World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lanka: SEP and ISSE hold meeting in Colombo to launch election campaign இலங்கை: சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ. தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க கொழும்பில் பொதுக் கூட்டத்தை நடத்தின By our correspondents இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் பெப்பிரவரி 14 நடக்கவுள்ள இரு மாகாண சபைகளுக்கான தேர்தலில் கட்சியின் பிரச்சாரத்தை முன்னெடுக்க கொழும்பில் ஜனவரி 8 பொதுக் கூட்டமொன்றை நடத்தின. சோ.ச.க. மத்திய மாகாணத்தில் 19 வேட்பாளர்களையும் வட-மேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் 19 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளது. தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் நிபுணர்களும் கூட்டத்தில் பங்குபற்றினர். கூட்டத்துக்கு தலைமை வகித்த சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் கே. ரட்னாயக்க, மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் முடியும் முன்னரே ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக சுட்டிக்காட்டினார். "அரசாங்கம் தனது அரச அதிகாரங்களையும் பொது வளங்களையும் தனது கையில் எடுத்துக்கொள்வதன் மூலமும் உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள் மீதும் பாய்வதற்கு ஒரு மக்கள் ஆடையை பெறுவதன் பேரில் அது மீண்டும் முன்னெடுத்த இனவாத யுத்தத்தால் உருவாக்கப்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை சுரண்டிக்கொள்வதன் மூலமும் இரு மாகாண சபைகளிலும் வெற்றி பெற முயற்சிக்கின்றது," என அவர் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைமையகம் இருந்த கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றியதை அடுத்து இலங்கையில் இரண்டு தசாப்தகால உள்நாட்டு யுத்தம் ஒரு திருப்புமுனையை அடைந்துள்ளது என ரட்னாயக்க விளக்கினார். காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக தற்போது இஸ்ரேல் நடத்திக்கொண்டிருக்கும் இனப்படுகொலை யுத்தத்துடன் ஒப்பிட்ட அவர், புலிகள் மீதான வெற்றியானது ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான தாக்குதல்களுக்கு முடிவுகட்டாது என எச்சரித்தார். சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா நுவரெலியா மாவட்டத்தில் கட்சியின் வேட்பாளர்களுக்கு தலைமை வகிக்கின்றார். தமிழில் உரையாற்றிய அவர், இராஜபக்ஷ யுத்தத்தையும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் மீண்டும் புதுப்பிப்பார் என 2005 ஜனாதிபதி தேர்தலின் போது எச்சரிக்கை விடுத்த ஒரே கட்சி சோ.ச.க. என்பதை நினைவுபடுத்தி உரையைத் தொடங்கினார். கிழக்கில் புலிகளின் கோட்டைகளை கைப்பற்றிய பின்னர் அமுல்படுத்தப்பட்டுள்ள இராணுவ ஆக்கிரமிப்பு, யுத்தம் தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவே என்ற அரசாங்கத்தின் கூற்றை அம்பலப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்தார். "நான் நுவரெலியா மாவட்டத்தில் சோ.ச.க. வேட்பாளாராக போட்டியிடுகிறேன். அங்கு வாழும் பெரும்பான்மையான தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் மோசமான நிலைமைகளின் வாழ்கின்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரசும் மலையக மக்கள் முன்னணியும் அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ளன. சர்வதேச தேயிலைச் சந்தையின் வீழ்ச்சி தொழிலாளர்களை பாதித்துள்ளது. சில தோட்டங்களில் தேயிலைப் பொதிகளை சம்பளமாகக் கொடுக்க நிர்வாகங்கள் முயற்சிக்கின்றன!" "இது எங்களுடைய யுத்தம் அல்ல. அரசாங்கம் தொழிலாளர்களை இன ரீதியில் பிரிப்பதற்கு எதிராக நாம் இனப் பிரிவினைகளுக்கு அப்பால் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த போராடுகிறோம். சோசலிசத்துக்காக போராடவும் யுத்தத்துக்கு முடிவுகட்டவும் தொழிலாளர்களின் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான முதலாவது நிபந்தனையாக வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை திருப்பியழைக்கும் எமது கோரிக்கை உள்ளது. இந்த வேலைத்திட்டத்துக்காக போராடும் நாம் தனியான தமிழ் முதலாளித்துவ அரசுக்கான புலிகளின் முன்நோக்கை எதிர்க்கின்றோம். தெற்காசியாவில் பரந்த சோசலிச குடியரசுகளை அமைப்பதன் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை கட்டியெழுப்ப சோ.ச.க. போராடுகிறது," என விளக்கி தேவராஜா உரையை முடித்தார். ஐ.