World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

The road forward for the working class of South Asia

தெற்கு ஆசிய தொழிலாள வர்க்கத்திற்கு முன்னேற்றப் பாதை

By Peter Symonds
13 February 2009

Back to screen version

இலங்கையில் பெப்பிரவரி 14 நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) முன்னெடுத்த பிரச்சாரம், அத்தீவில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு மட்டும் அன்றி, தெற்கு ஆசியா, சர்வதேச அளவிலும் மகத்தான அரசியல் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

சோசலிச சர்வதேசிய வாதத்துக்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரமானது, இலங்கையின் வடக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் இரக்கமற்ற இனவாத யுத்தம் மற்றும் இராணுவவாதத்தையும் தமிழர் விரோத பேரினவாதத்தையும் கிளறிவிடுவதற்கான மூர்க்கமான பிரச்சாரத்துக்கும் மத்தியில் முன்னெடுக்கப்பட்டது. அதன் வேலைத் திட்டம், பூகோள முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடிக்கு பதிலாக உலகம் பூராவும் தோன்றிவரும் பொருளாதார தேசியவாதம் மற்றும் பாதுகாப்புவாத அலையின் எழுச்சிக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டதாகும்.

தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து சகல இராணுவப் படைகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்கக் கோருவதும், ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான அரசாங்கத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு எதிராக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உட்பட சகல தொழிலாள வர்க்கத்தினதும் ஐக்கியத்துக்காக போராடுவதும் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமேயாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம், தேர்தல்கால சூழ்ச்சிகளையோ, தந்திரங்களையோ அன்றி, தொழிலாள வர்க்கத்தை இலக்காகக் கொண்டதாகும். அதன் வேட்பாளர்கள், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த பலத்தில் நிற்க வேண்டும் என புத்தளத்தில் உள்ள மீன்பிடிக் கிராமங்களிலும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களிலும் வாழும் வாக்காளர்களுக்கு பொறுமையாக தெளிவுபடுத்தினார்கள். சகல முதலாளித்துவ கட்சிகளிலும் இருந்து சுயாதீனமாக அணிதிரண்டு ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே, தொழிலாளர்களால் கிராமப்புற வெகுஜனங்களை தம்பக்கம் வென்றெடுத்து, சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளது அரசாங்கத்துக்கான பாதையைத் திறக்க முடியும்.

இனவாத விஷமூட்டப்பட்ட அரசியல் சூழ்நிலை மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியிலேயே சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரத்தை முன்னெடுத்தது. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் கூட அரசாங்கத்தின் யுத்தத்தை விமர்சிப்பவர்கள் அல்லது எதிர்ப்பவர்கள் எவரும் பயங்கரவாதத்தின் ஆதரவளர்களாகவும் தேசத் துரோகிகளாகவும் முத்திரை குத்தப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் கொடூரமான அவசரகால அதிகாரங்களின் கீழ் எதேச்சதிகாரமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு நூற்றுக் கணக்கானவர்கள் அரசாங்க சார்பு கொலைப்படைகளால் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது "காணாமல்" ஆக்கப்பட்டுள்ளனர்.

பிராந்தியம் பூராவும் வளர்ச்சி காணும் பதட்ட நிலைமைகளின் மத்தியில், சர்வதேசியத்திற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் உறுதியான போராட்டம், குறிப்பாக இந்தியத் துணைக்கண்டம் பூராகவும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இலங்கையில் நீண்டகாலமாக நடக்கும் யுத்தம், தசாப்த காலங்களாக பிராந்தியத்தை பற்றிக்கொண்டிருக்கும் வகுப்புவாத மற்றும் இனவாத வன்முறைக்கு ஒரு உதாரணம் மட்டுமேயாகும். அணுவாயுதங்களைக் கொண்டுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்கனவே மூன்று போர்களில் சண்டை இட்டுள்ளதுடன் மும்பாயில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து மீண்டும் ஒரு முறை முறுகல்கள் அபாயகரமான முறையில் வளர்ச்சி கண்டு வருகின்றது. முழுப் பிராந்தியமும் மதம், இனம், சாதி மற்றும் மொழிப் பிரிவினைகளால் கொதித்துக்கொண்டிருக்கும் கொதிகலனாக இருப்பதோடு வறுமை மற்றும் பொருளாதார பின்னடைவில் மூழ்கிப் போயுள்ளன. இது, முதலாளித்துவ அபிவிருத்தி பின்தங்கிய நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கமானது, சாதாரண உழைக்கும் மக்களின் ஜனநாயக மற்றும் சமூகத் தேவைகளை இட்டு நிரப்ப இயல்பாகவே இலாயக்கற்றது என்ற லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் பிரதான கருத்தை ஜீவனுள்ளதாக ஒப்புவித்துள்ளது.

தெற்காசியாவை துன்புறுத்திக்கொண்டிருக்கும் வெளிப்படையாக எளிதில் கையாள முடியாத முரண்பாடுகளின் மூலங்களை, யுத்தத்துக்கு பிந்திய காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்களின் புரட்சிகர அலைகளை அடக்குவதற்கான வழிமுறையாக, உள்ளூர் முதலாளித்துவ கும்பலின் ஆதரவுடன் பிரித்தானியாவால் 1947-48ல் பிராந்தியத்தில் திணிக்கப்பட்ட தீர்ப்புகளில் கண்டுகொள்ளலாம். துணைக் கண்டத்தை முஸ்லிம் பாகிஸ்தான் எனவும் இந்துக்கள் அதிகம் வாழும் இந்து இந்தியாவாகவும் கூறுபோட்ட பிரித்தானிய காலனித்துவ அலுவலகம், இலங்கை முதலாளித்துவத்தின் கைக்கூலி பிரதிநிதிகளின் பங்களிப்புடன், பிராந்தியத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் நலன்களை காப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஒரு தனியான தளமாக இலங்கைத் தீவை பிரித்து வைத்தது. பஞ்சாபி, பெங்காளி மற்றும் தமிழ் மக்களை இயற்கைக்கு முரணாக பிரித்துவைத்த இந்த முடிவுகள், உடனடியாக மிகப்பெரிய துன்பங்களுக்கு வழிவகுத்தன. இந்தியா-பாகிஸ்தான் பிரிக்கப்பட்டதால் வெடித்த இனவாத வன்முறையில் மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள். இலங்கையில், புதிதாக சுதந்திரம் பெற்ற அரசாங்கத்தின் முதல் நடவடிக்கை, தமிழர் விரோத பேரினவாதமாகும். இது ஜனத்தொகையில் பத்தில் ஒரு பகுதியாக இருந்த ஒரு மில்லியன் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை பறிப்பதன் மூலம் அரங்கேறியது.

இதைத் தொடர்ந்த ஆறு தசாப்தங்களில், 1947-48 அரசியல் காயங்கள் அதிகமாகி, அழுகிப்போய் கணக்கிலடங்கா "தேசிய" போராட்டங்கள் எழுச்சி பெற்றன. இவை அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) வழிவகையைப் போன்ற தன்மையைத்தான் பின்பற்றின; தமிழீழ விடுதலைப் புலிகளோ தீவின் தமிழர்கள் பல தசாப்தங்கள் கண்டிருந்த இனப்பாகுபாடு, இனப்படு கொலை ஆகியவற்றினால் விளைந்த நியாயமான சீற்றத்தை ஒரு தனி முதலாளித்துவ சிற்றரசு தேவை என்ற திசையில் திருப்பியது. குளிர்யுத்தகால வடிவமைப்பிற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் ஒரு சோசலிச, ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு போன்ற கருத்துக்களைக் கூறி சோவியத் ஒன்றியம் அல்லது சீனாவிடம் இருந்து ஆதரவைக் காண முயன்றது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிப்படையாக ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஒரு சுதந்திரமான ஈழம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குறைவூதிய தொழிலாளர் பிரிவுள்ள சுவர்க்கமாக இருக்கும் என்று உறுதியளித்தது. சமீப மாதங்களில் இதன் இராணுவ வீழ்ச்சி, எல்லாவற்றிற்கும் மேலாக அதன் தேசிய முன்னோக்கு அரசியல் திவால்தன்மையில் இருந்து வெளிப்பட்டுள்ளது; இறுதிப்பகுப்பாய்வில் முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் ஏதாவது ஒன்றின் ஆதரவைத்தான் இது நம்பியிருந்தது.

இப்பின்னணியில் தெற்கு ஆசியாவில் சர்வதேச சோசலிசத்திற்கான சோசலிச சமத்துவ கட்சியின் நீண்ட காலப் போராட்டம் ஒரு உடனடி அத்தியாவசியமாக உள்ளது. தெற்கு ஆசிய ஐக்கிய சோசலிச அரசுகளின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா ஈழ சோசலிச குடியரசு என்ற அதன் வேலைத்திட்டம் ஒரு கற்பனைக் கனவு அல்ல. மாறாக ஒரு நடைமுறை அவசியம் ஆகும். பெரும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் கொள்ளை நோக்கம் கொண்ட ஏகாதிபத்திய சூழ்ச்சிகளுக்கு எதிராகப் போராட வேறு எவ்விதத்தில் தொழிலாள வர்க்கத்தின் மகத்தான வலிமைத்திறன் இயக்கப்பட்டு செயல்படுத்தப்பட முடியும்? இப்பகுதி முழுவதும் தேசியவாத முன்னோக்கைக் கொண்டிருக்கும் ஸ்ராலினிச, மாவோவாத வடிவமைப்புக்கள் உட்பட அனைத்துக் கட்சிகளும், வெளிப்படையாக வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் முதலாளித்துவ சந்தை முறையையும் அனைத்தையும் தீர்த்து வைக்கும் அற்புத வழிவகை என ஏற்றுள்ளதுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான நவ-காலனித்துவ ஆக்கிரமிப்புக்களுக்கும் ஆதரவைக் கொடுத்துள்ளன.

சோசலிச சமத்துவ கட்சியின் தகமை, தெற்கு ஆசியாவில் உள்ள தேசிய மற்றும் அரசியல் பிற்போக்குத்தன பேரலைகளுக்கு எதிராக அரசியல் சந்தர்ப்பவாதங்களின் அனைத்துவகை வடிவமைப்புக்களையும் எதிர்த்து நின்று, மார்க்சிசக் கோட்பாடுகளை அடைவதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ளடங்கியுள்ள நீடித்த கடினமாக போராட்டத்தில் இருந்து வெளிப்படுவது ஆகும். 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL-Revolutionary Communist League) என்னும் கட்சியின் இளம் தோழர்கள் லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) 1964 இல் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைவதற்காக ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை வெளிப்படையாக கைவிட்டதால் விளைந்த பாரிய அரசியல் பெருங்குழப்பத்தைக் கையாள வேண்டியிருந்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் மட்டும்தான் இந்தக் காட்டிக் கொடுப்பின் ஆதாரம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் நான்காம் அகிலத்தையே கலைத்துவிட முற்பட்டிருந்த மிசேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டெல் ஆகியோரின் தீய சந்தர்ப்பவாதப் போக்கில் வேரூன்றி இருந்தது என்பதைக் கண்டறிந்தன. பப்லோவாத ஐக்கிய செயலகம்தான் லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல் பின்னோக்கிச் செல்லலுக்கு அனுமதி கொடுத்தது; அதுதான் 1964ல் காட்டிக்கொடுப்பிற்கு வழிவகுத்தது.

1960 களிலும் 1970 களிலும் கிளர்ந்தெழுந்திருந்த குட்டி முதலாளித்துவ தீவிரவாத அலைகளுக்கு எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே உறுதியாக இருந்தது. சிங்கள ஜனரஞ்சகவாத மக்கள் விடுதலை முன்னணி (JVP), தமிழ் பிரிவினைவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஆயுதம்தரித்த ஏனைய தமிழ் இயங்கங்கள் முன்னெடுத்த "ஆயுதமேந்திய போராட்டம்" தற்காலிக தீவிரவாதத்தின் மீதான மோகம் பற்றிய அரசியல் ஆபத்துக்களை அது விளக்கியது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் நிறுவனச் செயலாளர் கீர்த்தி பாலசூரியா, மக்கள் விடுதலை முன்னணியின் தீவிரப்போக்குடைய ஜனரஞ்சகவாதம் பாசிச சிங்கள தீவிரவாதத்தின் விதைகளை கொண்டிருந்தது என்று பரந்தமுறையில் கட்டுரையில் விடுத்த எச்சரிக்கை, 1989ல் அதன் துப்பாக்கி ஏந்தியவர்கள் தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் மற்றும் சோசலிஸ்ட்டுக்களுக்கு எதிராக கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியபோது நிரூபணமாயிற்று. லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பை ட்ரொட்ஸ்கிசம் தோற்றவிட்டது என்று இலங்கையிலும் ஆசியாவின் பிற பகுதிகளிலும் கூறியவர்களுக்கு எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், லங்கா சமசமாஜக் கட்சியின் சீரழிவு மார்க்சிசத்தில் இருப்பதாகக் கூறப்படும் பிழைகளின் விளைவு அல்ல என்றும் மார்க்சிசத்தை கைவிட்டதால் ஏற்பட்டது என்றும் நிரூபணம் செய்தது.

மார்க்சிச கொள்கைகளை பாதுகாத்ததால் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சி முதலாளித்துவ அரசியலின் முழுப்பகுதியில் இருந்தும் கடுமையான எதிர்ப்பைத்தான் சம்பாதித்துள்ளது. இக்கட்சி அனைத்துப் புறங்களில் இருந்தும் அரசாங்க அடக்குமுறை மற்றும் அரசியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 1971ல் ஆயுதமேந்திய கிளர்ச்சிகளில் ஈடுபட்டபோது, பண்டாரநாயக்கா அரசாங்கத்தின் அடக்குமுறையை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எதிர்த்ததால் தலைமறைவாக செயல்படவேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டது. அதன் உறுப்பினர்கள் இருவர் சிறையில் பாதுகாப்புப் பிரிவினரால் கொலை செய்யப்பட்டனர். 1983ல் தீவு முழுவதும் உள்நாட்டுப் போர் தொடக்கத்தை அடையாளம் காட்டிய தமிழர் எதிர்ப்பு படுகொலைகள் நடந்தபோது, இக்கட்சி தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை திடமாக பாதுகாத்தது. இதன் விளைவாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர், கட்சித் தலைவர்கள் துன்புறுத்தப்பட்டு அரசாங்கத்தின் சார்பான குண்டர்களால் அச்சுறத்தவும்பட்டனர். 1989ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி மக்கள் விடுதலை முன்னணி மேற்கொண்டிருந்த பிற்போக்குத்தன நாட்டுப்பற்று பிரச்சாரத்தை எதிர்த்தது. ஜேவிபி கொலைப் படையால் மூன்று கட்சி உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1998ல் சோசலிச சமத்துவக் கட்சி சோசலிச வேலைத்திட்டம் பற்றிப் பிரச்சாரம் செய்த "குற்றத்திற்காக" தமிழீழ விடுதலைப் புலிகள் மூன்று சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களை கிளிநொச்சியில் பல வாரங்கள் காவலில் வைத்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவும், உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) தொடர்ந்து நடத்திய சர்வதேச போராட்டத்தின் பின்தான் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இத்தாக்குதல்களையும் இலங்கையின் தேசிய அமைப்புக்களின் பாரிய அரசியல் அழுத்தங்களையும் சோசலிச சமத்துவக் கட்சி எதிர்த்துத் தாங்கி நின்றுள்ளது; இதற்குக் காரணம் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஏனைய பகுதிகள் போல் இது எமது உலகக் கட்சியின் இணைந்த பகுதியாக செயல்படுவதால் ஆகும். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஒரு தேசியக் கட்சியாக நிறுவப்படாததோடு, ஒரு சர்வதேச கூட்டமைப்பின் சுதந்திரமான தேசியப் பிரிவாகவும் நிறுவப்படவில்லை. இலங்கை மற்றும் தெற்கு ஆசியாவில் உலக சோசலிச புரட்சிக்காக போராடும் சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு பாகமாகத்தான் நிறுவப்பட்டது. உலக சோசலிச வலைத் தளத்தின் தோற்றம் சோசலிச சமத்துவக் கட்சியை நாளாந்தரீதியாக அதன் பணியை உலகெங்கிலும் உள்ள அதன் சகோதரக் கட்சிகளுடன் இணைத்துச் செயல்பட உதவியுள்ளது. இலங்கை போன்ற நாடுகளில் வறிய தொழிலாளர்களை இணையதளம் சென்று அடையமுடியாது என்று நினைத்தவர்களை நிராகரிக்கும் வகையில் சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு ஆகியவற்றின் பகுப்பாய்வுகள் தீவு முழுவதும் மட்டுமல்லாது அதற்கு அப்பாலும் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சிறந்த முறையில் சென்று அடைகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியத்துவம் நாளை இதன் வேட்பாளர்கள் பெற இருக்கும் வாக்குகளின் எண்ணிக்கையில் மட்டும் அடங்கியிருக்கவில்லை. பாராளுமன்ற வெற்றிகளால் வியப்புற்றவர்கள், சந்தர்ப்பவாத தேர்தல் தந்திரங்கள் தொடரப்பட்டதால், தொழிலாள வர்க்கத்திற்கு விளைந்த பெரும் துன்பியல்களை அதுவும் இலங்கையில் நிகழ்ந்தவையை மட்டுமாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் வலிமை கட்சியின் நீண்ட, தைரியமான கொள்கைக்கான போராட்டம் மற்றும் அதன் பகுப்பாய்வு, முன்னோக்கு ஆகியவற்றில் உள்ள தெளிவும் ஆகும். சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் தோட்டங்கள், தொழிலிடங்கள் அல்லது கிராமங்களுக்கு சென்றபோது அவர்களுடன் இருந்தவர்களுக்கு கட்சியின் செல்வாக்கு ஒப்புமையில் அதன் தற்போதைய எண்ணிக்கைக்கும் அப்பால் பரந்திருப்பது நன்கு புலனாகியிருக்கும். அதன் அரசியல் எதிர்ப்பாளர்களிடையே பொறாமையுடன் கூட என்றாலும் அதற்குரிய பாராட்டு கொடுக்கப்படுகிறது.

எமது வாசகர்கள் அனைவரையும், குறிப்பாக தெற்கு ஆசியா முழுவதும் இருப்பவர்களை, இத்தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி முன்வைத்துள்ள முன்னோக்கை கவனமாக பரிசீலிக்குமாறு ஊக்கப்படுத்துகிறோம். 1930களுக்கு பின் உலக முதலாளித்துவம் அதன் மிக மோசமான நெருக்கடியில் ஆழ்கையில், தொழிலாள வர்க்கத்திற்கான விளைவுகள் பேரழிவுதரக்கூடியதாக இருக்கும்: பரந்த அளவிலான வேலையின்மை, மோசமான பொருளாதார இடர்பாடுகள், எழுச்சி பெறும் சர்வதேச அழுத்தங்கள், பொருளாதார மோதல்கள் மற்றும் இறுதியில் போர் என்பவையே அவை. எம்முன்னுள்ள தேர்வு தெளிவாகவே உள்ளது. அது சோசலிசமா, காட்டுமிராண்டித்தனமா என்பதுதான். ஒரு சோசலிச வருங்காலத்திற்கு போராட வேண்டும் என்று நாடுபவர்கள் இலங்கையிலும் துணைக்கண்டம் முழுவதும் சோசலிச சமத்துவக் கட்சியிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவிலும் சேர்ந்து அதனை ஒரு அத்தியாவசியமான பரந்துபட்ட புரட்சிகரத் தலைமையாக கட்டியமைக்கவேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved