WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan suicide bombing: more hypocrisy from
Washington
இலங்கை தற்கொலைத் தாக்குதல்: வாஷிங்டனில் இருந்து அதிகம் பாசாங்குகள்
By Sarath Kumara
12 February 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
வட இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெப்பிரவரி 9 அன்று தமிழீழ விடுதலைப்
புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கப்படுபவரால் 20 சிப்பாய்களும் 10 பொது மக்களுமாக
முப்பது பேர் கொல்லப்பட்டனர். இது இப்போது வடகிழக்கின் முல்லைத்தீவின் ஒரு சிறிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டுள்ள
மற்றும் இலங்கை இராணுவத்தின் முழு தாக்குதலையும் எதிர்கொள்ளும் புலிகளின் அவநம்பிக்கையான செயலாகும்.
புலிகளின் கட்டுப்பாட்டிலான புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து வெளியேறும்
பொது மக்களுக்காக, விஸ்வமடுவில் உள்ள சுதந்திரபுரம் மஹா வித்தியாலயத்தில் இராணுவத்தால் நடத்தப்படும்
அகதிகளை ஏற்றுக்கொள்ளும் நிலையத்திலேயே இந்த குண்டுவெடிப்பு நடந்தது. இராணுவத்தின்படி கிட்டத்தட்ட 900
பொதுமக்கள் அப்போது அங்கிருந்தனர். பெண் சிப்பாய்கள் குண்டுதாரியை சோதனையிட அணுகியபோது அந்தப்பெண்
தன்னை வெடிக்கச் செய்தார். பல பெண்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டதோடு காயமடைந்த 64 பேரில் 40
பொதுமக்களும் அடங்குவர். பாதிக்கப்பட்ட அனைத்து பொதுமக்களும் தமிழ் அகதிகளாவர்.
கால் நூற்றாண்டு யுத்தத்தைத் தொடர்ந்து தமிழர்கள் எதிர்கொள்கின்ற அவநம்பிக்கையான
நிலைமை சம்பந்தமான பாதிப்பிலேயே தற்கொலை குண்டுதாரி செயற்பட்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்,
புலிகளின் வழிமுறைகள் அவர்களின் முன்நோக்கின் வங்குரோத்தை மட்டுமே கோடிட்டுக்காட்டுகிறது. அத்தகைய
முட்டாள்தனமான தாக்குதல்களுக்கு இராணுவ முக்கியத்துவம் இல்லை. அது உழைக்கும் மக்களை அந்நியப்படுத்துவதோடு
கொழும்பில் உள்ள சிங்கள அதிதீவிரவாதிகளின் கைகளில் நேரடியாகப் பயன்படும்.
அது இந்த விடயத்தில் நடந்தது. "பயங்கரவாத புலிகளின் பிடியில்" இருந்து
தமிழர்களை "விடுவிக்கும்" வழிமுறை என தமது இனவாத யுத்தத்தை நியாயப்படுத்த இந்த தற்கொலைத்
தாக்குதலை இராணுவமும் அரசாங்கமும் உடனடியாகப் பற்றிக்கொண்டன. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ,
"பயங்கரவாதத்தை அழிப்பதற்கான" தமது அர்ப்பணிப்பை மீண்டும் வெளிப்படுத்தியும் "உயிரிழந்தவர்களின்
குடும்பங்களுக்கு அனுதாபங்களை" தெரிவித்தும் வஞ்சகமான அறிக்கையொன்றை வெளியிட்டார்.
இந்த சம்பவத்தை பாய்ந்து பற்றிக்கொண்ட ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர்
தலையங்கம், புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் "மக்களின் பிள்ளைகளை பீரங்கிகளுக்கு தீனியாக
அபகரித்துக்கொண்டு அவர்களைக் கொல்வதோடு, அவர்களின் சொத்துக்களை சூறையாடி அவர்களது எதிர்காலத்தை
அழித்துள்ளதற்கு" இது ஆதாரம் எனக் கூறிக்கொண்டது. யுத்தத்தை எதிர்ப்பவர்கள் மீதான அரச அடக்குமுறையை
நியாயப்படுத்திய அந்த செய்திப் பத்திரிகை, மோதல்களுக்கு முடிவுகட்டக் கோரும் எவரும், "பிரபாகரன் தப்பிச்
செல்வதற்கு ஒரு பாதையை திறக்க முயற்சிப்பவர்கள்" மற்றும் அவர்கள் "பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்படும்
மிகக் கொடிய குற்றங்களுக்கு" பிரபாகரனைப் போல் பொறுப்பாளிகளாக உள்ளனர், என கண்டனம் செய்தது.
யதார்த்தம் அதன் தலையில் நின்றுகொண்டுள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி 250,000
பொது மக்கள் செறிவாக தங்கியுள்ள ஒரு சிறிய பிரதேசத்தை கனமாக ஆயுதம் தரித்த பத்தாயிரக்கணக்கான
துருப்புக்கள் சுற்றிவளைத்துள்ளதோடு இடைவிடாமல் ஆட்டிலறி தாக்குதல்களையும் விமானத் தாக்குதல்களையும்
நடத்துகின்றன. இராணுவம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயங்களுக்கு அப்பால் உள்ள பொதுமக்கள் தொடர்பாக
இராணுவம் பொறுப்புச்சொல்லாது என இராணுவப் பேச்சாளர் பிரகடனம் செய்தார் -இதுவே சர்வதேச
சட்டத்தை மீறுவதாகும். பெரும்பகுதி அரசாங்கத்தின் ஷெல் வீச்சுக்களால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள்
கொல்லபடுகின்றார்கள். "பாதுகாப்பு வலயங்களே" தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. இராணுவத்தின் மூலோபாயம்
தெளிவானது: மக்களை பிரதேசத்தை விட்டு விரட்டி, பின்னர் அதை பயன்படாத நிலமாக்குவதாகும்.
கொழும்பு அரசியல் மற்றும் ஊடாக ஸ்தாபனத்தின் வளைந்து நெளிந்த தர்க்கத்தில்,
ஒரு முழு இனவாத யுத்தத்தையும் மற்றும் அதோடு சம்பந்தப்பட்ட குற்றங்களையும் நியாயப்படுத்த ஒரு தற்கொலை
தாக்குதல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான ஆறு தாசப்தகால உத்தியோகபூர்வ
பாரபட்சங்களில் தம்மை நிலைநிறுத்திக்கொண்டுள்ள மற்றும் சிங்கள மேலாதிக்கவாத அரசை பேணுவதன் பேரில் 25
ஆண்டுகாலமாக யுத்தம் செய்துவரும் ஒரு தட்டின் மத்தியில், ஐலண்ட் பத்திரிகை போன்ற ஊடகங்களின் ஆசிரியர்
தலையங்கங்கள் பொதுவான நாணயங்களாகும்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்னவெனில், தற்கொலைத் தாக்குதலை கண்டனம்
செய்து உடனடியாக அமெரிக்க தூதரகம் தனது சொந்த உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டமையாகும். இந்த
பாசாங்கே ஒரு சாட்சியாகும். இடைவெளியற்ற ஷெல் தாக்குதல்கள், படுகொலைகள் மற்றும் பொதுமக்கள்
முடமாக்கப்படுதல் தொடர்பாக இலங்கை இராணுவத்தின் மீது எந்தவொரு கண்டனமும் அதனால்
தெரிவிக்கப்படவில்லை. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்படி, யுத்தப் பிராந்தியத்தில் உள்ள ஒரு தற்காலிக
ஆஸ்பத்திரிமீது நடந்த ஷெல் தாக்குதலில் குறைந்தபட்சம் 16 நோயாளர்கள் கொல்லப்பட்டனர். மேலதிகமான
ஆட்டிலறி வசதிகளைக் கொண்டுள்ள அரசாங்கம், அதன் நிலையான மறுப்பைத் தெரிவித்ததோடு, ஐயத்திற்கிடமின்றி
வாஷிங்டன் அதை சவால் செய்யவில்லை.
"மோதல் பிரதேசத்தில் இருந்து வெளியேறும் தமிழர்களை தைரியம் இழக்கச்
செய்வதற்கு புலிகள் வெளிப்படையாக மேற்கொண்ட முயற்சி" என தற்கொலைத் தாக்குதலைப் பற்றி அறிவித்த
அமெரிக்க அறிக்கை, இராஜபக்ஷ அரசாங்கத்தின் வாதங்களை சாதாரணமாக திருப்பிச் சொல்லியது. இந்த
தாக்குதலில் புலிகளின் நோக்கம் என்னவாக இருந்தாலும், அதன் பிற்போக்கு வழிமுறை, தனது பிராந்தியத்தில்
இருந்த பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்கும் ஒரு முறை மட்டுமே. முன்னரங்க பகுதிகளை கடக்கும் போது உள்ள
ஆபத்துகளுக்கும் அப்பால், அரச தொந்தரவுகள், எதேச்சதிகாரமான தடுத்துவைப்புகள் மற்றும் அரசாங்க சார்பு
கொலைப் படைகளின் படுகொலைகள் தங்களை எதிர்பார்த்திருக்கின்றன என்பதை அங்கிருந்து வெளியேறும் தமிழர்கள்
புரிந்துகொண்டுள்ளனர்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள அனைவரும் "பதிவுசெய்யப்பட்டு சர்வதேச
தரங்களின்படி தற்காலிக முகாம்களுக்கு வெளிப்படையான முறையில் மாற்றப்பட்டுள்ளார்களா" என்பதை
உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்புவிடுப்பதுடன் தூதரகத்தின் அறிக்கை முடிவடைந்துள்ளது.
ஆயினும், வாஷிங்டனின் ஒரு கண்டன கனைப்புகூட இன்றி, அகதிகளை நடத்துவதற்கான சர்வதேச தரங்களை
அரசாங்கம் ஏற்கனவே மீறியுள்ளது.
வெளியேறும் பொதுமக்கள் இழிநிலையிலான சனநெருக்கடியான முகாம்களுக்கு
சமமானவற்றில் காலவரையறையன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என கடந்த டிசம்பரில் அமெரிக்காவை
தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு செய்திவெளியிட்டிருந்தது. அசோசியேடட் பிரஸ்
ஊடகத்தின்படி, 200,000 இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் தமிழ் அகதிகளை மூன்று ஆண்டுகளுக்கு ஐந்து
பிரமாண்டமான "நலன்புரி கிராமங்களில்" இருத்துவதற்கான திட்டமொன்றை அரசாங்கம் இப்போது விநியோகித்து
வருகிறது. சிறந்த ஓர்வெல்லியன் இரட்டைப் பேச்சில், இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின்
செயலாளர் ரஜீவ விஜேசிங்க, இந்த முகாம்கள் அகதிகளை காக்க அவசியமானது என அசோசியேடட்
பிரஸ்ஸுக்குத் தெரிவித்தார். இந்த "நலன்புரி கிராமங்கள்" அரசாங்கத்தால் நடத்தப்படவிருந்தாலும் இராணுவம்
"அதிக தலையீடுகொண்டிருக்கும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரிப்பதையும் அவரது சகல குற்றங்களை மூடிமறைப்பதையும்
புஷ் நிர்வாகம் விட்ட இடத்தில் இருந்து ஒபாமாவின் நிர்வாகம் தொடர்கின்றது என்ற உண்மையை வாஷிங்டனின்
பாசாங்கு அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது. இலங்கை இராணுவத்திற்கு ஆயுதம் வழங்குவதிலும் படையினரை
பயிற்றுவிப்பதிலும் அமெரிக்காவும் அதன் பங்காளிகளும் உதவியுள்ளன. புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவை நெருக்குவதன் மூலம், புலிகளை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்துவதில்
வாஷிங்டன் பிரதான பாத்திரம் வகித்துள்ளது. அமெரிக்கா சர்வதேச "சமாதான முன்னெடுப்புகளின்" துணை அனுசரணையாளர்கள்
என சொல்லப்படுவதில் ஒன்றாக இருந்த போதிலும் கூட, 2002 யுத்த நிறுத்த எல்லைகளை இராஜபக்ஷ அரசாங்கம்
பகிரங்கமாக மீறியதை அமெரிக்க இரகசியமாக ஆதரித்தது. இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் வளர்ச்சிகண்டுவரும்
வெகுஜன எதிர்ப்பை அடக்குவதில் அக்கறை காட்டியவாறே, இலங்கை இராணுவத்தின் வெளிப்படையான துஷ்பிரயோகங்கள்
பற்றி அமெரிக்கா உதட்டளவில் கவலையை வெளிப்படுத்துகிறது.
காஸாவில் இஸ்ரேலின் குற்றவியல் யுத்தத்துக்கு வாஷிங்டனின் ஆதரவுடனான சமாந்தரம்
பளிச்சிடுகிறது. அதன் அறிக்கைகள், இஸ்ரேல் குடியிருப்புகள் மற்றும் நகரங்கள் மீதான மட்டுப்படுத்தப்பட்ட
ரொக்கட் தாக்குதல்களை, காஸாவில் முழு சிவில் ஜனங்களுக்கும் எதிரான இஸ்ரேல் இராணுவத்தின் திடீர்
தாக்குதலுடன் சமப்படுத்துகிறது. பொதுமக்களை "மனிதக் கேடயங்களாக" பயன்படுத்துகிறது என தனது சொந்தக்
குற்றங்களை ஹமாஸ் மீது சுமத்தும் இஸ்ரேல் இராணுவத்தின் பொய்களை சிறந்த நாணயமாக அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதோடு,
இது இஸ்ரேலின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்ற பிரச்சாரத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இத்தகைய
சகல நடைமுறைகளுக்குமான அளவுகோள், ஏற்கனவே ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு
மற்றும் நவ காலனித்துவ ஆக்கிரமிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காஸா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கை அடுத்து, இலங்கையில் நடக்கும் யுத்தம்
உலகம் பூராவும் உள்ள உழைக்கும் மக்களுக்கு இன்னுமொரு தெளிவான எச்சரிக்கையாகும். பூகோள பொருளாதார
நெருக்கடி ஆழமடைந்துவருகின்ற மற்றும் ஏகாதிபத்திய பகைமைகள் உக்கிரமடையும் போது, பெரும் வல்லரசுகள்,
குறிப்பாக அமெரிக்கா, நேரடியாகவோ அல்லது பலவித உள்ளூர் பங்காளிகள் ஊடாகவோ தமது மூலோபாய
மற்றும் பொருளாதார நலன்களை காக்க முயற்சிக்கின்ற நிலையில், பலவித ஆக்கிரமிப்பு யுத்தங்களும் ஜனநாயக
உரிமைகள் வெளிப்படையாக மீறப்படுவதும் வழக்கமாகி வருகின்றது.
|