எஸ்.எஸ்.ஈ. தலைவர் கபில பெர்ணான்டோ புத்தளம் மாவட்ட வேட்பாளராவார். 25 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய அனைத்து இளைஞர்களது வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக் காட்டினார். "இராணுவச் செலவு கடந்த மூன்றாண்டுகளாக மிகப் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி, அதே போல் ஏனைய சமூக சேவைகளுக்கான செலவு வெட்டித்தள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கான வசதிகள் சீரழிந்துகொண்டிருக்கின்றன," என அவர் தெரிவித்தார். "சர்வதேச தொழிலாளர் அமைப்பின் படி, இளைஞர்களின் வேலையின்மை புள்ளி இலங்கையில் 22.4 ஆக உள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடி இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற நிலையில், இளைஞர்களுக்கு இருந்த மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புக்களும் மொத்தமாக மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே இளம் தொழிலாளர்கள் வேலை வெட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு அரசாங்கத்தால் விட்டுவைக்கப்பட்டுள்ள ஒரே வாய்ப்பு இராணுவத்தில் சேர்வதேயாகும். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுத்தத்தில் பீரங்கிகளுக்கு இரையாகப் பயன்படுத்தப்படுவதோடு அண்மைய மாதங்களில் அதிகளவிலானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது முடமாக்கப்பட்டுள்ளனர். 60 ஆண்டுகாலமாக நாட்டை ஆளும் இலங்கை முதலாளித்துவவாதிகளே இதற்கு பொறுப்பாளிகளாவர். சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ், ஆழமடைந்துவரும் பூகோள பொருளாதார நெருக்கடி மற்றும் யுத்தத்தின் விளைவாக பிராந்தியம் பூராவும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் சிரமங்களை பற்றி உரையாற்றினார். அவர் குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இலங்கை மற்றும் இந்திய கடற்படையினரால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதை சுட்டிக்காட்டினார். எந்தவொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்துக்கு தேசிய ரீதியில் தீர்வு கிடையாததோடு தொழிலாளர்கள் தமது பொது வர்க்க நலன்களைச் சூழ தேசிய எல்லைகளை கடந்து தமது போராட்டங்களை ஐக்கியப்படுத்த வேண்டும் என பீரிஸ் விளக்கினார். சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் கூட்டத்தில் பிரதான உரையை நிகழ்த்தினார். "இந்த மாகாண சபை தேர்தலில் இரு மாவட்டங்களில் சோ.ச.க. வேட்பாளர்களை நிறுதியுள்ள அதே வேளை, சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்தின் நோக்கமானது இலங்கையில் மட்டுமன்றி இந்தியத் துணைக்கண்டத்திலும் மற்றும் அனைத்துலக ரீதியிலும் தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் எரியும் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்க்க ஒரு சோசலிச வேலைத் திட்டத்தை முன்வைப்பதும் அதைப் பற்றி கலந்துரையாடுவதுமேயாகும்," என அவர் விளக்கினார். தனது யுத்தம் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவரும் என்ற இராஜபக்ஷவின் மோசடியான கூற்றை சுட்டிக்காட்டிய டயஸ், "யுத்த வெற்றிகளை" பாராட்டுவதற்கு பின்னால் தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான ஜனநயாக விரோத மற்றும் எதிர்ப்போக்கு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது என விளக்கினார். இரண்டு நாட்களுக்கு முன்னர் எம்.டி.வி./சிரச ஒளிபரப்பு நிலையத்தை ஆயுதம் தரித்த குண்டர்கள் தாக்கி அழித்ததை அவர் சுட்டிக்காட்டினார். கூட்டம் நடந்த அதே தினம் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். "எம்.டி.வி. மற்றும் விக்கிரமதுங்கவும் தொழிலாள வர்க்கத்தின் நண்பர்கள் அல்ல, மாறாக முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியாகும். அவர்கள் இராஜபக்ஷ அரசாங்கத்துடன் கொண்டுள்ள வேறுபாடு, யுத்தத்தை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் தொழிலாள வர்க்கத்தை எப்படி அடக்குவது என்பதில் கையாளும் தந்திரம் பற்றியது மட்டுமே... இராஜபக்ஷ அரசாங்கம் விக்கிரமதுங்கவையும் எம்.டி.