WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா
:
இலங்கை
HRW report exposes
Sri Lankan government's war crimes
மனித உரிமை கண்காணிப்பு அறிக்கை இலங்கை அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களை
அம்பலப்படுத்துகிறது
By Sampath Perera
25 February 2009
Back to screen version
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு (HRW)
அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை
அரசாங்கம் முன்னெடுக்கும் யுத்தத்தின் குற்றவியல் பண்புபற்றிய கண்ணோட்டத்தை ஏற்படுத்துகிறது. "சிவிலியன்கள் மீதான
யுத்தத்தை நிறுத்து" என்ற தலைப்பிலான அந்த அறிக்கை, "வடக்கில் வன்னிப் பிராந்தியத்தில் பொதுமக்கள் மீதான அதன்
கண்மூடித்தனமான ஆட்டிலறித் தாக்குதல்களையும் மற்றும் இடம்பெயர்ந்துள்ளவர்களை தடுப்புக்காவல் முகாம்களில் தடுத்து
வைத்திருக்கும் கொள்கையையும் உடனடியாக நிறுத்த வேண்டும்" என அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
HRW புலிகளின் நண்பர்கள் அல்ல.
தம்மிடம் எஞ்சியுள்ள பிரதேசங்களில் இருந்து பொதுமக்களை வெளியேற அனுமதிக்காமை தொடர்பாகவும் வெளியேற முயற்சிப்பவர்கள்
மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வது தொடர்பாகவும் புலிகளை அந்த அறிக்கை விமர்சித்துள்ளது. மக்கள் வாழும்
இடங்களில் போராளிகளை இருத்துவதை நிறுத்துமாறும் அது புலிகளைக் கோரியுள்ளது. "ஒவ்வொரு களமுனை தோல்வியின்
போதும், தமிழ் புலிகள் தமிழ் சிவிலியன்களை அதிகமான கொடூரத்துடன் நடத்துவதாகத் தோன்றுகிறது," என
HRW சட்ட மற்றும்
கொள்கைப் பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் தனது யுத்தத்தை நியாயப்படுத்துவதற்காக இத்தகைய குற்றச்சாட்டுக்களை
சுமத்துவதை வழமையாகக் கொண்டுள்ளதோடு, அது உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களிலும் எதிரொலிக்கின்றன.
எவ்வாறெனினும், HRW
அறிக்கை செய்திருப்பது என்னவெனில், ஊடகங்களால் ஏப்போதாவது சவால்செய்யப்படும்
அரசாங்கத்தின் சொந்தப் பொய்களை அம்பலப்படுத்தியிருப்பதாகும். பொதுமக்கள் கொல்லப்படுவதற்கான பொறுப்பை
அரசாங்கமும் இராணுவமும் ஏற்க மறுப்பதோடு, நிரூபிக்கப்படும் போது, நிரூபிப்பவர்கள் புலிகள் என குற்றச்சாட்டுக்கு
உள்ளாகி வந்தனர்.
HRW தனது ஊடக அறிக்கையில் வெளிப்படையாக
உள்ளது: "யுத்த வலயத்தில் சிக்கியுள்ள தமிழ் இன மக்களை புலிகளுக்கு சார்பானவர்கள் என ஊகிக்க முடியும் என இலங்கை
அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளதுடன் அவர்களை போராளிகளாக நடத்துவதோடு விளைபயனுள்ள விதத்தில் சட்டவிரோதமான
தாக்குதல்களுக்கும் அனுமதிக்கின்றது. இடம்பெயர்ந்த மக்களால் நிறைந்து போயுள்ள பிரதேசங்கள் மீது இலங்கைப் படைகள்
மீண்டும் மீண்டும் கண்மூடித்தனமாக ஷெல் தாக்குதல் நடத்துகின்றன. இவற்றில் அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்ட
'பாதுகாப்பு வலயங்கள்' மற்றும் பிராந்தியத்தில் எஞ்சியுள்ள ஆஸ்பத்திரிகள் மீதும் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்படும்
குண்டுத் தாக்குதல்களும் அடங்கும்."
அறிக்கையின் படி, டிசம்பர் 10 திகதி முதலான காலத்தில் குறைந்தபட்சம் 2,000
பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் 5,000 பேர் காயமடைந்துள்ளனர். வளர்ந்து வந்த சர்வதேச
விமர்சனத்துக்கு பிரதிபலிப்பாக, அரசாங்கம் புலிகளின் பிராந்தியத்துக்குள்ளேயே ஒரு பாதுகாப்பு பிரதேசத்தை
அறிவித்தது. இந்த 35 சதுரக் கிலோமீட்டர் பிரதேசத்துக்குள் நகருமாறு பொதுமக்களுககு வேண்டுகோள் விடுத்து,
விமானப் படை விமானங்கள் துண்டுப் பிரசுரங்களை வீசின. ஆனால், இந்த பாதுகாப்பு வலயமும் இலங்கை இராணுவத்தின்
தொடர்ச்சியான ஆட்டிலறித் தாக்குதலுக்கு உள்ளானதாக இந்த அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.
இந்த வலயத்துக்குள் இருந்த சக தொண்டர்களிடம் இருந்து பெற்ற தகவல் பற்றி ஒரு
நிவாரணம் வழங்கும் நிறுவனத்தின் ஊழியர் HRW
க்குத் தெரிவித்தார். "ஜனவரி 22 முதல் ஜனவரி 29 வரை இடைவிடாது ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு நாளும் எட்டு முதல் 22 பேர் வரை கொல்லப்படுவதை தாம் காண்பதாக எமது சக ஊழியர்கள் தகவல்
அனுப்பியுள்ளனர். அது அவர்கள் கண்டவை மட்டுமே," என அவர் தெரிவித்திருந்தார்.
ஒரு தாக்குதலுக்கு பின்பான நிலைமையை ஒரு கண்கண்ட சாட்சி விபரித்தார்: "ஒரு பெண்
இரு குழந்தைகளுடன் சாய்ந்து கிடந்தார். ஒரு குழந்தை தற்செயலாக உயிர் பிழைத்திருந்தது. ஒரு குழந்தை
மரமொன்றில் தொங்கிக்கொண்டிருந்ததோடு அந்த மரத்தின் கீழேயே அந்தக் குடும்பமும் தங்கியிருந்தது. தலை
துண்டாகிப்போன இன்னுமொரு குழந்தை விளையாட்டுத் திடலைச் சூழ இருந்த கம்பி வேலைக்குள் வீசுபட்டுக் கிடந்தது.
அந்தப் பெண்ணுக்கு அருகில் அவளது கனவன் கவிழ்ந்து கிடந்தார்." இந்த ஷெல் தாக்குதல் இராணுவ நிலலைகளில் இருந்தே
நடத்தப்பட்டது என்பதை ஏனைய கண்கண்ட சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.
யுத்தம் தொடர்பான எந்தவொரு சுயாதீனமான, நேரடியான அறிக்கைகளையும் ஊடங்கள்
வெளியிடுவதை அரசாங்கமும் இராணுவமும் தடுத்து வருகின்றன. பத்திரிகையாளர்களும் மனித உரிமை அமைப்புகளும் யுத்த
வலயத்திற்கும் அதைச் சூழவுள்ள பிரதேசத்திற்கும் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வார காலமாக வட இலங்கையில்
இருந்து இரகசியமாகவே தமது தகவல்களை HRW
தொகுத்துள்ளது. அதன் செய்தியாளர்கள் ஐ.நா. நிறுவனங்கள், மருத்துவ ஊழியர்கள்
மற்றும் பொதுமக்கள் உட்பட உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவன உறுப்பினர்களையும் பேட்டி கண்டனர்.
HRW, புலிகளின் கட்டுப்பாட்டிலான
பிராந்தியத்தில் புதுக்குடியிருப்பில் இருந்த தற்காலிக ஆஸ்பத்திரியில் ஜனவரி 1 முதல் ஜனவரி 26 வரை அனுமதிக்கப்பட்ட
நோயாளர்களின் பட்டியல் ஒன்றை வெற்றிகரமாகப் பெற்றுக்கொண்டது. அந்த காலத்தில், 573 நோயாளர்கள்
"யுத்தக் காயங்களால்" அனுமதிக்கபட்டிருந்ததோடு அவர்களில் 75 பேர் உயிரிழந்தனர். தற்போதைய மோதல்களில்
பொதுமக்கள் உயிரிழப்புக்களின் அளவை இந்த பட்டியல் சுட்டிக்காட்டுகின்றது.
ஆஸ்பத்திரிகளும் ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. டிசம்பர் 15 முதல் பெப்பிரவரி 10
வரை ஆஸ்பத்திரிகள் தாக்குதலுக்கு உள்ளான 20 சம்பவங்களை இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது. புதுக்குடியிருப்பு
வைத்தியசாலை மீதான ஷெல் வீச்சால், இறுதியாக புதுமாத்தளனில் உள்ள கரையோர கிராமத்தில் உள்ள ஒரு
பாடசாலைக்கும் ஒரு சனசமூக நிலையத்துக்கும் ஆஸ்பத்திரி மாற்றப்பட்டது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், இந்த
வசதியும் மீண்டும் மீண்டும் ஆட்டிலறித் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்திருந்தது.
புதுமாத்தளனில் சேவையாற்றும் ஒரு வைத்தியரான டி. சத்தியமூர்த்தி,
HRW க்கு விபரமான
தரவுகளை வழங்கினார். "வெள்ளிக்கிழமை [பெப்பிரவரி 13] கிட்டத்தட்ட 100 காயமடைந்த சிவிலியன்கள்
அனுமதிக்கப்பட்டனர்; வியாழக்கிழமை [பெப்பிரவரி 12] 87 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஷெல்
தாக்குதல்களில் காயமடைந்திருந்ததோடு தீக்காயங்களும் ஏற்பட்டிருந்த போதிலும் எங்களால் அவர்களுக்கு சிகிச்சையளிக்க
அடிப்படை மருந்துகள் இருக்கவில்லை," என அவர் தெரிவித்தார்.
பத்தாயிரக்கணக்கான அகதிகள் போதுமான உணவு, தங்குமிடம், உடை மற்றும் மருந்து
விநியோகங்கள் இன்றி உயிர்வாழப் போராடிக்கொண்டிருக்கின்ற போதிலும், நிவாரணப் பொருட்கள் புலிகளின்
கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு செல்வதை பெருமளவில் இராணுவம் தடுத்து வருகின்றது. ஒரு தொண்டு நிறுவனத்தின்படி,
"வன்னிக்கு உள்ளேயும் வெளியிலும் வாகணத் தொடரணிகளை ஒழுங்குபடுத்திக்கொள்வதில் சிரமங்களுக்கான பிரதான
காரணங்களில் ஒன்று, இராணுவமும் புலிகளும் பாதையை பயன்படுத்த அனுமதிப்பதில் உடன்படாமை ஆகும்."
இராணுவம் எவ்வாறு புலிகளின் நிலைகளை நோக்கி முன்னேற உணவுத் தொடரணிகளை
பயன்படுத்திக்கொள்கின்றது என்பதை விவரித்த ஒரு கண்கண்ட சாட்சியை
HRW பதிவுசெய்துள்ளது.
இதன் விளைவாக, ஒரு தொடரணி தாக்குதலுக்குள்ளானதோடு தாமதமும் ஏற்பட்டது. அடுத்த நாள், இருதரப்பு
துப்பாக்கிப் பிரயோகங்களில் சிக்கி சாரதி ஒருவர் காயமடைந்தார்.
புலிகளின் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய பின்னர், இலங்கை பாதுகாப்பு படையினரால்
"நலன்புரி முகாம்களில்" சிறைவைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் தலைவிதி பற்றியும் இந்த அறிக்கை
குவிமையப்படுத்தியுள்ளது. HRW
பேச்சாளர் ரோஸ் விளக்கியதாவது: "தமிழ் புலிகளிடமிருந்து தப்பிவருவதில்
சமாளித்துக்கொள்ளும் அனைத்து சிவிலியன்களும், அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள இழிநிலையிலான முகாம்களிலும்
வைத்தியசாலைகளிலும் அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வெளியுலகைக் காண்பதற்கு இங்கு வழி கிடையாது.
அவர்களது வேதனைகளில் தமது பாத்திரத்தைப் பற்றி வெகுஜனங்கள் அறிந்துகொள்வதை தடுக்க அரசாங்கம் தன்னால்
முடிந்தவரை முயற்சிப்பதாகவே தோன்றுகிறது.''
புலி சந்தேக நபர்களை எதேச்சதிகாரமாக தடுத்து வைப்பது வழமையாக உள்ள
நிலையில், சல்லடை போட்டு வடிகட்டும் நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்தும் இந்த அறிக்கை,
"காணாமல் ஆக்குவது மற்றும் சட்டத்துக்கு புறம்பான கொலைகள் நடைமுறைக்கு வரும் சாத்தியம்" பற்றியும்
எச்சரித்துள்ளது. வடிகட்டும் நடவடிக்கைகள் மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளன. "முதல் இரண்டு வடிகட்டும்
நடவடிக்கைகள் தொடர்பாக மிகவும் சிறிய தகவலே கிடைத்துள்ளதோடு இத்தகைய பகுதிகளில் எந்தளவுக்கு தடுத்து
வைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்பதை உறுதிப்படுத்துவது சாத்தியமில்லாமல் உள்ளது."
வவுனியாவில் உள்ள தடுப்பு முகாமுக்கு அகதிகள் அனுப்பப்படுவதற்கு முன்னதாக உள்ள கடைசி
சோதனை சாவடியான ஓமந்தையில், 18 முதல் 35 வயது வரையான பல ஆண்களும் பெண்களும், அதே போல் பல
இளம் வயது சிறுவர்களும் பாதுகாப்பு படையினரால் தடுத்து வைக்கப்படுகின்றனர். சோதனை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள
ஒரே ஒரு கண்காணிப்பாளராக செஞ்சிலுவைச் சங்க அதிகாரியும், பெப்பிரவரி 7 அன்று அங்கிருந்து வெளியேற பணிக்கப்பட்டார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சம்பந்தமான பட்டியலையும் அவர்கள் இருக்கும் இடங்களையும் இலங்கை அதிகாரிகளிடம்
இருந்து தெரிந்துகொள்ள ஐ.நா. நிறுவனங்கள் எடுத்த முயற்சிகள் பயனற்றுப் போனதாக
HRW விளக்கியுள்ளது.
வவுனியா ஆஸ்பத்தியில் உள்ள நிலைமை பயங்கரமானதாகும். "காயங்கள் ஆறுவதற்கு முன்னதாக
நோயாளர்கள் விலக்கப்பட்டு நேரடியாக முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர்" என பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு சம்பவத்தில், ஷெல் தாக்குதலில் காயமடைந்த ஒரு பெண்ணின் கால் துண்டிக்கப்பட்டுள்ளதோடு சத்திர சிகிச்சை மூலம்
அவர் ஒரு குழந்தையையும் பெற்றுள்ளார். அவர் நான்கு நாட்களின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
HRW ஊடக அறிக்கை விளக்கியுள்ளதாவது:
"நகரில் உள்ள தடுப்புக்காவல் மையங்களின் நிலைமையை வவுனியாவில் உள்ள ஆஸ்பத்திரியில் காணலாம். மனித உரிமைகள்
கண்காணிப்பு அமைப்பு அங்கு பிரவேசித்த போது, அங்கு மிகவும் அடிப்படையான தேவைகள் கூட இருக்கவில்லை: பல படுக்கைகளுக்கு
விரிப்புகளோ, போர்வைகளோ அல்லது தலையணைகளோ கிடையாது. காயமடைந்தவர்களின் தேவைகளை வழங்குவதற்கு
கூட ஆற்றல் இல்லை என்பது வெளிப்படையானதாக இருக்கும் போது, சர்வதேச நிறுவனங்களிடம் எந்தவொரு உதவியும்
கேட்க வேண்டாம் என அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டதாக ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் இருந்து தெரியவருகிறது. ஒரு சில
நிறுவனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன. உறவினர்கள் நோயாளர்களை பார்ப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதோடு
சிலரை பின்னர் பாதுகாப்பு படையினர் சென்று பார்த்துள்ளனர்.
"குறிப்பிடத்தக்க விதத்தில் ஆஸ்பத்திரி இராணுவத்தால் நடத்தப்படுவதோடு முகாம்களை விட
நெருக்கமாக பாதுகாக்கப்படுகிறது. சீருடையணிந்த சிப்பாய்கள் வைத்தியசாலையின் ஒவ்வொரு வாட்டிலும், நுழைவாயில்களிலும்
மற்றும் ஆஸ்பத்திரி முற்றத்திலும் ரோந்து செல்கின்றனர்." வைத்தியசாலைக்கு வந்து சென்ற பின்னர், ஒரு நோயாளர்களின்
உறவினர்கள் "காணாமல் போன" மூன்று சம்பவங்கள் சம்பந்தமாக தான் அறிந்துள்ளதாக ஒரு தொண்டு நிறுவன ஊழியர்
HRW தெரிவித்தார்.
அரசாங்கம் அனைத்து அகதிகளையும் விதிவிலக்கின்றி நலன்புரி முகாம்கள் என சொல்லப்படுவதில்
தடுத்து வைத்துள்ளது. "சீருடையற்ற இராணுவ புலணாய்வுத் துறையினரும் துணை ஆயுதக்குழுக்களும்" இந்த தடுப்பு
முகாம்களில் இருப்பதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உறுப்பினர்களை
உள்ளூர் ஊழியர்கள் அடையாளங் கண்டுள்ளனர். இராணுவத்துடன் நெருக்கமாக செயற்படும் தமிழ் துணைப்படைக் குழுவான
புளொட், மனித உரிமை மீறல்களில் இழிபுகழ்பெற்றதாகும்.
HRW அறிக்கை தொடர்பான இலங்கை
அரசாங்கத்தினதும் ஊடகங்களினதும் பிரதிபலிப்பை முன்னறிவிக்க முடியும். "அரசாங்கத்தின் கெளரவத்தை சிதைப்பதாக"
இந்த மனித உரிமைகள் அமைப்பு மீது அரசாங்க பேச்சாளரும் பத்திரிகை பத்தி எழுத்தாளர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உண்மையில், பல மாதங்களாக தெளிவாகத் தெரிந்ததை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. அது ஜனாதிபதி மஹிந்த
இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு திட்டமிட்ட இனவாத யுத்தத்தை
முன்னெடுப்பதோடு யுத்தக் குற்றங்களுக்கும் பொறுப்பாளிகள் என்பதாகும். |