமீபத்திய மாதங்களில் பாரியளவில் அதிகரித்துள்ளன; ஒபாமா அதிகாரத்திற்கு வந்த ஒரு மாதத்தில் நான்கு அத்தகைய தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளன. பாக்கிஸ்தான் அரசாங்கம் எல்லைப் பகுதிகளில் இருக்கும் இஸ்லாமிய எழுச்சியாளர்கள் மீது இராணுவ நடவடிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று ஒபாமா நிர்வாகம் பெருகிய அழுத்தத்தைக் கொடுத்துவருகிறது. இது தவிர்க்க முடியாமல் போரை நேரடியாக பாக்கிஸ்தானுக்குள்ளையே விரிவாக்குகிறது. கடந்த வாரம் செனட் உளவுத்துறைக் குழுவின் ஜனநாயகக் கட்சி தலைவராக உள்ள செனட்டர் Dianne Feinstin பாக்கிஸ்தானுக்குள் குண்டுவீச்சு நடத்தும் ஏவுகணைகள் ஆப்கானிய எல்லையில் இருந்து என்பதைவிட பாக்கிஸ்தானுக்குள்ளேயே இருக்கும் அமெரிக்கத் தளத்தில் இருந்தே CIA தாக்குதல்கள் இயக்கப்படுகின்றன என்று தான் அறிந்துள்ளதகக் கூறினார். அத்தகைய தளம் இருப்பதை பாக்கிஸ்தான் அரசாங்கம் மறுத்துள்ளது; ஆனால் அமெரிக்கச் செய்தி ஊடக தகவல்கள் இந்த வாரம் முன்னாள் உளவுத்துறை முகவர்களை மேற்கோளிட்டு Feinstin இன் கருத்துக்களை உறுதிப்படுத்தியுள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை விரிவாக்கம் அந்த வட்டாரத்தில் இன்னும் வலுவான போட்டியாளர்களான, குறிப்பாக சீன, ரஷிய நாடுகளுடன் அழுத்தங்களை அதிகரித்து அதையொட்டி அண்டை நாடுகளையும் போர் நிலைக்கு ஈர்த்துள்ளது. செவ்வாயன்று அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டின் தலைவரான தளபதி டேவிட் பெட்ரீயஸ் அண்டை நாடான ஆப்கானிஸ்தானிற்கு பொருட்கள் விநியோக பாதைகளை புதிதாகப் பெறும் நோக்கத்துடன் உஸ்பெகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார். இது ரஷியாவில் இருந்த $2 பில்லியன் நிதி உதவி பெற்றபின், கிர்கிஸ்தான் தன்னாட்டில் உள்ள அமெரிக்க விமானத்தளத்தை மூட இருப்பதாக அறிவித்த பின்னர் நடைபெற்றுள்ளது. அது அமெரிக்க, நேட்டோ துருப்புக்களுக்கு ஆப்கானிஸ்தானிற்கு பொருட்கள் விநியோகத்திற்கான முக்கிய தளமாக இருந்தது. இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் சாதாரணக் குடிமக்களைக் கொல்லுவதும் குறைவின்றி நடக்கிறது; இது ஆக்கிரமிப்பு மற்றும் காபூலில் உள்ள அமெரிக்க ஆதரவு பெற்ற ஆட்சி இரண்டிற்கும் எதிராக மக்கள் சீற்றத்தை அதிகரித்துள்ளது. புதனன்று ஒரு செய்தித் தொடர்பாளர் தெற்கு ஆப்கானிஸ்தான் கந்தகார் மானிலத்தில் நேட்டோ துருப்புக்கள் இரு குடிமக்கள் கொன்றுவிட்டதாகக் கூறியுள்ளார். திங்களன்று அமெரிக்க விமானத் தாக்குதல் ஹிரட் மானில கோசரா மாவட்டத்தில் 6 மகளிர், இரு குழந்தைகளைக் கொன்றது என்று உள்ளூர் ஆப்கானிய அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் எப்பொழுதும் போல் அமெரிக்க தான் 15 எழுச்சியாளர்களைத் தாக்குதலில் கொன்றுவிட்டதாக அறிவித்துள்ளது. செவ்வாயன்று ஒபாமா கொடுத்த அறிவிப்பு தந்திர உத்தி வேறுபாடுகள் இருந்தபோதிலும் அவருடைய நிர்வாகத்திற்கும் புஷ் நிர்வாகத்திற்கும் இடையே அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கையில் அடிப்படையான தொடர்ச்சி உள்ளது என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒபாமா இராணுவ வன்முறையையும் ஆக்கிரமிப்பையும் அமெரிக்க ஆளும் உயருடுக்கின் பொருளாதார, புவி அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்துவதில் அவருக்கு முன்பு பதவியில் இருந்தவரைப் போலத்தான் உறுதியாக உள்ளார். புஷ் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை கொடுத்த பேரழிவைக் கண்டபின், வெளியுறவுக் கொள்கை மற்றும் அரசியல் நடைமுறையின் சில பிரிவுகளால் இவர்தான் சில மாறுதல்கள், அணுகுமுறை ஆகியவற்றைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் மக்கள் போர் எதிர்ப்பு உணர்வைக் குறைத்து செயலற்றதாக ஆக்க முடியும் என்று முன்னெடுக்கப்பட்டார். இராணுவவாதம் மற்றும் போருக்கான மக்கள் எதிர்ப்பைப் பயன்படுத்தி ஜனாதிபதி பதவியை அடைவதில் வெற்றி கண்டபின், ஒபாமா இப்பொழுது இன்னும் பரந்த போர் விரிவாக்கத்திற்கான வித்துக்களைக் கொண்டுள்ள பெரிய இராணுவ நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்குகிறார். இப்பொழுதுள்ள அரசியல் முறை மக்களுடைய ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்கு சிறிதும் விட்டுக்கொடுக்காது என்பதைத்தான் இது நிரூபிக்கிறது. ஆப்கானிஸ்தானில் இராணுவக் தலையீடுகளை அதிகரித்து பாக்கிஸ்தானுக்குள்ளும் அதை விரிவடையச் செய்யும் ஒபாமாவின் முடிவைப் பாராட்டியிருப்பவர்களுள் புஷ்ஷின் போர்க்கொள்கைகளுக்கு தீவிர ஆதரவு கொடுத்தவர்கள் இருக்கின்றனர். ஒபாமாவிற்கு எதிராக ஜனாதிபதி பதவி தேர்தலில் போட்டியாளராக நின்ற குடியரசுக் கட்சியின் செனட்டரான ஜோன் மக்கெயின் ஒபாமாவின் அறிவிப்பை வரவேற்றுள்ளார். புதிய நிர்வாகத்தின் கொள்கையை "Barack of Afpakia" என்ற தலைப்பு கொடுத்த தலையங்கத்தில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பாராட்டியுள்ளது; ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் இரண்டிலும் இராணுவ நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படுவதற்கு முக்கியத்துவம் காட்டுவதில் அந்த பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. "ஒபாமாவின் குழு ஆப்கானிஸ்தானில் பாக்கிஸ்தானின் பரிமாணம் இருப்பதை உணர்கிறது, இந்த இடத்தையே 'Afpak" (ஆப்பாக்) என்றுதான் அழைக்கிறது" என்று ஜேர்னல் எழுதியுள்ளது. போரை ஒபாமா விரிவாக்கியுள்ளது Nation ஏடு, மற்றும் பல சந்தர்ப்பவாத அமைப்புக்கள், அவருடைய பிர்சாரத்திற்கு ஆதரவு கொடுத்த தாராளவாத, "இடது" சக்திகளை கூடுதலாக அம்பலப்படுத்தியுள்ளது; அவருடைய பிரச்சாரத்தின் வார்த்தைஜாலங்களுக்கு அவை நம்பகத்தன்மை கொடுத்து அமெரிக்காவில் ஒரு ஜனநாயகப் புத்துயிர்ப்பிற்கு தலைவர் என்று பாராட்டியிருந்தன. மத்திய ஆசியாவில் பெருகிய இறப்பு பேரழிவு ஆகியவை இழைக்கப்பட உள்ளதற்கு அவர்களும் அரசியல் பொறுப்பை ஏற்க வேண்டும்; அதே போல் புதிய நிர்வாகத்தின் ஏகாதிபத்தியக் கொள்கையின் விளைவாக ஏற்படும் அமெரிக்க இராணுவத்தினரின் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கைக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும். மத்திய ஆசியாவில் விரிவாக்கப்படும் போரும் ஈராக்கில் நடக்கும் இராணுவ வன்முறை மற்றும் அடக்குமுறையும் அமெரிக்க மற்றும் சர்வதேசத் தொழிலாளர் வர்க்கம் இராணுவவாதம் மற்றும் அதன் மூலமான முதலாளித்துவ முறைக்கு எதிராக சுயாதீனமாக அரசியல்ரீதியாக அணிதிரளுவதன் மூலம்தான் போருக்கு முடிவு காணமுடியும் என்பதை நிரூபிக்கின்றன. |