வி. யையும் நடத்தும் முறை இதுவெனில், தனது உண்மையான வர்க்க எதிரியான தொழிலாள வர்க்கத்தை எவ்வாறு நடத்தும்?" என டயஸ் வினவினார். இராஜபக்ஷ அரசாங்கத்தின் கொடூரமான நடவடிக்கைகளில் இருந்து எழும் ஆபத்தான சூழ்நிலையை சந்திக்க தொழிலாள வர்க்கம் கடுமையான அரசியல் தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என டயஸ் தெரிவித்தார். தொழிலாள வர்க்கம் ஆளும் கும்பலின் அனைத்து கோஷ்டிகளில் இருந்தும் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும், இது பலவித மத்தியதர வர்க்க இடதுசாரி வாய்வீச்சாளர்களில் இருந்து பிரிவதையும் வலியுறுத்துகிறது, என அவர் வலியுறுத்தினார். நவ சமசமாஜக் கட்சியினதும் ஐக்கிய சோசலிச கட்சியினதும் (ஐ.சோ.க.) தலைவர்கள் இப்போது யுத்தத்தை முழுமையாக ஆதரிக்கும் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி) உட்பட பலவித எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து மாயைகளை ஊக்குவிக்கின்றனர் என அவர் விளக்கினார். முதலாளித்துவ கட்சிகளுடன் சந்தர்ப்பவாத கூட்டணிகளை ஏற்படுத்திக்கொள்வதில் நீண்ட வரலாறு படைத்த நவசமசமாஜ மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும், தொழிலாள வர்க்கம் அரசியல் அரங்கில் சுயாதீனமாக தலையிடுவதை கசப்புடன் எதிர்க்கின்றன, என அவர் தெரிவித்தார். கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது தொடர்பான அரசாங்கத்தின் போர் ஆரவாரத்தை சவால் செய்த டயஸ், "யாருடைய யுத்தம் இது? தொழிலாள வர்க்கத்தின் அல்லது ஒடுக்கப்பட்டவர்களின் யுத்தம் அல்ல" என தெரிவித்தார். யுத்தத்தின் தோற்றத்தை மீட்டிப் பார்த்த அவர்: "1983ல் தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை படுகொலையின் பின்னர் வெளிப்படையான யுத்தம் ஆரம்பமானது. ஆனால் பல தசாப்தங்களாக தமிழர்களுக்கு எதிராக கொழும்பில் உள்ள சிங்கள மேலாதிக்கவாத தட்டுக்களால் முன்னெடுக்கப்பட்ட இனவாத வேலைத்திட்டத்தின் விளைவே இந்த யுத்தமாகும். "1983ல் யூ.என்.பி. ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன யுத்தத்தை ஆரம்பித்த போது, அவர் பூகோள பொருளாதாரத்துக்கு நாட்டை ஒருங்கிணைக்கும் தனது நடவடிக்கைகளின் தாக்கத்துக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தை நசுக்க முயற்சித்தார். யுத்தத்தின் வர்க்க அடிப்படையை வலியுறுத்தி அதை எதிர்த்தது சோ.ச.க. யின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) மட்டுமே. யுத்தம் எங்களது யுத்தம் அல்ல என வலியுறுத்திய பு.க.க. 'யுத்தத்துக்கு ஒரு சதமோ அல்லது ஒரு ஆளோ கொடாதே' என பிரகடனம் செய்தது," என தெரிவித்தார். கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதை "பயங்கரவாதத்துக்கு எதிரான உலகப் போராட்டத்தில் ஒரு பெரும் வெற்றியாக" இராஜபக்ஷ பாராட்டுவது பரந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என டயஸ் சுட்டிக்காட்டினார். "இலங்கை அழிவுகரமான ஏகாதிபத்திய யுத்ததுடன் மேலும் மேலும் நெருக்கமாக இணைந்துகொள்ளப் போகிறது என்பதே இதன் அர்த்தம்" என அவர் கூறினார். அமெரிக்காவின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்துக்கு" அரசாங்கம் வழங்கும் ஆதரவு, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் காஸாவிலும் பிற்போக்கு யுத்தங்களை ஆதரிப்பதாகும். தெற்காசியாவில் வளர்ச்சிகண்டுவரும் அரசியல் நெருக்கடியுடன், அமெரிக்கா மேலும் மேலும் இலங்கையில் கவனம் செலுத்திவருகின்றது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அதன் காலனித்துவ ஆட்சி 1942ல் இந்தியாவை விட்டு வெளியேறு என்ற சக்திவாய்ந்த காலனித்துவ விரோத இயக்கத்தை எதிர்கொண்ட நிலையில், அது தீவை பிராந்தியத்தின் அதன் இராணுவத் தளமாக மாற்றிய வரலாற்று சம்பவத்தை டயஸ் மேற்கோள் காட்டினார். காஸாவில் அமெரிக்க ஆதரவிலான இஸ்ரேலின் யுத்தத்துக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் வளர்ச்சி கண்டுவருவதை சுட்டிக்காட்டி டயஸ் தனது உரையை முடித்தார். "இந்த சக்திகளை உலக சோசலிசப் புரட்சி மூலோபாயத்துடன் ஐக்கியப்படுத்த வேண்டும். இதை வரலாற்று ரீதியில் பரீட்சிக்கப்பட்ட மற்றும் ஒப்புவிக்கப்பட்ட முன்நோக்கு மற்றும் வேலைத்திட்டத்தை கொண்ட ஒரு இயக்கத்தால் மட்டுமே செய்ய முடியும். அது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாகும்." தொழிலாளர்களும் இளைஞர்களும் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்தில் நடைமுறையில் பங்குபற்றுவதோடு கட்சியில் இணைய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். "சோ.ச.க. யுத்தத்துக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்றது" என்ற தலைப்பில் ஜனவரி 10 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டு அதன் பிரச்சாரத்தை அறிவித்தது. |