World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Stuttgart:Demonstration againt the war in SriLanka

ஸ்ருட்கார்ட்: இலங்கையில் யுத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்

By our Reporters
11 February 2009

Back to screen version

கடந்த சனிக்கிழமை நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கையில் தொடரும் படுகொலைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்பாடசாலையான தமிழாலயத்தின் பெயரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஸ்ருட்கார்ட் நகர மத்தியில் பதாகைகளுடனும், படங்களுடனும் கொலைக்குக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் ஒரு தொகை மாணவர்களும் இளைஞர்களும் அடங்குவர். இவர்கள் இலங்கையில் என்ன நடைபெறுகின்றது என்பதை ஜேர்மன் மக்களுக்கும், உலகத்திற்கும் எடுத்துக்காட்டுவதில் தமது உறுதிப்பாட்டை காட்டினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக குண்டுவீச்சில் ஈடுபடும் இலங்கை அரசாங்கம் பொதுமக்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதலை நடாத்துகின்றது. இதனால் கடந்த வாரத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இலங்கையின் வட-கிழக்கில் ஒரு சிறிய பிரதேசத்தினுள் 250,000 மக்கள் குடிநீர், மருந்து, உணவுப்பொருட்கள் எதுவுமில்லாது அகப்பட்டுள்ளனர்.

லூட்விக்ஸ்பேர்க்கில் இருந்து ஒரு குடும்பத்தினர் இவ்விடயங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக ஸ்ருட்கார்ட்டிற்கு வந்திருந்தனர். இக்குடும்பத்தின் பெற்றோர் வடஇலங்கையின் தமிழ் பிரதேசமான யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.

நாங்கள் இங்கு வந்தது ஏன் என விபரித்த அக்குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ''இலங்கை அரசாங்கம் பொதுமக்களை குண்டுவீசி கொல்கின்றது. அதில் தப்பிபிழைக்கும் மக்களுக்கு எவ்விதமான உணவுகளும் கிடைப்பதில்லை. ஒவ்வொரு நாளும் பாரிய அழிவு நடைபெறுகின்றது'' என்றார். ''நாங்கள் ஜேர்மன் மக்களுக்கு அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை தெரியப்படுத்தவே இங்கு வந்துள்ளோம். தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நாளாந்தம் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இறக்கின்றனர்'' என அச்சிறுவனின் சகோதரி குறிப்பிட்டார்.

ஸ்ருட்கார்ட்டை சேர்ந்த ஸமீரா, சரண்யா என்ற இரு இளம் பெண்கள்'' நாங்கள் ஏன் இன்று இங்கு வந்துள்ளோம்? அங்குள்ள தமிழ்மக்களுக்கு உடனடியாக ஒரு தீர்வு ஒன்றை காணவேண்டும். அங்கு எங்களது உறவினர்கள் வசிக்கின்றனர். அவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அவர்கள் பாரிய துன்பத்தை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை. இவ்வாறு நிலைமை தொடரமுடியாது'' என தெரிவித்தனர்.

இதற்கு என்ன தீர்வை நாங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் என கேட்கப்பட்டதற்கு, ''முதலாவதாக யுத்தம் நிறுத்தப்படவேண்டும். உலகம் முழுவழும் இலங்கையில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறிந்துகொள்ளவேண்டும். இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான கவனத்தை நாங்கள் கவருமோமானால், அது உலகம் முழுவதும் விவாதிக்கப்படும். அவ்வாறானால், ஒன்றுகூடி அப்பிரச்சனையை தீர்ப்பது சாத்தியமாகும். ஏதாவது கட்டாயம் நடந்தாகவேண்டும். அதனால் தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம்.'' என்றனர்.

கடந்தவாரம் பேர்லினில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தல் கலந்துகொண்ட தர்சி என்னும் மாணவி குறிப்பிடுகையில் ''ஆர்ப்பாட்டங்களாலும், கூட்டங்களாலும் வட இலங்கையில் நடைபெறும் ''மோசமான நிலைமையை'' இங்குள்ள பொதுமக்களுக்கு அறியப்படுத்தலாம் என நம்புவதாகவும், அங்குள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், உணவு மருந்து போன்றவையும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. நாளாந்தம் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்களும் இறக்கின்றார்கள். இந்த கொலைகள் நிறுத்தப்படவேண்டும்'' என்றார்.

பெளல் என்னும் ஒரு இளைஞன் காசாவில் நடைபெறும் யுத்தம் தொடர்பான பதாகையுடன் ஸ்ருட்கார்ட்டில் இருந்து வந்திருந்தார். ''ஸ்ரீலங்கா அரசாங்கமும் இஸ்ரேல் அரசாங்கம் காசாவில் செய்வதுபோன்ற ஒரு யுத்தத்தை செய்கின்றது. இங்குள்ள செய்தித்துறையினரும் அங்குள்ள மோசமான நிலைமை பற்றி ஒன்றும் தெரிவிப்பதில்லை. ஸ்ரீலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை முழு உலகமும் தெரியவேண்டும்'' என்றார். எவ்வாறு இந்த பயங்கரத்தை நிறுத்துவது என அவரிடம் கேட்டபோது, தமிழர்களும், சிங்களவர்களும் எதிரிகளல்ல. சிங்கள மக்கள் அங்கு சிறப்பாக வாழவில்லை. அவர்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என அவர் கூறினார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் குழுவினர் இவ் ஆர்ப்பாட்டத்தில், இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சோசலிச முன்னோக்கு - இலங்கையின் வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்று! என்ற பிரசுரத்தை தமிழ், ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் விநியோகித்தனர். அது இலங்கையில் ராஜபக்ஷ அரசாங்கத்தால் நடாத்தப்படும் கொலைகளுக்கும், இஸ்ரேலிலும், ஈராக்கிலும் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏகாதிபத்தியத்தாலும் அதன் கையாட்களாலும் நடாத்தப்படும் யுத்தங்களுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டியது.

நூற்றுக்கணக்காக விநியோகிக்கப்பட்ட அப்பிரசுரத்தில் ''தமிழ் மக்களினதும், ஏகாதிபத்திய நாடுகளில் பரந்து வாழும் தமிழ் மக்களினதும் நேசசக்தி இந்திய, ஜேர்மன் அரசோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ அல்ல, தொழிலாள வர்க்கமேயாகும். அதுதான், இலங்கையில் முதலாளித்துவ அரசை தூக்கி வீசி, ஏகாதிபத்திய உலக ஒழுங்கிற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பாகமாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை உத்திரவாதப்படுத்தி போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆற்றலையும் கொண்டிருக்கும் ஒரேயொரு சமூக சக்தியாகும்'' என குறிப்பிட்டிருந்தது.

அதன் முடிவில்' 'நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியானது இலங்கையில் உள்ள உழைக்கும் மக்களை அவர்களின் இனவழி மூலத்திலிருந்து சுயாதீனமாக ஒன்றிணைப்பதற்காக போராடுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே வடக்கு, கிழக்கிலிருந்து ஆயுதப்படைகளை நிபந்தனையின்றி உடனடியாக வெளியேறுமாறு கோருகிறது. சோசலிச சமத்துவக் கட்சியானது தெற்காசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் பகுதியாக சிறீலங்கா ஈழ சோசலிச குடியரசை நிறுவுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்கிறது'' என குறிப்பிட்டிருந்தது.

இந்த முன்னோக்கை பற்றி பல இளைஞர்கள் ஆர்வமுற்று, ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கு எவ்வாறு இந்த யுத்தத்திற்கு முடிவு கட்ட முடியும் என்பது பற்றி பக்கம் சார்பற்ற முறையில் தமது ஆதரவை காட்டியபோது, ஆர்ப்பாட்டத்தின் ஆரம்பத்தில் பின்னணியில் நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவான அமைப்பாளர்களின் கண்ணை உறுத்தியது.

ஒரு சோசலிச அறிக்கை விநியோக்கிக்கப்படுகின்றது என அறிந்தவுடன், அவர்கள் அதை தடை செய்ய முயன்றனர். உலக சோசலிச வலைத் தளத்தின் குழுவினரை ஆர்ப்பாட்டத்தில் அகற்றவும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களை அணுகவிடாது அந்நியப்படுத்தவும் முயன்றனர். ஒரு ஆத்திரமடைந்த மனிதன் தடியால் தாக்கவும் முயன்றார். இறுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்தின் குழுவினரை சுற்றி நின்று அச்சுறுத்தியதுடன், தகாதவார்த்தைகளால் தூசித்ததுடன் பிரசுரங்களையும் பறித்தெடுக்கவும் முயன்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஏனைய ஆர்ப்பாட்டங்களிலும் உலக சோசலிச வலைத் தளத்தின் குழுவினரை தாக்குவதாக அச்சுறுத்தியிருந்தனர். ஒரு சோசலிச முன்னோக்கு வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் பரப்பப்படுவது தொடர்பாக அவர்கள் பதட்டமும், பயமும் அடைந்துள்ளார்கள். ஒரு சோசலிச முன்னோக்கானது, அவர்களால் பரப்பப்படும் முன்னோக்கான வடகிழக்கு இலங்கையில் ஒரு சிறிய தனியரசை இந்தியா போன்ற ஒரு வல்லரசின் ஆதரவுடனான நிறுவ முற்படுவதற்கு எதிரானதாகும்.

அவர்கள் யுத்தத்திற்கு ராஜபக்ஷ அரசாங்கத்தையும், இந்தியா உள்ளடங்கலான ஏகாதிபத்திய அரசுகளையும் காரணமாக காட்டாது, அப்பாவி சிங்கள பொதுமக்களே காரணம் என்கின்றனர். சிலர் உலக சோசலிச வலைத் தளத்தின் குழுவினரை நோக்கி ''உங்கள் தகப்பன் சிங்களவனா'' என கத்தினர்.

குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், லண்டன், பாரிஸ், பேர்லின் போன்று பல நகரங்களில் பாரிய மக்களை கொண்ட ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னர், இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தவர்கள் ஒரு சிறியதொகை மக்களுக்கே அழைப்புவிட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மொழியிலான ஒரேயொரு வலைத்தளமே விளம்பரமளித்திருந்தது. இம்மாநிலம் முழுவதிலுமுள்ள கார், உருக்கு, கட்டிட தொழிற்துறையில் ஆயிரக்கணக்கான தமிழ் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இலங்கையின் யுத்தத்திற்கு எதிராக இலகுவாக பலமடங்கு மக்களை அணிதிரட்டியிருக்க முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved