World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan election: Vote for the Socialist Equality Party

இலங்கை தேர்தல்: சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்

By the Socialist Equality Party
13 February 2009

Back to screen version

இலங்கையில் பெப்பிரவரி 14ம் திகதி நடக்கவுள்ள மாகாண சபை தேர்தலில், சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) உழைக்கும் மக்களை அதன் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுக்கின்றது. சோ.ச.க. க்கு அளிக்கும் ஒரு வாக்கு, அரசாங்கத்தின் இனவாத யுத்தம், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான ஆழமடைந்துவரும் தாக்குதல்களுக்கு முடிவுகட்டும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்துக்கான வாக்காகும்.

சோ.ச.க. மத்திய மாகாணத்தில் நுவெரலியா மற்றும் வடமத்திய மாகாணத்தில் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 19 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. நுவரெலியா வேட்பாளர்களுக்கு மயில்வாகனம் தேவராஜாவும் புத்தளம் மாவட்ட வேட்பாளர்களுக்கு நிஹால் கீகியனகேயும் தலைமை வகிக்கின்றனர். இவர்கள் இருவரும் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் உட்பட சகல தொழிலாளர்களதும் ஜனநாயக உரிமைகளையும் வர்க்க நலன்களையும் பாதுகாக்கும் போராட்டத்தில் பல தசாப்த அனுபவங்களை கொண்ட நீண்ட கால சோ.ச.க. உறுப்பினர்களாவர்.

இந்தத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவாலும் மற்றும் அவரது அரசாங்கத்தாலும் மீண்டும் தொடக்கிவைக்கப்பட்டு உக்கிரமாக்கப்பட்ட குற்றவியல் யுத்தம் செல்வாக்கு செலுத்துகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராஜபக்ஷ புதுப்பித்துள்ள "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்", 25 ஆண்டு கால யுத்தத்தில் முன்னெப்போதும் இல்லாதளவு உயிரிழப்புக்கள், அழிவுகள் மற்றும் துன்பங்களை விளைவாக்கியுள்ளது. இதை வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), சிங்கள அதிதீவிரவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய பிரதான எதிர்க் கட்சிகள் முழுமையாக ஆதரிக்கின்றன.

சோ.ச.க. வேட்பாளர்கள் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை பாதுகாப்புப் படைகளை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்குமாறு கோருகின்றனர். இந்த கோரிக்கையை நாம் அபிவிருத்தி செய்யும் போது, சோ.ச.க. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ அல்லது அவர்களது ஈழம் எனும் முதலாளித்துவ தனி அரசுக்கான கோரிக்கைக்கோ அரசியல் ஆதரவு வழங்கவில்லை. நாம் சோசலிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றுக்கான பொதுப் போராட்டமொன்றில் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களையும் ஐக்கியப்படுத்த முயற்சிக்கின்றோம்.

தீவு ஒன்றுக்குள் சோசலிசம் சாத்தியமற்றது என சோ.ச.க. வலியுறுத்துகிறது. கொழும்பு அரசாங்கத்துக்கும் உள்ளூர் முதலாளிகளுக்கும் எதிரான எந்தவொரு போரட்டமும் பலம்வாய்ந்த சர்வதேச சக்திகளை எதிர்கொள்கின்றது. இராஜபக்ஷவின் யுத்தத்துக்கு பின்னால் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் உள்ளனர், எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்கா இருக்கின்றது. அதே சமயம், இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாகம் ஆவர். ஆசியா மற்றும் பூகோளம் பூராவும் உள்ள தொழிலாளர்களைப் போல் இவர்களும் அதே பூகோள இராட்சத நிறுவனங்களால் சுரண்டப்படுகிறார்கள்.

சோ.ச.க. இதனாலேயே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதனது சகோதரக் கட்சிகளுடன் சேர்ந்து, தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுகின்றது.

ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது ஆளும் ஐக்கிய மக்கள் சுத்ந்திர முன்ணியும் புலிகள் மீதான தமது இராணுவ வெற்றியை பற்றி மட்டும் பிரச்சாரம் செய்கின்றன. யுத்தத்தின் முடிவானது சுபீட்சம் மற்றும் ஜனநாயகத்தின் புதிய காலகட்டத்தை முன்னறிவிக்கின்றது என்ற அவரது வாக்குறுதி ஒரு மோசடியாகும். கடந்த 60 ஆண்டுகளாக கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், தொழிலாளர்களை பிளவுபடுத்தவும் ஒரு சமூக ஆதரவு தளத்தை உருவாக்கிக்கொள்ளவும் தமிழர் விரோத பேரினவாதத்தை கிளறி வந்துள்ளன. இதுவே முதலாவதாக யுத்தத்துக்கு வழிவகுத்தது.

பெப்பிரவரி 10 அன்று கண்டியில் உரையாற்றிய இராஜபக்ஷ, தனது நோக்கங்களை சுட்டிக்காட்டினார்: "இந்த தேர்தல் வெறுமனே ஒரு தேர்தல் மட்டுமல்ல. அது எங்களது யுத்த வீரர்களை பலப்படுத்துவதற்கான ஒரு தேர்தலாகும். எமது சொந்த நாட்டில் உள்ள சிலர், யுத்த வீரர்களின் பாதையை தடுக்க பொறிகளை அமைக்க செயற்படுகின்றனர். இதனாலேயே, வடமேல் மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் எமது தேர்தல் வெற்றி எம்மை பலப்படுத்தும் என நாம் கூறுகின்றோம்."

தனது வாய்வீச்சுக்குப் பின்னால், இராஜபக்ஷ ஒரு அடிப்படை உண்மையை சுட்டிக் காட்டினார்: பத்தாயிரக்கணக்கான உயிர்களின் செலவில் பெறப்பட்ட இராணுவத்தின் வெற்றிகள், கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் மிகவும் இராணுவவாத மற்றும் பிற்போக்கு கன்னைகளின் நிலைமையை பலப்படுத்தும். மற்றும் அவர்கள் தமது விரோதிகளுக்கு எதிரான, எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான அடக்குமுறையை உக்கிரப்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்படுவர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் யுத்தத்தை இரக்கமின்றி முன்னெடுப்பதானது ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றது. ஒரு மதிப்பீட்டின்படி 250,000 பொது மக்களுடன் புலிகளை ஒரு சிறிய பிராந்தியத்துக்குள் முடக்கி வைத்துள்ள இராணுவம், விளைவுகளையிட்டு குற்றம் நிறைந்த அலட்சியத்துடன் தனது தாக்குதல் திறனை கட்டவிழ்த்து விடுகின்றது. நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். "விடுவிக்கப்பட்ட" தப்பிப் பிழைத்தவர்களை ஒரு பிரமாண்டமான "நலன்புரி கிராமத்துக்குள்" அடைக்கும் திட்டமொன்று இப்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. இவை யதார்த்தத்தில், இராணுவத்தால் காவல் காக்கப்படும் கடூழிய சிறை முகாம்களாகும்.

ஏற்கனவே "விடுவிக்கப்பட்ட" கிழக்கு, அரசாங்கத்தின் பங்காளி, பேர்போன துணை இராணுவக் கருவியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) தலைவரும் முதலமைச்சருமான பிள்ளையானும் பாதுகாப்புப் படையினரும் ஆட்சி செய்யும் ஒரு பரந்த இராணுவ முகாமாக மாற்றப்பட்டு வந்துள்ளது. ஏனைய இடங்களிலும் இத்தகைய வழிமுறைகள் அமுல்படுத்தப்படும்.

ஏற்கனவே யுத்தத்துக்காக செலவிட்டு ஏறத்தாழ வங்குரோத்து நிலையை அடைந்துள்ள நிலையில், 1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான பூகோள பொருளாதார நெருக்கடியை இராஜபக்ஷ எதிர்கொண்டுள்ளார். பழைய கடன்களை திருப்பி செலுத்தவோ அல்லது புதிய கடன்களைப் பெறவோ முடியாத அரசாங்கம், இழுபட்டுவரும் அந்நிய செலாவனி நெருக்கடியை எதிர்கொள்கின்றது. நுகர்வுப் பொருள் விலையும் ஏற்றுமதி வருமானமும் நிலைகுலைந்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.

தொழிலாள வர்க்கத்தை பொறுத்தளவில் யுத்தமானது விலைவாசி அதிகரிப்பையும் அதி கூடிய வட்டிகளையும் மற்றும் மானியங்கள், அரசாங்கத் தொழில்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரி சேவைகளிலும் வெட்டுக்களை விளைவாக்கியுள்ளது. பூகோள சுனாமி, தீவின் பொருளாதார நெருக்கடியை உக்கிரமாக்க அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில், ஆளும் தட்டு வெடித்துக் கிளம்பக்கூடிய அரசியல் விளைவுகள் பற்றி ஆழமான பீதியுடன் உள்ளது.

அரசாங்கம் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதை இராஜபக்ஷ ஏற்கனவே வெளிப்படுத்திவிட்டார். அவர் வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களையும் ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள் மற்றும் மாணவர்களையும் யுத்த முயற்சியை கீழறுப்பவர்கள் என மீண்டும் மீண்டும் கண்டனம் செய்ததோடு அவர்களுக்கு எதிராக தனது விரிவான அவசரகால அதிகாரங்களை பயன்படுத்துவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். பாராளுமன்றம், சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு மேலாக இருப்பவர்களாக தம்மை கருதிக்கொண்டுள்ள, மற்றும் எதிர்ப்புக்களை அடக்குவதற்காக அச்சுறுத்தல், ஒடுக்குமுறை மற்றும் கொலைப் படைகளில் தங்கியிருக்கின்ற, ஒரு சில தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்கள், தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அவர்களைச் சூழ உள்ளவர்களாலான ஒரு கூட்டமாகத்தான் அரசாங்கம் இயங்கிக்கொண்டிருக்கின்றது.

பிரதான எதிர்க் கட்சிகளான யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. யும் இராஜபக்ஷவின் யுத்தத்துடன் இணைந்துகொண்டுள்ளன. 2002ம் ஆண்டு யுத்தநிறுத்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டு புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பித்து வைத்த யூ.என்.பி., இப்போது, அந்த முழு முன்னெடுப்புகளும் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை தயார் செய்யும் இயலுமையை இராணுவத்துக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கான சாதுரியமான சதியே அன்றி வேறொன்றும் அல்ல என வலியுறுத்துகிறது. அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்ட யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தனது தேசப்பற்று உணர்ச்சியை ஒப்புவிக்க முயற்சித்தார். "ஆயுதப் படைகளின் வெற்றிக்காக அதற்கு மரியாதை செலுத்திய" அந்த அறிக்கை, "அத்தகைய இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை மேற்பார்வை செய்வதற்காக" அரசாங்கத்தையும் பாராட்டியது.

2002 யுத்த நிறுத்தத்துக்கு எதிராக பேரினவாத பிரச்சாரத்துக்கு தலைமை வகித்த ஜே.வி.பி., யுத்தத்தை மீண்டும் தொடங்க இராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுத்ததில் நன்மதிப்பு கோருவதோடு அதன் விளைவுகளுக்கான பொறுப்பையும் பங்கிட்டுக்கொள்கின்றது. தமது சம்பளம் மற்றும் நிலைமைகளை காப்பதற்காக தொழிலாளர்கள் எடுத்த முயற்சிகளை கீழறுத்ததற்கும் ஜே.வி.பி. பொறுப்பாளியாகும். அடுத்தடுத்து வந்த வேலை நிறுத்தங்களின் போது, யுத்த முயற்சிகளை கீழறுப்பதாக தொழிலாளர்களை அரசாங்கம் குற்றஞ்சாட்டிய நிலையில், ஜே.வி.பி. தலைவர்கள் உடனடியாக வளைந்து கொடுத்தனர்.

வாழ்க்கைத் தரம் மேலும் மேலும் சரிந்துவருவதால் வளர்ச்சிகாணும் எதிர்ப்பு பற்றி விழிப்படைந்த ஜே.வி.பி., சில அமைச்சர்களை அகற்றி இலஞ்சம் கொடுப்பதை நிறுத்தினால், முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடியாலும் கால் நூற்றாண்டு யுத்தத்தாலும் உருவாக்கப்பட்ட வரம்பற்ற பொருளாதார பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்பது போல், மோசடிகள் மற்றும் வீண் செலவுகளை செய்வதாக அரசாங்கத்தை தீவிரமாக கண்டனம் செய்யும் ஒரு ஜனரஞ்சக பிரச்சாரத்தை தொடங்கியது.

நவசமசமாஜ கட்சி (ந.ச.ச.க.), ஐக்கிய சோசலிச கட்சி (ஐ.சோ.க.) ஆகிய இரு மத்தியதர வர்க்க தீவிரப் போக்குடை அமைப்புகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. கடந்த மூன்று தசாப்தங்களாக, முதலாளித்துவ கட்சிகள் பற்றிய மாயைகளை முன்னிலைப்படுத்தி வந்த, எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தையும் தடுத்து வந்த ந.ச.ச.க. யும் அதில் இருந்து பிரிந்து சென்ற ஐ.சோ.க. யும், உத்தியோகபூர்வ அரசியல் அமைப்பிற்கு ஒரு இடதுசாரி பாதுகாப்பு வால்வு போல் செயற்பட்டு வருகின்றன.

இந்த புதிய தேர்தலில், ந.ச.ச.க. மற்றும் ஐ.சோ.க. யும் இலங்கை முதலாளித்துவத்தின் முதலாவது கட்சியான வலதுசாரி யூ.என்.பி. உடன் ஒரு கூட்டிணை அமைத்து ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளன. தொடர்ச்சியாக அசாதாரணமான அரசியல் குட்டிக்கரணங்களை அடித்த இத்தகைய சந்தர்ப்பவாதிகள், 1983ல் யுத்தத்தை முன்னெடுத்த மற்றும் கடந்த காலத்தில் ஜனநாயக உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதிலும் அரச ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதிலும் பேர்போன யூ.என்.பி., "அதிகாரவாத" இராஜபக்ஷ அரசாங்கத்துடன் ஒப்பிடும் போது "குறைந்த கெடுதியை" பிரதிநிதித்துவம் செய்கின்றது என கூறிக்கொள்கின்றனர்.

புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏகாதிபத்திய அனுசரணையிலான சமாதானப் பேச்சுக்களை முன்னிலைப்படுத்திய அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வேயும், இராஜபக்ஷவின் யுத்தத்தை வெளிப்படையாக அல்லது இரகசியமாக ஆதரித்தன என்பது உண்மையாக இருந்த போதிலும், "சர்வதேச சமாதான முன்னெடுப்பை" ஆதரிப்பது என்ற தமது கொள்கையில் ந.ச.ச.க. மற்றும் ஐ.சோ.க. யும் உறுதியாக உள்ளன. இது ந.ச.ச.க. மற்றும் ஐ.சோ.க. மோசடியான "சமாதான முன்னெடுப்பை" புதுப்பிக்குமாறு பெரும் வல்லரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கக் கோரி யூ.என்.பி. யை தொடர்ந்தும் கெஞ்சுவதை நிறுத்தப் போவதில்லை.

தொழிலாள வர்க்கம் மோசமான ஆபத்துக்களை எதிர்கொள்கின்றது. பெரும்பாலான வாக்காளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்வதோடு அரசாங்கம் மற்றும் அதன் குற்றவியல் யுத்தத்தைப் பற்றி மட்டுமன்றி முழு அரசியல் அமைப்பு முறையையிட்டும் அதிருப்தியடைந்துள்ளனர். எவ்வாறெனினும், இத்தகைய உணர்வுகள் மட்டும் உழைக்கும் மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு போதாது.

யுத்தத்துக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் ஒரு சோசலிச பதிலீட்டை முன்வைக்கவே சோ.ச.க. இந்த தேர்தலில் பங்குபற்றுகின்றது. யுத்தமும் பொருளாதார நெருக்கடியும் வேரூன்றியுள்ள இந்த முதலாளித்துவ இலாப அமைப்புக்கு எதிராக ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற வெகுஜனங்களையும் அணிதிரட்ட நாம் முயற்சிக்கின்றோம்.

எங்களது தளத்தின் முதலாவது படி அனைத்துலக வாதமாகும். இலங்கை அரசியல் அமைப்பு முறையின் சிங்கள மேலாதிக்கவாதம் மற்றும் புலிகளின் தமிழ் பிரிவினைவாதம் உட்பட அனைத்து வடிவிலுமான தேசியவாதத்தையும் இனவாதத்தையும் நிராகரிக்குமாறு உழைக்கும் மக்களுக்கு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. மதம், இனம் மற்றும் மொழி வேறுபாடின்றி அனைத்து தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்துவதன் மூலம் மட்டுமே சகலரதும் பொது வர்க்க நலனுக்காக ஒரு ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உடனடியாக முடிவுகட்டுமாறு கோருவதன் மூலம், தமிழ் சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளை காக்க வேண்டியது இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஒரு இன்றியமையாத கடமையாகும். பாரபட்சம் நிறைந்த தசாப்தகால மரபில் இருந்து மீள்வதற்கும் முதலாளித்துவத்துக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்துக்கான அடித்தளத்தை ஸ்தாபிப்பதற்குமான முதற்படி இதுவேயாகும். ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டமானது தசாப்த காலமாக இனவாத, வகுப்புவாத மோதல்களில் மூழ்கிப் போயுள்ள இந்தியத் துணைக்கண்டம் பூராவும் எதிரொலிக்கும்.

ஆளும் வர்க்கத்தின் சகல கட்சிகள், தட்டுக்கள் மற்றும் குழுக்களில் இருந்து தொழிலாள வர்க்கம் அரசியல் சுயாதீனம் பெறுவது, இலாப அமைப்புக்கு எதிரான தாக்குதலுக்கான முன்நிபந்தனையாகும். ஆளும் வர்க்கத்தின் "முற்போக்கான" பகுதிகள் என சொல்லப்பட்டவற்றுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்ததில் இருந்து தோன்றிய துன்பங்களால் இலங்கையின் வரலாறு நிறைந்து போயுள்ளது. தற்போதைய நிலைமையின் பெரும்பகுதியை லங்கா சமசமாஜக் கட்சி சோசலிச அனைத்துலகவாத வேலைத் திட்டத்தை கைவிட்டு 1964ல் முதலாளித்துவ பண்டாரநாயக்க அரசாங்கத்தினுள் நுழைந்துகொண்டதில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும்.

சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலமும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளது அரசாங்கம் ஒன்றுக்கான முன்நோக்கை அபிவிருத்தி செய்வதன் மூலமும் மட்டுமே, தொழிலாள வர்க்கத்தால் பொருளாதார பின்னடைவு, கடன் மற்றும் வறுமையில் மூழ்கியுள்ள ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்களை தம்பக்கம் வென்றெடுக்க முடியும். அத்தகைய ஒரு முன்நோக்கு, சமுதாயத்தை ஒரு சில செல்வந்தர்களின் தனியார் இலாபத்துக்காக அல்லாமல், பெரும்பான்மையானவர்களின் சமூகத் தேவைகளை இட்டு நிரப்புவதன் பேரில் அடி முதல் உச்சி வரை முழுமையாக மறுசீரமைப்பதற்கான முழுமையான போராட்டத்தை உள்ளடக்கிக் கொண்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு தலைமை வகிக்க சோ.ச.க. முற்றிலும் தகுதிவாய்ந்ததாகும். லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்புக்கு எதிராக 1968ல் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே, சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், சகலவிதமான தேசியவாத, இனவாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் எதிராக, சோசலிச அனைத்துலகவாத -ட்ரொட்ஸ்கிச- கொள்கைகளுக்காக உத்வேகமான நீண்டகால போராட்டத்தை முன்னெடுத்து வந்துள்ளன. ஆரம்பத்தில் இருந்தே யுத்தத்தை எதிர்த்து வந்தது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும்/ சோசலிச சமத்துவக் கட்சியும் மட்டுமேயாகும்.

யுத்தத்துக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிரான ஒரு சோசலிச மாற்றீட்டுக்காக வாக்குகளைப் பதிவுசெய்யுமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் சோ.ச.க. அழைப்புவிடுக்கின்றது. அதே சமயம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சர்வதேச இணையமான உலக சோசலிச வலைத் தளத்தில் (WSWS) அன்றாடம் வெளிவரும் எமது வேலைத்திட்டத்தையும் முன்நோக்கையும் வாசிக்குமாறும், சோ.ச.க. யில் இணைய விண்ணப்பிக்குமாறும் மற்றும் அதை தொழிலாள வர்க்கத்தின் பரந்த புரட்சிக் கட்சியாக கட்டியெழுப்புமாறும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved