World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

A tribute to the SEP election campaign in Sri Lanka

இலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு பாராட்டு

By Peter Symonds
19 February 2009

Back to screen version

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, உள்நாட்டு யுத்தம், அரச அடக்கமுறை, இனவாதம் போன்ற நிலைமைகளின் கீழ் மாகாண சபை தேர்தலில் அண்மையில் மேற்கொண்டிருந்த உத்வேகமான கொள்கைப்பிடிப்பான பிரச்சாரத்தை உலக சோசலிச வலைத் தளம் பாராட்டுகிறது. அது சோசலிச அனைத்துலகவாதத்திற்கான போராட்டத்திற்கு ஒரு ஊக்கமளிக்கும் உதாரணமாக விளங்குவதோடு, எண்ணிலடங்கா தேசிய, இன, மொழி மற்றும் சாதி பிளவுகளால் முறிந்து போயுள்ள ஒரு உலகத்தில், அத்தகைய வேலைத்திட்டத்திற்காகப் போராடுவது சாத்தியமற்றது என வலியுறுத்துபவர்களை நேரடியாக நிராகரிக்கின்றது.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் யுத்தம் அலட்சியம் செய்யமுடியாத பிரச்சினையாகும். 25 ஆண்டுகால மோதல் 70,000 உயிர்களுக்கும் அதிகமாக பலிகொண்டுள்ளதோடு வடக்கு மற்றும் கிழக்கின் பெரும்பகுதியில் சாவையும் அழிவையும் கொண்டுவந்துள்ளது மட்டுமன்றி, வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவியுள்ளது. தீவு பூராவும் கனமாக ஆயுதம் தரித்த துருப்புக்கள் இருத்தப்பட்ட சோதனைச் சாவடிகள் இருப்பதும் குறிப்பாக தமிழர்கள் எதிர்கொள்ளும் எதேச்சதிகாரமான கைது அச்சுறுத்தல்களும் இடையராத பெளதீகரீதியான நினைவூட்டல்களாகும். ஏதாவதொரு வழியில் இனவாத அரசியலில் முழுமையாக மூழ்கிப் போய் யுத்தத்திற்கு நடைமுறையில் ஆதரவளிக்கும் பிரதான கட்சிகளும், ஊடகங்களுமே அரசியல் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகின்றன.

யுத்தத்தை எதிர்ப்பதோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து துருப்புக்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்கக் கோரும் கட்சி சோ.ச.க. மட்டுமே ஆகும். தான் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில்" ஈடுபட்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ கூறிக்கொள்வதை சோ.ச.க. வேட்பாளர்கள் நேரடியாக சவால் செய்தனர். ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தசாப்த காலங்களாக காட்டிய தமிழர் விரோத பாரபட்சங்களிலேயே யுத்தம் வேரூண்றியிருக்கின்றது என சோ.ச.க. சுட்டிக்காட்டியது. சமாதானத்துக்கும் ஜனநாயகத்துக்கும் போராடுவதற்கு பதிலாக, சிங்கள பெளத்த அரசை கட்டிக் காப்பதன் மூலம் சிங்கள ஆளும் தட்டுக்களின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் யுத்தமொன்றை நடத்திக்கொண்டிருக்கின்றது.

அதே சமயம், புலிகளுக்கும் அவர்களின் தமிழ் பிரிவினைவாத வேலைத்திட்டத்துக்கும் சோ.ச.க. அரசியல் ஆதரவு வழங்கவில்லை. புலிகள் தமிழ் முதலாளித்துவத் தட்டின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனரே அன்றி, சாதாரண உழைக்கும் மக்களின் நலன்களை எப்பொழுதும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. ஆரம்பத்தில் இருந்தே வெகுஜனங்களின் ஐக்கியத்துக்கு ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதை நிராகரித்த புலிகள், அதற்கு மாறாக பொருத்தமான பொருளாதார அடிப்படைகள் கொண்டிராத ஒரு தனியான தமிழ் அரசை கோரினர். புலிகள் "ஆயுதப் போராட்டத்தை" பூஜிப்பது, தமது அரசியல் எதிரிகளை சரீரரீதியில் அடக்குவதுடனும் சிங்கள பொதுமக்களை முட்டாள்தனமாக படுகொலை செய்வதுடனும் கட்டுண்டுள்ளது. இந்த செயல்கள் கொழும்பில் உள்ள சிங்கள மேலாதிக்கவாதிகளின் கைகளில் நேரடியாகப் பயன்படுகின்றன.

தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த வேலைத்திட்டமொன்றை அபிவிருத்தி செய்யும் சோ.ச.க., இலங்கை முதலாளித்துவத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிக்கின்றது. எப்பொழுதும் தொழிலாளர்களை பிளவுபடுத்துவதையும் முதலாளித்துவ அரசுக்கு முண்டுகொடுப்பதையும் இலக்காகக் கொண்டே யுத்தம் நடத்தப்படுவதோடு இனவாத அரசியலும் பயன்படுத்தப்படுகிறது என்பதை அதன் வேட்பாளர்கள் தெளிவுபடுத்தினர். யுத்தத்தோடு சுதந்திர சந்தை சீர்திருத்தத்தின் ஊடாக தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மீதான தாக்குதலும் பின்தொடர்கின்றது. யுத்தத்தையும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குல்களையும் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையில் வளர்ந்துவரும் இடைவெளியையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி, சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகப் போராடுவதேயாகும். அது தெற்காசியாவின் ஐக்கிய சோசலிச அரசுகளின் ஒரு பாகமான ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு ஒன்றியமாகும்.

இலங்கையில் சோசலிச அனைத்துலகவாதத்துக்கான போராட்டம், எப்பொழுதும் அசாதாரணமான அரசியல் தீவிரத்தை, உண்மையில் உடல் உத்வேகத்தை கோருகின்றது. 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமாக ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே, கட்சி சகல பங்கங்களிலும் இருந்து வந்த தாக்குதல்களை சந்தித்தது. அரச இயந்திரத்தால் அல்லது மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) சிங்களப் பேரினவாத துப்பாக்கிதாரிகளால் ஆறு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் யாராவது ஒருவரின் அச்சுறுத்தலுக்கு, சரீர வன்முறைகளுக்கு மற்றும் தொந்தரவுகளுக்கு உள்ளாகியுள்ளனர். உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்துலக ஆசிரியர் குழவின் இரு இலங்கை உறுப்பினர்கள் பற்றி குறிப்பிடலாம். புரட்சிகர அரசியலை பரிந்துரைத்த "குற்றத்திற்காக" 1987ல் சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் 51 நாட்கள் சிறைவைக்கப்பட்டார். 1983ல் யுத்தத்தின் தொடக்கத்தை குறிக்கும் தமிழர் விரோத படுகொலைகளின் மத்தியில் கே. ரட்னாயக்கவின் வீடு அரசாங்க சார்பு குண்டர்களால் எரித்து தரைமட்டமாக்கப்பட்டது.

கடந்த வாரக் கடைசியில் நடந்த தேர்தலானது அச்சுறுத்தல்கள், அரசியல் இடையூறுகள் மற்றும் அரச ஒடுக்குமுறைகளின் மத்தியிலேயே இடம்பெற்றது. இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும், விமர்சகர்களையும், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களையும் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்களையும் "புலி பயங்கரவாதிகளின்" ஆதரவாளர்கள் என மீண்டும் மீண்டும் முத்திரை குத்தினர். இந்த அச்சுறுத்தல் தள்ளிவைக்கப்பட முடியாதது. பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து இயங்கும் கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2006 ஆகஸ்ட்டில், சோ.ச.க. ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ் கிழக்கு மாவட்டமான திருகோணமலையில் உள்ள முல்லிப்பொத்தானையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். மார்ச் 2007 அன்று, சோ.ச.க. உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் வடபகுதி தீவான ஊர்காவற்துறையில் கடற்படை சோதனைச் சாவடிக்கு அருகில் வைத்து "காணாமல் போயுள்ளனர்". சோ.ச.க. பலமான பிரச்சாரமொன்றை முன்னெடுத்த போதிலும், அரசாங்கமும் இராணுவமும் மழுப்பியதோடு அந்த இருவர் தொடர்பாகவும் எந்தவொரு தகவலையும் தர மறுத்துவிட்டன.

இத்தகைய ஒரு அரசியல் சூழ்நிலையில், மேலோங்கிவரும் நிலைமைக்கு அடிபணிந்து, தேசிய முதலாளித்துவ கட்சிகளின் வட்டாரத்தில் ஒரு இடத்தை பெற்றுக்கொள்ளும் இலகுவான பாதையை தேர்ந்தெடுத்துக்கொள்ள நெருக்கும் இடைவிடாத அழுத்தங்கள் வருவதுண்டு. இலங்கையில் நவசமசமாஜக் கட்சி போன்ற மத்தியதர வர்க்க தீவிரவாத கருவிகளின் பங்கும் உண்டு. ஏதாவதொரு முதலாளித்துவ கட்சி தொடர்பாக மாயையை பரப்புவதே நவசமசமாஜக் கட்சியின் -போலியானது என நிரூபிக்கப்பட்ட- முழு சாதனையாக இருந்து வந்துள்ளது. ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படைகளை வெளிப்படையாகக் கைவிட்டு, 1964ல் சிறிமா பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்து கொண்டு லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.) செய்த காட்டிக்கொடுப்பில் மிகவும் முன்னேற்றமான வடிவத்தில் ஸ்தாபிக்கப்பட்ட அத்தகைய போக்குகளுக்கு நேர் எதிராகவே பு.க.க. ஸ்தாபிக்கப்பட்டது.

முதலாளித்துவ அபிவிருத்தி காலங்கடந்த இலங்கை போன்ற நாடுகளில், எந்தவொரு முன்னேற்றமான பாத்திரத்தையும் இட்டுநிரப்ப முதலாளித்துவம் இயல்பாகவே இலாயக்கற்றது எனத் தெரிவிக்கும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடே, சோ.ச.க. வேலைத்திட்டத்தின் அத்திவாரமாகும். கிராமப்புற வெகுஜனங்களை தம்பின்னால் அணிதிரட்டிக்கொண்டு, முக்கியமான நிலவுடமை சீர்திருத்தம் உட்பட நிறைவேற்றப்படாத ஜனநாயகப் பணிகளையும் முன்னெடுக்கக் கூடிய, மற்றும் உலக சோசலிச புரட்சியின் முக்கிய பகுதியாக சமுதாயத்தை சோசலிச அடிப்படையில் மாற்றியமைப்பதை ஆரம்பிக்கக்கூடிய ஒரே வர்க்கம் தொழிலாள வர்க்கமேயாகும். இந்த முனநோக்கு 1917 ரஷ்யப் புரட்சியில் உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதோடு ஆசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்காவில் நூறுதடவை எதிர்மாறாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டு பூராவும், இந்த அல்லது அந்த முதலாளித்துவ தலைவர் அல்லது கட்சியின் பெயரளவிலான முன்னேற்ற தரம் பற்றிய பலவித ஸ்டாலினிச மற்றும் சந்தர்ப்பவாத கட்சிகளின் ஊக்கமளிப்பு, 1925-27 சீனப் புரட்சியின் துன்பகரமான தோல்வியில் தொடங்கி, தொழிலாள வர்க்கத்திற்கு அடுத்தடுத்து அழிவுக்கு வழிவகுத்தது.

பூகோள முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடி புரட்சிகர அரசியலில் ஒரு புதிய ஆர்வத்தை உருவாக்கிவிட்டுள்ள நிலையில், விஞ்ஞான பூர்வமான முன்னோக்குக்கான சோ.ச.க. யின் நீண்டகால போராட்டம், தொழிலாளர்களதும் இளைஞர்களதும் அனுபவங்களில் ஊடுருவத் தொடங்கியுள்ளது. இலங்கையில் உத்தியோகபூர்வ தேர்தல் பிரச்சாரங்களில் இராணுவவாதமும், பிளவுபடுத்தும் இனவாத அரசியலும் செல்வாக்கு செலுத்தும் அதே வேளை, கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட அழிவுகளுக்கு ஒரு மாற்றீட்டை எதிர்பார்ப்பவர்களின் மத்தியில் சோ.ச.க. யின் வேலைத் திட்டம் உணர்ச்சியைத் தட்டியெழுப்பியுள்ளது. தசாப்த காலங்களாக இனவாதப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பரந்த பெரும்பான்மையினரான சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கம், ஆற்றல் மிக்க வர்க்க ஒற்றுமையை இன்னமும் கொண்டிருப்பதோடு யுத்தத்தையும் எதிர்க்கின்றது. அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்கள், புலிகளின் தோல்வியானது இனவாத மோதல்களுக்கு முடிவுகட்டி தமது வாழ்க்கையில் சில முன்னேற்றங்களை கொண்டுவரும் என்ற பொய்யான எதிர்பார்ப்பில் வாக்களித்திருப்பர்.

எவ்வாறெனினும், சோ.ச.க. பிரச்சாரத்தின் முக்கியத்துவம் இலங்கைக்கும் அப்பால் சிறப்பாக சென்றடைந்துள்ளது. தெற்காசியாவுக்கான ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற அதன் முன்நோக்கு மூன்றாம் உலகம் என சொல்லப்படுவது பூராவும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உடனடிப் பொருத்தமாக உள்ளது. இந்த முறையிலேயே, இன, வகுப்பு மற்றும் சாதி பதட்டங்களால் இந்தியத் துணைக்கண்டத்தை பிளவுபடுத்திய 1947-48 தீர்ப்புகளில், தெற்காசியாவில் காணப்படும் பல மோதல்களுக்கான மூலங்களை காணமுடியும். பூகோளத்தின் ஏனைய பகுதியையும் பற்றிக்கொண்டுள்ள யுத்தங்களின் வேர்களை, முன்நாள் காலனித்துவ அரசுகளை முடிவுக்குக் கொண்டுவந்த இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குகளில் கண்டுகொள்ள முடியும்.

ஒவ்வொரு விவகாரத்திலும், தமது முன்னைய காலனித்துவ எஜமானர்களின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பாதுகாப்பதாக அளித்த உத்தரவாதத்துக்கு பிரதியுபகாரமாகவே உள்ளூர் ஆளும் தட்டுக்களுக்கு "சுதந்திரம்" கையளிக்கப்பட்டது. ஆபிரிக்க கண்டத்தில் காலனித்துவ சிற்பிகளால் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய எல்லைகள் என்ற எதேச்சதிகாரமான ஒட்டுப்போடும் வேலைகள் அல்லது ஒட்டோமான் பேரரசின் வீழ்ச்சியை அடுத்து மத்திய கிழக்கில் திணிக்கப்பட்ட எல்லைகளும், பிணக்குகள் மற்றும் மோதல்களின் இடையராத ஊற்றாக இருந்துவருகின்றன. நாட்டுக்கு நாடு முதலாளித்துவ அரசியல் பிரதிநிதிகள் இத்தகைய எல்லைகளை ஏற்றுக்கொண்டதோடு தமது சொந்த ஆட்சிக்கான தளத்தை அமைத்துக்கொள்ள சாதி, மொழி, இனப் பிளவுகளை வெட்கமின்றி கையாள்கின்றன.

குளிர் யுத்த காலத்தின் போது, ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் நாடுகளுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்திக்கொள்ள இத்தகைய பலவித தட்டுக்களால் முடிந்தது. தமது சொந்த தேவைகளுக்காக சோவியத் மற்றும் சீன ஸ்டாலினிஸ்டுகளால் ஆதரிக்கப்பட்ட, இந்தோனேஷியாவில் சுகர்னோ, எகிப்தில் கமல் அப்டெல் நாஸர் மற்றும் தன்ஸானியாவில் ஜூலியஸ் நயூரேரே போன்ற தலைவர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சோசலிச தோரணையை எடுத்தனர். எவ்வாறெனினும், அவர்களது திட்டமிடல்கள் அழிவில் முடிந்தன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர், முதலாளித்துவ தேசியவாதத்தின் சகலவிதமான நிலைப்பாடுகளின் தர்க்கம், உடனடியாக ஒப்புவிக்கப்பட்டன. அடுத்தடுத்து மத்திய கிழக்கில் பி.எல்.ஓ. முதல், தென் ஆபிரிக்காவில் ஏ.என்.சி. வரை "ஆயுதப் போராட்டங்கள் மற்றும் "தேசிய விடுதலையின்" பலவித ஆதரவாளர்கள் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துகொண்டனர். அத்துடன் போர் உடைகளை வியாபார உடைகளாக மாற்றிக்கொண்டதோடு முதலாளித்துவ சந்தையையும் அனைத்துக் கொண்டனர்.

அனைத்துலக சோசலிச கொள்கைகளுக்காக நான்காம் அகிலத்தின் பதாகையின் கீழ் உத்வேகத்துடன் போராடும் மற்றும் பெயரளவிலான ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்ட உருவங்களுக்கு தலைவணங்க மறுக்கும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமேயாகும். உலகின் அபிவிருத்தி செய்யப்படாத பிராந்தியங்களில் உள்ள முதலாளித்துவ ஆட்சியாளர்களின் 60 ஆண்டுகால வரலாற்றுப் பெறுபேறான வறுமை, பொருளாதார பின்னடைவு மற்றும் உடன்பிறந்தவர்களைக் கொல்லும் மோதல்கள் நிறைந்த சதுப்பு நிலத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு தெளிவான அரசியல் பாதையை காட்டுவதன் மூலம், சோ.ச.க. தேர்தல் பிரச்சாரமானது இலங்கையிலும் அனைத்துலகிலும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை புறநிலையில் பலப்படுத்தியுள்ளது.

நாம் சோ.ச.க. யின் வேலைத்திட்டத்தையும் அதன் நீண்ட அரசியல் போராட்ட சாதனையையும் கவனமாக கற்குமாறும் ஆசியா, ஆபிரிக்கா மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா பூராவும் தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகர தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புதிய பகுதிகளையும் சோசலிச சமத்துவக் கட்சிகளையும் கட்டியெழுப்ப அதில் இணையுமாறும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved